அறிவொளியைத் தேடி . . .
“அறிவைக் காட்டிலும் அறியாமை எவ்விதத்திலும் சிறந்தது அல்ல” என்று லாரா ஃபெர்மி கூறினார்; இவர், புகழ்பெற்ற இயற்பியலாளர் என்ரிகோ ஃபெர்மியின் மனைவி. இவருடைய கருத்தைச் சிலர் மறுக்கலாம். நமக்குத் தெரியாத விஷயங்கள் நம்மை எவ்விதத்திலும் பாதிக்காது என்று அதற்குக் காரணமும் கூறலாம். ஆனால், அநேகர் இதை ஒத்துக்கொள்கிறார்கள். அவருடைய கருத்து விஞ்ஞான ஆராய்ச்சி துறையில் மட்டுமல்ல, தங்கள் வாழ்க்கையின் மற்ற அம்சங்களிலும் உண்மையாயிருப்பதை அவர்கள் கண்டிருக்கிறார்கள். அறியாமை, அதாவது, உண்மைகளை அறியாமல் இருப்பது அநேகரை நூற்றாண்டுகளாக அறிவுசார்ந்த விஷயங்களிலும் ஒழுக்க மற்றும் ஆன்மீக விஷயங்களிலும் இருளுக்குள் தள்ளியிருக்கிறது.—எபேசியர் 4:18.
அதனால்தான் சிந்திக்கும் மக்கள் அறிவொளியைத் தேடுகிறார்கள். நாம் ஏன் இங்கே இருக்கிறோம், எதிர்காலத்தில் நமக்கு என்ன நடக்கப்போகிறது என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். பதில்களைத் தேடிக்கொண்டு வித்தியாசமான பாதைகளில் நடக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தப் பாதைகளில் சிலவற்றை இப்போது சுருக்கமாக ஆராயலாம்.
ஆன்மீக பாதை அறிவொளியூட்டுமா?
புத்த மதத்தைத் தோற்றுவித்தவரான சித்தார்த்த கௌதமர் மனித துன்பத்தையும், மரணத்தையும் கண்டு மனம் வெதும்பியதாக புத்த பாரம்பரியம் கூறுகிறது. “சத்திய பாதையை” கண்டுபிடிக்க தனக்கு உதவும்படி இந்து மத ஆசான்களிடம் அவர் கேட்டார். அவர்களில் சிலர் யோகாசனத்தையும், கடும் சன்னியாசத்தையும் சிபாரிசு செய்தார்கள். கடைசியில், மெய்யான அறிவொளி பெறுவதற்கு கௌதமர் தீவிர தியானத்தில் இறங்கினார்.
அறிவொளி பெறுவதற்காக அநேகர் மனதை மயக்கும் போதை மருந்துகளைப் பயன்படுத்தியுள்ளார்கள். உதாரணமாக, போதையூட்டும் பொருளைக் கொண்ட பெயோட்டீ எனும் கள்ளிச்செடி “மறைந்திருக்கும் அறிவை வெளிப்படுத்துமென” அமெரிக்க இந்திய சர்ச் அங்கத்தினர்கள் கூறுகிறார்கள்.
கடவுளிடம் உள்ளப்பூர்வமாக வேண்டிக்கொள்ளும் எவரும் அவரிடமிருந்து ஆன்மீக வெளிப்படுத்தலைப் பெற முடியுமென பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு தத்துவஞானி ஷான் ஷாக் ருசோ நம்பினார். இது எப்படி கிடைக்குமாம்? “மனதிற்குள் கடவுள் என்ன சொல்கிறார்” என்பதை கவனித்துக் கேட்பதன் மூலமாக கிடைக்கும் என்கிறார் ருசோ. சில விஷயங்களைக் குறித்து நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள், அதாவது உங்கள் உணர்ச்சிகளும், மனசாட்சியும் உங்களுக்கு என்ன சொல்கின்றன என்பதைக் கவனியுங்கள். “ஏகப்பட்ட மனித கருத்துகள் மத்தியில் [இவை] நமக்கு நம்பகமான வழிகாட்டியாக” அமையும் என்று ருசோ கூறுகிறார்.—மேற்கத்திய தத்துவத்தின் வரலாறு என்ற ஆங்கில புத்தகத்திலிருந்து.
பகுத்தறிவு அறிவொளியூட்டுமா?
ருசோவின் ஆன்மீக வழியை அவர் காலத்தில் வாழ்ந்த அநேகர் கடுமையாக ஆட்சேபித்தார்கள். உதாரணமாக, மற்றொரு பிரெஞ்சுக்காரரான வோல்டையர் என்பவர் மதம், மனிதர்களுக்கு அறிவொளியூட்டவில்லை என்று கூறினார். மாறாக, அது ஐரோப்பாவை பல நூற்றாண்டுகளாக அறியாமை, மூடநம்பிக்கை, சகிப்பின்மை எனும் இருளுக்குள் தள்ளிவிட்டிருக்கிறது என்று சொன்னார். அந்தக் காலகட்டத்தை சரித்திராசிரியர்கள் சிலர் இருண்ட சகாப்தம் என்று அழைக்கிறார்கள்.
அறிவொளி என்றழைக்கப்பட்ட ஐரோப்பிய பகுத்தறிவு இயக்கத்தில் வோல்டையர் அங்கத்தினரானார். பகுத்தறிவும், விஞ்ஞான ஆராய்ச்சியும்தான் உண்மையான அறிவொளியைப் பெற்றுத்தரும் என்று பூர்வ கிரேக்கர்கள் நம்பியதையே இந்த இயக்கத்தினரும் நம்பினார்கள். பகுத்தறியும் திறன் மனிதகுலத்தை “அறிவொளிமிக்க ஒரு நூற்றாண்டிற்குள் அழைத்துச்செல்லும், தினந்தினம் அதிகரிக்கும் அந்த ஒளியைப் பார்க்கும்போது முந்தைய நூற்றாண்டுகள் எல்லாம் இருளில் தத்தளித்ததைப் போல தோன்றும்” என்று இந்த இயக்கத்தின் மற்றொரு உறுப்பினரான பெர்னார் ட ஃபோன்ட்னெல் நினைத்தார்.—என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா.
அறிவொளியைப் பெறுவது சம்பந்தமாக நிலவும் வேறுபட்ட கருத்துகளில் இவையெல்லாம் வெகு சில மட்டுமே. உண்மைகளைத் தேடுவோருக்கு ஏதேனும் “நம்பகமான வழிகாட்டி” இருக்கிறதா? ஆம், அந்த நம்பகமான வழிகாட்டியைப் பற்றி பின்வரும் கட்டுரை என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள்.
[பக்கம் 3-ன் படங்கள்]
கௌதமர் (புத்தர்), ருசோ, வோல்டையர் ஆகியோர் அறிவொளியைத் தேடி வெவ்வேறு பாதைகளில் சென்றனர்