பைபிள் கற்பிக்கிறவற்றிற்குக் கீழ்ப்படிய பிறருக்கு உதவுங்கள்
“நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.”—லூக்கா 8:15.
1, 2. (அ) பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகம் என்ன நோக்கத்திற்காகத் தயாரிக்கப்பட்டுள்ளது? (ஆ) சமீப வருடங்களில், சீஷராக்கும் வேலையில் தம் மக்களுடைய முயற்சியை யெகோவா எப்படி ஆசீர்வதித்திருக்கிறார்?
பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?a என்ற புத்தகத்தைப்பற்றி முழுநேர பயனியராக சேவை செய்யும் யெகோவாவின் சாட்சியான ஒரு சகோதரி இவ்வாறு சொன்னார்: “இந்தப் புத்தகம் பிரமாதமாக இருக்கிறது. என்னுடைய மாணவர்களுக்கு இது ரொம்ப பிடித்திருக்கிறது. எனக்கும் ரொம்ப பிடித்திருக்கிறது. வீட்டு வாசலில் நின்றபடியே ஆட்களுக்கு பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க இப்புத்தகம் உதவியாக இருக்கிறது.” ராஜ்ய செய்தியை அறிவித்துவரும் ஒரு வயதான சகோதரரும் இந்தப் புத்தகத்தைப்பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்: “நான் சுறுசுறுப்பாக ஊழியம் செய்து வந்திருக்கிற இந்த 50 வருட காலத்தில், யெகோவாவைப்பற்றி தெரிந்துகொள்ள பலருக்கு உதவி செய்திருக்கிறேன். ஆனால், பைபிள் படிப்புக்கு உதவும் இந்தப் புத்தகத்தைத் தலைசிறந்த புத்தகம் என்றே சொல்லுவேன். அதிலுள்ள மனதைத் தொடும் உதாரணங்களும் விளக்கப்படங்களும் அருமையிலும் அருமை.” பைபிள் கற்பிக்கிறது என்ற புத்தகத்தைப்பற்றி நீங்களும் இப்படித்தான் உணருகிறீர்களா? இயேசு கொடுத்த பின்வரும் கட்டளையை நீங்கள் நிறைவேற்றுவதற்கு உதவியாக இப்புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது: “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.”—மத்தேயு 28:19, 20.
2 சீஷராக்கும்படி இயேசு கொடுத்த கட்டளைக்குச் சுமார் 66 லட்சம் யெகோவாவின் சாட்சிகள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிவதை யெகோவா பார்க்கையில் அவருடைய உள்ளம் பூரிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. (நீதிமொழிகள் 27:11) அவர்களுடைய முயற்சியை அவர் நிச்சயம் ஆசீர்வதிக்கிறார். உதாரணமாக, 2005-ல் நற்செய்தி 235 நாடுகளில் பிரசங்கிக்கப்பட்டது, சராசரியாக 60,61,500-க்கும் மேற்பட்ட பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டன. அதன் விளைவாக, அநேகர் ‘தேவவசனத்தைக் கேள்விப்பட்டு அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டார்கள்.’ (1 தெசலோனிக்கேயர் 2:13) கடந்த இரண்டு வருடங்களில், ஐந்து லட்சத்திற்கும் அதிகமான புதிய சீஷர்கள் யெகோவாவின் நெறிமுறைகளுக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை மாற்றி, அவருக்குத் தங்களை ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.
3. பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைப் பயன்படுத்துவது சம்பந்தமான என்ன கேள்விகளை இக்கட்டுரையில் ஆராயப்போகிறோம்?
3 சமீபத்தில் யாருக்காவது பைபிள் படிப்பு நடத்திய அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? கடவுளுடைய வசனத்தைக்கேட்டு, ‘அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்கள்’ உலகெங்கும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். (லூக்கா 8:11-15) சீஷராக்கும் வேலையில் பைபிள் கற்பிக்கிறது என்ற புத்தகத்தை நீங்கள் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை நாம் இப்போது ஆராயலாம். அது சம்பந்தமாக நாம் மூன்று கேள்விகளை ஆராயலாம்: (1) பைபிள் படிப்பை எப்படி ஆரம்பிக்கலாம்? (2) கற்பிப்பதற்கு என்னென்ன திறம்பட்ட முறைகளைப் பயன்படுத்தலாம்? (3) கடவுளுடைய வார்த்தையான பைபிளைப் படிக்கிற மாணாக்கராக மட்டுமல்ல அதைப்பற்றிப் போதிக்கிறவராகவும் ஆக ஒருவருக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
பைபிள் படிப்பை ஆரம்பிப்பது
4. பைபிள் படிப்புக்கு சிலர் ஏன் தயங்கலாம், அவர்களுடைய தயக்கத்தைப் போக்க நீங்கள் எப்படி உதவலாம்?
4 ஓர் அகன்ற ஆற்றை ஒரே குதியில் தாண்டும்படி யாராவது உங்களிடம் சொன்னால், நீங்கள் அதற்கு சம்மதிக்க மாட்டீர்கள். ஆனால், ஆற்றின் குறுக்கே வரிசையாக இடைவெளிவிட்டு கற்கள் போடப்பட்டிருந்தால் ஆற்றைத் தாண்ட நீங்கள் முன்வரலாம். அவ்வாறே, சதா வேலையாக இருக்கும் ஒருவர் பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ளத் தயங்கலாம். இந்தப் படிப்புக்கு அதிக நேரமும் முயற்சியும் தேவையென அவர் நினைக்கலாம். அவருடைய தயக்கத்தைப் போக்க நீங்கள் எப்படி உதவலாம்? அவருடன் தகவல் நிறைந்த விஷயங்களைச் சுருக்கமாக, அடிக்கடி உரையாடி, அப்படியே பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து ஓர் ஒழுங்கான பைபிள் படிப்பை அவருக்கு ஆரம்பிக்கலாம். நீங்கள் நன்கு தயாரித்துச் சென்றால் உங்களுடைய ஒவ்வொரு மறுசந்திப்பும், வீட்டுக்காரர் யெகோவாவுடன் நட்புகொள்வதற்கு காலெடுத்து வைக்க உதவும் கற்களைப்போல் இருக்கும்.
5. பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை நீங்கள் ஏன் வாசிக்க வேண்டும்?
5 பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து நன்மையடைய ஒருவருக்கு உதவும் முன் அதை நீங்கள் நன்கு படித்திருக்க வேண்டும். அப்புத்தகத்தின் ஆரம்பம் முதல் கடைசிவரை நீங்கள் படித்துவிட்டீர்களா? ஒரு தம்பதியர் விடுமுறையைக் கழிக்கச் சென்றிருந்தபோது இந்தப் புத்தகத்தையும் எடுத்துச்சென்றனர்; அவர்கள் கடற்கரையில் ஹாயாக உட்கார்ந்து அதை வாசிக்கத் தொடங்கினர். சுற்றுலா பயணிகளிடம் பொருள்களை விற்றுக்கொண்டிருந்த உள்ளூர் பெண் இவர்களிடம் வந்தாள்; பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற தலைப்பைப் பார்த்தாள். கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் இதே கேள்விக்குப் பதில் கேட்டு தான் ஜெபம் செய்ததாக இந்தத் தம்பதியரிடம் சொன்னாள். அவர்கள் அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியை சந்தோஷமாக அவளிடம் கொடுத்தார்கள். அதேவிதமாக, நீங்களும் யாரையாவது பார்ப்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கும்போது அல்லது வேலையிடத்திலோ பள்ளியிலோ இடைவேளையின்போது “காலத்தைப் பிரயோஜனப்படுத்தி” இரண்டாவது தடவையானாலும்கூட இந்தப் புத்தகத்தை வாசிக்கிறீர்களா? (எபேசியர் 5:15, 16) அப்படிச் செய்வீர்களானால், இந்தப் பைபிள் படிப்பு புத்தகத்திலுள்ள விஷயங்கள் மனதில் நன்கு பதிந்துவிடும்; அதிலுள்ள விஷயங்களைப்பற்றி பிறரிடம் பேசுவதற்கு வாய்ப்புகளையும் உருவாக்குவீர்கள்.
6, 7. பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கு பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை நீங்கள் எப்படிப் பயன்படுத்தலாம்?
6 வெளி ஊழியத்தில் இப்புத்தகத்தை அளிக்கையில், 4, 5, 6 பக்கங்களில் உள்ள படங்களையும் பைபிள் வசனங்களையும் கேள்விகளையும் நன்கு பயன்படுத்துங்கள். உதாரணமாக, நீங்கள் இவ்விதமாகக் கேட்டு உரையாடலை ஆரம்பிக்கலாம், “இன்றைக்கு மனிதருக்கு வருகிற எத்தனையோ பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு நம்பகமான உதவி எங்கே கிடைக்குமென்று நினைக்கிறீர்கள்?” அவருடைய பதிலைக் கவனமாகக் கேட்ட பிறகு, 2 தீமோத்தேயு 3:16, 17-ஐ வாசித்து, மனிதரின் பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வை பைபிள் அளிக்கிறதென விளக்குங்கள். பிறகு 4, 5 பக்கங்களை வீட்டுக்காரருக்குக் காண்பித்து, “இந்தப் படங்களில் காட்டப்பட்டுள்ள எந்தப் பிரச்சினை உங்களுக்கு அதிகக் கவலையளிக்கிறது?” எனக் கேளுங்கள். அதில் ஏதாவதொரு படத்தை வீட்டுக்காரர் காட்டுகையில், அவரிடம் அந்தப் புத்தகத்தைப் பிடிக்கும்படி சொல்லி, அப்படத்தின் அருகே கொடுக்கப்பட்டுள்ள வசனத்தை உங்கள் பைபிளிலிருந்து வாசித்துக்காட்டுங்கள். அதன் பிறகு, 6-ஆம் பக்கத்தை வாசித்து, “இந்தப் பக்கத்தில், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆறு கேள்விகளில் எந்தக் கேள்விக்குப் பதிலைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்?” என வீட்டுக்காரரிடம் கேளுங்கள். அதில் ஒன்றை அவர் காட்டுகையில், அக்கேள்விக்குப் பதில் தருகிற அதிகாரத்தை அவருக்குக் காட்டுங்கள். பிறகு புத்தகத்தை அவரிடம் கொடுத்துவிட்டு அக்கேள்விக்கான பதிலை அடுத்த முறை பேசலாமென சொல்லி மறுசந்திப்புக்கு திட்டவட்டமான ஏற்பாடு செய்யுங்கள்.
7 இவ்விதமாகப் பேசுவதற்கு சுமார் ஐந்து நிமிடங்கள் போதுமானது. என்றாலும், இந்த ஐந்து நிமிடங்களுக்குள், வீட்டுக்காரரின் கவலைகளையும் நீங்கள் தெரிந்துகொள்கிறீர்கள், இரண்டு வசனங்களை வாசித்து, விளக்கி, மறுசந்திப்புக்கான அஸ்திவாரத்தையும் போட்டுவிடுகிறீர்கள். வீட்டுக்காரரிடம் உங்களுடைய சுருக்கமான உரையாடல் அவருக்கு இதுவரை கிடைத்திராத ஊக்குவிப்பையும் ஆறுதலையும் அளித்திருக்கலாம். அதன் விளைவாக, ‘ஜீவனுக்குப் போகிற வழியில்’ இன்னுமொரு அடியெடுத்து வைக்க நீங்கள் உதவுகையில், அதிக வேலையாய் இருக்கும் ஒருவர்கூட உங்களுடன் இன்னும் சில நிமிடங்கள் கூடுதலாக செலவிட காத்திருப்பார். (மத்தேயு 7:14) போகப்போக, வீட்டுக்காரரின் ஆர்வம் அதிகமாகும்போது, பைபிள் படிப்புக்கான நேரத்தைக் கூட்ட வேண்டும். உட்கார்ந்து, சற்று நீண்ட நேரத்திற்குப் படிக்கலாம் என சொல்வதன் மூலம் இதைச் செய்யலாம்.
திறம்பட்ட முறைகளைப் பயன்படுத்துவது
8, 9. (அ) தடைகளையும் சோதனைகளையும் சந்தித்தால் அவற்றைச் சமாளிப்பதற்கு உங்கள் பைபிள் மாணாக்கரை எப்படித் தயார்படுத்தலாம்? (ஆ) பலமான விசுவாசத்தைக் கட்டுவதற்கு உதவும் அக்கினிக்கு இரையாகாத பொருள்கள் எதில் உள்ளன?
8 பைபிள் கற்பிப்பவற்றின்படி ஒருவர் நடக்க ஆரம்பிக்கையில், அவர் பல தடைகளைச் சந்திக்கலாம்; அது அவரை முன்னேற விடாமல் தடுக்கலாம். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.” (2 தீமோத்தேயு 3:12) இந்தச் சோதனைகளைப் பவுல், சாம்பலாக்கிப் போடுகிற அக்கினிக்கு ஒப்பிட்டார்; இது, தரம் குறைந்த கட்டடப் பொருள்களைச் சாம்பலாக்கி, பொன், வெள்ளி போன்ற பொருள்களுக்கும் விலையுயர்ந்த கற்களுக்கும் சேதம் விளைவிக்காமல் விட்டுவிடுகிறது என அவர் குறிப்பிட்டார். (1 கொரிந்தியர் 3:10-13; 1 பேதுரு 1:6, 7) சோதனைகளைச் சந்தித்தால் அவற்றைத் தாங்கிக்கொள்வதற்கு ஏற்ற குணங்களை பைபிள் மாணாக்கர் வளர்த்துக்கொள்ள, அக்கினிக்கு இரையாகாத பொருள்களால் கட்ட நீங்கள் உதவ வேண்டும்.
9 ‘யெகோவாவின் சொற்களை’ ‘மண்குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களுக்கு’ சங்கீதக்காரன் ஒப்பிட்டார். (சங்கீதம் 12:6) ஆம், பலமான விசுவாசத்தைக் கட்ட பயன்படும் விலையுயர்ந்த பொருள்கள் அனைத்தும் பைபிளில் உள்ளன. (சங்கீதம் 19:7-11; நீதிமொழிகள் 2:1-6) பைபிள் வசனங்களைத் திறம்பட எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை பைபிள் கற்பிக்கிறது புத்தகம் காட்டுகிறது.
10. பைபிளிடம் மாணாக்கரின் கவனத்தை நீங்கள் எப்படித் திருப்பலாம்?
10 பைபிள் படிப்பின்போது, நீங்கள் கலந்தாராயும் அதிகாரத்திலுள்ள வசனங்களுக்கு மாணாக்கரின் கவனத்தைத் திருப்புங்கள். முக்கிய பைபிள் வசனங்களை மாணாக்கர் புரிந்துகொள்வதற்கும் அவற்றைப் பொருத்திப் பார்ப்பதற்கும் உதவும் விதத்தில் கேள்விகளைப் பயன்படுத்துங்கள். அவர் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமென நீங்களே சொல்லிவிடாதீர்கள். அதற்குப் பதிலாக, இயேசுவின் மாதிரியைப் பின்பற்றுங்கள். நியாயப்பிரமாணத்தில் தேர்ச்சிபெற்ற ஒருவர் தம்மிடம் கேள்விகேட்டபோது, இயேசு இவ்வாறு திருப்பிக் கேட்டார்: “நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன”? அதற்கு வேதவசனங்களிலிருந்தே அந்த நபர் பதிலளித்தபோது, அதிலுள்ள நியமத்தைப் பொருத்திப் பார்க்க இயேசு அவருக்கு உதவினார். தாம் கற்பிக்கிற விஷயத்தை எப்படிச் செயலில் காட்டுவது என்பதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தைப் பயன்படுத்தியும் இயேசு அவருக்கு உதவினார். (லூக்கா 10:25-37) பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் அநேக எளிய உதாரணங்கள் உள்ளன; மாணாக்கர் பைபிள் நியமங்களைத் தனக்குப் பொருத்திப் பார்க்க அந்த உதாரணங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
11. ஒவ்வொரு பைபிள் படிப்பிலும் எத்தனை பாராக்களை நடத்த வேண்டும்?
11 புரிந்துகொள்வதற்குக் கடினமான விஷயங்களை இயேசு எளிய வார்த்தைகளில் விளக்கியதுபோல, இப்புத்தகமும் கடவுளுடைய வார்த்தையை எளிதாகவும், நேரடியாகவும் விளக்குகிறது. (மத்தேயு 7:28, 29) நீங்களும் இயேசுவின் அதே மாதிரியைப் பின்பற்றுங்கள். தகவலை எளிய முறையிலும், தெளிவாகவும் திருத்தமாகவும் சொல்லுங்கள். படிப்பை வேகவேகமாக நடத்தாதீர்கள். மாறாக, மாணாக்கரின் சூழ்நிலைகளையும் திறமைகளையும் பொறுத்து, ஒவ்வொரு முறையும் எத்தனை பாராக்களைப் படிக்கலாமெனத் தீர்மானியுங்கள். இயேசு தம் சீஷர்களின் வரம்புகளை அறிந்திருந்தார்; அதனால், அப்போதைக்கு தேவையானதைவிட அதிக தகவலைக் கொடுத்து அவர்களைப் பாரப்படுத்தவில்லை.—யோவான் 16:12.
12. பிற்சேர்க்கையை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
12 பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் 14 தலைப்புகளைக் கொண்ட பிற்சேர்க்கை உள்ளது. பைபிள் படிப்பு நடத்துபவராக, மாணாக்கருடைய தேவைகளைப் பொறுத்து, இந்தப் பிற்சேர்க்கையை எப்படி நன்கு பயன்படுத்தலாம் என்பதை உங்களால் தீர்மானிக்க முடியும். உதாரணமாக, மாணாக்கருக்கு ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தால், அல்லது முன்பிருந்த நம்பிக்கைகளின் காரணமாக சந்தேகங்கள் இருந்தால், பிற்சேர்க்கையில் அது சம்பந்தமாக கொடுக்கப்பட்டுள்ள பகுதியைக் காட்டி, அதை அவராகவே ஆராய்ந்து பார்க்கும்படி சொல்லுங்கள். சில மாணாக்கருக்கோ அப்பகுதியை நீங்களே விளக்க வேண்டியிருக்கலாம். பிற்சேர்க்கையில், “‘ஆத்துமா,’ ‘ஆவி’—உண்மையிலேயே எதை அர்த்தப்படுத்துகின்றன?,” “‘மகா பாபிலோனை அடையாளம் காணுதல்’” போன்ற முக்கியமான பைபிள் விஷயங்கள் உள்ளன. இந்த விஷயங்களை மாணாக்கரோடு கலந்தாராய நீங்கள் விரும்பலாம். பிற்சேர்க்கையிலுள்ள இந்தப் பகுதியில் கேள்விகள் கொடுக்கப்படவில்லை; அதனால், நீங்களே அர்த்தமுள்ள கேள்விகளை அவரிடம் கேட்க அப்பகுதியை நன்கு படித்துத் தெரிந்துவைத்திருப்பது அவசியம்.
13. விசுவாசத்தைப் பலப்படுத்துவதில் ஜெபம் என்ன முக்கிய பங்கு வகிக்கிறது?
13 “கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா” என சங்கீதம் 127:1 குறிப்பிடுகிறது. ஆகவே, பைபிள் படிப்புக்குத் தயாரிக்கையில் யெகோவாவின் உதவிக்காக ஜெபியுங்கள். ஒவ்வொரு பைபிள் படிப்புக்கு முன்னும் பின்னும் நீங்கள் செய்யும் ஜெபம் யெகோவாவோடு நீங்கள் வைத்திருக்கும் அன்பான பந்தத்தை வெளிக்காட்ட வேண்டும். யெகோவாவின் வார்த்தையைப் புரிந்துகொள்வதற்கு ஞானத்தையும், அதன் ஆலோசனைகளைப் பின்பற்றுவதற்கு பலத்தையும் தரும்படி அவரிடம் ஜெபிக்க மாணாக்கரை ஊக்கப்படுத்துங்கள். (யாக்கோபு 1:5) அவர் அப்படிச் செய்வாரானால், சோதனைகளைச் சகிப்பதற்கு பலத்தைப் பெறுவார்; விசுவாசத்திலும் தொடர்ந்து பலப்படுவார்.
மாணாக்கர்கள் போதகர்களாவதற்கு உதவுங்கள்
14. பைபிள் மாணாக்கர்கள் என்ன முன்னேற்றத்தைச் செய்ய வேண்டும்?
14 தம் சீஷர்களுக்கு இயேசு கட்டளையிட்ட ‘யாவற்றுக்கும்’ நம் பைபிள் மாணாக்கர்கள் கீழ்ப்படிகிறார்கள் என்றால், அவர்கள் கடவுளுடைய வார்த்தையைப் படிக்கும் மாணாக்கர்கள் என்ற நிலையிலிருந்து அதைப் போதிப்பவர்கள் என்ற நிலைக்கு முன்னேற வேண்டும். (மத்தேயு 28:19, 20; அப்போஸ்தலர் 1:6-8) ஆன்மீக ரீதியில் அத்தகைய முன்னேற்றத்தை அடைய மாணாக்கருக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
15. கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வரும்படி உங்கள் மாணாக்கரை நீங்கள் ஏன் உற்சாகப்படுத்த வேண்டும்?
15 சபை கூட்டங்களுக்கு வரும்படி முதல் படிப்பிலிருந்தே மாணாக்கரை அழையுங்கள். கடவுளுடைய வார்த்தையைப் போதிப்பவராக ஆவதற்கு கூட்டங்களிலிருந்தே நீங்கள் பயிற்சி பெறுவீர்கள் என்பதை அவருக்கு விளக்குங்கள். பல்வேறு கூட்டங்கள், மாநாடுகள் மூலமாக நீங்கள் பெறும் ஆன்மீக போதனையைப்பற்றி சில வாரங்களுக்கு, ஒவ்வொரு படிப்பின் முடிவிலும் சில நிமிடங்கள் விவரியுங்கள். இவற்றின் மூலம் நீங்கள் பெறுகிற நன்மைகளைப்பற்றி அவரிடம் ஆர்வமாகப் பேசுங்கள். (எபிரெயர் 10:24, 25) மாணாக்கர் கூட்டங்களுக்குத் தவறாமல் வர ஆரம்பித்தால், அவரும் கடவுளுடைய வார்த்தையை போதிப்பவராக ஆக சாத்தியம் உள்ளது.
16, 17. பைபிள் மாணாக்கர் என்ன சில இலக்குகளை வைத்து அவற்றை அடையலாம்?
16 மாணாக்கர் எட்ட முடிந்த இலக்குகளை வைப்பதற்கு உதவுங்கள். உதாரணமாக, தான் கற்றுக்கொண்டதை நண்பரிடமோ உறவினரிடமோ சொல்வதற்கு அவரை உற்சாகப்படுத்துங்கள். முழு பைபிளையும் படித்து முடிப்பதற்கு இலக்கு வைக்கும்படியும் சொல்லுங்கள். பைபிளை வாசிக்க ஆரம்பித்து அவர் அதைத் தொடர்ந்து ஒழுங்காகச் செய்ய உதவுங்கள்; இந்தப் பழக்கம் முழுக்காட்டுதலுக்குப் பிறகும்கூட அவருக்கு பயனளிக்கும். அதுமட்டுமல்ல, பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தின் ஒவ்வொரு அதிகாரத்திலும் உள்ள ஒரு முக்கியமான கேள்விக்குப் பதில் தருகிற ஒரு பைபிள் வசனத்தையாவது நினைவில் வைப்பதற்கு மாணாக்கர் இலக்கு வைக்கும்படி நீங்கள் ஆலோசனை கொடுக்கலாம், அல்லவா? இப்படிச் செய்தால், அவர் ‘வெட்கப்படாத ஊழியக்காரராயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவராயும்’ ஆவார்.—2 தீமோத்தேயு 2:15.
17 வசனங்களை மனப்பாடம் செய்து சொல்வதற்கோ, அவற்றின் சாராம்சத்தைச் சொல்வதற்கோ மாணாக்கருக்குக் கற்றுக்கொடுப்பதற்குப் பதிலாக, தன்னுடைய நம்பிக்கைகளைப்பற்றி விளக்கும்படி கேட்கிறவர்களுக்குப் பதிலளிக்கையில் முக்கிய பைபிள் வசனங்களை விளக்கும்படி அவரை உற்சாகப்படுத்துங்கள். அவ்வாறு கேட்கிற ஓர் உறவினரிடம் அல்லது சக பணியாளரிடம் பேசுவதுபோல் உங்களிடம் அவற்றைச் சுருக்கமாக விளக்குவதற்குப் பழக்குவியுங்கள். “சாந்தத்தோடும் வணக்கத்தோடும் [அதாவது, ஆழ்ந்த மரியாதையோடும்]” விடை அளிப்பது எப்படியென மாணாக்கருக்குச் சொல்லிக்கொடுங்கள்.—1 பேதுரு 3:15.
18. ஒரு பைபிள் மாணாக்கர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாவதற்குத் தகுதிபெறுகையில், மேலுமான என்ன உதவியை நீங்கள் அளிக்கலாம்?
18 காலப்போக்கில், மாணாக்கர் வெளி ஊழியத்தில் ஈடுபடுவதற்குத் தகுதிபெறலாம். இந்த வேலையில் பங்குகொள்வது ஓர் அரும்பெரும் பாக்கியம் என்பதை வலியுறுத்துங்கள். (2 கொரிந்தியர் 4:1, 7) முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாவதற்கு அவர் தகுதிபெற்றிருப்பதை மூப்பர்கள் தீர்மானித்த பிறகு, எளிய முறையில் வீட்டுக்காரரிடம் செய்தியைச் சொல்வதற்குத் தயாரிக்க அவருக்கு உதவுங்கள், அவரோடு சேர்ந்து வெளி ஊழியம் செய்யுங்கள். ஊழியம் சம்பந்தப்பட்ட பல்வேறு அம்சங்களில் அவருடன் தொடர்ந்து ஈடுபடுங்கள்; திறம்பட்ட மறுசந்திப்புகளுக்கு எப்படித் தயாரிப்பது, அதை எப்படி நடத்துவதென கற்றுக்கொடுங்கள். உங்களுடைய நல்ல முன்மாதிரி, அவருடைய முன்னேற்றத்திற்குக் கைகொடுக்கும்.—லூக்கா 6:40.
‘உங்களையும் உங்கள் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுங்கள்’
19, 20. நாம் என்ன இலக்கு வைக்க வேண்டும், ஏன்?
19 “சத்தியத்தின் திருத்தமான அறிவை” பெற ஒருவருக்கு உதவ கடும் முயற்சி தேவை என்பதில் சந்தேகமில்லை. (1 தீமோத்தேயு 2:4, NW) என்றாலும், பைபிள் கற்பிப்பவற்றிற்கு ஒருவர் கீழ்ப்படிய உதவுவதைக் காட்டிலும் அதிக சந்தோஷம் வேறொன்றுமில்லை. (1 தெசலோனிக்கேயர் 2:19, 20) சொல்லப்போனால், இந்த உலகளாவிய கற்பிக்கும் வேலையில் நாம் ‘தேவனுக்கு உடன் வேலையாட்களாய்’ இருப்பது பெரும் பாக்கியமே!—1 கொரிந்தியர் 3:9.
20 ‘தேவனை அறியாதவர்களையும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களையும்’ சீக்கிரத்திலேயே இயேசு கிறிஸ்து மற்றும் சக்திமிக்க தேவதூதர்கள் மூலமாக யெகோவா நியாயந்தீர்க்கப் போகிறார். (2 தெசலோனிக்கேயர் 1:6-8) மனித உயிர்கள் ஆபத்தில் இருக்கின்றன. பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்திலிருந்து ஒரு பைபிள் படிப்பாவது நடத்த நீங்கள் இலக்கு வைத்திருக்கிறீர்களா? அவ்வாறு செய்கையில், ‘உங்களையும் உங்கள் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ள’ வாய்ப்பிருக்கிறது. (1 தீமோத்தேயு 4:16) பைபிள் கற்பிப்பவற்றிற்குக் கீழ்ப்படிய பிறருக்கு உதவுவது இப்போது மிக மிக அவசரமானது.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• பைபிள் கற்பிக்கிறது புத்தகம் என்ன நோக்கத்திற்காகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது?
• பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைப் பயன்படுத்தி பைபிள் படிப்புகளை நீங்கள் எப்படி ஆரம்பிக்கலாம்?
• என்ன திறம்பட்ட முறைகளைப் பயன்படுத்திக் கற்பிக்கலாம்?
• கடவுளுடைய வார்த்தையைப் போதிப்பவராவதற்கு மாணாக்கருக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
[பக்கம் 26-ன் படம்]
இந்தப் புத்தகத்தை நன்கு பயன்படுத்துகிறீர்களா?
[பக்கம் 27-ன் படம்]
சுருக்கமாகப் பேசுவது, பைபிள் அறிவைப் பெறவேண்டுமென்ற ஆர்வத்தை ஒருவருக்குத் தூண்டிவிடலாம்
[பக்கம் 29-ன் படம்]
பைபிளிடம் மாணாக்கரின் கவனத்தைத் திருப்ப நீங்கள் என்ன செய்யலாம்?
[பக்கம் 30-ன் படம்]
மாணாக்கர் முன்னேறுவதற்கு உதவுங்கள்