வாழ்க்கை சரிதை
என் வாழ்க்கையை மாற்றிய ஒரு கேள்வி
ஹாரி பலாயன் சொன்னபடி
கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்? இந்தக் கேள்வி சின்ன வயதிலிருந்தே என் மனதைக் குடைந்துகொண்டிருந்தது. என்னுடைய அப்பா, அம்மா கஷ்டப்பட்டு வேலை செய்தார்கள்; நாணயமாக வாழ்ந்தார்கள்; குடும்பத்தை கண்ணும்கருத்துமாகக் கவனித்துக்கொண்டார்கள். ஆனால் மதத்தில் அப்பாவுக்குத் துளிகூட ஈடுபாடு இல்லை, அம்மா ஏதோ கொஞ்சம் பக்தியாக இருந்தார். எனவே என் மனதைக் குடைந்துகொண்டிருந்த கேள்விக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.
இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தபோது நான் அமெரிக்க கடற்படையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்தேன். போர்க்காலத்திலும் அதற்குப் பிறகும் இந்தக் கேள்வியைக் குறித்து சதா யோசித்துக்கொண்டிருந்தேன். போர் முடிந்த பிறகு, சீனாவுக்கு நிவாரணப் பொருள்களை ஏற்றிச் சென்ற கப்பலில் வேலை செய்தேன். அங்கு கிட்டத்தட்ட ஒரு வருஷம் தங்கினேன்; லட்சோபலட்சம் மக்களின் கண்ணீர் வாழ்க்கையைக் கண்ணார கண்டேன்.
சீனர்கள் கடின உழைப்பாளிகள்; புத்திசாலிகள். ஆனால், அவர்களில் அநேகர் இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட வன்முறையாலும் வறுமையாலும் அல்லாடிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த அழகான சீன குழந்தைகள் பிச்சைக்கார கோலத்தில் என்னிடம் வந்து கையேந்தி நின்றதைப் பார்த்தபோது நெஞ்சமே பதறியது.
ஏன் இந்தத் துன்பம்?
நான் 1925-ல் பிறந்தேன், அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் வளர்ந்தேன். சீனாவில் நிலவியதைப் போன்ற கஷ்டத்தை நான் அதுவரை பார்த்ததே இல்லை. ‘சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றால், அப்பாவிக் குழந்தைகள்கூட இந்தளவு துன்பப்பட அவர் ஏன் அனுமதிக்கிறார்?’ என்று என்னையே திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டேன்.
‘கடவுள் ஒருவர் உண்மையிலேயே இருக்கிறார் என்றால் ஆண்டாண்டு காலமாய் இந்த அழிவையும், படுகொலையையும், மரணத்தையும், துன்பத்தையும் ஏன் அனுமதித்திருக்கிறார்? அதிலும் குறிப்பாக, இரண்டாம் உலகப் போரில் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் தங்கள் பொன்னான உயிரை இழக்க ஏன் அனுமதித்தார்? ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் பாதிரியாரின் தூண்டுதலால் தேசப்பற்றைக் காரணம் காட்டி ஒருவரையொருவர் கொன்று குவித்தது ஏன்?’ இப்படிப் பலவாறாக யோசித்தேன்.
தொலைநோக்கி
சீனா செல்வதற்கு முன் நடந்த சில சம்பவங்களை இப்போது சொல்கிறேன். 1939-ல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமாகி, உலகெங்கும் மக்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, கடவுள் என்று ஒருவர் இருக்கவே முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, அறிவியல் வகுப்பிற்காக ஒவ்வொரு மாணவனும் விஞ்ஞான சாதனம் ஒன்றைத் தயாரிக்க வேண்டியிருந்தது. எனக்கு வானாராய்ச்சியில் ஆர்வம் இருந்ததால், பெரிய தொலைநோக்கி ஒன்றை உருவாக்க ஆரம்பித்தேன். அதன் கண்ணாடியின் குறுக்களவு இருபது சென்டிமீட்டர்.
இந்தத் தொலைநோக்கியில் பொருத்துவதற்காக, 2.5 சென்டிமீட்டருக்கும் அதிக தடிமனும், 20 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட கண்ணாடியை வாங்கினேன். கண்ணாடியை அறுப்பவரிடம் கொடுத்து அதை வட்டமாக வெட்டினேன். அதை நன்றாக தேய்த்து ஒரு குழியாடி ஆக்குவதற்குள் எனக்குப் போதும்போதும் என்றாகிவிட்டது. ஒரு செமஸ்டரில் எனக்குக் கிடைத்த எல்லா ஓய்வு நேரமும் இதற்கே சரியாக இருந்தது. ஒருவழியாக, கண்ணாடியைத் தயாரித்து, அதை ஒரு நீளமான உலோகக் குழாயில் பொருத்தினேன். வெவ்வேறு ‘பவர்களில்’ லென்சுகளையும் அதில் பொருத்தினேன்.
ஓர் அமாவாசை இரவு நேரத்தில், முதன்முறையாக என் தொலைநோக்கியை வெளியே எடுத்துக் கொண்டுபோய், வான வீதியில் இறைந்து கிடந்த நட்சத்திரங்களையும் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த கிரகங்களையும் பார்த்தேன். அவற்றின் எண்ணிக்கையையும், நேர்த்தியையும் கண்டு பிரமித்துப் போனேன். ஆனால், நட்சத்திரங்கள் என நான் நினைத்தவை உண்மையில் நட்சத்திரங்களே அல்ல; மாறாக, அவை நம்முடைய பால்வீதி மண்டலத்தைப் போன்றே கோடானு கோடி நட்சத்திரங்களைக் கொண்ட நட்சத்திர மண்டலங்கள்; இதைப் பிற்பாடு அறிந்தபோது அப்படியே மலைத்துவிட்டேன்.
‘இதெல்லாம் நிச்சயம் தானாகவே வந்திருக்க முடியாது; ஒழுங்கமைக்கப்பட்ட எதுவும் தற்செயலாக உருவாவதில்லை; இந்தப் பிரபஞ்சத்தின் ஒழுங்கைப் பார்த்தால் மாமேதை ஒருவரின் கைவண்ணத்தைப் போல இருக்கிறது; அப்படியானால், கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா?’ என்றெல்லாம் யோசித்தேன். தொலைநோக்கியை உருவாக்கிய அந்த அனுபவத்திற்குப் பிறகு, நான் பிடிவாதமாகப் பின்பற்றி வந்த நாத்திகக் கொள்கையை விட்டு சற்று பின்வாங்கினேன்.
‘பிரபஞ்சத்தை இவ்வளவு அற்புதமாகப் படைக்குமளவுக்குச் சக்தியும் ஞானமும் உள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றால் இந்தப் பூமியிலுள்ள பரிதாபமான நிலைமையை அவர் ஏன் சரிசெய்யவில்லை? இந்தத் துன்பத்தையெல்லாம் அவர் ஏன் அனுமதிக்கிறார்?’ என்றெல்லாம் என்னையே கேட்டுக்கொண்டேன். இந்தக் கேள்விகளை மதப்பற்றுமிக்க ஆட்களிடம் கேட்டபோது அவர்களால் திருப்தியான பதிலைத் தர முடியவில்லை.
பள்ளிப் படிப்பையும் பல வருடக் கல்லூரிப் படிப்பையும் முடித்த பிறகு அமெரிக்க கடற்படையில் சேர்ந்தேன். அங்கிருந்த ராணுவ குருமார்களாலும் என்னுடைய கேள்விக்குப் பதில் அளிக்க முடியவில்லை. “அதெல்லாம் பரம ரகசியம்” என்ற பதில்தான், மதப்பற்றுள்ள அநேகரிடமிருந்து வந்தது.
தேடல் தொடர்கிறது
சீனாவை விட்டு புறப்பட்டேன், ஆனால் கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்ற கேள்வி மட்டும் எனக்குள் தங்கிவிட்டது. பசிபிக் பெருங்கடலைத் தாண்டி வீடு திரும்புகையில் நடுநடுவே சில தீவுகளில் கப்பல் நின்றது. அங்கே ராணுவ கல்லறைகளைப் பார்த்தேன்; மலரும் முன்னே மடிந்துபோன இளைஞர்களின் கல்லறைகள்தான் அதிகமிருந்தன. இக்கொடூரங்களைக் கண்டபோது அதே கேள்விதான் திரும்பத் திரும்ப எனக்குள் எதிரொலித்தது.
அமெரிக்காவிற்குத் திரும்பிய பிறகு, கடற்படையை விட்டு வெளியேறினேன். மாஸசூசெட்ஸில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், மீதியிருந்த ஒரு வருட படிப்பையும் முடித்து பட்டம் பெற்றேன். ஆனால் கலிபோர்னியாவிலிருந்த என் வீட்டுக்குப் போகவில்லை. என் கேள்விக்கு விடை தேடுவதற்காக அமெரிக்காவின் கிழக்கு பகுதியிலேயே தங்கிவிடுவது என்று தீர்மானித்தேன். நியு யார்க் நகரத்தில் நிறைய மதங்கள் இருந்ததால், அவற்றின் போதனைகளைத் தெரிந்துகொள்வதற்காக அங்கே செல்ல விரும்பினேன்.
நியு யார்க்கில் வசித்த என்னுடைய பெரியம்மா இசபெல் கபிஜென் தன்னுடைய வீட்டிலேயே தங்கிக்கொள்ள சொன்னார். அவரும், ரோஸ், ரூத் என்ற அவருடைய மகள்களும் யெகோவாவின் சாட்சிகளாக இருந்தனர். சாட்சிகளுடைய மத நம்பிக்கைகளில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் இருக்கவில்லை. அதனால் மற்ற மத ஆராதனைகளில் கலந்துகொண்டு, அங்கிருந்த பலரோடு பேசிப் பார்த்தேன்; அவர்களுடைய புத்தகங்களையும் படித்தேன். கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்ற கேள்விக்கு அவர்களாலும் பதில் சொல்ல முடியவில்லை. கடைசியில், கடவுளே இல்லை என்ற முடிவுக்கு வந்தேன்.
பதில் கிடைத்தது
அதன் பிறகு, யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக அவர்களுடைய பத்திரிகைகள் சிலவற்றை தரும்படி என்னுடைய பெரியம்மாவிடமும் அவருடைய மகள்களிடமும் கேட்டேன். அவற்றைப் படிக்கும்போதே, யெகோவாவின் சாட்சிகள் மற்ற மதங்களிலிருந்து ரொம்பவே வித்தியாசமாக இருப்பது பளிச்சென தெரிந்தது. அவற்றில் காணப்பட்ட பதில்கள் பைபிள் அடிப்படையில் இருந்தன, திருப்தியும் அளித்தன. கொஞ்ச காலத்திலேயே, கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்ற கேள்விக்குப் பதில் கிடைத்தது.
அதுமட்டுமல்ல, யெகோவாவின் சாட்சிகள் பைபிளிலிருந்து எதைப் போதித்தார்களோ அதை அப்படியே கடைப்பிடித்ததை என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. உதாரணத்திற்கு, இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஜெர்மனியிலிருந்த இளம் சாட்சிகள் என்ன செய்தார்கள் என்று என் பெரியம்மாவிடம் கேட்டேன். ராணுவத்தில் சேர்ந்தார்களா? “ஹெய்ல் ஹிட்லர்!” சொன்னார்களா? ஸ்வஸ்திக் சின்னமுள்ள கொடியை வணங்கினார்களா? என்றெல்லாம் கேள்விகளை அடுக்கினேன். இல்லவே இல்லை என்றார் பெரியம்மா. நடுநிலை வகித்ததால் அவர்கள் சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள், அங்கே நிறைய பேர் கொல்லப்பட்டார்கள், அதோடு உலகமுழுவதும் இருக்கும் சாட்சிகள் யாருமே போரில் கலந்துகொள்வதில்லை என்றெல்லாம் பெரியம்மா சொன்னார். ஜனநாயக நாடுகளில்கூட யெகோவாவின் சாட்சியாய் இருக்கும் இளைஞர்கள் தங்கள் நடுநிலை காரணமாகச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
பெரியம்மா என்னிடம் யோவான் 13:35-ஐ வாசிக்கச் சொன்னார். அது இவ்வாறு கூறுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” உண்மை கிறிஸ்தவர்கள் உலகத்தில் எங்கே இருந்தாலும் அன்புதான் அவர்களுடைய அடையாளச் சின்னம். அவர்கள் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் போரில் ஈடுபட்டு ஒருவரையொருவர் கொல்வதில்லை! “இயேசுவும் அவருடைய சீஷர்களும் ரோம போர்களில் எதிரெதிர் அணியில் இருந்து ஒருவரையொருவர் கொன்று குவிப்பதை உன்னால் நினைத்துப் பார்க்க முடிகிறதா?” என்று பெரியம்மா என்னிடம் கேட்டார்.
பிறகு, 1 யோவான் 3:10-12-ஐ வாசிக்கச் சொன்னார். அது இவ்வாறு கூறுகிறது: ‘இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. நாம் ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டும். . . . பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்க வேண்டாம்.’
இவ்விஷயத்தில் பைபிளின் போதனை தெளிவாக இருக்கிறது. எந்த நாட்டில் வாழ்ந்தாலும் உண்மை கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். அவர்கள் தங்களுடைய கிறிஸ்தவ சகோதரர்களையும் சரி மற்றவர்களையும் சரி, எந்தச் சமயத்திலும் கொல்வது கிடையாது. எனவேதான், இயேசு தம் சீஷர்களைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.”—யோவான் 17:16.
துன்பத்திற்கான காரணம்
கடவுள் துன்பத்தை ஏன் அனுமதித்திருக்கிறார் என்ற கேள்விக்கான பதில் பைபிளில் இருக்கிறது என்பதைச் சீக்கிரத்திலேயே தெரிந்துகொண்டேன். கடவுள் நம்முடைய முதல் பெற்றோரைப் பரிபூரணராகப் படைத்து, ஒரு பூங்காவனத்தில் குடிவைத்தார் என்று அது சொல்கிறது. (ஆதியாகமம் 1:26; 2:15) அவர்களுக்கு மிக அருமையான ஒரு பரிசையும் கடவுள் கொடுத்தார்; அதுதான், சுயமாகத் தெரிவுசெய்யும் சுதந்திரம். அதை அவர்கள் பொறுப்போடு பயன்படுத்த வேண்டியிருந்தது. கடவுளுக்கும் அவரது சட்டங்களுக்கும் அவர்கள் கீழ்ப்படிந்திருந்தால், அந்தப் பூங்காவனத்தில் பரிபூரணமாக என்றென்றைக்கும் வாழ்ந்திருப்பார்கள். இந்த முழு பூமியையும் ஒரு பூங்காவனமாக மாற்றுவதற்கு அவர்கள் வேலை செய்திருப்பார்கள். அவர்களுடைய பிள்ளைகளும் பரிபூரணராக இருந்திருப்பார்கள். இப்படியே, காலப்போக்கில் இந்தப் பூமி பரிபூரணமும், மகிழ்ச்சியுமிக்க மக்கள் குடியிருக்கும் பூங்காவனமாய் ஆகியிருக்கும்.—ஆதியாகமம் 1:28.
ஆனால், ஆதாமும் ஏவாளும் கடவுளை விட்டுவிட்டு தங்கள் இஷ்டத்துக்கு நடக்க தீர்மானித்தால், பரிபூரணத்தை இழக்க நேரிடும். (ஆதியாகமம் 2:16, 17) வருத்தகரமாக, நம்முடைய முதல் பெற்றோர் தங்கள் சுதந்திரத்தைப் பொறுப்பற்ற விதத்தில் பயன்படுத்தி, தங்கள் மனம்போல் செயல்பட தீர்மானித்தார்கள். இவ்விதத்தில் முழு மனிதகுலத்திற்கும் கேடு விளையும்படி நடந்துகொண்டார்கள். அவர்களைத் தூண்டிவிட்டவன், ஒரு கலகக்கார ஆவி சிருஷ்டி. பிசாசாகிய சாத்தான் என்று அழைக்கப்படும் அவன், கடவுளிடமிருந்து விலகி சுதந்திரமாகச் செயல்பட விரும்பினான். கடவுளுக்கே உரிய வணக்கத்தை அபகரிக்க நினைத்தான்.—ஆதியாகமம் 3:1-19; வெளிப்படுத்துதல் 4:11.
இவ்விதமாக சாத்தான், ‘இப்பிரபஞ்சத்தின் தேவனாக’ ஆனான். (2 கொரிந்தியர் 4:4) ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது’ என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 5:19) சாத்தானை “இந்த உலகத்தின் அதிபதி” என்று இயேசு அழைத்தார். (யோவான் 14:30) சாத்தானும், நம் முதல் பெற்றோரும் கடவுளுக்குக் கீழ்ப்படியாததன் காரணமாக அபூரணம், வன்முறை, மரணம், துக்கம், துன்பம் ஆகியவை மனிதகுலத்தை ஆட்டிப்படைக்க ஆரம்பித்தன.—ரோமர் 5:12.
“தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல”
கடவுளுடைய சட்டங்களை மனிதர்கள் புறக்கணித்ததால்தான் இவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டிருக்கின்றன; இவற்றை மனிதர்களே கண்கூடாகப் பார்ப்பதற்காகத்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எல்லாவற்றையும் கடவுள் அனுமதித்திருக்கிறார். இதனால், பின்வருமாறு பைபிள் சொல்வது எவ்வளவு உண்மையென்று முழு மனிதகுலமும் புரிந்துகொள்ள போதிய வாய்ப்புகளை அளித்திருக்கிறார். ‘மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல, தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல.’—எரேமியா 10:23, 24.
கடவுளிடமிருந்து பிரிந்து சுதந்திரமாகச் செயல்படும் மனித ஆட்சி முறைகள் காலங்காலமாகவே தோல்வியைத் தழுவியிருப்பதை நம் எவராலும் மறுக்க முடியாது. ஆக, சுயமாய் ஆட்சி செய்துகொள்ளும் வாய்ப்பை மனிதர்களுக்குக் கடவுள் இனியும் அளிக்கப் போவதில்லை; ஆம், தம்மையும் தம் சட்டங்களையும் விட்டு சுதந்திரமாக வாழ்ந்து கேடு வருவித்துக்கொள்ள அவர்களை அனுமதிக்கப் போவதில்லை.
மகத்தான எதிர்காலம்
கொடுமை நிறைந்த இந்தப் பொல்லாத உலகை கடவுள் வெகு சீக்கிரத்தில் அழிக்கப்போவதாக பைபிள் தீர்க்கதரிசனம் முன்னறிவிக்கிறது: “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மன மகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:10, 11.
தானியேல் 2:44 இவ்வாறு முன்னறிவிக்கிறது: “அந்த ராஜாக்களின் [இப்போதிருக்கும் பல்வேறு வகையான அரசாங்கங்களின்] நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” மனித அரசாங்கங்கள் அதன்பின் தலைதூக்கவே முடியாது. முழு பூமியும் கடவுளுடைய ராஜ்யத்தால் ஆளப்படும். அவருடைய ராஜ்யத்தில் இந்தப் பூமி ஒரு பூங்காவனமாக மாறும்; மனிதர்கள் படிப்படியாகப் பரிபூரண நிலையை அடைந்து என்றென்றும் சந்தோஷமாக வாழ்வார்கள். “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை” என்று பைபிள் வாக்குறுதி அளிக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:4) கடவுள் எப்பேர்ப்பட்ட மகத்தான எதிர்காலத்தை நமக்கு வைத்திருக்கிறார்!
வாழ்க்கை மாறியது
என்னுடைய கேள்விக்குத் திருப்தியான பதில் கிடைத்தபோது என் வாழ்க்கையே மாறியது. கடவுளுக்குச் சேவை செய்யவும், இந்தப் பதிலை மற்றவர்கள் தெரிந்துகொள்ள உதவவும் விரும்பினேன். “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” என்று 1 யோவான் 2:17 சொல்வதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டேன். கடவுளுடைய புதிய உலகில் நித்திய ஜீவனைப் பெற நெஞ்சார விரும்பினேன். நியு யார்க்கில் தங்கி, அங்கிருந்த சபையோடு கூட்டுறவுகொள்ளத் தொடங்கினேன். நான் கற்றுக்கொண்டதை மற்றவர்களும் கற்றுக்கொள்ள உதவியதில் மறக்க முடியாத அனுபவங்கள் நிறைய கிடைத்தன.
1949-ல் ரோஸ்மரீ லூயிஸை சந்தித்தேன். அவளும், அவள் அம்மாவான சேடீயும், அவளுடைய சகோதரிகள் ஆறு பேரும் யெகோவாவைச் சேவித்து வந்தார்கள். ரோஸ் முழுநேர பிரசங்க ஊழியம் செய்து வந்தாள். அவளிடமிருந்த நல்ல பண்புகள் காந்தம் போல என்னை அவளிடம் ஈர்த்தன. ஜூன், 1950-ல் நாங்கள் திருமணம் செய்துகொண்டு, நியு யார்க்கில் தங்கினோம். எல்லாவற்றையும் சந்தோஷமாகச் செய்தோம். கடவுளுடைய புதிய உலகில் என்றென்றும் வாழும் நம்பிக்கை எங்களுக்கு உற்சாகத்தின் ஊற்றாக இருந்தது.
1957-ல் நானும் ரோஸ்மரீயும் நியு யார்க், புரூக்ளினில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய உலகத் தலைமையகத்தில் முழுநேர சேவை செய்ய அழைக்கப்பட்டோம். ஜூன், 2004-ல், எங்களுக்குத் திருமணமாகி 54 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதில் 47 ஆண்டுகளை புரூக்ளின் தலைமையகத்தில் செலவிட்டிருந்தோம். யெகோவாவுக்குச் சேவை செய்வதிலும், ஆயிரக்கணக்கான சக வணக்கத்தாருடன் சேர்ந்து வேலை செய்வதிலும் நாங்கள் செலவிட்ட அந்த ஆண்டுகள் மிகமிக திருப்தியானவை.
பேரிடியாய் தாக்கிய துன்பம்
வருத்தகரமாக, டிசம்பர், 2004-ன் ஆரம்பத்தில் ரோஸ்மரீயின் நுரையீரல் ஒன்றில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரிய வந்தது. அது வேகமாக வளர்ந்ததால், சீக்கிரத்திலேயே அதை நீக்கிவிடுவது நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் கூறினார்கள். டிசம்பர் மாத பிற்பகுதியில் ஆபரேஷன் நடந்து முடிந்தது. ஒரு வாரத்திற்கு பிறகு, மருத்துவமனையில் ரோஸ்மரீயின் அறையில் நான் இருந்தபோது டாக்டர் ஒருவர் வந்து, “ரோஸ்மரீ, உங்களுக்குக் குணமாயிடுச்சு, நீங்க வீட்டுக்கு போகலாம்!” என்றார்.
என்றாலும், வீடு திரும்பிய கொஞ்ச நாளிலேயே ரோஸ்மரீக்கு வயிற்றிலும், மற்ற பகுதிகளிலும் தாங்க முடியாத வலி ஏற்பட்டது. அந்த வலி நீடித்ததால், கூடுதல் பரிசோதனைகளுக்காக மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். ஏதோ காரணத்தினால் அவளுடைய பல முக்கிய உறுப்புகள் இரத்தக் கட்டிகளை உண்டுபண்ணுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த உறுப்புகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போனது. இதைச் சரிசெய்வதற்கு டாக்டர்கள் முடிந்தவரை முயற்சி செய்தார்கள். ஆனால் பிரயோஜனமே இல்லை. சில வாரங்களுக்குப் பிறகு, ஜனவரி 30, 2005-ல் என் வாழ்க்கையை ஒரு பேரிடி தாக்கியது. என் உயிருக்கு உயிரான ரோஸ்மரீ என்னை விட்டுப் பிரிந்தாள்.
அதுவரை, கிட்டத்தட்ட எண்பது ஆண்டு காலமாக, மக்கள் படும் எவ்வளவோ கஷ்டங்களைப் பார்த்திருந்தேன். ஆனால், என் மனைவியின் பிரிவுதான் ஜீரணிக்கவே முடியாததாய் இருந்தது. ஏனென்றால், பைபிள் சொல்கிற மாதிரி நானும் ரோஸ்மரீயும் ‘ஒரே மாம்சமாயிருந்தோம்.’ (ஆதியாகமம் 2:24) மற்றவர்கள் பட்ட வேதனையெல்லாம் பார்த்திருந்தேன். நண்பர்கள், உறவினர்கள் இறந்தபோது அந்த வேதனையை நானும் அனுபவித்திருந்தேன். ஆனால், என் மனைவி இறந்தபோது ஏற்பட்ட அந்த வலியைத்தான் என்னால் தாங்கவும் முடியவில்லை, மறக்கவும் முடியவில்லை. இவ்வளவு காலமாக மனிதர்கள் தங்கள் அன்பானவர்களை மரணத்தில் பறிகொடுத்து எந்தளவு துடியாய்த் துடித்திருப்பார்கள் என்பதை இப்போது என்னால் முழுமையாக உணர முடிகிறது.
இருந்தாலும், துன்பத்துக்கு என்ன காரணம், அது எப்படி முடிவுக்கு வரப்போகிறது என்பதைப் பற்றியெல்லாம் அறிந்திருப்பது இந்தச் சோகத்தைத் தாங்கிக்கொள்ள எனக்கு உதவுகிறது. ‘நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு யெகோவா சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்’ என்று சங்கீதம் 34:18 கூறுகிறது. இறந்து போனவர்கள் கடவுளுடைய புதிய உலகில் மறுபடியும் உயிரடைந்து, என்றென்றும் வாழும் வாய்ப்பைப் பெறுவார்கள். பைபிளின் இந்தப் போதனைதான் இப்போது என் சோகத்திற்கு அருமருந்தாக உள்ளது. அப்போஸ்தலர் 24:15 இவ்வாறு உறுதி அளிக்கிறது: ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பார்கள்.’ கடவுளை ரோஸ்மரீ உள்ளப்பூர்வமாக நேசித்தாள். அதேபோல கடவுளும் அவளை நேசித்தார்; உரிய நேரத்தில் அவளை நிச்சயம் உயிர்த்தெழுப்புவார் என்பதில் உறுதியாய் இருக்கிறேன். அது சீக்கிரத்தில் நடக்கும் என்றும் நம்புகிறேன்.—லூக்கா 20:38; யோவான் 11:25.
அன்பானவரை மரணத்தில் இழக்கையில் ஏற்படும் துயரம் அதிகம்தான். ஆனால் அவர் உயிர்த்தெழுந்து வரும்போது ஏற்படும் சந்தோஷம் பன்மடங்கு அதிகமாக இருக்கும். (மாற்கு 5:42) “மரித்த உம்முடையவர்கள் . . . எழுந்திருப்பார்கள். . . . மரித்தோரைப் பூமி புறப்படப்பண்ணும்” என்று கடவுளுடைய வார்த்தை உறுதி அளிக்கிறது. (ஏசாயா 26:19) அப்போஸ்தலர் 24:15-ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘நீதிமான்களில்’ பலர், அநேகமாக முதலாவது உயிர்த்தெழுப்பப்படுவார்கள். அது என்னே ஓர் அருமையான சமயமாக இருக்கும்! ரோஸ்மரீயும் உயிர்த்தெழுந்து வருவாள். அப்போது அவளுக்குப் பிரியமானவர்கள் அவளை எவ்வளவு ஆனந்தத்தோடு வரவேற்பார்கள்! துன்பமே இல்லாத அந்த உலகில் வாழ்வது எவ்வளவாய் திருப்தி அளிக்கும்!
[பக்கம் 9-ன் படங்கள்]
சீனாவில் மக்கள் படுகிற கஷ்டத்தைக் கவனித்தேன்
[பக்கம் 10-ன் படங்கள்]
1957 முதற்கொண்டு புரூக்ளினில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமையகத்தில் வேலை செய்கிறேன்
[பக்கம் 12-ன் படம்]
1950-ல் ரோஸ்மரீயை மணந்தேன்
[பக்கம் 13-ன் படம்]
2000-ல் எங்கள் 50-வது திருமண நாளின்போது