தயக்கமின்றி, தைரியமாகப் பேச உங்களால் முடியுமா?
இன்று 235 நாடுகளில் வாழும் 60 லட்சத்துக்கும் மேலானோர் தயக்கமின்றி, தைரியமாகப் பேசி வருகிறார்கள். (பிலிப்பியர் 1:20; 1 தீமோத்தேயு 3:13; எபிரெயர் 3:6; 1 யோவான் 3:21) தயக்கமின்றி, தைரியமாக பேசுவது என்றால் என்ன? அப்படிப் பேசுவதற்கான திறனை பெறுவது எப்படி? எந்தெந்த சந்தர்ப்பங்களில் இது நமக்கு உதவும்?
தயக்கமின்றி, தைரியமாகப் பேசுவது என்பதற்கான கிரேக்க வார்த்தை “சுதந்திரமாக பேசுவது, தங்குதடையின்றி பேசுவது, . . . எந்தப் பயமும் இல்லாமல் தைரியமாகப் பேசுவது ஆகியவற்றை அர்த்தப்படுத்துகிறது. இது தன்னம்பிக்கை, தைரியம், துணிவு ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. இது பேச்சோடு மட்டும்தான் சம்பந்தப்பட்டுள்ளதென சொல்ல முடியாது” என்று வைன்ஸ் எக்ஸ்பாஸிட்டரி டிக்ஷ்னரி ஆஃப் ஓல்ட் அண்ட் நியூ டெஸ்டமென்ட் உவர்ட்ஸ் கூறுகிறது. என்றாலும், இப்படித் தைரியமாகப் பேசுவதைக் கடுகடுப்பாகப் பேசுவதோடு குழப்பிக் கொள்ளக்கூடாது. ‘உங்கள் பேச்சு எப்பொழுதும் இனியதாய் இருப்பதாக’ என்று பைபிள் கூறுகிறது. (கொலோசெயர் 4:6, பொது மொழிபெயர்ப்பு) தயக்கமின்றி, தைரியமாகப் பேசுவது என்பது இக்கட்டான சூழ்நிலைக்கோ மனித பயத்திற்கோ இடங்கொடுக்காமல் சாதுரியமாகப் பேசுவதை அர்த்தப்படுத்துகிறது.
தைரியமாகப் பேசுவது பிறப்பிலேயே நாம் பெற்ற உரிமையென சொல்ல முடியுமா? அப்போஸ்தலன் பவுல் எபேசுவில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு என்ன எழுதினார் என்பதைக் கவனியுங்கள்: “பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.” அதோடு, இயேசு கிறிஸ்துவின் மூலமாக, “அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது” என்று அவர் கூறினார். (எபேசியர் 3:8-12) எனவே, தைரியமாகப் பேசுவதை ஒரு பிறப்புரிமையாக யாரும் பெறுவதில்லை. மாறாக, இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் அடிப்படையில் யெகோவா தேவனுடன் நாம் கொண்டிருக்கும் உறவின் மூலமாகவே அதைப் பெறுகிறோம். தயக்கமின்றி, தைரியமாகப் பேச எது நமக்கு உதவும்? பிரசங்கிக்கையிலும் போதிக்கையிலும் ஜெபிக்கையிலும் இத்திறனை எப்படிப் பயன்படுத்தலாம்?
தைரியமாகப் பிரசங்கிக்க எது நமக்கு உதவும்?
தயக்கமின்றி, தைரியமாகப் பேசுவதில் மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் இயேசு கிறிஸ்து. அவருக்கு இருந்த வைராக்கியமே பிரசங்கிப்பதற்குக் கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள அவரைத் தூண்டியது. ஓய்வெடுக்கையிலோ, விருந்தில் கலந்துகொள்கையிலோ, பிரயாணம் செய்கையிலோ எந்தச் சந்தர்ப்பத்திலும் கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து பேசுவதற்கான வாய்ப்பை அவர் நழுவவிடவே இல்லை. கேலிப்பேச்சோ, எதிர்ப்போ எதுவுமே அவரை மவுனமாக்கிவிடவில்லை. மாறாக, அன்றிருந்த மதத் தலைவர்களின் மாய்மாலங்களைத் தைரியமாக அம்பலப்படுத்தினார். (மத்தேயு 23:13-36) கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்படுகையிலும்கூட தைரியமாகப் பேசினார்.—யோவான் 18:6, 19, 20, 37.
அதே விதமாக, இயேசுவின் அப்போஸ்தலர்களும் தைரியமாகப் பேசினார்கள். பொ.ச. 33, பெந்தெகொஸ்தே தினத்தன்று, 3,000-க்கும் அதிகமானோருக்கு முன்பாக பேதுரு தைரியமாகப் பேசினார். இதே பேதுருதான் ஒருசில நாட்களுக்கு முன்பு ஒரு வேலைக்கார பெண் தன்னை அடையாளம் கண்டுகொண்டபோது பயந்துவிட்டார் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். (மாற்கு 14:66-71; அப்போஸ்தலர் 2:14, 29, 41) பின்னர், விசாரணைக்காக மதத் தலைவர்கள் முன்னால் நிறுத்தப்பட்டபோது பேதுருவும் யோவானும் பயந்துவிடவில்லை. மாறாக, உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவைக் குறித்து எவ்வித தயக்கமும் இல்லாமல் தைரியமாகப் பிரசங்கித்தார்கள். சொல்லப்போனால், அவர்கள் இயேசுவுடனே இருந்தவர்கள் என்பதை அவர்கள் தைரியமாகப் பேசிய விதத்தைப் பார்த்தே அந்த மதத்தலைவர்கள் புரிந்துகொண்டார்கள். (அப்போஸ்தலர் 4:5-13) இந்தளவு தைரியமாய் பேச அவர்களுக்கு எது உதவியது?
இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு இவ்வாறு வாக்குறுதி அளித்திருந்தார்: “அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும் போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேச வேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.” (மத்தேயு 10:19, 20) பேதுருவும் மற்றவர்களும் தைரியமாகப் பேசுவதற்குத் தடையாக இருக்கும் எந்தவொரு பயத்தையும் வெட்கத்தையும் மேற்கொள்ள பரிசுத்த ஆவி உதவியது. வல்லமையுள்ள அந்த சக்தி இன்று நமக்கும் உதவும்.
சீஷராக்கும் பொறுப்பைத் தம்மை பின்பற்றியவர்களிடம் இயேசு ஒப்படைத்தார். அதற்கான உரிமை அவருக்கு இருந்தது. ஏனெனில், அவருக்கு ‘வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டிருந்தது.’ அதோடு, ‘அவர் அவர்களுடனேகூட இருந்தார்.’ (மத்தேயு 28:18-20) இயேசுவின் ஆதரவு தங்களுக்கு இருந்ததை அந்தச் சீஷர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள். தங்களுடைய பிரசங்க வேலையைத் தடை செய்வதில் தீவிரம் காட்டிய அதிகாரிகளைத் தைரியமாக சந்திக்க இது அவர்களுக்கு உதவியது. (அப்போஸ்தலர் 4:18-20; 5:28, 29) அதேபோல, நமக்கும் இயேசுவின் ஆதரவு இருப்பதை அறிந்திருக்கும்போது நம்மாலும் தைரியமாய் இருக்க முடியும்.
தயக்கமின்றி, தைரியமாகப் பேசுவதற்கு மற்றொரு காரணம், எதிர்காலத்தின் மீது நமக்கிருக்கும் நம்பிக்கையே. அதனால்தான் நம்பிக்கையை, ‘மிகுந்த தைரியத்துடன்’ பேசுவதோடு பவுல் சம்பந்தப்படுத்தினார். (2 கொரிந்தியர் 3:12; பிலிப்பியர் 1:20) அந்த நம்பிக்கையின் செய்தி அவ்வளவு அருமையாக இருப்பதால் கிறிஸ்தவர்களால் அதை மற்றவர்களுக்கு அறிவிக்காதிருக்க முடியாது. உண்மையில், நாம் தயக்கமின்றி, தைரியமாகப் பேசுவதற்கு இந்த நம்பிக்கையும் ஒரு முக்கிய காரணம்.—எபிரெயர் 3:6.
தைரியமாகப் பிரசங்கித்தல்
பயமுறுத்தும் சூழ்நிலைகளை எதிர்ப்படுகையிலும் நாம் எவ்வாறு தைரியமாகப் பிரசங்கிக்க முடியும்? அப்போஸ்தலன் பவுலின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவர் ரோமில் கைதியாக இருந்தார்; அப்போது தன் சக விசுவாசிகளிடம் இவ்வாறு கேட்டுக்கொண்டார்: ‘நான் பேசும்போது நற்செய்தியைத் துணிவுடன் தெரியப்படுத்துவதற்கான வார்த்தைகளைக் கடவுள் எனக்குத் தந்தருளுமாறு எனக்காகவும் மன்றாடுங்கள். நான் பேச வேண்டிய முறையில் அதைத் துணிவுடன் எடுத்துக் கூற எனக்காக மன்றாடுங்கள்.’ (எபேசியர் 6:19, 20, பொ.மொ.) இந்த ஜெபங்களுக்குப் பதில் கிடைத்ததா? நிச்சயமாக! கைதியாக இருந்தபோதுகூட பவுல், ‘மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து [தொடர்ந்து] பிரசங்கித்தார்.’—அப்போஸ்தலர் 28:30, 31.
வேலை செய்யுமிடத்திலோ, பள்ளியிலோ, பயணம் செய்கையிலோ பிரசங்கிப்பதற்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்கையில் நம்முடைய தைரியத்தை வெளிக்காட்டுகிறோம். பிறரை அணுகுவதற்கு கூச்சம், கேட்பவர் எப்படிப் பிரதிபலிப்பாரோ என்ற பயம், நமக்கே நம்மேல் இருக்கும் அவநம்பிக்கை ஆகியவை நம் வாய்க்குப் பூட்டு போட்டு விடலாம். இவ்விஷயத்திலும் அப்போஸ்தலன் பவுல் நமக்கு நல்ல முன்மாதிரி வைக்கிறார். “வெகு போராட்டத்தோடே தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங் கொண்டிருந்தோம்” என்று அவர் எழுதினார். (1 தெசலோனிக்கேயர் 2:2) அவர் தன் இயல்புக்கு மிஞ்சி செயல்பட்டார். யெகோவா மேல் சார்ந்திருந்ததுதான் அதற்குக் காரணம்.
ஷெர்ரி என்பவருடைய அனுபவத்தைக் கவனியுங்கள். சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் தைரியமாகப் பேச ஜெபம் தனக்கு உதவியதாகச் சொல்கிறார். ஒருநாள் அவர் தன் கணவருக்காக ஓரிடத்தில் காத்துக்கொண்டு இருந்தார். பக்கத்தில் மற்றொரு பெண் இருப்பதை கவனித்தார். அப்போது அவரால் சாட்சி கொடுக்க முடிந்ததா? நடந்ததை ஷெர்ரி இவ்வாறு விவரிக்கிறார்: “மனதெல்லாம் படபடவென அடிக்க ஆரம்பித்துவிட்டது. தைரியத்தைத் தரும்படி யெகோவாவிடம் ஜெபித்தேன்.” பிறகு, அந்தப் பெண்ணிடம் பேச சென்றபோது ஒரு மதபோதகர் அங்கே வந்தார். அவரைப் பார்த்தவுடன் ஷெர்ரிக்குப் பயம் அதிகமாகிவிட்டது. அப்போது மறுபடியும் ஜெபித்தார். பிறகு தைரியமாகச் சாட்சி கொடுத்தார். சில பிரசுரங்களை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு, மறுசந்திப்புக்கும் ஏற்பாடு செய்தார். யெகோவாமீது சார்ந்திருந்தால் நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தைரியமாகச் சாட்சி கொடுக்க முடியும். இது நிச்சயம்.
தைரியமாகப் போதித்தல்
போதிப்பதற்கும் தைரியமாகப் பேசுவதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சபையில் ‘உதவிக்காரருடைய ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்களைப்’ பற்றி பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “[அவர்கள்] தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள்.” (1 தீமோத்தேயு 3:13) இந்தத் தைரியத்தை அவர்கள் எப்படிப் பெறலாம்? மற்றவர்களுக்கு எதைப் போதிக்கிறார்களோ அதை தாங்களும் பின்பற்றுவதன் மூலம் பெறலாம். இப்படிச் செய்கையில் சபை பாதுகாக்கப்படுகிறது; பலப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு, நாம் கற்பிப்பதைக் கடைப்பிடிக்கையில் நம்மால் தைரியமாகப் பேச முடியும். அதோடு, நாம் கொடுக்கும் ஆலோசனை பயனுள்ளதாகவும் பின்பற்றுவதற்கு எளிதாகவும் இருக்கும். ஒருவேளை, நாம் சொல்வது ஒன்று செய்வது வேறு என்றால் மற்றவர்களுக்கு நம்முடைய ஆலோசனையை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கும். ஆனால், நாமே நல்ல முன்மாதிரி வைக்கும்போது, நாம் கொடுக்கும் அறிவுரையைப் பின்பற்றுவது அவர்களுக்கு எளிதாக இருக்கும். ஆன்மீக தகுதி பெற்றவர்கள் இப்படி நல்ல முன்மாதிரி வைக்கும்போது தங்கள் சகோதரரை ‘சீர்பொருந்தப்பண்ண முடியும்,’ அதுவும் பிரச்சினைகள் படுமோசமாவதற்கு முன்னரே. (கலாத்தியர் 6:1) நல்ல முன்மாதிரி வைக்காத ஒருவர் மற்றவர்களுக்கு அறிவுரை கொடுக்க தகுதியற்றவராக உணரலாம்; எனவே ஆலோசனை கொடுக்க தயங்கலாம். இப்படி ஆலோசனை கொடுப்பதில் ஏற்படும் தாமதத்தினால் பிரச்சினைகள் கைமீறிப் போய்விடலாம்.
தைரியமாகப் பேசுவதென்பது குறைகாண்பவராக இருப்பதையோ, பிடிவாதமாக இருப்பதையோ அர்த்தப்படுத்தாது. பிலேமோனிடம் பவுல், ‘அன்பினிமித்தம் மன்றாடினார்.’ (பிலேமோன் 8, 9) அவருடைய வார்த்தைக்கு நல்ல பலன் கிடைத்திருக்கும். ஆக, ஒரு மூப்பர் கொடுக்கும் அறிவுரைக்கு அன்பே உந்துவிக்கும் சக்தியாய் இருக்க வேண்டும்.
ஆலோசனை கொடுக்கும்போது நாம் தயக்கமின்றி, தைரியமாகப் பேச வேண்டியது ரொம்பவே முக்கியம். அதோடு, மற்ற சமயங்களிலும் இந்தத் திறன் நமக்கு தேவைப்படுகிறது. கொரிந்திய சபைக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “மிகுந்த தைரியத்தோடே உங்களுடன் பேசுகிறேன்; உங்களைக் குறித்து மிகவும் மேன்மைபாராட்டுகிறேன்.” (2 கொரிந்தியர் 7:4) தன்னுடைய சகோதர சகோதரிகளை பாராட்ட வேண்டிய சமயத்தில் பாராட்ட பவுல் துளிகூட தயங்கவில்லை. அவர்களிடம் குறைகள் இருந்ததை அவர் அறிந்திருந்தார். என்றாலும், அவர்களிடம் இருந்த நல்ல குணங்களைப் பார்க்க அன்பு அவரைத் தூண்டியது. இவ்வாறு, மூப்பர்கள் சக வணக்கத்தாரைத் தாராளமாகப் பாராட்டுகையில் கிறிஸ்தவ சபையில் உற்சாகம் பொங்கும்.
திறம்பட்ட விதத்தில் போதிப்பதற்குக் கிறிஸ்தவர்கள் எல்லாருக்குமே தைரியம் தேவை. முன்னர் குறிப்பிடப்பட்ட ஷெர்ரி தன்னுடைய பிள்ளைகளை ஸ்கூலில் சாட்சி கொடுப்பதற்கு உற்சாகப்படுத்த விரும்பினார். அவர் இவ்வாறு கூறினார்: “நான் சத்தியத்தில் வளர்க்கப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால் ஸ்கூலில் அவ்வளவாக யாரிடமும் சாட்சி கொடுத்ததில்லை. சந்தர்ப்ப சாட்சி கொடுத்ததும் அதே மாதிரிதான். அதனால், ‘இந்த விஷயத்தில் நான் என்னுடைய பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட முன்மாதிரியாக இருக்கிறேன்?’ என்று என்னையே கேட்டுக்கொண்டேன்.” இது, சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு இன்னுமதிக முயற்சி எடுக்க அவரைத் தூண்டியது.
ஆம், நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதை மற்றவர்கள் கவனிக்கிறார்கள். நாம் போதிப்பதை வாழ்க்கையில் கடைப்பிடிக்காவிட்டால் அதையும் அவர்கள் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆகவே, நாம் என்ன கற்பிக்கிறோமோ அதை கடைப்பிடிப்பதன் மூலம் பேசுவதற்கான தைரியத்தைப் பெறுவோமாக! அதற்காகக் கடினமாய் உழைப்போமாக!
ஜெபத்தில்
யெகோவாவிடம் ஜெபிக்கையில் நாம் தயக்கமின்றி பேசுவது ரொம்பவே முக்கியம். அவர் நம்முடைய ஜெபத்தைக் கேட்கிறார், அதற்குப் பதில் அளிப்பார் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும். தயக்கமே இல்லாமல் யெகோவாவிடம் நம் இருதயத்தில் உள்ளதை எல்லாம் கொட்டிவிட வேண்டும். இதன் மூலம் நம்முடைய பரலோக தகப்பனோடு கனிவான, நெருக்கமான பந்தத்தை நம்மால் ஏற்படுத்திக்கொள்ள முடியும். யெகோவாவை அணுகுவதற்கு நம்மை தகுதியற்றவர்களாக நினைத்துக்கொண்டு அவரிடம் ஜெபிக்க நாம் ஒருபோதும் தயங்கக் கூடாது. ஏதோவொரு பாவத்தின் காரணமாக நம்முடைய குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுத்துக் கொண்டிருக்கலாம். அந்தச் சமயத்தில் மனந்திறந்து ஜெபிக்க நமக்குத் தயக்கமாக இருந்தால் என்ன செய்வது? அப்போதும் சர்வலோக பேரரசரை நம்மால் எவ்வித தயக்கமும் இல்லாமல் அணுக முடியுமா?
இயேசு நம்முடைய பிரதான ஆசாரியராக இருக்கிறார். இது, ஜெபத்தில் நம்பிக்கையோடு யெகோவாவை அணுக நமக்குக் கூடுதலான காரணத்தை அளிக்கிறது. எபிரெயர் 4:15, 16 இவ்வாறு நம்பிக்கையூட்டுகிறது: “நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லா விதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.” இப்படியாக, இயேசுவின் மரணமும் பிரதான ஆசாரியராக அவர் வகிக்கும் பாகமும் நமக்கு அதிக மதிப்புமிக்கதாய் இருக்கிறது.
நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய ஊக்கமாய் முயன்றோமானால் அவர் நம் ஜெபத்திற்குச் செவிகொடுப்பார் என்பதில் தைரியமாக இருக்கலாம். அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து, அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.”—1 யோவான் 3:21, 22.
யெகோவாவிடம் தயக்கமின்றி ஜெபத்தில் அணுகுவது, அவரிடம் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதை அர்த்தப்படுத்துகிறது. நம்முடைய பயங்கள், கவலைகள், குழப்பங்கள் எல்லாவற்றையும் அவரிடம் சொல்லலாம். நம்முடைய உள்ளப்பூர்வமான ஜெபங்களை அவர் ஒருபோதும் ஒதுக்கித் தள்ள மாட்டார் என்ற நம்பிக்கையோடு அவரை அணுகலாம். நாம் படுமோசமான தவறை செய்திருந்தாலும்கூட, உண்மையான மனந்திரும்புதலைக் காட்டும்போது, குற்றவுணர்வு நம்முடைய ஜெபத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்காது.
தயக்கமின்றி, தைரியமாகப் பேசுவதற்கான சுதந்திரத்தைப் பெற நாம் தகுதியற்றவர்கள். இருந்தாலும் யெகோவா தேவன் அந்த மதிப்புமிக்க பரிசை நமக்கு அளித்திருக்கிறார். அதைக் கொண்டு நாம் பிரசங்கித்து, போதிக்கும் வேலையில் யெகோவாவை மகிமைப்படுத்தலாம். அவரிடம் ஜெபத்தில் நெருங்கியும் வரலாம். ‘ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான நம்முடைய தைரியத்தை விட்டுவிடாதிருப்போமாக.’—எபிரெயர் 10:35.
[பக்கம் 13-ன் படம்]
அப்போஸ்தலன் பவுல் தைரியத்தோடு பேசினார்
[பக்கம் 15-ன் படங்கள்]
திறம்பட போதிப்பதற்குத் தைரியம் தேவை
[பக்கம் 16-ன் படம்]
ஜெபிக்கையில் தயக்கமின்றி பேசுவது அவசியம்