போர்ட் ஆர்தரில் படுகொலை ஏன் நடந்தது?
ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
ஏப்ரல் 28, 1996, ஞாயிறு பிற்பகல், வரலாற்றுச் சிறப்பிடமான போர்ட் ஆர்தரில் வானிலை இதமாயிருந்தது; ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவிலுள்ள புகழ்பெற்ற டூரிஸ்ட் சென்டர்தான் போர்ட் ஆர்தர். அங்குள்ள ப்ராட் ஆர்ரோ ரெஸ்டரண்ட், மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆட்களால் நிரம்பிவழிந்தது. பிற்பகல் சுமார் 1:30 மணியிருக்கும், பொன்னிற முடிகொண்ட 28-வயது இளைஞன், ரெஸ்டரண்ட்டின் வெட்டவெளிப் பகுதியில் சாப்பிட்டு முடித்த கையோடு கட்டிடத்திற்குள் நுழைந்து திடுதிப்பென்று சுட ஆரம்பித்தான்.
சாப்பிட்டுக்கொண்டிருந்தோர், வாய்களில் உணவு இருந்தபடியே தங்களது நாற்காலிகளில் சுருண்டு விழுந்து செத்தனர். அது “போர்க்களத்து பிணக்குவியலைப்போன்று” இருந்ததாக போலீஸ் கூறினர். அனைவரும் இறந்துவிட்டார்கள் என மனதுக்கு பட்டவுடன் அந்தத் துப்பாக்கி மனிதன் சிறிதும் பதற்றமின்றி வெளியே நடந்து சென்றான்—அவன் 20 பேரை கொன்றிருந்தான். தீவு மாநிலமான டாஸ்மேனியா முழுவதிலும் கடந்த நான்கு வருடங்களில் நடந்திருந்ததைக் காட்டிலும் அதிகமான கொலைகளை ஒருசில நொடிகளில் அவன் செய்திருந்தான்!
ஆனாலும், அந்தத் துப்பாக்கி மனிதன் தொடர்ந்து தங்குதடையின்றி ஒரே சீராக ஆட்களை கொன்றுகொண்டே சென்றான். உதாரணத்திற்கு, அந்த வரலாற்றுச் சிறப்பிடத்திற்கு வெளியே செல்லும் வழியில், நானெட் மிகாக்கும் அவளது இரண்டு மகள்களும் அவனது கண்களில் சிக்கினர். நானெட்டையும் அவளது மூன்றுவயது மகளையும் சாகடித்தான். பின், அவளது ஆறுவயது மகள் தப்பிக்க முயன்றபோதிலும், அவன் அவளை விரட்டிச்சென்று, ஒரு மரத்திற்கு பின் அஞ்சி ஒண்டிக்கொண்டிருந்த அவளை சுட்டுத் தள்ளினான்.
அதற்கு பிறகு, அந்த வரலாற்றுச் சிறப்பிடத்தின் புறவாயிலில் இருந்த சுங்கச்சாவடியருகே, BMW காருக்குள் இருந்த மூன்று பேரையும் கொன்றுவிட்டு அவர்களது காரை அவன் அபகரித்துச் சென்றான். பின், கொஞ்ச தூரம் சென்றபின், மற்றொரு காரிலிருந்த ஒரு தம்பதி அவனிடம் மாட்டிக்கொண்டனர். தான் சென்றுகொண்டிருந்த BMW காரின் டிக்கியில் அந்த ஆளை அமுக்கிவிட்டு, அவனுடன் இருந்த பெண்ணை தீர்த்துக்கட்டினான். அடுத்தபடியாக, கொஞ்ச தூரத்திலிருந்த ஸீஸ்கேப் காட்டேஜ் கெஸ்ட் ஹவுஸிற்கு அவன் காரை ஓட்டிச் சென்றான்; அங்கு போய்ச்சேர்ந்தபோது பிற்பகல் சுமார் 2:00 மணியிருக்கும். அங்கே BMW காருக்கு தீ வைத்தான்; கடத்திச்சென்ற ஆளையும் அந்த கெஸ்ட் ஹவுஸின் சொந்தக்காரர்களான வயதான தம்பதியையும் அவன் பிணையாட்களாக்கினான். ரெஸ்டரண்ட்டை விட்டு வெளியே வந்த பிறகு 12 பேரை அவன் கொலை செய்திருந்தான், இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்தது. இன்னும் அநேகர் காயமடைந்தனர்.
ஞாயிறு பிற்பகல் பிரசங்க வேலை
இதற்கிடையில், யெகோவாவின் சாட்சிகளுடைய போர்ட் ஆர்தர் சபையைச் சேர்ந்த ஜெனி சிக்லரும் அவளது குடும்பத்தினரும் ஊழியம் செய்வதற்காக 1:30 மணிக்கு சந்தித்தனர். பின் அந்தக் குடும்பத்தினர் வரலாற்றுச் சிறப்பிடமான போர்ட் ஆர்தரை நோக்கி சென்றனர். ஸீஸ்கேப் காட்டேஜ் கெஸ்ட் ஹவுஸின் சொந்தக்காரரும் சிநேகபான்மையானவருமான டேவிட் மார்ட்டனை ஜெனி சந்திக்க விரும்பினாள். இதற்குமுன் அவளும் இன்னொரு கிறிஸ்தவ சகோதரியும் அவரோடு பைபிளைக் குறித்துப் பேசியிருக்கின்றனர்.
2:00 மணிக்கு சற்றுபின்னர், ஜெனியும் அவளது கணவரும் பிள்ளைகளும் கெஸ்ட் ஹவுஸிற்கு வந்துசேர்ந்தபோது தோட்டத்தில் கார் எரிவதையும் அதிலிருந்து புகை எழும்புவதையும் பார்த்தார்கள். போலீஸ்காரர்கள் அவர்களைத் தடுத்துநிறுத்தி வந்தவழியாக திரும்பிப் போகும்படி சொன்னார்கள். “அசம்பாவிதத்திற்கான அறிகுறி தென்பட்டது. சாலைகள் இயல்புக்கு மாறாக வெறிச்சோடிக்கிடந்தன,” என்பதாக ஜெனி குறிப்பிட்டார்.
எனினும், அசம்பாவிதம் உண்மையிலேயே நடந்திருக்கிறதென்பதை இன்னும் அறியாதவர்களாய், அந்தக் குடும்பத்தினர் தாங்கள் திட்டமிட்டிருந்த பிரசங்க வேலையைச் செய்ய நெடுஞ்சாலையிலிருந்து திரும்பி ஒரு சிறிய கடற்கரைக்கு சென்றனர். அங்கே, எல்லாமே சகஜ நிலையில் இருந்தது: பிள்ளைகள் நீந்திக்கொண்டிருந்தனர், ஆட்கள் கடற்கரையின் கடைகோடிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர், ஒரு வயதான தம்பதி தங்கள் காரில் உட்கார்ந்து எதையோ வாசித்துக்கொண்டிருந்தனர். “என் கணவர் அவர்களை அணுகினார், இனிமையான உரையாடல் நடந்தது. நெடுஞ்சாலையில் ஏதோ பிரச்சினை இருப்பதாகவும் அங்கிருந்து திரும்பிச் செல்லும்போது வேறு வழியில் செல்லும்படியாகவும் அவர் அவர்களுக்கு சொன்னார். ஓர் வாலிபரிடம் நான் சுருக்கமாக பேசினேன், பின் கொஞ்ச நேரத்திலேயே நாங்கள் அங்கிருந்து புறப்பட்டுவிட்டோம்,” என்பதாக ஜெனி சொன்னார்.
அந்தக் குடும்பத்தினர், போர்ட் ஆர்தருக்குப் போகும் வழியிலேயே சென்றனர். ஜெனி சொல்கிறார்: “அங்கே, உள்ளே செல்ல முடியாதபடி நுழைவாயிலில் அநேக கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. சுடப்பட்டவர்களின் பிரேதங்களைப் பார்க்க முடியாதபடி அடைப்பதற்கு அவை அங்கு நிறுத்தப்பட்டிருந்தன என பின்பு நாங்கள் அறிந்துகொண்டோம். ‘துப்பாக்கியை எடுத்துக்கொண்டு இரத்தவெறியோடு ஒருவன் புகுந்திருக்கிறான்; கிட்டத்தட்ட 15 பேர் இறந்திருப்பார்கள்!’ என ஒருவர் எங்களிடம் சொன்னார். உடனடியாக அங்கிருந்து கிளம்பினால் நல்லதென எங்களுக்கு சொன்னார்கள்.”
அதற்கு ஒரு கோரமான முடிவு
அந்த வேதனையான சம்பவம் இன்னும் முடியவில்லை, ஜெனி இவ்வாறு சொன்னார்: “அந்தத் துப்பாக்கி மனிதன் எங்கிருக்கிறான் என எங்களுக்கு தெரியாததால் வீட்டிற்கு திரும்பிச்செல்லும் வழியெல்லாம் திக்திக் என்றது. ரோட்டில் ஒவ்வொரு முறையும் இன்னொரு காரை பார்த்தபோதெல்லாம் அதில்தான் அவன் இருக்கிறானோ என மனம் படபடத்தது. பாதுகாப்பாக வீட்டிற்கு வந்து சேர்ந்த பிறகும், எந்நேரத்திலும் நாங்களும் தாக்கப்படுவோமென்ற பயம் மனதைக் கவ்வியது; ஏனெனில் நாங்கள் வாழும் பகுதி ஒதுக்குப்புறத்தில் இருப்பதால் அந்த ஏரியாவை தெரிந்துவைத்திருக்கும் எவரும் அங்கு சுலபமாக ஒளிந்துகொள்ளலாம். அன்றைய பிற்பகல் நாங்கள் எங்கு சென்றிருந்தோம் என்பதை எங்கள் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் அறிந்திருந்த காரணத்தால், நாங்கள் பாதுகாப்பாக வந்துசேர்ந்தோமா என விசாரிப்பதற்கு உடனடியாக அவர்கள் எங்களுக்கு மாறிமாறி போன் செய்ய ஆரம்பித்தார்கள்.
“நடந்ததை நினைத்துப் பார்த்தபோது, கெஸ்ட் ஹவுஸின் சொந்தக்காரரை ஒருசில நிமிடங்களுக்கு முந்தி சந்திக்க சென்றிருந்தாலும் நாங்களும் பிணமாகியிருப்போம் என்பதை உணர்ந்தோம். அங்கிருந்த போலீஸிடம் பேசிக்கொண்டிருந்தபோதும்கூட அந்தக் கொலையாளி துப்பாக்கியால் எங்களை குறிவைத்திருக்கலாம் என்பதை நினைத்தபோது உடம்பெல்லாம் சிலிர்த்தது!”
இறுதியில், அந்த ஞாயிறு இரவு 200-க்கும் அதிகமான போலீஸ்காரர்கள் கெஸ்ட் ஹவுஸை சூழ்ந்துகொண்டனர்; கொலையாளியின் துப்பாக்கிக் குண்டுகள் தங்கள்மீது பாய்வதைத் தடுக்க அவர்கள் குனிந்தவாறு பதுங்கினர். தப்பித்துச்செல்வதற்கு அவன் ஒரு ஹெலிகாப்டரைக் கேட்டான், ஆனால் இரவில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. திங்கட்கிழமை சுமார் 8:00 மணியிருக்கும், அந்த வீட்டிலிருந்து புகை கிளம்புவது தெரிந்தது. அந்தத் துப்பாக்கி மனிதன் தீக்காயங்களுடன் வெளியே தோன்றினான். அதன் பிறகு, சிக்லர் குடும்பத்தினர் சென்று சந்திக்க முயன்ற கெஸ்ட் ஹவுஸ் சொந்தக்காரரையும் சேர்த்து அந்த மூன்று பிணையாட்களின் பிரேதமும் எரிந்து சாம்பலான அந்த வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன. இறந்தோரின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்தது.
அது ஏன் நடந்தது?
கிட்டத்தட்ட ஏழு வாரங்களுக்கு முன்பு, மார்ச் 13-ம் தேதி, ஸ்காட்லாண்டிலுள்ள டன்ப்ளேனில், ஒரு துப்பாக்கி மனிதன் பள்ளி ஜிம்னாசியத்திற்குள் நுழைந்து 16 சிறு பிள்ளைகளையும் அவர்களது ஆசிரியரையும் சுட்டுத் தள்ளினான். “காலையில் கொலை மாலையில் செய்தி” என்ற முந்திய தொலைக்காட்சி செய்தி வாசகத்திற்கு இசைவாக இது உலகெங்கிலும் பேசப்பட்ட பரபரப்பான செய்தியானது. அந்த ஆஸ்திரேலிய துப்பாக்கி மனிதன், டன்ப்ளேனில் நடந்த கொலைகளின் எண்ணிக்கையையும் மிஞ்சி சாதனை படைக்க வேண்டுமென முயற்சி செய்திருக்கலாம் என சில நடத்தையியல் நிபுணர்கள் கூறினர். ஐக்கிய மாகாணங்களில், பல வருடங்களாக நியூ யார்க் நகரத்தை கதிகலங்க வைத்த சங்கிலித்தொடர் கொலையாளி என அழைக்கப்பட்ட ஒருவன், தான் அதுவரைக்கும் கேள்விப்பட்டிருந்த கொலையாளிகளையெல்லாம்விட அதிக கொலைகள் செய்து சாதனை புரிய முயற்சி செய்ததாக சொன்னது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பெருவாரியான கொலைகள் நடப்பதற்கு இன்னொரு காரணம், சினிமாக்களிலும் தொலைக்காட்சிகளிலும் காட்டப்படும் பாலியலும் வன்முறையும் என்பதாக பலர் சொல்கின்றனர். ஆஸ்திரேலியாவின் ஹெரால்ட் சன் இவ்வாறு அறிக்கை செய்தது: “போர்ட் ஆர்தர் கொலையாளியான மார்டின் ப்ரையன்ட்டின் வீட்டிலிருந்து மொத்தம் 2000 வீடியோ டேப்புகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன; அவை வன்முறையையும் ஆபாசத்தையும் சார்ந்தவை. . . . பதுக்கிவைக்கப்பட்டிருந்த வீடியோக்களை கண்டுபிடித்தபோது, போர்ட் ஆர்தர் படுகொலையில் வன்முறைப் படங்கள் வகித்த பங்கிற்கு கவனம் திரும்பியது.” அதேவிதமாக, குற்றத்தை ஒப்புக்கொண்ட சங்கிலித்தொடர் கொலையாளியின் “ஒத்தைக் கட்டிலில் ஆபாச வீடியோ டேப்புகள் இரண்டு பெட்டிகளில் இருந்தன” என நியூ யார்க்கின் டெய்லி நியூஸ் அறிக்கை செய்தது.
போர்ட் ஆர்தர் படுகொலையைப் பற்றிய செய்தி வெளிவந்த பிறகு, தொலைக்காட்சி நிலையங்கள் உடனடியாக அவற்றின் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிநிரல்களை மாற்றிக்கொண்டன. அதன் பிறகு, பனெலபி லேலண்ட் என்ற பத்திரிகையாளர், “வன்முறை மற்றும் கெடுதியின் பேரில் டிவி-ன் மாய்மாலம்” என்ற தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஒரு விதத்தில், அந்த வன்முறைக் காட்சிகளை காட்டாதிருந்தது ஒரு-நிமிட மௌன அனுசரிப்புபோன்று இருந்தது. நாளைக்கே, அடுத்த வாரமே, அடுத்த மாதமே, பழைய குருடி கதவத் திறடி என்ற கதையாகிவிடும்.”
எனினும், இன்று ஏன் வன்முறை இவ்வளவு பரவலாக இருக்கிறதென்பதை இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள நாம் பைபிளுக்கு கவனத்தைத் திருப்ப வேண்டும். ‘கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில் மனுஷர்கள் . . . இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்’ இருப்பார்கள் என வெகு காலத்திற்கு முன்பே அது முன்னறிவித்தது. (2 தீமோத்தேயு 3:1-5) இவ்வாறு, இன்று வன்முறை அதிகரித்திருப்பதானது நாம் கடைசி நாட்களில் வாழ்ந்துவருகிறோம் என்பதற்கும் இந்த ஒழுங்குமுறையின் அழிவு சமீபத்திலிருக்கிறது என்பதற்கும்தான் கூடுதலான அத்தாட்சியை அளிக்கிறது.—மத்தேயு 24:3-14.
அநேகம்பேர் சந்தேகிக்கிற விதமாக, இந்தக் காட்டுமிராண்டித்தனமான கொடூர நடத்தை பெருவாரியாக பரவியிருப்பதில் பொல்லாத ஆவி ஆட்களான பிசாசுகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. (எபேசியர் 6:12) சாத்தானும் அவனது பேய்களும் பரலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை விளக்கிய பிறகு, பைபிள் இவ்வாறு சொல்கிறது: “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்.” (வெளிப்படுத்துதல் 12:7-9, 12) இப்போது நாம் அந்த ஆபத்தான காலத்தில் வாழ்ந்துவருகிறோம்; மனிதர்களை இன்னுமதிகமாக வன்முறையில் ஈடுபடவைக்க தங்களால் முடிந்ததையெல்லாம் சாத்தானும் அவனது பேய்களும் செய்துவருகிறார்கள்.
ஆனாலும், சீக்கிரத்தில் சாத்தானும் அவனது பேய்களும் அவனது பொல்லாத உலகமும் அழிந்துபோகும், கடவுளுடைய அரசாங்கம் நீதியான புதிய உலகத்தை கொண்டுவரும். (தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10; 2 பேதுரு 3:13; 1 யோவான் 2:17; வெளிப்படுத்துதல் 21:3, 4) ஜெனி இவ்வாறு குறிப்பிட்டார்: “இப்போதைக்கு நாங்கள் ‘அழுகிறவர்களோடு அழுகிறோம்,’ ஆனால் இந்தச் சோக சம்பவத்தால் அதிக அதிர்ச்சியடைந்திருக்கும் இவ்விடத்து மக்களோடு புதிய உலகைப் பற்றிய நம்பிக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டுமென்பது எங்கள் ஆசை.”—ரோமர் 12:15.
[பக்கம் 17-ன் படம்]
படுகொலை ஆரம்பமான ப்ராட் ஆர்ரோ ரெஸ்டரண்ட்
[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]
Mountain Msps ©Copright © 1995 Digital Wisdom, Inc.