இளைஞர் கேட்கின்றனர் . . .
என் ஆருயிர் நண்பர் ஏன் பிரிந்துசென்றார்?
‘உன்னைப் பார்த்தால் உன் ஆருயிர் நண்பரைப் பிரிந்துவிட்டதுபோல் தெரிகிறது.’ எவராவது கொஞ்சம் வருத்தமாகவோ அல்லது மனச்சோர்வாகவோ தெரிந்தால் மக்கள் ஆங்கில மொழியில் இவ்வாறு சொல்வர். ஆனால் நீங்கள் உண்மையிலேயே உங்கள் ஆருயிர் நண்பரைப் பிரிந்து இருக்கையில், இந்தக் கூற்று மொத்தத்தில் அதிக முக்கியத்துவமுடையதாய் இருக்கிறது.
அதாவது, உண்மையான நட்பு விசேஷித்த ஒன்றாயும் விலைமதிப்பு வாய்ந்த ஒன்றாயும் இருக்கிறது. பைபிள் இவ்வாறு கூறுகிறது: “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.” (நீதிமொழிகள் 17:17) நல்ல நண்பர்கள் நமக்கு நட்பையும் ஆதரவையும் அளிக்கின்றனர். நாம் உணர்ச்சிப்பூர்வமாகவும் ஆவிக்குரிய வகையிலும் வளர அவர்கள் நமக்கு உதவுகின்றனர். தற்செயலான நண்பர்களோ, பழக்கப்பட்டவர்களோ அதிகம் பேர் இருக்கலாம். ஆனாலும் நீங்கள் உண்மையிலேயே நம்பி, இரகசியமாய் விஷயங்களைச் சொல்ல முடிந்தவர்கள் பொதுவாய் அரிதாகவே உள்ளனர்.
ஆகவே உங்கள் ஆருயிர் நண்பர் பிரிந்து சென்றிருந்தால், நீங்கள் நிலைகுலைந்தவர்களாய் உணருவது புரிந்துகொள்ளத் தக்கதே. பிரையன் என்ற பெயருடைய ஓர் இளைஞன் தன்னுடைய ஆருயிர் நண்பன் பிரிந்துசென்றபோது தான் எவ்வாறு உணர்ந்தான் என்பதை நினைவுபடுத்திப் பார்த்தான். “எனக்குப் பயமாய் இருந்தது, தனிமையாய் உணர்ந்தேன், மனமுடைந்து போனேன்,” என்று அவன் சொன்னான். ஒருவேளை நீங்களும் அதே விதமாக உணரலாம்.
நிஜத்தை எதிர்ப்படுதல்
உங்கள் நண்பர் ஏன் பிரிந்துசென்றார் என்பதற்கான காரணங்களின்மீது உங்கள் கவனத்தைச் செலுத்துவது உதவலாம். நிச்சயமாகவே, உங்கள் நட்புக்குப் போற்றுதல் தெரிவிக்காததனால் அவ்வாறு பிரிந்துசெல்லவில்லை. பிரிந்துசெல்வது நவீன வாழ்க்கையின் ஒரு முக்கிய பாகமாகிவிட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய மாகாணங்களில் மட்டும், 3.6 கோடி பேருக்கும் மேற்பட்டவர்கள் பிரிந்துசெல்கின்றனர்! சராசரி அமெரிக்கர் ஒருவர் தன் வாழ்நாளில் 12 தடவைகள் இடம்விட்டு இடம் செல்வார் என்று யூ.எஸ். பீரோ ஆஃப் சென்சஸ் கூறுகிறது.
இவ்வாறு இடம் விட்டு இடம் செல்வதெல்லாம் ஏன் நடைபெறுகிறது? காரணங்கள் வேறுபடுகின்றன. மேம்பட்ட வேலைகளையும் வீட்டு வசதிகளையும் பெறுவதற்காக பல குடும்பங்கள் இடம் விட்டு இடம் செல்கின்றன. வளரும் நாடுகளில், போரும் வறுமையும் கோடிக்கணக்கான குடும்பங்களை இடம் விட்டு இடம் செல்லும்படி வற்புறுத்தியிருக்கின்றன. மேலும் இளைஞர்கள் பெரியவர்களாய் ஆகும்போது, பலர் சுதந்திர வாழ்க்கையைத் தாங்களாகவே நடத்துவதற்காக இடம் விட்டு இடம் செல்வதைத் தெரிவுசெய்கின்றனர். சிலர் திருமணம் செய்துகொள்வதற்காகப் பிரிந்துசெல்கின்றனர். (ஆதியாகமம் 2:24) இன்னும் பிறர் ஆவிக்குரிய அக்கறைகளை நாடி இடம் விட்டு இடம் செல்லலாம். (மத்தேயு 19:29) யெகோவாவின் சாட்சிகளுக்கு மத்தியில், பலர் தங்களுக்குப் பழக்கமான சுற்றுப்புறங்களை விட்டுவிட்டு, கிறிஸ்தவ ஊழியர்களுக்கான அதிக தேவை எப்பகுதிகளில் இருக்கிறதோ—ஒருவேளை அயல்நாடுகளிலும்கூட—அப்பகுதிகளில் ஊழியம் செய்வதற்காகச் செல்கின்றனர். யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகளைக் கண்காணிப்பதற்கான வசதிகள் இருக்குமிடம் பெத்தேல் என்று அழைக்கப்படுகிறது. சிலர் அங்கு சேவை செய்வதற்காக தங்கள் சொந்த நாட்டினுள்ளேயே இடம் மாறிச் செல்கின்றனர். ஆம், நம் நண்பர்களை நாம் நேசித்தாலும், காலம் செல்லச்செல்ல, அவர்கள் இடம் மாறிச் செல்வதற்கான சாத்தியம் இருப்பதை வாழ்வின் ஓர் உண்மையாக நாம் நோக்க வேண்டும்.
உங்கள் நண்பர் இடம் மாறிச் செல்வதற்கு காரணம் என்னவாய் இருந்தாலும், எப்படித்தான் அந்த இழப்பிலிருந்து மீளப்போகிறீர்களோ என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் சிறிது காலத்திற்கு கொஞ்சம் தனிமையாகவும் மனச்சோர்வாகவும் நீங்கள் உணருவது இயல்பாய் இருந்தாலும், மகிழ்ச்சியில்லாமல் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்துகொண்டு இருப்பது காரியத்தைக் கொஞ்சமும் முன்னேற்றுவிக்கப்போவதில்லை என்று நீங்கள் ஒருவேளை உணருவீர்கள். (நீதிமொழிகள் 18:1) ஆகவே உதவக்கூடிய சில காரியங்களைப் பற்றி நாம் காண்போம்.
தொடர்பை விட்டுவிடாதிருத்தல்
“உங்கள் நட்பு முடிவுக்கு வந்துவிடவில்லை என்பதை உணருங்கள்” என்று இளம் பிரையன் ஆலோசனை கூறினார். ஆம், உங்கள் ஆருயிர் நண்பர் உங்களை விட்டுப் பிரிந்துசென்றது நிச்சயமாகவே உங்கள் உறவை மாற்றும். ஆனால் உங்கள் நட்பு முடிவுக்கு வந்துவிடவேண்டும் என்பதை அது குறிப்பதில்லை. பருவ வயதினருக்கான ஆலோசகர் டாக்டர் ரோஸ்மேரி ஒயிட் இவ்வாறு கூறினார்: “வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் இழப்பு ஏற்படுவது மிகவும் சிரமமானதே. ஆனால் நீங்கள் அதைக் கையாள வேண்டிய விதமானது, அதை வெறும் ஒரு மாற்றமாகவே நினைக்க வேண்டும், ஒரு முடிவாக நினைக்கக்கூடாது.”
நட்பைத் தொடர்ந்து வைத்திருப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? தாவீது மற்றும் யோனத்தானைப் பற்றிய பைபிள் பதிவை எண்ணிப்பாருங்கள். ஒரு கணிசமான வயது வித்தியாசம் இருந்தபோதிலும், அவர்கள் மிக நெருங்கிய நண்பர்களாய் இருந்தார்கள். தாவீது தலைமறைவாய் இருக்கும்படி ஓடிச்செல்லுமாறு சூழ்நிலைகள் வற்புறுத்தியபோது, அவர்கள் ஒரு வார்த்தையும் சொல்லிக்கொள்ளாமல் பிரிந்துசெல்லவில்லை. அதற்கு முரணாக, தங்களது அழிவில்லாத நட்பை உறுதிப்படுத்திக் கொண்டனர். நண்பர்களாக நிலைத்திருப்பதற்காக ஓர் உடன்படிக்கையை அல்லது ஒப்பந்தத்தையும் செய்துகொண்டனர்.—1 சாமுவேல் 20:42.
அதே விதமாக, அவனோ அல்லது அவளோ பிரிந்துசெல்கையில் நீங்கள் உங்கள் நண்பரிடம் பேசலாம். நீங்கள் அந்த நட்பை எவ்வளவாய் மதிப்பிடுகிறீர்கள் என்றும் தொடர்ந்து பேச்சுத்தொடர்பு கொள்வதை நீங்கள் எவ்வளவாய் விரும்புகிறீர்கள் என்றும் உங்கள் நண்பர் தெரிந்திருக்கட்டும். பேட்டீயும் மலினாவும் ஆருயிர்த்தோழிகள். அவர்கள் இப்பொழுது தரை, கடல் தாண்டி, 8,000 கிலோமீட்டர் தூரத்தில் பிரிந்திருப்பவர்கள். அவர்களும் அதையே செய்தனர். “நாங்கள் தொடர்பை விட்டுவிடாதிருக்க திட்டமிடுகிறோம்,” என்று பேட்டீ விவரித்தாள். என்றபோதிலும், நீங்கள் திட்டவட்டமாக சில ஏற்பாடுகளைச் செய்யாவிட்டால் அப்படிப்பட்ட திட்டங்கள் சீராக முன்னேற்றமடையாமல் இருக்கலாம்.—ஆமோஸ் 3:3-ஐ ஒப்பிடுக.
அப்போஸ்தலனாகிய யோவான் தன் நண்பன் காயுவைப் பார்க்க முடியாதவனாய் இருந்தபோது, ‘மையினாலும் இறகினாலும் எழுதுவதன்’ மூலம் தொடர்பை வைத்துக்கொண்டார். (3 யோவான் 13) ஒருவருக்கொருவர் ஒரு கடிதத்தையோ, கார்டையோ ஒருவேளை வாரத்தில் ஒருமுறை அல்லது மாதத்துக்கு ஒருமுறை ஒழுங்காக அனுப்புவதற்கு நீங்களும் ஒத்துக்கொள்ளலாம். தொலைதூர போன் கட்டணத்திற்கு உங்கள் பெற்றோர் ஆட்சேபம் தெரிவிக்காவிட்டால், அவ்வப்பொழுது நீங்கள் ஒருவரையொருவர் போனில் அழைத்து, உங்கள் வாழ்வில் நடந்துகொண்டிருக்கும் அப்போதைய விவகாரங்களைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது கேஸட்டிலோ வீடியோ டேப்பிலோ பதிவுசெய்யப்பட்டுள்ள செய்திகளை ஒருவருக்கொருவர் அனுப்பிக்கொள்ள ஒத்துக்கொள்ளலாம். எதிர்காலத்தில், வார இறுதி நாட்களையோ அல்லது விடுப்பு நாட்களையோ ஒன்றாகக் கழிப்பதற்கும் திட்டமிடலாம். இவ்வாறு அந்த நட்பு தொடர்ந்து வளம்பெறலாம்.
வெற்றிடத்தை நிரப்புதல்
அப்படியிருந்தாலும், ஓர் ஆருயிர் நண்பர் பிரிவது உங்கள் வாழ்வில் ஒரு வெற்றிடத்தை விட்டுச் செல்லும். இதன் விளைவாக, உங்களுக்கு அதிக நேரம் இருப்பதை நீங்கள் காணலாம். அது சரிதான், ஆனால் அந்த நேரம் அப்படியே வீணாகிவிடும்படி செய்யாதீர்கள். (எபேசியர் 5:16) பலனுள்ள ஏதாவதொன்றைச் செய்யும்படி அதைப் பயன்படுத்துங்கள்—ஒருவேளை ஓர் இசைக் கருவியை மீட்ட நீங்கள் கற்றுக்கொள்ளலாம், ஒரு புதிய மொழியில் புலமை பெறலாம், அல்லது ஒரு விருப்பவேலையை நாடலாம். தேவையில் இருப்பவர்களுக்கு எடுபிடி வேலை செய்வது நேரத்தைப் பலன்தரும் வகையில் பயன்படுத்த உதவும் மற்றொரு முறையாகும். நீங்கள் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருந்தால், பிரசங்க நடவடிக்கையில் உங்கள் பங்கை நீங்கள் அதிகரிக்கலாம். (மத்தேயு 24:14) அல்லது ஆர்வத்தைத் தூண்டும் ஒரு பைபிள் படிப்பு திட்டத்தை நீங்கள் தொடங்கலாம்.
மேலும், ‘விரிவாக்கும்படி’—அதாவது, நண்பர்கள் அடங்கிய தங்கள் வட்டத்தில் மற்றவர்களையும் உட்படுத்தும்படி கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் புத்திமதி கூறினார். (2 கொரிந்தியர் 6:13) ஒருவேளை வெறுமனே ஒரு நண்பனோடு மட்டும் அதிகளவு நேரத்தை நீங்கள் செலவிட்டிருப்பதால் சாத்தியமாய் இருந்திருக்கும் மற்ற நட்புகளைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம். யெகோவாவின் சாட்சிகளுக்கு மத்தியிலுள்ள இளைஞர், அடிக்கடி தங்களுடைய உள்ளூர் சபைகளிலேயே நட்புகளை ஆரம்பிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதைக் கண்டிருக்கின்றனர். ஆகவே சபைக் கூட்டங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே செல்வதற்கும் முடிந்தபிறகு கொஞ்ச நேரம் இருந்துவிட்டுத் திரும்புவதற்கும் முயலுங்கள். இது, ஆட்களைப் பற்றித் தெரிந்துகொள்ள அதிக நேரத்தை உங்களுக்கு அளிக்கும். கிறிஸ்தவ மாநாடுகளும் சிறிய விருந்துக் கூட்டங்களும் புதிய நண்பர்களை ஏற்படுத்திக்கொள்வதற்கு மற்ற சந்தர்ப்பங்களை அளிக்கின்றன.
என்றாலும், பின்வரும் எச்சரிக்கை பொருத்தமானது: உங்களைப் போன்ற ஆவிக்குரிய இலக்குகளையும் மதிப்புகளையும் வைத்திராத இளைஞர்களுடன் நீங்கள் மிகவும் நெருங்கிப் பழக ஆரம்பிக்கும் அளவுக்கு அவசரமாகப் புதிய நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். அப்படிப்பட்டவர்கள் உங்கள்மீது தீங்கு விளைவிக்கும் செல்வாக்கு செலுத்தி, உங்களுக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக தீமை செய்ய முடியும். (நீதிமொழிகள் 13:20; 1 கொரிந்தியர் 15:33) நல்ல நடத்தைக்குப் பெயர்பெற்றவர்களாய் இருக்கும் ஆவிக்குரிய எண்ணமுடைய இளைஞரோடு மட்டுமே கூட்டுறவு கொள்ளுங்கள்.
அப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் கண்டுபிடிக்கும்போது, எதையாவது சேர்ந்து செய்யும்படி திட்டமிடுவதன் மூலம் அந்த நட்பை வளருங்கள். ஒருவேளை உணவைச் சேர்ந்து உண்ணுங்கள். ஓர் அருங்காட்சியகத்தைப் பார்வையிடுங்கள். உல்லாசமாய்க் கொஞ்ச தூரம் சேர்ந்து நடந்துசெல்லுங்கள். கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியுடன் ஜனங்களைச் சந்திக்கும் கிறிஸ்தவ ஊழியத்தில் சேர்ந்து ஒரு நாளைச் செலவிட ஏற்பாடு செய்யுங்கள். நாட்கள் செல்லச்செல்ல, மற்றும் முயற்சி எடுக்க எடுக்க, அந்தப் புதிய நட்பு வளரலாம். கிறிஸ்தவ அன்பு விரிவாகும் தன்மையுள்ளதால்—மற்றவர்களை உட்படுத்த ‘விரிவடைவதால்’—நீங்கள் புதிய நண்பர்களை ஏற்படுத்தும்போது, உங்களைப் பிரிந்துசென்ற நண்பருக்கு உண்மை தவறியவராய் இருப்பதாக நீங்கள் உணரத் தேவையில்லை.
உங்களை மிகவும் நேசிக்கும் உங்கள் பெற்றோருடன் நெருங்கிவர சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளவும் செய்யலாம். அவர்களுடைய கூட்டுறவை நாடுவதைப் பற்றி முதலில் தர்மசங்கடமாய் நீங்கள் உணர்ந்தாலும், அவர்கள் ஒரு பெரிய உதவியாய் இருக்கலாம். ஜாஷ் என்ற பெயருடைய ஓர் இளைஞன் இவ்வாறு சொன்னார்: “என் அம்மாவோடும் அப்பாவோடும் அப்போதைக்கு நான் நெருக்கமாய் இல்லாததால் கிட்டத்தட்ட என்னை நானே வற்புறுத்தி அவர்களுடன் நேரத்தைச் செலவிட வேண்டியிருந்தது. ஆனால் இப்போது அவர்கள் என்னுடைய மிக நெருங்கிய நண்பர்கள்!”
ஆனாலும், பரலோகத்தில் ஒரு நண்பர் உங்களுக்கு இருக்கவே இருக்கிறார் என்பதையும் நினைவில் வையுங்கள். 13 வயது டாண் சொன்னதுபோல, “நீங்கள் உண்மையில் தனிமையாய் இல்லை, ஏனெனில் யெகோவா உங்களுக்கென்று இருக்கவே இருக்கிறார்.” நம் பரலோகத் தகப்பன் ஜெபத்தின் மூலமாக நட்புகொள்ள எப்பொழுதும் நமக்கிருக்கிறார். நீங்கள் அவரில் நம்பிக்கை வைத்தால் இந்தச் சிரமமான சூழ்நிலையை சமாளிக்க உங்களுக்கு அவர் உதவுவார்.—சங்கீதம் 55:22.
ஒரு நம்பிக்கையான நோக்குநிலையை வைத்திருங்கள்
ஞானியாகிய சாலொமோன் ராஜா பின்வரும் இந்த ஆலோசனையை அளித்தார்: “இந்நாட்களைப்பார்க்கிலும் முன் நாட்கள் நலமாயிருந்தது என்று சொல்லாதே” (பிரசங்கி 7:10) வேறு வார்த்தைகளில் சொன்னால், கடந்தகால காரியங்களைப் பற்றியே நினைத்துக்கொண்டிராதேயுங்கள்; நிகழ்காலம் அளிக்கும் எல்லா சந்தர்ப்பங்களுடனும் அதை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். பில், இப்போது தன் ஆரம்ப 20-களில் இருக்கிறார். அவர் தன் ஆருயிர் நண்பனைப் பிரிந்த போது அதைத்தான் செய்தார். அவர் மனதில் வருகிறது: “கொஞ்சம் நாள் கழித்து புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன். கடந்தகாலத்தைப் பற்றியே நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கவில்லை. எதிர்காலத்துக்காக தயாரிக்கவும் நிகழ்காலத்தில் வாழவும் முயன்றேன்.”
இந்த ஆலோசனைகள் உதவலாம், ஆனாலும் உங்களுடைய ஆருயிர் நண்பர் பிரிந்துசெல்லும்போது அது துக்கமானதே. நீங்கள் சேர்ந்து செலவிட்டிருந்த நல்ல சந்தர்ப்பங்களைப் பற்றிய நினைவுகள் இனிமேலும் உங்களுக்கு வேதனையை ஏற்படுத்தாமலிருப்பதற்கு கொஞ்சம் காலம் எடுக்கலாம். இதை மட்டும் ஞாபகத்தில் வைத்திருங்கள், மாற்றம் என்பது வாழ்வின் ஒரு பாகம் என்பதையும் அது நீங்கள் முதிர்ச்சியடையவும் வளரவும் ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கிறது. ஒரு விசேஷித்த நண்பரை முற்றிலும் மாற்றீடு செய்வது சாத்தியமான காரியமாய்த் தோன்றாதபோதிலும், உங்களை ‘யெகோவாவுக்கும் மனுஷருக்கும் பிரியமானவராய்’ ஆக்கும் பண்புகளை நீங்கள் வளர்க்கலாம். (1 சாமுவேல் 2:26) நீங்கள் அவ்வாறு செய்யும்பொழுது, உங்கள் நண்பர் என்று அழைத்துக்கொள்ள எப்பொழுதுமே எவராவது ஒருவர் இருப்பார்!
[பக்கம் 15-ன் படம்]
உங்கள் ஆருயிர் நண்பர் உங்களைப் பிரிந்துசெல்வது ஒரு சங்கடமான அனுபவம்