தோன்றி மறைந்த “மாமேதைகள்”
“பிள்ளை வளர்ப்பு,” “ஆலோசனை” ஆகிய வார்த்தைகளை இன்டர்நெட்டில் தேடினால், அவை காணப்படும் இரண்டு கோடியே அறுபது லட்சத்திற்கும் அதிகமான இடங்களை அது உடனடியாக காட்டிவிடும். இவை ஒவ்வொன்றையும் வாசிப்பதற்கு ஒரு நிமிடம் எடுத்துக்கொண்டாலும்கூட, இவை எல்லாவற்றையும் வாசித்து முடிப்பதற்குள் உங்களுடைய பிள்ளை வளர்ந்து, தனியாக வாழ ஆரம்பித்துவிடுவான்/ள்.
குழந்தை நல மருத்துவர்கள், குழந்தை மனநல நிபுணர்கள், இன்டர்நெட் எல்லாம் தோன்றுவதற்கு முன் பிள்ளை வளர்ப்புக்கான ஆலோசனைகளை பெற்றோர்கள் எங்கிருந்து பெற்றார்கள்? பொதுவாகவே, அவர்கள் தங்களுடைய சொந்தபந்தங்களிடம்தான் பெற்றார்கள். அம்மா, அப்பா, மாமியார், மாமனார் என இவர்கள் எல்லாரும் அதற்குத் தயாராக இருந்தார்கள். ஆலோசனை கொடுப்பது, பண உதவி அளிப்பது, குழந்தைகளைக் கவனித்துக்கொள்வது போன்ற உதவிகளை அவர்கள் செய்தார்கள். ஆனால், அநேக நாடுகளில், கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு மக்கள் பெருமளவில் குடிமாறுவதால், சொந்தபந்தங்களோடு உள்ள பிணைப்பு அவர்களுக்கு ஏறக்குறைய இல்லாமலே போய்விடுகிறது. எனவே, பிள்ளைகளை மற்றவர்களுடைய உதவியின்றி தாங்களாகவே வளர்க்கும் சவாலை இன்று தாய் தகப்பன்மார் எதிர்ப்படுகிறார்கள்.
குழந்தைகளைப் பராமரிக்கும் “தொழில்” இன்று கிடுகிடுவென வளர்ந்திருப்பதற்கு இது ஒரு காரணம் என்பதில் சந்தேகமில்லை. எங்குமுள்ளோர் அறிவியல்மீது நம்பிக்கை வைத்திருப்பது மற்றொரு காரணமாகும். மனித வாழ்க்கையின் எல்லா அம்சத்தையும் அறிவியல் மேம்படுத்தும் என 1800-களின் பிற்பகுதிக்குள்ளாக அமெரிக்கர்கள் நம்ப ஆரம்பித்திருந்தார்கள். அப்படியானால், அறிவியலால் குழந்தை வளர்ப்பை மேம்படுத்த முடியாதா, என்ன? 1899-ல் தாய்மாருக்குரிய அமெரிக்க தேசிய காங்கிரஸ், “பெற்றோரின் திறமையின்மையை” குறித்து வெளிப்படையாகவே வருத்தம் தெரிவித்தபோது, உதவி அளிக்க “அறிவியல் வல்லுநர்கள்” உடனடியாக படை திரண்டு வந்தார்கள். பிள்ளைகளை வளர்க்க பாடுபடும் தாய்தகப்பன்மாருக்கு உதவுவதாக அவர்கள் வாக்குக் கொடுத்தார்கள்.
புத்தகங்களில் ஆலோசனை தேடி
இருந்தாலும், இந்த வல்லுநர்கள் எதைச் சாதித்திருக்கிறார்கள்? இன்றைய பெற்றோர்கள், அன்றைய பெற்றோர்களைவிட கவலையற்றவர்களாயும் பிள்ளைகளை நன்கு வளர்க்க தெரிந்தவர்களாயும் இருக்கிறார்களா? இல்லை என்றே பிரிட்டனில் நடத்தப்பட்ட சமீபத்திய சுற்றாய்வு காட்டியது. சிறு பிள்ளைகளை உடைய சுமார் 35 சதவீத பெற்றோர்கள், நம்பகமான ஆலோசனைக்காக இன்னும் தேடிக்கொண்டிருப்பதாக அது காட்டியது. மற்றவர்களோ, தங்களுக்குச் சரியென படுகிற வழியைப் பின்பற்றினால் போதுமென நினைக்கிறார்கள்.
அமெரிக்க பிள்ளைகளை வளர்த்தல்: வல்லுநர்கள், பெற்றோர்கள், மற்றும் பிள்ளை வளர்ப்புக்கு நூறாண்டுகால ஆலோசனை (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் ஆன் ஹல்பர்ட் என்பவர் பிள்ளை வளர்ப்பு பற்றிய தரமான பிரசுரங்களை ஆராய்கிறார். வல்லுநர்களின் கண்டுபிடிப்புகள் எல்லாம் அறிவியல் ஆதாரமற்றவை என்பதை இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான இவரே குறிப்பிடுகிறார். அவர்களுடைய ஆலோசனைகள் நம்பகமான தகவலின் அடிப்படையில் அல்ல, ஆனால் முழுக்க முழுக்க சொந்த அனுபவத்தின் அடிப்படையில் இருப்பதாகத் தெரிகின்றன. கடந்த காலத்தைப் பின்னோக்கிப் பார்க்கையில், அவர்கள் எழுதியவை பெரும்பாலும் அப்போதைக்குப் பிரபலமானதாக, ஒன்றுக்கொன்று முரண்படுவதாக, சில சமயங்களில் ரொம்பவே விநோதமானதாக இருந்தது தெரிகிறது.
ஆக, பெற்றோர்கள் இன்று என்ன சூழ்நிலையில் இருக்கிறார்கள்? உண்மையைச் சொன்னால், முன்பைவிட ஏகப்பட்ட ஆலோசனைகளையும், அபிப்பிராயங்களையும், முரண்பாடான கருத்துகளையும் கேட்டுக்கேட்டு அநேகர் குழம்பிப்போய் இருக்கிறார்கள். என்றாலும், எல்லா பெற்றோர்களுமே திக்குத்தெரியாமல் தவிப்பதில்லை. உலகெங்குமுள்ள அநேக பெற்றோர்கள் ஞானம் பொதிந்த பூர்வகால புத்தகத்திலிருந்து பயனடைகிறார்கள்; அது நம்பகமான ஆலோசனை வழங்கும் வற்றாத நீரூற்றாகவே இன்னும் திகழ்கிறது. எப்படி என்பதை அடுத்தக் கட்டுரையில் பார்க்கலாம்.