வரவிருந்த சோதனைகளை தாங்கிக்கொள்ள பலப்படுத்தப்பட்டோம்
எட்வர்ட் மிஹலெக் என்பவரால் சொல்லப்பட்டது
அ.ஐ.மா., டெக்ஸஸிலுள்ள வார்டன் மாவட்ட முதன்மை அதிகாரியின் கண்களில் கோபம் பற்றியெரிந்தது. நான்காவது முறையாக என்னை சிறைக்கு இழுத்துச்செல்லும்போது, “சட்டத்திற்கு கீழ்ப்படிந்துதான் தொலையேன்,” என கத்தினார்.
“இதை செய்வதற்கு எனக்கு எல்லா உரிமையும் இருக்கு,” என சட்டென்று நான் பதிலளித்தேன். இது அந்த அதிகாரியின் ஆத்திரத்தை இன்னும் கிளறியது, அவர் ஒரு இரும்புத்தடியால் என்னை அடிக்க ஆரம்பித்தார். மற்ற அதிகாரிகளும் இவருடன் சேர்ந்துகொண்டு என்னை அவர்களது துப்பாக்கிப் பிடியால் விளாசினார்கள்.
அது கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு முன்பு நடந்தது. நடந்ததையெல்லாம் நினைத்துப்பார்க்கும்போது, தென் அமெரிக்காவிலுள்ள பொலிவியா நாட்டிற்கு—பிரான்ஸ் நாட்டின் அளவிலிருக்கும் நாட்டிற்கு—அனுப்பப்படவிருக்கும் இரண்டே யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக இருக்கும் சவாலை நான் எதிர்ப்படுவதற்கு அப்படிப்பட்ட சூழ்நிலைகளை யெகோவா தேவன் பயன்படுத்தினார் என்பதை என்னால் உணர முடிகிறது. நீங்கள் வெவ்வேறு சோதனைகளை எதிர்ப்படும்போது யெகோவா எப்படி உங்களை பலப்படுத்துவார் என்பதை புரிந்துகொள்ள என் அனுபவம் உங்களுக்கு ஒருவேளை உதவும்.
1936-ல், டெக்ஸஸிலுள்ள போலிங் பட்டணத்தில் ஒரு ரேடியோ ரிப்பேர் கடையில் நான் வேலை பார்த்தபோது, ஜோசப் எஃப். ரத்தர்போர்ட்டின் பேச்சை ரேடியோவில் கேட்டேன்; அவர் உவாட்ச் டவர் பைபிள் அண்ட் ட்ராக்ட் சொஸைட்டியின் பிரெஸிடண்டாக அப்போது இருந்தார். கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்திற்கு கடவுளுடைய அரசாங்கம் கொண்டுவரவிருக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றி அவர் பேசினார். உண்மையிலேயே எனக்கு அது மிகவும் பிடித்துப்போய்விட்டது. (மத்தேயு 6:9, 10; வெளிப்படுத்துதல் 21:3, 4) அதன்பின் எங்களது சொந்த லைப்ரரியில் ரத்தர்போர்ட் எழுதிய சில புத்தகங்களைப் பார்த்தேன்; அவற்றைப் படிக்க ஆரம்பித்தேன்.
என் மாற்றாந்தாய் அப்புத்தகங்களை “பண்டும் பழசுமான மத புத்தகங்கள்” என அழைத்தார்; அவற்றில் நான் ஆர்வம் காண்பிப்பதைக் குறித்து உஷாராகிவிட்டார். அவற்றை ஒளித்துவைத்துக்கொண்டு, எரித்துப்போடப்போவதாக பயமுறுத்தினார். காவற்கோபுரம் மற்றும் பொற்காலம் (இப்பொழுது விழித்தெழு!) ஆகிய பத்திரிகைகளுக்கு சந்தா வேண்டுமென கேட்டு உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு நான் எழுதினேன். புதிதாக துவங்கப்பட்ட வார்டன் சபையைச் சேர்ந்த வில்லியம் ஹார்ப்பர் என்னை சந்திக்கும்படி சங்கம் ஏற்பாடு செய்தது. விரைவிலேயே, என் மாற்றாந்தாயும் என் அண்ணனும் என் ஒன்றுவிட்ட தம்பியும் நானும் சகோதரர் ஹார்ப்பரோடு பைபிளைப் படித்துவந்தோம். விரைவில், தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலம் நாங்கள் யெகோவாவிற்கு எங்களையே ஒப்புக்கொடுத்திருப்பதை வெளிக்காட்டினோம்.
1938-ல், சங்கத்தின் பயணப் பிரதிநிதியான ஷில்ட் டுட்ஜியன், போலிங்கிலிருந்த எங்கள் வீட்டில் ஒரு பைபிள் பேச்சை அளித்தார். எங்களது வரவேற்பு அறையில், உட்கார இடமில்லாதபடி கூட்டம் நிரம்பியிருந்தது; அதற்குத் தொட்டாற்போல் இருந்த அறைகளுக்குச் செல்லும் வழிகளிலும்கூட ஆட்கள் நின்றுகொண்டிருந்தார்கள். தீர்க்கதரிசியான எரேமியா அவரது நாட்களிலிருந்த மக்களுக்கு அவர்களது எதிர்ப்பின் மத்தியிலும் தொடர்ந்து விட்டுக்கொடுக்காமல் பிரசங்கித்ததைப் பற்றி சகோதரர் டுட்ஜியன் பேசினார். (எரேமியா 1:19; 6:10; 15:15, 20; 20:8) அப்படிப்பட்ட பேச்சுக்களால், நாங்கள் எதிர்ப்படவிருந்த சோதனைகளைத் தாங்கிக்கொள்வதற்கு யெகோவா எங்களைப் பலப்படுத்தினார்.
ஒரு தீர்மானமும் அதன் விளைவுகளும்
நான் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டுமென சீக்கிரத்தில் உணர்ந்தேன். இதற்குமுன், நான் வியாபாரத்தைப் பற்றி படித்திருந்தேன், வியாபார உலகில் பேரும் புகழும் வாங்க வேண்டுமென விரும்பினேன். ரேடியோ விற்பனை மற்றும் பழுதுபார்த்தல் தொழில் செய்தேன், அதுமட்டுமல்லாமல் தொலைபேசி இணைப்புகளைப் பொருத்தும் டெலிபோன் கம்பெனியிலும் நான் வேலை பார்த்தேன். ஆனால் வாழ்க்கையில் உண்மையான வெற்றியைப் பெறுவது, நம்மைப் படைத்திருக்கும் யெகோவா தேவனைப் பிரியப்படுத்துவதை உள்ளடக்குகிறது என்பது எனக்கு புரிய ஆரம்பித்தது. ஆகவே நான் என் தொழிலுக்கு முழுக்குப்போட்டுவிட்டு, வீட்டிலிருந்த ஒரு காரை புதுப்பித்தேன். 1939-ம் வருடத்தின் முதல் நாளில் முழு நேர ஊழியக்காரர்களான பயனியர்களோடு சேர்ந்துகொண்டேன்; அந்தப் பயனியர்கள் டெக்ஸஸிலுள்ள கார்னஸ் கௌன்டியில் த்ரீ ரிவர்ஸுக்குப் பக்கத்தில் இருந்தனர்.
செப்டம்பர் 1939-ல், ஐரோப்பாவில் இரண்டாவது உலகப் போர் ஆரம்பமானது. யெகோவாவின் சாட்சிகளை பழிதூற்ற எதிராளிகள் இந்தச் சந்தர்ப்பத்தை பிரயோஜனப்படுத்திக் கொண்டனர். நாங்கள் துரோகிப்படையினர் அல்லது அச்சு நாடுகளின் வேவுக்காரர்கள் என அவர்கள் சொல்லிக்கொண்டார்கள். அப்படிப்பட்ட பொய் குற்றச்சாட்டுகளை அநேகர் நம்பி எங்களுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார்கள். 1940-களின் ஆரம்பத்தில், நான் ஒன்பது, பத்து முறை சிறையில் போடப்பட்டேன்; இதற்குமுன் நான் சொன்னபடி முதன்மை அதிகாரியும் துணை அதிகாரிகளும் என்னை அடித்து விளாசிவிட்ட அந்தச் சமயமும் இதில் ஒன்று. அதற்குப்பின் எனக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது.
அதன்பின் இதே முதன்மை அதிகாரி, சட்டவிரோதமாக சூதாடியதாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு ஆள்மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டார்; ஆனால் அதற்குக் கைமாத்தாக, எண்ணெய் சுரங்கத் தொழிலாளியான அந்தத் தடி ஆளிடம் என்னை அடிக்குமாறு சொல்லிவிட்டார். அதன் காரணமாக, ஒரு நாள் நான் தெருவில் பத்திரிகைகளை அளிக்கும்போது அந்த ஆள் என்னை சங்கிலியால் அடித்தான்! சில அதிகாரிகள் வந்தனர், ஆனால் அவனை கைதுசெய்வதற்குப் பதிலாக என்னை சிறையில் போட்டனர்! பின்பு, அந்த ஆள், மனதார செய்யாத அந்தத் தாக்குதலுக்கு காரணமென்ன என்பதைச் சொல்லி மன்னிப்பு கேட்டான்.
சோதனைகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள்
அப்படிப்பட்ட சோதனைகளைச் சந்திப்பது கடவுள்மீதிருந்த என் நம்பிக்கையை உண்மையில் பலப்படுத்தியது. ஒரு காரியம் என்னவென்றால், என்னை அவர்கள் அடித்தபோது எனக்கு வலித்ததாக ஞாபகமில்லை, ஆனால் அதன் பிறகு எனக்குக் கிடைத்த அமைதியும் மனசாந்தியும் எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. (அப்போஸ்தலர் 5:40-42) இவ்வாறு, அப்போஸ்தலனாகிய பவுல் அறிவுறுத்தியவாறே செய்ய நான் கற்றுக்கொண்டேன்: “உபத்திரவப்படும்போது களிகூறுங்கள், ஏனெனில் உபத்திரவம் சகிப்புத்தன்மையை உண்டாக்கும் என அறிந்திருக்கிறோம்.” (ரோமர் 5:3) அதன்பின், நான் வாங்கிய அடிகளையெல்லாம் நினைத்துப்பார்த்தபோது, யெகோவாவின் உதவியைக்கொண்டு, சாத்தானுடைய கையாட்கள் என் வாயை அடைக்கும்படி ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்ற தீர்மானம் எடுத்தேன்.
அதுமட்டுமல்லாமல், இன்னொரு மதிப்புவாய்ந்த பாடத்தையும் நான் கற்றுக்கொண்டேன். “இதைச் செய்வதற்கு எனக்கு எல்லா உரிமையும் இருக்கு,” என்று கொஞ்சமும் சாதுரியமில்லாமல் நான் பதிலளித்தது அந்த முதன்மை அதிகாரியை கோபப்படுத்தியது. பின்பு, அவர் என்னை மறுபடியும் நேருக்குநேர் சந்தித்தார், சாட்சிகள் போரில் கலந்துகொள்வதில்லையென்ற கோபத்தில் நெருப்பாய் தோன்றினார். (ஏசாயா 2:4) என்னை தூண்டிவிட, “உனது நாட்டிற்காக சேவை செய்யும்படி உன்னை அழைத்தால் நீ போவாயா?” என கேட்டார்.
சாதுரியத்தைப் பற்றி ஏற்கெனவே நான் ஒரு பாடத்தை கற்றுக்கொண்டிருந்ததால் இப்படிச் சொன்னேன்: “அது யெகோவாவின் சித்தம் என எனக்கு நன்றாக தெரிந்தால், நிச்சயமாகவே போவேன்.” அந்தப் பதில் அவரது கோபத்தை தணித்தது, அதன் பிறகு என்னை எதுவும் செய்யவில்லை.
எனது வாழ்க்கைப் பணிக்கான பயிற்சி
1944-ல் உவாட்ச் டவர் கிலியட் பைபிள் பள்ளியின் மூன்றாவது வகுப்பில் கலந்துகொண்டது என் வாழ்க்கையில் ஓர் ஒளிமயமான காலம். மிஷனரி ஊழியத்திற்காக இந்தப் பள்ளி ஐந்து-மாத பயிற்றுவிப்பை அளிக்கிறது. இந்தப் பள்ளியில் படிப்பதற்குமுன், கூட்டத்தார் முன்னிலையில் பேசுவதற்கு நான் பயந்து நடுங்குவேன். ஆனால் சுமார் நூறு மாணவர்களுக்கு முன்பு, பெரும்பாலும் வெட்டவெளி ஆடிடோரியத்தில் அடிக்கடி பேச்சுகொடுப்பது உண்மையில் எனக்கு உதவியது. எங்களது பொதுப்பேச்சு போதனையாளரான மாக்ஸ்வெல் ஃபிரெண்ட், நடுவே குறுக்கிட்டு, “சகோதரர் மிக்காலெக், நீங்கள் சொல்வது காதில் விழவில்லை!” என உரக்கமாக சொல்வார். இப்படியாக, எனக்கு உண்மையிலேயே கனீரென்ற குரல் இருக்கிறதென்பது அதன் பிறகுதான் எனக்கே தெரியவந்தது.
பள்ளியின் பிரெஸிடண்டான நேதன் ஹெச். நார், மிஷனரியாக என்னை பொலிவியாவிற்கு அனுப்புவதாக அறிவித்த பிறகு, இப்படிச் சொன்னது எனக்கு ஞாபகமிருக்கிறது: “அங்கே அநேக மனத்தாழ்மையான ஆட்களை நீங்கள் பார்ப்பீர்கள். அன்போடும் பொறுமையோடும் தயவோடும் அவர்களை நடத்துங்கள்.” இரண்டாவது உலகப் போர் இன்னும் நடந்துகொண்டிருந்ததால், நியமிக்கப்பட்ட இடங்களுக்கு செல்வதற்கு நாங்கள் காத்திருக்க வேண்டியதாயிருந்தது. கடைசியாக, அக்டோபர் 25, 1945-ல், உடன் மாணவராயிருந்த ஹெரால்ட் மார்ரிஸும் நானும் பொலிவியாவின் தலைநகரான லாபாஸிற்கு வெளியேயுள்ள எல் ஆல்டோ விமானநிலையத்திற்கு வந்துசேர்ந்தோம். இப்படியாக, தென் அமெரிக்காவிலுள்ள மூன்றாவது-மிகப்பெரிய நாட்டில் குடியேறிய இரண்டே சாட்சிகளானோம்.
கடல் மட்டத்திற்கு 4,100 மீட்டர் உயரத்திலிருக்கும் விமான நிலையத்திலிருந்து ஒரு பஸ் லாபாஸ் தலைநகரத்திற்கு எங்களைக் கூட்டிச்சென்றது. மிகப் பெரிய மலைக்கணவாயின் அடித்தளத்திலும் அதைச் சுற்றிலும் பரவியிருக்கும் நகரம்தான் லாபாஸ். கடல் மட்டத்திற்கு மூன்று கிலோமீட்டரைவிட அதிகமான உயரத்தில் வாழ்வதற்குப் பழகிக்கொள்வது ஒரு சவாலாக இருந்தது.
சிறிய, கொந்தளிப்பான ஆரம்பங்கள்
உடனடியாகவே நாங்கள் ஆட்களை வீட்டுக்குவீடு சந்திக்க ஆரம்பித்தோம். ஓட்டை ஸ்பானிஷோடு நாங்கள் திக்குமுக்காடியபோது அவர்கள் தயவோடும் பொறுமையோடும் எங்களை நடத்தினார்கள். விரைவில் நாங்கள் ஒவ்வொருவரும் வாராவாரம் 18-லிருந்து 20 பைபிள் படிப்புகளை நடத்திவந்தோம். ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஏப்ரல் 16, 1946-ல், கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பிற்காக ஒரு சிறிய கூட்டம் சந்தோஷமாக எங்களோடு கலந்துகொண்டது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு, இன்னும் நான்கு கிலியட் பட்டதாரிகள் வந்தார்கள்; அவர்களில் ஒருவர்தான் பின்பு என்னை திருமணம் செய்துகொண்ட எலிசபெத் ஹாலென்ஸ்.
கொஞ்ச காலத்திற்குள்ளாகவே சகோதரர் மார்ரிஸும் நானும் கோச்சபாம்பா மற்றும் ஒரூரோ உட்பட மற்ற நகரங்களுக்கு செல்ல ஆரம்பித்தோம்; இந்த இரு நகரங்களும் பொலிவியாவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது மிகப்பெரிய நகரங்களாய் இருந்தன. நாங்கள் கண்ட அக்கறையையும் நாங்கள் அளித்த பைபிள் பிரசுரங்களையும் சகோதரர் நாரிடம் நான் சொன்னபோது, அந்த நகரங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ அதுபோலவோ சென்று அக்கறை காண்பிப்போருக்கு உதவுமாறு ஆலோசனை அளித்தார். சிநேகபான்மையான விருந்தோம்பலுள்ள அந்த ஆட்களில் அநேகர் பிற்பாடு யெகோவாவின் சாட்சிகளானார்கள்.
அதற்கு முந்திய வருடம்தான் இரண்டாவது உலகப்போர் முடிந்திருந்ததன் காரணமாக, பொலிவியாவில் அரசியல் கொந்தளிப்பு இருந்தது. அரசியல் போட்டிபொறாமைகளாலும் தென் அமெரிக்காவில் நாஸிஸம் மறுமலர்ச்சி அடையுமோ என்ற பயத்தாலும் தெரு ஆர்ப்பாட்டங்களும் படுகொலைகளும் வெடித்தன. 1946-ம் ஆண்டின் கோடைகாலத்தின்போது, அந்த நாட்டின் ஜனாதிபதி கொல்லப்பட்டார்; அவரது சடலம் ஜனாதிபதி மாளிகையைப் பார்த்தவாறுள்ள விளக்குக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டது. சில சமயங்களில், வன்முறையின் காரணமாக ஆட்களால் அவர்களது வீடுகளைவிட்டு வெளியே செல்லவும்கூட முடியவில்லை.
எலிசபெத், மெயின் அங்காடி வழியாக பஸ்ஸில் பிரயாணம் செய்யும்போது, மூன்று வாலிபர்களின் சடலங்கள் கம்பங்களில் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். பதறிப்போய், ஐயோ என்று சொல்லிவிட்டாள். அவளோடு பயணம் செய்த ஒரு பெண், “உங்களுக்குப் பார்க்க பிடிக்கவில்லையென்றால் தலையைத் திருப்பிக்கொள்ளுங்கள்” என்று சொன்னாள். அப்படிப்பட்ட சம்பவங்கள் நாங்கள் முழுக்கமுழுக்க யெகோவாவைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியத்தை எங்களுக்கு உணர்த்தின.
எனினும், கொந்தளிப்பின் மத்தியிலும், பைபிள் சத்தியம் தாழ்மையான இருதயங்களில் வேரூன்ற ஆரம்பித்தது. செப்டம்பர் 1946-ல், லாபாஸில் ஒரு கிளை அலுவலகம் நிறுவப்பட்டது, நான் அதற்குக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். இந்த அலுவலகம் வாடகை அப்பார்ட்மென்ட்டில் அமைந்திருந்தது; அங்கேயேதான் மிஷனரி வீடும் இருந்தது. சில மாதங்களுக்குப் பிறகு, பொலிவியாவில் முதலாவது சபை ஏற்படுத்தப்பட்டபோது, அதே அப்பார்ட்மென்ட்டில்தான் எங்கள் கூட்டங்களும் நடைபெற்றன.
1946-ல் பொதுபேச்சுகளும் துவங்கப்பட்டன. லாபாஸ் நகர்ப்பகுதியிலிருந்த முனிசிபல் லைப்ரரியின் மன்றத்தில் முதலாவது பொதுப்பேச்சு அளிக்கப்பட்டது. எங்களோடு பைபிளைப் படித்துக்கொண்டிருந்த சிநேகபான்மையான யுகோஸ்லாவியர் ஒருவர், பேச்சை அறிவிப்பதற்காக உள்ளூர் செய்தித்தாளில் பணம் கொடுத்து விளம்பரம் செய்தார். மன்றத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நான் இன்னும் ஸ்பானிஷ் மொழியில் திக்கித்திணறிக் கொண்டிருந்ததால், அந்தப் பேச்சைக் கொடுப்பதற்கு மிகவும் பயந்து நடுங்கினேன். ஆனால் யெகோவாவின் உதவியோடு கூட்டம் நல்லபடியாக நடந்தது. அந்த மன்றத்தில் நடக்கவிருந்த நான்கு பேச்சுகளில் அது முதலாவதாக இருந்தது.
1947-ல் இன்னும் ஆறு கிலியட் மிஷனரிகள் அங்கு அனுப்பப்பட்டார்கள்; 1948-ல் மற்றுமொரு நான்கு பேர் வந்தார்கள். வாடகைக்கு நாங்கள் எடுத்த வீடுகளில் சௌகரியங்களும் வசதிகளும் குறைவாகவே இருந்தன. மிஷனரி ஊழியத்தில் நாங்கள் சுறுசுறுப்பாய் இருக்க வேண்டியிருந்தது மட்டுமல்லாமல், இறுதியில், ஆரம்பகால மிஷனரிகளான நாங்கள் எங்களிடமிருந்த கந்தல்களை வீசியெறிந்து புதுத்துணிகள் வாங்க பகுதிநேர வேலை செய்து பணம் சேர்க்கவேண்டியதாயிருந்தது. நகரம் நகரமாக செல்வதும்கூட ஒரு சவாலாக இருந்தது. அடிக்கடி நான் திறந்த லாரிகளில் கணவாய்கள் வழியே குளிர்ப்பிரதேசங்களில் பயணம் செய்திருக்கிறேன். ஆனால் யெகோவா தமது அமைப்பின் மூலம் இடைவிடாமல் எங்களுக்கு உற்சாகமளித்து பலமூட்டினார்.
மார்ச் 1949-ல், நியூ யார்க்கிலிருந்து வந்த சகோதரர் நாரும் அவரது செயலரான மில்டன் ஹென்ஷலும், லாபாஸ், கோச்சபம்பா, ஒரூரோ ஆகிய இடங்களிலுள்ள எங்களது மூன்று மிஷனரி வீடுகளுக்கு விஜயம் செய்தனர். அநேக நாடுகளில் காணப்பட்ட வேகமான அதிகரிப்பைப் பற்றியும், ப்ரூக்ளினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளது உலகக் கிளை அலுவலகத்தில் புதிய பெத்தேல் வீடும் அச்சடிப்பதற்கான கட்டிடங்களும் கட்டப்பட்டுவந்தன என்பதைப் பற்றியும் கேள்விப்பட்டபோது நாங்கள் எவ்வளவு உற்சாகமடைந்தோம்! எங்களது வீட்டையும் ராஜ்ய மன்றத்தையும் லாபாஸில் இப்போதிருப்பதைவிட இன்னும் சென்டரான இடத்தில் வைத்துக்கொள்ளும்படி சகோதரர் நார் ஆலோசனை சொன்னார். இன்னுமதிக மிஷனரிகளை அனுப்பப்போவதாகவும் அவர் சொன்னார்.
பின்பு 1949-ல், ஒரூரோ நகரத்தில் எங்களது முதல் வட்டார மாநாடு நடைபெற்றது. முதன்முறையாக ஒருவரையொருவர் சந்திப்பது புதிய கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் அநேகருக்கு உற்சாகமளிப்பதாய் இருந்தது. அந்தச் சமயத்தில், பொலிவியாவில் உச்ச எண்ணிக்கையாக 48 ராஜ்ய பிரஸ்தாபிகளும் மூன்று சபைகளும் இருந்தன.
உண்மைமாறாத என் துணைவி
எலிசபெத்தும் நானும் பல வருடங்களாக ஒன்றுசேர்ந்து மிஷனரி ஊழியம் செய்ததன் விளைவாக, ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு நேசிக்க ஆரம்பித்தோம். இறுதியில், 1953-ம் ஆண்டில் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். என்னைப்போலவே அவளும் 1939-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்திருந்தாள். பயனியர் ஊழியத்தின் ஆரம்ப வருடங்கள் அவளுக்கும் கடினமாக இருந்தன. அவள் தைரியமாக பிரசங்கம் செய்ததால், அவளையும் சாதாரண குற்றவாளிபோல் தெருக்களில் நடத்திச்சென்று சிறையில் போட்டனர்.
“மதம் ஒரு கண்ணியும் ஏய்ப்புமாக உள்ளது” என்ற அறிவிப்பு அட்டைகளை சுமந்துகொண்டு தெருக்களில் நடந்து செல்லும்போது பயமாக இருந்ததாக எலிசபெத் சொல்கிறாள். ஆனால் அந்தச் சமயத்தில் யெகோவாவின் அமைப்பு எதைச் செய்யச்சொல்லியதோ அதை அவள் செய்தாள். அவள் யெகோவாவிற்காக அதைச் செய்ததாக சொல்கிறாள். பொலிவியாவில் அந்த ஆரம்ப வருடங்களின்போது அவள் எதிர்ப்பட்ட சோதனைகளை சகித்துக்கொள்ள அந்த அனுபவங்கள் அவளை பலப்படுத்தின.
பலதரப்பட்ட நியமிப்புகள்
எங்கள் திருமணத்திற்குப் பிறகு ஒருசில வருடங்களாக பயண ஊழியத்தில் நாங்கள் அதிக நேரத்தை செலவிட்டோம். பொலிவியாவிலிருந்த நான்கு சபைகளுக்கு மாத்திரம் நாங்கள் செல்லவில்லை, ஆர்வம்காட்டிய நபர்களைக்கொண்ட அனைத்து தனித்தொகுதிகளுக்கும், 4,000 ஆட்களுக்கும் அதிகமானோர் வாழும் ஒவ்வொரு பட்டணத்திற்கும்கூட நாங்கள் சென்றோம். அந்த இடங்களில் பைபிள் சத்தியத்திற்கு ஆர்வம் காட்டும் நபர்களைக் கண்டுபிடித்து அவர்களது ஆர்வத்தைத் தூண்டுவதே எங்களது நோக்கமாக இருந்தது. 1960-ம் ஆண்டின் மத்தியில், சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு நாங்கள் சென்றிருந்த கிட்டத்தட்ட எல்லா சிறிய பட்டணங்களிலும் சபைகள் உருவாகியிருப்பதைப் பார்த்து நாங்கள் ஆனந்தப் பரவசமடைந்தோம்.
இதற்கிடையில், அதிக உயரத்திலிருந்த லாபாஸில் வாழ்ந்ததால் எனக்கிருந்த உடற்கோளாறுகள் அதிகமாயின. ஆகவே 1957-ல், கிளை அலுவலகத்தைக் கண்காணிக்கும் பொறுப்பு மற்றொரு சகோதரருக்குக் கொடுக்கப்பட்டது. எலிசபெத்தும் நானும் கோச்சபாம்பாவிலுள்ள மிஷனரி வீட்டில் நியமிக்கப்பட்டோம்; அது, குறைவான உயரத்திலிருக்கும் பள்ளத்தாக்கில் அமைந்த ஒரு நகரம். முதன்முதலில் நடந்த கூட்டத்திற்கு சில மிஷனரிகள் வந்திருந்தார்கள், ஆனால் பொலிவியாவைச் சேர்ந்த ஒருவர்கூட வரவில்லை. 15 வருடங்களுக்குப் பிறகு 1972-ல் நாங்கள் கோச்சபாம்பாவை விட்டுச் சென்றபோது அங்கு இரண்டு சபைகளே இருந்தன. இப்போது அங்கு 35 சபைகள் இருக்கின்றன; 2,600-க்கும் அதிகமான ராஜ்ய பிரஸ்தாபிகளும் இருக்கின்றனர்!
1972-ல் வெப்பமண்டல தாழ்நிலத்திலுள்ள சான்டா க்ரூஸிற்கு நாங்கள் அனுப்பப்பட்டோம். இப்போதும்கூட இங்குதான் ஒரு ராஜ்ய மன்றத்திற்கு மேலுள்ள அறைகளில் தங்கியிருக்கிறோம். நாங்கள் சான்டா க்ரூஸிற்கு வந்தபோது இங்கும் இரண்டு சபைகள்தான் இருந்தன. ஆனால் இப்போது இங்கு 45-க்கும் அதிகமான சபைகள் இருக்கின்றன; 3,600-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் கிறிஸ்தவ ஊழியத்தில் பங்குகொள்கின்றனர்.
இந்த நாட்டில் 50 வருடங்களுக்கும் மேலாக மிஷனரி ஊழியம் செய்து, சுமார் 12,300 பேர் யெகோவாவின் மக்களாக கூட்டிச்சேர்க்கப்பட்டிருப்பதைப் பார்ப்பது எங்களுக்கு எவ்வளவு சந்தோஷமளிக்கிறது! பிரியமான இவர்களுக்கு சேவை செய்தது உண்மையிலேயே எங்களுக்கு ஆனந்தம் அளித்திருக்கிறது.
பிறருக்கு சேவைசெய்து மகிழும் வாழ்க்கை
மிஷனரி ஊழியத்திற்கு நான் செல்வதற்கு முன்பு, உவாட்ச் டவர் சொஸைட்டியின் சட்ட அறிவுரையாளரும் டெக்ஸன் நாட்டைச் சேர்ந்தவருமான ஹேடன் சி. கவிங்டென் இவ்வாறு சொன்னார்: “எட், டெக்ஸஸில் அங்குமிங்கும் நடமாட நிறைய இடமிருந்தது. ஆனால் மிஷனரி வீட்டில், மற்றவர்களோடு தங்கும்போது உங்களுக்கு ஒரே நெரிசலாக இருக்கும். ஆகவே நீங்கள் மாற்றங்களை செய்துகொள்ள வேண்டிவரும்.” அவர் சரியாகத்தான் சொல்லியிருந்தார். மற்றவர்களோடு நெரிசலில் வாழ்வது ஒரு சவால்தான், ஆனால் ஒரு கிறிஸ்தவ மிஷனரி எதிர்ப்படும் அநேக சவால்களில் இது வெறுமனே ஒன்றுதான்.
ஆகவே யெகோவாவை சேவிப்பதற்காக நீங்கள் வீட்டைவிட்டு வேறு இடத்திற்கு செல்லவேண்டியதாயிருந்தால், கிறிஸ்துவை உண்மையாய் பின்பற்றுவோரது வாழ்க்கை, மற்றவர்களுக்கு சேவை செய்யும் வாழ்க்கை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். (மத்தேயு 20:28) ஆகவே, ஒரு மிஷனரி தன்னலமில்லா வாழ்வை ஏற்றுக்கொள்ளும்படி மனதை தயார் செய்துகொள்ள வேண்டும். சிலர் தங்களுக்கு தனிக்கவனிப்பு கிடைக்குமென ஒருவேளை கனவு காணலாம். நண்பர்களுக்கும் வீட்டிலுள்ள உறவினர்களுக்கும் டாட்டா சொல்லிவிட்டு வருகையில் ஒருவேளை உண்மையில் அப்படிப்பட்ட தனிக்கவனிப்பு அவர்களுக்கு கிடைக்கலாம். ஆனால் நியமிக்கப்பட்ட ஒரு சிறிய பட்டணத்திற்கோ ஏழ்மையான அயலூருக்கோ வந்துசேரும்போது அவை மாயமாய் மறைந்துபோகின்றன. என் ஆலோசனை என்ன தெரியுமா?
உடற்கோளாறுகள், குடும்பத்தைப் பிரிந்துவாழ்வதால் தனிமையுணர்ச்சி அல்லது ஒரு நியமிப்பில் கிறிஸ்தவ சகோதரர்களோடு ஒத்துப்போவதில் கஷ்டங்கள் போன்ற பிரச்சினைகளை நீங்கள் எதிர்ப்படும்போது, அவற்றை உங்களது பயிற்றுவிப்பின் ஒரு அம்சமாக எடுத்துக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய விதமாகவே ஏற்ற காலத்தில் உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்: “சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, [“உங்களது பயிற்றுவிப்பை முடித்து,” NW] ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக.”—1 பேதுரு 5:10.
இந்தக் கட்டுரை பிரசுரமாவதற்கு தயாராகும்போதே, ஜூலை 7, 1996-ல் எட்வர்ட் மிஹலெக் காலமானார்.
[பக்கம் 19-ன் படம்]
1947-ல் பொலிவியாவில்
பொதுப்பேச்சு வகுப்புகள் பெரும்பாலும் வெளியே நடத்தப்பட்டன,
[பக்கம் 20, 21-ன் படம்]
பிற்பாடு எடுக்கப்பட்ட கிலியட் ஆடிடோரியத்தின் இந்தப் படம் அதைத்தான் காண்பிக்கிறது
[பக்கம் 23-ன் படம்]
என் மனைவியுடன்