உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w06 12/1 பக். 30-31
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • இதே தகவல்
  • இயேசுவின் முதல் அற்புதம்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • இயேசுவின் முதல் அற்புதம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • இயேசுவின் முதல் அற்புதம்
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
  • வேதனையின் வாளை வெற்றிகரமாகச் சமாளித்தார்
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
w06 12/1 பக். 30-31

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

கானா ஊர் கல்யாண விருந்தில் இயேசு தம் தாயை அழைத்த விதம் மரியாதையற்றதாக அல்லது கனிவற்றதாக இருந்ததா?​—⁠யோவான் 2:4.

இயேசு முழுக்காட்டுதல் பெற்ற சில நாட்களில் அவரும் அவருடைய சீஷர்களும் கானா ஊர் கல்யாண விருந்தில் கலந்துகொள்ள அழைப்பைப் பெற்றார்கள். அவருடைய தாயாகிய மரியாளும் அங்கு வந்திருந்தார். திராட்சரசம் குறைந்துபோனபோது, “அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை” என்று இயேசுவிடம் மரியாள் சொன்னார். அதற்குப் பதில் அளிக்கும்போது இயேசு தம் தாயைப் பார்த்து இவ்வாறு சொன்னார்: “ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை.”​—⁠யோவான் 2:1-4.

இன்று, யாரேனும் தன் தாயை “ஸ்திரீயே” என்று அழைத்து, “எனக்கும் உனக்கும் என்ன” என்று கேட்டிருந்தால் அது ஒருவேளை மரியாதையற்றதாக, சொல்லப்போனால் அவமதிப்பதாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால், இயேசுவின் மீது அத்தகைய குற்றத்தைச் சுமத்துவது அன்றிருந்த கலாச்சாரத்தையும் மொழிநடையையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாததைக் காட்டும். பைபிள் காலங்களில் இத்தகைய சொற்றொடர்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதைப் புரிந்துகொள்வது உதவியாய் இருக்கும்.

“ஸ்திரீ” என்ற வார்த்தையைப் பற்றி வைன்ஸ் எக்ஸ்பாஸிட்டரி டிக்ஷ்னரி ஆஃப் ஓல்டு அண்டு நியூ டெஸ்டமன்ட் உவர்ட்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஒரு பெண்ணை அழைக்க இந்த வார்த்தையை உபயோகிக்கும்போது அது கடிந்துகொள்வதையோ கண்டிப்பதையோ அல்ல, ஆனால் அன்போடும் மரியாதையோடும் அழைப்பதைக் குறிக்கிறது.” பிற புத்தகங்களும் இக்கருத்தை ஆமோதிக்கின்றன. உதாரணத்திற்கு, தி ஆங்கர் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “இது கடிந்துகொள்வதை, அவமரியாதையை, பாசம் இல்லாததை அர்த்தப்படுத்துவதில்லை . . . பொதுவாகவே இயேசு பெண்களை மரியாதையுடன் அப்படித்தான் அழைத்தார்.” அந்த வார்த்தை, “அழைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறதே தவிர மரியாதையற்ற வேறு எந்த அர்த்தத்தையும் தருவதில்லை” என த நியூ இன்டர்நேஷனல் டிக்ஷ்னரி ஆஃப் நியூ டெஸ்டமன்ட் தியாலஜி விவரிக்கிறது. பொதுவாக அப்படி அழைப்பது “மரியாதையற்றதாகவோ கண்ணியமற்றதாகவோ நிச்சயமாய் இல்லை” என கேர்ஹார்ட் கிட்டல் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய புதிய ஏற்பாட்டின் இறையியல் அகராதியில் குறிப்பிடுகிறார். ஆக, “ஸ்திரீயே” என குறிப்பிடும்போது, இயேசு தம் தாயை அநாகரிகமாகவோ அன்பற்ற விதமாகவோ அழைக்கவில்லை என்ற முடிவுக்கு நாம் வரவேண்டும்.​—⁠மத்தேயு 15:28; லூக்கா 13:12; யோவான் 4:21; 19:26; 20:13, 15.

“எனக்கும் உனக்கும் என்ன” என்ற சொற்றொடரைப் பற்றி என்ன சொல்லலாம்? இது யூதர்கள் பொதுவாகப் பயன்படுத்தும் மரபுத்தொடராக இருக்கிறது; இத்தகைய சொற்றொடர் பைபிளில் பல இடங்களில் காணப்படுகிறது. உதாரணத்திற்கு 2 சாமுவேல் 16:10-⁠ல், “செருயாவின் குமாரரே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னைத் தூஷிக்கட்டும்; தாவீதைத் தூஷிக்க வேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்” எனக் குறிப்பிட்டு சீமேயியை அபிசாய் கொல்லாதபடி தாவீது தடுத்த சம்பவம் காணப்படுகிறது. அதேபோல் 1 இராஜாக்கள் 17:18-⁠ல், தன் மகன் இறந்துவிட்டதை சாறிபாத் ஊரைச் சேர்ந்த விதவை அறிந்தபோது எலியாவிடம், “தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும், என் குமாரனைச் சாகப்பண்ணவுமா? என்னிடத்தில் வந்தீர்” என்று கேட்ட சம்பவம் காணப்படுகிறது.

இந்த பைபிள் உதாரணங்களிலிருந்து, “எனக்கும் உனக்கும் என்ன” என்ற சொற்றொடர் பெரும்பாலும் ஆணவத்தையோ அகந்தையையோ காட்டுவதற்குப் பயன்படுத்தப்படவில்லை, ஆனால், ஒரு செயலைச் செய்ய ஏதோவொரு கருத்தோ ஆலோசனையோ தெரிவிக்கப்பட்டபோது அதை செய்யாதிருப்பதற்கு அல்லது வேறுபட்ட கண்ணோட்டத்தையோ கருத்தையோ தெரிவிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அப்படியானால், மரியாளிடம் இயேசு சொன்ன வார்த்தைகளைக் குறித்து என்ன சொல்லலாம்?

“அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை” என்று இயேசுவிடம் மரியாள் சொன்னபோது, நிலைமையை மட்டுமே எடுத்துச்சொல்லாமல், அதற்காக அவர் ஏதாவது செய்ய வேண்டும் என உணர்த்தியது தெளிவாகத் தெரிகிறது. மரியாள் மறைமுகமாய் கூறிய ஆலோசனைக்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில், புழக்கத்திலிருந்த மரபுத்தொடரை இயேசு பயன்படுத்தினார்; அதோடு, “என் வேளை இன்னும் வரவில்லை” என்று அவர் சேர்த்துச் சொன்னது, அவர் மறுத்ததற்கான காரணத்தை நாம் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.

வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக இயேசு பொ.ச. 29-⁠ல் முழுக்காட்டுதல் பெற்று, அபிஷேகம் செய்யப்பட்டதில் ஆரம்பித்து, அவருடைய மரணத்திலும், உயிர்த்தெழுப்பப்படுவதிலும், மகிமைப்படுத்தப்படுவதிலும் முடிவடைய இருந்த உத்தம போக்கைப் பின்பற்றுவது யெகோவாவின் சித்தம் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். “மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” என்று அவர் சொன்னார். (மத்தேயு 20:28) தாம் மரிக்கும் தறுவாயை நெருங்கியபோது இதைத் தெளிவுபடுத்தும் விதத்தில் “வேளை வந்தது” என்று அவர் சொன்னார். (யோவான் 12:1, 23; 13:1) இவ்வாறு, தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் ஜெபித்தபோது இயேசு பின்வருமாறு சொன்னார்: “பிதாவே, வேளை வந்தது, . . . உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.” (யோவான் 17:2) இறுதியில், கெத்செமனே தோட்டத்தில் அவரைக் கைதுசெய்ய ஜனக்கூட்டத்தார் வந்தபோது தூங்கிக்கொண்டிருந்த அப்போஸ்தலர்களை எழுப்பி இவ்வாறு சொன்னார்: “வேளை வந்தது, இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.”​—⁠மாற்கு 14:41.

எனினும், கானா ஊர் கல்யாணத்தின்போது இயேசு அப்போதுதான் மேசியாவாக தம் ஊழியத்தை ஆரம்பித்திருந்தார்; எனவே, அவருடைய “வேளை” அப்போது வரவில்லை. தம்முடைய பிதா நிர்ணயித்திருக்கும் நேரத்திலும், அவர் வழிநடத்துகிற விதத்திலும் அவருடைய சித்தத்தைச் செய்வதே இயேசுவின் முக்கிய நோக்கமாய் இருந்தது; தீர்மானிக்கப்பட்ட அவருடைய பாதையில் யாரும் குறுக்கிட முடியாது. இதைத் தம் தாய்க்குத் தெரிவித்தபோது, இயேசு உறுதி காட்டினாரே தவிர மரியாதையற்ற விதத்திலோ கனிவற்ற விதத்திலோ எதையும் சொல்லவில்லை. மறுபட்சத்தில் மரியாளும் தன் மகன் தன்னைக் கூனிக்குறுகச் செய்ததாகவோ அவமதித்ததாகவோ நினைக்கவில்லை. சொல்லப்போனால், இயேசு அளித்த பதிலைப் புரிந்துகொண்டவராக, கல்யாண விருந்தில் பரிமாறிய வேலைக்காரரிடம் மரியாள் இவ்வாறு சொன்னார்: “அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள்.” தம் தாயைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, மேசியாவாக தம் முதல் அற்புதத்தை இயேசு அங்கு நிகழ்த்தினார்; ஆம், தண்ணீரைத் தரமிக்க திராட்சரசம் ஆக்கினார். இவ்வாறு தம் பிதாவின் சித்தத்தைச் செய்வதிலும்சரி தம் தாயின் அக்கறைக்கு மதிப்புக்கொடுப்பதிலும் சரி, இயேசு சமநிலை காத்தார்.​—⁠யோவான் 2:5-11.

[பக்கம் 31-ன் படம்]

தம் தாயிடம் பேசும்போது இயேசு கனிவையும் அதே சமயத்தில் உறுதியையும் காட்டினார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்