இஸ்ரவேல் மக்களைப் பற்றி பைபிள் சாராத ஒரு சான்று
எகிப்திலுள்ள கெய்ரோ அருங்காட்சியகத்தில், பார்வோன் மெர்னெப்டாவின் வெற்றிகளை பறைசாற்றும் கருங்கல் கல்வெட்டு ஒன்று உள்ளது. இவர் இரண்டாம் ராம்சேஸின் பதிமூன்றாவது மகன். பொ.ச.மு. சுமார் 1212-1202-க்கு இடைப்பட்ட காலத்தில் இவர் ஆட்சி செய்தார் என்று அறிஞர்கள் கணித்திருக்கிறார்கள். இது பூர்வ இஸ்ரவேலில் நியாயாதிபதிகள் இருந்த காலத்தின் பிற்பகுதியாகும். மெர்னெப்டா கல்வெட்டின் கடைசி இரண்டு வரிகள் இவ்வாறு கூறுகின்றன: “கானான் சூறையாடப்பட்டது. அஸ்கலோனும், கேசேரும் கைப்பற்றப்பட்டன, யானோவாம் முற்றிலும் அழிக்கப்பட்டது. இஸ்ரவேல் பாழாக்கப்பட்டது, அவனுடைய வம்சமே இல்லாமல் போனது.”
இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் “இஸ்ரவேல்” என்ற வார்த்தை எதை அர்த்தப்படுத்துகிறது? இதுபோன்ற கல்வெட்டுகளில் காணப்படும் சித்திர எழுத்துக்களில், உச்சரிப்பு இல்லாத சில விளக்கக் குறியீடுகள் சேர்க்கப்பட்டிருந்தன. இவை, அந்த வார்த்தைகள் எந்த வகையைச் சார்ந்தவை என்பதைச் சுட்டிக்காட்டின. பூர்வ இஸ்ரவேலின் எழுச்சி என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு விளக்குகிறது: “இங்கு சொல்லப்பட்டுள்ள நான்கு பெயர்களில் அஸ்கலோன், கேசேர், யானோவாம் ஆகிய மூன்று பெயர்களுடன் ஒரு விளக்கக் குறியீடு சேர்க்கப்பட்டுள்ளது. இம்மூன்றும் நகரங்கள் என்பதை அது நமக்குச் சொல்கிறது. . . . ஆனால், இஸ்ரவேல் என்ற வார்த்தையுடன் சேர்க்கப்பட்டுள்ள விளக்கக் குறியீடு மக்களைக் குறிப்பதாக” அது சொல்கிறது.—நேரெழுத்துக்கள் எங்களுடையவை.
இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள வார்த்தைகளின் முக்கியத்துவம் என்ன? மேலே குறிப்பிடப்பட்ட புத்தகத்தின் ஆசிரியரும், பதிப்பாசிரியருமான ஹர்ஷா ஷாங்ஸ் இவ்வாறு பதிலளிக்கிறார்: “இஸ்ரவேல் என்றழைக்கப்பட்ட மக்கள் பொ.ச.மு. 1212-ல் வாழ்ந்தார்கள்; எகிப்தின் பார்வோன் இவர்களை அறிந்திருந்தான். அதுமட்டுமல்ல, இவர்களைப் போரில் தோற்கடித்ததைக் குறித்து பெருமையடித்துக்கொள்வது தகுதியானதென்று நினைத்தான். இதைத்தான் மெர்னெப்டாவின் கல்வெட்டு காட்டுகிறது.” மத்திய கிழக்கு தொல்பொருளியல் பேராசிரியர் வில்லியம் ஜி. டேவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “மெர்னெப்டா கல்வெட்டு தெளிவாகவே நமக்கு இப்படிச் சொல்கிறது: தங்களை ‘இஸ்ரவேல்’ என்றழைத்துக்கொண்ட மக்கள் கானான் தேசத்தில் வாழ்ந்தார்கள். இதனால் எகிப்தியர்களும் இவர்களை ‘இஸ்ரவேல்’ என்றழைத்தார்கள். பைபிளை உண்மையென்று நிரூபிக்க வேண்டிய எந்த அவசியமும் எகிப்தியர்களுக்கு இல்லை; என்றாலும் அவர்களே இந்தப் பெயரை பயன்படுத்தியிருக்கிறார்கள். தங்களுக்கு பேரும் புகழும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ‘இஸ்ரவேல்’ என்ற குறிப்பிட்ட, வித்தியாசப்பட்ட மக்கள் இருப்பதாக அவர்களாகவே கதைகட்டியிருக்க மாட்டார்கள்”
இஸ்ரவேல் என்பது முதலில் முற்பிதாவாகிய யாக்கோபுக்கு கொடுக்கப்பட்ட ஒரு பெயராக பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவருடைய 12 மகன்களின் சந்ததிகள் “இஸ்ரவேல் புத்திரர்” என அறியப்பட்டார்கள். (ஆதியாகமம் 32:22-28, 32; 35:9, 10) பல வருடங்களுக்குப் பிறகு, தீர்க்கதரிசியாகிய மோசேயும், எகிப்தின் பார்வோனும் யாக்கோபின் இந்த சந்ததிகளைக் குறிக்கவே ‘இஸ்ரவேல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர். (யாத்திராகமம் 5:1, 2) மெர்னெப்டாவின் கல்வெட்டு, இஸ்ரவேல் என்றழைக்கப்பட்ட மக்களைப் பற்றிய மிகப் பழமையான பைபிள் சாராத சான்றாக அறியப்பட்டிருக்கிறது.
[பக்கம் 24-ன் படங்கள்]
மெர்னெப்டாவின் கல்வெட்டு
எறிகம்பு, ஓர் ஆணும் பெண்ணும் அமர்ந்திருப்பது ஆகிய கடைசி மூன்று குறியீடுகளும் (வலமிருந்து இடமாக) சேர்ந்திருப்பது, இஸ்ரவேலை அந்நிய மக்களாக அடையாளம் காட்டுகின்றன
[படத்திற்கான நன்றி]
Egyptian National Museum, Cairo, Egypt/Giraudon/The Bridgeman Art Library