அந்திக்கிறிஸ்து ஏன் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்?
‘அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டீர்கள்’ என்று பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் அப்போஸ்தலன் நீண்ட காலத்திற்கு முன் எழுதினார். (1 யோவான் 2:18) இந்த வார்த்தைகள் எவ்வளவாய் கவனத்தைக் கவருகின்றன! இதன் அர்த்தம் என்னவாயிருக்குமென பல நூற்றாண்டுகளாக மக்கள் யோசித்து வந்திருக்கிறார்கள். அந்திக்கிறிஸ்து யார்? அவன் எப்போது வருவான்? அவன் வருகிறபோது என்ன செய்வான்?
அந்திக்கிறிஸ்து என ஏராளமானோர் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்கள். கடந்த காலங்களில், யூதர்கள், கத்தோலிக்க போப்புகள், ரோம பேரரசர்கள் போன்றோர் ‘அந்திக்கிறிஸ்துவாக’ முத்திரை குத்தப்பட்டார்கள். உதாரணத்திற்கு, பேரரசர் இரண்டாம் ஃபிரெட்ரிக் (1194-1250) சர்ச்சின் சார்பாக சிலுவைப் போரில் கலந்துகொள்ள மறுத்தபோது போப் ஒன்பதாம் கிரெகரி அவருக்கு அந்திக்கிறிஸ்துவென பெயர்சூட்டி, சர்ச்சிலிருந்து நீக்கினார். கிரெகரிக்குப் பிறகு போப்பாகப் பதவியேற்ற நான்காம் இன்னசென்ட் அவரை மீண்டும் சர்ச்சிலிருந்து நீக்கினார். ஃபிரெட்ரிக் அதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் இன்னசென்ட்டை அந்திக்கிறிஸ்து என அறிவித்தார்.
பைபிள் எழுத்தாளர்களில் அப்போஸ்தலன் யோவான் மட்டுமே “அந்திக்கிறிஸ்து” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். இவருடைய கடிதங்கள் இரண்டில் இந்த வார்த்தை ஒருமையிலும் பன்மையிலுமாக ஐந்து தடவை காணப்படுகிறது. இந்த வார்த்தை இடம்பெறுகிற வசனங்கள் அடுத்த பக்கத்திலுள்ள பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ளன. அந்திக்கிறிஸ்து என்பவன் பொய் பேசுபவன், ஏமாற்றுபவன், கிறிஸ்துவோடும் கடவுளோடும் ஒருவருக்குள்ள உறவை முறிக்க தீவிரமாய் முயற்சி செய்பவன் என்பதை இவ்வசனங்களிலிருந்து நாம் காண முடிகிறது. எனவே, இந்த அப்போஸ்தலன் தன் சக கிறிஸ்தவர்களை இவ்வாறு ஊக்குவித்தார்: “பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் [“ஏவப்பட்ட வசனிப்புகளையும்,” NW] நம்பாமல், அந்த ஆவிகள் [“ஏவப்பட்ட வசனிப்புகள்,” NW] தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.”—1 யோவான் 4:1.
இயேசுவும்கூட ஏமாற்றுக்காரர்களை அல்லது கள்ளத்தீர்க்கதரிசிகளைக் குறித்து எச்சரித்தார். அவர் சொன்னதாவது: “அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். அவர்களுடைய கனிகளினாலே [அதாவது, செயல்களாலே] அவர்களை அறிவீர்கள்.” (மத்தேயு 7:15, 16) அந்திக்கிறிஸ்துவைக் குறித்து இயேசுவும் தம் சீஷர்களை எச்சரித்தாரா? கெட்ட எண்ணம் கொண்ட இந்த ஏமாற்றுக்காரனை எப்படி அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்பதைப் பார்க்கலாம்.