அன்பினால் பலப்படுத்தப்படுகிற தைரியம்
“தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.”—2 தீமோத்தேயு 1:7.
1, 2. (அ) அன்பு ஒருவரை என்ன செய்ய தூண்டுவிக்கும்? (ஆ) இயேசு வெளிக்காட்டிய தைரியம் ஏன் அசாதாரணமானது?
ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரத்திலுள்ள ஒரு நகரத்திற்கு அருகே புதுமணத் தம்பதியர் நீர்மூழ்கிக் கவசம் அணிந்து உல்லாசமாகக் கடலுக்கு அடியில் நீந்திக்கொண்டிருந்தார்கள். நீந்தி முடித்து மேலே வரவிருந்த சமயத்தில் பெரிய வெள்ளைச் சுறா ஒன்று அந்தப் பெண்ணை நோக்கி விரைந்தது. அவளுடைய கணவர் வீரதீரத்துடன் அவளைத் தள்ளிவிட்டு அவரே அதற்கு இரையானார். “எனக்காக அவர் தன் உயிரையே கொடுத்தார்” என சவ அடக்கத்தின்போது அவள் கூறினாள்.
2 ஆம், அன்பு அசாத்திய தைரியத்துடன் செயல்படும்படி மனிதர்களைத் தூண்டுவிக்கிறது. இயேசு கிறிஸ்து தாமே பின்வருமாறு கூறினார்: “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.” (யோவான் 15:13) இந்த வார்த்தைகளை அவர் சொல்லி 24 மணிநேரத்திற்குள்ளாகவே தம் உயிரை ஒரே ஒரு நபருக்காக அல்ல, முழு மனிதகுலத்திற்காகவும் அர்ப்பணித்தார். (மத்தேயு 20:28) எனினும், அவர் உயிரைக் கொடுத்தது தம் துணிவை வெளிக்காட்டுவதற்காகத் திடீரென செய்த செயலல்ல. கேலிசெய்யப்பட்டு, மோசமாக நடத்தப்பட்டு, அநியாயமாக தீர்ப்பளிக்கப்பட்டு, கழுமரத்தில் கொலை செய்யப்படவிருந்ததை அவர் முன்னதாகவே அறிந்திருந்தார். இப்படிப்பட்ட மரணத்தை எதிர்ப்பட இருந்ததால் தம் சீஷர்களைத் தயார்படுத்தும் விதத்தில் இவ்வாறு சொன்னார்: “இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள். அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர் மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள் . . . என்றார்.”—மாற்கு 10:33, 34.
3. இயேசுவின் அசாதாரண தைரியத்திற்கு எவை காரணமாய் இருந்தன?
3 இயேசுவின் அசாதாரண தைரியத்திற்கு எவை காரணமாய் இருந்தன? விசுவாசமும் தேவபயமும் அதில் முக்கிய பங்கு வகித்தன. (எபிரெயர் 5:7; 12:1) எல்லாவற்றுக்கும் மேலாக, கடவுளிடமும் சக மனிதரிடமும் இயேசுவுக்கு அன்பு இருந்ததால் அத்தகைய தைரியத்தை வெளிக்காட்டினார். (1 யோவான் 3:16) விசுவாசம், தேவபயம் ஆகியவற்றோடுகூட அத்தகைய அன்பை நாம் வளர்த்துக்கொண்டால் கிறிஸ்து காட்டியதைப் போன்ற தைரியத்தை நாமும் வெளிக்காட்டுவோம். (எபேசியர் 5:2) அத்தகைய அன்பை நாம் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? அதற்கு அந்த அன்பின் ஊற்றுமூலரை நாம் அறிந்துகொள்வது அவசியம்.
“அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது”
4. யெகோவாவே அன்பின் ஊற்றுமூலர் என ஏன் சொல்லலாம்?
4 யெகோவா அன்பின் உருவாகவும் அதன் ஊற்றுமூலராகவும் இருக்கிறார். அப்போஸ்தலன் யோவான் பின்வருமாறு எழுதினார்: “பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது: அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.” (1 யோவான் 4:7, 8) யெகோவா காட்டுகிற விதமான அன்பை வளர்த்துக்கொள்வதற்கு ஒருவர், திருத்தமான அறிவைப் பெற்று அவரிடம் நெருங்கி வர வேண்டும், அந்த அறிவுக்கு இசைய நடப்பதில் மனப்பூர்வமான கீழ்ப்படிதலைக் காட்ட வேண்டும்.—பிலிப்பியர் 1:9; யாக்கோபு 4:8; 1 யோவான் 5:3.
5, 6. கிறிஸ்து காட்டியதைப் போன்ற அன்பை வளர்த்துகொள்ள இயேசுவின் ஆரம்பகால சீஷர்களுக்கு எது உதவியது?
5 உண்மையுள்ள தம் 11 சீஷர்களுடன் சேர்ந்து இயேசு கடைசியாக ஜெபித்தபோது, கடவுளைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் அன்பிலே வளருவதற்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி இவ்வாறு சொன்னார்: “நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன்.” (யோவான் 17:26) தமக்கும் தம் பிதாவுக்கும் இடையே இருந்ததைப் போன்ற அன்பை தம் சீஷர்கள் தங்களுக்கு இடையே வளர்த்துக்கொள்ள இயேசு உதவினார்; கடவுளுடைய பெயர் சித்தரித்துக் காட்டுகிற அவருடைய அருமையான பண்புகளைப் பற்றி இயேசு பேசுவதன் மூலமும், வெளிக்காட்டுவதன் மூலமும் தம் சீஷர்களுக்கு உதவினார். எனவேதான், “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என அவரால் சொல்ல முடிந்தது.—யோவான் 14:9, 10; 17:8.
6 கிறிஸ்து காட்டிய அன்பு, கடவுளுடைய பரிசுத்த ஆவியின் கனியாகும். (கலாத்தியர் 5:22) வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த பரிசுத்த ஆவியை பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளில் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பெற்றுக்கொண்டபோது, தங்களுக்கு இயேசு கற்பித்த பல விஷயங்களை அவர்களால் நினைவுபடுத்திக்கொள்ள முடிந்தது; அதோடு, வேதவசனங்களின் அர்த்தத்தை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவும் முடிந்தது. இப்படி விஷயங்களை ஆழமாகப் புரிந்துகொண்டது கடவுளிடம் அவர்களுக்கு இருந்த அன்பைப் படிப்படியாக பலப்படுத்தியது. (யோவான் 14:26; 15:26) விளைவு? உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையிலும்கூட அவர்கள் நற்செய்தியை தைரியத்தோடும் வைராக்கியத்தோடும் பிரசங்கித்தார்கள்.—அப்போஸ்தலர் 5:28, 29.
தைரியமும் அன்பும்—செயலில்
7. தங்கள் மிஷனரி பயணத்தில் பவுலும் பர்னபாவும் எதை சகிக்க வேண்டியிருந்தது?
7 அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.” (2 தீமோத்தேயு 1:7) பவுல் தன் சொந்த அனுபவத்திலிருந்து பேசினார். பர்னபாவுடன் சேர்ந்து இவர் சென்ற மிஷனரி பயணத்தில் என்ன நடந்ததென இப்போது சிந்திக்கலாம். அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா உட்பட பல பட்டணங்களுக்குச் சென்று இவர்கள் பிரசங்கித்தார்கள். ஒவ்வொரு பட்டணத்திலும் சிலர் விசுவாசிகளானார்கள், மற்றவர்களோ கடுமையாய் எதிர்த்தார்கள். (அப்போஸ்தலர் 13:2, 14, 45, 50; 14:1, 5) லீஸ்திராவில் இருக்கும்போது கோபத்தில் கொதித்தெழுந்த ஜனக்கூட்டத்தார் பவுல்மீது கல்லெறியவும் செய்தார்கள், அவர் இறந்துவிட்டார் என நினைத்துக்கொண்டு அவரை விட்டுச் சென்றார்கள்! என்றாலும், ‘சீஷர்கள் அவரைச் சூழ்ந்து நிற்கையில், அவர் எழுந்து, பட்டணத்திற்குள் பிரவேசித்தார். மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப் போனார்.’—அப்போஸ்தலர் 14:6, 19, 20.
8. பவுலும் பர்னபாவும் காட்டிய தைரியத்திலிருந்து ஜனங்களிடம் அவர்களுக்கு ஆழமான அன்பிருந்தது எப்படித் தெரிந்தது?
8 ஜனங்கள் கொலை முயற்சியில் இறங்கியதைக் கண்டு பவுலும் பர்னபாவும் பயந்துபோய் பிரசங்கிப்பதையே நிறுத்திவிட்டார்களா? இல்லை! அதற்கு மாறாக, தெர்பையில் “அநேகரைச் சீஷராக்கின பின்பு,” இருவரும் ‘லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பி வந்தார்கள்.’ ஏன்? புதியவர்கள் விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருக்கும்படி உற்சாகப்படுத்துவதற்கு. “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று” பவுலும் பர்னபாவும் சொன்னார்கள். கிறிஸ்துவின் ‘ஆட்டுக்குட்டிகளிடம்’ அவர்கள் ஆழமான அன்பை வைத்திருந்ததால் அந்தத் தைரியத்தைப் பெற்றார்கள். (அப்போஸ்தலர் 14:21-23; யோவான் 21:15-17) புதிதாய் உருவான ஒவ்வொரு சபைகளிலும் மூப்பர்களை ஏற்படுத்தியபின் இந்தச் சகோதரர்கள் இருவரும் ஜெபித்து, “அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்.”
9. பவுல் காட்டிய அன்புக்கு எபேசு சபையின் மூப்பர்கள் எப்படிப் பிரதிபலித்தார்கள்?
9 பவுல் அதிக கரிசனையும் தைரியமுமிக்கவராக இருந்தார்; அதனால்தான், ஆரம்பகால கிறிஸ்தவர்களில் அநேகர் அவரை அதிகமதிகமாய் நேசித்தார்கள். எபேசு சபையின் மூப்பர்களை பவுல் சந்தித்தபோது என்ன நடந்தது என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள்; இந்தப் பட்டணத்தில் இருந்தபோதுதான் எதிர்ப்பின் மத்தியிலும் அவர் மூன்று ஆண்டுகள் பிரசங்கித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். (அப்போஸ்தலர் 20:17-31) அந்த மூப்பர்களை பவுல் சந்தித்தபோது, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட கடவுளுடைய மந்தையை மேய்க்கும்படி அவர்களை உற்சாகப்படுத்தினார்; பிறகு, அவர்களுடன் சேர்ந்து முழங்காற்படியிட்டு ஜெபித்தார். பின்னர், ‘அவர்களெல்லாரும் மிகவும் அழுது, என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்க மாட்டீர்களென்று அவர் சொன்ன வார்த்தையைக் குறித்து அதிகமாய்த் துக்கப்பட்டு, பவுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவரை முத்தஞ்செய்தார்கள்.’ அந்தச் சகோதரர்கள் பவுலிடம் எப்பேர்ப்பட்ட அன்பு வைத்திருந்தார்கள்! ஆம், புறப்பட வேண்டிய நேரம் வந்தபோது, அவரும் அவருடைய பயணத் தோழர்களும் வலுக்கட்டாயமாக ‘அவர்களை விட்டுப் பிரிந்து’ வர வேண்டியிருந்தது; பவுலை அனுப்ப அந்த மூப்பர்களுக்கு அந்தளவு மனமில்லாதிருந்தது.—அப்போஸ்தலர் 20:36–21:1.
10. இன்று யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு தைரியமாக அன்பை ஒருவருக்கொருவர் வெளிக்காட்டுகிறார்கள்?
10 இன்று, யெகோவாவின் ஆடுகளுக்காக தைரியத்துடன் செயல்படும் பயணக் கண்காணிகளும், சபை மூப்பர்களும், இன்னும் அநேகரும் நெஞ்சார நேசிக்கப்படுகிறார்கள். உதாரணத்திற்கு, உள்நாட்டு கலகத்தால் சின்னாபின்னமாகியிருக்கும் நாடுகளில் அல்லது பிரசங்க வேலை தடைசெய்யப்பட்டுள்ள நாடுகளில், பயணக் கண்காணிகளும் அவர்களுடைய மனைவிமார்களும் தங்கள் உயிரையே பணயம் வைத்து சபைகளைப் போய் சந்திக்கிறார்கள்; கைது செய்யப்படும் அபாயம் இருக்கும்போதிலும் அவ்வாறு செய்கிறார்கள். அதேபோல், தங்களுடைய சகோதர சகோதரிகளைக் காட்டிக்கொடுக்காததால் அல்லது ஆன்மீக உணவைப் பெறும் வழியைத் தெரிவிக்காததால் எதிர்க்கும் அதிகாரிகளின் கையிலும் அவர்களுடைய அடியாட்களின் கையிலும் அநேக யெகோவாவின் சாட்சிகள் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். இன்னும் ஆயிரக்கணக்கானோர் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள், சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள், கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஏன்? அவர்கள் நற்செய்தியைப் பிரசங்கிப்பதை அல்லது யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்வதை நிறுத்தாததால் இப்படிப்பட்ட கஷ்டங்களை எதிர்ப்பட்டிருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 5:28, 29; எபிரெயர் 10:24, 25) இத்தகைய தைரியமிக்க சகோதர சகோதரிகளின் விசுவாசத்தையும் அன்பையும் நாம் பின்பற்றுவோமாக!—1 தெசலோனிக்கேயர் 1:6.
உங்கள் அன்பு தணியாதிருக்கட்டும்
11. யெகோவாவின் ஊழியர்களுக்கு எதிராக எந்த வழிகளில் சாத்தான் ஆன்மீக போர் தொடுக்கிறான், அதற்காக அவர்கள் என்ன செய்வது அவசியம்?
11 பூமிக்கு சாத்தான் தள்ளப்பட்டபோது, ‘தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சி’ பகருகிற, யெகோவாவின் ஊழியர்கள்மீது தன் கோபாவேசத்தைக் காட்ட அவன் தீர்மானமாய் இருந்தான். (வெளிப்படுத்துதல் 12:9, 17) பிசாசு பயன்படுத்தும் சூழ்ச்சி முறைகளில் ஒன்று துன்புறுத்தலாகும். எனினும் இந்தத் தந்திரம் பெரும்பாலும் நேர்மாறான விளைவையே ஏற்படுத்தியிருக்கிறது; இது கடவுளுடைய ஜனங்களை கிறிஸ்தவ அன்பு எனும் கட்டில் இன்னும் நெருங்கி வர செய்திருக்கிறது, அநேகரை அதிக பக்திவைராக்கியத்தோடு செயல்படவும் தூண்டியிருக்கிறது. சாத்தான் பயன்படுத்தும் மற்றொரு சூழ்ச்சிமுறை, மனிதனின் பாவ மனச்சாய்வுகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வசீகரிப்பது. இந்தத் தந்திரத்தை எதிர்ப்பதற்கு விசேஷித்த தைரியம் வேண்டும்; ஏனெனில், இது உள்ளுக்குள் நடக்கும் போராட்டமாகும்; அதாவது, ‘திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமான’ இருதயத்தின் தவறான ஆசைகளுக்கு எதிரான போராட்டமாகும்.—எரேமியா 17:9; யாக்கோபு 1:14, 15.
12. கடவுள் மீதுள்ள நம் அன்பைப் பலவீனப்படுத்த சாத்தான் எப்படி ‘உலகத்தின் ஆவியைப்’ பயன்படுத்துகிறான்?
12 சாத்தானின் படைக்கல சாலையில் இருக்கும் மற்றொரு சக்தி வாய்ந்த ஆயுதம், “உலகத்தின் ஆவி,” அதாவது, உலகத்தின் மனப்பான்மை அல்லது தூண்டுதல் ஆகும்; இந்த ஆவி, கடவுளுடைய பரிசுத்த ஆவிக்கு நேர் எதிரானது. (2 கொரிந்தியர் 2:12) இந்த உலகத்தின் ஆவி, ‘கண்களின் இச்சையாகிய’ பேராசையையும் பொருளாசையையும் ஊக்குவிக்கிறது. (1 யோவான் 2:16; 1 தீமோத்தேயு 6:9, 10) பொருளும் பணமும் வைத்திருப்பதில் தவறேதும் இல்லைதான்; ஆனால், கடவுள்மீது வைத்துள்ள அன்பைவிட அவற்றின்மீது நாம் அதிக அன்பை வைத்தோமானால், சாத்தான் வெற்றி பெற்றதாக அர்த்தம். உலகத்தின் ஆவி, பாவ மாம்சத்தைக் கவர்ந்திழுக்கிறது, தந்திரமிக்கது, இரக்கமற்றது, காற்றைப் போல எங்கும் பரவியிருக்கிறது; இவ்வாறு அது ‘அதிகாரம்’ செலுத்துகிறது. உலகத்தின் ஆவி உங்கள் இருதயத்தைப் பாதிக்க அனுமதிக்காதீர்கள்!—எபேசியர் 2:2, 3; நீதிமொழிகள் 4:23.
13. ஒழுக்க ரீதியில் நம்மை சுத்தமாக வைத்துக்கொள்ளும்போது நம் தைரியம் எப்படிச் சோதிக்கப்படலாம்?
13 இந்த உலகத்தின் பொல்லாத ஆவியை எதிர்ப்பதற்கும் ஒதுக்கித் தள்ளுவதற்கும் ஒழுக்க ரீதியில் நம்மை சுத்தமாக வைத்துக்கொள்ள தைரியம் தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு, தரக்குறைவான காட்சிகள் வருகையில் சினிமா தியேட்டரைவிட்டு வெளியேறுவதற்கு அல்லது கம்ப்யூட்டரையோ டிவியையோ நிறுத்துவதற்குத் தைரியம் தேவைப்படுகிறது. கெட்ட தோழர்களின் சகவாசத்திலிருந்து விலகுவதற்கும் மோசமான கூட்டுறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் தைரியம் தேவைப்படுகிறது. அதைப் போலவே, சக மாணவர்கள், உடன் வேலை செய்பவர்கள், அக்கம்பக்கத்தார், உறவினர்கள் போன்றோருடைய கேலிகிண்டலுக்கு மத்தியிலும், கடவுளுடைய சட்டங்களையும் நியமங்களையும் ஆதரிப்பதற்குத் தைரியம் தேவைப்படுகிறது.—1 கொரிந்தியர் 15:33; 1 யோவான் 5:19.
14. இந்த உலகத்தின் ஆவியால் பாதிக்கப்பட்டிருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?
14 அப்படியென்றால், கடவுளிடமும் நம் ஆன்மீக சகோதர சகோதரிகளிடமும் உள்ள நம் அன்பைப் பலப்படுத்திக்கொள்வது எவ்வளவு முக்கியம்! எந்த விதத்திலாவது உலகத்தின் ஆவி உங்களைப் பாதித்திருக்கிறதா என்பதைக் காண உங்கள் இலட்சியங்களையும் வாழ்க்கைமுறையையும் ஆராய்ந்து பார்க்க நேரத்தை ஒதுக்குங்கள். அப்படிப் பாதித்திருந்தால், கொஞ்சம் பாதித்திருந்தாலும்கூட, அதை முற்றிலும் அகற்றுவதற்கும், மீண்டும் அண்டவிடாதிருப்பதற்கும் தைரியத்தைத் தரும்படி கேட்டு யெகோவாவிடம் ஜெபியுங்கள். மனமார நீங்கள் செய்யும் விண்ணப்பங்களை யெகோவா புறக்கணிக்க மாட்டார். (சங்கீதம் 51:17) அதோடுகூட, அவருடைய ஆவி இந்த உலகத்தின் ஆவியைவிடவும் பல மடங்கு வல்லமை வாய்ந்ததாய் இருக்கிறது.—1 யோவான் 4:4.
தனிப்பட்ட சோதனைகளைத் தைரியமாகச் சமாளித்தல்
15, 16. கிறிஸ்து காட்டியதைப் போன்ற அன்பு தனிப்பட்ட சோதனைகளைச் சமாளிக்க எப்படி உதவுகிறது? ஓர் உதாரணம் தருக.
15 யெகோவாவின் ஊழியர்கள் அபூரணத்தாலும் முதுமையாலும் வருகிற நோய், உடல் குறைபாடு, மனச்சோர்வு ஆகியவற்றையும் இன்னும் பிற பிரச்சினைகளையும் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது. (ரோமர் 8:22) கிறிஸ்து காட்டியதைப் போன்ற அன்பு இந்தச் சோதனைகளைச் சமாளிக்க நமக்கு உதவலாம். உதாரணத்திற்கு, ஜாம்பியா நாட்டில் வாழும் நாமாங்கால்வா என்ற சகோதரியை எடுத்துக்கொள்வோம். இவர், ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டார். இவர் இரண்டு வயது குழந்தையாய் இருந்தபோது ஊனமடைந்தார். “என்னைப் பார்த்து ஜனங்கள் என்ன நினைப்பார்களோ என பயந்தேன். ஆனால், அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள என் ஆன்மீக சகோதர சகோதரிகள் எனக்கு உதவினார்கள். இதனால் என்னைப் பற்றி அதிகம் யோசிக்காமல் இருக்கப் பழகிக்கொண்டேன், சீக்கிரத்திலேயே முழுக்காட்டுதல் பெற்றேன்.”
16 நாமாங்கால்வாவிடம் வீல்சேர் இருக்கிறபோதிலும் பெரும்பாலும் அவர் புழுதிபடிந்த தெருவில் தவழ்ந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது. இருப்பினும், ஒவ்வொரு வருடமும் இரண்டு மாதங்களாவது துணைப் பயனியர் ஊழியம் செய்கிறார். ஒருமுறை இவர் சாட்சி கொடுப்பதைப் பார்த்து ஒரு வீட்டுக்காரர் அழுதே விட்டாராம். ஏன்? நம் சகோதரியின் விசுவாசத்தையும் தைரியத்தையும் பார்த்து அவர் நெகிழ்ந்துபோனாராம். யெகோவாவின் அபரிமிதமான ஆசீர்வாதம் இருப்பதற்கு அத்தாட்சியாக இவர் பைபிள் படிப்பு நடத்திய மாணாக்கர்களில் ஐந்து பேர் முழுக்காட்டுதல் பெற்றிருக்கிறார்கள்; அவர்களில் ஒருவர் சபை மூப்பராகச் சேவை செய்து வருகிறார். “அடிக்கடி என் கால்கள் தாங்க முடியாத அளவுக்கு வலிக்கும், அதற்குப் பயந்து ஊழியத்திற்குப் போகாமல் இருந்துவிட மாட்டேன்.” உலகெங்கிலும் எண்ணற்ற யெகோவாவின் சாட்சிகள் உடலில் பலவீனமாகவும் உள்ளத்தில் பலமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்; அவர்களில் இந்தச் சகோதரியும் ஒருவர். கடவுளிடமும் மற்றவர்களிடமும் வைத்திருக்கும் அன்பினாலேயே இவர்கள் பலமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாரையும் யெகோவா எவ்வளவு அருமையானவர்களாய் கருதுகிறார்!—ஆகாய் 2:7, NW.
17, 18. வியாதியையும் மற்ற சோதனைகளையும் சமாளிக்க அநேகருக்கு எது உதவுகிறது? உள்ளூர் உதாரணங்களைத் தருக.
17 நாள்பட்ட வியாதிகூட உற்சாகத்தைப் பறித்துவிடலாம், மனச்சோர்வையும் ஏற்படுத்தலாம். ஒரு சபையின் மூப்பர் இவ்வாறு சொன்னார்: “நான் கலந்துகொள்ளும் புத்தகப் படிப்பு தொகுதியில், ஒரு சகோதரிக்கு சக்கரை வியாதியும் இருக்கிறது, சிறுநீரகமும் வேலை செய்வதில்லை, இன்னொரு சகோதரியை புற்றுநோய் பாடாய்ப் படுத்துகிறது, இரண்டு சகோதரிகளை கடுமையான மூட்டுவலி தொல்லைப்படுத்துகிறது, ஒரு சகோதரியை தோல் அழிநோயும் ஃபைப்ரோமையால்ஜியா நோயும் வாட்டுகின்றன. இவர்கள் சில சமயங்களில் உற்சாகம் இழந்துவிடுகிறார்கள். ஆனால், ரொம்பவே முடியாதபோதும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கும்போதும் மட்டுமே கூட்டத்திற்கு வராதிருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் வெளி ஊழியத்தில் தவறாமல் கலந்துகொள்கிறார்கள். இவர்களைப் பார்க்கும்போது, ‘நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்’ என்று பவுல் சொன்னது என் நினைவுக்கு வருகிறது. இவர்கள் காட்டும் அன்பும் தைரியமும் என்னை வியக்க வைக்கிறது. இவர்களுடைய சுகவீனம், வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றியும் எது அதிக முக்கியம் என்பதைப் பற்றியும் தெளிவாகப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுகிறது எனலாம்.”—2 கொரிந்தியர் 12:10.
18 முதுமை, வியாதி, அல்லது வேறு ஏதாவது பிரச்சினையோடு நீங்கள் போராடி வருகிறீர்கள் என்றால் உற்சாகம் இழந்துபோகாதிருக்க உதவிகேட்டு, “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:14, 17) உணர்ச்சி ரீதியில் ஒருவேளை நீங்கள் ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்கலாம் என்பது உண்மைதான்; ஆனால், உற்சாகமூட்டும், ஆன்மீக காரியங்களின் மீது, முக்கியமாக அருமையான ராஜ்ய நம்பிக்கையின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்த முயற்சி செய்யுங்கள். “வெளி ஊழியம்தான் என் வியாதிக்கு மருந்து” என ஒரு சகோதரி சொன்னார். மற்றவர்களுடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வது நம்பிக்கையான மனநிலையுடன் இருக்க அவருக்கு உதவுகிறது.
தவறு செய்தவர்கள் யெகோவாவிடம் திரும்பி வர அன்பு உதவுகிறது
19, 20. (அ) பாவத்தின் பிடியில் சிக்கியவர்கள் யெகோவாவிடம் திரும்பி வருவதற்கான தைரியத்தைப் பெற எது உதவலாம்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைச் சிந்திப்போம்?
19 ஆன்மீக ரீதியில் சோர்ந்துபோன அல்லது பாவத்தின் பிடியில் சிக்கிய அநேகருக்கு, யெகோவாவிடம் திரும்பி வருவது கடினமாய் இருக்கிறது. ஆனால், அவர்கள் உண்மையிலேயே மனந்திரும்பி, மீண்டும் கடவுளை நேசிக்க ஆரம்பித்தால் அதற்கான தைரியம் தானாக வந்துவிடும். அமெரிக்காவில் வாழும் மார்யோa என்பவரின் உதாரணத்தைக் கவனியுங்கள். இவர் கிறிஸ்தவ சபையைவிட்டு வெளியேறினார், மதுவுக்கும் போதைப் பொருளுக்கும் அடிமையானார்; 20 வருடம் கழித்து சிறையில் தள்ளப்பட்டார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “என் எதிர்காலத்தைக் குறித்து தீவிரமாக யோசிக்கவும் மீண்டும் பைபிளைப் படிக்கவும் ஆரம்பித்தேன். சீக்கிரத்திலேயே யெகோவாவுடைய பண்புகளை, முக்கியமாக அவருடைய இரக்கத்தை மதிக்க ஆரம்பித்தேன்; எனக்கு இரக்கம் காட்டும்படி அடிக்கடி ஜெபித்தேன். சிறையிலிருந்து விடுதலை பெற்றதும் என் பழைய கூட்டாளிகளின் சகவாசத்தை நிறுத்தினேன், கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் சென்றேன், பிறகு மீண்டும் சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டேன். பழைய வாழ்க்கையில் என் உடலைக் கெடுத்துக்கொண்டதால், அதன் பலனை இப்போது அனுபவிக்கிறேன்; ஆனால், இப்போது எனக்கு அருமையான எதிர்கால நம்பிக்கை இருக்கிறது. யெகோவா என்மீது இரக்கம் காட்டி, மன்னித்திருப்பதற்கு நான் எந்தளவு நன்றி சொன்னாலும் போதாது.”—சங்கீதம் 103:9-13; 130:3, 4; கலாத்தியர் 6:7, 8.
20 மார்யோ இருந்ததைப் போன்ற சூழ்நிலைகளில் உள்ளவர்கள் யெகோவாவிடம் திரும்பி வருவதற்கு பெரும் முயற்சி எடுக்க வேண்டுமென்பது உண்மைதான். ஆனால், இழந்துபோன அன்பை பைபிள் படிப்பு, ஜெபம், தியானம் மூலம் அவர்கள் மீண்டும் பெறும்போது அது அவர்களுக்குத் தேவையான தைரியத்தையும் உறுதியையும் தருகிறது. கடவுளுடைய ராஜ்யத்தின் மீதுள்ள நம்பிக்கையும்கூட மார்யோவுக்குப் பலத்தைத் தந்தது. ஆம், நல்ல வாழ்க்கை அமைவதற்கு, அன்பு, விசுவாசம், தேவபயம் ஆகியவற்றுடன் நம்பிக்கையும் பெரும் பங்கு வகிக்கிறது. அடுத்த கட்டுரையில் இந்த அருமையான ஆன்மீக பரிசைக் குறித்து விளக்கமாய் சிந்திப்போம்.
[அடிக்குறிப்பு]
a பெயர் மாற்றப்பட்டுள்ளது.
உங்களால் பதில் அளிக்க முடியுமா?
• இயேசுவின் அசாதாரண தைரியத்திற்கு அன்பு எப்படிக் காரணமாய் இருந்தது?
• பவுலும் பர்னபாவும் சகோதரர்களிடம் வைத்திருத்த அன்பு எப்படி அவர்களுக்கு அசாதாரண தைரியத்தைத் தந்தது?
• கிறிஸ்தவ அன்பை அழித்துப்போட எந்த விதங்களில் சாத்தான் முயற்சி செய்கிறான்?
• யெகோவா மீதுள்ள அன்பு எந்தச் சோதனைகளைச் சகிப்பதற்கு நமக்குத் தைரியத்தைத் தரும்?
[பக்கம் 23-ன் படம்]
ஜனங்களிடம் பவுலுக்கு இருந்த அன்பு சகித்திருக்க அவருக்குத் தைரியத்தைத் தந்தது
[பக்கம் 24-ன் படம்]
கடவுளுடைய ஒழுக்க நெறிகளை ஆதரிப்பதற்குத் தைரியம் தேவை
[பக்கம் 24-ன் படம்]
நாமாங்கால்வா சுடுடு