பெற்றோர் அழுத்தத்தில் இருக்கிறார்கள்
புதிதாக பெற்றோராபவர்கள் பெரும்பாலும் அளவுகடந்த குதூகலத்துடன் காணப்படுவார்கள். அவர்களுடைய குழந்தையைப் பற்றிய கிட்டத்தட்ட அனைத்தும் அவர்களைக் கிளர்ச்சியடையச் செய்யும். குழந்தையின் முதல் சிரிப்பு, முதல் வார்த்தைகள், முதன்முதலில் தத்திதத்தி எடுத்துவைக்கும் அடிகள் என இவை யாவுமே அவர்களால் மிக முக்கியமான சமயங்களாக கருதப்படும். போட்டோக்களைக் காண்பித்தும் குழந்தையைப் பற்றி கதைகதையாய்ச் சொல்லியும் தங்களுடைய நண்பர்களையும் உறவினர்களையும் சந்தோஷப்படுத்துவார்கள். கேள்விக்கிடமின்றி, அவர்கள் தங்களுடைய பிள்ளையை நேசிக்கிறார்கள்.
இருப்பினும், சில குடும்பங்களில், ஆண்டுகள் செல்லச் செல்ல விசனகரமான சம்பவங்கள் நிகழ ஆரம்பிக்கின்றன. பெற்றோரின் கொஞ்சிப் பேசிய விளையாட்டுத்தனமான ஆசைப் பேச்சுக்களுக்கு பதிலாக கடுமையான இழிவான வார்த்தைகள் பாய்ந்து வருகின்றன. பாசத்துடன் கட்டியணைத்த அரவணைப்பு இப்போது கோபமான அடிகளாக விழுகின்றன அல்லது தொடுவதே முற்றிலுமாக நின்றுவிடுகிறது. பெற்றோர் என்று பெருமைப்பட்டது இப்போது கசக்கத் தொடங்குகிறது. “நான் குழந்தைகளே பெற்றிருக்கக்கூடாது” என்று அநேகர் சொல்லத் தொடங்குகின்றனர். மற்ற குடும்பங்களில் பிரச்சினை இன்னும் மோசமாக இருக்கிறது—அந்தப் பிள்ளை குழந்தையாக இருக்கும்போதே பெற்றோர் அன்பைக் காட்டத் தவறுகின்றனர்! நிலைமை எவ்வாறாயினும், என்ன நடந்துவிட்டது? அன்பு எங்கே?
இயல்பாகவே, இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில்களைக் கண்டுபிடிக்குமளவிற்கு பிள்ளைகள் திறமை வாய்ந்தவர்களில்லை. ஆனால் அது அவர்களாகவே சொந்த முடிவுகளை எடுப்பதிலிருந்து அவர்களைத் தடுத்து நிறுத்துகிறதில்லை. தன்னுடைய இருதயத்தின் ஆழத்தில் ஒரு பிள்ளை இவ்விதமாக முடிவு செய்யக்கூடும். ‘என்கிட்ட ஏதோ தப்பு இருக்கிறதுனாலதான், அம்மாக்கோ அப்பாக்கோ என்னைப் பாத்தாலே பிடிக்கல. நான்தான் ரொம்ப கெட்டவனாக இருக்கிறேன்.’ இந்த எண்ணம் ஆழமாக பதியக்கூடும்—இதுவே வாழ்க்கை முழுவதுமாக எல்லாவிதமான சேதங்களுக்கும் காரணமாகிவிடக்கூடும்.
இருப்பினும், உண்மை என்னவென்றால், பலவிதமான காரணங்களால் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு தேவைப்படும் அன்பை காட்டத் தவறலாம். பெற்றோர்கள் இன்று பயங்கரமான அழுத்தங்களை எதிர்ப்படுகின்றனர் என்பது ஒத்துக் கொள்ளப்பட வேண்டும். அவற்றில் சில முன்பு சம்பவித்திராத அளவுகளில் இருக்கின்றன. இவற்றைச் சரியான முறையில் கையாள தயாரான நிலையில் இல்லாத பெற்றோர்களுக்கு, இத்தகைய அழுத்தங்கள் பெற்றோராக அவர்களுடைய ஆற்றலை உண்மையில் பெரிதும் சேதப்படுத்துகின்றன. ஒரு பழைய நீதிமொழி குறிப்பிடுகிறது: “இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்.”—பிரசங்கி 7:7.
“கையாளுவதற்கு கடினமான காலங்கள்”
கற்பனைக்கு எட்டாத ஒரு உலக சகாப்தம் (utopian age). இத்தகைய முன்னேற்றம் நிகழ்வதைக் காணவே இன்றைய நூற்றாண்டிலுள்ள அநேக மக்கள் எதிர்பார்க்கின்றனர். கற்பனை செய்து பாருங்கள்—பொருளாதார அழுத்தங்கள், பஞ்சங்கள், வறட்சிகள், யுத்தங்கள் இனிமேலும் இல்லை! ஆனால் இத்தகைய நம்பிக்கைகள் நிறைவேறாமல் போய்விட்டிருக்கின்றன. அதற்கு மாறாக, பொ.ச. முதல் நூற்றாண்டிலிருந்த ஒரு பைபிள் எழுத்தாளர் தீர்க்கதரிசனமுரைத்த விதமாகவே இன்றைய உலகம் மாறியுள்ளது. நம்முடைய நாட்களில் ‘கையாளுவதற்கு கடினமான காலங்களை’ நாம் எதிர்ப்படுவோம் என்று அவர் எழுதினார். (2 தீமோத்தேயு 3:1-5, NW) இந்த வார்த்தைகளை பெரும்பாலான பெற்றோர்கள் உடனே ஒத்துக் கொள்வர்.
இன்றைய உலகில் பிள்ளைகளை வளர்ப்பதற்கு ஏற்படும் பயங்கர செலவுகளால் அநேக புதிய பெற்றோர்கள் அடிக்கடி திகைத்துப் போய் நிற்கிறார்கள். வெறும் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பெரும்பாலும் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மருத்துவச் செலவுகள், துணிமணிகள், பள்ளிச்செலவு, குழந்தைக் காப்பகம், இன்னும் உணவு, உறைவிடம் என, இவையெல்லாவற்றிற்கும் மாதந்தோறும் ஆகும் செலவுகள் வந்து குவியும்போது, பெற்றோர்கள் திக்குமுக்காடிப் போகிறார்கள். இத்தகைய பொருளாதார சூழ்நிலைமை பைபிள் மாணாக்கருக்கு, வெளிப்படுத்துதலிலுள்ள தீர்க்கதரிசனத்தை நினைவுபடுத்துகிறது. மக்கள், ஒருநாள் முழுவதும் வேலை செய்து வாங்கும் கூலியை, அந்த ஒரு நாளின் அத்தியாவசியமான பொருட்களை மட்டுமே வாங்குவதற்கு செலவழிக்கும் ஒரு காலத்தை அது முன்னறிவிக்கிறது!—வெளிப்படுத்துதல் 6:6.
தங்கள் பெற்றோர் எதிர்ப்படும் இத்தகைய அழுத்தங்களை பிள்ளைகள் புரிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இயல்பாகவே, பிள்ளைகள் தேவைகள் மிகுந்தவர்களாக, அன்பிற்காகவும் கவனிப்பிற்காகவும் ஏங்குகிறவர்களாக இருக்கிறார்கள். நவீன விளையாட்டு பொருட்கள், உடைகள், மின்சாதனங்கள் போன்றவை தங்களிடம் இருக்க வேண்டும் என்ற அழுத்தத்தை செய்தி தொடர்பு மூலங்களிடமிருந்தும், பள்ளித் தோழர்களிடமிருந்தும் பெறுவதினால், அவர்களுடைய தேவைகளின் பட்டியல் எப்போதும் நீண்டுகொண்டே போகிறது. இது பெற்றோர் மீது கூடுதலான அழுத்தத்தில் விளைவடைகிறது.
கலகத்தனம், இன்றைய நாட்களில் அதிக மோசமடைந்து வருவதாக தோன்றும், பெற்றோர்மீது சுமரும் மற்றொரு அழுத்தமாக உள்ளது. ஆர்வத்துக்குரியவிதமாக, பெற்றோர்களுக்கு பிள்ளைகள் கீழ்ப்படியாதிருத்தல் பரவலாக காணப்படுவதுதானே, நம்முடைய கடினமான காலங்களின் மற்றொரு அறிகுறி என்பதாக பைபிள் முன்னறிவித்துள்ளது. (2 தீமோத்தேயு 3:2) உண்மைதான், பிள்ளைகளை சிட்சிக்கும்போது பிரச்சினைகளை எதிர்ப்படுவது ஒன்றும் புதிய விஷயமில்லை. எந்த பெற்றோருமே பிள்ளையை மோசமாக நடத்திவிட்டு, அதற்கான பழியை அந்த பிள்ளையின் தவறான நடத்தையின்மீது போடுவது நியாயமல்ல. ஆனால் முழுவதும் கலகத்தன்மையால் நிறைந்துள்ள கலாச்சாரத்தில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வளர்க்கப் போராடுகிறார்கள் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் அல்லவா? கடுங்கோபம், கலகம், நம்பிக்கையின்மை ஆகியவற்றை முன்னேற்றுவிக்கும் பிரபலமான இசை; பெற்றோர்களை அடிமுட்டாள்களாகவும் பிள்ளைகளை அவர்களைவிட அதிபுத்திசாலிகளாகவும் வர்ணிக்கும் டிவி நிகழ்ச்சிகள்; வன்முறையான மனச்சாய்வைத் தூண்டும் நடத்தைகளை மேன்மைப்படுத்தும் சினிமா காட்சிகள்—இத்தகைய செல்வாக்குகளால் இன்றுள்ள பிள்ளைகள் தாக்கப்படுகின்றனர். கலகத்தன கலாச்சாரத்தை கவனித்துப் பின்பற்றும் பிள்ளைகள் தங்கள் பெற்றோரின்மீது கடுமையான அழுத்தத்தை திணிக்கிறார்கள்.
‘சுபாவ அன்பில்லாதவர்களாய் இருப்பார்கள்’
இதே பழைய தீர்க்கதரிசனம், இன்றுள்ள குடும்பங்களை இன்னுமதிக பிரச்சினைக்குள்ளாக்குகிற, மற்றொரு அம்சத்தை முன்னறிவிக்கிறது. அதிகளவான மக்கள் ‘சுபாவ அன்பில்லாதவர்களாய் இருப்பார்கள்’ என்று அது குறிப்பிடுகிறது. (2 தீமோத்தேயு 3:3) குடும்பங்களை ஒன்றுசேர்த்து இணைப்பதே சுபாவ அன்புதான். மேலும் பைபிள் தீர்க்கதரிசனத்தைக் குறித்து சந்தேகமுள்ளவர்களும்கூட, நம்முடைய காலங்களில் குடும்ப வாழ்க்கை அதிர்ச்சியூட்டும் அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதை ஒத்துக்கொள்வார்கள். உலகமுழுவதிலும், விவாகரத்து விகிதங்கள் உயர்ந்து கொண்டிருக்கின்றன. அநேக சமுதாயங்களில், பாரம்பரிய குடும்பங்களைவிட ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களும், மாற்றாங்குடும்பங்களும் சர்வசாதாரணமாக உள்ளன. ஒற்றைப் பெற்றோர்களும், மாற்றான் பெற்றோர்களும் பிள்ளைகளுக்குத் தேவைப்படுகிற அன்பைக் காட்டுவதைக் கடினமாக்குமளவுக்கு குறிப்பிடத்தக்க சவால்களையும் அழுத்தங்களையும் எதிர்ப்படுகின்றனர்.
இருப்பினும், இதில் ஆழமாக ஊன்றிய பாதிப்பும் உள்ளது. இன்றுள்ள அநேக பெற்றோர்கள் “சுபாவ அன்பு” சிறிதளவே இருந்த அல்லது கொஞ்சம்கூட இல்லாத குடும்பங்களில் வளர்ந்திருக்கின்றனர்—விபச்சாரத்தாலும் விவாகரத்தாலும் பிளவுபட்ட வீடுகள்; பாசமின்மையும் பகைமையும் நிறைந்துள்ள வீடுகள்; ஒருவேளை வார்த்தையில், உணர்ச்சிரீதியில், உடல்ரீதியில், அல்லது பாலியல்ரீதியில் துர்ப்பிரயோகிப்பது சர்வசாதாரணமாயிருந்த வீடுகளில் வளர்ந்திருக்கலாம். அப்படிப்பட்ட குடும்பங்களில் வளர்ந்து வருவது பிள்ளைகளாக அவர்களை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் பெரியவர்களாக அவர்கள் வளர்ந்தபின்பும் பாதிக்கிறது. புள்ளிவிவரங்கள் ஒரு இருண்ட காட்சியைச் சித்தரிக்கின்றன—பிள்ளைகளாக இருந்தபோது துர்ப்பிரயோகிக்கப்பட்ட பெற்றோர்கள் தங்கள் சொந்த பிள்ளைகளை துர்ப்பிரயோகிப்பதற்கு அதிக சாத்தியமிருப்பதாக தெரிகிறது. பைபிள் காலங்களில் யூதர்கள் ஒரு பழமொழியைச் சொல்லுவார்கள்: ‘பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின.’—எசேக்கியேல் 18:2.
இருந்தபோதிலும், காரியங்கள் அவ்விதமாக இருக்க வேண்டியதில்லை என்று கடவுள் அவருடைய மக்களிடம் சொன்னார். (எசேக்கியேல் 18:3) ஒரு முக்கியமான குறிப்பு இங்கே சொல்லப்பட வேண்டும். இத்தகைய அழுத்தங்களின் காரணமாக பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை மோசமாக நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று அர்த்தப்படுத்துகிறதா? நிச்சயமாக இல்லை! நீங்கள் ஒரு பெற்றோராக, மேற்கூறப்பட்ட அழுத்தங்கள் சிலவற்றோடு போராடிக் கொண்டிருக்கிறீர்களா; மேலும் நீங்கள் எப்போதும் ஒரு நல்ல பெற்றோராக இருக்க முடியுமா என்று கவலைப்படுகிறீர்களா; அப்படியென்றால் தைரியம் கொள்ளுங்கள்! நீங்கள் ஒருவர் மட்டுமே தனித்தவராக இல்லை. உங்கள் கடந்த காலம் தானாகவே உங்கள் எதிர்காலத்தை தீர்மானித்துவிடுகிறதில்லை.
முன்னேற்றம் சாத்தியமென்ற வேதப்பூர்வ வாக்குறுதிக்கு இசைவாக, ஆரோக்கியமான பிள்ளைவளர்ப்பு (ஆங்கிலம்) என்ற புத்தகம் இந்த குறிப்பைக் கொடுக்கிறது: “உங்கள் பெற்றோரைவிட வித்தியாசமாக நடப்பதற்கு நீங்கள் நிதானித்து படிகளை எடுக்காவிட்டால், உங்கள் குழந்தைப் பருவ மாதிரிகள், நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ அவை வெளிப்பட்டுவிடும். இந்தச் சுழற்சியை நீங்கள் தவிர்ப்பதற்கு, உங்களுக்குள் நிலைகொண்டிருக்கும் ஆரோக்கியமற்ற மாதிரிகளை இனம் கண்டுகொண்டு, அவற்றை எப்படி மாற்றுவதென கற்றுக்கொள்ள வேண்டும்.”
ஆம், தேவைப்படுமென்றால், துர்ப்பிரயோகிக்கும் பிள்ளை வளர்ப்பு என்ற சுழற்சியை உங்களால் உடைக்க முடியும்! இன்றைய காலங்களில் பெற்றோராயிருப்பதை அத்தனை கடினமாக்கும் அழுத்தங்களையும் உங்களால் கையாள முடியும். ஆனால் எப்படி? ஆரோக்கியமான பிள்ளை வளர்ப்பிற்கு, சிறந்த, மிகவும் நம்பத்தகுந்த தராதரங்களை நீங்கள் எங்கே கண்டடையலாம்? எங்களுடைய அடுத்த கட்டுரை இந்த விஷயத்தைக் கலந்தாலோசிக்கும்.
[பக்கம் 6-ன் படங்கள்/வரைப்படங்கள்]
அழுத்தத்தின் கீழ், சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அன்பைக் காட்ட தவறுகின்றனர்
[பக்கம் 7-ன் படங்கள்/வரைப்படங்கள்]
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தேவைப்படும் அன்பை வெளிக்காட்ட வேண்டும்