அகந்தையும் மனத்தாழ்மையும்—ஒரு பாடம்
தாவீது ராஜாவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் உண்மையான மனத்தாழ்மைக்கும் அகந்தைக்கும் உள்ள வேறுபாட்டை படம்பிடித்துக் காட்டுகிறது. தாவீது எருசலேமைக் கைப்பற்றி அதைத் தலைநகராக்கிய பிறகு அச்சம்பவம் நடந்தது. தாவீதைப் பொறுத்தவரை யெகோவாவே இஸ்ரவேலின் உண்மையான ராஜா, அதனால்தான் யெகோவாவின் பிரசன்னத்தை அடையாளப்படுத்தும் உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்தார். இச்சம்பவம் தாவீதுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததால், தன் மகிழ்ச்சியை வெளிப்படையாகக் காட்டினார். ஆசாரியர்கள் பெட்டியை சுமந்துவர, அவர்களுக்குப் பின்னால் “ஆடிப்பாடி” “தன் முழு பலத்தோடு . . நடனம் பண்ணினார்”; இதை எருசலேமின் மக்கள் அனைவரும் கண்டார்கள்.—1 நாளாகமம் 15:15, 16, 29; 2 சாமுவேல் 6:11-16.
என்றாலும், தாவீதின் மனைவியான மீகாள் இந்தச் சந்தோஷப் பேரணியில் கலந்துகொள்ளவில்லை. அவள் ஜன்னல் வழியாய் பார்த்துக்கொண்டிருந்தாள்; தாவீது யெகோவாவை துதித்த முறையைப் போற்றுவதற்குப் பதிலாக “தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்.” (2 சாமுவேல் 6:16) மீகாள் ஏன் இவ்வாறு உணர்ந்தாள்? அவள் இஸ்ரவேலின் முதல் ராஜாவான சவுலின் மகள், இப்பொழுதோ இரண்டாவது ராஜாவான தாவீதின் மனைவி. இதனால், தன்னுடைய அந்தஸ்துக்கு அவள் அளவுக்கதிகமான முக்கியத்துவம் கொடுத்தாள். ராஜாவாக இருக்கும் தனது கணவன், ‘தன் அந்தஸ்தை விட்டு சாதாரண குடிமக்களின் நிலைக்குத் தாழ்ந்து, அவர்களோடு சேர்ந்து கொண்டாடியிருக்கக் கூடாது என்று ஒருவேளை அவள் நினைத்திருக்கலாம். இந்த மேட்டிமையான நினைப்பு, வீடு திரும்பிய தாவீதை அவள் வரவேற்ற விதத்தில் தெரிந்தது. அவள் நக்கலாக, “அற்ப மனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்துபோட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார்”! என்று சொன்னாள்.—2 சாமுவேல் 6:20.
இந்தக் கேலிப்பேச்சை கேட்ட தாவீது என்ன செய்தார்? அவள் தகப்பனாகிய சவுலை யெகோவா ஒதுக்கித் தள்ளிவிட்டு தனக்கு துணை நிற்கிறார் என்று சொல்லி அவளைக் கண்டித்தார். மேலும், “இதைப்பார்க்கிலும் இன்னும் நான் நீசனும் என் பார்வைக்கு அற்பனுமாவேன்; அப்படியே நீ சொன்ன பெண்களுக்குங்கூட மகிமையாய் விளங்குவேன்” என்றும் சொன்னார்.—2 சாமுவேல் 6:21, 22.
ஆம், தாவீது மனத்தாழ்மையோடு தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்ய தீர்மானித்திருந்தார். இந்தக் குணத்தினால்தான் தாவீதை ‘என் இருதயத்துக்கு ஏற்றவன்’ என்று யெகோவா அழைத்தார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. (அப்போஸ்தலர் 13:22; 1 சாமுவேல் 13:14) உண்மையில், மனத்தாழ்மைக்கு மிகச் சிறந்த முன்மாதிரியான யெகோவாவை தாவீது பின்பற்றினார். “அற்பனுமாவேன்” என்று மீகாளிடம் தாவீது சொன்னதில் ஆர்வத்துக்குரிய விஷயம் இருக்கிறது; இதற்குரிய எபிரெய வினைச்சொல், மனிதகுலத்தைப் பற்றிய கடவுளின் நோக்குநிலையை விவரிக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சர்வலோகத்திலும் யெகோவாவே மிக உயர்ந்தவராக இருக்கிறபோதிலும் சங்கீதம் 113:6, 7 அவரைப் பற்றி இவ்வாறு சொல்கிறது: “அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார் [தன்னைவிட தாழ்ந்த நிலையிலுள்ள ஒருவரோடு பழகும்போது ஒரு பதவியிலிருந்தோ உயர்ந்த நிலையிலிருந்தோ கீழே இறங்கி வருவதை இது குறிக்கிறது]. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.”
யெகோவா மனத்தாழ்மையாக இருப்பதால், கர்வம் பிடித்தவர்களின் ‘மேட்டிமையான கண்களை’ அவர் வெறுப்பது ஆச்சரியமல்லவே. (நீதிமொழிகள் 6:16, 17) மீகாள் இந்தப் பொல்லாத குணத்தைக் காட்டியதாலும், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவை அவமதித்ததாலும் தாவீதுக்கு ஒரு மகனைப் பெற்றுத் தரும் வாய்ப்பை இழந்தாள். அவள் குழந்தையில்லாமலேயே செத்தாள். எப்பேர்ப்பட்ட முக்கியமான பாடத்தை இதிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம்! கடவுளுடைய ஆதரவைப்பெற விரும்பும் நாம் அனைவரும் இந்த வார்த்தைகளைப் பின்பற்றுவது அவசியம்: “ஒருவருக்கொருவர் . . . மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.”—1 பேதுரு 5:5.