ஆமோஸ்—அத்திப்பழங்களைப் பொறுக்குபவரா அல்லது குத்திவிடுபவரா?
அது பொ.ச.மு. ஒன்பதாம் நூற்றாண்டு. கன்றுக்குட்டியை வணங்கும் ஆசாரியனான பொல்லாத அமத்சியா, தீர்க்கதரிசியான ஆமோஸை இஸ்ரவேலில் தீர்க்கதரிசனம் சொல்லக்கூடாது எனக் கட்டளையிட்டிருந்தான். ஆமோஸ் மறுத்து இவ்வாறு சொன்னார்: “நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப் பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன் [குத்திவிடுகிறவனுமாயிருந்தேன், NW]. ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் கர்த்தர் அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று கர்த்தர் உரைத்தார்.” (ஆமோஸ் 7:14, 15) ஆம், யெகோவாதான் ஆமோஸை ஒரு தீர்க்கதரிசியாக அனுப்பினார்; அவராகவே தன்னை ஒரு தீர்க்கதரிசியாக ஆக்கிக்கொள்ளவில்லை. ஆனால் தான் காட்டத்திப் பழங்களைக் “குத்திவிடுகிறவனுமாயிருந்தேன்” என்று சொன்னபோது ஆமோஸ் எதை அர்த்தப்படுத்தினார்?
எபிரெயுவிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த வார்த்தை புதிய உலக மொழிபெயர்ப்பில் இந்த வசனத்தில் மட்டும்தான் வருகிறது. மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகள் இந்த வார்த்தையைக் காட்டத்திப் பழங்களைப் “பொறுக்குகிறவன்,” “காட்டு அத்திமரத் தோட்டக்காரன்,” “அத்திமரத் தோப்பு பார்க்கிறவன்,” “காட்டு அத்திமரங்களைக் கண்காணிப்பவன்” என்று மொழிபெயர்த்திருக்கின்றன. என்றாலும், பொருளாதார தாவரவியல் என்ற ஆங்கிலப் பத்திரிகை அந்த வார்த்தைக்கான சரியான மொழிபெயர்ப்பு “குத்திவிடுகிறவன்” என்று சொல்கிறது. ஏனென்றால், அது காட்டத்தி மரங்களை வளர்ப்பவர்களின் ஒரு விஷேச வேலை என்று சொல்கிறது.
குத்திவிடுகிற பழக்கம் அதாவது காட்டத்திப் பழங்களைக் கீறிவிடும் பழக்கம், மிகப் பழமையான காலங்களில் எகிப்திலும் சைப்ரஸிலும் நன்கு அறியப்பட்ட ஒன்று. நவீன நாளைய இஸ்ரவேலில் மற்ற வகையான அத்திமரங்கள் வளருவதால் அங்கே குத்திவிடும் பழக்கம் இப்போது புழக்கத்தில் இல்லை. என்றாலும், ஆமோஸ் காலத்தில் இஸ்ரவேல் நாட்டு மக்கள் அத்திப் பழத்தைக் குத்திவிட்டார்கள். ஏனென்றால் அக்காலத்தில் இஸ்ரவேலில் இருந்த காட்டத்தி மரங்கள் எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வகைகளைச் சேர்ந்தவை.
தெளிவாகவே, இப்படிக் கீறிவிடுகிற அத்திக்காய்கள் தண்ணீரை உறிஞ்சி நன்றாய்ச் சாறு பிடிக்கின்றன. மேலும், பழமாவதைத் துரிதப்படுத்தும் எத்திலீன் வாயுவை இது அதிகமாக உற்பத்தி செய்கிறது. அதனால் பெரிய இனிப்பான பழங்கள் கிடைக்கின்றன. கூடுதலாக, அவை விரைவாக பழமாகிவிடுவதால் ஒட்டுண்ணிக் குளவிகள் அவற்றைப் பாழாக்குவதில்லை.
மேய்ப்பராக, அத்திப்பழங்களைக் குத்திவிடுபவராக இருந்த ஆமோஸ் ஒரு தாழ்வான பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எதிரிகளின் மிரட்டல்களுக்குப் பயந்துவிடவில்லை. மாறாக, இஸ்ரவேலுக்கு எதிரான யெகோவாவின் நியாயத்தீர்ப்புச் செய்தியை தைரியமாக அறிவித்தார். மக்கள் விரும்பாத இதுபோன்ற செய்தியைச் சொல்லிவரும் இன்றைய கடவுளுடைய ஊழியர்களுக்கு என்னவோர் அருமையான முன்மாதிரி!—மத்தேயு 5:11, 12; 10:22.