உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w07 1/15 பக். 21-25
  • பைபிள் கற்பிப்பதையே கற்பியுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பைபிள் கற்பிப்பதையே கற்பியுங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கடவுளுக்கு அக்கறை இருக்கிறதா?
  • நம் வாழ்க்கையின் நோக்கம் என்ன?
  • நாம் சாகும்போது என்ன நடக்கிறது?
  • நாம் பயன்படுத்துவதற்கு ஒரு புதிய புத்தகம்
  • அரிய வாய்ப்புகளுக்கு நன்றியுள்ளவர்களாய் இருங்கள்
  • உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
    உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
  • கடவுளைப் பற்றிய உண்மைகள் யாவை?
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • பைபிள் கற்பிக்கிறவற்றிற்குக் கீழ்ப்படிய பிறருக்கு உதவுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
w07 1/15 பக். 21-25

பைபிள் கற்பிப்பதையே கற்பியுங்கள்

“சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.”​—⁠மத்தேயு 28:19, 20.

1. பைபிள் எந்தளவு பரவலாகக் கிடைக்கிறது?

யெகோவாவின் வார்த்தையான பரிசுத்த பைபிள் மிகப் பழமையான, உலகெங்கும் பரவலாக விநியோகிக்கப்படுகிற புத்தகங்களில் ஒன்று. அதன் ஒரு பாகமாவது 2,300-⁠க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பூமியிலுள்ள குடிமக்களில் 90 சதவீதத்தினருக்கும் அதிகமானோர் தங்களுடைய தாய்மொழியில் அதை வைத்திருக்கிறார்கள்.

2, 3. (அ) பைபிள் போதனைகளைக் குறித்த குழப்பங்களுக்கு காரணம் என்ன? (ஆ) என்ன கேள்விகளை நாம் சிந்திக்கப்போகிறோம்?

2 இலட்சக்கணக்கானோர் பைபிளின் சில பக்கங்களை தினமும் வாசிக்கிறார்கள். சிலர் முழு பைபிளையும் பலமுறை வாசித்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மதத் தொகுதியினர் தங்களுடைய போதனைகள் பைபிள் அடிப்படையிலானவை என சொல்கிறார்களே தவிர அது கற்பிப்பதை அவர்கள் எல்லாருமே ஏற்றுக்கொள்வதில்லை. இப்படியொரு சூழ்நிலை இருக்க, ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையேகூட பலமான கருத்து வேற்றுமைகளும் இருக்கின்றன. சிலருக்கு பைபிளையும் அதன் ஆரம்பத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் குறித்ததில் சந்தேகங்கள் இருக்கின்றன. அநேகர் அதை உறுதிமொழி கூறுவதற்கோ நீதிமன்றத்தில் சத்தியம் செய்வதற்கோ மட்டுமே உபயோகிக்கிறார்கள். இவ்விதமாக சடங்காச்சார முறையில் பயன்படுத்துவதற்குரிய ஒரு புனித புத்தகமாக மட்டுமே அதைக் கருதுகிறார்கள்.

3 உண்மையில், மனிதகுலத்துக்கென்றே கடவுள் கொடுத்துள்ள வல்லமையான வார்த்தை, அதாவது செய்தி பைபிளில் உள்ளது. (எபிரெயர் 4:12) ஆகவே, பைபிள் கற்பிப்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென யெகோவாவின் சாட்சிகளான நாம் விரும்புகிறோம். “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்” என்று இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்கு கட்டளையிட்டார்; அவர் கொடுத்த அந்தக் கட்டளையை நிறைவேற்றுவதில் நாம் சந்தோஷம் அடைகிறோம். (மத்தேயு 28:19, 20) உலகெங்கிலும் உள்ள மதங்களில் நிலவும் குழப்பமான கருத்துகளால் குழம்பிப்போயிருக்கும் நல்மனமுள்ள ஆட்களை வெளி ஊழியத்தில் நாம் காண்கிறோம். படைப்பாளரைப்பற்றி அறிந்துகொள்ள அவர்கள் விரும்புகிறார்கள்; வாழ்க்கையின் அர்த்தத்தைப்பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவும் ஆசைப்படுகிறார்கள். ஆகவே, அநேகரின் மனதைக் குடையும் மூன்று கேள்விகளை இப்போது சிந்திக்கலாம். இந்த ஒவ்வொரு கேள்விக்கும் மதத் தலைவர்கள் அளிக்கும் தவறான விளக்கங்கள் என்னவென்பதை பார்க்கலாம். அதன் பிறகு பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது என்பதை ஆராயலாம். அந்தக் கேள்விகளாவன: (1) கடவுளுக்கு நம்மீது அக்கறை இருக்கிறதா? (2) நம் வாழ்க்கையின் நோக்கம் என்ன? (3) நாம் சாகும்போது என்ன நடக்கிறது?

கடவுளுக்கு அக்கறை இருக்கிறதா?

4, 5. கடவுளுக்கு நம்மீது அக்கறை இல்லையென ஜனங்கள் நினைப்பதற்குக் காரணம் என்ன?

4 முதல் கேள்வியை இப்போது சிந்திக்கலாம்: கடவுளுக்கு நம்மீது அக்கறை இருக்கிறதா? இல்லை என்றே அநேகர் நினைக்கிறார்கள்; இது வருத்தத்திற்குரிய விஷயம். அவர்கள் அப்படி நினைப்பதற்குக் காரணம் என்ன? பகைமையும் போரும் கஷ்டங்களும் நிறைந்த உலகத்தில் அவர்கள் வாழ்வதே அதற்கு ஒரு காரணம். ‘கடவுளுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், இப்படிப்பட்ட வேதனை தரும் காரியங்கள் நடக்காதபடி அவர் நிச்சயம் தடுத்திருப்பார்’ என அவர்கள் வாதிடுகிறார்கள்.

5 கடவுளுக்கு அக்கறை இல்லையென ஜனங்கள் நினைப்பதற்கு மற்றொரு காரணம், மதப் போதகர்களே ஜனங்களை அப்படி நினைக்க வைப்பதுதான். ஏதாவது துயரச் சம்பவம் நடக்கும்போது, பொதுவாக குருமார் என்ன சொல்கிறார்கள்? கார் விபத்தில் ஒரு பெண் தன்னுடைய இரண்டு சிறு பிள்ளைகளைப் பறிகொடுத்தபோது, “இது கடவுளுடைய சித்தம். கடவுளுக்கு இன்னும் இரண்டு தேவதூதர்கள் தேவைப்பட்டார்கள்” என்று அவளுடைய பாதிரி சொன்னார். இப்படிச் சொல்வதன் மூலம் இன்று நடக்கும் கெட்ட காரியங்களுக்கு கடவுள்தான் காரணமென்று குருமார் சொல்லாமல் சொல்கிறார்கள். ஆனால், சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.” (யாக்கோபு 1:13) கெட்ட காரியங்களுக்கு யெகோவா தேவன் ஒருபோதும் காரணர் அல்ல. சொல்லப்போனால், ‘அக்கிரமம் தேவனுக்கு . . . தூரமாயிருக்கிறது.’​—⁠யோபு 34:10.

6. இவ்வுலகிலுள்ள துன்பத்திற்கும் துயரத்திற்கும் காரணம் யார்?

6 அப்படியானால், ஏன் இந்தளவுக்கு துன்பமும் துயரமும் இருக்கின்றன? கடவுளின் ஆட்சியை பெரும்பாலோர் ஒதுக்கித்தள்ளிவிட்டிருப்பதே அதற்கு ஒரு காரணம்; அவருடைய நீதியான சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் அவர்கள் கீழ்ப்படிய விரும்புவதில்லை. மனிதர் தங்களை அறியாமலேயே கடவுளுடைய எதிரியான சாத்தானுக்குக் கீழ்ப்படிகிறார்கள்; ஏனெனில், ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது’ என பைபிள் சொல்கிறது. (1 யோவான் 5:19) இந்த உண்மையை அறிந்திருந்தால், இவ்வுலகில் கெட்ட காரியங்கள் ஏன் நடக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது எளிது. சாத்தான் தீயவன், வன்மம் நிறைந்தவன், வஞ்சகன், கொடூரன். ஆகவே, இந்த உலகத்தின் ஆட்சியாளனுடைய சுபாவத்தையே உலகம் பிரதிபலிக்கும் என நாம் எதிர்பார்க்க வேண்டும். ஆக, துன்மார்க்கம் பெருகியிருப்பதில் ஆச்சரியமே இல்லை!

7. நாம் படும் துன்பங்களுக்கு சில காரணங்கள் யாவை?

7 நாம் படும் துன்பங்களுக்கு மற்றொரு காரணம் மனித அபூரணமாகும். பாவமுள்ள மனிதர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற போராடுகிறார்கள்; இது பெரும்பாலும் போர்கள், கொடுமைகள், துன்பங்கள் ஆகியவற்றில் விளைவடைகிறது. ‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்’ என பிரசங்கி 8:9 சரியாகவே சொல்கிறது. துன்பத்திற்கான இன்னுமொரு காரணம், “சமயமும் எதிர்பாராத சம்பவமும்” என பைபிள் குறிப்பிடுகிறது. (பிரசங்கி 9:11, NW) பொதுவாக, ஆபத்து நேரிடும் இடத்தில் தெரியாத்தனமாக இருப்பதாலேயே ஜனங்கள் அதில் மாட்டிக்கொள்கிறார்கள்.

8, 9. கடவுளுக்கு நம்மீது உண்மையிலேயே அக்கறை இருக்கிறது என்பது நமக்கு எப்படித் தெரியும்?

8 துன்பத்திற்கு யெகோவா காரணம் அல்ல என்பதைத் தெரிந்துகொள்வது ஆறுதலாக இருக்கிறது. ஆனாலும், நம் வாழ்க்கையில் நடக்கும் காரியங்களைக் குறித்து கடவுளுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா? ஆம் என்ற பதில் மனதுக்கு எவ்வளவு இதமாயிருக்கிறது! கடவுளுக்கு நம்மீது அக்கறை இருப்பதால்தான் மனிதர்கள் கெட்ட பாதையில் செல்ல தாம் அனுமதித்திருப்பதற்கான காரணங்களை தம் வார்த்தையாகிய பைபிளில் விளக்கியிருக்கிறார். கடவுள் கொடுக்கும் காரணங்களில் இரண்டு விவாதங்கள் உட்பட்டுள்ளன: அவருடைய அரசதிகாரம், மனிதரின் உத்தமத்தன்மை. யெகோவா சர்வவல்லமையுள்ள படைப்பாளராக இருப்பதால், துன்பத்தை அவர் அனுமதிப்பதற்கான காரணங்களை நமக்கு அவர் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் அவர் அதைச் சொல்கிறார்; ஏனென்றால் நம்மீது அவருக்கு அக்கறை இருக்கிறது.

9 கடவுளுக்கு நம்மீது அக்கறை இருக்கிறது என்பதற்குக் கூடுதலான அத்தாட்சியைக் கவனியுங்கள். நோவாவின் நாட்களில் பூமியெங்கும் அக்கிரமம் தலைவிரித்தாடியபோது, அது “அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.” (ஆதியாகமம் 6:5, 6) அப்படியென்றால் இன்றுள்ள நிலைமைகளைக் கண்டு அவர் விசனப்படுவதில்லையா? அப்படியிருக்கவே மாட்டார், ஏனெனில் யெகோவா மாறாதவர். (மல்கியா 3:6) அவர் அநீதியை வெறுக்கிறார், மக்கள் துன்பப்படுவதைப் பார்க்க அவர் விரும்புவதில்லை. மனிதருடைய ஆட்சியாலும் பிசாசினுடைய செல்வாக்கினாலும் ஏற்பட்டிருக்கிற எல்லாத் தீங்கையும் கடவுள் சீக்கிரத்திலேயே சரிசெய்வாரென பைபிள் கற்பிக்கிறது. கடவுளுக்கு நம்மீது அக்கறை இருக்கிறது என்பதற்கு இது நம்பகமான அத்தாட்சி, அல்லவா?

10. மனிதர் படும் துன்பத்தைப் பார்த்து யெகோவா எப்படி உணருகிறார்?

10 துயர சம்பவங்களை நாம் எதிர்ப்படுவது கடவுளுடைய சித்தம் என மதத் தலைவர்கள் சொல்லும்போது, கடவுளைப்பற்றி அவர்கள் முற்றிலும் தவறான கருத்தையே போதிக்கிறார்கள். அதற்கு நேர்மாறாக, நம் துன்பங்களுக்கெல்லாம் முடிவுகட்ட யெகோவா ஏங்குகிறார். “அவர் உங்கள்மீது அக்கறையுள்ளவராய் இருக்கிறார்” என 1 பேதுரு 5:7 (NW) சொல்கிறது. அதையே, பைபிள் உண்மையில் கற்பிக்கிறது!

நம் வாழ்க்கையின் நோக்கம் என்ன?

11. பூமியில் மனித வாழ்க்கையைக் குறித்து உலக மதங்கள் பொதுவாக என்ன சொல்கின்றன?

11 அநேகரை யோசிக்க வைக்கும் இரண்டாவது கேள்விக்கு இப்போது வரலாம்: நம் வாழ்க்கையின் நோக்கம் என்ன? மனிதன் இப்பூமியில் தற்காலிகமாகத்தான் வாழ்கிறான் என உலக மதங்கள் பெரும்பாலும் பதிலளிக்கின்றன. வாழ்க்கைப் பயணத்தில் சேர வேண்டிய இடத்தை அடையும் முன் கொஞ்ச காலம் தங்கியிருப்பதற்குரிய இடமாக மட்டுமே இந்தப் பூமியை அவர்கள் கருதுகிறார்கள். இந்தக் கிரகத்தை கடவுள் என்றாவது ஒரு நாள் அழித்துவிடுவார் என சில குருமார் தவறாகப் போதிக்கிறார்கள். அப்படிப்பட்ட போதனைகளின் காரணமாக, இப்போதே முடிந்தவரை வாழ்க்கையை முழுமையாக அனுபவித்துவிட வேண்டும் என அநேகர் தீர்மானிக்கிறார்கள்; ஏனென்றால் எப்படியும் சாகத்தானே போகிறோம் என அவர்கள் நினைக்கிறார்கள். நம் வாழ்க்கையின் நோக்கத்தைப்பற்றி பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?

12-14. பூமியையும் மனிதரையும் குறித்ததில் கடவுளுடைய நோக்கத்தைப்பற்றி பைபிள் என்ன கற்பிக்கிறது?

12 ஓர் அருமையான நோக்கத்தோடுதான் பூமியையும் மனிதரையும் கடவுள் படைத்திருக்கிறார். அவர், ‘பூமியை வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்தார்.’ (ஏசாயா 45:18) அதுமட்டுமல்ல, ‘பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை [யெகோவா] ஸ்தாபித்திருக்கிறார்.’ (சங்கீதம் 104:5) பூமியையும் மனிதரையும் குறித்ததில் கடவுளுடைய நோக்கத்தைப்பற்றி கற்றுக்கொள்வது, நம் வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள உதவும்.

13 மனிதர் குடியிருப்பதற்காக இப்பூமியை மிகக் கவனமாகக் கடவுள் தயார்படுத்தினார் என ஆதியாகம புத்தகத்தின் முதல் இரண்டு அதிகாரங்கள் காட்டுகின்றன. படைப்பின் ஆறு “நாட்கள்” முடிவடையும் தறுவாயில், அவையாவும் பார்ப்பதற்கு “மிகவும் நன்றாயிருந்தது.” (ஆதியாகமம் 1:31) முதல் மனிதனும் மனுஷியுமான ஆதாம், ஏவாளை அழகான ஏதேன் தோட்டத்தில் குடிவைத்தார்; அவர்களுக்கு ஏராளமான உணவையும் அளித்தார். ‘பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தும்படி’ அந்த முதல் தம்பதியரிடம் சொன்னார். அவர்கள் பரிபூரண பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டியிருந்தது, அவர்கள் குடியிருந்த தோட்டத்தைப் பூமியெங்கும் விஸ்தரிக்க வேண்டியிருந்தது; மேலும், மிருகங்களை அன்போடு ஆண்டுகொள்ள வேண்டியிருந்தது.​—⁠ஆதியாகமம் 1:26-28.

14 பரதீஸ் பூமியில் பரிபூரணத்துடன் மனிதர்கள் என்றென்றும் வாழ வேண்டும் என்பதே கடவுளுடைய நோக்கமாக இருக்கிறது. “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாய் இருப்பார்கள்” என்று அவருடைய வார்த்தை சொல்கிறது. (சங்கீதம் 37:29) ஆம், பரதீஸ் பூமியில் என்றென்றும் வாழ்வதற்கே மனிதர் படைக்கப்பட்டார்கள். அதுவே கடவுளுடைய நோக்கம், அதைத்தான் பைபிள் உண்மையிலேயே கற்பிக்கிறது!

நாம் சாகும்போது என்ன நடக்கிறது?

15. சாகும்போது நமக்கு என்ன நடப்பதாக உலகிலுள்ள பெரும்பாலான மதங்கள் கற்பிக்கின்றன?

15 இப்போது அநேகரை அலைக்கழிக்கிற மூன்றாவது கேள்வியைச் சிந்திக்கலாம்: நாம் சாகும்போது என்ன நடக்கிறது? மனிதர்கள் இறந்த பிறகு அவர்களுக்குள் இருக்கிற ஏதோவொன்று தொடர்ந்து உயிர்வாழ்கிறது என உலகிலுள்ள பெரும்பாலான மதங்கள் கற்பிக்கின்றன. கெட்டவர்களைக் கடவுள் எரிநரகத்தில் போட்டு என்றென்றும் வாட்டி வதைக்கிறார் என சில மதங்கள் இன்றும்கூட நம்புகின்றன. ஆனால், அது உண்மையா? மரணத்தைப்பற்றி பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?

16, 17. இறந்தவர்களின் நிலையைப்பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

16 கடவுளுடைய வார்த்தை இவ்வாறு குறிப்பிடுகிறது: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை [“இனி அவர்கள் கூலியைப் பெறவும் மாட்டார்கள்,” NW].” இறந்தவர்கள் ‘ஒன்றும் அறியாததால்’ அவர்களால் கேட்க முடியாது, பார்க்க முடியாது, பேச முடியாது, உணர முடியாது, யோசிக்கவும் முடியாது. அவர்களால் எவ்வித கூலியையும் பெற முடியாது. எப்படிப் பெற முடியும்? அவர்களால்தான் எந்த வேலையையும் செய்ய முடியாதே! அதுமட்டுமல்ல, “அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று.” காரணம், அவர்களால் இனி எவ்வித உணர்ச்சிகளையும் வெளிக்காட்ட முடியாது.​—⁠பிரசங்கி 9:5, 6, 10.

17 ஆக, இறந்தவர்களைப்பற்றி மிக எளிமையாகவும் மிகத் தெளிவாகவும் பைபிள் சொல்வது இதுவே: இறந்தவர்கள் எங்குமே உயிருடன் இல்லை. மறுபிறவி கோட்பாட்டை நம்புகிறவர்கள் சொல்வதுபோல், நாம் சாகும்போது நம் உடலிலுள்ள எந்தப் பாகமும் உயிரோடு இருந்து மறுபிறவி எடுக்க முடியாது. இதை இவ்வாறு விளக்கலாம்: நம் வாழ்க்கை, மெழுகுவர்த்தியின் சுடரைப் போன்றது. அதை அணைத்துவிடுகையில் அது எங்குமே செல்வதில்லை. அது வெறுமனே இல்லாமல் போகிறது.

18. இறந்தவர்களுக்கு எந்த உணர்வும் இல்லை என்பதை பைபிள் மாணாக்கர் புரிந்துகொள்கையில், அவர் என்ன முடிவுக்கு வருகிறார்?

18 இந்த எளிய, ஆனால் மறுக்க முடியாத உண்மை எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை யோசித்துப் பாருங்கள். இறந்தவர்களுக்கு எந்த உணர்வும் இல்லை என்பதை பைபிள் மாணாக்கர் புரிந்துகொண்டவுடன், இறந்துபோன முன்னோர்கள் தன்னை எவ்விதத்திலும் தொந்தரவு செய்ய முடியாது என்ற முடிவுக்கு வரமுடிகிறது; அவர்கள் உயிரோடு இருக்கையில் எவ்வளவுதான் மனக்கசப்புள்ளவர்களாக இருந்திருந்தாலும் சரி, அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அதுமட்டுமல்ல, இறந்துபோன அவருடைய அன்பானவர்களால் இனி கேட்கவோ பார்க்கவோ பேசவோ உணரவோ யோசிக்கவோ முடியாது என்பதையும் உடனடியாகப் புரிந்துகொள்கிறார். ஆக, இறந்தவர்கள் உத்தரிக்கும் ஸ்தலத்தில் தாங்க முடியாத தனிமை உணர்வில் தவித்துக் கொண்டோ எரிகிற நரகத்தில் துடிதுடித்துக் கொண்டோ இல்லை. என்றாலும், கடவுளுடைய நினைவில் உள்ள மரித்தவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என பைபிள் கற்பிக்கிறது. இது அருமையான எதிர்பார்ப்பு, அல்லவா?​—⁠யோவான் 5:28, 29.

நாம் பயன்படுத்துவதற்கு ஒரு புதிய புத்தகம்

19, 20. கிறிஸ்தவர்களாக நமக்கு என்ன பொறுப்பு இருக்கிறது, ஊழியத்தில் நாம் பயன்படுத்துவதற்கென்றே பைபிள் படிப்புக்கு உதவும் என்ன புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது?

19 அநேகருடைய மனதில் எழும் மூன்று கேள்விகளை மட்டும்தான் நாம் இப்போது சிந்தித்தோம். இவை ஒவ்வொன்றையும் பற்றி பைபிள் தெளிவாகவும் நேரடியாகவும் கற்பிக்கிறது. பைபிள் என்ன கற்பிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு இப்படிப்பட்ட சத்தியங்களைச் சொல்வது எத்தனை சந்தோஷத்தை அளிக்கிறது! ஆனால், நல்மனமுள்ள ஆட்களின் மனதில் முக்கியமான கேள்விகள் இன்னும் நிறைய இருக்கின்றன; அவற்றிற்குத் திருப்திகரமான பதில்களை அவர்கள் தேடுகிறார்கள். இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில்களைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவும் பொறுப்பு கிறிஸ்தவர்களாகிய நமக்கு இருக்கிறது.

20 பைபிள் சத்தியத்தைத் தெளிவாகவும் இருதயத்தில் பதியும் விதத்திலும் கற்பிப்பது சவால்தான். இந்தச் சவாலை சமாளிப்பதற்கு, “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார் ஒரு புதிய புத்தகத்தைத் தயாரித்திருக்கிறார்கள்; முக்கியமாக ஊழியத்தில் நாம் பயன்படுத்தும் விதத்தில் அதைத் தயாரித்திருக்கிறார்கள். (மத்தேயு 24:45-47, NW) 224 பக்கங்களை உடைய இப்புத்தகத்தின் தலைப்பு பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்பதாகும்.

21, 22. பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தின் சிறப்பம்சங்கள் சில யாவை?

21 “கடவுளுக்குக் கீழ்ப்படிதல்” என்ற தலைப்பில் 2005-⁠ல் யெகோவாவின் சாட்சிகள் நடத்திய மாநாடுகளில் இப்புத்தகம் வெளியிடப்பட்டது; இதில் அநேக சிறப்பம்சங்கள் உள்ளன. உதாரணமாக, இதன் முதல் ஐந்து பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள முன்னுரை, பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கு மிகவும் உதவியாய் இருக்கிறது. அதில் உள்ள படங்களையும் வசனங்களையும் வைத்து விளக்குவது எளிதாயிருப்பதை நீங்கள் காணலாம். அந்தப் பகுதியிலுள்ள பெட்டியைப் பயன்படுத்தியும்கூட, பைபிளிலுள்ள அதிகாரங்களையும் வசனங்களையும் எவ்வாறு கண்டுபிடிப்பதென வீட்டுக்காரருக்கு நீங்கள் விளக்கலாம்.

22 இந்தப் புதிய புத்தகத்தின் எழுத்து நடை எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கிறது. முடிந்தளவு மாணாக்கரையும் உட்படுத்தி, அவரது இருதயத்தைத் தொடும் விதத்தில் இப்புத்தகம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அதிகாரத்தின் ஆரம்பத்திலும் சில கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன; அவற்றின் முடிவில் “பைபிள் கற்பிப்பவை” என்ற பெட்டியும் உள்ளது. ஆரம்பத்திலுள்ள கேள்விகளுக்கான பதில்களும் அவற்றிற்கு அடிப்படையான பைபிள் வசனங்களும் இந்தப் பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய கருத்துகளை மாணாக்கர் புரிந்து கொள்வதற்கு உதவும் சிறந்த படங்களும் படக் குறிப்புகளும் உதாரணங்களும் இதில் உள்ளன. இப்புத்தகத்தின் அதிகாரங்கள் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், பிற்சேர்க்கைப் பகுதியில் ஆழமான விஷயங்கள் 14 முக்கிய தலைப்புகளில் விவரமாக விளக்கப்பட்டுள்ளன; மாணாக்கர் கூடுதல் தகவல் பெற விரும்பினால் அதைப் பயன்படுத்தலாம்.

23. பைபிள் கற்பிக்கிறது என்ற புத்தகத்தைப் பயன்படுத்தி பைபிள் படிப்புகள் நடத்துவது சம்பந்தமாக என்ன ஆலோசனைகள் கொடுக்கப்படுகின்றன?

23 எந்தளவுக்கு கல்வி கற்றவர்களாக இருந்தாலும் சரி எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எல்லாருக்குமே கற்பிக்க உதவும் விதத்தில் பைபிள் கற்பிக்கிறது என்ற இப்புத்தகம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மாணாக்கர் பைபிளைப்பற்றி எதுவுமே தெரியாத ஒருவராய் இருந்தால், ஒரு பைபிள் படிப்பிலேயே ஒரு முழு அதிகாரத்தையும் முடித்துவிட நினைக்காதீர்கள். பைபிள் படிப்பை வேகவேகமாக நடத்தாதீர்கள், மாறாக மாணாக்கரின் இருதயத்தில் பதியும்படி நடத்துங்கள். புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஓர் உதாரணம் அவருக்குப் புரியவில்லை என்றால், அதை விளக்குங்கள் அல்லது வேறொரு உதாரணத்தைப் பயன்படுத்துங்கள். நன்கு தயாரியுங்கள், இப்புத்தகத்தைத் திறம்பட்ட முறையில் பயன்படுத்துவதற்கு முயலுங்கள், ‘சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிப்பதற்கு’ கடவுளுடைய உதவிக்காக ஜெபியுங்கள்.​—⁠2 தீமோத்தேயு 2:15.

அரிய வாய்ப்புகளுக்கு நன்றியுள்ளவர்களாய் இருங்கள்

24, 25. யெகோவா தம் மக்களுக்கு என்ன அரிய வாய்ப்புகளை அளித்திருக்கிறார்?

24 யெகோவா தம் மக்களுக்கு அரிய வாய்ப்புகளை அளித்திருக்கிறார். தம்மைப் பற்றிய சத்தியத்தை நாம் தெரிந்துகொள்வதற்கு உதவியிருக்கிறார். இந்த வாய்ப்புக்கு நாம் ஒருபோதும் நன்றியில்லாதவர்களாய் இருக்கக் கூடாது! சொல்லப்போனால், தம் நோக்கங்களை மனமேட்டிமையுள்ளவர்களுக்கு மறைத்து மனத்தாழ்மையுள்ளவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். இதைக் குறித்து இயேசு இவ்வாறு சொன்னார்: “பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.” (மத்தேயு 11:25) இப்பிரபஞ்சத்தின் பேரரசராகிய யெகோவாவுக்குச் சேவை செய்கிற மனத்தாழ்மையுள்ளவர்களில் ஒருவராய் இருப்பது அரும் பாக்கியமே.

25 தம்மைப்பற்றி மற்றவர்களுக்குக் கற்பிக்கும் வாய்ப்பையும் கடவுள் நமக்குத் தந்திருக்கிறார். அவரைப்பற்றி பொய்களைப் போதித்திருப்பவர்கள் அவரைப்பற்றி தவறான கருத்தையே பரப்புகிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். இதன் காரணமாக அநேகர் யெகோவாவைப்பற்றி முற்றிலும் தவறான அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறார்கள்; அவர் அக்கறையில்லாதவர் என்றும் கல்நெஞ்சக்காரர் என்றும் நினைக்கிறார்கள். அவர்களுடைய தவறான அபிப்பிராயத்தைச் சரிசெய்ய நீங்கள் மனமுள்ளவராக, சொல்லப்போனால், ஆவலுள்ளவராக இருக்கிறீர்களா? நல்மனமுள்ள ஆட்கள் எல்லாருமே யெகோவாவைப் பற்றிய உண்மையை அறிந்துகொள்ள வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியென்றால், முக்கியமான விஷயங்களின் பேரில் பைபிள் என்ன சொல்கிறது என்பதைப்பற்றி பக்திவைராக்கியத்தோடு மற்றவர்களுக்குப் பிரசங்கித்து போதிப்பதன் மூலம் கடவுளுக்குக் கீழ்ப்படிதலைக் காட்டுங்கள். சத்தியத்திற்காக ஏங்குபவர்கள், பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

உங்கள் பதில்கள் என்ன?

• கடவுளுக்கு நம்மீது அக்கறை இருக்கிறதென நமக்கு எப்படித் தெரியும்?

• நம் வாழ்க்கையின் நோக்கம் என்ன?

• நாம் சாகும்போது என்ன நடக்கிறது?

• பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தின் என்ன அம்சங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கின்றன?

[பக்கம் 22-ன் படங்கள்]

துன்பங்களுக்கு முடிவு வருமென பைபிள் கற்பிக்கிறது

[படங்களுக்கான நன்றி]

மேலே வலது, சிறுமி: © Bruno Morandi/age fotostock; இடது, பெண்: AP Photo/Gemunu Amarasinghe; கீழே வலது, அகதிகள்: © Sven Torfinn/Panos Pictures

[பக்கம் 23-ன் படம்]

நீதிமான்கள் என்றென்றும் பரதீஸில் வாழ்வர்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்