வாழ்க்கை சரிதை
குடும்பத்தார் உண்மையாக இருந்தது எனக்கு உதவியது
காத்லீன் குக் சொன்னபடி
அப்போது 1911-ம் வருடம். என் பாட்டியம்மா மாரி எலென் தாம்ப்ஸன், ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோவில் இருந்த உறவினர்களைப் பார்க்கப் போயிருந்தார். அந்தச் சமயத்தில், யெகோவாவின் சாட்சிகளில் (முன்பு பைபிள் மாணாக்கர்கள்) பிரபலமானவராய் இருந்த சார்ல்ஸ் டேஸ் ரஸல் என்பவரின் பேச்சு ஒன்றைக் கேட்டார். கேட்ட விஷயங்கள் அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டன. தென் ஆப்பிரிக்காவுக்கு அவர் திரும்பி வந்ததும், அங்கிருந்த பைபிள் மாணாக்கர்களுடன் தொடர்புகொண்டார். ஏப்ரல் 1914-ல், பைபிள் மாணாக்கர்கள் தென் ஆப்பிரிக்காவில் நடத்திய முதல் மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற்ற 16 பேரில் என் பாட்டியம்மாவும் ஒருவர். அப்போது என் அம்மாவுக்கு (ஈடித்) ஆறு வயது.
1916-ல் சகோதரர் ரஸல் இறந்தபின் உலகெங்கும் பைபிள் மாணாக்கர்கள் மத்தியில் உட்பூசல்கள் தலைதூக்கின. டர்பன் நகரில் உண்மையாக இருந்தவர்களின் எண்ணிக்கை 60-லிருந்து ஏறக்குறைய 12-ஆக குறைந்துவிட்டது. சிறுவனாயிருந்த என் அப்பா ஹென்றி முழுக்காட்டுதல் பெற்று கொஞ்ச காலமே ஆகியிருந்தது; அவரும், அவருடைய அம்மாவான இங்பர்க் முயர்டாலும், அந்தச் சமயத்தில் உண்மையுள்ளவர்களாய் நிலைத்து நின்றார்கள். 1924-ல், ஹென்றி ஒரு கால்பார்ட்டர் ஆனார்; அப்போது, யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் முழுநேர ஊழியம் செய்துவந்தவர்கள் அப்படித்தான் அழைக்கப்பட்டார்கள். அடுத்த ஐந்து வருடங்கள், ஆப்பிரிக்காவின் தென் பகுதியிலுள்ள பல இடங்களுக்குப் போய் அவர் பிரசங்கித்தார். 1930-ல், ஹென்றியும் ஈடித்தும் திருமணம் செய்துகொண்டார்கள். மூன்று வருடங்கள் கழித்து நான் பிறந்தேன்.
குடும்பம் பெரிதாகிறது
மொசம்பிக் நாட்டில் சில காலம் வாழ்ந்தபின், நாங்கள் 1939-ல் தாத்தா பாட்டி வீட்டிற்கு, அதாவது ஜோஹெனஸ்பர்க்கில் அம்மாவுடைய பெற்றோர் குடியிருந்த வீட்டிற்கு வந்தோம். தாத்தாவுக்கு பைபிள் சத்தியத்தில் ஈடுபாடில்லை; சில சமயங்களில் பாட்டியை எதிர்க்கவும் செய்தார்; ஆனாலும் அவர் உபசரிக்கும் குணமுள்ளவராய் இருந்தார். 1940-ல் என் தங்கை தெல்மா பிறந்தாள். அவளும் நானும் வயதானவர்களின் தேவைகளைக் கவனிக்கக் கற்றுக்கொண்டோம். இரவு சாப்பாட்டு நேரத்தில், அன்று நடந்த காரியங்களையோ முன்பு நடந்த காரியங்களையோ பற்றி நாங்கள் ரொம்ப நேரத்திற்குப் பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.
அநேக சாட்சிகள், அதுவும் முழுநேர ஊழியர்கள் எங்களுடன் தங்கியது சந்தோஷமாக இருந்தது. அவர்களும் எங்கள் இரவுநேர உரையாடல்களில் கலந்துகொள்வார்கள்; அவர்கள் சொன்ன விஷயங்கள் எங்கள் ஆன்மீக சொத்தை இன்னும் அதிகமாய் மதிப்பதற்கு உதவின. இது, அவர்களைப் போலவே பயனியர்களாக வேண்டும் என்று எனக்கும் தெல்மாவுக்கும் இருந்த ஆசையை பலப்படுத்தியது.
பிஞ்சு பருவத்திலிருந்தே வாசிப்பது சந்தோஷத்தைத் தரும் என்பதைக் கற்றுக்கொண்டோம். அம்மா, அப்பா, பாட்டியம்மா என எல்லாருமே எங்களுக்கு நல்ல கதை புத்தகங்களிலிருந்தும் பைபிளிலிருந்தும் வாசித்துக் காட்டினார்கள். கிறிஸ்தவக் கூட்டங்களுக்கும் ஊழியத்திற்கும் நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். ஜோஹெனஸ்பர்க் சபையில் அப்பா கம்பெனி ஸெர்வன்ட்டாக இருந்தார்; (அப்போது நடத்தும் கண்காணி அப்படித்தான் அழைக்கப்பட்டார்) ஆகவே, நாங்கள் கூட்டங்களுக்குச் சீக்கிரமாகவே போய்விடுவோம். மாநாடுகள் நடக்கும்போது அதன் நிர்வாக வேலைகளில் அப்பா உதவி செய்தார்; அம்மாவோ, மாநாட்டுக்கு வருபவர்கள் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை கவனிப்பதில் உதவி செய்தார்.
எங்களுக்கு விசேஷமான மாநாடு
ஜோஹெனஸ்பர்க்கில் 1948-ல் நடந்த மாநாடு எங்களுக்கு விசேஷமானதாய் இருந்தது. முதன்முறையாக, நியு யார்க்கிலுள்ள புரூக்ளினில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்திலிருந்து சில சகோதரர்கள் இந்த மாநாட்டுக்கு வந்திருந்தார்கள். நேதன் நார், மில்டன் ஹென்ஷல் ஆகியோர் இங்கு தங்கியிருந்தவரையில் அவர்களைக் காரில் அழைத்துச் செல்வது அப்பாவின் பொறுப்பாக இருந்தது. இந்த மாநாட்டில்தான் நான் முழுக்காட்டுதல் பெற்றேன்.
கொஞ்ச காலத்திற்குப்பின், ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு விஷயத்தை என் அப்பாவின் அப்பா அவரிடம் சொன்னார். அதாவது, சகோதரர் ரஸல் இறந்தபின் பைபிள் மாணாக்கர்களிலிருந்து தங்களை விலக்கிக்கொண்டவர்களின் பேச்சைக் கேட்டுத் தான் நடந்துகொண்டதைச் சொல்லி வருத்தப்பட்டார். ஒருசில மாதங்களுக்குள் அவர் இறந்துவிட்டார். முயர்டால் பாட்டியம்மாவோ 1955-ல் தன் பூமிக்குரிய வாழ்க்கையை முடிக்கும்வரை உண்மையுள்ள சாட்சியாக இருந்தார்.
என்னை வடிவமைத்த சம்பவங்கள்
பிப்ரவரி 1, 1949-லிருந்து நான் ஓர் ஒழுங்கான பயனியராகச் சேவை செய்ய ஆரம்பித்தேன். அதற்கடுத்த வருடம் நியு யார்க் நகரில் சர்வதேச மாநாடு நடைபெறவிருந்ததைப் பற்றி அறிவிக்கப்பட்டதிலிருந்து அதில் கலந்துகொள்ள எல்லாருக்கும் ஆசை ஏற்பட்டது. நாங்களும் போவதற்குத் துடித்தோம், ஆனால் கையில் காசு இல்லை. பிப்ரவரி 1950-ல் தாம்ப்ஸன் தாத்தா இறந்து போனார்; அவர் விட்டுச் சென்ற பணத்தை நாங்கள் ஐந்து பேரும் மாநாட்டுக்குப் போவதற்குப் பாட்டியம்மா பயன்படுத்தினார்.
நாங்கள் புறப்படுவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு, நியு யார்க்கிலுள்ள புரூக்ளினிலிருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. அது, கிலியட் மிஷனரி பள்ளியின் 16-ம் வகுப்பில் கலந்துகொள்ள எனக்கு வந்த அழைப்பாகும். அப்போது எனக்கு 17 வயதுகூட முடியவில்லை; அது எனக்கு அளவுகடந்த சந்தோஷத்தைத் தந்தது! வகுப்பு தொடங்கியபோது, தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த பத்து மாணாக்கரில் நானும் ஒருத்தியாக அந்த அரிய சிலாக்கியத்தை அனுபவித்தேன்!
பிப்ரவரி 1951-ல் பட்டம் பெற்ற பிறகு, எங்களில் எட்டு பேர் மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்கே மிஷனரிகளாக அனுப்பப்பட்டோம். ஆப்பிரிக்கான்ஸ் மொழி பேசப்பட்ட சிறிய நகரங்களிலேயே பெரும்பாலும் அடுத்த சில வருடங்களுக்கு நானும் என் பார்ட்னரும் பிரசங்கித்து வந்தோம். ஆரம்பத்தில் அந்த மொழியை என்னால் அவ்வளவு நன்றாகப் பேச முடியவில்லை; ஒரு நாள் சைக்கிளில் வீடு திரும்புகையில், ஊழியத்தை நன்றாக செய்ய முடியாததை நினைத்து அழுதது ஞாபகம் இருக்கிறது. என்றாலும், போகப்போக, நான் தேறினேன், யெகோவா என் முயற்சிகளை ஆசீர்வதித்தார்.
திருமணமும் பயண வேலையும்
1955-ல் ஜான் குக் என்பவரிடம் பழக ஆரம்பித்தேன். இரண்டாம் உலகப் போருக்கு முன்பும் அதற்குப் பின்பும் பிரான்சு, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய இடங்களில் பிரசங்க வேலையை தொடங்குவதற்கு இவர் உதவி செய்திருக்கிறார். நான் இவரைச் சந்தித்த வருடத்தில்தான் ஆப்பிரிக்காவில் இவர் மிஷனரியாக ஆனார். இதைக் குறித்து அவர் பின்னர் இப்படி எழுதினார்: “எனக்கு ஒரே வாரத்தில் மூன்று ஆச்சரியமான விஷயங்கள் நடந்தன . . . மிகுந்த தாராள குணம் படைத்த ஒரு சகோதரர் எனக்கொரு சிறிய காரை பரிசாகத் தந்தார்; மாவட்ட ஊழியராக நியமிக்கப்பட்டேன்; காதலிக்கவும் தொடங்கினேன்.”a டிசம்பர் 1957-ல் நாங்கள் மணம் செய்துகொண்டோம்.
நாங்கள் திருமணம் செய்யும் நோக்கத்தோடு பழகி வந்த காலத்தில், வாழ்க்கை ஒருபோதும் ‘சப்’ என்று இருக்காதென ஜான் எனக்கு உறுதி அளித்தார். அவர் சொன்னது சரிதான். தென் ஆப்பிரிக்கா முழுவதிலும் இருந்த சபைகளை நாங்கள் விஜயம் செய்தோம்; இவை பெரும்பாலும் கறுப்பு இனத்தவர் வாழ்ந்த இடங்கள். அந்தப் பகுதிகளுக்குள் நுழையவே அனுமதிபெற வேண்டியிருந்தது; வாராவாரம் இந்தச் சவாலை சந்தித்தோம். அதுவும் இரவு தங்கவேண்டுமானால் இன்னும் சிரமம்தான். எப்போதாவது சில சந்தர்ப்பங்களில், பக்கத்தில் வெள்ளை இனத்தவர் வாழும் பகுதிக்குச் சென்று காலியாக இருந்த ஒரு கடையின் தரையில் படுத்தோம்; அவ்வழியே போகிறவர்கள் எங்களைப் பார்க்காதபடி ஒளிந்துகொண்டோம். அநேகமாக, மிகவும் அருகிலிருக்கும் வெள்ளை இன சாட்சிகளுடன் தங்க வேண்டியிருந்தது; அவர்கள் பெரும்பாலும் பல கிலோமீட்டர் தொலைவிலேயே வசித்து வந்தனர்.
எளிய சூழலில் மாநாடுகளை நடத்துவதும் சவாலாக இருந்தது. புதர் காடுகளின் மத்தியில் மாநாடுகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. யெகோவாவின் சாட்சிகளால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களைக் காண்பித்தோம். நம் உலகளாவிய சகோதரத்துவத்தைப் பற்றி புரிந்துகொள்ள அவை உதவி செய்தன. அந்தப் பகுதிகளில் பெரும்பாலும் மின்வசதி இல்லாதிருந்ததால் நாங்கள் ஜெனரேட்டரை கொண்டு சென்றோம். பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட இடங்களில் வேறு பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது; அப்போது அங்கு நம் பிரசுரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது, அதோடு ஜூலு மொழியைக் கற்றுக்கொள்வதும் சவாலாக இருந்தது. இருந்தாலும், நம் சகோதரர்களுக்குச் சேவை செய்வதில் சந்தோஷம் கண்டோம்.
ஆகஸ்ட் 1961-ல், தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்ட நான்கு வார ராஜ்ய ஊழியப் பள்ளியின் முதல் போதனையாளராக ஜான் இருந்தார்; சபை கண்காணிகளுக்கு உதவி செய்வதற்காக இப்பள்ளி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போதிக்கும் கலையில் ஜான் திறமை பெற்றவர்; எளிய முறையில் தர்க்கரீதியாகப் பேசி, தெளிவான உதாரணங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் புரிய வைத்தார். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக, அடுத்தடுத்து வந்த ஆங்கில வகுப்புகளுக்காக நாங்கள் ஒவ்வொரு இடமாக பயணித்தோம். ஜான் இப்படி போதித்தபோது, நான் அங்கிருந்த சாட்சிகளுடன் வெளி ஊழியத்திற்குச் சென்றேன். பின்னர், எங்களுக்கு ஆச்சரியமளித்த ஒரு கடிதம் வந்தது. ஜூலை 1, 1964 முதல், ஜோஹெனஸ்பர்க்குக்கு அருகில் இருந்த தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகத்தில் சேவை செய்யும்படி அந்தக் கடிதத்தின் வாயிலாக அழைப்பைப் பெற்றோம்.
ஆனாலும், இந்தச் சமயத்தில் ஜானின் உடல்நிலை காரணமாக நாங்கள் குழப்பமடைந்தோம். 1948-ல் அவரை காச நோய் தாக்கியிருந்தது; அதனால் அடிக்கடி களைப்படைந்தார். அவ்வப்போது சளிக்காய்ச்சலில் சில நாட்களுக்கு படுத்துவிடுவார். அப்போது அவரால் எதையும் செய்யவோ யாரையும் பார்க்கவோ முடியாது. கிளை அலுவலகத்திற்கு வரும்படி அழைப்பைப் பெறுவதற்கு சற்று முன்னர்தான் ஜான் மனத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்ததாக ஒரு மருத்துவர் கண்டுபிடித்திருந்தார்.
மருத்துவர் சொன்னபடி எங்கள் சேவையைக் குறைப்பதை எங்களால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. கிளை அலுவலகத்தில், ஜான் ஊழிய இலாக்காவிலும் நான் மொழியில் பிழைதிருத்தும் வேலையிலும் நியமிப்பைப் பெற்றோம். எங்களுக்கென்று ஓர் அறையைப் பெற்றிருந்ததும் எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதமாக இருந்தது! எங்கள் திருமணத்திற்கு முன் போர்ச்சுகீசியரின் பிராந்தியங்களில் ஜான் சேவை செய்திருந்தார். ஆகையால், 1967-ல் ஜோஹெனஸ்பர்க்கின் சுற்றுவட்டாரத்திலிருந்த பெரிய போர்ச்சுகீஸ் சமுதாயத்தினரிடம் பிரசங்கிப்பதில் அங்கு சாட்சிகளாயிருந்த ஒரேயொரு போர்ச்சுகீஸ் குடும்பத்தினருக்கு உதவும்படி கேட்கப்பட்டோம். இதற்காக நான் இன்னொரு மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
போர்ச்சுகீஸியர் ஒரு பெரிய தொகுதியில் பரவியிருந்தனர்; ஆகவே தகுதியுள்ளவர்களைக் கண்டுபிடிப்பதற்காக நாங்கள் ரொம்ப தூரம், சிலவேளைகளில் 300 கிலோமீட்டர் வரைகூட பயணித்தோம். கொஞ்ச காலத்திற்குள், மாநாடுகளின்போது போர்ச்சுகீஸ் பேசும் சாட்சிகள் மொசம்பிக்கிலிருந்து வரத் தொடங்கினார்கள்; புதியவர்களுக்கு இது பேருதவியாக இருந்தது. போர்ச்சுகீஸியரின் பிராந்தியத்தில் நாங்கள் இருந்த 11 வருடங்களில், 30 பேர் மட்டுமே இருந்த எங்கள் சிறிய தொகுதி நான்கு சபைகளாக மலர்ந்ததைக் கண்டோம்.
வீட்டில் மாற்றங்கள்
இதற்கிடையில், என் பெற்றோரின் வீட்டில் நிலைமை மாறியிருந்தது. 1960-ல் என்னுடைய தங்கை தெல்மா, ஐக்கிய மாகாணங்களில் பயனியராக இருந்த ஜான் அர்பனை திருமணம் செய்திருந்தாள். 1965-ல் அவர்கள் கிலியடின் 40-வது வகுப்புக்குச் சென்றிருந்தார்கள். பின்னர் 25 வருடங்களுக்கு பிரேசிலில் மிஷனரிகளாக உண்மையுடன் சேவை செய்தார்கள். பிறகு, ஜானின் பெற்றோருடைய உடல் நிலை சரியில்லாதிருந்ததால் அவர்களைக் கவனிப்பதற்காக 1990-ல் அவர்கள் ஒஹாயோவுக்குத் திரும்பிவிட்டார்கள். இப்படி கவனிப்பதில் உட்பட்டிருக்கும் சிரமங்களின் மத்தியிலும் இன்று வரையாக முழு நேர ஊழியத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தாம்ப்ஸன் பாட்டியம்மா 1965-ல் தன் பூமிக்குரிய வாழ்க்கையை முடித்துவிட்டார்; 98 வயதில் இறக்கும்வரை உண்மையாக இருந்தார். அதே வருடத்தில் அப்பா தன் வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். ஆகவே போர்ச்சுகீஸியரின் பிராந்தியத்தில் உதவி செய்யும்படி ஜானும் நானும் கேட்கப்பட்டபோது அப்பாவும் அம்மாவும் எங்களுடன் சேர்ந்துகொள்ள முன்வந்தார்கள். போர்ச்சுகீஸியரின் அந்தத் தொகுதி இவர்களால் நன்கு உற்சாகம் பெற்றது. ஒருசில மாதங்களுக்குள் முதல் சபை உருவானது. சில காலத்திற்குப்பின், அம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்; பின்னர் 1971-ல் இறந்தார். ஏழு வருடங்கள் கழித்து அப்பாவும் இறந்துவிட்டார்.
ஜானின் நோயைச் சமாளித்தல்
ஜானின் உடல்நிலை தேறவில்லை என்பது 1970-களில் தெளிவானது. பெத்தேலில் அவர் நெஞ்சார நேசித்த சில நியமிப்புகளை ஒவ்வொன்றாக விட்டுவிட வேண்டியதாயிற்று; கிளை அலுவலகத்தில் குடும்ப காவற்கோபுர படிப்பையும் காலை வணக்க கலந்தாலோசிப்புகளையும் நடத்த முடியாமல் போயிற்று. ஊழிய இலாக்காவிலிருந்து தபால் அறைக்கும் பின்னர் தோட்டத்திற்கும் அவருடைய வேலை மாற்றப்பட்டது.
திட தீர்மானத்துடன் செயல்படும் ஜானுக்கு இந்த மாற்றங்களைச் செய்வது கஷ்டமாக இருந்தது. அவர் தன் வேலைகளைக் குறைப்பதற்காக நான் விடாமல் முயற்சி எடுத்தபோது, என்னை அன்பாகக் கட்டியணைத்துக்கொண்டு அவருக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கிண்டல் பண்ணினார். காலப்போக்கில், போர்ச்சுகீஸ் பிராந்தியத்தில் ஊழியம் செய்வதை விட்டுவிட்டு கிளை அலுவலகத்திலேயே உள்ள ராஜ்ய மன்றத்தில் கூடிவரும் சபையில் சேவை செய்வதை நல்லதாகக் கண்டோம்.
ஜானின் உடல்நிலை மோசமாகிக்கொண்டே வரவர, யெகோவாவோடு அவர் வைத்திருந்த நெருங்கிய உறவைக் காண்பது உருக்கமானதாக இருந்தது. மிகுந்த மனச்சோர்வினால் நடுராத்திரியில் ஜான் விழிக்கையில், யெகோவாவிடம் உதவிகேட்டு ஜெபிக்கும் அமைதியான நிலைக்கு அவர் வரும் வரையில் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். போகப்போக, அவர் அதுபோன்ற கஷ்டமான தருணங்களை தனியாகவே சமாளிக்க பழகிக்கொண்டார். எப்படியென்றால், ‘நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் . . . ’ என்பதாகக் கூறும் பிலிப்பியர் 4:6, 7-ஐ தன்னையே கட்டாயப்படுத்தி மெதுவாக திரும்பத் திரும்ப சொல்லிக்கொள்வார். பின்பு ஜெபம் பண்ணுவதற்கு தோதாக அமைதியான மனநிலைக்கு வந்துவிடுவார். யெகோவாவிடம் அவர் கெஞ்சி மன்றாடுகையில், பெரும்பாலும் நான் விழித்திருந்து அவருடைய உதடுகளின் அசைவைப் பார்த்துக்கொண்டிருப்பேன்.
எங்கள் கிளை அலுவலகத்தில் இடம் போதவில்லை. ஆகவே ஜோஹெனஸ்பர்க்குக்கு வெளியே புதிதாக பெரிய அலுவலகம் கட்டும் வேலை தொடங்கியது. நகரத்தின் சந்தடியையும் தூய்மைக்கேட்டையும் விட்டு விலகி, தூரமாக இருந்த இந்த அமைதலான இடத்தை நானும் ஜானும் அடிக்கடி சென்று பார்த்தோம். புதிய கிளை அலுவலகம் கட்டி முடிக்கப்படும் வரை நாங்கள் தற்காலிகமான குடியிருப்புகளில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது ஜானுக்கு மிகவும் உதவியாக இருந்தது.
புதிய சவால்கள்
ஜானின் சிந்திக்கும் திறனும் காரியங்களைப் பகுத்தறியும் திறனும் மேன்மேலும் பாதிக்கப்பட்டபோது, அவருடைய வேலைகளைச் செய்து முடிப்பது அவருக்குக் கடினமானது. ஜானின் முயற்சிகளுக்கு மற்றவர்கள் கைகொடுத்து உதவியதைக் கண்டு நான் மிகவும் நெகிழ்ந்துபோனேன். உதாரணமாக, ஆராய்ச்சி செய்வதற்காக நகர நூலகத்திற்குச் செல்லும்போது ஒரு சகோதரர் ஜானையும் கூட்டிக்கொண்டு போனார். வெளியே செல்லும்போது பாக்கெட் புடைத்திருக்கும் அளவுக்கு ஜான் துண்டுப்பிரதிகளையும் பத்திரிகைகளையும் வைத்திருப்பார். இப்படி செய்வதால் அவராலும் எதையோ சாதிக்க முடிகிறது என்ற உணர்வையும் சுயமதிப்பையும் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது.
காலப்போக்கில், அல்ஸைமர் நோய் காரணமாக ஜானுக்கு வாசிக்கும் திறனும் பாதிக்கப்பட்டது. பைபிள் பிரசுரங்களும் ராஜ்ய பாடல்களும் ஆடியோ டேப்புகளில் இருப்பதற்காக சந்தோஷப்பட்டோம். அவற்றைத் திரும்ப திரும்ப போட்டுக் கேட்டோம். ஜானுடன் சேர்ந்து நானும் உட்கார்ந்து கேட்காவிட்டால் அவர் கோபப்படுவார்; எனவே அந்த நீண்ட மணிநேரங்களில் ஏதாவது தையல், பின்னல் வேலைகளைச் செய்துகொண்டே இருந்தேன். எங்களுக்கு ஸ்வெட்டருக்கோ கம்பளங்களுக்கோ பஞ்சமே இல்லாதளவுக்கு இந்த வேலையைச் செய்தேன் என்றால் பாருங்களேன்!
போகப்போக, ஜானின் நிலைமை ரொம்ப மோசமடைந்ததால், நான் கூடவே இருந்து கவனிக்க வேண்டியிருந்தது. வாசிப்பதற்கோ படிப்பதற்கோ முடியாதபடி நான் ரொம்ப களைப்படைந்தபோதிலும், கடைசி வரை அவரைக் கவனிக்க முடிந்ததை பாக்கியமாகவே நினைக்கிறேன். 1998-ல் தன்னுடைய 85-வது வயதில் என் கரங்கள் மீதிருந்தே அமைதியாக உயிர்விட்டார். முடிவு பரியந்தம் அசைக்க முடியாத உண்மையைக் காண்பித்தார். அவருடைய ஆரோக்கியமும் மனதும் புதுப்பிக்கப்பட்டு அவர் உயிர்த்தெழுந்து வரும் நாளுக்காக எவ்வளவு ஆவலோடு காத்திருக்கிறேன்!
புத்துணர்வு பெறுதல்
ஜானை இழந்தபின், நான் மட்டும் தனியாக வாழ்கை நடத்துவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஆகவே மே 1999-ல் ஐக்கிய மாகாணங்களிலிருந்த என் தங்கை தெல்மாவையும் அவள் கணவரையும் பார்க்கச் சென்றேன். அநேக உண்மையான அருமையான நண்பர்களை, அதுவும் குறிப்பாக நியூ யார்க்கிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தில் இருந்தவர்களை சந்தித்தது எவ்வளவு ஆனந்தமாகவும் புத்துணர்வளிப்பதாகவும் இருந்தது! எனக்கு தேவையான ஆன்மீக உற்சாகத்தை பெற்றேன் என்பதில் சந்தேகமில்லை.
உண்மையுள்ள என் அன்பான குடும்பத்தாரின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பது எனக்கு பல வழிகளில் பயனுள்ளதாக இருந்திருக்கிறது. அவர்களுடைய அறிவுரை, முன்மாதிரி, உதவி ஆகியவற்றிலிருந்து பிற நாட்டவரிடமும் பிற இனத்தவரிடமும் அன்பை வளர்த்துக்கொள்ள கற்றுக்கொண்டேன். பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் சூழ்நிலையை அனுசரித்துப் போகும் தன்மையையும் கற்றுக்கொண்டேன். எல்லாவற்றிற்கும் மேலாக, ஜெபத்தைக் கேட்கிறவரான யெகோவாவின் தயவையும் அனுபவித்தேன். “உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; . . . உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்” என்று எழுதிய சங்கீதக்காரரின் உணர்வுகளே என்னுடையவையாகவும் இருக்கின்றன.—சங்கீதம் 65:4.
[அடிக்குறிப்பு]
[பக்கம் 8-ன் படம்]
பாட்டியம்மாவும் மகள்களும்
[பக்கம் 9-ன் படம்]
1948-ல் நான் முழுக்காட்டுதல் எடுத்தபோது பெற்றோருடன்
[பக்கம் 10-ன் படம்]
கிலியடின் பதிவாளர் ஆல்பர்ட் ஷ்ரோடர் மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த ஒன்பது மாணாக்கருடன்
[பக்கம் 10-ன் படம்]
1984-ல் ஜானுடன்