உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w06 7/1 பக். 4-7
  • மெய்யான அறிவொளியைக் கண்டடைதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மெய்யான அறிவொளியைக் கண்டடைதல்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ‘மீட்புக்கு வழிநடத்தும் பரிசுத்த வேத எழுத்துக்கள்’
  • அடிப்படை உண்மைகள்
  • தினந்தோறும் வேதவாக்கியங்களை கவனமாக ஆராயுங்கள்
  • “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”
    “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”
  • பூமி பரதீஸாக மாறுமென நம்பலாம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • ஏன் சிலர் மறுபடியும் பிறக்கின்றனர்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • யெகோவா நோக்கமுள்ள கடவுள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
w06 7/1 பக். 4-7

மெய்யான அறிவொளியைக் கண்டடைதல்

அது டிசம்பர் 18, 1810-⁠ம் ஆண்டு. அந்திசாயும் நேரம். ஸ்காட்லாந்தின் தென்கிழக்கு கரையோரத்தை விட்டு சற்று தொலைவில், எச்எம்எஸ் பல்லஸ் என்ற பிரிட்டிஷ் போர்க்கப்பல் கொந்தளிக்கும் கடலில் திசைதெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. நேரம் போகப்போக, இருட்டும் பனியும் சேர்ந்து கலங்கரை விளக்கத்தின் வெளிச்சத்தைப் பார்க்க முடியாதபடி செய்தன. அந்த வெளிச்சம் இருந்தால்தான் மாலுமிகள் கப்பலை பத்திரமாக கரைசேர்க்க முடியும். திடீரென்று, தூரத்தில் வெளிச்சத்தைக் கண்டபோது அவர்கள் எவ்வளவு நிம்மதி அடைந்திருப்பார்கள்! உடனே கப்பலை அந்தத் திசையில் செலுத்தினார்கள். ஆனால், அவர்களுடைய நிம்மதி நீடிக்கவில்லை. காரணம், அவர்கள் பார்த்தது அவர்களுக்கு வழிகாட்ட தேவைப்பட்ட வெளிச்சமல்ல. மாறாக, கரையோரம் வேலை பார்த்துக்கொண்டிருந்த வேலையாட்கள் எரியவிட்டிருந்த நெருப்பின் வெளிச்சமே. தவறான திசையில் சென்ற பல்லஸ் கரையோர பாறைகளில் மோதி, முழுவதுமாக சேதமடைந்தது. கப்பலோடு சேர்ந்து பதினோரு மாலுமிகள் மூழ்கினர். அந்தோ பரிதாபம்!

பல்லஸின் விஷயத்தில் மாலுமிகள் போட்ட தப்புக்கணக்கால் அந்தப் பேரழிவு ஏற்பட்டது. மற்ற சமயங்களில், திசைதிருப்புவதற்கென்றே காட்டப்பட்ட பொய்யான வெளிச்சம் மாலுமிகளை பேராபத்துக்குள் தள்ளியிருக்கிறது. இப்படித் திட்டம்போட்டு பொய்யான வெளிச்சத்தைக் காட்டி, கப்பலைத் திசைதிருப்பி, பாறைகளில் மோதவிட்டு, சேதமடைந்த கப்பலைக் கொள்ளையடிப்பார்கள் என்று ரெக்ஸ், ரெக்கர்ஸ் அண்ட் ரெஸ்க்யூயர்ஸ் என்ற புத்தகம் கூறுகிறது.

‘மீட்புக்கு வழிநடத்தும் பரிசுத்த வேத எழுத்துக்கள்’

உண்மைகளைத் தேடிக்கொண்டிருக்கும் நீங்களும் அந்த மாலுமிகள் சந்தித்ததைப் போன்ற ஆபத்துக்களைச் சந்திக்க நேரிடலாம். நீங்கள் தவறான தகவலை நம்பி அதன் பின்னால் சென்றுக்கொண்டிருக்கலாம், அல்லது உங்களை ஏமாற்றுவதற்காக வேண்டுமென்றே விரிக்கப்பட்ட வலையில் விழுந்துவிடலாம். இந்த இரண்டுமே பேராபத்தில் கொண்டுபோய்விடலாம். இவற்றிலிருந்து உங்களை எப்படிப் பாதுகாத்துக்கொள்வீர்கள்? உண்மைகளை உங்களுக்குத் தெரிவிக்கும் ஊற்றுமூலம் நம்பகமானதுதானா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். கடவுளுடைய வார்த்தையான பைபிள்தான் உண்மைகளைத் தெரிவிக்கும் மிக நம்பகமான புத்தகம் என்று இந்தக் காவற்கோபுர பத்திரிகை 125 ஆண்டுகளுக்கு மேலாக குரல்கொடுத்து வந்திருக்கிறது. ஏனெனில், அதிலுள்ள ‘பரிசுத்த வேத வாக்கியங்கள் உங்களை ஞானவானாக மாற்றும் வல்லமை கொண்டவை. இரட்சிப்பை பெறவும் அது வழிகாட்டுகிறது.’​—⁠2 தீமோத்தேயு 3:15-17, ஈஸி டு ரீட் வர்ஷன்.

பைபிள் ஒரு நம்பகமான கலங்கரை விளக்கம்தான் என்பதை நீங்கள் உறுதிசெய்துகொள்ள, முதலாவது அதைச் சோதித்துப் பார்ப்பது சிறந்தது. (சங்கீதம் 119:105; நீதிமொழிகள் 14:15) பைபிள் உண்மையில் கடவுளுடைய தூண்டுதலாலேயே எழுதப்பட்டது என்று லட்சக்கணக்கானோரை நம்ப வைத்திருக்கும் அத்தாட்சிகளை நீங்களும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால், இந்தப் பத்திரிகையை பிரசுரிப்போருக்கு தயங்காமல் எழுதுங்கள். உதாரணமாக, எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்a என்ற சிற்றேடு உங்களுக்கு உதவலாம். பைபிள் திருத்தமானது, நம்பகமானது, கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்பட்டது என்பதை அச்சிற்றேட்டிலுள்ள தகவல்கள் உங்களுக்கு நிரூபிக்கும்.

அடிப்படை உண்மைகள்

இந்தப் ‘பரிசுத்த வேத எழுத்துக்களில்’ காணப்படும் சில அடிப்படை உண்மைகள் யாவை? பின்வரும் உதாரணங்களைக் கவனியுங்கள்:

அனைத்தையும் படைத்த சர்வ வல்லமையுள்ள படைப்பாளர் ஒருவர் இருக்கிறார். (ஆதியாகமம் 1:1) “[கடவுள்] அனைத்தையும் படைத்தார்,” நமக்கு உயிரையும் கொடுத்தார்; நாம் உயிர் வாழ்வதற்கே அவர்தான் காரணர். (வெளிப்படுத்துதல் 4:11, பொது மொழிபெயர்ப்பு) அதனால் அவர் மட்டுமே நம்முடைய வணக்கத்தைப் பெற தகுதியுள்ளவர். எல்லா உண்மைகளுக்கும் ஊற்றுமூலமே படைப்பாளர்தான். (சங்கீதம் 36:9; ஏசாயா 30:20, 21; ஏசாயா 48:17, 18) அவருக்கு ஒரு தனிப்பட்ட பெயர் இருக்கிறது, அதை நாம் பயன்படுத்த வேண்டுமென்று அவர் விரும்புகிறார். (யாத்திராகமம் 6:3) எபிரெய எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும் அந்தப் பெயர், ய்ஹ்வ்ஹ் (YHWH) என்று தமிழில் எழுத்துப்பெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பெயர் எபிரெய வேதாகமத்தின் மூலப் பிரதிகளில் சுமார் 7000 தடவை காணப்படுகிறது. அது தமிழில் ‘யெகோவா’ என்று மொழிபெயர்க்கப்பட்டு நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.​—⁠சங்கீதம் 83:17.

பிரச்சினைகளே இல்லாத பூங்காவன பூமியைக் குறிக்க பரதீஸ் என்ற வார்த்தையை பைபிள் பயன்படுத்துகிறது. இந்தப் பரதீஸில் என்றென்றும் வாழ்வதற்காகவே ஆண்களையும் பெண்களையும் யெகோவா படைத்தார். தம்முடையதைப் போன்ற ஆன்மீக குணங்களை மனிதர்களுக்கு அவர் கொடுத்தார். திருப்தியான வாழ்க்கையை பூமியில் என்றென்றும் அனுபவிப்பதற்கு தேவையான திறமைகளை அவர்களுக்குக் கொடுத்தார். (ஆதியாகமம் 1:26-28) அவர்கள் பரலோகத்திற்குச் செல்ல தகுதியானவர்களா என்று சோதித்துப் பார்க்கும் சோதனைக்கூடமாக கடவுள் இந்தப் பூமியைப் படைக்கவில்லை. பரலோகத்தில் இருந்தால் மட்டுமே கடவுளோடு நல்ல பந்தத்தை கொண்டிருக்க முடியும் என்பதுபோல அங்கு ஆவி ஆட்களாக செல்வதற்கு பூமியை ஒரு படிக்கட்டாகவும் அவர் படைக்கவில்லை.

கடவுள் மனிதனைப் படைக்கையில் அவனிடத்தில் எந்தத் தீமையும் இருக்கவில்லை. கடவுளால் படைக்கப்பட்ட ஆவி ஆட்கள் சிலரும், மனிதர்கள் சிலரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட தெரிவு செய்வதற்கான சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார்கள்; கடவுளுக்கு எதிராக கலகம் செய்தார்கள்; அதன்பிறகே தீமை தலைகாட்டியது. (உபாகமம் 32:5) எது சரி, எது தவறு என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை நம் முதல் பெற்றோர் தங்கள் கையில் எடுத்துக்கொண்டார்கள். (ஆதியாகமம் 2:17; 3:1-5) இது மனித குடும்பத்துக்கு மரணத்தைக் கொண்டுவந்தது. (ஆதியாகமம் 3:19; ரோமர் 5:12) அந்தக் கலகத்தில் எழுப்பப்பட்ட விவாதங்களைத் தீர்ப்பதற்காக யெகோவா தீமையை தற்காலிகமாக அனுமதிக்கத் தீர்மானித்தார். என்றாலும், பூமியையும், மனிதர்களையும் குறித்த தம்முடைய நோக்கத்தை அவர் மாற்றிக்கொள்ளவில்லை. (ஏசாயா 45:18) எனவே, எதிர்காலத்தில் ஆண்களும் பெண்களும் சுத்தப்படுத்தப்பட்ட பரதீஸ் பூமியில் என்றென்றும் வாழப்போவது நிச்சயம்.​—⁠மத்தேயு 6:10; வெளிப்படுத்துதல் 21:1-5.

இயேசு கிறிஸ்து சர்வ வல்லமையுள்ள கடவுளல்ல. மாறாக, கடவுளுடைய மகன். இயேசு கிறிஸ்துவே தம்மைப் பின்பற்றியவர்களுக்கு இவ்வாறு ஜெபிக்க கற்றுக்கொடுத்தார்: “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.” (மத்தேயு 6:9) தாம் கடவுளுக்கு சமமாயிருப்பதாக அவர் ஒருபோதும் சொல்லவில்லை. மாறாக, “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்” என்றே அவர் சொன்னார்.​—⁠யோவான் 14:28.

கடவுளுடைய நோக்கங்களை செயல்படுத்துவதில் இயேசு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார். ‘[அவரில்] விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, உலகத்தில் ஒளியாக’ அவரைக் கடவுள் அனுப்பினார். (யோவான் 12:46) “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை” என்று அப்போஸ்தலன் பேதுரு குறிப்பிட்டார். (அப்போஸ்தலர் 4:12) இதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஏனெனில், கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தின் அடிப்படையில்தான் நம்முடைய மீட்பு சார்ந்திருக்கிறது. (1 பேதுரு 1:18, 19) நம்முடைய முதல் பெற்றோரான ஆதாமும் ஏவாளும் மனித குடும்பத்தைப் பாவத்திற்கு அடிமையாக்கினர்; அதிலிருந்து நம்மை விடுவிக்க இயேசு தம்முடைய உயிரை மீட்கும் பொருளாகக் கொடுத்தார். (மத்தேயு 20:28; 1 தீமோத்தேயு 2:6) அதுமட்டுமல்ல, கடவுள் தம்முடைய நோக்கங்களை மக்களுக்குத் தெரிவிக்கவும் இயேசுவைப் பயன்படுத்தினார்.​—⁠யோவான் 8:12, 32, 46, 47; 14:6; அப்போஸ்தலர் 26:23.

இயேசு கிறிஸ்துவையும், மனிதகுலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையும் கொண்ட பரலோக அரசாங்கத்தை கடவுள் ஏற்படுத்தியிருக்கிறார். இந்த அரசாங்கத்தைப் பற்றி பைபிள் முழுவதிலும் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டிருக்கிறது. கடவுளுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலும் செய்யப்படும்படி பார்த்துக்கொள்ளும் பொறுப்பை கடவுள் இந்த அரசாங்கத்திடம் ஒப்படைத்திருக்கிறார். (மத்தேயு 6:10) மனிதர்கள் எவரும் பரலோகத்திற்குச் செல்ல வேண்டுமென்பது கடவுளுடைய ஆரம்ப நோக்கமாக இருக்கவில்லை. பூமிதான் அவர்களுடைய வீடாக இருந்தது. ஆனால், மனிதர்கள் பாவத்தின் பிடிக்குள் விழுந்ததால், அவர் புதிதாக ஓர் ஏற்பாட்டைச் செய்தார். அதாவது, பரலோக அரசாங்கத்தில் கிறிஸ்துவுடன் ‘ராஜாக்களாக’ ஆட்சி செய்ய “சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து” மக்களைத் தேர்ந்தெடுக்க அவர் ஏற்பாடு செய்தார். (வெளிப்படுத்துதல் 5:9, 10) மனித குடும்பத்திற்கு இத்தனை வேதனையையும் துன்பத்தையும் கொண்டுவந்த எல்லாவித மனித ஆட்சிகளையும் கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரத்தில் “நொறுக்கி, நிர்மூலமாக்கி” விடும்.​—⁠தானியேல் 2:44.

ஆத்துமா அழியும். பைபிளிலுள்ள இந்த அடிப்படை உண்மை மனிதனைப் பற்றியும் அவனுடைய எதிர்காலத்தைப் பற்றியும் நிலவுகிற அநேக சந்தேகங்களைத் தீர்க்கிறது. இறந்தவர்களைப் பற்றிய தவறான கருத்துக்கள் மக்களைக் குழப்பிக்கொண்டிருக்கின்றன; அவற்றையும் இந்த உண்மை தெளிவுபடுத்துகிறது.

பைபிளின் முதல் புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.” (ஆதியாகமம் 2:7) இதன் அர்த்தத்தை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? ஆத்துமா என்பது மனித உடலுக்குள் இருக்கிற ஏதோ ஒன்றல்ல. மனிதன் ஒரு ஆத்துமாவைக் கொண்டில்லை. மாறாக, அவனே ஒரு ஆத்துமாவாக இருக்கிறான். ‘பூமியின் மண்ணிலுள்ள’ பொருள்களும் கடவுளிடமிருந்து வந்த உயிர் சக்தியும் கலந்து அவன் உருவாக்கப்பட்டிருக்கிறான். ஆத்துமா அழியக்கூடியது. ஒரு மனிதன் சாகும்போது ஆத்துமா சாகிறது.​—⁠ஆதியாகமம் 3:19; பிரசங்கி 9:5, 10.

இறந்தவர்கள் உயிர்த்தெழுதல் மூலம் மறுபடியும் உயிரடைவார்கள். கடவுள் துன்மார்க்கத்தை தற்காலிகமாக விட்டுவைத்திருக்கும் காலம் முடிவுக்கு வந்தவுடன், “கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது [இயேசுவின்] குரலைக் கேட்டு வெளியே வருவர். நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர்; தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர்.” (யோவான் 5:28, 29, பொ.மொ; அப்போஸ்தலர் 24:15) மனிதர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டுமென கடவுள் ஆரம்பத்தில் நோக்கங்கொண்டிருந்தாரோ அப்படிப்பட்ட வாழ்க்கையை பரதீஸான பூமியில் உயிர்த்தெழுந்து வருவோரும் அனுபவிப்பர்.

தினந்தோறும் வேதவாக்கியங்களை கவனமாக ஆராயுங்கள்

மேலே சொல்லப்பட்டுள்ளதைப் போன்ற அடிப்படை உண்மைகளைப் பற்றிய அறிவு உங்களுக்கு எப்படி உதவும் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? இந்தக் கடினமான, கொந்தளிப்பான காலங்களில் பிசாசாகிய சாத்தானால் பரப்பப்படும் ‘ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கைகளிலிருந்து’ இந்த உண்மைகள் நம்மைப் பாதுகாக்கும். சாத்தான் ‘ஒளியின் தூதனைப்’ போல பாசாங்கு செய்கிறான். அவனுடைய கையாட்கள் ‘நீதியின் ஊழியக்காரராக’ தங்களைக் காண்பித்துக் கொள்கிறார்கள். (1 தீமோத்தேயு 6:20; 2 கொரிந்தியர் 11:13-15) இந்த உலகத்தின் பார்வையில் ‘ஞானிகளும் கல்விமான்களுமாக’ இருப்பவர்கள் ‘யெகோவாவின் வாக்கைப் புறக்கணித்திருக்கிறார்கள்.’ பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவு இவர்களுடைய தத்துவங்களின் அடிப்படையிலான அறிவிலிருந்து உங்களைப் பாதுகாக்க முடியும்.​—⁠மத்தேயு 11:25; எரேமியா 8:9, பொ.மொ.

முதல் நூற்றாண்டில் பல தவறான போதனைகளும் தத்துவங்களும் பரவியிருந்தன. ஆகவே, எல்லா போதனைகளையும் நம்ப வேண்டாமென கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் யோவான் எச்சரித்தார். அதற்குப் பதிலாக, அவை கடவுளிடமிருந்து வந்தவையா என்பதைச் சோதித்துப் பார்க்கும்படி கூறினார். (1 யோவான் 4:1) இதைக் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். உங்கள் வாழ்க்கையையே மாற்றுமளவுக்கு முக்கியமான ஒரு விஷயத்தை நீங்கள் கேள்விப்படுகிறீர்கள். அந்தத் தகவல் நம்பகமான இடத்திலிருந்து வந்ததைப் போல உங்களுக்குத் தோன்றினாலும் அதைப் பற்றி சிந்திக்காமல்கொள்ளாமல் உடனே நம்பி விடுவீர்களா? நிச்சயம் நம்ப மாட்டீர்கள். அதில் சொல்லப்பட்டுள்ளபடி செய்வதற்கு முன், அந்தச் செய்தி எங்கிருந்து வந்தது என்பதை உறுதி செய்வீர்கள். அதோடு, அதிலுள்ள விஷயத்தையும் நன்கு ஆராய்வீர்கள்.

கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்பட்ட பைபிளில் அடிப்படை உண்மைகள் அடங்கியுள்ளன. இதைக் கொடுத்திருப்பதன் மூலம் உங்களை வழிநடத்தும் கலங்கரை விளக்கம் உண்மையா போலியா என்பதைச் ‘சோதித்துப் பார்க்க’ கடவுள் வழிசெய்திருக்கிறார். (1 தெசலோனிக்கேயர் 5:21) முதல் நூற்றாண்டிலிருந்த பரந்த மனப்பான்மையுள்ள ஆட்கள் தாங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் உண்மையானவையா என்பதை உறுதி செய்துகொள்ள ‘தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தார்கள்.’ (அப்போஸ்தலர் 17:11) அதற்காக அவர்கள் பாராட்டப்பட்டார்கள். நீங்களும் அதையே செய்யலாம். “இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்” போலிருக்கும் பைபிள் உங்களை பாதுகாப்பான இடத்திற்கு வழிநடத்த அனுமதியுங்கள். (2 பேதுரு 1:19-21) அவ்வாறு செய்தால், ‘தேவனை அறியும் அறிவைக் கண்டடைவீர்கள்.’ அது உங்களுக்கு அறிவொளியூட்டும்.​—⁠நீதிமொழிகள் 2:⁠5.

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 4-ன் படம்]

கடவுளுடைய வார்த்தை விளக்கைப் போன்றது

[பக்கம் 5-ன் படம்]

கடவுளுடைய பெயர் என்ன?

[பக்கம் 5-ன் படம்]

மனிதர்களுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது?

[பக்கம் 6-ன் படம்]

இயேசு சர்வவல்லமையுள்ள கடவுளா?

[பக்கம் 6-ன் படம்]

இறந்தவர்கள் எங்கே?

[பக்கம் 7-ன் படம்]

மரித்தோரின் உயிர்த்தெழுதல்​—⁠பைபிள் கற்பிக்கும் அடிப்படை உண்மைகளில் ஒன்று

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்