உத்தமத்தில் நடப்பதால் வரும் சந்தோஷங்கள்
‘யெகோவாவின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.’—நீதிமொழிகள் 10:22.
1, 2. எதிர்காலத்தைப் பற்றியே சதா நினைத்துக் கொண்டிருப்பதை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?
“எதிர்காலத்தைப் பற்றியே சதா நினைத்துக் கொண்டிருப்பது . . . நிகழ்காலத்தை அனுபவிக்க முடியாமல் செய்துவிடுகிறது” என்று ஓர் அமெரிக்க தத்துவஞானி குறிப்பிட்டார். பிள்ளைகள் சிலருடைய விஷயத்தில்கூட இது உண்மையாக இருக்கிறது; வளர்ந்து ஆளாகும்போது என்னென்ன செய்ய வேண்டும் என்பதிலேயே அவர்கள் கவனமெல்லாம் இருப்பதால் பிள்ளைப் பருவத்தை அனுபவிக்காமல் போய்விடுகிறார்கள்.
2 யெகோவாவை வணங்குகிற நாமும்கூட சிலசமயம் அப்படி சிந்திக்க ஆரம்பித்துவிடுகிறோம். இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: பூமியை கடவுள் பூங்காவனமாக மாற்றப்போகும் காலத்திற்காக நாம் ஆவலோடு காத்திருக்கிறோம். வியாதியும், முதுமையும், வலியும், துன்பமும் இல்லாத வாழ்க்கைக்காக ஏங்குகிறோம். இதையெல்லாம் எதிர்பார்த்துக் காத்திருப்பது நல்லதுதான்; ஆனால் எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்களையே சதா நினைத்துக் கொண்டு, ஏற்கெனவே நமக்குக் கிடைத்திருக்கும் ஆன்மீக ஆசீர்வாதங்களை மறந்துவிட்டால்? அது எப்பேர்ப்பட்ட அவமானம்! நாம் எதிர்பார்த்ததைவிட ‘நெடுங்காலமாய் காத்திருக்கும்போது’ நம் ‘இருதயம் இளைத்துவிடும்,’ அதாவது எளிதில் சோர்ந்துவிடும். (நீதிமொழிகள் 13:12) பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் சந்திக்கும்போது நாம் விரக்தி அடையலாம் அல்லது நம்மீதே பரிதாபப்பட்டுக்கொண்டு நிலைகுலைந்து போகலாம். பிரச்சினைகளைச் சமாளிப்பதற்குப் பதிலாக புலம்ப ஆரம்பிக்கலாம். இதையெல்லாம் தவிர்ப்பதற்கான வழி, தற்போது அனுபவிக்கும் ஆசீர்வாதங்களை நன்றியோடு நினைத்துப் பார்ப்பதுதான்.
3. இந்தக் கட்டுரையில் எதைச் சிந்திப்போம்?
3 ‘யெகோவாவின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்’ என்று நீதிமொழிகள் 10:22 சொல்கிறது. இன்று யெகோவாவின் ஊழியர்கள் ஆன்மீக ரீதியில் செழித்தோங்குகிறார்கள் என்பது சந்தோஷப்பட வேண்டிய விஷயம், அல்லவா? இந்த ஆசீர்வாதத்தின் சில அம்சங்களை இப்போது சிந்திக்கலாம்; அவை தனிப்பட்ட விதமாக நமக்கு எதை அர்த்தப்படுத்துகின்றன என்றும் சிந்திக்கலாம். ‘உத்தமத்தில் நடக்கும் நீதிமான்மீது’ யெகோவா பொழிந்திருக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றி சிந்தித்துப் பார்க்க நாம் நேரம் ஒதுக்குகையில், நம் பரலோகத் தகப்பனை சந்தோஷமாகத் தொடர்ந்து சேவிக்க திடதீர்மானமாய் இருப்போம்.—நீதிமொழிகள் 20:7.
இன்று ‘ஐசுவரியத்தைத் தரும் ஆசீர்வாதங்கள்’
4, 5. எந்த பைபிள் போதனையை நீங்கள் பெரிதும் மதிக்கிறீர்கள், ஏன்?
4 பைபிள் போதனைகளைப் பற்றிய திருத்தமான அறிவு. கிறிஸ்தவமண்டல மதப்பிரிவுகள் பைபிளை நம்புவதாகச் சொல்லிக்கொள்கின்றன. இருந்தாலும் வெவ்வேறு விதமாக அதைப் போதிக்கின்றன. பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது என்பது சம்பந்தமாக, ஒரே மதப்பிரிவைச் சேர்ந்தவர்கள் மத்தியில்கூட கருத்துகள் வேறுபடுகின்றன. அவர்களுக்கும் யெகோவாவின் ஊழியர்களுக்கும் எப்பேர்ப்பட்ட வித்தியாசம்! தேசம், கலாச்சாரம், இனம் போன்ற பின்னணிகள் வெவ்வேறாக இருந்தாலும் நாம் அனைவரும் உண்மைக் கடவுளை வணங்குகிறோம். அவருடைய பெயரை அறிந்திருக்கிறோம். அவரை புரியாப் புதிரான திரித்துவக் கடவுளாகக் கருதுவதில்லை. (உபாகமம் 6:4; சங்கீதம் 83:17; மாற்கு 12:29) மேலும், கடவுளுடைய சர்வலோகப் பேரரசுரிமை சம்பந்தப்பட்ட முக்கிய விவாதம் சீக்கிரத்தில் தீர்க்கப்படப் போவதை அறிந்திருக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் அவருக்கு உத்தமமாக இருப்பதன் மூலம் இந்த விவாதத்தில் நமக்கும் பங்கிருப்பதைக்கூட தெரிந்து வைத்திருக்கிறோம். இறந்தவர்களின் உண்மையான நிலையை அறிந்திருக்கிறோம். ஆகவே மனிதர்களை கடவுள் எரிநரகத்தில் வாட்டிவதைப்பார் என்றோ உத்தரிக்கும் ஸ்தலத்திற்கு அனுப்புவார் என்றோ நினைத்துப் பயப்படுவதில்லை.—பிரசங்கி 9:5, 10.
5 நாம் தற்செயலாக பரிணமிக்கவில்லை என்பதை அறிவது எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை அளிக்கிறது! நாம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறோம், அதுவும் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம். (ஆதியாகமம் 1:26; மல்கியா 2:10) “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்” என தாவீது பாடினார்.—சங்கீதம் 139:14.
6, 7. நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் வாழ்க்கையில் செய்த மாற்றங்கள் எவ்வாறு நன்மை அளித்திருக்கின்றன?
6 கெட்ட பழக்கவழக்கங்களிலிருந்து விடுதலை. புகைபிடிப்பது, அளவுக்கதிகமாகக் குடிப்பது, ஒழுக்கக்கேடாக நடந்துகொள்வது ஆகியவையெல்லாம் எவ்வளவு ஆபத்தானதென மீடியா எச்சரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த எச்சரிக்கைகளை யாரும் காதில் போட்டுக்கொள்வதாகத் தெரியவில்லை. இருந்தாலும், உண்மைக் கடவுள் அப்படிப்பட்ட பழக்கங்களை வெறுக்கிறார் என்றும் அவற்றில் ஈடுபடுகிறவர்களைப் பார்த்து மனம் வருந்துகிறார் என்றும் நல்மனமுள்ளவர்கள் தெரிந்துகொள்கையில் என்ன செய்கிறார்கள்? அப்பழக்கங்களை விட்டொழித்து விடுகிறார்கள்! (ஏசாயா 63:10; 1 கொரிந்தியர் 6:9, 10; 2 கொரிந்தியர் 7:1; எபேசியர் 4:30) யெகோவா தேவனைப் பிரியப்படுத்துவதற்காகவே முக்கியமாக அவற்றை விட்டுவிடுகிறார்கள் என்றாலும், அதனால் அவர்களுக்கு மற்ற நன்மைகளும் கிடைக்கின்றன; ஆம், உடல் ஆரோக்கியமும் மன சமாதானமும் கிடைக்கின்றன.
7 கெட்ட பழக்கங்களை விட்டொழிப்பது அநேகருக்கு மிகக் கஷ்டம். ஆனாலும் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானோர் அதைத்தான் செய்து வருகிறார்கள். யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறுகிறார்கள். இவ்வாறு, அவருக்குப் பிடிக்காத பழக்கவழக்கங்களை விட்டுவிட்டதைப் பகிரங்கமாகத் தெரிவிக்கிறார்கள். இது நம் எல்லாருக்கும் எப்பேர்ப்பட்ட உற்சாகத்தை அளிக்கிறது! பாவமுள்ள, தீங்கான நடத்தையை அறவே வெறுத்து ஒதுக்க வேண்டுமென்ற நம் திடதீர்மானத்தை எவ்வளவாய் பலப்படுத்துகிறது!
8. பைபிள் தரும் என்ன ஆலோசனை மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு வழிசெய்கிறது?
8 மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை. அநேக நாடுகளில் குடும்ப வாழ்க்கை சீர்குலைந்து வருகிறது. மணமான அநேகர் விவாகரத்து செய்துகொள்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகள் உணர்ச்சிப்பூர்வமாக பாதிக்கப்படுகிறார்கள். ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் 20 சதவீத குடும்பங்கள் ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களே. இவ்விஷயத்தில், உத்தமத்தில் நடக்க யெகோவா நமக்கு எவ்வாறு உதவியிருக்கிறார்? தயவுசெய்து எபேசியர் 5:22-6:4 வசனங்களைப் படியுங்கள். கணவன்மாருக்கும் மனைவிமாருக்கும் பிள்ளைகளுக்கும் கடவுள் தந்துள்ள நல்ல அறிவுரைகளைக் கவனியுங்கள். இந்த வசனங்களிலும் மற்ற வசனங்களிலும் காணப்படும் ஆலோசனைப்படி நடந்தால் நிச்சயம் திருமண பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்ளலாம், பிள்ளைகளைச் சரியாக வளர்க்கலாம்; ஆம், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையின் ஆசீர்வாதத்தை அனுபவிக்கலாம். இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம், அல்லவா?
9, 10. எதிர்காலத்தைப் பற்றிய நம் கண்ணோட்டம் எவ்வாறு உலகத்தாரிலிருந்து வித்தியாசப்படுகிறது?
9 உலகப் பிரச்சினைகள் சீக்கிரத்தில் முடிவுக்கு வரும் என்ற உறுதி. உண்மைதான், அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் அநேக முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன; அரசியல் தலைவர்கள் சிலரும் அரும்பாடு பட்டிருக்கின்றனர்; ஆனால்கூட இன்றைய சிக்கலான பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை. உலகப் பொருளாதார அமைப்பின் ஸ்தாபகரான க்ளாஸ் ஷ்வாப் சமீபத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்: “உலக மக்கள் எதிர்ப்படும் பிரச்சினைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது, ஆனால் அந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நேரம் குறுகிக்கொண்டே போகிறது.” மேலும், “பயங்கரவாதம், சுற்றுச்சூழல் தூய்மைக்கேடு, ஆட்டம்காணும் பொருளாதாரம் போன்ற ஆபத்தான பிரச்சினைகள் எல்லா நாடுகளையுமே அச்சுறுத்துகின்றன” என்றும் குறிப்பிட்டார். இறுதியாக, “பிரச்சினைகளைத் தீர்க்க உலக மக்கள் உடனடியாக ஒன்றுபட்டு, திட்டவட்டமான முடிவுகளை எடுக்க வேண்டும்” என்றார். ஆக, 21-ஆம் நூற்றாண்டு அடிமேல் அடியெடுத்து வைக்கையில், மனிதகுலத்தின் எதிர்காலம் இருண்டுகொண்டே போவதாகத் தெரிகிறது.
10 இந்நிலையில், மனிதகுலத்தின் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு மெய் கடவுளாகிய யெகோவா ஓர் ஏற்பாட்டை செய்திருக்கிறார் என்பதை அறிவது எத்தனை இன்பம் அளிக்கிறது! அந்த ஏற்பாடு அவருடைய மேசியானிய ராஜ்யமே. அதன் மூலம் அவர் ‘யுத்தங்களை ஓயப்பண்ணி,’ ‘மிகுந்த சமாதானத்தை’ அருளுவார். (சங்கீதம் 46:9; 72:7) அபிஷேகம் செய்யப்பட்ட ராஜாவான கிறிஸ்து இயேசு, ‘எளியவனையும், சிறுமையானவனையும், பலவீனனையும் வஞ்சகத்திலிருந்தும் கொடுமையிலிருந்தும் விடுவிப்பார்.’ (சங்கீதம் 72:12-14) அவரது ஆட்சியில் உணவுப் பஞ்சமே இருக்காது. (சங்கீதம் 72:16) யெகோவா நம் ‘கண்ணீர் யாவையும் துடைப்பார்; இனி மரணமும், துக்கமும், அலறுதலும், வருத்தமும் இருக்காது; முந்தினவைகள் ஒழிந்துபோகும்.’ (வெளிப்படுத்துதல் 21:4) அந்த ராஜ்யம் ஏற்கெனவே பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது; சீக்கிரத்தில் அது பூமியில் உள்ள எல்லாப் பிரச்சினைகளுக்கும் முடிவுகட்டப்போகிறது.—தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 11:15.
11, 12. (அ) இன்ப நாட்டங்கள் நிரந்தர சந்தோஷத்தைத் தருமா? விளக்குங்கள். (ஆ) எது உண்மையான சந்தோஷத்தைத் தரும்?
11 உண்மையான சந்தோஷத்தின் ரகசியத்தை அறிந்திருப்பது. எது உண்மையான சந்தோஷத்தைத் தரும்? மூன்று விஷயங்கள் சந்தோஷத்தைத் தருமென ஒரு மனோதத்துவ நிபுணர் சொன்னார்: இன்ப நாட்டங்கள், ஈடுபாடு (உத்தியோகம், குடும்பம் சம்பந்தப்பட்ட வேலைகளில் ஈடுபாடு காட்டுதல்), குறிக்கோள் (மற்றவர்களுக்காக உழைக்கும் உயரிய குறிக்கோள்). இந்த மூன்றில் முக்கியத்துவம் குறைந்தது இன்ப நாட்டங்கள் என்று அவர் சொன்னார்; மேலும், “இதை முக்கிய செய்தியாக வெளியிடலாம்; ஏனென்றால் அநேக மக்கள் இன்ப நாட்டங்களுக்குத்தான் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்” என்றும் குறிப்பிட்டார். இவ்விஷயத்தில் பைபிளின் கருத்து என்ன?
12 பூர்வ இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோனின் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “நான் என் உள்ளத்திலே சொல்லிக் கொண்டது என்னவென்றால்: வா, இப்பொழுது உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப் பார்ப்பேன், இன்பத்தை அநுபவி என்றேன்; இதோ, இதுவும் மாயையாயிருந்தது. நகைப்பைக் குறித்து, அது பைத்தியம் என்றும், சந்தோஷத்தைக் குறித்து, அது என்ன செய்யும்? என்றும் சொன்னேன்.” (பிரசங்கி 2:1, 2) ஆக, பைபிளின்படி, இன்ப நாட்டங்கள் என்னதான் சந்தோஷத்தைக் கொடுத்தாலும் அவை தற்காலிகமானவையே. வேலையில் ஈடுபாடு காட்டுவதைப் பற்றி என்ன சொல்லலாம்? ஈடுபாடு காட்டுவதற்குரிய முக்கியமான வேலை நமக்கு இருக்கிறது; அது, ராஜ்யத்தைப் பிரசங்கித்து சீஷர்களை உண்டாக்கும் குறிக்கோளுள்ள வேலையாகும். (மத்தேயு 24:14; 28:19, 20) பைபிளில் விளக்கப்பட்டிருக்கும் இரட்சிப்பின் செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கையில், நம்மையும் நாம் சொல்வதைக் கேட்பவர்களையும் இரட்சிப்புக்கு வழிநடத்தும் வேலையில் ஈடுபடுகிறோம். (1 தீமோத்தேயு 4:16) ‘தேவனுடைய உடன் வேலையாட்களாக,’ “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்,” அதாவது சந்தோஷம் என்பதை அனுபவத்தில் காண்கிறோம். (1 கொரிந்தியர் 3:9; அப்போஸ்தலர் 20:35) இவ்வேலை நம் வாழ்க்கைக்கு ஒரு குறிக்கோளைத் தருகிறது; மேலும், பிசாசாகிய சாத்தானின் நிந்தனைக்கு கடவுள் பதில் அளிக்க வாய்ப்பைத் தருகிறது. (நீதிமொழிகள் 27:11) தேவபக்தியே உண்மையான, நிரந்தர சந்தோஷத்தை அளிக்கும் என்பதை யெகோவா நமக்குக் காண்பித்திருக்கிறார்.—1 தீமோத்தேயு 4:8.
13. (அ) தேவராஜ்ய ஊழியப் பள்ளி, நமக்கு சந்தோஷம் அளிக்கும் ஓர் ஆசீர்வாதம் என்று ஏன் சொல்லலாம்? (ஆ) நீங்கள் எவ்வாறு தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து நன்மை அடைந்திருக்கிறீர்கள்?
13 சிறந்த பயிற்சி. யெகோவாவின் சாட்சிகளுடைய சபை ஒன்றில் மூப்பராக சேவை செய்கிறார் சகோதரர் கேர்ஹார்ட். தன் இளமை பருவத்தைப் பற்றி அவர் இவ்வாறு சொல்கிறார்: “இளைஞனாக இருந்தபோது பேசுவதற்கே தடுமாறுவேன். பயம் வந்துவிட்டால் வாயிலிருந்து வார்த்தைகளே வராது, திக்கித் திக்கித்தான் பேசுவேன். இதனால் எனக்குத் தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டது. சரளமாகப் பேசிப் பழகுவதற்காக என் பெற்றோர் என்னை ஒரு பயிற்சி வகுப்புக்கு அனுப்பினார்கள், ஆனால் அவர்கள் எவ்வளவு முயற்சி எடுத்தும் பிரயோஜனமே இல்லை. ஏனென்றால் பிரச்சினை என் மனதில்தான் இருந்தது. என்றாலும் எனக்கு ஓர் உதவி கிடைத்தது. அதுதான், யெகோவாவின் அருமையான ஏற்பாடாகிய தேவராஜ்ய ஊழியப் பள்ளி. இந்தப் பள்ளியில் சேர்ந்ததால் தைரியம் பெற்றேன். கற்றுக்கொண்ட விஷயங்களைக் கடைப்பிடிக்க முடிந்தளவு முயற்சி செய்தேன். கைமேல் பலன் கிடைத்தது! சரளமாகப் பேச ஆரம்பித்தேன், அதிக தைரியத்தோடு ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். தாழ்வு மனப்பான்மை இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோனது. இப்போது பொதுப் பேச்சுகள்கூட கொடுக்கிறேன். இந்தப் பள்ளியின் மூலம் யெகோவா எனக்குப் புது வாழ்வை அளித்திருக்கிறார்; இதற்காக அவருக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.” ஊழியம் செய்ய யெகோவா நம்மை இவ்விதத்தில் பயிற்றுவிப்பது சந்தோஷத்திற்குரிய விஷயம், அல்லவா?
14, 15. வேதனை தரும் சந்தர்ப்பங்களில் என்ன உதவி உடனடியாகக் கிடைக்கிறது? உதாரணம் கொடுங்கள்.
14 யெகோவாவுடன் நெருங்கிய உறவு, உலகெங்கும் ஒன்றுபட்டிருக்கும் சகோதரர்களின் ஆதரவு. தென் கிழக்கு ஆசியாவை மிகப் பெரிய பூமியதிர்ச்சி உலுக்கி, அதன் விளைவால் சுனாமியும் ஏற்பட்டபோது ஜெர்மனியில் வசித்துவந்த காட்ரின் என்ற சகோதரி கதிகலங்கிப் போனார். ஏனென்றால் அச்சமயத்தில் அவருடைய மகள் தாய்லாந்துக்குச் சென்றிருந்தாள். அவள் உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்று தெரியாமல் 32 மணிநேரம் காட்ரின் தவியாய் தவித்துவிட்டார். அப்போது, இறந்தவர்களின் எண்ணிக்கை வேறு கிடுகிடுவென உயர்ந்துகொண்டிருந்தது. மகள் பத்திரமாக இருக்கிறாள் என்ற செய்தி கிடைத்தபோதுதான் காட்ரின் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்!
15 அந்த சில மணிநேர மனத் தவிப்பை காட்ரின் எவ்வாறு சமாளித்தார்? அவர் இவ்வாறு எழுதுகிறார்: “யெகோவாவிடம் ஓயாமல் ஜெபம் செய்துகொண்டு இருந்தேன். இதனால் மிகுந்த பலமும் மன சமாதானமும் கிடைத்தது. அதுமட்டுமல்ல, அன்பான கிறிஸ்தவ சகோதரர்கள் என்னை வந்து பார்த்து, தைரியப்படுத்தினார்கள்.” (பிலிப்பியர் 4:6, 7) ஜெபத்தில் யெகோவாவை அணுகுவதற்கான ஏற்பாடும் அன்பான சகோதரர்களின் ஆறுதலும் இல்லாமல் போயிருந்தால் அவர் இன்னும் எந்தளவுக்கு இடிந்துபோயிருப்பார்! யெகோவாவுடனும் அவருடைய குமாரனுடனும் கிறிஸ்தவ சகோதரர்களுடனும் நெருங்கிய உறவு வைத்திருப்பது, தனிச்சிறப்பு வாய்ந்த ஆசீர்வாதமாகும்; பொன் போன்ற இந்த ஆசீர்வாதத்தை ஒருபோதும் அசட்டை செய்யாதிருப்போமாக!
16. உயிர்த்தெழுதல் நம்பிக்கையின் மதிப்பைக் காட்ட ஓர் உதாரணத்தைக் கொடுங்கள்.
16 இறந்தவர்களை மறுபடியும் பார்க்கும் நம்பிக்கை. (யோவான் 5:28, 29) மாட்டியாஸ் என்ற இளம் நபர் சத்தியத்தில் வளர்க்கப்பட்டார். இருந்தாலும் தனக்குக் கிடைத்த ஆசீர்வாதங்களின் அருமையை உணராமல், டீனேஜராக இருக்கையில் கிறிஸ்தவ சபையிலிருந்து வழிவிலகிப் போனார். இப்போது இவ்வாறு சொல்கிறார்: “முக்கியமான விஷயங்களை என் அப்பாவோடு கலந்து பேசியதே இல்லை. ஆனால் அவரோடு அடிக்கடி சண்டை போட்டிருக்கிறேன். அப்படியிருந்தும், எனக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதான் அப்பா எப்போதும் ஆசைப்பட்டார். என்மேல் உயிரையே வைத்திருந்தார், ஆனால் அந்தச் சமயத்தில் அது எனக்குப் புரியவில்லை. 1996-ல், அவரது படுக்கைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து அவரது கையைப் பிடித்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதேன்; நான் செய்த எல்லா தப்புக்கும் மன்னிப்பு கேட்டேன், அவரை மிகவும் நேசிப்பதாக சொன்னேன். ஆனால் நான் சொன்ன எதுவுமே அவர் காதில் விழவில்லை. காரணம், அப்போது அவர் உயிரோடு இல்லை. கொஞ்ச காலம் உடல் சுகமில்லாமல் இருந்திருந்தார். அப்பா உயிர்த்தெழுதலில் வரும்போது நான் இருந்தால், எல்லாவற்றிற்கும் சேர்த்து ஈடுகட்டிவிடுவேன். நான் இப்போது மூப்பராக சேவை செய்வதையும் என் மனைவியுடன் சேர்ந்து பயனியர் ஊழியம் செய்வதையும் அறிந்தால் அவர் பூரித்துப்போவார்.” ஆம், உயிர்த்தெழுதல் நம்பிக்கை நமக்கு எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்!
“அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்”
17. யெகோவாவின் ஆசீர்வாதங்களைக் குறித்து தியானிப்பது நமக்கு எவ்வாறு உதவும்?
17 இயேசு கிறிஸ்து தமது பரலோகத் தகப்பனைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.” (மத்தேயு 5:45) யெகோவா தேவன் தீயோருக்கும் அநீதியுள்ளவர்களுக்குமே நன்மை செய்கிறார் என்றால், உத்தமத்தில் நடக்கிறவர்களை எவ்வளவாய் ஆசீர்வதிப்பார்! யெகோவா “உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்” என்று சங்கீதம் 84:11 குறிப்பிடுகிறது. அவர், தம்மை நேசிப்போரை மிகுந்த அக்கறையோடு கவனித்துக்கொள்ளும் விதத்தைக் குறித்து தியானிக்கையில், நம் இருதயம் நன்றியுணர்வாலும் மகிழ்ச்சியாலும் நிரம்பி வழியவில்லையா?
18. (அ) யெகோவா ஆசீர்வாதங்களோடு வேதனையைக் கூட்ட மாட்டார் என எப்படிச் சொல்லலாம்? (ஆ) கடவுளுக்கு உத்தமமாக இருப்பவர்களில் அநேகர் ஏன் துன்பப்படுகிறார்கள்?
18 ‘யெகோவாவின் ஆசீர்வாதம்’—இதுதான் அவரது மக்களை ஆன்மீக ரீதியில் செழித்தோங்கச் செய்திருக்கிறது. “அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்” என்ற உறுதியும் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. (நீதிமொழிகள் 10:22) அப்படியென்றால், கடவுளுக்கு உத்தமமாக இருப்பவர்களில் அநேகருக்கு வேதனையைத் தரும் சோதனைகளும் கஷ்டங்களும் ஏன் வருகின்றன? வலியும் வேதனையும் முக்கியமான மூன்று காரணங்களால் வருகின்றன: (1) நம்முடைய பாவமுள்ள மனச்சாய்வு (ஆதியாகமம் 6:5; 8:21; யாக்கோபு 1:14, 15), (2) சாத்தான் மற்றும் அவனுடைய பேய்கள் (எபேசியர் 6:11, 12), (3) பொல்லாத உலகம் (யோவான் 15:19). யெகோவா துன்பத்தை அனுமதிக்கிறார், ஆனால் அவர் எவ்விதத்திலும் துன்பத்திற்குக் காரணர் அல்ல. சொல்லப்போனால், “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது.” (யாக்கோபு 1:17) யெகோவாவின் ஆசீர்வாதங்கள் வேதனையைத் தருவதே இல்லை.
19. உத்தமத்தில் தொடர்ந்து நடப்போருக்கு என்ன காத்திருக்கிறது?
19 ஆன்மீக ரீதியில் செழித்தோங்க, எப்போதும் கடவுளிடம் நெருங்கிச் செல்ல வேண்டும். அவருடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொள்கையில், ‘நாம் நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காக நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கிறோம்.’ (1 தீமோத்தேயு 6:12, 17-19) கடவுள் கொண்டுவரப்போகும் புதிய உலகில், ஆன்மீக ஆசீர்வாதங்களோடுகூட மற்ற ஆசீர்வாதங்களும் கிடைக்கும். ‘யெகோவாவின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்’ எல்லாரும் இப்படிப்பட்ட அபரிமிதமான ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள். (உபாகமம் 28:2) ஆகவே, எப்போதையும்விட இப்போது, சந்தோஷத்துடன் தொடர்ந்து உத்தமத்திலே நடக்க திடதீர்மானமாய் இருப்போமாக.
நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• எதிர்காலத்தைப் பற்றியே சதா யோசித்துக் கொண்டிருப்பது ஏன் ஞானமானது அல்ல?
• இப்போது என்னென்ன ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறோம்?
• கடவுளுக்கு உத்தமமாய் இருப்பவர்கள் ஏன் துன்பப்படுகிறார்கள்?