மதிப்பு மரியாதை—மறுக்கப்படும் உரிமை
“முகாம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் அவமானத்தையும் அவமரியாதையையும் நோக்கி இறங்கும் படிக்கட்டுகளாக இருந்தன.”—மாக்டாலேனா குஸரோ ராயிட்டர், நாசி சித்திரவதை முகாமிலிருந்து உயிர்தப்பியவர்.
இரண்டாம் உலகப்போரின்போது நாசி சித்திரவதை முகாம்களில் நடந்த அட்டூழியங்கள் அந்தளவு பயங்கரமாக இருந்தன; எனினும் மனிதரின் மதிப்பு மரியாதை மிதிபட்டுப் போனதற்கு அவை ஆரம்பமுமல்ல, முடிவுமல்ல. கடந்த காலத்திலும் சரி, தற்காலத்திலும் சரி, இதுதான் உண்மை: “அவமானத்தையும் அவமரியாதையையும்” அநேக மக்கள் காலங்காலமாக சகித்து வந்திருக்கிறார்கள்.
என்றாலும், மனித சரித்திரத்தில் நடந்துள்ள காட்டுமிராண்டித்தனமான செயல்கள் மட்டுமே மனிதரின் மதிப்பு மரியாதை பறிபோனதற்குக் காரணமல்ல. பெரும்பாலும் அவற்றிற்கு வேறு காரணங்களும் உள்ளன. அவை மறைமுகமான விதங்களில் தலைகாட்டுகின்றன. உதாரணமாக, ஒரு பிள்ளையின் தோற்றம் வித்தியாசமாக இருந்தால் அது கேலிசெய்யப்படுகிறது. வேறொரு நாட்டில் குடிபுகுந்தவர் தன்னுடைய ‘வித்தியாசமான’ பழக்கவழக்கங்கள் காரணமாகக் கிண்டல் செய்யப்படுகிறார். நிறம், தேசம் என்ற பாகுபாடுகளினாலும்கூட ஒருவர் துன்பப்படுகிறார். இப்படி மற்றவர்களின் மதிப்பு மரியாதையைப் பறிப்பவர்கள், அதை ஒரு தமாஷாக நினைக்கிறார்கள். ஆனால், மட்டம்தட்டப்பட்டு மனவேதனையும் அவமானமும் அடைவோருக்கு அது ஒன்றும் தமாஷான விஷயமல்ல.—நீதிமொழிகள் 26:18, 19.
மதிப்பு மரியாதை என்பது என்ன?
மதிப்பு மரியாதை என்பது, தகுதியோடு, கௌரவத்தோடு, அபிமானத்தோடு இருக்கும் தன்மையை அல்லது நிலையை அர்த்தப்படுத்துகிறது. அப்படியானால், மதிப்பு மரியாதை என்பது நம்மைப் பற்றி நாம் கருதும் விதத்தையும் மற்றவர்கள் நம்மிடம் நடந்துகொள்ளும் விதத்தையும் உட்படுத்துகிறது. நம்மைப் பற்றி நாம் கருதும் விதத்தைப் பல்வேறு அம்சங்கள் பாதிப்பது உண்மையே. அதேசமயத்தில், அன்றாட வாழ்க்கையில் மற்றவர்கள் நம்மைக் கருதும் விதம் அல்லது நடத்தும் விதம் நம்முடைய தனித்தன்மையையும் மதிப்பையும் பெரிதும் பாதிக்கிறது.
ஒரு சமுதாயம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பொதுவாக, ஏழைகள், ஆதரவற்றவர்கள், பலவீனர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். என்றாலும், அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இருப்பதுதானே ஒருவருடைய மதிப்பு மரியாதையைக் குறைத்துவிடுவதில்லை. மற்றவர்கள் அவர்களை கருதும் விதமும் நடத்தும் விதமுமே அவர்களுடைய மதிப்பு மரியாதையைக் குறைத்துப் போடலாம். அவல நிலையிலிருப்போருக்கு மதிப்பு மரியாதை பெற உரிமை இருந்தும் பொதுவாக அவர்கள் கேவலமாக, அல்லது துச்சமாகக் கருதப்படுவதுதான் வருத்தந்தரும் விஷயம். மோசமாக நடத்தப்படுகிற முதியோர், ஏழைகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது உடல் குறைபாடுள்ளவர்கள், “லாயக்கற்றவர்கள்,” “தகுதியற்றவர்கள்,” “மட்டமானவர்கள்” என்று அழைக்கப்படுவதை அடிக்கடி கேட்டிருக்கிறோம், அல்லவா?
சரி, மக்கள் ஒருவரையொருவர் மட்டம்தட்டுவதற்கு காரணமென்ன? மதிப்பு மரியாதையைப் பெற்றுக்கொள்ளும் அடிப்படை உரிமை எல்லா மக்களுக்கும் கிடைக்கும் காலம் வருமா? அடுத்த கட்டுரை, இக்கேள்விகளுக்கு கடவுளுடைய வார்த்தையான பைபிளிலிருந்தே திருப்திகரமான பதில்களை அளிக்கும்.