வாழ்க்கை சரிதை
சீஷராக்குவதில் எனக்கு ஏன் சந்தோஷம்
பமலா மோஸ்லீ சொன்னபடி
1941-ல் இங்கிலாந்து முழுவதும் போர் வெறியாட்டம் போட்டுக்கொண்டிருந்த சமயம் அது. என் அம்மா யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டிற்காக லெஸ்டர் நகருக்கு என்னை அழைத்துச் சென்றார். ஜோசஃப் ரதர்ஃபர்ட் என்ற சகோதரர் குழந்தைகள் பற்றிய ஒரு சிறப்புப் பேச்சைக் கொடுத்தார். அந்த மாநாட்டில் அம்மாவும் நானும் முழுக்காட்டுதல் பெற்றபோது, ஆன்மீக ரீதியில் வளர்ச்சியடைய எங்களுக்கு உதவியவர்கள் மிகவும் சந்தோஷமாய் இருந்ததைக் கவனித்தேன். இயேசு கிறிஸ்துவுக்கு சீஷரை உருவாக்கும் வேலையில் எவ்வளவு சந்தோஷம் அடங்கியிருக்கிறது என்பது அப்போது எனக்குப் புரியவில்லை.
அதற்கு முன்னான வருடத்திலிருந்து சீஷர்களாவதற்காக நாங்கள் முன்னேற்றம் செய்ய ஆரம்பித்தோம். 1939 செப்டம்பரில் இரண்டாம் உலகப்போர் வெடித்த அந்தப் படுபயங்கரமான நாள் இன்னும் என் நினைவில் இருக்கிறது. “ஏன் இந்த உலகத்தில் சமாதானமில்லை?” என்று ஓயாமல் கேட்ட என் அம்மாவின் கன்னங்களில் கண்ணீர் தாரைதாரையாய் வழிந்தோடியதைப் பார்த்தேன். முதல் உலகப்போரின் சமயத்தில் என்னுடைய பெற்றோர் இராணுவத்தில் சேவை செய்திருந்ததால் போரின் பயங்கரங்களை அனுபவித்திருந்தார்கள். பிரிஸ்டலில் உள்ள ஆங்கிலிக்கன் சர்ச்சு ஊழியரிடம் என் அம்மா தனக்கிருந்த கேள்வியைக் கேட்டார். அதற்கு அவர், “போர்கள் எப்பவுமே இருந்திருக்கின்றன, இனிமேலும் இருக்கத்தான் செய்யும்” என்றார்.
என்றாலும், கொஞ்ச நாட்களுக்குப் பிறகு வயதான ஒரு பெண்மணி எங்கள் வீட்டுக்கு வந்தார். அவர் ஒரு யெகோவாவின் சாட்சி. என் அம்மா, “ஏன் இந்த உலகத்தில் சமாதானமில்லை?” என்ற அதே கேள்வியை அவரிடமும் கேட்டார். அதற்கு அந்தச் சாட்சி, வன்முறையான இந்த உலகத்தின் முடிவு காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதற்கான அடையாளங்களின் ஒரு பாகம்தான் போர்கள் என விளக்கினார். (மத்தேயு 24:3-14) விரைவில் அவருடைய மகள் எங்களுக்கு பைபிள் படிப்பு நடத்தினார். எங்களுடைய முழுக்காட்டுதலைச் சந்தோஷமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தவர்களில் அந்தத் தாயும் மகளும் இருந்தார்கள். சீஷராக்கும் வேலை ஏன் மகிழ்ச்சியைத் தருகிறது என்பதை பிறகு கற்றுக்கொண்டேன். சீஷராக்கும் வேலையில் கடந்த 65 வருடங்களுக்கும் மேலாக நான் கற்றுக்கொண்டவற்றில் சில விஷயங்களை உங்களிடம் சொல்லட்டுமா?
போதிப்பதிலுள்ள மகிழ்ச்சியை ருசித்தேன்
எனக்கு 11 வயதாக இருந்தபோது பிரிஸ்டலில் ராஜ்ய பிரசங்கிப்பு வேலையில் பங்குகொள்ள ஆரம்பித்தேன். ஒரு சகோதரர் எனக்கு ஒரு ஃபோனோகிராபையும் சாட்சி அட்டையையும் கொடுத்து, “தெருவின் அந்தப் பக்கத்திலுள்ள எல்லா வீடுகளுக்கும் நீ போகலாம்” என்று சொன்னார். நான் தனியாகவே எல்லா வீடுகளுக்கும் சென்றேன். அப்போது பயத்தில் நடுங்கிப்போனேன் என்பது உண்மைதான். பதிவுசெய்யப்பட்ட பைபிள் பேச்சை வீட்டுக்காரர்களிடம் போட்டுக்காட்டி, சாட்சி அட்டையையும் காண்பித்தேன். அது பைபிள் பிரசுரங்களை ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கும் ஓர் அட்டை.
1950-களின் ஆரம்பத்தில் வீட்டுக்கு வீடு ஊழியத்தின்போது பைபிளிலிருந்து வாசிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. முதலில், என்னுடைய கூச்ச சுபாவத்தால் முன்பின் தெரியாதவர்களிடம் பேசுவதும் அவர்களிடம் பைபிள் வசனங்களை விளக்குவதும் எனக்குக் கடினமாக இருந்தன. ஆனால் போகப்போக தன்னம்பிக்கையை வரவழைத்துக்கொண்டேன். அதன் பிறகுதான் ஊழியத்தில் மகிழ்ச்சி காண ஆரம்பித்தேன். சில பேர் எங்களைப் புத்தகம் விற்பவர்கள் எனக் கருதினர். ஆனால் அவர்களுக்கு பைபிளிலிருந்து வசனங்களை வாசித்து விளக்கினபோது பைபிள் போதகர்களென எங்களை அடையாளம் கண்டுகொண்டனர். நான் இந்த வேலையை மிகவும் ஆனந்தமாய்ச் செய்தேன், பெரியளவில் பங்குகொள்ளவேண்டுமென விரும்பினேன். அதனால் 1955 செப்டம்பரில் ஒரு பயனியராக முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தேன்.
விடாமுயற்சி வெகுமதியளிக்கிறது
அன்பும் விடாமுயற்சியும் பலன்களைக் கொண்டுவரும் என்பது நான் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று. ஒரு சமயம், காவற்கோபுரம் பத்திரிகையை வைலட் மாரீஸ் என்ற பெண்ணிடம் கொடுத்துவிட்டுச் சென்றேன். திரும்பவும் அவளைப் பார்க்க வந்தபோது, அவள் கதவைத் திறந்து, தன் கைகளைக் கட்டிக்கொண்டு நான் வசனங்களை அவளுக்கு விளக்குவதை உன்னிப்பாகக் கவனித்தாள். ஒவ்வொரு முறையும் அவளைச் சந்திக்கும்போது உண்மையில் அவள் ஆர்வமாக இருக்கிறாள் என்றே தோன்றியது. என்றாலும், நான் ஒழுங்கான பைபிள் படிப்பைப் பற்றிச் சொன்னபோது, “வேண்டாம், பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகட்டும், பிறகு படிக்கிறேன்” என்று சொல்லிவிட்டாள். நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்! “தேட ஒரு காலமுண்டு, இழக்க ஒரு காலமுண்டு” என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 3:6) முயற்சியை விடாமலிருக்க முடிவு செய்தேன்.
ஒரு மாதத்திற்குப் பிறகு, நான் திரும்பவும் சென்று இன்னும் சில வசனங்களை அவளோடு கலந்தாலோசித்தேன். விரைவில், வீட்டு வாசலிலேயே வாராவாரம் பைபிள் படிப்பு நடத்தினேன். கடைசியாக, அவள், “நீங்க உள்ளே வருவது நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்?” என்று சொன்னாள். பிறகு, வைலட் அருமையான சக விசுவாசியாகவும் என்னுடைய உற்ற தோழியாகவும் ஆனாள். ஆம், அவள் முழுக்காட்டுதல் பெற்று யெகோவாவின் சாட்சிகளில் ஒருவளானாள்.
ஒரு நாள் தன்னுடைய கணவன் தனக்குத் தெரியாமலேயே வீட்டை விற்றுவிட்டதையும் தன்னை அம்போவென்று விட்டுச் சென்றுவிட்டதையும் அறிந்தபோது வைலட் அதிர்ச்சியில் உறைந்துபோனாள். சந்தோஷகரமாக, சகோதரர் ஒருவருடைய உதவியுடன் அதே பிற்பகலில் இன்னொரு வீடு அவளுக்குக் கிடைத்தது. யெகோவாவுக்கு நன்றி செலுத்தும் விதத்தில், எஞ்சியிருக்கும் வாழ்க்கையை பயனியராக கழிக்கத் தீர்மானித்தாள். யெகோவாவின் பரிசுத்த ஆவியின் உதவியால் அவள் மெய்வணக்கத்தில் மிக வைராக்கியமாக இருந்தாள். அதைப் பார்த்தபோது சீஷராக்கும் வேலை ஏன் அவ்வளவு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆம், இதுவே என் வாழ்க்கைத் தொழிலாக இருக்கும்!
நானும் மேரி ராபின்சன் என்ற சகோதரியும் ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோ நகரத்தைச் சேர்ந்த தொழில் பகுதியான ரதர்க்லெனுக்கு 1957-ல் பயனியர்களாக நியமிக்கப்பட்டோம். மூடுபனி, காற்று, மழை, பனி என எல்லா காலங்களிலும் பிரசங்கித்தோம், ஆனாலும் அது பலனுள்ளதாகவே இருந்தது. ஒரு நாள் ஜெஸ்ஸீ என்ற பெண்ணைச் சந்தித்தேன். அவளுக்குச் சந்தோஷமாக பைபிள் படிப்பு நடத்தினேன். கம்யூனிஸ்ட் வாதியாக இருந்த அவளுடைய கணவர் வாலீ, முதலில் என்னிடம் பாராமுகமாய் இருந்தார். ஆனால், அவர் பைபிளைப் படித்து, கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே மக்களுக்கு மிகச் சிறந்த காரியங்களைக் கொண்டுவருமென உணர்ந்துகொண்டபோது மெய்சிலிர்த்துப்போனார். நாளடைவில் அவர்கள் இருவரும் சீஷராக்குபவர்களாக ஆனார்கள்.
முதல் சந்திப்பு ஏமாற்றமாயிருக்கலாம்
பிறகு, ஸ்காட்லாந்திலுள்ள பேஸ்லீ நகரத்திற்குச் செல்ல புது நியமிப்பைப் பெற்றோம். ஒரு நாள் அங்கே நான் பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது, ஒரு பெண் என் முகத்தில் அடித்தாற்போல் கதவை ‘டமாரென்று’ அறைந்து சாத்திவிட்டுச் சென்றாள். ஆனால், சீக்கிரமாகவே மன்னிப்பு கேட்பதற்காக என்னைத் தேடினாள். நான் அடுத்த வாரம் திரும்ப அவளிடம் சென்றபோது, “கடவுளின் முகத்திற்கு எதிராக கதவைச் சாத்தியதைப் போல உணர்ந்தேன். உங்களைத் தேடி வந்து மன்னிப்பு கேட்க வேண்டுமென நினைத்தேன்” என்று கூறினாள். அவளுடைய பெயர் பர்ல். அவள் தன்னுடைய நண்பர்களாலும் உறவினர்களாலும் ஏமாற்றப்பட்டதாகவும் ஓர் உண்மையான தோழி கிடைக்கவேண்டுமென கடவுளிடம் ஜெபம் செய்ததாகவும் என்னிடம் கூறினாள். “அதற்குப் பிறகுதான் நீங்கள் என் வீட்டுக்கு வந்தீர்கள், கண்டிப்பாக நீங்கள்தான் என்னுடைய உண்மையான தோழியாக இருக்க வேண்டும் என்பதை இப்போது புரிந்துகொண்டேன்” என்று சொன்னாள்.
பர்லுடைய தோழியாக இருப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. மலையுச்சியின் மேல் அவள் குடியிருந்தாள், நான் நடந்தே அங்கு செல்லவேண்டியிருந்தது. முதன்முதலில் அவளைக் கூட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்காக அவள் வீட்டிற்குச் சென்றபோது, காற்றும் மழையும் என்னைக் கிட்டத்தட்ட அலாக்காக தூக்கிக் கீழே போட்டுவிட்டதென்றே சொல்லலாம். என்னுடைய குடை நார்நாராக கிழிந்துபோனபோது அதைத் தூர வீசிவிட்டேன். என்னுடைய முகத்தில் அடித்தாற்போல் கதவைச் சாத்திவிட்டுச் சென்ற பர்ல் ஆறே மாதங்களுக்குப் பிறகு, தான் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்ததை தண்ணீர் முழுக்காட்டுதல்மூலம் காட்டினாள்.
வெகுவிரைவில், அவளுடைய கணவர் பைபிளைப் படிக்கத் தீர்மானித்தார். கொஞ்ச காலத்திற்குள்ளேயே அவர் என்னுடன் வீட்டுக்கு வீடு ஊழியத்திற்கு வந்தார். வழக்கம்போல மழை பெய்துகொண்டிருந்தது. “என்னைப் பற்றிக் கவலைப்படாதீங்க, ஃபுட்பால் மேட்ச் பார்க்க மணிக்கணக்கா இந்தமாதிரி மழையில நனஞ்சுக்கிட்டே நின்றிருக்கிறேன். அதனால, யெகோவாவுக்கும் அதேமாதிரி நான் நிச்சயம் செய்யமுடியும்” என்று அவர் கூறினார். ஸ்காட்லாந்து மக்களின் இந்த மனவுறுதியை எப்பொழுதும் நான் மனதார பாராட்டுகிறேன்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பச் சென்று என்னோடு பைபிள் படித்த அநேகர் விசுவாசத்தில் இன்னும் நிலைத்து நிற்பதைப் பார்ப்பது எனக்கு எவ்வளவு ஆனந்தமாயிருக்கிறது! அதுதான் சீஷராக்கும் வேலையில் கிடைக்கும் சந்தோஷம். (1 தெசலோனிக்கேயர் 2:17-20) ஸ்காட்லாந்தில் பயனியராக எட்டு வருடங்களுக்கும் மேல் சேவை செய்தபிறகு, மிஷனரியாகப் பயிற்சி பெற காவற்கோபுர பைபிள் கிலியட் பள்ளிக்கு 1966-ல் அழைக்கப்பட்டேன்.
ஓர் அந்நிய தேசத்தில்
பொலிவியாவிலுள்ள வெப்பமண்டல நகரமான சான்டா க்ரூஸில் நியமிக்கப்பட்டேன், அங்கே சுமார் 50 பேரைக்கொண்ட ஒரு சபை இருந்தது. அந்த நகரம், முரட்டுத்தனமும் கலகத்தனமும் நிறைந்ததாக ஹாலிவுட் திரைப்படங்களில் சித்தரிக்கப்படும் மேற்கு ஐ.மா-வை எனக்கு நினைவுபடுத்தியது. கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கையில் நான் முற்றிலும் ஒரு சாதாரண மிஷனரியாகவே இருந்திருக்கிறேனென்று நினைக்கிறேன். என்னை முதலைகள் தாக்கினதில்லை, வன்முறை கும்பல் சூழ்ந்துகொள்ளவில்லை; நான் பாலைவனத்தில் காணாமற்போகவுமில்லை, கப்பல் சேதத்தால் கடலில் மூழ்கவுமில்லை. என்றாலும், சீஷராக்கும் வேலை எனக்கு மிகவும் சிலிர்ப்பூட்டுவதாகவே இருந்தது.
சான்டா க்ரூஸ் நகரில் ஆரம்பத்தில் நான் பைபிள் படிப்பு நடத்திய பெண்களில் ஒருவரின் பெயர் ஆன்டோன்யா. ஸ்பானிஷ் மொழியில் பைபிளைப் போதிப்பது எனக்குப் போராட்டமாக இருந்தது. ஒருமுறை ஆன்டோன்யாவின் சிறு பையன், “அம்மா, நாம சிரிக்கணும் என்றே இவங்க தப்புத்தப்பா பேசுறாங்களாம்மா?” என்று கேட்டான். கடைசியாக, ஆன்டோன்யாவும் அவளுடைய மகள் யோலான்டாவும் சாட்சிகளானார்கள். யோலான்டாவுக்கு சட்டம் படிக்கும் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் நண்பனாக இருந்தான், அவனுடைய பெயர் டீடோ. அவனும் பைபிள் படித்தான், கூட்டங்களுக்கும் வந்தான். பைபிள் சத்தியத்தைப் போதிப்பது சம்பந்தமான இன்னொரு விஷயத்தை அவனுக்குப் படிப்பு நடத்தும்போது கற்றுக்கொண்டேன்: சில சமயங்களில் மக்களுக்கு லேசான உந்துதல் தேவைப்படுகிறது.
பைபிள் படிப்புகளை டீடோ தவறவிட்டபோது, “யெகோவாவுடைய ராஜ்யத்தை நீ ஆதரிக்கணும்னு அவர் உன்னைக் கட்டாயப்படுத்துவதில்லை டீடோ. அது உன் இஷ்டம்” என்று சொன்னேன். கடவுளுக்குச் சேவை செய்ய தான் விரும்புவதாக அவன் சொன்னபோது, “ஒரு புரட்சித் தலைவரின் படங்களை இங்கே நீ வைத்திருக்கிறாய். வீட்டிற்கு வரும் ஒருவர் இந்தப் படங்களைப் பார்த்தால் நீ கடவுளுடைய ராஜ்யத்தை ஆதரிக்கத் தீர்மானித்திருக்கிறாயென நினைப்பாரா?” என்று கேட்டேன். அந்த லேசான உந்துதல்தான் அவனுக்குத் தேவைப்பட்டது.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு கலகம் வெடித்தது. பல்கலைக்கழக மாணவர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. “இங்கிருந்து வெளியே போய்விடலாம்!” என்று டீடோ தன் நண்பனிடம் கத்தினான். “இல்ல! நாம காத்துக்கிட்டிருந்த அந்த முக்கியமான நாள் இதுதான்” என்று பதிலளித்த அவனுடைய நண்பன், திடீரென ஒரு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு பல்கலைக்கழகத்தின் மொட்டைமாடியை நோக்கி ஓடத் தொடங்கினான். அன்று இறந்துபோன டீடோவின் எட்டு நண்பர்களில் அவனும் ஒருவன். டீடோ உண்மைக் கிறிஸ்தவனாக மாற தீர்மானிக்காமல் இருந்திருந்தால் அவன் இறந்திருப்பான். அவனை உயிரோடு பார்க்க எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறது என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
யெகோவாவின் ஆவியை செயலில் பார்த்தல்
ஒரு நாள், ஏற்கனவே அந்த வீட்டிற்குச் சென்றுவிட்டோம் என்று நினைத்துக்கொண்டு ஒரு வீட்டைக் கடந்து சென்றபோது, அந்த வீட்டுக்காரப் பெண் என்னைக் கூப்பிட்டாள். அவளுடைய பெயர் ஈக்னாஸ்யா. அவளுக்கு யெகோவாவின் சாட்சிகளைத் தெரியும், ஆனால் அவளுடைய கணவரிடமிருந்து கடுமையான எதிர்ப்பு. அவளுடைய கணவர் பெயர் ஆடால்பெர்டோ, ஒரு முரட்டுக் காவல் அதிகாரி. அவள் ஆன்மீக ரீதியில் முன்னேறுவதைத் தடுத்தார். பைபிளின் பல அடிப்படை போதகங்களைப்பற்றி அவள் குழம்பிப் போயிருந்தாள். அதனால் அவளுக்கு பைபிள் படிப்பை ஆரம்பித்தேன். ஆடால்பெர்டோ பைபிள் படிப்புகளை நிறுத்துவதில் குறியாக இருந்தபோதிலும், மற்ற விஷயங்களைப்பற்றி அவரோடு நீண்ட நேரம் என்னால் பேச முடிந்தது. அவருடன் நட்பை வளர்த்திட இது முதல் படி.
ஈக்னாஸ்யா, சபையில் ஆறுதல் தேவைப்படும் அநேகருடைய சரீர, ஆன்மீக நலனைக் கவனித்துக்கொள்ளும் ஓர் அன்பான சகோதரியாக ஆனாள். அதைப் பார்த்து நான் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பேன் என்பதைச் சற்று யோசித்துப்பாருங்கள். நாளடைவில் அவளுடைய கணவரும் அவர்களுடைய பிள்ளைகளில் மூவரும் சாட்சிகளாக மாறினர். ஆடால்பெர்டோ இறுதியாக நற்செய்தியின் பொருளைப் புரிந்துகொண்டபோது காவல் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த காவல் துறையினரிடம் அந்தளவு ஆர்வம்பொங்கப் பேசியதால் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிக்கைகளுக்கு அவர்களிடமிருந்து 200 சந்தாக்களைப் பெற்றார்.
யெகோவா விளையச் செய்கிறார்
ஆறு வருடங்களாக சான்டா க்ரூஸ் நகரில் சேவை செய்தபிறகு, பொலிவியாவின் முக்கிய நகரமான லாபாஸில் நியமிக்கப்பட்டேன். அங்கே 25 வருடங்கள் இருந்தேன். 1970-களின் ஆரம்பத்தில், லாபாஸிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் 12 அங்கத்தினர்கள் மட்டுமே இருந்தார்கள். பிரசங்க வேலை அதிகரித்ததால் பெரிய கிளை அலுவலகம் தேவைப்பட்டது. அதனால் படுவேகமாக வளர்ந்துவரும் சான்டா க்ரூஸ் நகரில் ஒரு புதிய கிளை அலுவலகம் கட்டப்பட்டது. லாபாஸிலிருந்த கிளை அலுவலகம் 1998-ல் சான்டா க்ரூஸுக்கு மாற்றப்பட்டது, அதன் அங்கத்தினராக நான் அழைக்கப்பட்டேன். இப்பொழுது 50-க்கும் அதிகமான அங்கத்தினர்கள் அங்கே இருக்கின்றனர்.
1966-ஆம் வருடம் சான்டா க்ரூஸ் நகரில் ஒரே ஒரு சபை மட்டுமே இருந்தது, தற்போது அங்கு 50-க்கும் அதிகமான சபைகள் உள்ளன. முன்பு பொலிவியா முழுவதிலும் 640 சாட்சிகளே இருந்தனர், இப்பொழுதோ கிட்டத்தட்ட 18,000 சாட்சிகள்!
மகிழ்ச்சிகரமாக, பொலிவியாவில் என்னுடைய ஊழியம் பலன் தந்தது. என்றாலும், எல்லா இடங்களிலும் இருக்கும் சகோதர சகோதரிகளின் விசுவாசத்தைப் பார்த்து எப்பொழுதும் உற்சாகமடைந்திருக்கிறேன். ராஜ்ய பிரசங்கிப்பு வேலையில் யெகோவாவின் ஆசிர்வாதத்தைப் பார்ப்பதில் நாம் அனைவரும் பேரானந்தமடைகிறோம். சீஷராக்கும் வேலையில் பங்குகொள்வது நிச்சயமாகவே மகிழ்ச்சியான ஒன்று.—மத்தேயு 28:19, 20.
[பக்கம் 13-ன் படம்]
ஸ்காட்லாந்தில் பயனியர் சேவை
[பக்கம் 15-ன் படங்கள்]
பொலிவியாவிலுள்ள கிளை அலுவலகத்தில் சேவை; (உள்படம்) கிலியட் பள்ளியின் 42-ஆம் வகுப்பின் பட்டமளிப்பு விழாவில்