மரியாதைக்குரிய விதத்தில் நடந்து யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்
‘[யெகோவாவுடைய] செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது.’—சங். 111:3.
1, 2. (அ) “மகிமை” என்ற வார்த்தையை எவ்வாறு விளக்குவீர்கள்? (ஆ) இந்தக் கட்டுரையில் என்ன கேள்விகளைச் சிந்திப்போம்?
“கர்த்தாவே, நீர் . . . மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர்.” (சங். 104:1) கடவுள், மதிப்பு மரியாதையைப் பெறத் தகுதியானவர் என்று இந்த வசனம் காட்டுகிறது. மக்களும்கூட மரியாதைக்குரிய விதத்தில் நடந்துகொள்ள முடியும் என்பதை அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகள் காட்டுகின்றன. கிறிஸ்தவப் பெண்கள் “மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், . . . தங்களை அலங்கரிக்க வேண்டும்” என்று அவர் சொன்னார். (1 தீ 2:9, 10) ஆனால், யெகோவாவின் ‘மகிமையையும் மகத்துவத்தையும்’ கனப்படுத்துவதற்கு மரியாதைக்குரிய முறையில் உடையணிந்தால் மட்டுமே போதாது.—சங்.111:3.
2 பைபிளில், “மகிமை” என்பதற்குரிய எபிரெய வார்த்தையை, “மகத்துவம்,” “மாட்சிமை,” “மேன்மை,” “கனம்” என்றும் மொழிபெயர்க்கலாம். ஓர் அகராதியின் விளக்கப்படி, “மகிமை” என்பது “தகுதியுடையவராக, கனத்துக்குரியவராக, மரியாதைக்குரியவராக இருக்கும் தன்மை அல்லது நிலை ஆகும்.” யெகோவாவைவிட அதிக கனத்துக்கும் மதிப்புக்கும் தகுதியுள்ளவர் ஒருவருமில்லை. எனவே, அவருக்கு ஒப்புக்கொடுத்திருக்கும் ஊழியர்களான நாம் பேச்சிலும் நடத்தையிலும் மரியாதையை வெளிக்காட்ட வேண்டும். அப்படியானால், இந்தக் கட்டுரையில் பின்வரும் கேள்விகளுக்குப் பதில்களைச் சிந்திப்போம். மனிதரால் ஏன் மதிப்பு மரியாதையுடன் நடந்துகொள்ள முடியும்? யெகோவாவின் மகிமைக்கும் மகத்துவத்திற்கும் அத்தாட்சிகள் யாவை? கடவுளுடைய மகிமை என்ன செய்ய நம்மைத் தூண்ட வேண்டும்? இந்தப் பண்பை வெளிக்காட்டுவது சம்பந்தமாக இயேசு கிறிஸ்துவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? கடவுளைப்போன்று நாமும் எவ்வாறு மதிப்பு மரியாதையைக் காட்டலாம்?
நாம் ஏன் மரியாதையோடு நடந்துகொள்ள முடியும்
3, 4. (அ) மகிமையால் முடிசூட்டப்பட்டிருக்கிற நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? (ஆ) சங்கீதம் 8:5-9 யாரைத் தீர்க்கதரிசனமாகக் குறிப்பிடுகிறது? (அடிக்குறிப்பைக் காண்க.) (இ) கடந்த காலங்களில் யாரையெல்லாம் யெகோவா கனப்படுத்தியிருக்கிறார்?
3 மனிதர் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால் மதிப்பு மரியாதையோடு நடந்துகொள்ளும் திறனை நாம் அனைவரும் பெற்றிருக்கிறோம். முதல் மனிதனுக்கு இந்தப் பூமியைப் பராமரிக்கும் பொறுப்பைக் கொடுத்து அவனை யெகோவா கனப்படுத்தினார். (ஆதி. 1:26, 27) மனிதன் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனபிறகும்கூட பூமி சம்பந்தமான பொறுப்பை மீண்டும் அவனுக்குக் கொடுத்தார். ஆக, கடவுள் இன்னமும் மனிதரை மகிமையினால் ‘முடிசூட்டுகிறார்.’ (சங்கீதம் 8:5-9-ஐ வாசியுங்கள்.)a மகிமையைப் பெற்றிருக்கிற நாம் மகிமையை வெளிக்காட்ட வேண்டும். யெகோவாவின் உன்னதமான பெயரை பயபக்தியோடும் கண்ணியத்தோடும் துதிப்பதன் மூலம் அதைச் செய்யலாம்.
4 விசேஷமாக, தமக்குப் பரிசுத்த சேவை செய்வோரை யெகோவா அதிகமாகவே மதிப்புக்குரிய விதத்தில் நடத்தியிருக்கிறார். காயீனுடைய பலியை ஒதுக்கிவிட்டு ஆபேலின் பலியை ஏற்றுக்கொண்டதன் மூலம் கடவுள் அவரைக் கனப்படுத்தினார். (ஆதி. 4:4, 5) இஸ்ரவேலரை வழிநடத்தவிருந்த யோசுவாவுக்கு ‘உன் கனத்தில் கொஞ்சம் கொடு’ என்று மோசேயிடம் யெகோவா சொன்னார். (எண். 27:20) தாவீதின் குமாரனாகிய சாலொமோனைக் குறித்து பைபிள் இவ்வாறு சொல்கிறது: “இஸ்ரவேலர் எல்லாரும் காணக் கர்த்தர் சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி, அவனுக்கு முன்னே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாதிருந்த ராஜரிக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார்.” (1 நா. 29:25) உயிர்த்தெழுப்பப்பட்டு பரலோகத்திற்குச் சென்ற கிறிஸ்தவர்களை கடவுள் ஒப்பற்ற விதத்தில் கனப்படுத்துவார். அவர்கள் பூமியில் இருந்தபோது, “ராஜ்யத்தின் மகிமையை” உண்மையாய் அறிவித்திருக்கிறார்கள். (சங். 145:11–13) அதிகரித்துவரும் இயேசுவின் ‘வேறே ஆடுகளுக்கும்,’ யெகோவாவைப் போற்றிப் புகழ்வதில் ஆசீர்வாதமான, மேன்மையான பங்கு இருக்கிறது.—யோவா. 10:16.
யெகோவாவின் மகிமைக்கும் மகத்துவத்திற்கும் அத்தாட்சிகள்
5. யெகோவாவின் மகத்துவம் எந்தளவு உயர்வானது?
5 அற்ப மனிதனோடு ஒப்பிட, கடவுள் எந்தளவு உயர்வானவர் என்பதைச் சங்கீதக்காரனாகிய தாவீது இவ்வாறு பாடினார்: “எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.” (சங் 8:1) “வானத்தையும் பூமியையும்” படைப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பிருந்து, பூமியைப் பூங்காவனமாக மாற்றி மனிதரைப் பரிபூரணராக்கும் கடவுளுடைய நோக்கம் நிறைவேறிய பின்பும்கூட, அதாவது நித்திய நித்திய காலத்திற்கு இப்பிரபஞ்சத்தில் யெகோவா தேவனே மிகுந்த கனமும் மகிமையும் வாய்ந்தவராய்த் திகழ்கிறார்.—ஆதி. 1:1; 1 கொ. 15:24–28; வெளி. 21:1–5.
6. யெகோவா மகிமையை அணிந்திருப்பதாக சங்கீதக்காரன் ஏன் சொன்னார்?
6 “பொன்னாபரணங்கள்” பூட்டியதுபோல் நட்சத்திரங்கள் மின்னும் இரவு வானின் பேரழகைப் பார்த்து கடவுள் பயமுள்ள சங்கீதக்காரன் எவ்வளவாய் நெகிழ்ந்து போயிருப்பார்! கடவுள், ‘வானங்களைத் திரையைப்போல் விரித்திருப்பதை’ பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோன சங்கீதக்காரன் அவருடைய மகத்தான படைப்புத் திறனைப் புகழ்ந்து, யெகோவா மகிமையை அணிந்திருப்பதாகக் கூறினார். (சங்கீதம் 104:1, 2-ஐ வாசியுங்கள்.) காணமுடியாத, சர்வவல்ல படைப்பாளரின் மகிமையும் மகத்துவமும், காணமுடிகிற அவருடைய படைப்புகளில் தெளிவாகத் தெரிகின்றன.
7, 8. யெகோவாவின் மகிமைக்கும் மகத்துவத்திற்குமான என்ன அத்தாட்சியை வானில் நாம் பார்க்கிறோம்?
7 உதாரணத்திற்கு, பால்வீதி நட்சத்திர மண்டலத்தைச் சிந்தித்துப் பாருங்கள். கடல்போல் பரந்துவிரிந்திருக்கும் இந்த நட்சத்திர மண்டலத்தில் விண்மீன்களும் கோள்களும் சூரிய குடும்பங்களும் நிரம்பியிருக்கின்றன. இதில், பூமிக் கிரகம் மிகப்பெரிய கடற்கரையிலுள்ள ஒரு மணற்துகளைப்போல மிகச் சிறியதாய்க் காட்சியளிக்கிறது. இந்த ஒரு நட்சத்திர மண்டலத்தில் மட்டுமே 10,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளனவே! வினாடிக்கு ஒரு நட்சத்திரம் என்று 24 மணிநேரமும் விடாமல் எண்ணினால்கூட அவற்றையெல்லாம் எண்ணி முடிக்க 3,000 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.
8 இந்தப் பால்வீதி நட்சத்திர மண்டலத்தில் மட்டுமே 10,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளதென்றால், மற்ற நட்சத்திர மண்டலங்களைப் பற்றி என்ன சொல்லலாம்? இப்பிரபஞ்சத்தில் 5,000 கோடி முதல் 12,500 கோடி வரையிலான நட்சத்திர மண்டலங்கள் இருக்கலாமென வானியல் வல்லுநர்கள் கணிக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் இந்தப் பால்வீதி நட்சத்திர மண்டலம். அப்படியானால், இப்பிரபஞ்சம் முழுவதிலும் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன? அதை நம்மால் கற்பனைகூட செய்ய முடியாது. என்றாலும், யெகோவா “நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்.” (சங். 147:4) இவ்வளவு மகிமையையும் மகத்துவத்தையும் யெகோவா அணிந்திருப்பதைப் பார்க்கும்போது, அவருடைய உன்னதமான பெயரைப் போற்றிப் புகழ உங்கள் மனம் தூண்டவில்லையா?
9, 10. ரொட்டியை ஆகாரமாக யெகோவா தந்திருப்பது அவருடைய ஞானத்தை எவ்வாறு வெளிப்படுத்துகிறது?
9 பரந்துவிரிந்த வானிலிருந்து சாதாரண ரொட்டிக்கு இப்பொழுது நமது கவனத்தைச் செலுத்துவோம். யெகோவா இந்த “வானத்தையும் பூமியையும்” உண்டாக்கினவர் மட்டுமல்ல, ‘பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறவரும்கூட.’ (சங். 146:6, 7) கடவுளுடைய ‘மகிமையும் மகத்துவமும்’ ரொட்டி தயாரிக்க உதவும் தானியங்கள் உட்பட அவருடைய உன்னதமான படைப்புகளில் தெரிகின்றன. (சங்கீதம் 111:1-5-ஐ வாசியுங்கள்.) “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை [அதாவது, ரொட்டியை] இன்று எங்களுக்குத் தாரும்” என்று ஜெபம் செய்யும்படி தம் சீஷர்களுக்கு இயேசு கற்பித்தார். (மத். 6:11) இஸ்ரவேலர்கள் உட்பட பழங்கால மக்களின் அடிப்படை உணவாக ரொட்டி இருந்தது. இது சாதாரண உணவாகக் கருதப்படுவது உண்மைதான்; ஆனாலும், இதில் சேர்க்கப்படுகிற சில அடிப்படைப் பொருள்களில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களாலேயே சுவையான ரொட்டி கிடைக்கிறது என்பதை அறியும்போது இதைச் சாதாரணமாகக் கருத முடியாது.
10 பைபிள் எழுதப்பட்ட காலத்தில், ரொட்டி தயாரிக்க இஸ்ரவேலர்கள் கோதுமை அல்லது வாற்கோதுமை மாவையும் தண்ணீரையும் பயன்படுத்தினார்கள். சிலசமயங்களில் புளித்தமாவையும் சேர்த்தார்கள். இந்தப் பொருள்களெல்லாம் சேரும்போது ஒன்றோடொன்று வினைபுரியும் வேதியியல் சேர்மங்கள் வியக்கவைக்கும் எண்ணிக்கையில் உருவாகின்றன. இந்தச் சேர்மங்கள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்பதை மனிதரால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதுமட்டுமல்ல, இந்த ரொட்டியை நம் உடல் எவ்வாறு ஜீரணிக்கிறது என்பது வியக்க வைக்கும் இன்னொரு சிக்கலான விஷயம். “கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்” என்று சங்கீதக்காரன் பாடியது ஆச்சரியமல்லவே. (சங். 104:24) இதேபோன்று யெகோவாவைத் துதிக்க நீங்களும் தூண்டப்படுகிறீர்களா?
கடவுளுடைய மகிமை உங்களை என்ன செய்யத் தூண்டுகிறது?
11, 12. கடவுளின் படைப்புகளை நாம் தியானிக்கும்போது நமக்கு என்ன பலன்கள் கிடைக்கின்றன?
11 இரவு வானைப் பார்த்து வியக்க நாம் வானியல் வல்லுநராகவோ ரொட்டியைச் சுவைத்து மகிழ வேதியியல் அறிஞராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. என்றாலும், நம் படைப்பாளரின் மகத்துவத்தைப் போற்றிப் புகழ அவருடைய படைப்புகளைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க நாம் நேரமெடுக்க வேண்டும். அப்படித் தியானிப்பதால் நமக்கு என்ன பலன்? யெகோவாவின் செயல்களில் எதைப் பற்றித் தியானித்தாலும் நமக்கு ஒரே விதமான பலனே கிடைக்கிறது.
12 தம்முடைய மக்களுக்காக யெகோவா செய்த மகத்தான செயல்களைப் பற்றி தாவீது இவ்வாறு பாடினார்: ‘உம்முடைய சிறந்த மகிமைப் பிரதாபத்துக்கும், உம்முடைய அதிசயமான கிரியைகளுக்கும் கவனம் செலுத்துவேன்.’ (சங். 145:5) பைபிளைப் படித்து, அவற்றைத் தியானிக்க நேரமெடுத்துக் கொள்வதன் மூலம் அவருடைய செயல்களுக்கு நாம் கவனம் செலுத்தலாம். இப்படித் தியானிப்பதால் என்ன பலன்? கடவுளுடைய மகிமைக்கும் மகத்துவத்திற்குமான நம்முடைய நன்றி அதிகரிக்கும். அப்போது, “உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன்” என்று சொன்ன தாவீதைப்போல நாமும் யெகோவாவுக்கு மகிமை சேர்க்க நிச்சயம் தூண்டப்படுவோம். (சங். 145:6) கடவுளுடைய அதிசயமான செயல்களைத் தியானிப்பது யெகோவாவோடு உள்ள நம் பந்தத்தைப் பலப்படுத்த வேண்டும்; அவரைப்பற்றி மற்றவர்களிடம் உற்சாகத்தோடும் உறுதியோடும் சொல்வதற்கு நம்மைத் தூண்ட வேண்டும். நீங்கள் நற்செய்தியைப் பக்திவைராக்கியமாய் அறிவித்து, யெகோவா தேவனின் மகிமையையும் மகத்துவத்தையும் மாட்சிமையையும் மக்கள் அறிந்துகொள்ள உதவுகிறீர்களா?
கடவுளுடைய மகிமையை இயேசு அப்படியே பிரதிபலிக்கிறார்
13. (அ) தானியேல் 7:13, 14-ன்படி யெகோவா தம் குமாரனுக்கு எவற்றை வழங்கியிருக்கிறார்? (ஆ) ராஜாவாகிய இயேசு தம் குடிமக்களை எவ்வாறு நடத்துகிறார்?
13 கடவுளுடைய குமாரனான இயேசு கிறிஸ்து நற்செய்தியை வைராக்கியமாகப் பிரசங்கித்தார்; மாட்சிமையும் மகத்துவமுமுள்ள தம் பரலோகத் தகப்பனை அவர் மகிமைப்படுத்தினார். யெகோவா, தம் ஒரேபேறான குமாரனுக்கு ‘கர்த்தத்துவத்தையும் [அதாவது, ஆட்சியுரிமையையும்] ராஜரிகத்தையும்’ வழங்கி அவரை விசேஷமாகக் கனப்படுத்தினார். (தானியேல் 7:13, 14-ஐ வாசியுங்கள்.) என்றாலும், இயேசு அகந்தையுள்ளவராகவோ மற்றவர்களோடு ஒட்டாதவராகவோ இருப்பவரல்ல. அதற்கு நேர்மாறாக, தம் குடிமக்களின் வரையறைகளைப் புரிந்துகொண்டு, அவர்களை மதிப்பு மரியாதையுடன் நடத்தும் கரிசனையுள்ள ராஜாவாக இருக்கிறார். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவாகிய இயேசு தம் மக்களை, அதுவும் மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்ட, அன்பு காட்டப்படாத மக்களை எப்படி நடத்தினார் என்பதற்கு ஓர் உதாரணத்தைக் கவனிக்கலாம்.
14. பூர்வ இஸ்ரவேலில் குஷ்டரோகிகள் எவ்வாறு கருதப்பட்டார்கள்?
14 பூர்வ காலங்களில் குஷ்டரோகத்தால் பீடிக்கப்பட்டவர்கள் மெல்ல மெல்ல வேதனையான மரணத்தைத் தழுவினர். அந்த நோய் படிப்படியாக நோயாளியின் மற்ற உறுப்புகளையும் பாதித்தது. இறந்தவர்களை உயிருக்குக் கொண்டுவருவது எப்படி முடியாத காரியமோ அப்படியே குஷ்டரோகிகளைக் குணப்படுத்துவதும் முடியாத காரியமாகக் கருதப்பட்டது. (எண். 12:12; 2 இரா. 5:7, 14) குஷ்டரோகிகள் அசுத்தமானவர்களாகவும் அருவருப்பானவர்களாகவும் அறிவிக்கப்பட்டு சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். அவர்கள் மக்களைப் பார்க்கும்போது, “தீட்டு, தீட்டு” என்று சத்தமிட வேண்டியிருந்தது. (லேவி. 13:43-46) குஷ்டரோகிகள் செத்தவர்களைப் போலவே கருதப்பட்டார்கள். ஒரு குஷ்டரோகி மற்றவர்களிடமிருந்து சுமார் ஆறடி தூரம் தள்ளியே நிற்க வேண்டும் என்பதாக ரபீக்களின் பதிவுகள் காட்டின. ஒரு குஷ்டரோகியைப் பார்த்தால் அதுவும் தூரத்தில் பார்த்தால்கூட ஒரு மதத் தலைவர் அவரைத் துரத்திவிடுவதற்காகக் கல்லெடுத்து எறிவார் என்றும் அவை குறிப்பிட்டன.
15. ஒரு குஷ்டரோகியிடம் இயேசு எப்படி நடந்துகொண்டார்?
15 என்றாலும், இயேசுவிடம் வந்து தன்னைக் குணப்படுத்தும்படி கெஞ்சிய குஷ்டரோகியிடம் அவர் எப்படி நடந்துகொண்டார் என்பது கவனிக்கத்தக்கது. (மாற்கு 1:40-42-ஐ வாசியுங்கள்.) அந்தக் குஷ்டரோகியைத் துரத்தியடிப்பதற்குப் பதிலாக, வெறுத்து ஒதுக்கப்பட்ட அந்த மனிதனிடம் இயேசு கரிசனையோடு, மரியாதைக்குரிய விதத்தில் நடந்துகொண்டார். பரிதாபத்துக்குரிய இந்த நபர், தான் எப்படியாவது குணமடைய வேண்டும் என்று தவித்ததை இயேசு உணர்ந்தார். அதனால், உள்ளம் உருகி அவர் தம்முடைய கரிசனையை உடனடியாகச் செயலில் காட்டினார். கையை நீட்டி, அந்தக் குஷ்டரோகியைத் தொட்டு, அவர் குணமாக்கினார்.
16. இயேசு மற்றவர்களை நடத்திய விதத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
16 இயேசு தம் பிதாவைப் போலவே மற்றவர்களை மரியாதையோடு நடத்தினார். அவருடைய சீஷர்களான நாம் இந்த விஷயத்தில் அவரை எப்படிப் பின்பற்றலாம்? இதற்கு ஒரு வழி, அந்தஸ்து, ஆரோக்கியம், வயது இவற்றையெல்லாம் தாண்டி எல்லாருமே மதிப்பு மரியாதையைப் பெறத் தகுதியானவர்கள் என்பதை ஏற்றுக்கொள்வதாகும். (1 பே. 2:17) விசேஷமாக, கணவர்கள், பெற்றோர்கள், கிறிஸ்தவ மூப்பர்கள் என பொறுப்பான ஸ்தானங்களில் இருப்பவர்கள் தங்களுடைய பராமரிப்பில் உள்ளவர்களை மதிப்பு மரியாதையோடு நடத்த வேண்டும்; இதன்மூலம் அவர்களுடைய சுயமரியாதையைக் காத்திட உதவலாம். இது எல்லாக் கிறிஸ்தவர்களும் செய்யவேண்டிய ஒன்று என்பதை வலியுறுத்தி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.”—ரோ. 12:10.
வழிபாட்டில் மதிப்பு மரியாதை காட்டுதல்
17. யெகோவாவை வழிபடும்போது மரியாதைக்குரிய விதத்தில் நடந்துகொள்வது சம்பந்தமாக பைபிளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
17 நாம் யெகோவாவை வணங்கும்போது மரியாதைக்குரிய விதத்தில் நடந்துகொள்வதற்கு விசேஷ கவனம் செலுத்த வேண்டும். “நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்” என பிரசங்கி 5:1 சொல்கிறது. மோசேயும் யோசுவாவும் பரிசுத்தமான இடத்தில் இருந்தபோது தங்களுடைய காலணிகளைக் கழற்றிப்போடுமாறு கட்டளையிடப்பட்டார்கள். (யாத். 3:5; யோசு. 5:15) பயபக்தி அல்லது மரியாதை காட்டுவதற்கு அடையாளமாக அவர்கள் இதைச் செய்ய வேண்டியிருந்தது. இஸ்ரவேலில் இருந்த ஆசாரியர்கள் தங்களுடைய “நிர்வாணத்தை மூடும்படிக்கு” சணல்நூல் கால்சட்டைகளை அணிய வேண்டியிருந்தது. (யாத். 28:42, 43) இதனால் அவர்கள் பலிபீடத்தில் சேவை செய்யும்போது தங்கள் நிர்வாணம் தெரியாதபடி மறைத்துக்கொள்ள முடிந்தது. ஆசாரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் மதிப்பு மரியாதையை வெளிக்காட்டுவதற்கு கடவுள் கொடுத்துள்ள நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது.
18. நாம் யெகோவாவை வழிபடும்போது எவ்வாறு மதிப்பு மரியாதையை வெளிக்காட்ட வேண்டும்?
18 வழிபாட்டில் மரியாதைக்குரிய விதத்தில் நடந்துகொள்வது மற்றவர்களுக்கு மதிப்பு மரியாதை கொடுப்பதையும் குறிக்கிறது. நமக்கு மதிப்பு மரியாதை கிடைக்க வேண்டுமானால் நாமும் அவ்வாறே நடந்துகொள்ள வேண்டும். நாம் மற்றவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை வெறும் நடிப்பாகவோ வெளிவேஷமாகவோ இருக்கக்கூடாது. அது மனிதர் பார்வைக்காக அல்லாமல் கடவுள் பார்க்கிற விதமாக இருக்க வேண்டும்; அதாவது, இருதயத்திலிருந்து வர வேண்டும். (1 சா. 16:7; நீதி. 21:2) மதிப்பு மரியாதை காட்டுவதை நம் உடன்பிறந்த குணமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்; அது நம் நடத்தையில், மனப்பான்மையில், பிறருடன் உள்ள உறவில் வெளிப்பட வேண்டும். நம்மைப்பற்றி நாம் கருதும் விதத்திலும் உணரும் விதத்திலும்கூட அது வெளிப்பட வேண்டும். சொல்லப்போனால், எல்லாச் சமயங்களிலும் நாம் சொல்கிற, செய்கிற எல்லாக் காரியங்களிலும் அது பளிச்செனத் தெரிய வேண்டும். நம்முடைய நடத்தை, உடை, அலங்காரம் ஆகியவற்றில் அப்போஸ்தலன் பவுலின் இந்த வார்த்தைகளை மனதில்கொள்ள வேண்டும்: “இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களைத் தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்.” (2 கொ. 6:3) நாம், “நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்க” வேண்டும்.—தீத். 2:9–12.
கடவுளைப்போல் தொடர்ந்து மதிப்பு மரியாதையை வெளிக்காட்டுங்கள்
19, 20. (அ) மற்றவர்களிடம் மதிப்பு மரியாதையோடு நடந்துகொள்வதற்கு ஒரு சிறந்த வழி என்ன? (ஆ) மதிப்பு மரியாதை சம்பந்தமாக நம்முடைய தீர்மானம் என்ன?
19 “கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து” பரலோகத்திற்குச் செல்லும் கிறிஸ்தவர்கள் மதிப்பு மரியாதையை வெளிக்காட்டுகிறார்கள். (2 கொ. 5:20) அவர்களுக்கு உண்மையாய் ஆதரவளிக்கிற “வேறே ஆடுகளும்” கடவுளுடைய ராஜ்யத்தின் மதிப்புமிக்க தூதுவர்களாய் இருக்கிறார்கள். ஒரு ஸ்தானாபதி அல்லது தூதுவர் தன்னுடைய அரசாங்கத்தின் சார்பாக மரியாதையுடன் தைரியமாகப் பேசுவார். அவ்வாறே நாமும் கடவுளுடைய அரசாங்கத்திற்கு ஆதரவாக மரியாதையுடன் தைரியமாகப் பேச வேண்டும். (எபே. 6:19, 20) அதோடு, “நற்காரியங்களைச் சுவிசேஷமாய்” மற்றவர்களுக்குச் சொல்வதே அவர்களுக்கு நாம் மதிப்பு மரியாதை காட்டுவதாக இருக்கும், அல்லவா?—ஏசா. 52:7.
20 கடவுளைப்போல் மதிப்பு மரியாதையுடன் நடந்துகொள்வதன் மூலம் அவரைக் கனப்படுத்த நாம் தீர்மானமாய் இருக்க வேண்டும். (1 பே. 2:12) கடவுளுக்கும் அவருடைய வணக்கத்திற்கும் நம் சகோதர சகோதரிகளுக்கும் ஆழ்ந்த மரியாதையை எப்போதும் காட்டுவோமாக. மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்திருக்கிற யெகோவா, மதிப்பு மரியாதையுடன் நாம் அவரை வணங்குவதைப் பார்த்துச் சந்தோஷப்படுவாராக.
[அடிக்குறிப்பு]
a சங்கீதம் 8-ல் சொல்லப்பட்டுள்ள தாவீதின் வார்த்தைகள் பரிபூரண மனிதரான இயேசு கிறிஸ்துவையும் தீர்க்கதரிசனமாகக் குறிக்கின்றன.—எபி. 2:5-9.
உங்கள் பதில் என்ன?
• யெகோவாவின் மகிமைப் பிரதாபத்தை உணர்ந்துகொள்வது நம்மை என்ன செய்யத் தூண்ட வேண்டும்?
• ஒரு குஷ்டரோகியிடம் இயேசு நடந்துகொண்ட விதத்திலிருந்து மதிப்பு மரியாதை காட்டுவதைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
• மதிப்புக்குரிய என்னென்ன வழிகளில் நாம் யெகோவாவைக் கனப்படுத்தலாம்?
[பக்கம் 12-ன் படம்]
ஆபேலை யெகோவா எவ்வாறு மதிப்புக்குரிய விதத்தில் நடத்தினார்?
[பக்கம் 14-ன் படம்]
ரொட்டியை ஆகாரமாகக் கொடுத்திருப்பதில்கூட யெகோவாவின் மகத்தான செயல் தெளிவாகத் தெரிகிறது
[பக்கம் 15-ன் படம்]
ஒரு குஷ்டரோகியிடம் இயேசு நடந்துகொண்ட விதத்திலிருந்து மதிப்பு மரியாதை காட்டுவது பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
[பக்கம் 16-ன் படம்]
மரியாதைக்குரிய விதத்தில் யெகோவாவை வழிபடுவது அவரைக் கனப்படுத்துகிறது