உண்மை மதத்தை அடையாளம் காண்பது எப்படி
பெரும்பாலான மதங்கள் கடவுளுடைய வார்த்தையையே போதிப்பதாகச் சொல்கின்றன. ஆகையால், இயேசுவின் அப்போஸ்தலனான யோவான் சொன்ன வார்த்தைகளுக்கு நாம் கவனம் செலுத்துவது அவசியம். “பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் [“ஏவப்பட்ட எல்லா வசனிப்புகளையும்,” NW] நம்பாமல், அந்த ஆவிகள் [“ஏவப்பட்ட அந்த வசனிப்புகள்,” NW] தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்” என அவர் எழுதினார். (1 யோவான் 4:1) ஒரு தகவல் கடவுளிடமிருந்து வந்ததுதானா என்பதை நாம் எப்படிச் சோதித்தறிவது?
கடவுளிடமிருந்து வருகிற அனைத்தும் அவருடைய சுபாவத்தை, முக்கியமாக அவருடைய தலைசிறந்த குணமான அன்பைப் பிரதிபலிக்கின்றன. உதாரணமாக, மூலிகை செடிகள், வண்ண மலர்கள் அல்லது சுடசுட செய்யப்பட்ட பிரெட் ஆகியவற்றின் வாசனையை நம்முடைய முகரும் திறனால் நுகர முடிகிறது; இது கடவுளுடைய அன்பின் வெளிக்காட்டு. சூரிய அஸ்தமனத்தையோ ஒரு வண்ணத்துப்பூச்சியையோ மழலையின் புன்னகையையோ நாம் பார்த்து மகிழ்கிறோம்; இது கடவுள் நம்மீது அன்பு வைத்திருப்பதைக் காட்டுகிறது. அருமையான இசையை, பறவையின் இனிய கீதத்தை, அன்பானவரின் பாசக் குரலைக் கேட்கும் திறனை நாம் பெற்றிருப்பதும் கடவுளுடைய அன்பின் வெளிக்காட்டே. நம்மிடம் அபூரணத்தன்மை இருந்தாலும்கூட நாம் கடவுளுடைய அன்பைப் பிரதிபலிக்க முடிகிறது. அதன் காரணமாகவே, இயேசுவின் பின்வரும் வார்த்தைகள் உண்மை என்பதை நாம் அனுபவத்தில் காண்கிறோம்: “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் [அதாவது, சந்தோஷம்].” (அப்போஸ்தலர் 20:35) நாம் “தேவசாயலாக” படைக்கப்பட்டிருப்பதால்தான் பிறரிடம் அன்பு காட்டுகிறோம். (ஆதியாகமம் 1:27) யெகோவாவிடம் அநேக குணங்கள் இருக்கிறபோதிலும், அன்பு அவருடைய சுபாவத்தில் தலைசிறந்த அம்சமாகும்.
கடவுள் கொடுத்த புத்தகத்தில் அவரது அன்பு பிரதிபலிக்க வேண்டும். உலக மதங்கள் பல பழங்கால புத்தகங்களை வைத்திருக்கின்றன. அப்புத்தகங்கள் கடவுளுடைய அன்பை எந்தளவுக்குப் பிரதிபலிக்கின்றன?
உண்மை என்னவென்றால், அந்தப் பழங்கால மதப் புத்தகங்களில் பெரும்பாலானவை கடவுள் நம்மிடம் எப்படி அன்பு காட்டுகிறார், நாம் அவரிடம் எப்படி அன்பு காட்டலாம் என்றெல்லாம் விளக்குவதில்லை. இதனால்தான், “படைப்பில் கடவுளுடைய அன்பைப் பார்க்க முடிந்தாலும், துன்பமும் கெட்ட காரியங்களும் ஏன் தொடர்ந்து நடக்கின்றன?” என அநேகர் கேட்கும் கேள்விக்குப் பதில் கிடைப்பதில்லை. மறுபட்சத்தில், கடவுளுடைய அன்பைப்பற்றி முழுமையாக விளக்குகிற ஒரே பழங்கால மதப் புத்தகம் பைபிள்தான். அன்பு காட்டுவது எப்படி என்பதையும் அது நமக்குக் கற்றுத் தருகிறது.
அன்பை விளக்கும் புத்தகம்
யெகோவாவை ‘அன்பின் தேவன்’ என அவருடைய வார்த்தையாகிய பைபிள் தெரியப்படுத்துகிறது. (2 கொரிந்தியர் 13:11) முதல் மனிதருக்கு நோயும் சாவும் இல்லாத வாழ்க்கையைக் கொடுக்க அன்பு அவரை எப்படி உந்துவித்தது என்பதை பைபிள் விவரிக்கிறது. ஆனால், கடவுளுடைய ஆட்சிக்கு எதிராக அவர்கள் கலகம் செய்ததால் மனிதகுலத்திற்குத் துன்பம் வந்தது. (உபாகமம் 32:4, 5; ரோமர் 5:12) மனிதகுலம் இழந்ததைத் திரும்பக் கொடுப்பதற்கு யெகோவா நடவடிக்கை எடுத்தார். அதைக் குறித்து கடவுளுடைய வார்த்தை இவ்வாறு சொல்கிறது: “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) கடவுளுடைய அன்பைப்பற்றி பரிசுத்த பைபிள் இன்னும் தெளிவாக விவரிக்கிறது. அதாவது, கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்தை மீண்டும் சமாதானமான சூழலில் வாழவைப்பதற்காக ஓர் அருமையான அரசாங்கத்தை ஏற்படுத்தி அதை இயேசுவிடம் ஒப்படைத்திருக்கிறார் என அது விவரிக்கிறது.—தானியேல் 7:13, 14; 2 பேதுரு 3:13.
அப்படியானால், மனிதரின் கடமையை பைபிள் இவ்வாறு இரத்தின சுருக்கமாக சொல்கிறது: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் . . . அடங்கியிருக்கிறது.” (மத்தேயு 22:37-40) வேதவாக்கியங்கள் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டவை என பைபிளே சொல்கிறது. இவ்வாறு பைபிள் அவருடைய சுபாவத்தைப் பிரதிபலிப்பதால், இது ‘அன்பின் தேவனுடைய’ புத்தகம் என்பதில் நாம் நிச்சயமாய் இருக்கலாம்.—2 தீமோத்தேயு 3:16.
இந்த ஆதாரத்தை வைத்தே எந்தப் பழங்கால புத்தகம் உண்மையில் கடவுளுடைய புத்தகம் என்பதை நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும். உண்மை மதத்தவர் யார் என்பதையும் அன்பு அடையாளம் காட்டுகிறது; ஏனெனில், அன்பு காட்டுவதில் அவர்கள் கடவுளைப் பின்பற்றுகிறார்கள்.
கடவுளை நேசிப்போரை அடையாளம் காண்பது எப்படி?
‘கடைசி நாட்கள்’ என பைபிள் அழைக்கிற இந்தக் காலப்பகுதியிலும் கடவுளை நேசிப்பவர்களைப் பளிச்சென அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. இந்தக் கடைசி காலத்தில் மக்கள் ‘தற்பிரியராயும், பணப்பிரியராயும், . . . தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயுமே’ இருக்கிறார்கள்.—2 தீமோத்தேயு 3:1-4.
கடவுளை நேசிக்கிற மக்களை நீங்கள் எப்படி அடையாளம் காணலாம்? “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்” என பைபிள் கூறுகிறது. (1 யோவான் 5:3) கடவுள் மீதுள்ள அன்பு, பைபிளிலுள்ள ஒழுக்கநெறிகளுக்கு மதிப்புக்கொடுக்க மக்களைத் தூண்டுகிறது. உதாரணமாக, செக்ஸ், திருமணம் பற்றிய சட்டங்கள் கடவுளுடைய வார்த்தையில் உள்ளன. கணவன் மனைவிக்கிடையில் மட்டுமே பாலுறவு இருக்க வேண்டுமெனவும், திருமணம் நிரந்தர பந்தமாக இருக்க வேண்டுமெனவும் அது சொல்கிறது. (மத்தேயு 19:9; எபிரெயர் 13:4) ஸ்பெயினைச் சேர்ந்த ஓர் இறையியல் மாணவி, யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டத்திற்குச் சென்றிருந்தாள்; அக்கூட்டத்தில் ஒழுக்கம் சம்பந்தமாக பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள சட்டங்களை அவர்கள் ஆர்வமாக கலந்தாலோசித்தார்கள். “கூட்டம் முடிந்து வீடுதிரும்பியதும் என் மனதுக்குள் ஒரே உற்சாகம். பைபிள் அடிப்படையில் கொடுக்கப்பட்ட பேச்சுகள் அறிவு புகட்டுவதாய் இருந்தன; அதுமட்டுமல்ல, அவர்கள் மத்தியில் காணப்படுகிற ஒற்றுமையும், அவர்களுடைய உயர்ந்த ஒழுக்கநெறிகளும், சிறந்த நடத்தையும் என்னைக் கவர்ந்தன” என்று அவள் சொன்னாள்.
கடவுளிடம் அன்பு காட்டுவதை வைத்து மட்டுமல்ல, பிறரிடம் அன்பு காட்டுவதை வைத்தும் உண்மைக் கிறிஸ்தவர்களை எளிதில் அடையாளம் காண முடிகிறது. அவர்கள் செய்யும் மிக முக்கியமான வேலை, மனிதகுலத்தின் ஒரே நம்பிக்கையான கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி மற்றவர்களிடம் சொல்வதாகும். (மத்தேயு 24:14) கடவுளைப்பற்றி அறிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவுவதைக் காட்டிலும் நித்திய நன்மைகளைத் தருவது வேறொன்றும் இல்லை. (யோவான் 17:3) உண்மைக் கிறிஸ்தவர்கள் தங்களுடைய அன்பை வேறு வழிகளிலும் வெளிக்காட்டுகிறார்கள். கஷ்டப்படுவோருக்கு நடைமுறை உதவி அளிக்கிறார்கள். உதாரணமாக, இத்தாலியில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி பெரும் நாசத்தை விளைவித்தபோது, உள்ளூர் செய்திதாள் இவ்வாறு அறிவித்தது: “யெகோவாவின் சாட்சிகள் எந்த மதத்தவர் என பாராமல் பாதிக்கப்பட்டோருக்கு நடைமுறை உதவி அளிக்கிறார்கள்.”
உண்மைக் கிறிஸ்தவர்கள் கடவுளிடமும் பிறரிடமும் அன்பு காட்டுவதோடு, ஒருவருக்கொருவரும் அன்பு காட்டுகிறார்கள். “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்று இயேசு சொன்னார்.—யோவான் 13:34, 35.
உண்மைக் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பு பளிச்சென கண்ணில் படுகிறதா? வீட்டு வேலை பார்த்துவருகிற ஈமா அப்படித்தான் நினைத்தார். இவர் பொலிவியாவிலுள்ள லாபாஸ் நகரில் வேலை பார்த்து வருகிறார். அங்கு இனப்பாகுபாட்டின் காரணமாக ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் எப்போதுமே இருந்துவருகிறது. ஈமா இவ்வாறு சொல்கிறார்: “நான் முதன்முறையாக யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டத்திற்குச் சென்றிருந்தபோது, டிப்டாப்பாக டிரஸ் செய்திருந்த ஒரு நபர், பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் அருகே உட்கார்ந்து பேசுவதைப் பார்த்தேன். நான் இதற்குமுன் இந்த மாதிரி பார்த்ததே இல்லை. இவர்கள்தான் கடவுளுடைய ஜனங்கள் என்பதை அந்த நிமிஷமே உணர்ந்துகொண்டேன்.” அவ்வாறே, பிரேசில் நாட்டைச் சேர்ந்த மிர்யாம் என்ற ஓர் இளம் பெண்ணும் கூறினாள்: “சந்தோஷம் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாதிருந்தது, வீட்டிலும்கூட நான் சந்தோஷமாக இருந்தது கிடையாது. நான் முதன்முறையாக அன்பைச் செயலில் பார்த்தது யெகோவாவின் சாட்சிகள் மத்தியில்தான்.” அமெரிக்காவில் ஒரு டிவி நிலையத்தின் செய்தி இயக்குநர் இவ்வாறு எழுதினார்: “உங்கள் மதத்தவரைப் போல அநேகர் வாழ்ந்தால் இந்த நாடு இந்நிலையில் இருக்காது. செய்தி தொகுப்பாளனாகிய நான், உங்களுடைய அமைப்பு அன்பை மையமாக வைத்திருப்பதையும் படைப்பாளர்மீது உறுதியான விசுவாசம் வைத்திருப்பதையும் அறிந்திருக்கிறேன்.”
உண்மை மதத்தைத் தேடுங்கள்
உண்மை மதத்தைத் தனிப்படுத்திக் காட்டுவது அன்பே. உண்மையான மதத்தைக் கண்டுபிடிப்பதைச் சரியான பாதையைக் கண்டுபிடித்து அதில் நடக்கத் தெரிவு செய்வதோடு இயேசு ஒப்பிட்டார். இந்தப் பாதை மட்டுமே முடிவில்லா வாழ்க்கைக்கு வழிநடத்துகிறது. “இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” என இயேசு சொன்னார். (மத்தேயு 7:13, 14) உண்மைக் கிறிஸ்தவர்களின் ஒரேயொரு அமைப்புதான் உண்மை மதம் எனும் பாதையில் கடவுளோடு ஒன்றுபட்டு நடக்கிறது. ஆக, நீங்கள் எந்த மதத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது முக்கியமே. நீங்கள் அப்பாதையைக் கண்டுபிடித்து அதில் நடக்க தெரிவு செய்தால், நீங்கள் மிகச் சிறந்த வாழ்க்கைப் பாதையைக் கண்டுபிடித்தவர்களாய் இருப்பீர்கள். ஏனெனில், அதுவே அன்பின் வழி.—எபேசியர் 4:1-4.
உண்மை மதத்தின் பாதையில் நீங்கள் நடப்பது எத்தனை சந்தோஷமானது என்பதை யோசித்துப் பாருங்கள்! இது கடவுளுடன் நடப்பதற்கு ஒத்திருக்கிறது. அப்போது, கடவுளிடமிருந்து ஞானத்தையும் அன்பையும் கற்றுக்கொள்ளலாம், அதன் மூலம் பிறரிடம் நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ளலாம். வாழ்க்கையின் நோக்கத்தைப்பற்றியும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம், அதன் மூலம் எதிர்காலத்திற்கான நம்பிக்கையைப் பெறலாம். உண்மை மதத்தைத் தேடியதற்காக நீங்கள் ஒருபோதும் வருத்தப்பட மாட்டீர்கள்.
[பக்கம் 5-ன் படம்]
பண்டைக் கால மதப் புத்தகங்களில் பைபிள் மட்டுமே கடவுளின் அன்பைத் தெரியப்படுத்துகிறது
[பக்கம் 7-ன் படங்கள்]
உண்மைக் கிறிஸ்தவர்கள் அன்பு காட்டுவதால் அவர்களை அடையாளம் காண முடிகிறது