பாருக்—எரேமியாவின் உண்மையுள்ள காரியதரிசி
“நேரியாவின் குமாரனாகிய பாருக்கை” உங்களுக்குத் தெரியுமா? (எரேமியா 36:4) பைபிளின் நான்கு அதிகாரங்களில் மட்டுமே அவரைப்பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், பைபிள் வாசகர்களுக்கு அவரை நன்றாகவே தெரியும். அவர் எரேமியா தீர்க்கதரிசியின் அந்தரங்க காரியதரிசி மட்டுமல்ல, நெருங்கிய நண்பரும்கூட என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். யூதா ராஜ்யத்தின் கொந்தளிப்பான கடைசி 18 வருடங்களிலும், பொ.ச.மு. 607-ல் பாபிலோனியர்களால் எருசலேம் கொடூரமாய் அழிக்கப்பட்டபோதும், பின்னர் எகிப்துக்கு சென்றபோதும் இவர்கள் இருவரும் சேர்ந்தே இருந்தனர்.
பொ.ச.மு. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு களிமண் முத்திரைகள்a சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் “வேதபாரகரான நேரியாகுவின் [நேரியாவின் எபிரெய பெயர்] மகனான பெரெக்யாகுவுக்கு [பாருக்கின் எபிரெய பெயர்] சொந்தமானது” என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்ததும் பைபிளில் சொல்லப்பட்டுள்ள இந்நபரைப் பற்றி ஆராய்வதற்கு அறிஞர்கள் தூண்டப்பட்டார்கள். யார் இந்த பாருக்? அவருடைய குடும்பப் பின்னணி, கல்வி, பதவி ஆகியவை என்ன? எரேமியாவுக்கு பக்கபலமாக அவர் உறுதியாக நின்றது எதைக் காட்டுகிறது? அவரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? பைபிளையும் சரித்திர தகவல்களையும் ஆராய்வதன் மூலம் பதில்களைத் தேடலாம்.
பின்னணியும் பதவியும்
பாருக், யூதாவிலிருந்த முக்கியமான வேதபாரக குடும்பத்தைச் சேர்ந்தவர் என இன்றுள்ள அறிஞர்கள் அநேகர் நம்புகின்றனர். இந்த முடிவுக்கு வந்ததற்கு நிறைய காரணங்கள் இருப்பதாகச் சொல்கின்றனர். உதாரணமாக, பைபிள் பதிவு பாருக்கை, “சம்பிரதி” என்ற விசேஷ பட்டப்பெயருடன் குறிப்பிடுகிறது. வேறு மொழிபெயர்ப்புகள் அவரை “எழுத்தர்” என்று குறிப்பிடுகின்றன. அவருடைய சகோதரரான செராயா, சிதேக்கியா ராஜாவின் அரசவையில் முக்கிய அதிகாரியாக இருந்ததையும் வேதவசனங்கள் குறிப்பிடுகின்றன.—எரேமியா 36:32; 51:60.
எரேமியாவின் நாளில் இருந்த வேதபாரகர்களைப்பற்றி தொல்லியல் ஆராய்ச்சியாளர் பிலிப் ஜெ. கிங் இவ்வாறு எழுதுகிறார்: “பொ.ச.மு. 7-ம் நூற்றாண்டின் கடைசியிலும் 6-ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் வேதபாரகர்கள், முக்கிய தொழில்பிரிவைச் சேர்ந்தவர்களாக, யூதாவில் பிரதானமானவர்களாக இருந்தார்கள் . . . உயர்ந்த அரச அதிகாரிகளுக்கு இந்தப் பட்டப்பெயர் கொடுக்கப்பட்டிருந்தது.”
எரேமியா 36-ம் அதிகாரத்தில் உள்ள பதிவுகளை நாம் விளக்கமாக கவனிக்கப்போகிறோம். அதிலிருந்து அரசருடைய ஆலோசகர்களுடன் பாருக் தொடர்பு வைத்திருந்தார் என்பதையும், பிரபுவாகவோ அதிகாரியாகவோ இருந்த கெமரியாவின் உணவருந்தும் அறை அல்லது ஆலோசனை மன்றத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி பெற்றிருந்தார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. பைபிள் அறிஞர் ஜேம்ஸ் மியுலன்பர்க் இதற்கான ஒரு காரணத்தைத் தருகிறார்: “வேதபாரகரின் ஆலோசனை மன்றத்திற்குள் பாருக்கால் நுழைய முடிந்தது, ஏனென்றால் அவருக்கு அந்த உரிமையிருந்தது; பொது மக்களுக்கு முன் சுருள் வாசிக்கப்பட்ட இந்த முக்கியமான சமயத்தில் ஒன்றுகூடிவந்த அரசு அதிகாரிகளில் அவரும் ஒருவர். அவர் சக அதிகாரிகளோடுதான் இருந்தார்.”
மேற்கு செமிட்டிக் தபால் முத்திரைகளின் தொகுப்பு என்ற ஆங்கில புத்தகம் பாருக்கின் பதவியைப் பற்றி கூடுதல் தகவலைத் தருகிறது: “பெரெக்யாகுவின் களிமண் முத்திரை மற்ற உயரதிகாரிகளின் களிமண் முத்திரை குவியலோடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இதிலிருந்து பாருக்/பெரெக்யாகு அந்த அதிகாரிகளின் தொகுதியோடுதான் வேலை செய்தார் என்ற முடிவுக்கு வருவது சரியானதே.” நம்மிடம் உள்ள தகவல்களை வைத்துப் பார்க்கையில், பாருக்கும் அவருடைய சகோதரர் செராயாவும் உயர் அதிகாரிகளாக இருந்தார்கள் என்றும் எருசலேம் அழிக்கப்படுவதற்கு முன்னான முக்கிய வருடங்களில் உண்மையுள்ள எரேமியா தீர்க்கதரிசியை ஆதரித்தார்கள் என்றும் தெரிகிறது.
எரேமியாவை வெளிப்படையாக ஆதரிக்கிறார்
காலவரிசைப்படி, சுமார் பொ.ச.மு. 625-ல் நடந்ததைப் பற்றி விவரிக்கும்போது ‘யோயாக்கீமின் நாலாம் வருஷத்தில்’ பாருக்கைப்பற்றி முதன்முறையாக பைபிள் குறிப்பிடுகிறது. இத்தகவல் எரேமியா 36-ம் அதிகாரத்தில் உள்ளது. அந்தச் சமயத்தில் எரேமியா ஏற்கனவே 23 வருடங்கள் தீர்க்கதரிசியாக சேவை செய்திருந்தார்.—எரேமியா 25:1-3; 36:1, 4.
அந்தச் சமயத்தில் யெகோவா எரேமியாவிடம் இவ்வாறு கூறினார்: “நீ ஒரு புஸ்தகச்சுருளை எடுத்து, யோசியாவின் நாட்களிலே நான் உன்னுடனே பேசின நாள் முதற்கொண்டு இந்நாள்மட்டும் இஸ்ரவேலைக் குறித்தும், யூதாவைக் குறித்தும், சகல ஜாதிகளைக் குறித்தும் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் அதிலே எழுது.” அந்த பதிவு மேலுமாக இவ்வாறு குறிப்பிடுகிறது: “அப்பொழுது எரேமியா நேரியாவின் குமாரனாகிய பாருக்கை அழைத்தான்; பாருக்கு என்பவன் கர்த்தர் எரேமியாவுடனே சொல்லிவந்த எல்லா வார்த்தைகளையும் அவன் வாய் சொல்ல . . . எழுதினான்.”—எரேமியா 36:2-4.
பாருக் ஏன் அழைக்கப்பட்டார்? எரேமியா அவரிடம் சொன்னார்: “நான் அடைக்கப்பட்டவன்; நான் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக்கூடாது.” (எரேமியா 36:5) ஆலயத்தில் யெகோவாவின் செய்தி வாசிக்கப்பட வேண்டிய பகுதிக்கு வரக்கூடாதென்று எரேமியாவுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிகிறது. ஒருவேளை, அதற்குமுன் அவர் அறிவித்த செய்திகளால் கோபமடைந்து அதிகாரிகள் அவருக்குத் தடை விதித்திருக்கலாம். (எரேமியா 26:1-9) பாருக் யெகோவாவை உண்மையாக வணங்கினார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆகவே, அவர் “எரேமியா தீர்க்கதரிசி தனக்குக் கற்பித்தபடியெல்லாம்” செய்தார்.—எரேமியா 36:8.
கடந்த 23 வருடங்களாக கொடுக்கப்பட்ட எச்சரிப்பு செய்திகளை பாருக் எழுதி முடிப்பதற்கு காலம் எடுத்தது. அதை ஜனங்களுக்கு அறிவிப்பதற்கு ஏற்ற சமயத்திற்காக எரேமியாவும் காத்துக்கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் பொ.ச.மு. 624, நவம்பரிலோ டிசம்பரிலோ பாருக் “கர்த்தருடைய ஆலயத்து வாசலின் நடைக்கு அருகான . . . கெமரியா என்னும் சம்பிரதியின் அறையிலே, அந்தப் புஸ்தகத்திலுள்ள எரேமியாவின் வார்த்தைகளை ஜனங்கள் எல்லாரும் கேட்க” தைரியமாக வாசித்தார்.—எரேமியா 36:8-10.
கெமரியாவின் மகன் மிகாயா, நடந்தவற்றை தன் தகப்பனுக்கும் எல்லா பிரபுக்களுக்கும் அறிவித்தான்; அவர்கள் அந்தச் சுருளை இரண்டாம் முறை வாசிக்க பாருக்கை அழைத்தார்கள். பதிவு இவ்வாறு சொல்கிறது: “அப்பொழுது அவர்கள் எல்லா வார்த்தைகளையும் கேட்கையில் பயமுற்றவர்களாய் ஒருவரையொருவர் பார்த்து, பாருக்கை நோக்கி: இந்த எல்லா வார்த்தைகளையும் ராஜாவுக்கு நிச்சயமாய் அறிவிப்போம் என்றார்கள். . . . நீயும் எரேமியாவும்போய் ஒளித்துக்கொள்ளுங்கள்; நீங்கள் இருக்கும் இடத்தை ஒருவரும் அறியப்படாது.”—எரேமியா 36:11-19.
எரேமியா சொல்லச் சொல்ல பாருக்கு எழுதிய விவரங்களைக் குறித்து யோயாக்கீம் ராஜா கேள்விப்பட்டபோது, கோபத்தில் அந்தச் சுருளை கிழித்து, நெருப்பில் எறிந்துவிட்டான்; அதோடு, எரேமியாவையும் பாருக்கையும் கைதுசெய்யும்படி தன் ஆட்களுக்குக் கட்டளையிட்டான். அவர்கள் இருவரும் தலைமறைவானார்கள். அந்தச் சமயத்தில், யெகோவாவின் கட்டளைப்படி அந்த சுருளின் நகலை உருவாக்கினார்கள்.—எரேமியா 36:21-32.
இந்த நியமிப்பில் உட்பட்டிருந்த ஆபத்துக்களை பாருக் நன்கு அறிந்திருந்தார் என்பதில் சந்தேகமில்லை. சில வருடங்களுக்கு முன்னால் எரேமியாவுக்கு வந்த மிரட்டல்களைப் பற்றி அவர் நிச்சயம் அறிந்திருப்பார். மேலுமாக, “எரேமியாவின் வார்த்தைகளுக்குச் சரியாக” தீர்க்கதரிசனம் சொல்லி, யோயாக்கீம் ராஜாவால் கொல்லப்பட்ட உரியாவைப்பற்றியும் கேள்விப்பட்டிருப்பார். இருந்தாலும், இந்த நியமிப்பில் எரேமியாவை ஆதரிக்க தன்னுடைய தொழில் திறமையையும், அரசாங்க அதிகாரிகளோடிருந்த நட்பையும் பயன்படுத்த அவர் மனமுள்ளவராயிருந்தார்.—எரேமியா 26:1-9, 20-24.
“பெரிய காரியங்களைத்” தேடாதே
முதல் சுருளை எழுதிய சமயத்தில், பாருக் வருத்தத்தில் ஆழ்ந்து போனார். “எனக்கு ஐயோ! கர்த்தர் என் நோவைச் சஞ்சலத்தால் வர்த்திக்கப்பண்ணினார், என் தவிப்பினால் இளைத்தேன், இளைப்பாறுதலைக் காணாதே போனேன்” என்று புலம்பினார். இப்படிப் புலம்பியதற்குக் காரணம் என்ன?—எரேமியா 45:1-3.
எந்த நேரடியான பதிலும் கொடுக்கப்படவில்லை. ஆனால் பாருக்கின் சூழ்நிலையை சற்று மனக்கண் முன் கொண்டுவாருங்கள். 23 வருடங்களாக இஸ்ரவேல் மற்றும் யூதா மக்களுக்கு அறிவிக்கப்பட்டு வந்த எச்சரிப்பு செய்தியை மறுபடியும் அவர் அறிவித்தபோது அவர்களுடைய விசுவாச துரோகமும் யெகோவாவை அவர்கள் உதாசீனப்படுத்தியதும் தெளிவாக தெரிந்திருக்கும். எருசலேமையும் யூதாவையும் அழித்து, அந்த தேசத்தை 70 வருடங்களுக்கு பாபிலோனுக்கு நாடுகடத்த தாம் எடுத்திருந்த தீர்மானத்தை யெகோவா அதே வருடத்தில்தான் வெளிப்படுத்தினார். ஒருவேளை இந்தத் தகவலும் அந்த சுருளில் இருந்திருக்கலாம்; இதையெல்லாம் பார்த்து பாருக் அதிர்ச்சியடைந்திருப்பார். (எரேமியா 25:1-11) மேலுமாக, இந்த நெருக்கடியான காலகட்டத்தில் எரேமியாவை உறுதியாக ஆதரிப்பது அவருடைய பதவிக்கும் தொழிலுக்கும்கூட உலை வைத்து விடலாம்.
விஷயம் என்னவாக இருந்தாலும், வரப்போகிற நியாயத்தீர்ப்பை மனதில்கொள்ள யெகோவாவே பாருக்குக்கு உதவினார். “நான் கட்டினதையே நான் இடிக்கிறேன்; நான் நாட்டினதையே நான் பிடுங்குகிறேன்; இந்த முழு தேசத்துக்கும் இப்படியே நடக்கும்” என்று யெகோவா கூறினார். அதனால், பாருக்கிற்கு இவ்வாறு அறிவுரை கூறினார்: “நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே.”—எரேமியா 45:4, 5.
இந்த “பெரிய காரியங்கள்” என்னென்ன என்பதை யெகோவா குறிப்பிடவில்லை. ஆனால் அவை சுயநலமான லட்சியங்களா, அந்தஸ்தா, சொத்துக்களா என்பதை பாருக் அறிந்திருப்பார். சீக்கிரத்தில் நடக்கப்போகிற காரியங்களை நினைவில் வைத்து எதார்த்தமாக யோசித்துப் பார்க்கும்படி யெகோவா அவருக்கு அறிவுறுத்தினார்: “இதோ மாம்சமான யாவர்மேலும் தீங்கை வரப் பண்ணுகிறேன், . . . ஆனாலும், நீ போகும் சகல ஸ்தலங்களிலும் உன் பிராணனை உனக்குக் கிடைக்கும் கொள்ளைப்பொருளாகத் தருகிறேன்.” பாருக்கிடமிருந்த விலைமதிக்க முடியாத பொக்கிஷம் அவரது உயிரே. அவர் எங்கே போனாலும் அது காப்பாற்றப்படும் என்று யெகோவா உறுதியளித்தார்.—எரேமியா 45:5.
மேற்குறிப்பிடப்பட்ட இந்த சம்பவங்கள் பொ.ச.மு. 625-624 வரையான காலப்பகுதியில் நிகழ்ந்தன. இவற்றை எரேமியா புத்தகத்தின் 36 மற்றும் 45-ம் அதிகாரங்கள் விளக்குகின்றன. இதன்பிறகு பொ.ச.மு. 607-ல் பாபிலோனியர்கள் எருசலேமையும் யூதாவையும் அழிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களைப் பற்றி சொல்லும்போதுதான் பைபிள் பாருக்கைப் பற்றி மறுபடியும் குறிப்பிடுகிறது. அந்த வருடத்தில் என்ன நடந்தது?
பாருக் மீண்டும் எரேமியாவை ஆதரிக்கிறார்
பாபிலோனியர்கள் எருசலேமை முற்றுகையிட்டிருந்த சந்தர்ப்பத்தில் பாருக்கைப் பற்றி பைபிள் மீண்டும் குறிப்பிடுகிறது. எரேமியா ‘காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருந்தார்.’ அப்போது, அவருடைய பெரிய தகப்பனுடைய மகனுக்குச் சொந்தமாக ஆனதோத்திலிருக்கும் நிலத்தை வாங்கும்படி யெகோவா அவரிடம் சொன்னார்; யூதர்கள் தங்கள் தாயகத்திற்கு திரும்பி வருவார்கள் என்பதற்கு இது அடையாளமாக இருந்தது. நிலம் வாங்குவது தொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் உதவுவதற்கு பாருக் அழைக்கப்பட்டார்.—எரேமியா 32:1, 2, 6, 7.
எரேமியா இவ்வாறு விளக்குகிறார்: ‘நான் பத்திரத்தில் கையெழுத்தையும், முத்திரையையும்போட்டு, சாட்சிகளை வைத்து, வெள்ளியைத் தராசிலே நிறுத்துக்கொடுத்தப்பின்பு . . . முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரத்தையும் திறந்திருக்கிற பிரதியையும் எடுத்து, . . . பாருக்கினிடத்தில் கொடுத்தேன்.’ பின்பு, அந்த கிரயப்பத்திரங்களை ஒரு மண்பானையில் பாதுகாப்பாக வைக்கும்படி அவர் பாருக்குக்கு கட்டளையிட்டார். எரேமியா பத்திரத்தில் ‘கையெழுத்து’ போட்டார் என்பதன் அர்த்தம், அவர் சொல்லச் சொல்ல பாருக் எழுதினார் என்பதே. பாருக் எழுத்தராக இருந்ததால், அவரே எரேமியா சொன்னதை எழுதினார் என சில அறிஞர்கள் நம்புகின்றனர்.—எரேமியா 32:10-14; 36:4, 17, 18; 45:1.
பாருக்கும் எரேமியாவும் அக்காலத்திலிருந்த சட்டமுறைகளைப் பின்பற்றினர். அவற்றில் ஒன்று இரட்டைப் பத்திர முறை. மேற்கு செமிட்டிக் தபால் முத்திரைகளின் தொகுப்பு என்ற புத்தகம் இவ்வாறு விளக்குகிறது: “முதல் பத்திரம் ‘முத்திரையிடப்பட்ட பத்திரம்’ என்றழைக்கப்பட்டது; ஏனெனில், அது சுருட்டப்பட்டு களிமண்ணால் முத்திரையிடப்பட்டது; இது அசல் ஒப்பந்த பத்திரம். . . . இந்த முத்திரையிடப்பட்ட பத்திரத்தின் நகல்தான் ‘திறந்த பத்திரம்’ என்று அழைக்கப்பட்ட இரண்டாவது பத்திரம். இது சாதாரணமாக வாசிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. இப்படியாக, இரண்டு பத்திரங்கள் இருந்தன; அந்த அசல் பத்திரமும் நகல் பத்திரமும் வெவ்வேறு நாணற்புல் சுவடிகளில் எழுதப்பட்டன.” பத்திரங்களை களிமண் பானைகளில் பாதுகாத்து வைக்கும் முறை அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்ததை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.
இறுதியாக, பாபிலோனியர்கள் எருசலேமைக் கைப்பற்றி, தீக்கிரையாக்கி, ஏழைகள் சிலரைத்தவிர மற்றெல்லாரையும் நாடுகடத்தினார்கள். நேபுகாத்நேச்சார் கெதலியாவை ஆளுநராக நியமித்தார். இரண்டு மாதத்திற்குப் பிறகு, யூதர்கள் கெதலியாவைக் கொலை செய்தார்கள். எஞ்சிய யூதர்கள், கடவுளால் தூண்டப்பட்டு எரேமியா கொடுத்த அறிவுரையை மீறி எகிப்துக்குப் போகத் திட்டமிட்டனர்; இந்தச் சந்தர்ப்பத்தில் பாருக்கைப் பற்றி பைபிள் மீண்டும் குறிப்பிடுகிறது.—எரேமியா 39:2, 8; 40:5; 41:1, 2; 42:13-17.
யூத தலைவர்கள் எரேமியாவிடம் இவ்வாறு கூறினார்கள்: “நீ பொய் சொல்லுகிறாய்; எகிப்திலே தங்கும்படிக்கு அங்கே போகாதிருங்கள் என்று சொல்ல, எங்கள் தேவனாகிய கர்த்தர் உன்னை எங்களிடத்துக்கு அனுப்பவில்லை. கல்தேயர் எங்களைக் கொன்றுபோடவும், எங்களைப் பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோகவும், எங்களை அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நேரியாவின் குமாரனாகிய பாருக்குத்தானே உன்னை எங்களுக்கு விரோதமாக ஏவினான்.” (எரேமியா 43:2, 3) பாருக்கின் பேச்சைக் கேட்டுதான் எரேமியா நடக்கிறார் என்று யூத தலைவர்கள் நம்பியதை இந்தக் குற்றச்சாட்டு தெளிவாகக் காட்டுகிறது. பாருக்கின் பதவி, எரேமியாவுடன் அவருக்கிருந்த நீண்டகால நட்பு ஆகியவற்றின் காரணமாக, பாருக் எரேமியாவின் உதவியாளராக மட்டுமின்றி அதற்கு மேலாகவும் செயல்பட்டதாக அவர்கள் நினைத்தார்களா? ஒருவேளை, அப்படி நினைத்திருக்கலாம். அவர்கள் என்ன நினைத்திருந்தாலும்சரி, செய்தி யெகோவாவிடமிருந்தே வந்தது.
தெய்வீக எச்சரிப்புகள் கொடுக்கப்பட்டிருந்தபோதிலும், எஞ்சியிருந்த யூதர்கள் “தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும், நேரியாவின் குமாரனாகிய பாருக்கையும்” கூட்டிக்கொண்டு புறப்பட்டார்கள். “கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாதபடியினாலே, எகிப்து தேசத்துக்குப் போக எத்தனித்து, அதிலுள்ள தக்பானேஸ்மட்டும் போய்ச் சேர்ந்தார்கள்” என்று எரேமியாவின் பதிவு சொல்கிறது. எகிப்தின் எல்லையருகே இருந்த இந்த நகரம் நைல் நதியின் கிழக்குக் கழிமுகப்பகுதியில் அமைந்திருந்தது, சீனாய் பகுதியை ஒட்டி அமைந்திருந்தது. இந்தச் சம்பவத்திற்கு பிறகு, பாருக்கைப் பற்றி பைபிள் எதுவும் குறிப்பிடவில்லை.—எரேமியா 43:5-7.
பாருக்கிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
பாருக்கிடமிருந்து மதிப்புமிக்க பல பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், தன்னுடைய தொழில் திறமைகளையும் தொடர்புகளையும் யெகோவாவின் சேவைக்காக பயன்படுத்த பாருக் மனமுள்ளவராக இருந்தார்; இதுவே நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் தலைச்சிறந்த பாடம். இன்றுள்ள யெகோவாவின் சாட்சிகளான ஆண்களும் பெண்களும் இதே மனப்பான்மையை காட்டுகிறார்கள்; தங்களுடைய திறமைகளை பெத்தேல் சேவை, கட்டுமானப்பணி போன்றவற்றில் பயன்படுத்துகிறார்கள். பாருக் வெளிக்காட்டிய அதே மனப்பான்மையை நீங்கள் எப்படிக் காட்டலாம்?
யூதாவின் கடைசி நாட்களின்போது பாருக் வாழ்ந்தார். தனிப்பட்ட விதமாக “பெரிய காரியங்களை” தேடுவதற்கான காலம் அதுவல்ல என்று அவருக்கு நினைப்பூட்டப்பட்டது; அதற்கு அவர் கீழ்ப்படிந்தார் என்று சொல்லலாம். அதனால்தான், அவருடைய உயிர் பாதுகாக்கப்பட்டது. நாமும் சாத்தானுடைய பொல்லாத உலகின் கடைசி நாட்களில் வாழ்வதால் இந்த ஆலோசனையை கடைப்பிடிப்பதே ஞானமான செயலாகும். பாருக்கிற்கு கொடுத்த அதே வாக்குறுதியை யெகோவா நமக்கும் கொடுத்திருக்கிறார். ஆம், நம்முடைய உயிரும் காப்பாற்றப்படும் என்று உறுதியளித்திருக்கிறார். இப்படிப்பட்ட நினைப்பூட்டுதல்களுக்கு பாருக் கீழ்ப்படிந்தார். நாம் கீழ்ப்படிவோமா?
இந்தப் பதிவிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நடைமுறையான பாடமும் இருக்கிறது. எரேமியாவும் அவருடைய பெரியப்பா மகனும் உறவினர்களாக இருந்தாலும்கூட, அவர்களுடைய வியாபார விஷயத்தில் தேவையான சட்டமுறைகளைப் பின்பற்ற பாருக் அவர்களுக்கு உதவினார். இது, தங்களுடைய சக வணக்கத்தாரோடு வியாபாரத்தொடர்பு வைத்துக்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு வேதப்பூர்வ முன்மாதிரியாக இருக்கிறது. வியாபார ஒப்பந்தங்களை எழுத்துவடிவில் வைக்கும் இந்த உதாரணத்தைப் பின்பற்றுவது வேதப்பூர்வமானது, நடைமுறையானது, அன்பானதும்கூட.
பைபிளில் பாருக்கைப்பற்றிய குறிப்புகள் குறைவாகவே இருந்தாலும், அவரைக் குறித்து சிந்திப்பது இன்றுள்ள கிறிஸ்தவர்கள் எல்லாருக்குமே பிரயோஜனமளிக்கும். எரேமியாவின் உண்மையுள்ள காரியதரிசியான பாருக்கின் சிறந்த முன்மாதிரியை நீங்கள் பின்பற்றுவீர்களா?
[அடிக்குறிப்பு]
a களிமண் முத்திரை என்பது ஒரு முக்கியமான பத்திரத்தைக் கட்டியிருக்கும் நூலை முத்திரைபோடப் பயன்படுத்தப்பட்ட ஒரு சிறிய களிமண் உருண்டையாகும். அந்த பத்திரத்தின் சொந்தக்காரர் அல்லது அனுப்புநரின் பெயர் அந்தக் களிமண்ணில் பதிக்கப்பட்டிருந்தது.
[பக்கம் 16-ன் படம்]
பாருக்கின் களிமண் முத்திரை
[படத்திற்கான நன்றி]
களிமண் முத்திரை: Courtesy of Israel Museum, Jerusalem