வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஒரு கிறிஸ்தவர் ஓட்டிய வாகனம் விபத்திற்குள்ளாகி அதில் மற்றவர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்மீது சபை என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?
வாகனத்தை ஓட்டிய அந்த கிறிஸ்தவரின்மீது இரத்தப்பழி உள்ளதா என்பது கவனிக்கப்பட வேண்டும், அப்போதுதான் சபை முழுவதும் அந்த இரத்தப்பழிக்கு உள்ளாவதைத் தவிர்க்க முடியும். (உபாகமம் 21:1-9; 22:8) ஓட்டுனரின் கவனக்குறைவாலோ அரசாங்க பாதுகாப்பு விதிமுறைகள், போக்குவரத்து விதிமுறைகள் ஆகியவற்றை அவர் மீறியதாலோ அந்தப் பயங்கர விபத்து ஏற்பட்டிருந்தால், அவர் இரத்தப்பழிக்கு ஆளாவார். (மாற்கு 12:14) ஆனால் மற்ற காரணிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இஸ்ரவேலிலுள்ள அடைக்கலப் பட்டணம் ஒன்றில் தஞ்சம் புகுந்த கொலையாளி விசாரணை செய்யப்பட்டான். அவன் கைப்பிசகாய் கொலை செய்திருந்தது தெரியவந்தால், அந்தப் பட்டணத்திலேயே தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டான். இவ்வாறு பழிவாங்குபவனிடமிருந்து பாதுகாக்கப்பட்டான். (எண்ணாகமம் 35:6-25) அதேபோல, விபத்தில் ஒருவர் உயிரிழப்பதற்கு ஒரு கிறிஸ்தவர் காரணமாக இருந்தால், நடந்த சம்பவங்களை மூப்பர்கள் விசாரணை செய்து, அந்நபர் மீது ஓரளவு இரத்தப்பழி உள்ளதா என்பதைத் தீர்மானிப்பார்கள். சபை எடுக்கவிருக்கும் நடவடிக்கை முழுக்க முழுக்க அரசாங்கத்தின் கண்ணோட்டத்தையோ நீதிமன்ற தீர்ப்பையோ சார்ந்திருக்காது.
உதாரணமாக, அந்நபர் சில போக்குவரத்து விதிகளை மீறியிருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம், ஆனால், உயிரைப் பறித்த அந்த விபத்திற்கு காரணமான சம்பவங்கள் அந்த ஓட்டுனருடைய கட்டுப்பாட்டில் சிறிதளவுகூட அல்லது அறவே இல்லையென்பதால் அவர்மீது இரத்தப்பழி இல்லையென்று விசாரணை செய்த மூப்பர்கள் தீர்மானிக்கலாம். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றம் ஒருவேளை அந்த வழக்கை தள்ளுபடி செய்தாலும்கூட மூப்பர்கள் அவர்மீது இரத்தப்பழி உள்ளதென்ற முடிவுக்கு வரலாம்.
இந்த வழக்கை விசாரணைச் செய்யும் மூப்பர்களின் முடிவுகள் வேத வசனங்களின் அடிப்படையிலும் தெளிவாக உறுதிசெய்யப்பட்ட உண்மைகளின் அடிப்படையிலும் அமைய வேண்டும்; அது குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த நபரின் வாக்குமூலமாகவோ சம்பவத்தை நேரில் பார்த்த இரண்டு அல்லது மூன்று நம்பகமான ஆட்களின் சாட்சியமாகவோ இருக்கலாம். (உபாகமம் 17:6; மத்தேயு 18:15, 16) ஓட்டுனரின்மீது இரத்தப்பழி உள்ளதென்று உறுதி செய்யப்பட்டால், நியாய விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும். அந்நபர் மனந்திரும்பியிருக்கிறார் என்று அந்தக் குழு தீர்மானித்தால், அவர் வேத வசனங்களின் அடிப்படையில் கண்டிக்கப்படுவார்; அதோடு, சபையில் சில பொறுப்புகளும் அவருக்கு கொடுக்கப்படாது. அவர் தொடர்ந்து ஒரு மூப்பராகவோ உதவி ஊழியராகவோ சேவை செய்ய முடியாது. அவர்மீது மற்ற சில கட்டுப்பாடுகளும்கூட விதிக்கப்படும். அது மட்டுமல்லாமல், விபத்துக்கும் மரணத்துக்கும் காரணமான அவருடைய கவனக்குறைவுக்கும் அலட்சியப்போக்குக்கும் அவர் கடவுளுக்கு பதில் சொல்லும் பொறுப்பிலும் இருக்கிறார்.—கலாத்தியர் 6:5, 7.
உதாரணமாக, விபத்து நடந்த சமயத்தில் சீதோஷ்ண நிலை படுமோசமாக இருந்திருந்தால், வாகனத்தை ஓட்டியவர் அதிக கவனமாக இருந்திருக்க வேண்டும். அவர் தூக்கக் கலக்கத்தில் இருந்திருந்தால், சற்று நேரத்திற்கு வண்டியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்திருக்க வேண்டும், அல்லது வேறு யாரையாவது ஓட்டும்படி சொல்லியிருக்க வேண்டும்.
அந்த ஓட்டுனர் வேக வரம்பை மீறியதாக வைத்துக் கொள்வோம். அவ்வாறு மீறும் எந்தக் கிறிஸ்தவரும் ‘இராயனுடையதை இராயனுக்கு’ செலுத்துவதில் தவறுகிறார். அதோடு, உயிரின் பரிசுத்தத்தன்மையை அவர் மதிக்காததையும் இது காட்டுகிறது, ஏனெனில் இப்படி வேக வரம்பை மீறி ஓட்டுவது உயிருக்கே உலை வைத்துவிடக்கூடும். (மத்தேயு 22:21) இது சம்பந்தமாக மற்றொரு விஷயத்தையும் கவனிக்கலாம். ஒரு மூப்பர், அரசாங்கத்தின் போக்குவரத்து விதிமுறைகளை அலட்சியம் செய்பவராகவோ அதை வேண்டுமென்றே மீறுபவராகவோ இருந்தால் அவர் மந்தைக்கு எப்படி முன்மாதிரியாக இருக்க முடியும்?—1 பேதுரு 5:3.
ஓர் இடத்திற்கு மிகக்குறைந்த நேரத்திற்குள் வந்து சேரும்படி ஒருவர் தன் சக கிறிஸ்தவரை கட்டாயப்படுத்தலாம். சொன்ன நேரத்திற்கு போய்ச்சேர அந்தக் கிறிஸ்தவருக்கு வேக வரம்பை மீறுவதைத்தவிர வேறு வழியில்லாமல் போய்விடும். ஆகவே மற்றவர்களை இப்படிக் கட்டாயப்படுத்துவதை கிறிஸ்தவர்கள் தவிர்க்க வேண்டும். மாறாக, முன்னதாகவே கிளம்பிச் செல்லலாம், அல்லது பயணத்திற்கு அதிக நேரம் இருக்குமளவுக்கு மற்ற வேலைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்தால், சாதாரணமாக செல்வதைவிட அதிக வேகமாக செல்ல வேண்டுமென்ற தூண்டுதல் ஒரு கிறிஸ்தவருக்கு ஏற்படாது, அதோடு, “மேலான அதிகாரமுள்ள” அரசாங்கம் வகுத்திருக்கும் போக்குவரத்துச் சட்டங்களுக்கு அவரால் கீழ்ப்படிய முடியும். (ரோமர் 13:1, 5) இப்படிச் செய்கையில் மரணத்தை விளைவிக்கும் கோரமான விபத்துக்கு காரணமாகி விடாதிருக்க முடியும், அதனால் வரும் இரத்தப்பழியையும் தவிர்க்க முடியும். அதோடு, நல்ல முன்மாதிரி வைப்பதற்கும் நல்மனசாட்சியை காத்துக்கொள்வதற்கும் அது அவருக்கு உதவும்.—1 பேதுரு 3:16.