கடவுளுக்குப் பிரியமாகத் தீர்மானம் எடுப்பது எப்படி?
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் 25,000 டாலர் (11,25,000 ரூபாய்) மதிப்புள்ள ‘செக்’கை எடுத்துக்கொண்டு பேங்குக்குப் போனார். அந்தப் பணத்தை ஃபிக்ஸட் டெப்பாஸிட்டில் போடலாமென திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்த பேங்க் அதிகாரியோ ‘பங்குச் சந்தையில் முதலீடு செய்யுங்கள், எத்தனை வருஷமானாலும் அதன் மதிப்பு குறையவே குறையாது’ என்று ஆலோசனை கொடுத்தார். அவரும் அப்படியே செய்யத் தீர்மானித்தார். ஆனால் கொஞ்ச நாளிலேயே, அவர் முதலீடு செய்த பணத்தின் மதிப்பு பெருமளவு சரிந்துவிட்டது.
ஞானமாகத் தீர்மானம் எடுப்பது ஒரு சவால் என்பதை இந்த அனுபவம் காட்டுகிறது. அப்படியானால், வாழ்க்கையில் நாம் எதிர்ப்படும் பல்வேறு தீர்மானங்களைப் பற்றியென்ன? நம்முடைய தீர்மானங்கள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கலாம்—ஏன், வாழ்வா சாவா என்பதையும்கூட நிர்ணயிக்கலாம். எனவே, நாம் ஞானமாகத்தான் தீர்மானம் எடுக்கிறோம் என்பதை எப்படி உறுதி செய்துகொள்வது?
“வழி இதுவே”
என்ன சாப்பிடலாம், என்ன டிரெஸ் போடலாம், எந்த இடத்திற்குப் போகலாம் என பற்பல விஷயங்களுக்காக நாம் தீர்மானம் எடுக்கிறோம். சில தீர்மானங்கள் அற்பமானவையாகத் தோன்றலாம், என்றாலும் அவற்றால் பயங்கர விளைவுகள் நேரிடலாம். உதாரணமாக, முதன்முதலில் ஒரு சிகரெட்டைப் பற்றவைப்பதற்கு எடுக்கும் தீர்மானம் வாழ்க்கை பூராவும் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஒருவரை அடிமைப்படுத்திவிடலாம். ஆகவே, சின்னச் சின்ன விஷயங்களைக்கூட நாம் ஒருபோதும் குறைவாக எடைபோட்டுவிடக் கூடாது.
தீர்மானம் எடுக்கும்போது, அதுவும் அற்பமாகத் தோன்றுகிற விஷயங்களுக்குத் தீர்மானம் எடுக்கும்போதுகூட, வழிநடத்துதலுக்காக நாம் எங்கே போகலாம்? சிக்கலான தீர்மானங்கள் எடுக்க வேண்டிய சமயத்தில் நமக்கு நம்பகமான ஆலோசகர் ஒருவர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்படிப்பட்ட ஓர் ஆலோசகர் இருக்கிறார். இக்காலத்திற்கும் பொருந்துகிற பண்டைய புத்தகம் ஒன்று இப்படி உறுதி அளிக்கிறது: “நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.” (ஏசாயா 30:21) இவை யாருடைய வார்த்தைகள்? இந்த வழிநடத்துதல் நம்பகமானது என நீங்கள் எப்படி நிச்சயமாக இருக்கலாம்?
மேற்குறிப்பிடப்பட்ட அந்த வார்த்தைகளை நீங்கள் பைபிளில் காணலாம்; கோடானுகோடி மக்கள் அதைப் படித்திருக்கிறார்கள், அது படைப்பாளரான யெகோவா தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதையும் அறிந்திருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:16, 17) அவரே மிகச் சிறந்த வழிகாட்டி, ஏனென்றால் நம்மைப் படைத்தவர் அவர்தான். அவரால் எதிர்காலத்தையும் பார்க்க முடியும், ஏனென்றால் “அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகால முதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும்” என்று அவர் சொல்கிறார். (ஏசாயா 46:10) அதனால்தான், யெகோவாவின் வார்த்தையில் நம்பிக்கை வைத்த சங்கீதக்காரன் ஒருவர் இவ்வாறு கூறினார்: “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” (சங்கீதம் 119:105) என்றாலும், கொந்தளிக்கும் கடலைப் போன்ற இன்றைய உலகில் நமது வாழ்க்கைப் படகு பத்திரமாய் கரைசேர யெகோவா நமக்கு எப்படி உதவுகிறார்? நாம் கடவுளுக்குப் பிரியமாகத் தீர்மானம் எடுப்பது எப்படி?
பைபிள் நியமங்களைக் கடைப்பிடியுங்கள்
சரியான தீர்மானங்கள் எடுப்பதற்காக தெய்வீக நியமங்களைக் கிறிஸ்தவர்களுக்கு யெகோவா தேவன் கொடுத்திருக்கிறார். அவற்றைக் கற்றுக்கொண்டு கடைப்பிடிப்பதை, ஒரு மொழியைக் கற்றுக்கொண்டு பயன்படுத்துவதற்கு ஒப்பிடலாம். நீங்கள் அந்த மொழியில் புலமை பெற்றுவிட்டால், யாருடைய பேச்சிலும் இலக்கணப் பிழையைக் கண்டுபிடித்துவிடலாம். எது தவறு என்பதை இலக்கண ரீதியில் உங்களால் சுட்டிக்காட்ட முடியாவிட்டாலும், ஏதோவொன்று நெருடுவது உங்களுக்குத் தெரிந்துவிடும். அதுபோலத்தான், பைபிள் நியமங்களை வாழ்க்கையில் நன்றாகக் கடைப்பிடிக்க நீங்கள் கற்றுக்கொள்ளும்போது, ஒரு தீர்மானம் சரியில்லை என்றோ தெய்வீக நியமங்களுக்கு இசைவாக இல்லை என்றோ பொதுவாக உங்களால் சொல்லிவிட முடியும்.
உதாரணமாக, இளைஞர் ஒருவர் ஹேர்ஸ்டைல் சம்பந்தமாக ஒரு தீர்மானம் எடுக்கிறாரென வைத்துக்கொள்ளுங்கள். பைபிள் எந்தவொரு ஹேர்ஸ்டைலையும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டு கண்டனம் செய்வதில்லை. என்றாலும், ஒரு பைபிள் நியமத்தைக் கவனியுங்கள். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், [“அடக்கத்தினாலும்,” NW] தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்க வேண்டும்.” (1 தீமோத்தேயு 2:9, 10) பவுல் இங்கே பெண்களைப் பற்றி எழுதுகிறார், ஆனால் இதிலுள்ள நியமம் இருபாலாருக்கும் பொருந்துகிறது. அந்த நியமம் என்ன? நம்முடைய தோற்றம் அடக்கத்தையும் தெளிந்த புத்தியையும் வெளிக்காட்ட வேண்டும். ஆகவே, அந்த இளைஞர் இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘என்னுடைய ஹேர்ஸ்டைல் கிறிஸ்தவருக்கு ஏற்ற மாதிரி கண்ணியமாக இருக்கிறதா?’
சீஷனாகிய யாக்கோபு சொன்ன பின்வரும் வார்த்தைகளிலிருந்து பயனுள்ள என்ன நியமங்களை ஓர் இளைஞர் கற்றுக்கொள்ளலாம்? “விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.” (யாக்கோபு 4:4) கடவுளைப் பகைக்கும் இந்த உலகத்திற்குச் சிநேகிதராக இருக்கும் எண்ணமே கிறிஸ்தவர்களுக்கு அருவருப்பாக இருக்கிறது. உங்களுடைய சகாக்களைப் போல ஹேர்ஸ்டைல் வைத்துக்கொள்வது கடவுளின் சிநேகிதராகக் காட்டுமா அல்லது உலகத்தின் சிநேகிதராகக் காட்டுமா? ஹேர்ஸ்டைலைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் அந்த இளைஞர் ஞானமாகத் தீர்மானமெடுக்க அத்தகைய பைபிள் நியமங்களைப் பயன்படுத்தலாம். ஆம், தீர்மானங்கள் எடுக்க பைபிள் நியமங்கள் உதவுகின்றன. அந்த நியமங்களின்படி தீர்மானம் எடுப்பதற்கு நாம் பழகிக்கொள்ளும்போது, ஞானமான முடிவுகளை எடுப்பது எளிதாக இருக்கும். இவ்வாறு, மோசமான விளைவுகளைத் தவிர்ப்போம்.
கடவுளுடைய வார்த்தையான பைபிளில் அநேக நியமங்கள் உள்ளன. ஆனால், நம்முடைய சூழ்நிலைக்குப் பொருத்தமான ஒரு வசனத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியாதிருக்கலாம். என்றாலும், சிலர் கடவுளுடைய வழிநடத்துதலுக்கு எப்படிக் கீழ்ப்படிந்து நடந்தார்கள், வேறுசிலர் கடவுளுடைய எச்சரிக்கைகளை எப்படி அசட்டை செய்தார்கள் என்பதைப் பற்றி அதில் நாம் வாசிக்கலாம். (ஆதியாகமம் 4:6, 7, 13-16; உபாகமம் 30:15-20; 1 கொரிந்தியர் 10:11) இப்படிப்பட்ட விவரப்பதிவுகளை வாசித்து, அலசிப் பார்க்கையில், கடவுளுக்குப் பிரியமான விதத்தில் தீர்மானங்கள் எடுக்க உதவும் தெய்வீக நியமங்களைக் கண்டுகொள்ளலாம்.
உதாரணமாக, அப்போஸ்தலன் பேதுருவுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் இடையே நடந்த சுருக்கமான உரையாடலை எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு வெள்ளிக்காசுகளை வரிப்பணமாக வாங்கும் ஆட்கள் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா”? என்று கேட்டார்கள். அதற்கு பேதுரு, “செலுத்துகிறார்” என்று கூறினார். அதன்பின், இயேசு: “பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள்?” என்று கேட்டார். “அந்நியரிடத்தில்” என்று பேதுரு சொன்னார். அதற்கு இயேசு, “அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்த வேண்டுவதில்லையே. ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்து பார்; ஒரு வெள்ளிப் பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு” என்று கூறினார். (மத்தேயு 17:24-27) இந்தப் பதிவில் என்னென்ன தெய்வீக நியமங்களை நாம் கற்றுக்கொள்கிறோம்?
அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்பதன் மூலம் பேதுருவிடம் இயேசு நியாயங்காட்டிப் பேசினார்: கடவுளுடைய குமாரனாக இருந்ததால் வரிசெலுத்த வேண்டிய அவசியம் இயேசுவுக்கு இருக்கவில்லை. அந்தக் குறிப்பை பேதுரு முதலில் உணரத் தவறியபோதிலும், அதைப் புரிந்துகொள்ள இயேசு அன்புடன் அவருக்கு உதவினார். மற்றவர்கள் தவறு செய்யும்போது, அதைக் கடுமையாக விமர்சிப்பதற்குப் பதிலாக, அல்லது அவர்களைக் கண்டனம் செய்வதற்குப் பதிலாக, இயேசுவைப் போலவே அவர்களைக் கரிசனையுடன் நடத்துவதற்கு நாம் தீர்மானிக்கலாம்.
வரி செலுத்துவதற்குரிய காரணத்தை, அதாவது மற்றவர்களுக்கு இடறல் உண்டாக்கக் கூடாது என்ற காரணத்தை, பேதுருவால் புரிந்துகொள்ள முடிந்தது. மற்றொரு நியமத்தையும் இந்தப் பதிவிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். நம்முடைய உரிமைகளை வற்புறுத்துவதற்குப் பதிலாக, மற்றவர்களுடைய மனசாட்சியை கவனத்தில் எடுத்துக்கொள்வது மிக முக்கியம்.
மற்றவர்களுடைய மனசாட்சிக்கு மதிப்புக் கொடுக்கும் வகையில் தீர்மானங்கள் எடுப்பதற்கு எது நம்மைத் தூண்டுகிறது? அயலார் மீதுள்ள அன்பே. ஆம், முழு ஆத்துமாவுடன் கடவுளை நேசிக்க வேண்டுமென்ற கட்டளைக்கு அடுத்தபடியான மிகப் பெரிய கட்டளை, நம்மைப் போல் நமது அயலாரையும் நேசிக்க வேண்டும் என்பதே; இதைத்தான் இயேசு கிறிஸ்து கற்பித்தார். (மத்தேயு 22:39) என்றாலும், சுயநலமிக்க ஓர் உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம்; அதோடு நாம் பாவிகளாயும் இருப்பதால், சுயநலமாக நடந்துகொள்ளத் தூண்டப்படுகிறோம். ஆகவே, நம்மைப் போல நம் அயலாரையும் நேசிக்க வேண்டுமென்றால், நம்முடைய மனதைப் புதுப்பிக்க வேண்டும்.—ரோமர் 12:2.
அநேகர் இவ்வாறு தங்கள் மனதைப் புதுப்பித்திருக்கிறார்கள். தீர்மானங்கள் எடுக்கும்போது, அவை பெரியவையாக இருந்தாலும்சரி சிறியவையாக இருந்தாலும்சரி, மற்றவர்களுடைய மனசாட்சியையும் அவர்கள் எண்ணிப் பார்க்கிறார்கள். பவுல் இவ்வாறு எழுதினார்: “சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ் செய்யுங்கள்.” (கலாத்தியர் 5:13) இதை எப்படிச் செய்யலாம்? கடவுளுடைய வார்த்தையைக் கற்பிப்பதற்காக கிராமப்புறத்திற்குக் குடிபெயர்ந்து சென்ற ஓர் இளம் பெண்ணின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நகர்ப்புறத்தாரின் கண்களுக்கு அவளுடைய உடை அடக்கமானதாகத் தெரிந்தாலும், நாட்டுப்புறத்தாருக்கு அது வித்தியாசமாகத் தெரிந்தது. ஆகவே, அவளுடைய உடையும் அலங்காரமும் அடக்கமாக இருந்தபோதிலும், “தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு,” ஃபேஷன் உடைகளை உடுத்தாதிருக்கத் தீர்மானித்தாள்.—தீத்து 2:4.
உங்கள் தோற்றத்தைப் பற்றியோ உங்களுக்குப் பிடித்தமான வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றியோ தீர்மானம் எடுக்க வேண்டிய சூழ்நிலையை எதிர்ப்பட்டிருந்தால், நீங்கள் எப்படி நடந்திருப்பீர்கள்? பிறருடைய மனசாட்சியைப் பாதிக்காத வகையில் தீர்மானங்களை எடுக்கும்போது, யெகோவா சந்தோஷப்படுகிறார் என்பதில் நீங்கள் நிச்சயமாயிருக்கலாம்.
நீண்டகாலக் கண்ணோட்டம்
பைபிள் நியமங்களையும் மற்றவர்களுடைய மனசாட்சியையும் தவிர, தீர்மானங்கள் எடுக்கும்போது வேறெதையும் நாம் சிந்தித்துப் பார்க்கலாம்? கிறிஸ்தவர்கள் நடந்துசெல்லும் பாதை கரடுமுரடாகவும் இடுக்கமாகவும் இருந்தாலும், கடவுள் வகுத்திருக்கிற எல்லைக்குள் நடந்துசெல்ல அவர் நமக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். (மத்தேயு 7:13, 14) நாம் எடுக்கும் தீர்மானங்கள் ஆன்மீக ரீதியிலும், மனோ ரீதியிலும், உணர்ச்சி ரீதியிலும், உடல் ரீதியிலும் நம்மை எதிர்காலத்தில் எப்படிப் பாதிக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது அவசியம்.
நீங்கள் ஒரு வேலையில் சேருவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்த வேலையைப் பொறுத்தவரை, ஒழுக்கயீனமான காரியங்களோ மோசமான காரியங்களோ கிடையாது. கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் செல்ல அனுமதி உண்டு. நீங்கள் நினைத்தே பார்க்காத அளவுக்கு சம்பளமும் கிடைக்கும். அந்த முதலாளி உங்களுடைய திறமையை உயர்வாக மதிக்கிறார், அதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவும் விரும்புகிறார். அதுமட்டுமல்லாமல், அந்த வேலையும் உங்களுக்குப் பிடித்திருக்கிறது. இதையெல்லாம் வைத்து உடனே அந்த வேலையில் சேர்ந்துவிடுவீர்களா? அந்த வேலையில் ஒரேயடியாக மூழ்கிவிட நேரிட்டால்? ஓவர்டைம் செய்யச்சொல்லி உங்களை யாரும் வற்புறுத்தப் போவதில்லை; ஆனாலும் ஒரு புராஜெக்ட்டை முடித்துக் கொடுப்பதற்காக உடலை வருத்தி வேலை செய்வீர்களா? அவ்வாறு அடிக்கடி ‘ஓவர்டைம்’ செய்ய வேண்டிய நிலை வருமா? உங்களுடைய குடும்பத்தினரிடமிருந்தும், அதிமுக்கியமான ஆன்மீக நடவடிக்கைகளிலிருந்தும் அது உங்களைப் பிரித்துவிடுமா?
வேலை சம்பந்தமாக ஜிம் என்பவர் எடுத்த பெரிய தீர்மானத்தைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அவர் ஓய்வொழிச்சல் இல்லாமல் உழைத்தார்; இதனால் அநேக பதவிகள் அவருக்குக் கிடைத்தன. காலப்போக்கில், கீழை நாடெங்கிலும் கிளைகளைக் கொண்ட ஒரு கம்பெனியில் நிர்வாக இயக்குனராக ஆனார்; அமெரிக்காவில் இருக்கும் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்தக் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆனார்; அதன் ஐரோப்பிய அலுவலகத்தினுடைய நிர்வாக இயக்குநர் குழுவின் அங்கத்தினராகவும் ஆனார். ஆனால், ஜப்பானில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது, பணத்தையும் பதவியையும் நாடுவது எந்தளவு வீண் என்பதை உணர்ந்தார். அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணமெல்லாம் மாயமாய் மறைந்துபோனது. வாழ்க்கைப் பாதையில் திக்குத் தெரியாமல் தவித்தார். ‘பத்து வருஷங்களுக்குப்பின் நான் என்ன நிலையில் இருப்பேன்?’ என தன்னையே கேட்டுக்கொண்டார். தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் வாழ்க்கையில் அதிக அர்த்தமுள்ள இலட்சியங்கள் இருந்ததைப் புரிந்துகொண்டார். ஏனெனில் அவர்கள் பல வருடங்களாய் யெகோவாவின் சாட்சிகளாக இருந்தார்கள். அவர்கள் அனுபவித்த சந்தோஷத்தையும் திருப்தியையும் தானும் அனுபவிக்க வேண்டுமென விரும்பினார். ஆகவே, அவர் பைபிளைப் படிக்கத் தொடங்கினார்.
ஒரு கிறிஸ்தவராக, நோக்கமுள்ள வாழ்க்கை நடத்துவதற்கு தன்னுடைய வாழ்க்கைப் பாணி ஒரு தடையாக இருந்ததை விரைவில் உணர ஆரம்பித்தார். ஆசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவிற்கும் சதா பயணம் செய்துவந்ததால், பைபிளைப் படிப்பதற்கும் சக விசுவாசிகளுடன் கூட்டுறவு கொள்வதற்கும் அவருக்குப் போதிய நேரம் கிடைக்கவில்லை. ஆகவே, ஒரு தீர்மானத்தை எதிர்ப்பட்டார்: ‘கடந்த 50 வருஷங்களாக வாழ்ந்துவந்த வாழ்க்கை முறையைத் தொடருவதா அல்லது புதிய வாழ்க்கை முறையை ஆரம்பிப்பதா?’ தான் எடுக்கும் தீர்மானத்தின் நீண்டகால விளைவைப் பற்றி கடவுளிடம் ஜெபம் செய்தார்; பின்பு அந்த வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு ஆன்மீக காரியங்களுக்கு நேரம் கிடைக்கிற வேலையை மாத்திரமே செய்யத் தீர்மானித்தார். (1 தீமோத்தேயு 6:6-8) அவர் எடுத்த தீர்மானம் அவரை மகிழ்வித்தது, கிறிஸ்தவ நடவடிக்கைகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவதற்கு வாய்ப்பையும் தந்தது.
எனவே, சிறியவையாக இருந்தாலும்சரி பெரியவையாக இருந்தாலும்சரி, நீங்கள் எடுக்கும் எல்லாத் தீர்மானங்களுமே முக்கியம். இன்றைக்கு நீங்கள் எடுக்கும் தீர்மானம் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கலாம், எதிர்காலத்தில் வாழ்வா சாவா என்பதையும்கூட நிர்ணயிக்கலாம். பைபிள் நியமங்களையும், மற்றவர்களுடைய மனசாட்சியையும், உங்களுடைய செயலால் ஏற்படும் நீண்டகால விளைவையும் கவனத்தில் எடுத்துக்கொண்டால் ஞானமான தீர்மானங்களை உங்களால் எடுக்க முடியும். ஆகையால், கடவுளுக்குப் பிரியமாகத் தீர்மானம் எடுப்பீர்களாக.
[பக்கம் 13-ன் படம்]
சின்னச் சின்ன தீர்மானங்களாகத் தோன்றினாலும் அவற்றால் படுபயங்கரமான விளைவுகள் நேரிடலாம்
[பக்கம் 14-ன் படம்]
ஞானமாய்த் தீர்மானமெடுக்க பைபிள் நியமங்கள் எப்படி இவளுக்கு உதவலாம்?
[பக்கம் 15-ன் படம்]
பேதுருவிடம் இயேசு கரிசனையுடன் பேசினார்