ஆணும் பெண்ணும்—ஒருவருக்கொருவர் துணையாகப் படைக்கப்பட்டனர்
ஆணும் பெண்ணும் எப்பொழுதும் ஒன்றாக இருக்கவே ஏங்கியிருக்கிறார்கள். இந்த ஆசை கடவுளிடமிருந்து வந்த ஒன்று. முதல் மனிதனாகிய ஆதாம் தனியாக இருப்பது நல்லதல்ல என்று யெகோவா கண்டார். அதனால், அவர் “ஏற்ற துணையை அவனுக்கு [மனிதனுக்கு]” உண்டாக்கினார்.
யெகோவா ஆதாமுக்கு ஆழ்ந்த நித்திரை வரச் செய்தார். பிறகு அவனுடைய விலா எலும்பில் ஒன்றை எடுத்து அந்த “விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.” யெகோவா உருவாக்கிய இந்த அழகான படைப்பைப் பார்த்து ஆதாம் மிகவும் பரவசமடைந்து இப்படிச் சொன்னான்: “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்.” பரிபூரண மனுஷியாகிய ஏவாள் தன்னுடைய பெண்மைக் குணத்துடன் உண்மையில் அன்பைப் பெறத் தகுந்தவளாக இருந்தாள். பரிபூரண ஆதாமும் தன்னுடைய கண்ணியமான ஆண்மைக் குணத்துடன் மரியாதையைப் பெறத் தகுந்தவனாய் இருந்தான். அவர்கள் ஒருவருக்கொருவர் துணையாகப் படைக்கப்பட்டார்கள். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.”—ஆதியாகமம் 2:18-24.
என்றாலும், குடும்பங்கள் இன்று பிளவுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவு அடிக்கடி துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது அல்லது சுயநலமாகப் பயன்படுத்தப்படுகிறது. இருபாலாருக்கும் இடையேயுள்ள போட்டி மனப்பான்மை சண்டைக்கும் சச்சரவுக்கும் வழிவகுத்திருக்கிறது. இவையெல்லாம், ஆணுக்கும் பெண்ணுக்கும் கடவுள் கொண்டிருந்த நோக்கத்திற்கு முரண்பாடாக இருக்கின்றன. ஆண், பூமியில் ஒரு நேர்த்தியான பொறுப்பை நிறைவேற்ற வடிவமைக்கப்பட்டான். ஆணுக்குத் துணையாக ஒரு பெண்ணும் ஒப்பற்ற, மதிப்புமிக்க ஒரு பொறுப்பை நிறைவேற்றப் படைக்கப்பட்டாள். ஒத்திசைவாக வேலை செய்யவே இருவரும் படைக்கப்பட்டார்கள். மனிதகுலத்தின் ஆரம்பம் முதற்கொண்டு, கடவுள் பக்தியுள்ள ஆண்களும் பெண்களும் யெகோவா அவர்களுக்காக வைத்திருந்த பொறுப்புகளை நிறைவேற்ற உண்மையுடன் முயன்றிருக்கிறார்கள். இதனால் அவர்களுக்குச் சந்தோஷமும் திருப்தியும் அதிகரித்தன. அந்தப் பொறுப்புகள் என்ன, அவற்றை நாம் எவ்வாறு நிறைவேற்றலாம்?
[பக்கம் 3-ன் படம்]
கடவுளுடைய ஏற்பாட்டில் கண்ணியமிக்க பொறுப்புகளை நிறைவேற்ற ஆணும் பெண்ணும் படைக்கப்பட்டார்கள்