பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலை ஊர்ஜிதப்படுத்தும் பூர்வ பதிவு
“கிறிஸ்தவத்தின் ஆரம்பகால சரித்திரத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுடைய ஆர்வத்தைக் கிளறுவதற்காகவே அதிலுள்ள ஒவ்வொரு வரியும் எழுதப்பட்டதாகத் தெரிகிறது.” இப்படித்தான், பூர்வகாலப் பதிவு ஒன்று விவரிக்கப்பட்டது. அது எந்தப் பதிவாக இருக்குமென உங்களால் ஊகிக்க முடிகிறதா?
அதுதான், மியூராடோரியன் பதிவு. இந்தப் பதிவைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது கேள்விப்படாமலும் இருக்கலாம். எப்படியிருந்தாலும், ‘இந்த மியூராடோரியன் பதிவில் அப்படியென்ன விசேஷம்?’ என நீங்கள் கேட்கலாம். இது, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலுள்ள புத்தகங்களைக் குறிப்பிடுகிற அதிகாரப்பூர்வ பட்டியல்களிலேயே மிகப் பழமையானதாகும்.
பைபிளில் இருக்கும் புத்தகங்களைக் குறித்து உங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லாதிருக்கலாம். ஆனால் அதில் எந்தெந்த புத்தகங்கள் இருக்க வேண்டும் என்பது குறித்து ஒரு காலத்தில் சிலருக்கு சந்தேகங்கள் இருந்தன; இதைக் கேட்கவே உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? அதிகாரப்பூர்வ பட்டியலான மியூராடோரியன் பதிவு, கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டதாகக் கருதப்படும் புத்தகங்களின் பட்டியலைக் குறிப்பிடுகிறது. பைபிளில் எந்தெந்த புத்தகங்கள் இடம்பெற வேண்டுமென அறிந்திருப்பது மிகமிக முக்கியம் என்பதை நீங்களும்கூட ஒப்புக்கொள்வீர்கள். அப்படியென்றால், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இன்று இடம்பெற்றிருக்கும் புத்தகங்களைப் பற்றி அந்த மியூராடோரியன் பதிவு என்ன தகவலை அளித்தது? முதலாவதாக, அந்தப் பதிவின் பின்னணியைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.
அதன் கண்டுபிடிப்பு
மியூராடோரியன் பதிவு, ஒரு கோடெக்ஸின் (கையெழுத்துப் பிரதிகளுடைய புத்தக வடிவிலான ஒரு தொகுப்பின்) பாகமாகும். இந்த கோடெக்ஸில், தோலினால் ஆன 76 ஏடுகள் இருக்கின்றன; அவை ஒவ்வொன்றும் 27 சென்டிமீட்டர் நீளமும் 17 சென்டிமீட்டர் அகலமும் உடையவை. பிரபல இத்தாலிய சரித்திராசிரியரான லூடோவிக்கோ ஆன்டான்யோ மியூராடோரி (1672-1750) இத்தாலியிலுள்ள மிலான் நகரில், அம்பரோசியன் நூலகத்தில், அந்தப் பதிவைக் கண்டுபிடித்தார். பின்பு 1740-ல் அதை வெளியிட்டார்; இப்படித்தான் அதற்கு மியூராடோரியன் பதிவு என்ற பெயர் வந்தது. அந்த கோடெக்ஸ், இத்தாலியின் வட பகுதியில், பியாசென்சா என்ற இடத்திற்கு அருகே இருந்த பாபியோவைச் சேர்ந்த பூர்வ துறவிமடத்தில் எட்டாம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதன்பின்பு, 17-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அது அம்பரோசியன் நூலகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.
அந்த கோடெக்ஸின் 10-வது மற்றும் 11-வது ஏடுகளில் உள்ள பகுதியே மியூராடோரியன் பதிவாகும்; அதில் மொத்தம் 85 வரிகள் உள்ளன. லத்தீன் மொழியில் எழுதப்பட்டுள்ள அதை, வேதபாரகர் ஒருவர் பிரதியெடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர் அதை அந்தளவு கண்ணும்கருத்துமாய் செய்யவில்லை. என்றாலும், அதே விஷயத்தைக் கொண்ட 11-ஆம், 12-ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த நான்கு கையெழுத்துப் பிரதிகளோடு அது ஒப்பிடப்பட்டபோது, அவர் செய்த பிழைகளில் சில கண்டுபிடிக்கப்பட்டன.
எப்போது எழுதப்பட்டது?
ஆனால் மியூராடோரியன் பதிவிலுள்ள தகவல்கள் எப்போது முதன்முதலாக எழுதப்பட்டன என நீங்கள் கேட்கலாம். இந்த மியூராடோரியன் பதிவு கிரேக்கிலிருந்து லத்தீனுக்கு மொழிபெயர்க்கப்பட்ட பதிவாகும்; இதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அதன் மூலப் பதிவு கிரேக்கில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. அந்த மூலப் பதிவு எழுதப்பட்ட காலத்தைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு துப்பு கிடைத்திருக்கிறது. மியூராடோரியன் பதிவு, பைபிளில் இல்லாத ஷெபர்ட் என்ற புத்தகத்தைக் குறிப்பிட்டுவிட்டு, அது ஹெர்மஸ் என்பவரால் “மிகச் சமீபத்தில், நம் காலங்களில், ரோம நகரில்” எழுதப்பட்டது என்று சொல்கிறது. ஹெர்மஸின் ஷெபர்ட் புத்தகம் பொ.ச. 140-க்கும் பொ.ச. 155-க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதி முடிக்கப்பட்டதாக அறிஞர்கள் சொல்கிறார்கள். ஆக, லத்தீனிலுள்ள மியூராடோரியன் பதிவின் கிரேக்க மூலப் பதிவு பொ.ச. 170-200-ல் எழுதப்பட்டதாக சொல்லப்படுவதற்கான காரணம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கலாம்.
அந்தப் பதிவில், ரோம நகரத்தைப் பற்றிய குறிப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருப்பதால், அந்நகரில்தான் அதன் மூலப் பதிவு எழுதப்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிகிறது. ஆனால் அதை எழுதியவர் யார் என்பது இன்னமும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே உள்ளது. அலெக்சந்திரியாவைச் சேர்ந்த கிளமென்ட், சர்தையைச் சேர்ந்த மெலட்டோ, எபேசுவைச் சேர்ந்த பலிக்ரடிஸ் ஆகியோர் எழுத்தாளர்களாக இருந்திருக்கலாமென ஊகிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பெரும்பாலான அறிஞர்கள், ஹிப்பாலட்டஸ் என்பவரே அதன் எழுத்தாளர் எனக் குறிப்பிடுகிறார்கள்; ஏராளமான நூல்களை எழுதிய கிரேக்க எழுத்தாளரான அவர், மியூராடோரியன் பதிவிலுள்ள விஷயங்கள் எழுதப்பட்டதாக கருதப்படும் காலத்தின்போது ரோமில் வசித்துவந்ததாக நம்பப்படுகிறது. இந்த விவரங்களெல்லாம் உங்களுக்கு ஓரளவு ஆர்வத்திற்குரியதாக இருந்தாலும், மியூராடோரியன் பதிவிலுள்ள தகவல்களைப் பற்றியே அதிகம் தெரிந்துகொள்ள நீங்கள் விரும்பலாம்; ஏனெனில் அப்பதிவை மதிப்புமிக்கதாக ஆக்குவது அந்தத் தகவல்களே.
அதிலுள்ள தகவல்கள்
மியூராடோரியன் பதிவு, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமப் புத்தகங்களின் வெறும் ஒரு பட்டியல் அல்ல. அந்தப் புத்தகங்களையும் அவற்றின் எழுத்தாளர்களையும் பற்றிய விவரங்களைக்கூட அது அளிக்கிறது. அந்தக் கையெழுத்துப் பிரதியில் ஆரம்ப வரிகள் இல்லை, அதேபோல் முடிவிலும் சில வரிகள் இல்லை. எடுத்தவுடன், லூக்கா சுவிசேஷத்தைப் பற்றி அதில் வாசிக்கிறோம்; இந்த பைபிள் புத்தகத்தின் எழுத்தாளர் வைத்தியராக இருந்தார் என்றும் வாசிக்கிறோம். (கொலோசெயர் 4:14) லூக்கா புத்தகம் மூன்றாவது சுவிசேஷம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது; ஆகவே, அதன் ஆரம்ப வரிகள் மத்தேயு மற்றும் மாற்கு சுவிசேஷங்களைப் பற்றி குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. நீங்களும் இந்த முடிவுக்கு வருகிறீர்களா? இந்த முடிவை மியூராடோரியன் பதிவு மேலுமாக ஆதரிக்கிறது; எப்படியென்றால், யோவான் சுவிசேஷமே நான்காவது சுவிசேஷம் என்று அது சொல்கிறது.
கூடுதலாக, அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தை ‘மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவுக்கு’ லூக்கா எழுதியதாக அந்தப் பதிவு உறுதிப்படுத்துகிறது. (லூக்கா 1:1; அப்போஸ்தலர் 1:1) அதன்பின்பு அப்போஸ்தலன் பவுல் எழுதிய நிருபங்களை அது பட்டியலிடுகிறது; அதாவது, கொரிந்தியருக்கு (இரண்டு), எபேசியருக்கு, பிலிப்பியருக்கு, கொலோசெயருக்கு, கலாத்தியருக்கு, தெசலோனிக்கேயருக்கு (இரண்டு), ரோமருக்கு, பிலேமோனுக்கு, தீத்துவுக்கு, தீமோத்தேயுவுக்கு (இரண்டு) என அவர் எழுதிய நிருபங்களைக் குறிப்பிடுகிறது. யூதாவின் நிருபத்தையும் யோவானின் இரண்டு நிருபங்களையும்கூட பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட புத்தகங்களாக அது குறிப்பிடுகிறது. அப்போஸ்தலன் யோவானின் முதல் நிருபத்தை அவருடைய சுவிசேஷத்துடன் சேர்த்து ஏற்கெனவே மறைமுகமாக குறிப்பிட்டுவிடுகிறது. அப்போகாலிப்ஸ், அதாவது வெளிப்படுத்துதல், பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் கடைசி புத்தகமாக இடம்பெறுகிறது.
ஆர்வத்திற்குரிய விஷயம் என்னவென்றால், அந்தப் பதிவு பேதுருவின் ஒரு அப்போகாலிப்ஸைப் பற்றி குறிப்பிடுகிறது, ஆனாலும் அதை கிறிஸ்தவர்கள் வாசிக்கக்கூடாதென சிலர் கருதியதாகவும் அது குறிப்பிடுகிறது. அந்தக் காலப்பகுதியில் போலி புத்தகங்கள் வலம்வந்து கொண்டிருந்ததாக அதன் எழுத்தாளர் எச்சரிக்கிறார். “கசப்பான ஏதோவொன்றை இனிப்பான தேனுடன் கலப்பது பொருத்தமற்றது என்பதால்” அப்படிப்பட்ட புத்தகங்களை ஏற்றுக்கொள்ளக்கூடாதென மியூராடோரியன் பதிவு விளக்குகிறது. பரிசுத்த வேதாகமத்தில் சேர்க்கப்படக் கூடாத மற்ற புத்தகங்களையும் அந்தப் பதிவு பட்டியலிட்டது. அப்புத்தகங்கள், ஹெர்மஸின் ஷெபர்ட் புத்தகத்தைப் போல் அப்போஸ்தலரின் காலத்திற்குப் பிறகு எழுதப்பட்டதாலோ, முரணான கருத்துகளை ஆதரிப்பதற்காக எழுதப்பட்டதாலோ அவற்றை பரிசுத்த வேதாகமத்தோடு சேர்க்கக் கூடாதெனவும் அந்தப் பதிவு குறிப்பிடுகிறது.
எபிரெயருக்கு எழுதப்பட்ட நிருபமும், பேதுருவின் இரண்டு நிருபங்களும், யாக்கோபின் நிருபமும் பைபிள் புத்தகங்களின் அதிகாரப்பூர்வ பட்டியலான இந்த மியூராடோரியன் பதிவில் குறிப்பிடப்படாததை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஆனால், அதைப் பிரதியெடுத்த வேதபாரகரின் பணியைப் பற்றி குறிப்பிட்ட பிறகு டாக்டர் ஜெஃப்ரி மார்க் ஹானமான் இவ்வாறு சொன்னார்: “[மியூராடோரியன்] பதிவில், இப்போது காணப்படாத மற்ற புத்தகங்களும் குறிப்பிடப்பட்டிருக்கலாம், அவற்றில் யாக்கோபு, எபிரெயர் (அதோடு, 1 பேதுரு) ஆகிய புத்தகங்களும் அடங்கியிருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வருவது நியாயமானது.”—மியூராடோரியன் பதிவும் அதிகாரப்பூர்வ பட்டியலின் வளர்ச்சியும், ஆங்கிலம்.
ஆகவே, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இன்று இடம்பெற்றுள்ள புத்தகங்களில் பெரும்பாலானவை, பொ.ச. இரண்டாம் நூற்றாண்டிலேயே அதிகாரப்பூர்வமான புத்தகங்களாகக் கருதப்பட்டன என்பதை மியூராடோரியன் பதிவு ஊர்ஜிதப்படுத்துகிறது. ஆனால் எந்தெந்த புத்தகங்கள் பைபிளில் இடம்பெறும் உரிமையைப் பெற்றிருக்கின்றன என்பது, ஏதோவொரு பூர்வ பட்டியலில் அவை இருக்கின்றனவா இல்லையா என்பதைப் பொறுத்தது அல்ல. பைபிள் புத்தகங்களிலுள்ள தகவலே, அவை பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டவை என்பதற்கான அத்தாட்சியை வழங்குகிறது. யெகோவா தேவனே பைபிளின் நூலாசிரியர் என்பதை அதிலுள்ள அனைத்து புத்தகங்களும் உறுதிசெய்கின்றன, அவை ஒன்றுக்கொன்று துளியும் முரண்படாமல் ஒத்திசைவாக இருக்கின்றன. பைபிளின் 66 அதிகாரப்பூர்வ புத்தகங்களிலுள்ள ஒத்திசைவும் சமநிலையும், அவற்றின் ஐக்கியத்திற்கும் முழுமைக்கும் அத்தாட்சி அளிக்கின்றன. ஆகவே, அவை யெகோவாவின் ஆவியால் ஏவப்பட்டு இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வந்துள்ள சத்திய வசனங்கள் ஆகும்; இந்த உண்மையை ஏற்றுக்கொண்டால் நிச்சயம் நீங்கள் பயன் அடைவீர்கள்.—1 தெசலோனிக்கேயர் 2:13; 2 தீமோத்தேயு 3:16, 17.
[பக்கம் 13-ன் படம்]
லூடோவிக்கோ ஆன்டான்யோ மியூராடோரி
[பக்கம் 14-ன் படம்]
அம்பரோசியன் நூலகம்
[பக்கம் 15-ன் படம்]
மியூராடோரியன் பதிவு
[படத்திற்கான நன்றி]
Diritti Biblioteca Ambrosiana. Vietata la riproduzione. Aut. No. F 157 / 05
[பக்கம் 13-ன் படங்களுக்கான நன்றி]
ஏடுகள்: Diritti Biblioteca Ambrosiana. Vietata la riproduzione. Aut. No. F 157 / 05; Muratori, based on line art: © 2005 Brown Brothers