கீழ்ப்படிவோரை யெகோவா ஆசீர்வதித்து பாதுகாக்கிறார்
“எவர் எனக்குச் செவிகொடுக்கின்றாரோ அவர் தீங்கின்றி வாழ்வார்; தீமை வருகையிலும் அச்சமின்றி அவர் மன அமைதியுடன் இருப்பார்.”—நீதிமொழிகள் 1:33, பொது மொழிபெயர்ப்பு.
1, 2. கடவுளுக்கு கீழ்ப்படிவது ஏன் முக்கியம்? விளக்குங்கள்.
புசுபுசுவென்ற மஞ்சள் நிற கோழிக்குஞ்சுகள் புல்தரையில் மும்முரமாக உணவை கொத்திக் கொண்டிருக்கின்றன. ஆகாயத்தில் ஒரு பருந்து வட்டமிடுவது அவற்றிற்கு சுத்தமாக தெரிவதில்லை. திடீரென தாய் கோழி பயத்தில் உரக்க கொக்கரித்து, எச்சரிப்பு குரலெழுப்பி தன் செட்டைகளை விரிக்கிறது. குஞ்சுகள் ஓடி வந்து கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அதன் செட்டைகளுக்குள் பாதுகாப்பாக ஒளிந்து கொள்கின்றன. இனி எப்படி அந்தப் பருந்து தாக்க முடியும்!a இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன? கீழ்ப்படிதலினால் உயிர் பாதுகாக்கப்படுகிறது!
2 இந்தப் பாடம் இன்றைய கிறிஸ்தவர்களுக்கு விசேஷித்த முக்கியத்துவம் உடையது; ஏனெனில் கடவுளுடைய ஜனங்களை விழுங்குவதற்கு சாத்தான் முழுமூச்சுடன் முயற்சி செய்கிறான். (வெளிப்படுத்துதல் 12:9, 12, 17) யெகோவாவுடன் நமக்கு இருக்கும் உறவை கெடுப்பதன்மூலம் அவருடைய தயவையும் நித்திய ஜீவ நம்பிக்கையையும் இழக்கச் செய்வதே அவனுடைய இலக்கு. (1 பேதுரு 5:8) என்றாலும், கடவுளுடன் நெருங்கியிருந்து, அவர் தமது வார்த்தை வாயிலாகவும் அமைப்பு வாயிலாகவும் தரும் வழிநடத்துதலை உடனுக்குடன் ஏற்றுக்கொள்வோமானால் அவர் நம்மைக் காப்பது நிச்சயம். “அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்” என சங்கீதக்காரன் எழுதினார்.—சங்கீதம் 91:4.
கீழ்ப்படியாத ஜனம் இரையாகிறது
3. இஸ்ரவேலர் மீண்டும் மீண்டும் கீழ்ப்படியாமல் போனதால் என்ன நேர்ந்தது?
3 இஸ்ரவேல் ஜனம் யெகோவாவுக்கு கீழ்ப்படிந்தபோது, அவர்களை அவர் கண்ணும் கருத்துமாக காத்து வந்தார்; அதனால் அவர்கள் அநேக நன்மைகளை அனுபவித்தனர். ஆனாலும், பலமுறை அந்த ஜனங்கள் தங்களை உண்டாக்கினவரை விட்டுவிட்டு மரமும் கல்லுமான கடவுட்களை—“பிரயோஜனமற்றதும் ரட்சிக்கமாட்டாததுமாயிருக்கிற வீணானவைகளை”—வணங்கினார்கள். (1 சாமுவேல் 12:21) பல நூற்றாண்டுகளுக்கு இவ்வாறு கலகம் செய்ததால், பிற்பாடு அந்த தேசம் முழுவதுமே சீர்திருத்த முடியாத அளவுக்கு விசுவாச துரோகத்திற்குள் மூழ்கிவிட்டது. ஆகவே இயேசு வருத்தத்துடன், “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்” என கூறினார்.—மத்தேயு 23:37, 38.
4. எருசலேமை யெகோவா புறக்கணித்தது பொ.ச. 70-ல் எப்படி தெளிவானது?
4 சீர்கெட்ட இஸ்ரவேலை யெகோவா புறக்கணித்தது பொ.ச. 70-ல் வருந்தத்தக்க விதத்தில் தெளிவானது. அந்த வருடத்தில் ரோம சேனைகள் கழுகின் உருவம் தீட்டப்பட்ட போர்க்கொடிகளை உயர்த்திப் பிடித்தவாறு எருசலேமைக் கொலைக் களமாக்குவதற்காக அதன்மீது பாய்ந்து வந்தன. பஸ்கா ஆசரிப்பதற்காக அந்த நகரத்திற்கு ஜனங்கள் திரண்டு வந்திருந்த சமயம் அது. அவர்கள் பலிகள் பல செலுத்தியும் கடவுளுடைய தயவை பெற முடியாமல் போய்விட்டது. கீழ்ப்படியாமல் போன சவுல் ராஜாவுக்கு சாமுவேல் சொன்ன இந்த வார்த்தைகளின் வருந்தத்தக்க நினைப்பூட்டுதலாக அது இருந்தது: “கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.”—1 சாமுவேல் 15:22.
5. எப்படிப்பட்ட கீழ்ப்படிதலை யெகோவா எதிர்பார்க்கிறார், அத்தகைய கீழ்ப்படிதல் சாத்தியமே என்பதை நாம் எப்படி அறிந்துகொள்கிறோம்?
5 கீழ்ப்படிதல் மிக அவசியமானதென யெகோவா கருதினாலும் அபூரண மனிதரின் பலவீனங்களை அவர் நன்கு அறிந்திருக்கிறார். (சங்கீதம் 130:3, 4) விசுவாசம், அன்பு, அவருக்கு பிரியமல்லாததை செய்து விடுவோமோ என்ற ஆரோக்கியமான பயம் ஆகியவற்றின் அடிப்படையிலான நேர்மையான இருதயத்தையும் கீழ்ப்படிதலையுமே அவர் எதிர்பார்க்கிறார். (உபாகமம் 10:12, 13; நீதிமொழிகள் 16:6; ஏசாயா 43:10; மீகா 6:8; ரோமர் 6:17) அப்படிப்பட்ட கீழ்ப்படிதல் சாத்தியமே என்பதை ‘கிறிஸ்தவத்திற்கு முன் வாழ்ந்த மேகம் போன்ற திரளான சாட்சிகள்’ நிரூபித்து காட்டினார்கள்; படுபயங்கரமான சோதனைகளை, ஏன் மரணத்தையே எதிர்ப்பட்டபோதிலும்கூட அவர்கள் தங்கள் உத்தமத்தைக் காத்துக்கொண்டதன் மூலம் அதை மெய்ப்பித்து காட்டினார்கள். (எபிரெயர் 11:36, 37; 12:1) இவர்கள் உண்மையிலேயே யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்தி இருக்கிறார்கள்! (நீதிமொழிகள் 27:11) சிலரோ ஆரம்பத்தில் உண்மையுள்ளவர்களாக இருந்தாலும், தொடர்ந்து கீழ்ப்படிந்திருக்க தவறிவிட்டார்கள். அவர்களில் ஒருவர்தான் பூர்வ யூதாவில் ராஜாவாக இருந்த யோவாஸ்.
கெட்ட சகவாசத்தால் கெட்டுப்போன ராஜா
6, 7. யோய்தா உயிரோடிருந்த காலத்தில் யோவாஸ் ராஜா எப்படிப்பட்டவராக இருந்தார்?
6 ராஜாவாகிய யோவாஸ் குழந்தையாக இருந்தபோது கொலை செய்யப்படுவதிலிருந்து மயிரிழையில் தப்பினார். யோவாஸுக்கு ஏழு வயதானபோது, ஒளித்து வைக்கப்பட்டிருந்த அவரை பிரதான ஆசாரியராகிய யோய்தா வெளியே கொண்டுவந்து ராஜாவாக முடிசூட்டினார். கடவுள் பயமுள்ள யோய்தா, யோவாஸுக்கு தகப்பனாகவும் ஆலோசகராகவும் செயல்பட்டதால், அந்த இளம் ராஜா, ‘ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தார்.’—2 நாளாகமம் 22:10–23:1, 11; 24:1, 2.
7 யெகோவாவின் ஆலயத்தை புதுப்பித்தது யோவாஸ் செய்த நற்செயல்களில் ஒன்று; அது ‘யோவாஸின் இருதயத்திற்கு விருப்பமானதாக’ (NW) இருந்தது. ஆலயத்தை பழுதுபார்க்கும் செலவுக்காக ‘மோசே கட்டளையிட்டபடி’ யூதாவிடமும் எருசலேமிடமுமிருந்து வரியை வசூலிக்கும்படி அவர் பிரதான ஆசாரியராகிய யோய்தாவுக்கு நினைப்பூட்டினார். கடவுளுடைய நியாயப்பிரமாணத்தைப் படித்து அதற்கு கீழ்ப்படியும்படி இந்த இளம் ராஜாவுக்கு யோய்தா தந்த ஊக்குவிப்பு பலனளித்ததாக தெரிகிறது. அதன் விளைவாக, ஆலயத்தை பழுதுபார்க்கும் வேலையும் ஆலய பணிமுட்டுகளை உண்டுபண்ணும் வேலையும் விரைவில் முடிவடைந்தன.—2 நாளாகமம் 24:4, 6, 13, 14; உபாகமம் 17:18, 20.
8. (அ) யோவாஸின் ஆன்மீக வீழ்ச்சிக்கு எது முக்கிய காரணமாக இருந்தது? (ஆ) ராஜாவின் கீழ்ப்படியாமை முடிவில் எதை செய்வதற்கு அவரை வழிநடத்தியது?
8 யோவாஸ், கடைசி வரை யெகோவாவுக்கு கீழ்ப்படிந்து நடக்கவில்லை என்பதுதான் வேதனையான விஷயம். ஏன்? கடவுளுடைய வார்த்தை சொல்வதாவது: “யோய்தா மரணமடைந்த பின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவைப் பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்களுக்குச் செவிகொடுத்தான். அப்படியே அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் சேவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினிமித்தம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது.” யூதாவிலுள்ள பிரபுக்களின் கெட்ட செல்வாக்கினால் அந்த ராஜா கடவுளுடைய தீர்க்கதரிசிகளுக்கும் செவிசாய்க்காமல் போனார்; அந்தத் தீர்க்கதரிசிகளில் ஒருவரே யோய்தாவின் குமாரன் சகரியா. இவர், கீழ்ப்படிதலைக் காட்டாத யோவாஸையும் மற்ற ஜனங்களையும் தைரியமாக கடிந்துகொண்டார். யோவாஸோ மனந்திரும்புவதற்குப் பதிலாக, சகரியாவை கல்லெறிந்து கொல்லும்படி கட்டளையிட்டார். யோவாஸ் எப்பேர்ப்பட்ட கல்நெஞ்சக்காரராக, கீழ்ப்படியாதவராக மாறிவிட்டார்! கெட்ட கூட்டாளிகளின் செல்வாக்கிற்கு அவர் இடங்கொடுத்ததாலேயே இந்நிலை!—2 நாளாகமம் 24:17-22; 1 கொரிந்தியர் 15:33.
9. யோவாஸுக்கும் பிரபுக்களுக்கும் கடைசியாக நேரிட்டது, கீழ்ப்படியாமை எனும் மடமையை எப்படி வலியுறுத்துகிறது?
9 யெகோவாவை புறக்கணித்ததால் யோவாஸுக்கும் அவருடைய கெட்ட கூட்டாளிகளான பிரபுக்களுக்கும் என்ன சம்பவித்தது? ‘சிறு கூட்டமாய் வந்த’ சீரியாவின் சேனை யூதாவின் மீது படையெடுத்து ‘ஜனத்திலிருக்கிற பிரபுக்களையெல்லாம் அழித்துப்போட்டது.’ படையெடுத்து வந்தவர்கள் ராஜாவின் உடைமைகளையும் பரிசுத்த ஸ்தலத்தின் பொன்னையும் வெள்ளியையும்கூட ஒப்படைக்கும்படி அவரை பலவந்தப்படுத்தினார்கள். யோவாஸ் உயிர்பிழைத்தாலும், அவர் மனமுடைந்தவராயும் நோய்வாய்ப்பட்டவருமானார். அதற்குப்பின் சீக்கிரத்தில் அவருடைய ஊழியக்காரரிலேயே சிலர் சதித்திட்டம் தீட்டி அவரை கொன்றுபோட்டனர். (2 நாளாகமம் 24:23-25; 2 இராஜாக்கள் 12:17, 18) “உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், . . . சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்” என்று இஸ்ரவேலுக்கு சொல்லப்பட்ட யெகோவாவின் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை!—உபாகமம் 28:15.
கீழ்ப்படிதலினால் பாதுகாக்கப்பட்ட ஒரு காரியதரிசி
10, 11. (அ) பாருக்கிற்கு யெகோவா கொடுத்த ஆலோசனையை சிந்தித்துப் பார்ப்பது ஏன் பயனுள்ளது? (ஆ) பாருக்கிற்கு யெகோவா என்ன ஆலோசனை கொடுத்தார்?
10 சிலசமயங்களில், ஊழியத்தில் நாம் சந்திக்கும் ஆட்களில் அநேகர் நற்செய்திக்கு எவ்வித அக்கறையும் காட்டாதபோது நீங்கள் சோர்ந்து போகிறீர்களா? செல்வந்தர்களையும் அவர்களுடைய சிற்றின்ப வாழ்க்கை பாணிகளையும் கண்டு அவ்வப்போது கொஞ்சமேனும் பொறாமை கொள்கிறீர்களா? அப்படியானால், எரேமியாவின் காரியதரிசியான பாருக்கையும் அவருக்கு யெகோவா கொடுத்த அன்பான ஆலோசனையையும் சிந்தித்துப் பாருங்கள்.
11 தீர்க்கதரிசன செய்தி ஒன்றை பாருக் எழுதிக்கொண்டிருக்கையில் யெகோவா அவரிடமே தம் கவனத்தை திருப்பினார். ஏன்? ஏனெனில் பாருக் தன் சூழ்நிலையைக் குறித்து புலம்ப ஆரம்பித்திருந்தார்; அதோடு கடவுளுக்கு சேவை செய்யும் பெரும் பாக்கியத்தை பெற்றிருந்தும், அதைக் காட்டிலும் சிறந்த வேறொன்றைப் பெற ஆசைப்பட்டார். பாருக்கின் மனநிலையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை யெகோவா கவனித்து, “நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே; இதோ மாம்சமான யாவர்மேலும் தீங்கை வரப்பண்ணுகிறேன் . . . ஆனாலும், நீ போகும் சகல ஸ்தலங்களிலும் உன் பிராணனை உனக்குக் கிடைக்கும் கொள்ளைப் பொருளாகத் தருகிறேன்” என்ற தெளிவான, அதேசமயத்தில் தயவான ஆலோசனையை அவருக்குக் கொடுத்தார்.—எரேமியா 36:4; 45:5.
12. இன்று இந்த உலகில் “பெரிய காரியங்களைத்” தேடுவதை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?
12 எரேமியாவோடு சேர்ந்து உண்மையுடனும் தைரியத்துடனும் சேவித்திருந்த பாருக்கிடம் யெகோவா சொன்ன வார்த்தைகள், அந்த நல்ல மனிதரிடம் அவர் காண்பித்த ஆழ்ந்த அக்கறையை காட்டுகிறதல்லவா? அவ்வாறே இன்றும், இந்த உலகில் இக்கரைக்கு அக்கரை பச்சையாக தோன்றும் காரியங்களிடம் மனம் மயங்கி செல்வோரிடம் யெகோவா ஆழ்ந்த அக்கறை காட்டுகிறார். பாருக்கைப் போல அவர்களில் அநேகர், முதிர்ச்சியுள்ள ஆவிக்குரிய சகோதரர்களின் அன்பான அறிவுரைகளுக்கு செவிசாய்த்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். (லூக்கா 15:4-7) ஆனால், இந்த உலகில் தங்களுக்கு “பெரிய காரியங்களைத்” தேடிக்கொள்கிறவர்களுக்கு எந்த எதிர்காலமும் இல்லை என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்வோமாக. அப்படிப்பட்டவர்கள் மெய்யான மகிழ்ச்சியை கண்டடையாமல் போவார்கள்; அதைவிட மோசமாக, விரைவில் இந்த உலகமும் அதன் தன்னல இச்சைகளும் அழிகையில் அவர்களும் சேர்ந்து அழிவார்கள்.—மத்தேயு 6:19, 20; 1 யோவான் 2:15-17.
13. பாருக்கைப் பற்றிய பதிவு மனத்தாழ்மை சம்பந்தமாக என்ன பாடத்தை நமக்கு கற்பிக்கிறது?
13 பாருக்கைப் பற்றிய பதிவு மனத்தாழ்மை என்ற சிறந்த பாடத்தையும் நமக்கு கற்பிக்கிறது. பாருக்கிற்கு யெகோவா நேரடியாக ஆலோசனை கொடுக்கவில்லை, மாறாக எரேமியாவின் மூலமாக ஆலோசனை கொடுத்தார்; எரேமியாவின் அபூரணங்களும் குறைநிறைகளும் பாருக்கிற்கு நன்றாகவே தெரிந்திருக்கலாம். (எரேமியா 45:1, 2) ஆனாலும், பாருக் பெருமைக்கு இடங்கொடுக்கவில்லை; அறிவுரை உண்மையில் யெகோவாவிடமிருந்தே வந்ததை தாழ்மையுடன் புரிந்துகொண்டார். (2 நாளாகமம் 26:3, 4, 16; நீதிமொழிகள் 18:12; 19:20) ஆகவே, ‘தவறான அடியெடுத்து வைத்திருப்பதை நாம் அறியுமுன்னே’ தேவையான ஆலோசனையை கடவுளுடைய வார்த்தையிலிருந்து பெறுவோமானால், பாருக்கின் முதிர்ச்சியையும் ஆன்மீக புரிந்துகொள்ளுதலையும் மனத்தாழ்மையையும் பின்பற்றுவோமாக.—கலாத்தியர் 6:1, NW.
14. நம்மை நடத்துகிறவர்களுக்கு கீழ்ப்படிவது ஏன் ஞானமானது?
14 நாம் அப்படிப்பட்ட தாழ்மையான மனப்பான்மையைக் காட்டும்போது அது ஆலோசனை கொடுப்பவருக்கும் கைகொடுக்கிறது. “உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே” என எபிரெயர் 13:17 கூறுகிறது. மேய்ப்பு வேலையின் இந்த கடினமான அம்சத்தைச் செய்வதற்கு தேவையான தைரியத்தையும் ஞானத்தையும் சாதுரியத்தையும் தரும்படி மூப்பர்கள் எவ்வளவு அடிக்கடி உருக்கமாக யெகோவாவிடம் ஜெபம் செய்கிறார்கள்! ‘இப்படிப்பட்டவர்களை அங்கிகாரம் பண்ணுவோமாக.’—1 கொரிந்தியர் 16:18.
15. (அ) பாருக் மீது நம்பிக்கை வைத்திருந்ததை எரேமியா எப்படி மெய்ப்பித்துக் காட்டினார்? (ஆ) தாழ்மையோடு கீழ்ப்படிந்ததால் பாருக் எப்படி பலனளிக்கப்பட்டார்?
15 பாருக் தன் சிந்தையை மாற்றிக்கொண்டார் என்பதில் சந்தேகமில்லை; எரேமியா அடுத்ததாக அவருக்கு மிகவும் கடினமான நியமிப்பைக் கொடுத்ததிலிருந்து இது தெளிவாகிறது. அந்நியமிப்பின்படி பாருக், எரேமியா சொல்லச் சொல்ல தான் எழுதிய நியாயத்தீர்ப்பின் செய்தியை ஆலயத்திற்குச் சென்று சப்தமாக வாசிக்க வேண்டியிருந்தது. பாருக் கீழ்ப்படிந்தாரா? ஆம், “எரேமியா தீர்க்கதரிசி தனக்குக் கற்பித்தபடியெல்லாம்” அவர் செய்தார். சொல்லப்போனால், அந்த செய்தியை எருசலேமிலுள்ள பிரபுக்களுக்கு முன்பாகவும் வாசித்தார், அதற்கு நிச்சயமாகவே அதிக தைரியம் தேவைப்பட்டது. (எரேமியா 36:1-6, 8, 14, 15) சுமார் 18 வருடங்களுக்குப் பின்பு, நகரம் பாபிலோனியரின் கையில் வீழ்ந்தது; யெகோவாவின் எச்சரிப்புக்கு பாருக் செவிசாய்த்து, “பெரிய காரியங்களைத்” தேடுவதை நிறுத்தியதால், அந்த சமயத்தில் அவருடைய உயிர் பாதுகாக்கப்பட்டது. அதற்காக அவர் எவ்வளவு நன்றியுள்ளவராய் இருந்திருப்பார் என்பதை கற்பனை செய்து பாருங்கள்!—எரேமியா 39:1, 2, 11, 12; 43:5.
முற்றுகையின்போது கீழ்ப்படிந்தவர்கள் காப்பாற்றப்பட்டனர்
16. பொ.ச.மு. 607-ல் பாபிலோனியர் முற்றுகையிட்ட சமயத்தில் எருசலேமிலிருந்த யூதர்களுக்கு யெகோவா எப்படி இரக்கம் காட்டினார்?
16 பொ.ச.மு. 607-ல் எருசலேமுக்கு அழிவு வந்தபோது, கீழ்ப்படிந்த ஜனங்களுக்கு கடவுள் இரக்கத்தை காட்டியது மீண்டும் தெளிவானது. முற்றுகை உச்சக்கட்டத்தை எட்டியபோது யெகோவா யூதர்களிடத்தில், “இதோ, நான் உங்கள் முன்னே ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன் . . . இந்த நகரத்திலே தரிக்கிறவன் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளை நோயாலும் சாவான்; உங்களை முற்றிக்கை போடும் கல்தேயர் வசமாய்ப் புறப்பட்டுப் போய்விடுகிறவனோ பிழைப்பான்; அவன் பிராணன் அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப் போல் இருக்கும்” என்று சொன்னார். (எரேமியா 21:8, 9) எருசலேம் குடிமக்கள் அழிவுக்கு பாத்திரராக இருந்தபோதிலும்—ஆபத்து நெருங்கி வந்த அந்த கடைசி நேரத்திலும்கூட—கீழ்ப்படிந்தவர்களுக்கு யெகோவா இரக்கம் காட்டினார்.b
17. (அ) ‘கல்தேயரிடம் சரணடையும்படி’ முற்றுகையின் கீழிருந்த யூதர்களிடம் சொல்லுமாறு எரேமியாவுக்கு யெகோவா கட்டளையிட்ட போது என்ன இரண்டு காரணங்கள் அவருடைய கீழ்ப்படிதலை சோதித்தன? (ஆ) தைரியமாக கீழ்ப்படிவதற்கு எரேமியா வைத்த முன்மாதிரியிலிருந்து நாம் எப்படி நன்மை அடையலாம்?
17 யூதர்களை சரணடைய சொல்வது எரேமியாவின் கீழ்ப்படிதலுக்கும் ஒரு சோதனையாக இருந்ததில் சந்தேகமில்லை. அவர் கடவுளுடைய பெயரில் பக்தி வைராக்கியமாய் இருந்ததே அதற்கு ஒரு காரணம். எதிரிகள் தங்கள் வெற்றிக்குரிய புகழை உயிரற்ற விக்கிரகங்களுக்கு சமர்ப்பிப்பதன் மூலமாக யெகோவாவின் பெயருக்கு நிந்தை ஏற்படுத்துவதை அவர் விரும்பவில்லை. (எரேமியா 50:2, 11; புலம்பல் 2:16) அதுமட்டுமல்லாமல், மக்களை சரணடைய சொல்வது தன் உயிருக்கே உலை வைக்கலாம் என்பதையும் எரேமியா அறிந்திருந்தார். ஏனென்றால் அநேகர் அவருடைய வார்த்தைகளை தேசதுரோக பேச்சாகவே எடுத்துக்கொள்வர் என அவருக்கு தெரியும். ஆனாலும் அவர் பயந்து பின்வாங்கவில்லை, கீழ்ப்படிதலோடு யெகோவாவின் நியாயத்தீர்ப்பு செய்திகளை அறிவித்தார். (எரேமியா 38:4, 17, 18) எரேமியாவைப் போல நாமும் ஜனங்கள் விரும்பாத செய்தியை அறிவிக்கிறோம். இதே செய்தியை அறிவித்ததால்தான் இயேசுவும் இகழப்பட்டார். (ஏசாயா 53:3; மத்தேயு 24:9) ஆகவே, நாம் ‘மனுஷருக்குப் பயப்படும்’ பயமின்றி இருப்போமாக. அதேசமயத்தில் எரேமியாவைப் போல யெகோவாவில் முழு நம்பிக்கை வைத்து தைரியமாக அவருக்குக் கீழ்ப்படிவோமாக.—நீதிமொழிகள் 29:25.
கோகுவின் தாக்குதலின்போது கீழ்ப்படிதல்
18. தங்களுடைய கீழ்ப்படிதலினால் யெகோவாவின் ஊழியர்கள் எதிர்காலத்தில் என்ன சோதனைகளை எதிர்ப்படுவர்?
18 விரைவில், சாத்தானின் இந்த பொல்லாத ஒழுங்குமுறை முழுவதும் இதுவரை சம்பவித்திராத ‘மிகுந்த உபத்திரவத்தில்’ துடைத்தழிக்கப்படும். (மத்தேயு 24:21) அதற்கு முன்பும் அந்த சமயத்திலும் கடவுளுடைய ஜனங்கள் தங்கள் விசுவாசத்தின் நிமித்தமும் கீழ்ப்படிதலின் நிமித்தமும் கடும் சோதனைகளை எதிர்ப்படுவர். உதாரணமாக, “மாகோகு தேசத்தானான கோகு” என்ற நிலையில் சாத்தான் யெகோவாவின் ஊழியர்களை முழுமூச்சாக தாக்குவான்; ‘தேசத்தை மூடும் கார்மேகத்தைப் போல்’ ‘திரளான சேனையை’ அவன் தயார்படுத்துவான். (எசேக்கியேல் 38:2, 14-16) ஆயுதமற்றவர்களும் எண்ணிக்கையில் குறைந்தோருமான யெகோவாவின் ஜனங்கள் அவருடைய ‘செட்டைகளில்,’ அதாவது கீழ்ப்படிவோரை காப்பதற்காக அவர் விரிக்கும் செட்டைகளில் அடைக்கலம் காண்பர்.
19, 20. (அ) சிவந்த சமுத்திரத்தில் இருந்தபோது இஸ்ரவேலர் கீழ்ப்படிதலை காண்பிப்பது ஏன் அதிக முக்கியமாக இருந்தது? (ஆ) சிவந்த சமுத்திரத்தைப் பற்றிய பதிவை ஜெபத்தோடு தியானிப்பது இன்று நமக்கு எப்படி நன்மை பயக்கலாம்?
19 இந்த சூழ்நிலை, இஸ்ரவேலர் எகிப்தை விட்டு வெளியேறியதை நமக்கு நினைப்பூட்டுகிறது. எகிப்தியரை பத்து வாதைகளால் வாதித்த பின்பு, யெகோவா தம் ஜனங்களை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்திச் சென்றார். அவர் மிகக் குறைந்த தூர பாதை வழியாக அல்ல, சிவந்த சமுத்திரத்துக்கு அவர்களை வழிநடத்தினார்; விரோதிகளால் எளிதில் தாக்கப்படுவதற்கு ஏற்ற இடமாக அது இருந்தது. இராணுவ கண்ணோட்டத்தில் பார்த்தால் அது ஓர் அழிவுக்குரிய பயணமாகவே தெரிந்தது. அந்தச் சூழ்நிலையில் நீங்கள் இருந்திருந்தால், வாக்குப்பண்ணப்பட்ட தேசம் வேறொரு திக்கில் இருப்பதை அறிந்தும், மோசே மூலமாக யெகோவா கொடுத்த வார்த்தைக்கு கீழ்ப்படிந்து முழு நம்பிக்கையுடன் சிவந்த சமுத்திரத்தை நோக்கி நடந்து சென்றிருப்பீர்களா?—யாத்திராகமம் 14:1-4.
20 யாத்திராகமம் 14-ம் அதிகாரத்தை வாசிக்கும்போது, யெகோவா தம் பிரமிக்கத்தக்க வல்லமையைக் காண்பித்து தம் ஜனங்களை விடுவித்திருப்பதை நாம் பார்க்கிறோம். இப்பதிவுகளை படிப்பதற்கும் தியானிப்பதற்கும் நேரம் எடுத்துக்கொள்கையில் அவை எந்தளவுக்கு நம் விசுவாசத்தை பலப்படுத்துகின்றன! (2 பேதுரு 2:9) பலமான விசுவாசமோ, யெகோவாவுக்கு கீழ்ப்படிய நம்மை ஊக்குவிக்கிறது; அவர் எதிர்பார்க்கிற காரியங்கள் மனிதரின் நியாயமான சிந்தனைக்கு முரணாக தோன்றினாலும் அவருக்குக் கீழ்ப்படிய ஊக்குவிக்கின்றன. (நீதிமொழிகள் 3:5, 6) ஆகவே, ‘ஊக்கமான பைபிள் படிப்பு, ஜெபம், தியானம், கடவுளுடைய ஜனங்களுடன் தவறாமல் கூடிவருதல் போன்றவற்றின் வாயிலாக என் விசுவாசத்தை பலப்படுத்த நான் உழைக்கிறேனா?’ என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.—எபிரெயர் 10:24, 25; 12:1-3.
கீழ்ப்படிதல் நம்பிக்கையை அளிக்கிறது
21. யெகோவாவுக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு கிடைக்கும் தற்கால, வருங்கால ஆசீர்வாதங்கள் யாவை?
21 யெகோவாவுக்கு கீழ்ப்படிகிறவர்கள், நீதிமொழிகள் 1:33-ன் நிறைவேற்றத்தை தங்கள் வாழ்க்கையில் இப்போதே அனுபவித்து வருகிறார்கள். “எவர் [கீழ்ப்படிதலுடன்] எனக்குச் செவிகொடுக்கின்றாரோ அவர் தீங்கின்றி வாழ்வார்; தீமை வருகையிலும் அச்சமின்றி அவர் மன அமைதியுடன் இருப்பார்” என அந்த வசனம் கூறுகிறது. வரப்போகும் யெகோவாவுடைய பழிவாங்கும் நாளின்போது இந்த ஆறுதலளிக்கும் வார்த்தைகள் எவ்வளவு அருமையாக பொருந்தும்! சொல்லப்போனால், “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்” என்று இயேசு தம் சீஷர்களிடம் சொன்னார். (லூக்கா 21:28) கடவுளுக்கு கீழ்ப்படிகிறவர்கள் மட்டுமே இந்த வார்த்தைகளை திடநம்பிக்கையுடன் கவனத்தில் எடுத்துக்கொள்வார்கள் என்பது தெளிவாகிறது.—மத்தேயு 7:21.
22. (அ) திடநம்பிக்கையை கொண்டிருப்பதற்கு யெகோவாவின் ஜனங்களுக்கு என்ன அடிப்படை இருக்கிறது? (ஆ) அடுத்த கட்டுரையில் என்ன விஷயங்கள் கலந்தாராயப்படும்?
22 “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்” என்பதே திடநம்பிக்கை கொள்வதற்கு மற்றொரு காரணம். (ஆமோஸ் 3:7) கடந்த காலத்தைப் போல இன்று தீர்க்கதரிசிகள் மூலமாக யெகோவா பேசுவதில்லை; அதற்கு பதிலாக தம் வீட்டாருக்கு ஏற்ற வேளையிலே ஆவிக்குரிய உணவு கொடுப்பதற்காக அவர் உண்மையுள்ள அடிமை வகுப்பை நியமித்திருக்கிறார். (மத்தேயு 24:45-47, NW) அப்படியானால், அந்த ‘அடிமைக்கு’ நாம் கீழ்ப்படிதலை காட்டுவது எவ்வளவு முக்கியம்! அப்படிப்பட்ட கீழ்ப்படிதல், அந்த ‘அடிமையின்’ எஜமானாகிய இயேசுவிடம் நமக்கிருக்கும் மனநிலையையும் வெளிக்காட்டுகிறது என்பதை அடுத்த கட்டுரை கலந்தாராயும். அவருக்கே ‘ஜனங்களின் கீழ்ப்படிதல் உரியதாயிருக்கிறது.’—ஆதியாகமம் 49:10, NW.
[அடிக்குறிப்புகள்]
a பெரும்பாலும் கோழி ஒரு பயந்தாங்கொள்ளியாக சித்தரிக்கப்படுகிறது; என்றாலும், “ஒரு தாய் கோழி தன் குஞ்சுகளை தீங்கிலிருந்து பாதுகாக்க சாகும் வரை போராடும்” என கால்நடை பாதுகாப்பு சங்கம் ஒன்றின் வெளியீடு கூறுகிறது.
b கல்தேயரிடத்தில் ‘சரணடைந்த’ எண்ணற்ற யூதர்கள் கொலை செய்யப்படாமல் கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர் என எரேமியா 38:19 (பொ.மொ.) தெரிவிக்கிறது. எரேமியாவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து அவர்கள் சரணடைந்தார்களா என்பது நமக்கு தெரியாது. இருந்தாலும் அவர்கள் உயிர்பிழைத்தது, இந்தத் தீர்க்கதரிசியின் வார்த்தைகளை உண்மையாக்கியது.
நினைவிருக்கிறதா?
• இஸ்ரவேலர் தொடர்ந்து கீழ்ப்படியாமல் போனதால் அவர்களுக்கு என்ன சம்பவித்தது?
• யோவாஸ் ராஜாவுடைய வாழ்க்கையின் ஆரம்பத்திலும் பிற்பாடும் கூட்டுறவுகள் எப்படி செல்வாக்கு செலுத்தின?
• பாருக்கின் விஷயத்திலிருந்து நாம் என்னென்ன பாடங்களை கற்றுக்கொள்ளலாம்?
• தற்போதைய ஒழுங்குமுறை முடிவை நெருங்கி வருகையில் யெகோவாவின் கீழ்ப்படிதலுள்ள ஜனங்கள் ஏன் பயப்பட வேண்டியதில்லை?
[பக்கம் 13-ன் படம்]
யோய்தாவின் வழிநடத்துதலால் இளம் யோவாஸ் யெகோவாவுக்கு கீழ்ப்படிந்தார்
[பக்கம் 15-ன் படம்]
கெட்ட சகவாசமே கடவுளுடைய தீர்க்கதரிசியை கொலை செய்வதற்கு யோவாஸை தூண்டியது
[பக்கம் 16-ன் படம்]
யெகோவாவுக்கு கீழ்ப்படிந்து அவருடைய பிரமிப்பூட்டும் காக்கும் வல்லமையைக் கண்கூடாக பார்த்திருப்பீர்களா?