“மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது”
‘எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்’
அந்த நிகழ்ச்சி பிரமிப்பூட்டும் நோக்கத்தோடு திட்டமிடப்பட்டிருந்தது. தூரா சமவெளியில் ஒரு மாபெரும் பொற்சிலை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த இடம் பாபிலோன் நகருக்கு அருகில் இருந்ததாகத் தெரிகிறது. அச்சிலையின் திறப்புவிழா அந்த மாபெரும் நிகழ்ச்சியின்போது நடைபெறவிருந்தது. உயர் அதிகாரிகள், அதில் கலந்து கொள்வார்கள். அந்த நிகழ்ச்சியின்போது பல்வேறு இசைக்கருவிகள் இசைக்கப்படும். அவற்றின் முழக்கத்தைக் கேட்டவுடன் அந்த அதிகாரிகள் அச்சிலையை விழுந்து வணங்கும்படி கட்டளையிடப்பட்டனர். யாராவது சிலையை வணங்க மறுத்தால் அனல் பறக்கும் அக்கினிச் சூளையில் சாக நேரிடும் என்று பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் எச்சரிக்கை விடுத்திருந்தார். அந்தக் கட்டளையை மீற யாருக்குத்தான் தைரியம் வரும்?
யெகோவாவை வணங்கும் பயபக்தியுள்ள மூவர் மட்டும் சிலையை வணங்காமல் நிற்பதைக் கண்டு பார்வையாளர்கள் வியப்படைந்தனர். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவையே அந்த மூவரின் பெயர்கள். அந்தச் சிலையை வணங்குவது யெகோவா தேவனுக்கு மட்டுமே கொடுக்க வேண்டிய தனிப்பட்ட பக்தியைக் காட்டத் தவறுவதாக இருக்கும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். (உபாகமம் 5:8-10) அவர்கள் விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருந்ததற்கு நேபுகாத்நேச்சார் காரணம் கேட்டபோது, அவர்கள் பயப்படாமல் இப்படிப் பதிலளித்தார்கள்: “நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது.”—தானியேல் 3:17, 18.
அந்த மூன்று எபிரெயர்களையும் எரிகிற அக்கினிச் சூளையில் எறிந்தபோது நிகழ்ந்த ஓர் அற்புதம்தான் அவர்களுடைய உயிரைக் காப்பாற்றியது. ஆம், தம்முடைய உண்மையுள்ள அந்த ஊழியர்களைக் காப்பாற்றுவதற்கு கடவுள் ஒரு தேவதூதனை அனுப்பினார். ஆனால் தங்கள் உயிரே போனாலும் யெகோவாவுக்கு கீழ்ப்படிவதிலிருந்து தவறிவிடக்கூடாது என்ற தீர்மானத்தை அவர்கள் ஏற்கனவே எடுத்திருந்தனர்.a இவர்கள் எடுத்த தீர்மானமும் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் எடுத்த தீர்மானமும் ஒரேவிதமாக இருந்தது. சுமார் ஆறு நூற்றாண்டுகளுக்குப் பிறகு யூத நீதிமன்றத்தின் முன்னால் அந்த அப்போஸ்தலர்கள் இவ்வாறு அறிவித்தார்கள்: “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.”—அப்போஸ்தலர் 5:29.
நமக்கு முக்கியமான பாடங்கள்
விசுவாசம், கீழ்ப்படிதல், உண்மைத்தன்மை ஆகியவற்றை காட்டுவதில் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ சிறந்த முன்மாதிரிகளாக திகழ்கிறார்கள், அல்லவா? இந்த மூன்று எபிரெயர்களும் யெகோவாவை விசுவாசித்தார்கள். எந்தவிதமான பொய் வணக்கத்திலோ தேசபக்தி சம்பந்தப்பட்ட காரியங்களிலோ பங்குகொள்வதற்கு பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட அவர்களுடைய மனசாட்சி அனுமதிக்கவில்லை. அதேவிதமாக, இன்றுள்ள கிறிஸ்தவர்களும் உண்மை கடவுளில் முழு நம்பிக்கை வைக்கிறார்கள். பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி அவர்களை வழிநடத்துவதால் பொய்மத காரியங்களிலோ கடவுளுடைய சட்டங்களுக்கும், நியமங்களுக்கும் முரணான சடங்குகளிலோ பங்குகொள்ள மறுக்கிறார்கள்.
அந்த மூன்று உண்மையுள்ள எபிரெயர்களும் யெகோவாவில் நம்பிக்கை வைத்தார்கள். பாபிலோனியப் பேரரசு அளித்த அங்கீகாரம், அந்தஸ்து, புகழ் போன்ற எதற்காகவும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதை அவர்கள் விட்டுக்கொடுக்கவில்லை. அந்த இளைஞர்கள் யெகோவாவுடன் உள்ள உறவைக் குலைத்துப் போடுவதைக் காட்டிலும் துன்பப்படுவதற்கும் சாவதற்குமே மனமுள்ளவர்களாயிருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த மோசே ‘அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்தார்.’ அதேவிதமாக, இவர்களும் உறுதியாயிருந்தார்கள். (எபிரெயர் 11:27) யெகோவா தங்களை காப்பாற்றினாலும் சரி, காப்பாற்றாவிட்டாலும் சரி, தங்களுடைய உயிரைக் பாதுகாத்துக்கொள்வதற்காக உத்தமத்தை விட்டுக்கொடுத்து விடக்கூடாது என்பதில் உறுதியாயிருந்தார்கள். விசுவாசமுள்ளவர்கள், “அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னபோது இவர்களுடைய உதாரணத்தையே குறிப்பிட்டார் என்பது தெளிவாகிறது. (எபிரெயர் 11:34) இன்று யெகோவாவின் ஊழியர்கள் தங்களுடைய உத்தமத்திற்கு வரும் சோதனைகளைச் சந்திக்கையில் இதுபோன்ற விசுவாசத்தையும், கீழ்ப்படிதலையும் காட்டுகிறார்கள்.
தமக்கு உண்மைத்தன்மை காட்டுவோருக்கு கடவுள் பலனளிக்கிறார் என்பதையும் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவின் அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். “கர்த்தர் . . . தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை” என்று சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் 37:28) கடவுள் அந்த மூன்று எபிரெயர்களை விடுவித்ததைப் போல, இன்று நம்மையும் அற்புதமாக விடுவிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. என்றாலும், எவ்வித இன்னல்களை சந்தித்தாலும்சரி, நம்முடைய பரலோகத் தகப்பன் நமக்கு உதவியளிப்பார் என்று நாம் நம்பிக்கையோடு இருக்கலாம். நம்முடைய பிரச்சினையை கடவுள் நீக்கலாம், சகித்துக்கொள்ள நமக்கு சக்தியைத் தரலாம், அல்லது மரணம்வரை நாம் உத்தமமாய் இருந்தால் அவர் நம்மை உயிர்த்தெழுப்பலாம். (சங்கீதம் 37:10, 11, 29; யோவான் 5:28, 29) நம்முடைய உத்தமத்தன்மை சோதிக்கப்படுகிற ஒவ்வொரு முறையும் நாம் மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதை தேர்ந்தெடுக்கும்போது நம்முடைய விசுவாசமும், கீழ்ப்படிதலும், உண்மைத்தன்மையுமே வெற்றிவாகை சூடுகின்றன.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டர் 2006-ல் ஜூலை/ஆகஸ்ட் பக்கத்தைக் காண்க.
[பக்கம் 9-ன் பெட்டி/படம்]
உங்களுக்குத் தெரியுமா?
• அந்த மூன்று எபிரெயர்களும் உத்தமத்திற்கு எதிரான இந்தச் சோதனையைச் சந்தித்தபோது கிட்டத்தட்ட 30 வயதாக இருந்தார்கள்.
• சூளை எந்தளவுக்கு அதிகமாய் சூடாக்கப்பட முடியுமோ அந்தளவுக்கு சூடாக்கப்பட்டிருந்தது.—தானியேல் 3:19.