அந்திக்கிறிஸ்து அம்பலம்
நீங்கள் வசிக்கும் பகுதியில் கொடிய தொற்றுநோய் ஒன்று பரவி வருவதாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது உங்களைப் பாதுகாத்துக்கொள்ள என்ன செய்வீர்கள்? ஒருவேளை, உங்கள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை நீங்கள் இன்னும் பலப்படுத்திக்கொள்வீர்கள்; அத்துடன், அது தொற்றியுள்ள நபர்களிடமிருந்து தூர விலகியிருப்பீர்கள், அல்லவா? ஆன்மீக விஷயத்திலும் நாம் அதையே செய்ய வேண்டும். அந்திக்கிறிஸ்து ‘இப்பொழுதும் உலகத்தில் இருப்பதாக’ வேதவசனங்கள் சொல்கின்றன. (1 யோவான் 4:3) அந்த ‘தொற்றால்’ நாம் பாதிக்கப்படாதிருப்பதற்கு, அதை ‘கடத்துபவர்களை’ அடையாளம் கண்டுகொண்டு அவர்களை விட்டு தூர விலகியிருக்க வேண்டும். சந்தோஷகரமாக, இது சம்பந்தமாய் போதுமான தகவலை பைபிள் தருகிறது.
“அந்திக்கிறிஸ்து” என்ற வார்த்தை “கிறிஸ்துவுக்கு எதிராக (அல்லது, கிறிஸ்துவுக்குப் பதிலாக)” என்ற அர்த்தத்தைத் தருகிறது. எனவே, இது விரிவான அர்த்தத்தில், கிறிஸ்துவை எதிர்க்கிற அனைவரையும், கிறிஸ்து என்றோ அவருடைய பிரதிநிதிகள் என்றோ பொய்யாய் உரிமை கொண்டாடுகிற அனைவரையும் குறிக்கிறது. இயேசுவே இவ்வாறு சொன்னார்: “என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான் [அதாவது, அந்திக்கிறிஸ்துவாய் இருக்கிறான்], என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.”—லூக்கா 11:23.
இயேசு இறந்து, பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்டு 60-க்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பிறகு அந்திக்கிறிஸ்துவைப் பற்றி யோவான் எழுதினார். எனவே அந்திக்கிறிஸ்துவின் செயல்கள், இயேசுவை பூமியில் உண்மையாய்ப் பின்பற்றுகிறவர்களை எந்த விதத்தில் பாதிக்கின்றன என்பதன் அடிப்படையிலேயே நாம் அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.—மத்தேயு 25:40, 45.
அந்திக்கிறிஸ்து—கிறிஸ்தவர்களின் எதிரி
தம்மைப் பின்பற்றுகிறவர்களை உலகமே பகைக்கும் என இயேசு தம் சீஷர்களை எச்சரித்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள். அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.”—மத்தேயு 24:9, 11.
இயேசுவின் “நாமத்தினிமித்தம்” அவருடைய சீஷர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்றால் அப்படித் துன்புறுத்துபவர்கள் உண்மையிலேயே அந்திக்கிறிஸ்துவாக, கிறிஸ்துவின் எதிரியாக இருக்கிறார்கள். ‘கள்ளத்தீர்க்கதரிசிகளும்’ அந்திக்கிறிஸ்துகள்தான்; ஒருகாலத்தில் கிறிஸ்தவர்களாக இருந்த சிலரும்கூட இவர்களில் இருக்கிறார்கள். (2 யோவான் 7) இந்த அந்திக்கிறிஸ்துகளில் அநேகர் “நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே” என்று யோவான் எழுதினார்.—1 யோவான் 2:18, 19.
அந்திக்கிறிஸ்து என்பது ஒரு தனி மனிதனைக் குறிக்கவில்லை, ஆனால் அநேகர் அடங்கிய அந்திக்கிறிஸ்துகளின் தொகுதியைக் குறிக்கிறது என்பதை இயேசுவும் யோவானும் சொன்ன வார்த்தைகள் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன. அதோடு, அவர்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளாகவும் இருப்பதால் அவர்களுடைய முக்கிய குறிக்கோள்களில் ஒன்று, மதத்தின் பெயரில் ஜனங்களை ஏமாற்றுவதாகும். அவர்களுடைய தந்திரமான வழிகளில் சில யாவை?
மதத்தின் பெயரில் பொய்களைப் பரப்புதல்
சத்தியத்தைவிட்டு விலகிய இமெநேயு, பிலேத்து போன்றவர்களின் போதனைகள் “அரிபிளவையைப்போலப் படரும்” என்பதால் அவற்றைக் குறித்து கவனமாய் இருக்கும்படி தன் சக வேலையாளான தீமோத்தேயுவை அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார். “அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள்” என்றும் பவுல் கூறினார். (2 தீமோத்தேயு 2:16-18) உயிர்த்தெழுதல் என்பது அடையாள அர்த்தமுடையது என்றும், ஆன்மீக ரீதியில் கிறிஸ்தவர்கள் ஏற்கெனவே உயிர்த்தெழுந்துவிட்டார்கள் என்றும் இமெநேயுவும் பிலேத்துவும் போதித்தார்கள். ஒருவர் மெய்யாய் இயேசுவின் சீஷனாகும்போது, கடவுளுடைய நோக்குநிலையில் அவர் உயிர் பெற்றவராகிறார் என்பது உண்மைதான்; இதை பவுலும் தெளிவுபடுத்தினார். (எபேசியர் 2:1-5) எனினும், இமெநேயுவும் பிலேத்துவும் போதித்த விஷயம், கடவுளுடைய ராஜ்ய ஆட்சியில் சொல்லர்த்தமாகவே உயிர்த்தெழுதல் நடக்குமென இயேசு அளித்த வாக்குறுதியை அவமதிப்பதாய் இருந்தது.—யோவான் 5:28, 29.
உயிர்த்தெழுதல் முழுக்க முழுக்க அடையாள அர்த்தமுடையதே என்பது ஒரு மதத் தொகுதியினர் பிற்காலங்களில் உருவாக்கிய கருத்து ஆகும். அறிவை மாயமந்திரத்தின் மூலமே பெற முடியும் என இவர்கள் நம்பினார்கள். இவ்வாறு, தியானத்தால் கடவுளைக் காணலாமென்ற கீழை நாட்டவர் சிலருடைய நம்பிக்கையோடும் கிரேக்க தத்துவத்தோடும், வழிவிலகிய கிறிஸ்தவத்தை இவர்கள் இணைத்தார்கள். உதாரணத்திற்கு, ஜடப்பொருள்கள் அனைத்தும் தீயவை என்றும், அதன் காரணமாகவே இயேசு மாம்சத்தில் வராமல், மாம்ச உடலில் இருப்பதுபோல் தோன்றினார் என்றும் அவர்கள் நம்பினார்கள். நாம் கவனித்தபடி, இதைக் குறித்துதான் அப்போஸ்தலன் யோவான் எச்சரித்திருந்தார்.—1 யோவான் 4:2, 3; 2 யோவான் 7.
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மற்றுமொரு பொய் உருவானது. அதுதான் புனித திரித்துவம் என்றழைக்கப்படுகிற கோட்பாடாகும். இந்தக் கோட்பாடு, இயேசுவை, சர்வவல்லமையுள்ள கடவுளென்றும் அதே சமயத்தில் அவரே கடவுளுடைய குமாரனென்றும் வலியுறுத்துகிறது. இறையியலில் டாக்டர் பட்டம்பெற்ற ஆல்வன் லாம்சன் என்பவர் முதல் மூன்று நூற்றாண்டுகளின் சர்ச் என்ற ஆங்கில புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்: திரித்துவ கோட்பாடு “யூத மற்றும் கிறிஸ்தவ வேதாகமங்களுக்கு முற்றிலும் சம்பந்தப்படாத ஊற்றுமூலத்திலிருந்து தோன்றியது; இது, பிளேட்டோவை ஏற்றுக்கொண்ட சர்ச் எழுத்தாளர்களால் படிப்படியாக வளர்க்கப்பட்டு கிறிஸ்தவத்தோடு ஒட்டவைக்கப்பட்டது.” ‘பிளேட்டோவை ஏற்றுக்கொண்ட சர்ச் எழுத்தாளர்களாக’ இருந்தவர்கள் யார்? புறமத கிரேக்க தத்துவஞானியான பிளேட்டோவின் போதனைகளில் மனதைப் பறிகொடுத்து, சத்தியத்தைவிட்டு விலகிய மதகுருமார்களே.
இப்படித் திரித்துவத்தை ‘ஒட்டவைத்தது’ அந்திக்கிறிஸ்துவின் படுகெட்டிக்காரத்தனமான செயலாய் இருந்தது; ஏனெனில் இந்தக் கோட்பாடு, கடவுளைப் புரியாப் புதிர் போல தோன்ற வைத்ததோடு, குமாரனோடு அவருக்குள்ள உறவையும் தெளிவற்றதாக்கியது. (யோவான் 14:28; 15:10; கொலோசெயர் 1:15) சற்று யோசித்துப் பாருங்கள், கடவுளிடம் நெருங்கி வரும்படி பைபிள் சொல்கிறது; கடவுள் ஒரு புரியாப் புதிராக இருந்தால் ஒருவர் எப்படி ‘அவரிடம் நெருங்கி வர’ முடியும்?—யாக்கோபு 4:8, NW.
இந்தக் குழப்பம் போதாதென்று, அநேக பைபிள் மொழிபெயர்ப்பாளர்களும்கூட மூல மொழியில் 7,000 தடவைக்கும் அதிகமாகக் காணப்படும் யெகோவா என்ற கடவுளுடைய பெயரையே தங்கள் மொழிபெயர்ப்புகளிலிருந்து நீக்கியிருக்கிறார்கள்! சர்வவல்லமை உள்ள கடவுளைப் புரியாப் புதிர் என்பதாக மட்டுமல்ல, பெயரே இல்லாதவர் என ஆக்கவும் முயற்சி செய்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இது, நம் படைப்பாளருக்கும் அவருடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தைக்கும் எப்பேர்ப்பட்ட அவமரியாதை! (வெளிப்படுத்துதல் 22:18, 19) அதோடு, கடவுளுடைய பெயரை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக கர்த்தர், கடவுள் போன்ற பட்டப்பெயர்களைப் பயன்படுத்தியிருப்பது, “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்று இயேசு கற்பித்த மாதிரி ஜெபத்தை மீறுவதாய் இருக்கிறது.—மத்தேயு 6:9.
அந்திக்கிறிஸ்துகள்—கடவுளுடைய ராஜ்யத்தைப் புறக்கணிக்கிறார்கள்
முக்கியமாய், நாம் வாழும் இந்தக் “கடைசிநாட்களில்” அந்திக்கிறிஸ்துகள் மும்முரமாய் செயல்பட்டு வருகிறார்கள். (2 தீமோத்தேயு 3:1) இன்றைய ஏமாற்றுக்காரர்களாகிய இவர்களின் முக்கிய குறிக்கோள், கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராக இயேசு வகிக்கும் பாகத்தைப் புரிந்துகொள்ளாதபடி ஜனங்களைத் தவறாக வழிநடத்துவதே; இந்தப் பரலோக அரசாங்கமே, இப்பூமி முழுவதன் மீதும் சீக்கிரத்தில் ஆட்சி செய்யவிருக்கிறது.—தானியேல் 7:13, 14; வெளிப்படுத்துதல் 11:15.
உதாரணத்திற்கு, மதத் தலைவர்கள் சிலர் கடவுளுடைய ராஜ்யம் என்பது மனிதர்களுடைய இருதய நிலையைக் குறிக்கிறது என போதிக்கிறார்கள்; இத்தகைய கருத்தை பைபிள் எங்குமே ஆதரிப்பதில்லை. (தானியேல் 2:44) இன்னும் சிலர், மனித அரசாங்கங்கள், அமைப்புகள் வாயிலாக கிறிஸ்து ஆட்சி செய்வதாய் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் இயேசு, ‘என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல’ என்று சொன்னார். (யோவான் 18:36) ஆம், கிறிஸ்து அல்ல, சாத்தானே “இந்த உலகத்தின் அதிபதி,” ‘இப்பிரபஞ்சத்தின் தேவன்.’ (யோவான் 14:30; 2 கொரிந்தியர் 4:4) இதனால்தான், எல்லா மனித அரசாங்கங்களையும் இயேசு சீக்கிரத்தில் நீக்கிவிட்டு, பூமியின் மீது அவரே அரசாளப் போகிறார். (சங்கீதம் 2:2, 6-9; வெளிப்படுத்துதல் 19:11-21) அப்படி அவர் அரசாள வேண்டுமென்று மக்கள் விரும்புகிறார்கள்; அதனால்தான் பரமண்டல ஜெபத்தைச் சொல்கையில், “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என அவர்கள் திரும்பத் திரும்ப கேட்கிறார்கள்.—மத்தேயு 6:10.
அநேக மதத் தலைவர்கள் உலகின் அரசியல் அமைப்புகளை ஆதரிப்பதால், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய சத்தியத்தை அறிவிப்பவர்களை எதிர்க்கிறார்கள், துன்புறுத்தவும் செய்கிறார்கள். ஆர்வத்துக்குரிய விதமாக, பைபிளிலுள்ள வெளிப்படுத்துதல் புத்தகம் அடையாள அர்த்தமுள்ள வேசியைப் பற்றி குறிப்பிடுகிறது. “மகா பாபிலோன்” என்று அழைக்கப்படும் இந்த வேசி, ‘பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறாள்.’ (வெளிப்படுத்துதல் 17:4-6) பூமியின் ‘ராஜாக்களுக்கு’ அதாவது அரசியல் தலைவர்களுக்கு ஆதரவு அளித்து, அவர்களுடைய தயவைப் பெறுவதன் மூலம் ஆன்மீக விபசாரத்திலும் ஈடுபடுகிறாள். அடையாள அர்த்தமுள்ள இந்தப் பெண், உலகின் பொய் மதங்களையே குறிக்கிறாள். இவள் அந்திக்கிறிஸ்துவின் முக்கிய பாகமாய் இருக்கிறாள்.—வெளிப்படுத்துதல் 18:2, 3; யாக்கோபு 4:4.
அந்திக்கிறிஸ்து —‘கேட்க விரும்புவதையே’ கூறுவான்
கிறிஸ்தவர்கள் என தங்களை அழைத்துக்கொள்ளும் அநேகர், பைபிள் சத்தியத்தை ஒதுக்கித் தள்ளுவதோடுகூட மக்களுக்குப் பிடித்தமான ஒழுக்க நெறியை ஆதரிப்பதன் மூலம் பைபிளின் ஒழுக்க தராதரங்களைப் புறக்கணித்திருக்கிறார்கள். இவ்வாறு நடக்கும் என்பதாக கடவுளுடைய வார்த்தை பின்வரும் வார்த்தைகளில் முன்னுரைத்தது: “[கடவுளுக்குச் சேவை செய்வதாகச் சொல்லிக்கொள்ளும்] மக்கள் உண்மையான போதனைகளைக் கவனிக்காத காலம் வரும். தம் ஒவ்வொரு விசித்திர விருப்பத்தையும் சந்தோஷப்படுத்தும் ஏராளமான போதகர்களை சேர்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு இது விருப்பமாக இருக்கும். மக்கள் கேட்க விரும்புவதையே அவர்கள் கூறுவர்.” (2 தீமோத்தேயு 4:3, ஈஸி டு ரீட் வர்ஷன்) இந்த மத வேடதாரிகள், “கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்” என்றும் விவரிக்கப்படுகிறார்கள். “அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்” என்றும் பைபிள் சொல்கிறது.—2 கொரிந்தியர் 11:13-15.
உயர்ந்த ஒழுக்க நெறிகளை துணிச்சலுடன் அவமதிக்கும் ‘கெட்ட நடத்தையும்’ அவர்களுடைய கிரியைகளில் உட்பட்டுள்ளது. (2 பேதுரு 2:1-3, 12-14) எண்ணற்ற மதத் தலைவர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும், ஓரினப் புணர்ச்சி, மணமுடிக்காமலே உடலுறவு கொள்வது போன்ற கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தாத பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதை அல்லது குறைந்தபட்சம் அவற்றைப் பொறுத்துக்கொள்வதை கண்ணாரக் காண்கிறோம், அல்லவா? பைபிளில் லேவியராகமம் 18:22; ரோமர் 1:26, 27; 1 கொரிந்தியர் 6:9, 10; எபிரெயர் 13:4; யூதா 7 ஆகிய வசனங்கள் கூறுவதுடன் இன்று பெரும்பாலோர் ஏற்றுக்கொண்டிருக்கிற கருத்துகளையும் நடை உடை பாவனைகளையும் தயவுசெய்து ஒப்பிட்டுப் பாருங்கள்.
‘ஏவப்பட்ட வசனிப்புகளை சோதித்தறியுங்கள்’
மேற்குறிப்பிடப்பட்ட உண்மைகளின் காரணமாக, நம் மத நம்பிக்கைகளை ஏனோதானோவென்று எடுத்துக்கொள்ளாமல், அப்போஸ்தலன் யோவானின் பின்வரும் புத்திமதிக்கு நாம் செவிசாய்க்க வேண்டும். “உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் [“ஏவப்பட்ட வசனிப்புகளையும்,” NW] நம்பாமல், அந்த ஆவிகள் [“ஏவப்பட்ட வசனிப்புகள்,” NW] தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்” என எச்சரிக்கிறார்.—1 யோவான் 4:1.
முதல் நூற்றாண்டில் பெரோயா பட்டணத்தில் வாழ்ந்த சில ‘நற்குணசாலிகளின்’ அருமையான உதாரணத்தைக் கவனியுங்கள். அவர்கள் ‘மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, [பவுலும் சீலாவும் சொன்ன] காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தார்கள்.’ (அப்போஸ்தலர் 17:10, 11) ஆம், பெரோயா பட்டணத்தார் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள்; அதே சமயத்தில் அவர்கள் கேட்டு, ஏற்றுக்கொண்ட காரியங்கள் பைபிளில் ஆழமாய் வேரூன்றியவையா என்பதையும் உறுதிப்படுத்திக்கொண்டார்கள்.
இன்றும்கூட மெய்க் கிறிஸ்தவர்கள், மாறிக்கொண்டே இருக்கும் பரவலான கருத்துகளால் தடுமாற்றமடையாமல் பைபிள் சத்தியத்தை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள். அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதினார்: ‘திருத்தமான அறிவோடும் முழு பகுத்தறிவோடும், உங்கள் அன்பு இன்னும் அதிகமதிகமாக பெருகும்படி நான் எப்போதும் ஜெபிக்கிறேன்.’—பிலிப்பியர் 1:9, NW.
நீங்கள் அவ்வாறு இதுவரை செய்யாதிருந்தால், உண்மையிலேயே பைபிள் என்ன கற்பிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதன் மூலம் ‘திருத்தமான அறிவையும் முழு பகுத்தறிவையும்’ பெற வேண்டுமென்பதே உங்கள் லட்சியமாய் இருக்கட்டும். பெரோயா பட்டணத்தாரின் மாதிரியைப் பின்பற்றுகிறவர்கள் அந்திக்கிறிஸ்துகளின் ‘தந்திரமான வார்த்தைகளில்’ மயங்கி ஏமாந்துவிடுவதில்லை. (2 பேதுரு 2:3) மாறாக, மெய்யான கிறிஸ்துவும் அவருடைய உண்மையான சீஷர்களும் கற்பித்திருக்கும் ஆன்மீக சத்தியத்தால் விடுவிக்கப்படுகிறார்கள்.—யோவான் 8:32, 36.
[பக்கம் 4-ன் பெட்டி/படம்]
அந்திக்கிறிஸ்து பற்றி பைபிளின் கருத்து
“பிள்ளைகளே, இது கடைசிக் காலமாயிருக்கிறது [தெளிவாகவே, அப்போஸ்தலர்களுடைய காலத்தின் முடிவாக இருக்கிறது]; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்.”—1 யோவான் 2:18.
“இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.”—1 யோவான் 2:22.
“மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் [“ஏவப்பட்ட வசனிப்பும்,” NW] தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி [“ஏவப்பட்ட வசனிப்பு,” NW] அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.” —1 யோவான் 4:3.
“மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.”—2 யோவான் 7.
[பக்கம் 5-ன் பெட்டி/படங்கள்]
ஏமாற்றுக்காரனின் பல முகங்கள்
“அந்திக்கிறிஸ்து” என்ற வார்த்தை, இயேசு கிறிஸ்துவைப் பற்றி பைபிள் சொல்வதை மறுதலிக்கும் எவரையும் குறிக்கிறது; அதோடு, இயேசு கிறிஸ்துவின் ராஜ்யத்தை எதிர்க்கும் எவரையும், அவரைப் பின்பற்றுவோரைத் தவறாக நடத்தும் எவரையும் குறிக்கிறது. அது, கிறிஸ்துவைப் பிரதிநிதித்துவம் செய்வதாய் பொய்யாக உரிமைபாராட்டுகிற தனி நபர்களையும் அமைப்புகளையும் தேசங்களையும் உள்ளடக்குகிறது; அல்லது கிறிஸ்துவால் மட்டுமே தர முடிந்த மெய் சமாதானத்தையும் பாதுகாப்பையும் தாங்கள் தருவதாக பெருமையுடன் வாக்குறுதி அளிப்பதன் மூலம் தகாத விதத்தில் மேசியாவின் பாகத்தை தாங்களே ஏற்றுக்கொண்டிருப்பவர்களை உள்ளடக்குகிறது.
[படத்திற்கான நன்றி]
அகஸ்டின்: ©SuperStock/age fotostock
[பக்கம் 7-ன் படம்]
பெரோயா பட்டணத்தாரைப் போல நாம் ‘தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்க்க’ வேண்டும்