உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w06 11/15 பக். 4-7
  • உங்களை உட்படுத்துகிற விவாதம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களை உட்படுத்துகிற விவாதம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • “என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்”
  • இந்தச் சவாலுக்குப் பதில் கொடுக்கப்பட்டிருப்பது எப்படி
  • நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
  • ஒழுக்கங்கெட்ட நடத்தையைத் தவிருங்கள்
  • பிற அம்சங்களில் கடவுளைப் பிரியப்படுத்துதல்
  • நீங்கள் வெற்றிபெறலாம்
  • யெகோவாவின் பெயருக்குப் புகழ் சேர்த்த யோபு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • நீங்கள் ஒரு முக்கிய விவாதத்தில் உட்பட்டவர்களாக இருக்கிறீர்கள்
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
  • உங்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்ளுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • கடவுளுக்குப் பிரியமாக வாழ்தல்
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
w06 11/15 பக். 4-7

உங்களை உட்படுத்துகிற விவாதம்

நீங்கள் ஒரு நண்பரிடமோ குடும்ப அங்கத்தினரிடமோ ரொம்பவே நெருக்கமாக இருக்கிறீர்களா? சுயநலத்தோடுதான் அப்படி நெருக்கமாக இருக்கிறீர்கள் என யாராவது உங்கள்மீது குற்றம் சுமத்தினால் என்ன செய்வீர்கள்? அது உங்களுடைய மனதுக்கு வேதனையாக இருக்காதா? அதனால் உங்களுக்கு ஒருவேளை கோபம்கூட வரலாம், அல்லவா? யெகோவா தேவனுடன் நெருக்கமாக இருக்கும் அனைவர்மீதும் இப்படித்தான் பிசாசாகிய சாத்தானும் குற்றம் சுமத்தியிருக்கிறான்.

ஆதாம், ஏவாள் கடவுளுடைய சட்டத்தை மீறும்படி செய்து, அவருக்கு எதிரான கலகத்தில் தன்னுடன் அவர்களைச் சேர்த்துக்கொள்வதில் சாத்தான் வெற்றிகண்டபோது என்ன நடந்தது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஆதாயம் கிடைக்கும் வரையில்தான் மக்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திருப்பார்கள் என்பதை அச்சம்பவம், அர்த்தப்படுத்தியதா? (ஆதியாகமம் 3:1-6) ஆதாம் கலகம் செய்து சுமார் 2,500 வருடங்களுக்குப் பின், இதே விவாதத்தை சாத்தான் மீண்டும் எழுப்பினான்; இது யோபு என்ற நபரோடு சம்பந்தப்பட்ட விவாதம். அவன் சுமத்திய குற்றச்சாட்டு, அந்த விவாதத்தில் உட்பட்டுள்ளவற்றைத் தெளிவாக அடையாளம் காட்டுகிறது. அது பற்றிய பைபிள் பதிவை நாம் இப்போது கவனமாக ஆராயலாம்.

“என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்”

யோபு, ‘உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவருமாய்’ இருக்கிறார். என்றாலும், யோபுவின் உத்தமத்தன்மையைக் குறித்து சாத்தான் அவதூறு பேசுகிறான். “ஒன்றுமில்லாமலா யோபு கடவுளுக்கு அஞ்சி நடக்கிறான்?” என யெகோவாவிடம் அவன் கேட்கிறான். அடுத்து, கடவுளையும் யோபுவையும் அவதூறு பேசுகிறான்; யோபுவுக்குப் பாதுகாப்பையும் ஆசீர்வாதத்தையும் கொடுத்து அவருடைய உண்மைப் பற்றுறுதியை யெகோவா விலைக்கு வாங்கியிருப்பதாக அவன் குற்றஞ்சாட்டுகிறான். “உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும்” என்று சாத்தான் சவால்விடுகிறான்.​—⁠யோபு 1:8-11; பொது மொழிபெயர்ப்பு.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் கொடுக்க, யோபுவைச் சோதிப்பதற்கு சாத்தானை யெகோவா அனுமதிக்கிறார். கடவுளைச் சேவிப்பதிலிருந்து உண்மையுள்ள அவரை வழிவிலகச் செய்ய, ஒன்றன்பின் ஒன்றாக பல கஷ்டங்களை பிசாசு தருகிறான். அவருடைய கால்நடைகள் திருடுபோகின்றன அல்லது செத்துப்போகின்றன; அவருடைய வேலையாட்கள் கொலை செய்யப்படுகிறார்கள், அவருடைய பிள்ளைகள் இறந்துபோகிறார்கள். (யோபு 1:12-19) ஆனால், சாத்தான் வெற்றி அடைகிறானா? இல்லவே இல்லை! தன்னுடைய கஷ்டங்களுக்கெல்லாம் பிசாசுதான் காரணம் என்பதை யோபு அறியாதிருந்தபோதிலும் அவர் இவ்வாறு சொல்கிறார்: “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்.”​—⁠யோபு 1:21.

அதன் பிறகு, யெகோவாவுடைய முன்னிலையில் சாத்தான் வந்து நின்றபோது அவனிடம் இவ்வாறு சொல்கிறார்: “முகாந்தரமில்லாமல் அவனை [யோபுவை] நிர்மூலமாக்கும்படி நீ என்னை ஏவினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறான்.” (யோபு 2:1-3) இங்கு விவாதத்திற்குரிய முக்கிய விஷயமாக இருப்பது யோபுவின் உத்தமத்தன்மை ஆகும். இது, கடவுளிடத்தில் பற்றுமாறா அன்பைக் காட்டுவதையும், நீதியை விட்டுவிலகாதிருப்பதையும் உட்படுத்துகிற ஒரு பண்பாகும். உத்தமத்தன்மை சம்பந்தப்பட்ட விவாதத்தில் யோபு அதுவரை வெற்றி பெற்றிருக்கிறார். என்றாலும், பிசாசு அவரை அதோடு விட்டுவிடவில்லை.

அடுத்ததாக, மனிதகுலம் முழுவதையும் பாதிக்கும் ஒரு பொதுப்படையான சவாலை முன்வைக்கிறான். “தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும், மனுஷன் கொடுத்துவிடுவான். ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவன் எலும்பையும் அவன் மாம்சத்தையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும்” என்று யெகோவாவிடம் அவன் சொல்கிறான். (யோபு 2:4, 5) யோபு என்ற பெயரைப் பயன்படுத்தாமல், “மனிதன்” என்ற பொதுப்படையான வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம் எல்லா மனிதரின் உத்தமத்தன்மையையும் பிசாசு சந்தேகத்திற்கிடமாக்குகிறான். அவன் ஆணித்தரமாகச் சொல்வது இதுதான்: ‘மனிதன் தன்னுடைய உயிரைப் பாதுகாக்க எதையும் செய்வான். எனக்கு ஒரு வாய்ப்பு கொடும், யாரை வேண்டுமானாலும் உம்மிடமிருந்து விலக்கிக் காட்டுகிறேன்.’ அப்படியென்றால், எந்தச் சூழ்நிலையிலும் எந்தச் சமயத்திலும் எந்தவொரு மனிதனாலும் கடவுளுக்கு உண்மையாக இருக்க முடியாது என அர்த்தமா?

ஒரு கொடிய நோயினால் யோபுவை வாதிக்க பிசாசை யெகோவா அனுமதிக்கிறார். வேதனை தாங்க முடியாமற்போனபோது, தான் செத்துப்போனால்கூட பரவாயில்லை என யோபு ஜெபிக்கிறார். (யோபு 2:7; 14:13) ஆனாலும், யோபு இவ்வாறு குறிப்பிடுகிறார்: “என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்.” (யோபு 27:5) யோபு இப்படிச் சொல்வதற்குக் காரணம், அவர் கடவுளை நேசிக்கிறார்; இப்படி அவர் நேசிப்பதை எதுவுமே தடுக்க முடியாது. யோபு தன்னை உத்தமராக நிரூபித்துக்காட்டுகிறார். “கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்” என பைபிள் சொல்கிறது. (யோபு 42:10-17) யோபுவைப் போன்றவர்கள் இருந்திருக்கிறார்களா? காலம் எதைத் தெளிவாகக் காட்டியிருக்கிறது?

இந்தச் சவாலுக்குப் பதில் கொடுக்கப்பட்டிருப்பது எப்படி

பைபிளிலுள்ள எபிரெயர் புத்தகத்தின் 11-⁠ம் அதிகாரத்தில், கிறிஸ்தவத்திற்கு முன்னான காலத்தில் வாழ்ந்த விசுவாசமுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் பெயர்களை அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுகிறார்; நோவா, ஆபிரகாம், சாராள், மோசே ஆகியோர் அவர்களில் சிலர். அதன் பிறகு அப்போஸ்தலன் இவ்வாறு அறிவிக்கிறார்: “[மற்றவர்களைப் பற்றி] நான் விவரஞ்சொல்ல வேண்டுமானால் காலம் போதாது.” (எபிரெயர் 11:32) அத்தனை அநேக உண்மை ஊழியர்கள் கடவுளுக்கு இருந்ததால், அவர்களை ‘மேகம்போன்ற திரளான சாட்சிகள்’ என பவுல் குறிப்பிடுகிறார்; அவர்களை வானில் பரந்து கிடக்கும் பெருந்திரளான மேகக்கூட்டத்திற்கு ஒப்பிடுகிறார். (எபிரெயர் 12:1) ஆம், நூற்றாண்டுகளாகவே, திரளானோர் சுயமாகத் தெரிவு செய்யும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி, யெகோவா தேவனுக்கு தங்களுடைய பற்றுறுதியைக் காட்டத் தீர்மானித்திருக்கிறார்கள்.​—⁠யோசுவா 24:15.

யெகோவாவிடமிருந்து மனிதரைத் தன்னால் விலக்க முடியும் என்ற சாத்தானின் சவாலுக்கு முடிவான பதிலைக் கடவுளுடைய சொந்த மகன் இயேசு கிறிஸ்து கொடுத்தார். அவர் கழுமரத்தில் துடிதுடித்து இறக்கிற வேளையிலும் கடவுளுக்கு உத்தமத்தோடு இருந்தார். இயேசு கடைசி மூச்சை விடுகையில், உரத்த சத்தமாய், “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்றார்.​—⁠லூக்கா 23:46.

உண்மைக் கடவுளைச் சேவிப்பதிலிருந்து எல்லாரையுமே பிசாசினால் விலக்க முடியவில்லை என்பதை காலம் தெளிவாகக் காட்டியிருக்கிறது. எண்ணற்றோர் யெகோவாவை அறிந்து, அவரிடத்தில் ‘முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு மனதோடும் அன்புகூருகிறார்கள்.’ (மத்தேயு 22:37) யெகோவாவிடம் அவர்களுக்கு உள்ள பற்றுமாறா அன்பு, மனிதருடைய உத்தமத்தன்மையைக் குறித்த சாத்தானின் விவாதம் தவறு என்பதை நிரூபித்துள்ளது. உத்தம ஆண்களாக அல்லது பெண்களாக இருப்பதன் மூலம் நீங்களும்கூட சாத்தானின் விவாதம் தவறென நிரூபிக்கலாம்.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

“எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” வேண்டுமென்பது கடவுளுடைய விருப்பம். (1 தீமோத்தேயு 2:4) அந்த அறிவை எப்படி அடையலாம்? பைபிளை ஆழ்ந்து படிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்; ‘ஒன்றான மெய்த் தேவனையும் அவர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவை’ பெற்றுக்கொள்ளுங்கள்.​—⁠யோவான் 17:3.

மனிதர் நல்ல நோக்கத்துடன் கடவுளைச் சேவிப்பதில்லை என சொல்வதன் மூலம் அவர்களுடைய உத்தமத்தன்மைக்கு எதிராக சாத்தான் சவால்விட்டான். கடவுளைப் பற்றிய அறிவு உங்களுடைய உள்ளெண்ணங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, அது உங்களுடைய இருதயத்தை எட்ட வேண்டும். அதற்காக, பைபிளிலிருந்து விஷயங்களைக் கற்றுக்கொண்டால் மட்டும் போதாது. அவற்றைத் தியானித்துப் பார்க்கப் பழகிக்கொள்ள வேண்டும். (சங்கீதம் 143:5) பைபிளையோ பைபிள் பிரசுரங்களையோ வாசிக்கையில், பின்வரும் கேள்விகளைச் சிந்தித்துப் பார்க்க நேரமெடுத்துக்கொள்ளுங்கள்: ‘இது யெகோவாவைப் பற்றி எனக்கு என்ன கற்பிக்கிறது? கடவுளுடைய என்னென்ன பண்புகள் இங்கு குறிப்பிடப்பட்டிருப்பதை நான் பார்க்கிறேன்? என்னுடைய வாழ்க்கையின் எந்தெந்த அம்சங்களில் இந்தப் பண்புகளை நான் வெளிக்காட்ட வேண்டும்? கடவுளுக்குப் பிடிக்கிற அல்லது பிடிக்காத காரியங்கள் யாவை? இதையெல்லாம் படிக்கும்போது கடவுளைப் பற்றி நான் எப்படி உணருகிறேன்?’ இப்படியெல்லாம் ஆழ்ந்து சிந்திக்கும்போது, படைப்பாளர் மீதுள்ள அன்பும் நன்றியுணர்வும் நம் இருதயத்தில் நிரம்பி வழியும்.

கடவுளுக்கு உத்தமமாக இருப்பது என்பது வணக்க விஷயத்தில் மட்டுமே வெளிக்காட்ட வேண்டிய குணம் அல்ல. (1 இராஜாக்கள் 9:4) யெகோவா தேவனிடம் எப்போதும் உத்தமமாய் இருப்பதற்கு, வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் ஒழுக்கநெறி தவறாமல் நடப்பது அவசியம். என்றாலும், உத்தமமாய் இருப்பதால், நீங்கள் எதையும் இழந்துவிட மாட்டீர்கள். யெகோவா ‘நித்தியானந்த தேவன்,’ நீங்கள் வாழ்க்கையை அனுபவித்து மகிழவே அவர் விரும்புகிறார். (1 தீமோத்தேயு 1:11) ஒழுக்க ரீதியில் சுத்தமுள்ளவர்களாய் இருந்து சந்தோஷமுள்ள வாழ்க்கை வாழவும் கடவுளுடைய பிரியத்தை சம்பாதிக்கவும் சில பழக்கங்களை நீங்கள் தவிர்க்க வேண்டும். அவற்றை நாம் இப்போது ஆராயலாம்.

ஒழுக்கங்கெட்ட நடத்தையைத் தவிருங்கள்

மணவாழ்க்கைக்கான தராதரத்தை வகுத்தவர் யெகோவாவே. அதைத் தம்முடைய வார்த்தையான பைபிளில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.” (ஆதியாகமம் 2:21-24) மணத்துணைகள் ‘ஒரே மாம்சமாயிருப்பதால்’ அவர்கள் தங்களுக்குள் மட்டுமே பாலுறவு கொள்வார்களானால், மணவாழ்க்கைக்கான கடவுளுடைய ஏற்பாட்டை அவர்கள் உயர்வாக மதிக்கிறார்கள் என்று அர்த்தம். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “திருமணத்தை அனைவரும் உயர்வாக மதியுங்கள். மணவறைப் படுக்கை மாசுறாமல் இருக்கட்டும். காமுகரும் விபசாரத்தில் ஈடுபடுவோரும் கடவுளின் தீர்ப்புக்கு ஆளாவர்.” (எபிரெயர் 13:4, பொ.மொ.) “மணவறைப் படுக்கை” என்பது, சட்டப்படி மணம் செய்துகொண்ட ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள உடலுறவைக் குறிக்கிறது. அவர்களில் யாரேனும் ஒருவர் வேறொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்வது விபசாரத்தில் ஈடுபடுவதாய் இருக்கும்; அத்தகையவர் கடவுளிடமிருந்து நியாயத்தீர்ப்பைப் பெறுவார்.​—⁠மல்கியா 3:5.

திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது சரியா? அதுவும்கூட யெகோவா வகுத்துள்ள ஒழுக்கநெறிகளுக்கு எதிரானது. ‘நீங்கள் வேசித்தனத்திற்கு விலகியிருக்க வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது’ என பைபிள் கூறுகிறது. (1 தெசலோனிக்கேயர் 4:3) ஓரினப்புணர்ச்சி, முறைதகாப் புணர்ச்சி, மிருகப்புணர்ச்சி ஆகியவைகூட கடவுளுக்கு விரோதமான பாவங்களாகும். (லேவியராகமம் 18:6, 23; ரோமர் 1:26, 27) கடவுளுக்குப் பிரியமாக நடந்து, உண்மையிலேயே மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்புகிற எவரும் ஒழுக்கக்கேடான பழக்கங்களை விட்டுவிலக வேண்டும்.

திருமணத்திற்கு முன்பே பாலியலில் ஈடுபடத் தூண்டும் காமவெறியைப் பற்றி என்ன சொல்லலாம்? இதுவும்கூட யெகோவாவுக்குப் பிடிக்காத ஒன்று. (கலாத்தியர் 5:19) நம் மனதில் ஒழுக்கக்கேடான எண்ணங்களுக்கு இடங்கொடுக்காமல் அதைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று” என இயேசு சொன்னார். (மத்தேயு 5:28) பேப்பரிலோ, திரையிலோ, இன்டர்நெட்டிலோ ஆபாசக் காட்சிகளைப் பார்ப்பது, பாலுறவு செயல்களைப் பற்றிய விஷயங்களை வாசிப்பது, இரட்டை அர்த்தமுள்ள பாடல்வரிகளைக் கவனித்துக் கேட்பது ஆகியவற்றிற்கும்கூட இயேசுவின் வார்த்தைகள் பொருந்துகின்றன. இவற்றையெல்லாம் தவிர்ப்பது கடவுளைப் பிரியப்படுத்துகிறது, ஒருவருடைய வாழ்க்கையில் சிறந்த மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

சரசமாடுவது சரியா? சரசம் என்பது, “அற்பத்தனமாக மோகம்கொள்கிற அல்லது காமக் கிளர்ச்சியூட்டுகிற” நடத்தை என விளக்கப்படுகிறது. மணமான ஓர் ஆணோ பெண்ணோ தன்னுடைய துணையல்லாத வேறொருவரிடம் சரசமாடுவது பைபிள் நியமங்களுக்கு எதிரானது; அதோடு, யெகோவாவுக்கு அவமரியாதை காட்டுவதற்கு அடையாளமாகவும் அது இருக்கிறது. (எபேசியர் 5:28-33) மணமாகாதவர்கள் ஒருவருக்கொருவர் ஜாலிக்காக காதல் “மொழி” பேசுவது எவ்வளவு மோசமானது! இப்படி ஒருவர் சரசமாடுகையில், அவர் தன்னை நிஜமாகவே விரும்புவதாக மற்றவர் நினைத்தால் எப்படியிருக்கும்? உணர்ச்சி ரீதியில் அது ஏற்படுத்துகிற வேதனையைச் சிந்தித்துப் பாருங்கள். சரசமாடுவது விபசாரத்திற்கோ வேசித்தனத்திற்கோ வழிநடத்தலாம் என்பதும்கூட சிந்திக்க வேண்டிய விஷயம். மறுபட்சத்தில், எதிர்பாலாரிடத்தில் கற்புடன் நடந்துகொள்வது ஒருவருடைய சுயமரியாதையைக் கூட்டுகிறது.​—⁠1 தீமோத்தேயு 5:1, 2.

பிற அம்சங்களில் கடவுளைப் பிரியப்படுத்துதல்

அநேக நாடுகளில் மதுபானங்கள் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. மதுபானம் குடிப்பது தவறா? ஒயின், பியர், அல்லது பிற மதுபானங்களை மிதமாகக் குடிப்பதை பைபிள் தடைசெய்வதில்லை. (சங்கீதம் 104:15; 1 தீமோத்தேயு 5:23) என்றாலும், மிதமிஞ்சி குடிப்பதும், குடித்து வெறிப்பதும் கடவுளுக்கு முன் தவறானவை. (1 கொரிந்தியர் 5:11-13) உண்மைதான், நீங்கள் அளவுக்கதிகமாய் குடித்து உங்கள் உடலைக் கெடுத்துக்கொள்ளவும், குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவும் விரும்புவதில்லை.​—⁠நீதிமொழிகள் 23:20, 21, 29-35.

யெகோவா ‘சத்தியபரர்.’ (சங்கீதம் 31:5) அவர் ‘பொய்யுரையாதவர்’ என பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 6:18) நீங்கள் கடவுளுடைய பிரியத்தைச் சம்பாதிக்க விரும்பினால், பொய் பேச மாட்டீர்கள். (நீதிமொழிகள் 6:16-19; கொலோசெயர் 3:9, 10) “அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்” என கிறிஸ்தவர்களுக்கு பைபிள் அறிவுரை வழங்குகிறது.​—⁠எபேசியர் 4:25.

சூதாட்டமும்கூட ஒரு தவறான பழக்கம். இது பொதுவாக அநேகரால் ஏற்றுக்கொள்ளப்படுகிற பழக்கமாக இருந்தாலும், மற்றவர்களைத் தோற்கடித்து அவர்களுடைய பணத்தை அபகரிப்பதற்கான முயற்சியாக இருப்பதால் இது ஒருவகை பேராசையாகும். “அநியாயமாய் லாபம் சேர்ப்பதில் பேராசைமிக்கவர்களை” யெகோவா வெறுக்கிறார். (1 தீமோத்தேயு 3:8, NW) ஆகவே, நீங்கள் யெகோவாவைப் பிரியப்படுத்த விரும்பினால், லாட்டரி, பிங்கோ (ஒருவகை சீட்டாட்டம்), குதிரைப் பந்தயம் உட்பட எந்த விதமான சூதாட்டத்திலும் ஈடுபட மாட்டீர்கள். இதன் பலனாக, குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உண்மையிலேயே உங்களிடம் நிறைய பணம் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.

திருடுதல், அதாவது உங்களுக்குச் சொந்தமல்லாத ஒன்றை எடுத்துக்கொள்ளுதல் மற்றொரு வகை பேராசையாகும். “களவு செய்யாதிருப்பாயாக” என பைபிள் சொல்கிறது. (யாத்திராகமம் 20:15) திருடப்பட்ட பொருள் என்பது தெரிந்தும் அதை வாங்குவதும், அனுமதியின்றி பிறர் பொருளை எடுப்பதும் தவறு. “திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலை செய்து, பிரயாசப்படக்கடவன்” என பைபிள் சொல்கிறது. (எபேசியர் 4:28) யெகோவாவை நேசிப்பவர்கள், முதலாளியின் நேரத்தைத் திருடுவதற்குப் பதிலாக நேர்மையுடன் வேலை செய்கிறார்கள். அவர்கள் ‘எல்லாவற்றிலும் யோக்கியமாய் [அதாவது, நேர்மையாய்] நடக்க விரும்புகிறார்கள்.’ (எபிரெயர் 13:18) சுத்தமான மனசாட்சி, ஒருவருக்கு உண்மையிலேயே மன நிம்மதியை அளிக்கிறது.

கோபப்படும் ஒருவரை கடவுள் எப்படிக் கருதுகிறார்? பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே.” (நீதிமொழிகள் 22:24) கட்டுப்படுத்தாத கோபம் பெரும்பாலும் வன்முறைச் செயல்களுக்கே வழிநடத்துகிறது. (ஆதியாகமம் 4:5-8) பழிவாங்குவதைக் குறித்து பைபிள் சொல்வதாவது: “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.” (ரோமர் 12:17-19) இத்தகைய ஆலோசனையைப் பின்பற்றும்போது, நம் வாழ்வில் மிகுந்த சமாதானம் இருக்கும், அது நம் சந்தோஷத்தை அதிகரிக்கும்.

நீங்கள் வெற்றிபெறலாம்

அழுத்தங்களின் மத்தியிலும், கடவுளுக்கு எப்போதும் உத்தமமாக இருப்பதில் நீங்கள் வெற்றிகாண முடியுமா? கண்டிப்பாக முடியும். உத்தமத்தன்மையைக் குறித்த விவாதத்தில் சாத்தானைப் பொய்யனாக நிரூபிப்பதில் நீங்கள் வெற்றிபெற வேண்டுமென கடவுள் விரும்புகிறார்; இதைத் தம்முடைய வார்த்தை மூலமாகச் சொல்கிறார்: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.”​—⁠நீதிமொழிகள் 27:11.

யெகோவாவின் பார்வையில் நன்மையானதைச் செய்ய உங்களுக்குப் பலத்தைத் தரும்படி அவரிடம் நீங்கள் ஜெபிக்கலாம். (பிலிப்பியர் 4:6, 7, 13) ஆக, கடவுளுடைய வார்த்தையான பைபிளிலிருந்து அதிகமதிகமான அறிவைப் பெற முழு முயற்சி எடுங்கள். பைபிளிலிருந்து கற்றுக்கொண்டவற்றைப் போற்றுதலோடு சிந்தித்துப் பார்ப்பது, கடவுளை இன்னுமதிகமாக நேசிக்க உங்களுக்கு உதவும்; அதோடு அவருக்குப் பிரியமாய் நடக்க உங்களை உந்துவிக்கும். “தேவனுடைய கற்பனைகளைக் [அதாவது, கட்டளைகளை] கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல” என 1 யோவான் 5:3 சொல்கிறது. பைபிளை ஆராய்ந்து படிக்க நீங்கள் விரும்பினால், உங்கள் ஏரியாவில் உள்ள யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவ ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களை நீங்களாகவே அணுகலாம் அல்லது இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்போருக்கு நீங்கள் கேட்டெழுதலாம்.

[பக்கம் 4-ன் படம்]

சோதனையின் மத்தியிலும் யோபு உண்மையோடிருந்தார்

[பக்கம் 7-ன் படம்]

கடவுளுடைய வார்த்தையைப் பற்றி அதிகமதிகமாக அறிந்துகொள்வது, நன்மை செய்வதற்கான உங்கள் தீர்மானத்தை உறுதிப்படுத்தும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்