உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 12/22 பக். 8-12
  • கடனில்லாமல் இருக்க வழி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடனில்லாமல் இருக்க வழி
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பட்ஜெட்டுக்குக் கறுப்புகொடி காட்டாதீர்
  • தயாரிக்க ஆரம்பிக்கலாம்
  • மாதாந்தர செலவை பட்டியலிடுக
  • இது அவசியமா?
  • கடனைக் குறைக்கவும்
  • நீங்கள் வெற்றி பெற முடியுமா?
  • 2 | வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடுங்கள்
    விழித்தெழு!-2022
  • என்னுடைய பணத்தை நான் எப்படி நிர்வகிக்கலாம்?
    விழித்தெழு!—1990
  • பணத்தை சிக்கனமாக செலவு செய்வது எப்படி?
    விழித்தெழு!—2006
  • குறைந்த வருமானத்தில் குடும்பத்தை ஓட்டுவது எப்படி?
    வேறுசில தலைப்புகள்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 12/22 பக். 8-12

கடனில்லாமல் இருக்க வழி

மாறிவரும் இந்நாட்களில், குடும்ப வரவு செலவை சமாளிப்பது என்பது ஒரு சவாலாகவே ஆகிவிட்டது. இந்தச் சவாலை எவ்வாறு உங்களால் வெற்றிகரமாக எதிர்ப்பட முடியும்?

அதிக வருமானம்தான் இதற்கான தீர்வு என்பதில்லை. ஆனால், பணம் எங்கிருந்து வருகிறது, எப்படி செலவாகிறது என்று அறிந்திருப்பதிலும், தகவல் அறிந்து தீர்மானங்களை எடுக்க தயாராக இருப்பதிலும்தான் இதற்கான தீர்வு அடங்கியுள்ளது என்பதாக பொருளாதார வல்லுநர்கள் சொல்கிறார்கள். இதைச் செய்ய உங்களுக்குத் தேவை ஒரு பட்ஜெட்.

பட்ஜெட்டுக்குக் கறுப்புகொடி காட்டாதீர்

ஆனால், பட்ஜெட்டுகள் என்றதும், “எல்லாவிதமான வறண்ட காட்சிகளையே கண்முன் நிறுத்துகின்றன,” என்பதாக நிதி ஆலோசகர் கிரேஸ் வின்ஸ்டைன் சொல்கிறார். அதனால்தான் பலர் பட்ஜெட் போடுவது கிடையாது. ஒரு பட்ஜெட்டின் தேவையை சிலர் குறைந்த வருமானத்துடனும், படிப்பறிவு இல்லாததுடனும் இணைத்து விடுகிறார்கள். ஆனால், அதிக வருமானமுள்ள தொழில் வல்லுநர்களுக்கும் பணப் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு நிதி ஆலோசகர் இவ்வாறு கூறுகிறார்: “என்னுடைய முதல் கிளையண்ட்டின் வருட சம்பளம் $1,87,000 . . . அவர்களுடைய கிரெடிட் கார்டின் கடன் பாக்கி மாத்திரம் $95,000-க்கு சற்று குறைய இருந்தது.”

முந்தைய கட்டுரையில் குறிப்பிட்ட மைக்கேல், நிதி ஆலோசனை நாட தயங்கியதற்கு வேறொரு காரணம் இருந்தது. அவர் ஒத்துக்கொள்கிறார்: “மற்றவர்கள் என்னை கபடமற்றவன் என்றும் முட்டாள் என்றும் நினைப்பார்கள் என்று நான் பயந்தேன்.” ஆனால் அது அர்த்தமற்ற பயம். பணம் சம்பாதிக்கும் திறமை வேறு, அதனை சமாளிக்கும் திறமை வேறு, மக்களில் அநேகர் பணத்தை சமாளிப்பதில் பயிற்சி பெறவில்லை. ஒரு சமூக சேவகி சுட்டிக்காட்டுகிறார்: “மேல்நிலைப் பள்ளியை முடித்து நாம் வெளிவரும்போது, இரு-சமபக்க முக்கோணங்களைப் பற்றி நமக்கு அதிகம் தெரிகிறதே ஒழிய பணத்தை எவ்வாறு சேமிக்கவேண்டும் என்று தெரிவதில்லை.”

இருந்தாலும், பட்ஜெட் தயாரிக்க கற்றுக்கொள்வது ஓரளவுக்குச் சுலபமே. இதில் உட்பட்டிருப்பது என்னவென்றால், வரவுகளின் ஒரு பட்டியலும், செலவுகளின் ஒரு பட்டியலும் தயாரித்து, அதற்குப்பின் செலவுகளை வருமானத்திற்குள் அடக்க வேண்டும். பட்ஜெட்டை தயாரிப்பது உண்மையில் ஜாலியாக இருக்கும், அதன்படி வாழ்வது இன்னும் திருப்தியாக இருக்கும்.

தயாரிக்க ஆரம்பிக்கலாம்

முதலில் வருமானத்தை பட்டியலிடுவதன் மூலம் ஆரம்பிக்கலாம். நம்மில் அநேகருக்குச் இதைச் செய்வது மிகவும் சுலபம், ஏனென்றால் இதில் சம்பளம், சேமிப்பு கணக்கிலிருந்து வட்டி என இதுபோன்ற ஒருசில ஐயிட்டங்களே உள்ளன.

ஆனால், ஓவர் டைம் சம்பளம், போனஸ், அல்லது பரிசுகள் போன்ற நிச்சயமற்ற வருமானத்தை கணக்கில் சேர்க்க வேண்டாம். நிச்சயமற்ற மூலங்களிலிருந்து வரும் வருமானத்தின் மீது திட்டம் தீட்டினால் அது கடனுக்குத்தான் உங்களை வழிநடத்தும் என்று நிதி ஆலோசகர்கள் எச்சரிக்கிறார்கள். ஒருவேளை அத்தகைய வருமானங்கள் கைக்கு வந்தால், அதை கொண்டு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் எதிர்பாராத மகிழ்ச்சியில் ஆழ்த்தவோ, தேவையில் உள்ளவர்களுக்கு உதவவோ, அல்லது தகுதியான காரணத்திற்கு நன்கொடை அளிக்கவோ நீங்கள் தெரிவு செய்யலாம்.

ஆனால், செலவுகளின் பட்டியலை தயாரிப்பது கொஞ்சம் ஆட்டம் காட்டுவதாய் இருக்கும். முந்தைய கட்டுரைகளில் குறிப்பிட்ட ராபர்ட்டுக்கும் ராண்டாவுக்கும் அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் அப்படி எங்கேதான் போனதென்றே புரியவில்லை. பிரச்சினைக்கு எப்படி அவர்கள் முடிவுகட்டினார்கள் என்பதை ராபர்ட் விளக்குகிறார்: “நாங்கள் இரண்டுபேரும் ஒருமாதத்திற்கு எங்குப்போனாலும், எங்களுடன் ஒரு பேப்பரை கூடவே கொண்டுபோய், செலவழித்த ஒவ்வொரு நயாபைசாவையும் எழுதி வைத்தோம். ஒரு கப் காபி குடிக்க செலவழித்தாலும்கூட எழுதி வைத்தோம். ஒவ்வொரு நாள் கடைசியிலும் செலவழித்த தொகையை நான் வாங்கி வைத்திருந்த பட்ஜெட் புத்தகத்தில் எழுதி வைத்தோம்.”

“புதிராக இருக்கும் பணம்” எதுவும் நம் கை நழுவி எங்கே போகிறது என்பதைக் கண்டுபிடிக்க, எல்லா செலவையும் கவனமாக பதிவு செய்வது உங்களுக்கு உதவும். இருப்பினும், உங்களது செலவழிக்கும் பழக்கம் தெரியவந்தவுடன், ஒவ்வொரு நாளும் எந்தெந்த பொருட்களில் செலவு செய்கிறோம் என்ற விவரமான பதிவு தேவையில்லை என நீங்கள் முடிவுசெய்து, பிறகு மாதாந்தர செலவு பட்டியலை தயாரிக்க ஆரம்பிக்கலாம்.

மாதாந்தர செலவை பட்டியலிடுக

மேலே காட்டப்பட்டுள்ள அட்டவணை மாதிரி ஒன்றை தயாரிக்க நீங்கள் விரும்பலாம். “ஆன செலவு” என்ற பகுதியில், ஒவ்வொரு பொருளுக்கும் நீங்கள் தற்போது செலவு செய்யும் தொகையை எழுதுங்கள். “உணவு” “வீடு” “உடை” போன்ற முக்கிய தலைப்புகளை உபயோகிக்கவும், அதேசமயம் அவற்றின் எண்ணிக்கையைக் குறைத்துவிடுங்கள். ஆனால், முக்கிய உபதலைப்புகளை விட்டுவிட வேண்டாம். ராபர்ட்டுக்கும் ராண்டாவுக்கும் வெளியே சாப்பிட்டதால் பணத்தின் பெரும் பகுதி செலவானது, ஆகவே “மளிகை” என்ற முக்கிய தலைப்பிலிருந்து “வெளியே சாப்பிடுவது” என்று உபதலைப்பை பிரித்தது பயன்தந்தது. மற்றவர்களுக்கு விருந்து கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்றால், இதுவும் “உணவு” என்ற தலைப்பின்கீழ் ஒரு உபதலைப்பாக இருக்கும். இதன் உள்நோக்கம் என்னவென்றால், உங்களுடைய தனித்தன்மையையும், தெரிவுகளையும் அந்த அட்டவணை பிரதிபலிக்க வேண்டும்.

உங்களுடைய அட்டவணையைத் தயாரிக்கும்போது, காலாண்டு, அரையாண்டு, வருடாந்தர செலவுகளான இன்சூரன்ஸ், வரிகள் போன்ற காலாகாலத்திற்கு வரும் மற்றவற்றையும் மறந்திட வேண்டாம். அவற்றை மாதாந்தர அட்டவணையில் நீங்கள் சேர்க்க வேண்டுமென்றால், அந்தத் தொகையை அதற்குரிய மாதங்களால் வகுக்க வேண்டும்.

செலவுகளில் சேர்க்க வேண்டிய ஒரு முக்கிய ஐயிட்டம் “சேமிப்புகள்.” சேமிப்பை ஒரு செலவாக பலர் கருதாத போதிலும், உங்களது மாத வருமானத்திலிருந்து அவசர தேவைகளுக்கும் அல்லது விசேஷ குறிக்கோள்களுக்கும் ஒரு பகுதியை ஞானமாக ஒதுக்கிவிடுங்கள். உங்களது செலவு பட்டியலில் சேமிப்பை சேர்ப்பது ஏன் முக்கியம் என்பதை கிரேஸ் வின்ஸ்டையின் வலியுறுத்துகிறார்: “வரி பிடித்தம்போக கிடைக்கும் வருமானத்திலிருந்து குறைந்தது 5 சதவிகிதத்தை (அதாவது குறைந்தபட்ச அசல்) உங்களால் சேமிக்க முடியவில்லை என்றால், கறாரான நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கவேண்டியிருக்கும். கிரெடிட் கார்டு உபயோகிப்பதை நிறுத்திவிடுங்கள், வாழ்க்கை பாணியை மாற்றியமையுங்கள், உங்களுடைய அத்தியாவசிய தேவைகள் என்ன என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.” ஆம், உங்களுடைய மாத பட்ஜெட்டில் சேமிப்பை சேர்க்க மறந்திட வேண்டாம்.

வேலை இல்லாமல் இருக்க நேரும் காலத்தில் ஏற்படக்கூடிய முக்கிய பணப் பிரச்சினையைச் சமாளிக்க, குறைந்தது ஆறுமாத சேமிப்பையாவது உடனே கிடைக்கும்படி வழிவகை செய்ய நீங்கள் முயற்சிக்க வேண்டும் என்று இப்பொழுதெல்லாம் பொதுவாகவே சிபாரிசு செய்யப்படுகிறது. நிதி ஆலோசகர் ஒருவர் கூறுகிறார்: “உங்களது வருமானம் உயர்ந்தால், அதில் பாதியைச் சேர்த்து வையுங்கள்.” உங்களால் சேமிக்க முடியாது என்று நினைக்கிறீர்களா?

லட்சுமி பாயின் உதாரணத்தைப் பாருங்கள், இந்திய கிராமங்களில் வாழும் பல ஏழைகளைப்போல் அவரும் ஒருவர். அவர் தனது குடும்பத்திற்கு சமைக்கும் அரிசியிலிருந்து ஒரு பிடி எடுத்து அதை ஒரு பானையில் போட்டு வந்தார். அவ்வப்போது அந்த அரிசியை விற்று, விற்ற பணத்தை வங்கியில் சேமித்து வந்தார். இதுவே வங்கியிலிருந்து கடனைப் பெற்று, அவர் மகனுக்கு ஒரு சைக்கிள் கடை வைக்க உதவுவதில் ஒரு படியாக அமைந்தது. அத்தகைய சிறிய சேமிப்பும் பலரது வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது என்று இந்தியா டுடே அறிவிக்கிறது. இது, சிலரது பொருளாதார கனவுகளை நிஜமாக்கியுள்ளது.

ஆனால், பட்ஜெட்டை சமநிலைப்படுத்துவதில், வரவு செலவு பட்டியலை தயாரிப்பதைக் காட்டிலும் அதிகம் உள்ளது. இது உங்களது வருமானத்திற்குள்தான் செலவு அடங்க வேண்டும் என்பதை உட்படுத்துகிறது. அப்படியென்றால் உங்களது செலவுகளைக் குறைக்க வேண்டியிருக்கும்.

இது அவசியமா?

9-ஆம் பக்கத்திலுள்ள அட்டவணையில் “அவசியமா?” என்ற தலைப்பை கவனிக்கவும். விசேஷமாக, உங்களது வருமானத்தைக் காட்டிலும் “பட்ஜெட் தொகை” அதிகமாக இருப்பதை நீங்கள் காணும்போது, இந்தப் பகுதியைச் சிந்திப்பது மிகவும் முக்கியம். இருந்தாலும், ஒரு பொருள் அவசியமா இல்லையா என தீர்மானிப்பதும், எவ்வளவு பணத்தை அதற்கு ஒதுக்குவதும் என்பதும் ஒரு சவாலாக இருக்கலாம். விசேஷமாக இது இவ்வாறு இருக்க காரணம், மாறிக்கொண்டே இருக்கும் இக் காலத்தில், வந்துகொண்டே இருக்கும் புதிய பொருட்களை அத்தியாவசியமானவை என்று விளம்பரம் செய்வதால் நாம் நாலா பக்கங்களிலிருந்தும் தாக்கப்படுகிறோம். கண்டிப்பாக தேவை, அநேகமாக தேவை அல்லது ஆடம்பரத்திற்கு இருந்தால் நல்லது என்று ஒவ்வொரு பொருளுக்கும் செலவை பிரிப்பது உதவியாக இருக்கும்.

நீங்கள் நன்கு சிந்தித்து மதிப்பிட்டு பட்டியலிட்ட ஒவ்வொரு செலவையும் கவனியுங்கள், கண்டிப்பாக ஒரு பொருள் தேவை என்றால், “அவசியமா?” என்ற பகுதியின் கீழ் ஆம் என்பதைக் குறிப்பிட “ஆ” என்று குறிக்கவும்; தேவையா இல்லையா என தெரியாமல் இருந்தால் “?” (கேள்விக்குறி) இடவும்; ஒருவேளை அந்தப் பொருள் ஆடம்பரத்திற்கு இருந்தால் நல்லது என்றால் “ந” என்று குறிக்கவும். “பட்ஜெட் தொகை” பகுதியின் கீழ் பட்டியலிடப்படும் மொத்த தொகை உங்களது மாத வருமானத்தைக் காட்டிலும் அதிகம் இருக்கக்கூடாது என்பது நினைவிருக்கட்டும்!

தெரிந்தவிதமாகவே, “?” என்றும் “ந” என்றும் குறியிடப்பட்ட ஐயிட்டங்களைத்தான் முதலில் நீக்க தொடங்கவேண்டும். ஒருவேளை இந்தச் செலவுகளை முற்றிலுமாக நீக்கிவிட அவசியம் இருக்காது. ஒரு பொருளினால் வரும் நன்மைக்காக செலவிடும் செலவு தகுந்ததா என்று ஒவ்வொரு பொருளையும் ஆராய்ந்து பார்க்கவும், தேவை இல்லாதவற்றை நீக்க வேண்டும் என்பதே இதன் உள்நோக்கம். ராபர்ட்டும் ராண்டாவும் வெளியே சாப்பிடுவதில் ஒவ்வொரு மாதமும் $500 செலவிட்டதை அவர்களுடைய பட்டியலில் கண்டார்கள். இரண்டு பேருக்கும் சமைக்க தெரியாததால், இந்தப் பழக்கத்தில் விழுந்தார்கள். ஆனால், கற்றுக்கொள்ள ராண்டா சில படிகளை எடுத்தார், அவர் சொல்வதாவது: “இப்போதெல்லாம், சமையல் செய்வது ரொம்ப ஜாலியாக இருக்கிறது. பெரும்பாலும் வீட்டிலேயே சாப்பிடுகிறோம்.” ராபர்ட் இதையும் சேர்த்து சொன்னார்: “இப்பொழுதெல்லாம், விசேஷ நிகழ்ச்சிகளின்போது அல்லது என்றைக்காவது தேவை இருக்கும்போது மாத்திரம் வெளியே சாப்பிடுகிறோம்.”

உங்களது சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்படும்போது, எது அவசியம் என்பதை முற்றிலுமாக மறு-மதிப்பீடு செய்வதை உட்படுத்தலாம். முந்தைய கட்டுரையில் குறிப்பிட்ட ஆன்டனியின் சம்பளம் கிடுகிடுவென்று குறைந்தது. வருடத்திற்கு $48,000 இருந்த சம்பளம் $20,000-க்குக் குறைந்தது, அதே நிலை இரண்டு வருடங்களுக்கு நீடித்தது. உங்களுக்கு இவ்வாறு நேர்ந்தால், பிழைப்பு பட்ஜெட் என்னும் ஒன்றை நீங்கள் தயாரித்து, அதிகமாக செலவாகும் எல்லாவற்றையும் நீக்கிவிட வேண்டும்.

அதையே ஆன்டனி செய்தார். அவர் உணவுக்கு, உடைக்கு, பயணத்திற்கு, பொழுதுபோக்கிற்கு செலவிடும் பணத்தில் பெரும் பகுதியைக் குறைத்ததன் மூலம், எப்படியோ அதிக கஷ்டத்தோடு தன் வீட்டு கடன் தவணைகளை செலுத்தினார். a “எங்களது உண்மையான தேவைகள் என்ன, விருப்பங்கள் என்ன என்பதை குடும்பமாக ஒன்றுசேர்ந்து நாங்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது. அந்த அனுபவத்திலிருந்து நாங்கள் பயனடைந்தோம். கொஞ்சம் இருந்தாலும் திருப்தியோடு இருப்பது எப்படி என்று இப்போது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.”

கடனைக் குறைக்கவும்

கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்படாத கடன், உங்களுடைய வருமானத்திற்குள் வாழவேண்டும் என்ற உங்களது முயற்சிகளை முறியடித்துவிடும். வீடு போன்ற ஒரு சொத்தின் மதிப்பு ஏறிக்கொண்டே போவதால், அதனை வாங்க, நீண்ட கால கடனை வாங்குவது ஒருவேளை லாபகரமாக இருக்கலாம், ஆனால் கிரெடிட் கார்டில் கடன் பெற்று அன்றாடக சாப்பாட்டிற்காக செலவிடுதல் பேராபத்தாக முடியலாம். ஆகவே “கிரெடிட் கார்டு கட்டணத்திற்காக ஒரு நயாபைசாக்கூட செலவிட வேண்டாம்” என்று நியூஸ்வீக் சொல்கிறது.

உங்களுடைய சேமிப்பிலிருந்து கொடுக்கவேண்டியிருந்தாலும்கூட பரவாயில்லை, கிரெடிட் கார்டின் கடனை அடைத்துவிடும்படி நிதி ஆலோசகர்கள் ஊக்குவிக்கிறார்கள். குறைந்த வட்டி விகித சேமிப்பை வைத்துகொண்டு, உயர் வட்டி விகித கடனை சுமந்து திரிவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. இதை உணர்ந்தவர்களாய் மைக்கேலும், ரீனாவும் தங்களுடைய சேமிப்பு பத்திரங்களையெல்லாம் பணமாக மாற்றி, அவர்களுடைய கிரெடிட் கார்டு கடனையெல்லாம் அடைத்தார்கள், மறுபடியும் அந்த நிலைமையில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று தீர்மானம் எடுத்தனர்.

அத்தகைய சேமிப்புகளை வைத்திராத ராபர்ட்டும், ராண்டாவும், பிழைப்பு பட்ஜெட்டை தெரிவு செய்தார்கள். ராபர்ட் சொல்கிறார்: “ஒரு வெள்ளை பலகையில் கிராஃப் கட்டங்களைப் போட்டு, எப்படி ஒவ்வொரு மாதமும் கடன் குறைந்துவரும் என்பதைக் காட்டும் கோட்டை வரைந்தேன்; அதை ஒவ்வொரு நாள் காலையிலும் பார்க்கவேண்டும் என்பதற்காக அந்தப் பலகையை எங்களுடைய பெட்ரூமில் மாட்டி வைத்தேன். இது ஒவ்வொரு நாளும் ஊக்கத்தை தந்தது.” அந்த வருட கடைசியில், $6,000 கிரெடிட் கார்டு கடனை அடைத்து முடித்தபோது அவர்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டார்கள்!

சில நாடுகளில் சொத்து வாங்க கடன் வசதி பெறுதல் ஒருகாலத்தில் நல்ல முதலீடாக இருந்ததுகூட இப்போது அவ்வாறு இல்லை. ஒரு வீட்டை வாங்கி, அதன் ரெநோக்கத்தோடு வட்டியைச்சேர்த்து தரும்போது நீங்கள் அதிக விலையைக் கொடுக்கிறீர்கள். கடன் வசதி பெறுவதில் அடங்கியிருக்கும் செலவை எவ்வாறு குறைக்கலாம்? “பாங்கு கேட்கும் தொகையைவிட அதிகமான தொகையை முதல் தவணையாக கட்டிவிடுங்கள் அல்லது குறைந்த விலையில் வீட்டை வாங்குங்கள். ஒருவேளை உங்களுக்கு ஏற்கெனவே சொந்த வீடு இருந்தால், பெரிய வீட்டை அல்லது வசதியான வீட்டை வாங்கவேண்டும் என்ற ஆசையை விட்டுவிடுங்கள்” என்று நியூஸ்வீக் சிபாரிசு செய்கிறது.

வண்டிக்காகக் கடன் வாங்கும்போது, முதல் தவணையில் அதிக பணத்தை செலுத்துவதன் மூலம் விலையை அதிகளவில் குறைக்கலாம். ஆனால், இதற்காக நீங்கள் உங்களது குடும்ப பட்ஜெட்டில் தனியே எடுத்து வைப்பதன் மூலம் முன்கூட்டியே சேமிக்க வேண்டும். பழைய வண்டியை வாங்கினால் என்ன? b அதன் ரொக்க விலை குறைவாக இருப்பதால் செலவும் குறைவு. கடன் வாங்காமலேயே ஒரு வண்டியை உங்களால் வாங்க முடியும்.

நீங்கள் வெற்றி பெற முடியுமா?

உங்களது பட்ஜெட் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறது என்பதைப் பொருத்தே நீங்கள் வெற்றி காண்பது பெருமளவில் சார்ந்துள்ளது. பட்ஜெட் போட்டு, வெற்றிகரமாக வாழ்க்கை நடத்தும் ஒரு தம்பதி கூறுகிறார்கள்: “வீட்டு செலவுக்காக ரொம்ப கொஞ்சம் பணத்தை மாத்திரம் ஒதுக்கிவைத்து, மாதம் முழுவதையும் ஓட்டமுடியாமல் போனால் உங்களது பட்ஜெட் அநேகமாக வெற்றி பெறாது.”

பட்ஜெட் செயல்பட தேவையான மற்றொரு முக்கிய காரணி, குடும்ப அங்கத்தினர் இடையே நல்ல பேச்சு தொடர்பு. பட்ஜெட்டால் பாதிக்கப்பட்டவர்களை கேலிசெய்யாமல், அவர்களுடைய கருத்துக்களையும் உணர்வுகளையும் தாராளமாகச் சொல்ல வாய்ப்பு தரவேண்டும். இதில் உட்பட்டிருக்கும் குடும்ப அங்கத்தினர்கள் தங்களுடைய தேவைகளையும் விருப்பங்களையும் மற்றவர்களுடைய தேவைகளையும் விருப்பங்களையும் நன்கு புரிந்துகொண்டு, குடும்ப பொருளாதார நிலைமை உண்மையில் எப்படியிருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டால், அவர்களிடமிருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைப்பதற்கும், குடும்ப பட்ஜெட் வெற்றி பெறுவதற்கும் சிறந்த வாய்ப்பு இருக்கிறது.

இந்தக் கொடியகாலங்களில், உலகின் காட்சி மாறிக்கொண்டே போவதால், குடும்ப வரவு செலவில் அதிகரிப்பு இருக்கத்தான் செய்யும். (2 தீமோத்தேயு 3:1; 1 கொரிந்தியர் 7:31, NW) இந்நாளைய வாழ்க்கை சவால்களைச் சமாளிக்க நடைமுறையான ஞானத்தை நாம் உபயோகிக்க வேண்டும். (நீதிமொழிகள் 2:7) அதை உபயோகிக்க உங்களுக்கு உதவுவது பட்ஜெட் ஒன்றே.

[அடிக்குறிப்புகள்]

a அன்றாட செலவை குறைப்பதற்கான ஆலோசனைகளுக்கு ஆங்கில விழித்தெழு! ஏப்ரல் 22, 1985, பக்கங்கள் 26-27, ஏப்ரல் 8, 1984, பக்கம் 27-ஐப் பார்க்கவும்.

b விழித்தெழு! ஏப்ரல் 8, 1996, பக்கங்கள் 16-19-ஐப் பார்க்கவும்.

[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]

ஒரு பொருளினால் வரும் நன்மைக்காக செலவிடும் செலவு தகுந்ததா என்று ஒவ்வொரு பொருளையும் ஆராய்க

[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]

கிரெடிட் கார்டு திணிக்கும் வட்டிகளுக்கு ஜாக்கிரதை!

[பக்கம் 9-ன் அட்டவணை]

மாத செலவு மற்றும் மதிப்பீடு அட்டை மாதம்

செலவுகள் ஆன பட்ஜெட்

செலவு அவசியமா? தொகை

உணவு: மளிகை

வெளியே சாப்பிடுவது

விருந்து கொடுப்பது

வீடு:

வீட்டு கடன் அல்லது வாடகை

பராமரிப்பு சாதனங்கள்

உடை

பயணம்

பரிசுகள்

•

•

•

சேமிப்புகள்

வரிகள்

இன்சூரன்ஸ்

இதர செலவுகள்

மொத்தம் (வருமானத்துடன் ஒப்பிடவும்)

மாத வருமானம்

சம்பளங்கள்

வாடகைக்கு விடப்பட்டிருக்கும் சொத்து (ஏதாவது இருந்தால்)

சேமிப்பு வட்டிகள்

மொத்தம் (செலவுடன் ஒப்பிடவும்)

[பக்கம் 10-ன் படம்]

பட்ஜெட்டை செயல்படுத்த குடும்பத்தில் நல்ல பேச்சுத்தொடர்பு அவசியம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்