உங்களுக்கு நன்மை செய்யும் வழிபாடு
“தேவனை அண்டிக்கொண்டிருப்பதே [எனக்கு] நலம்” என்று சங்கீதக்காரன் ஆசாப் கூறினார். கடவுளைத் தேடாத சுகபோகப் பிரியரைப் போல வாழ்ந்தால் நல்லது என்று ஒரு கணப்பொழுது அவர் நினைத்துவிட்டார். ஆனால், கடவுளிடம் நெருங்கி வருவதால் கிடைக்கும் பலன்களை எண்ணிப் பார்த்தபோது அதுதான் தனக்கு நல்லது என்ற முடிவிற்கு வந்தார். (சங்கீதம் 73:2, 3, 12, 28) உண்மை வழிபாடு இன்று உங்களுக்கு நன்மை செய்யுமா? எவ்வாறு நன்மை செய்யும்?
உண்மை கடவுளை வணங்கினால் உங்கள் வாழ்க்கைத் தரம் மேம்படும்; இனிமேலும் சுயநலமாக வாழ மாட்டீர்கள். தங்கள் நலனில் மட்டுமே அக்கறை காட்டுகிறவர்கள் சந்தோஷத்தைக் காண முடியாது; ஏனெனில், ‘அன்பின் தேவன்’ நம்மை அந்த விதத்தில்தான் படைத்திருக்கிறார். (2 கொரிந்தியர் 13:11) “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” என்று இயேசு சொன்னபோது மனித இயல்பைப் பற்றிய ஓர் அடிப்படை உண்மையைக் கற்பித்தார். (அப்போஸ்தலர் 20:35) அதனால்தான் நம் நண்பர்களுக்காகவும் குடும்பத்தினருக்காகவும் ஏதாவது செய்வதில் நாம் சந்தோஷப்படுகிறோம். ஆனால், கடவுளுக்காகக் காரியங்களைச் செய்யும்போதுதான் மிக அதிக சந்தோஷம் கிடைக்கிறது. நம் அன்பைப் பெற வேறு யாரையும்விட அவரே அதிக தகுதியானவர். கடவுள் விரும்புகிற வழியில் அவரை வணங்குவது பூரண திருப்தி அளிக்கிறது என்பதை பல பின்னணிகளைச் சேர்ந்த எண்ணற்றோர் கண்டிருக்கிறார்கள்.—1 யோவான் 5:3.
வாழ்க்கையில் நோக்கம் பிறக்கிறது
உண்மை வழிபாடு நம் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தைக் கொடுத்து, நமக்கு நன்மை செய்கிறது. பிரயோஜனமான ஒன்றைச் செய்கிறோம் என்று அறியும்போது நாம் எப்போதுமே சந்தோஷப்படுவதைக் கவனித்திருக்கிறீர்களா? பெரும்பாலானோருக்கு வாழ்க்கையில் ஓர் இலட்சியம் இருக்கிறது; அது, தங்கள் குடும்பம், நண்பர்கள், வியாபாரம் அல்லது பொழுதுபோக்கு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். என்றாலும், வாழ்க்கையில் எதிர்பாரா சம்பவங்கள் நடப்பதால் இவையெல்லாம் அவர்களுக்குச் சந்தோஷத்தைத் தருவதில்லை. (பிரசங்கி 9:11) உண்மை வழிபாடோ, மேலான ஓர் இலட்சியத்தைக் கண்டடைய உதவுகிறது; வாழ்க்கையின் மற்ற அம்சங்கள் நமக்கு ஏமாற்றம் அளித்தாலும் இந்த இலட்சியம் நமக்குத் தொடர்ந்து திருப்தி அளிக்கிறது.
யெகோவாவை அறிந்து அவரை உண்மையோடு சேவிப்பதே உண்மை வழிபாடாகும். அவ்வாறு வழிபடுவோர் கடவுளோடு மிக நெருக்கமான உறவிற்குள் வருகிறார்கள். (பிரசங்கி 12:13; யோவான் 4:23; யாக்கோபு 4:8) ‘கடவுள் என்னுடைய நண்பராகும் அளவிற்கு அவரைப் பற்றி என்னால் அறிந்துகொள்ள முடியுமா?’ என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். ஆனால், அவர் ஜனங்களோடு வைத்திருந்த தொடர்புகளைப் பற்றிய விவரங்களையும் அவருடைய படைப்புகளையும் பற்றி ஆழ்ந்து சிந்தித்தால் அவருடைய குணாதிசயத்தின் சில அம்சங்களை உங்களால் தெளிவாகக் கண்டுணர முடியும். (ரோமர் 1:20) அது மட்டுமல்ல, கடவுளுடைய வார்த்தையை வாசிக்கும்போது, நாம் ஏன் படைக்கப்பட்டோம், கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார், துன்பத்திற்கு எப்படி முடிவுகட்டுவார் போன்ற விஷயங்களை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். எல்லாவற்றையும்விட முக்கியமாக, கடவுளுடைய நோக்கத்தில் நீங்களும் ஒரு முக்கிய பங்கு வகிக்க முடியும் என்பதையும் அறிந்துகொள்வீர்கள். (ஏசாயா 43:10; 1 கொரிந்தியர் 3:9) இவற்றைப் புரிந்துகொள்ளும்போது உயிர்வாழ வேண்டுமென்ற புதிய உத்வேகத்தைப் பெறுவீர்கள்.
மேம்பட்ட மனிதனாக ஆக்குகிறது
உண்மை வழிபாடு மேம்பட்ட மனிதனாய் ஆக உங்களுக்கு உதவுவதாலும் அது நன்மை செய்கிறது. நீங்கள் உண்மை வழிபாட்டைப் பின்பற்றுகையில் நல்ல குணாதிசயத்தை வளர்த்துக்கொள்கிறீர்கள்; அதன் காரணமாக மற்றவர்களோடு சுமுகமான உறவுகளை அனுபவிக்கிறீர்கள். நேர்மையாக நடக்கவும், தயவாகப் பேசவும், நம்பகமானவர்களாக வாழவும் கடவுளிடமிருந்தும் அவருடைய குமாரனிடமிருந்தும் கற்றுக்கொள்கிறீர்கள். (எபேசியர் 4:20–5:5) கடவுளை நன்கு அறிந்துகொள்ளும்போது அவரை நேசிப்பீர்கள், அப்போது அவரைப் பின்பற்ற தூண்டப்படுவீர்கள். “நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி . . . அன்பிலே நடந்துகொள்ளுங்கள்” என்று பைபிள் கூறுகிறது.—எபேசியர் 5:1, 2.
கடவுளைப் போல அன்பு காட்டுகிறவர்கள் நம்மைச் சூழ்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உண்மை வழிபாடு என்பது நாம் தனியாக ஈடுபடும் ஒன்றல்ல என்பதற்காக நாம் சந்தோஷப்படலாம். நீதியையும் நியாயத்தையும் நேசிக்கும் ஜனங்களோடு அது உங்களைக் கூட்டிச் சேர்க்கிறது. ‘ஒரு மத அமைப்போடு தொடர்பு வைத்துக்கொள்வதா?’ என்ற எண்ணமே உங்களுக்குப் பயத்தை ஏற்படுத்தலாம். ஆனால், முந்தைய கட்டுரையில் பார்த்தபடி பெரும்பாலான மதங்கள் ஓர் அமைப்பாகச் செயல்படுவதில் பிரச்சினை இல்லை; ஆனால், அவை சரியான விதத்திலும் சரியான நோக்கத்திற்காகவும் ஒழுங்கமைக்கப்படாததே பிரச்சினைக்குக் காரணம். அநேக மத அமைப்புகள் கிறிஸ்தவமற்ற இலட்சியங்களை அடையவே முயலுகின்றன. யெகோவாவுடைய மக்களோ மேலான ஒரு நோக்கத்திற்காக அவராலேயே ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள். “தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு [அதாவது, ஒழுங்கின்] தேவனாயிருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 14:33) நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் தொகுதியோடு கூட்டுறவுகொள்வது உங்கள் கண்ணோட்டத்தை மேம்படுத்தும் என்பதை நீங்களே காண்பீர்கள், லட்சக்கணக்கானோரும் அதையே கண்டிருக்கிறார்கள்.
எதிர்கால நம்பிக்கையைத் தருகிறது
இந்தப் பொல்லாத உலகம் சீக்கிரத்தில் அழியப்போவதால் அதிலிருந்து தப்பிப்பதற்காக கடவுள் உண்மை வணக்கத்தாரை ஒழுங்கமைக்கிறார் என்றும் தப்பித்த பிறகு அவர்கள் “நீதி வாசமாயிருக்கும்” புதிய பூமியில் வாழ்வார்கள் என்றும் பைபிளிலிருந்து தெரிந்துகொள்கிறோம். (2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 7:9-17) இவ்வாறு, உங்களுக்கு நன்மை செய்யும் உண்மை வழிபாடு எதிர்கால நம்பிக்கையைத் தருகிறது; அதுவே மகிழ்ச்சிக்கு அடிப்படையாய் அமைகிறது. நிலையான அரசாங்கங்கள், வியாபார வாய்ப்புகள், நல்ல ஆரோக்கியம் அல்லது ஓய்வுபெற்ற பிறகு திருப்தியான வாழ்க்கை போன்றவை இருந்தால் எதிர்காலம் சந்தோஷமாக இருக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால், சந்தோஷமான எதிர்காலத்திற்கு இவை எதுவுமே நல்ல ஆதாரமல்ல. அதற்கு மாறாக, “ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார்.—1 தீமோத்தேயு 4:10.
நீங்கள் ஊக்கமாகத் தேடினால் உண்மை வணக்கத்தாரை நிச்சயம் கண்டுபிடிப்பீர்கள். பிளவுபட்டிருக்கும் இன்றைய உலகில் யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் நிலவும் அன்பும் ஐக்கியமும் அவர்களைத் தெளிவாக அடையாளம் காட்டுகின்றன. அவர்கள் பல்வேறு நாடுகளையும் பின்னணிகளையும் சேர்ந்தவர்கள் என்றாலும், ஒருவரோடு ஒருவர் அன்பாக இருப்பதுடன் யெகோவா தேவனிடமும் அன்பாக இருப்பதால் அவர்கள் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள். (யோவான் 13:35) அவர்கள் அனுபவித்திருப்பதை நீங்களே வந்து அனுபவித்துப் பார்க்கும்படி உங்களை அழைக்கிறார்கள். பின்வருமாறு ஆசாப் எழுதியதையே அவர்கள் அனுபவித்திருக்கிறார்கள்: “தேவனை அண்டிக்கொண்டிருப்பதே [எனக்கு] நலம்.”—சங்கீதம் 73:28.
[பக்கம் 7-ன் படம்]
நீங்கள் கடவுளுடைய நண்பராகலாம்