தேவதூதர்கள்—மனிதருக்கு எவ்விதத்தில் உதவுகிறார்கள்
“இவைகளுக்குப் பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; . . . அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! . . . என்று விளம்பினான்.”—வெளிப்படுத்துதல் 18:1-3.
1, 2. தம் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக தூதர்களை யெகோவா பயன்படுத்துகிறார் என்பதை எது காட்டுகிறது?
முதிர்வயதான அப்போஸ்தலன் யோவான் பத்மு தீவில் கைதியாக இருக்கையில், அவருக்கு தீர்க்கதரிசன காட்சிகள் அளிக்கப்படுகின்றன. அவர் ‘கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளாகி’ பிரமிப்பூட்டும் காரியங்களைப் பார்க்கிறார். அந்த நாள், 1914-ல் இயேசு கிறிஸ்து ராஜாவாக முடிசூட்டப்படுவதில் ஆரம்பித்து, அவருடைய ஆயிர வருட ஆட்சியின் முடிவு வரை நீடிக்கிறது.—வெளிப்படுத்துதல் 1:10.
2 யெகோவா தேவன் இதை யோவானுக்கு நேரடியாக வெளிப்படுத்தவில்லை. அதற்காக ஒரு வழிமூலத்தைப் பயன்படுத்தினார். வெளிப்படுத்துதல் 1:1 இவ்வாறு குறிப்பிடுகிறது: “சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.” ‘கர்த்தருடைய நாள்’பற்றிய அருமையான காரியங்களை இயேசுவின் மூலமாக ஒரு தூதனைப் பயன்படுத்தி யோவானுக்கு யெகோவா தெரியப்படுத்தினார். ஒரு சந்தர்ப்பத்தில், “வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவருவதையும்” யோவான் கண்டார். இந்தத் தூதனுடைய நியமிப்பு என்னவாய் இருந்தது? “அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! . . . என்று விளம்பினான்.” (வெளிப்படுத்துதல் 18:1-3) வல்லமைமிக்க இந்தத் தூதன் பொய் மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனின் வீழ்ச்சியைப்பற்றி அறிவிக்கும் அரிய வாய்ப்பைப் பெற்றிருந்தார். ஆகவே, தம் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக தூதர்களை யெகோவா முக்கியமான விதத்தில் பயன்படுத்துகிறார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. கடவுளுடைய நோக்கத்தில் தூதர்கள் வகிக்கும் பங்கைப்பற்றியும் அவர்களால் நாம் பெறும் உதவியைப் பற்றியும் இக்கட்டுரையில் விவரமாக ஆராயப் போகிறோம். அதற்குமுன், இந்த ஆவி சிருஷ்டிகள் எப்படித் தோன்றினார்கள் என்பதைச் சிந்திக்கலாம்.
தேவதூதர்கள் எப்படித் தோன்றினார்கள்?
3. தேவதூதர்களைப்பற்றி அநேகர் மத்தியில் என்ன தவறான கருத்து நிலவுகிறது?
3 தேவதூதர்கள் இருப்பதை இன்று லட்சக்கணக்கானோர் நம்புகிறார்கள். ஆனால் தேவதூதர்களைப்பற்றியும் அவர்கள் எப்படித் தோன்றினார்கள் என்பதைப்பற்றியும் அநேகர் மத்தியில் தவறான கருத்துகள் நிலவுகின்றன. உதாரணமாக, அன்பான ஒருவர் மரிக்கையில் அவர் கடவுளிடம் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார், அங்கே ஒரு தேவதூதனாக ஆகிவிடுகிறார் என சில மதத்தவர் நினைக்கிறார்கள். தேவதூதர்கள் படைக்கப்பட்டதையும் அவர்கள் இருப்பதையும் அவர்கள் படைக்கப்பட்டதற்கான நோக்கத்தையும்பற்றி பைபிள் இதைத்தான் கற்பிக்கிறதா?
4. தேவதூதர்கள் எப்படித் தோன்றினார்கள் என்பதாக பைபிள் சொல்கிறது?
4 மிகாவேல் என்ற பிரதான தூதனே மிகுந்த வல்லமையும் அதிகாரமும் பெற்ற தலைமை தூதன். (யூதா 9) அந்தத் தூதன் இயேசு கிறிஸ்துவே. (1 தெசலோனிக்கேயர் 4:16) யுகா யுகங்களுக்கு முன், படைப்பெனும் செயலை யெகோவா ஆரம்பித்தபோது, அவருடைய முதல் படைப்பாக இருந்தவர் இந்தத் தூதனே. (வெளிப்படுத்துதல் 3:14) பிற்பாடு, இந்த முதற்பேறான குமாரன் மூலமாக மற்ற ஆவி சிருஷ்டிகளை யெகோவா படைத்தார். (கொலோசெயர் 1:15-17) இந்தத் தேவதூதர்களைத் தம் குமாரர்களாகக் குறிப்பிட்டு, கோத்திரப்பிதாவாகிய யோபுவிடம் யெகோவா இவ்வாறு கேட்டார்: “நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. . . . அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.” (யோபு 38:4, 6, 7) அப்படியானால், தேவதூதர்கள் கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்பதும் மனிதர் படைக்கப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே அவர்கள் இருக்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது.
5. தேவதூதர்கள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள்?
5 “தேவன் கலகத்திற்கு [அதாவது, ஒழுங்கின்மையின்] தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்” என்று 1 கொரிந்தியர் 14:33 குறிப்பிடுகிறது. அதன்படி, யெகோவா தம் ஆவிக் குமாரர்களை மூன்று முக்கியப் பிரிவுகளாக ஒழுங்கமைத்திருக்கிறார்: (1) சேராபீன்கள், கடவுளுடைய சிங்காசனத்திற்கு அருகே ஊழியர்களாகச் சேவை செய்கிறார்கள், அவருடைய மகிமையை அறிவிக்கிறார்கள், அவருடைய மக்களை ஆன்மீக ரீதியில் சுத்தமாக வைக்கிறார்கள்; (2) கேருபீன்கள், யெகோவாவின் உன்னத அரசதிகாரத்திற்கு ஆதரவு காட்டுகிறார்கள்; (3) மற்ற தூதர்களோ அவருடைய சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள். (சங்கீதம் 103:20; ஏசாயா 6:1-3; எசேக்கியேல் 10:3-5; தானியேல் 7:10) இந்த ஆவி சிருஷ்டிகள் மனிதருக்கு உதவும் சில வழிகள் யாவை?—வெளிப்படுத்துதல் 5:11.
தேவதூதர்கள் வகிக்கும் பங்கு
6. ஏதேன் தோட்டத்தில் கேருபீன்களை யெகோவா எவ்வாறு பயன்படுத்தினார்?
6 ஆவி சிருஷ்டிகளைப்பற்றி நேரடியாக முதல் முறை பைபிளில் குறிப்பிடப்பட்டிருப்பது ஆதியாகமம் 3:24-ல் ஆகும். அங்கே நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.” ஆதாமும் ஏவாளும் முதலில் குடியிருந்த தோட்டத்திற்கு திரும்பவும் போகாதபடி இந்த கேருபீன்கள் தடுத்தார்கள். இது மனித சரித்திரத்தின் ஆரம்பத்தில் நடந்த விஷயம். அப்போது முதற்கொண்டு தேவதூதர்கள் என்ன பங்கை வகித்து வந்திருக்கிறார்கள்?
7. மூல மொழிகளில், “தேவதூதன்” என்பதற்கான வார்த்தைகளின் அர்த்தத்திற்கேற்ப, தேவதூதர்கள் செய்கிற ஒரு பணி என்ன?
7 தேவதூதர்களைப்பற்றி மூல மொழி பைபிளில் சுமார் 400 தடவை குறிப்பிடப்பட்டுள்ளது. ‘தேவதூதன்’ என்பதற்கான எபிரெயு மற்றும் கிரேக்கு வார்த்தைகளை “தூதுவன்” என்று மொழிபெயர்க்கலாம். இவ்வாறு, கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே செய்திகளைப் பரிமாறும் பணியை தேவதூதர்கள் செய்துவந்திருக்கிறார்கள். இக்கட்டுரையின் முதல் இரண்டு பாராக்களில் நாம் பார்த்தபடி, அப்போஸ்தலன் யோவானுக்குச் செய்தியை அறிவிக்க ஒரு தூதனை யெகோவா பயன்படுத்தினார்.
8, 9. (அ) மனோவாவையும் அவருடைய மனைவியையும் தேவதூதன் சந்தித்துப் பேசியது அவர்களுக்கு எதை அளித்தது? (ஆ) கடவுளுடைய தூதனிடம் மனோவா பேசியதிலிருந்து பெற்றோர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
8 பூமியிலுள்ள கடவுளுடைய ஊழியர்களுக்கு உதவி செய்யவும் அவர்களை ஊக்கப்படுத்தவும் தேவதூதர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். உதாரணமாக, இஸ்ரவேலில் நியாயாதிபதிகளின் காலத்தில் மனோவாவும் மலடியாய் இருந்த அவரது மனைவியும் குழந்தைக்காக மிகவும் ஏங்கினார்கள். ஒரு மகன் பிறப்பான் என்ற செய்தியை மனோவாவின் மனைவியிடம் அறிவிக்க யெகோவா தம் தூதனை அனுப்பினார். அதைப்பற்றி பதிவு இவ்வாறு சொல்கிறது: “இதோ, . . . நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான்.”—நியாயாதிபதிகள் 13:1-5.
9 அதன்படியே, மனோவாவின் மனைவிக்கு சிம்சோன் என்ற ஒரு மகன் பிறந்தான்; பைபிள் சரித்திரத்தில் அவன் பிரசித்திபெற்றவனானான். (நியாயாதிபதிகள் 13:24) அந்தக் குழந்தை பிறப்பதற்கு முன்பே, அவனை எப்படி வளர்க்க வேண்டுமென்பதைக் குறித்து அந்தத் தேவதூதன் திரும்பவும் வந்து தங்களுக்குச் சொல்லித்தரும்படி மனோவா வேண்டினார். மனோவா இவ்வாறு கேட்டார்: “அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும்”? யெகோவாவின் தூதன் மனோவாவுடைய மனைவியிடம் சொன்னதை மீண்டும் அவரிடம் சொன்னார். (நியாயாதிபதிகள் 13:6-14) அது மனோவாவுக்கு எவ்வளவாய் ஊக்கம் அளித்திருக்கும்! அன்றுபோல் இன்று தனி நபர்களை தேவதூதர்கள் சந்தித்துப் பேசுவதில்லை; ஆனாலும், பிள்ளைகளைப் பயிற்றுவிக்கையில் பெற்றோர்கள் மனோவாவைப்போல் யெகோவாவின் அறிவுரைகளை நாடலாம்.—எபேசியர் 6:4.
10, 11. (அ) தாக்கவந்த சீரிய படையைக் கண்டபோது எலிசாவும் அவருடைய ஊழியக்காரனும் எப்படிப் பிரதிபலித்தார்கள்? (ஆ) இந்தச் சம்பவத்தைச் சிந்திப்பதால் நாம் எப்படி நன்மை அடையலாம்?
10 தேவதூதர்கள் தரும் உதவிக்கு குறிப்பிடத்தக்க உதாரணத்தை எலிசா தீர்க்கதரிசியின் காலத்தில் காண முடியும். இஸ்ரவேலில் உள்ள தோத்தான் நகரில் எலிசா தங்கியிருந்தார். ஒருநாள் எலிசாவின் ஊழியக்காரன் அதிகாலையில் எழுந்து வெளியே பார்த்தபோது, நகரம் குதிரைகளாலும் போர் ரதங்களாலும் சூழப்பட்டிருந்ததைக் கண்டார். எலிசாவைப் பிடிப்பதற்காக சீரியாவின் ராஜா பலத்த ராணுவத்தை அனுப்பியிருந்தார். எலிசாவின் ஊழியக்காரன் அதைக் கண்டபோது எப்படிப் பிரதிபலித்தார்? பதறிப்போன அவர், “ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம்” என்றார். தப்பிக்க வழியே இல்லை என்பதுபோல் அவர் நினைத்தார். அதற்கு எலிசா, “பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்” என்று பதிலளித்தார். அவர் ஏன் அப்படிச் சொன்னார்?—2 இராஜாக்கள் 6:11-16.
11 தனக்கு உதவ திரளான தேவதூதர்கள் தயார்நிலையில் இருந்ததை எலிசா உணர்ந்தார். அவருடைய ஊழியக்காரனுக்கோ அப்படி எதுவும் தெரியவில்லை. ஆகவே, “எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.” (2 இராஜாக்கள் 6:17) அப்போது திரளான தேவதூதர்கள் இருப்பதை அந்த ஊழியக்காரனால் பார்க்க முடிந்தது. யெகோவாவும் கிறிஸ்துவும் கொடுக்கிற அறிவுரைப்படி தேவதூதர்கள் எல்லாரும் யெகோவாவின் மக்களுக்கு உதவியும் பாதுகாப்பும் அளிப்பதை நாமும்கூட ஆன்மீக புரிந்துகொள்ளுதலுடன் உணர்ந்துகொள்ள முடியும்.
கிறிஸ்துவின் காலத்தில் தேவதூதர்களின் உதவி
12. காபிரியேல் தூதனிடமிருந்து மரியாள் எத்தகைய உதவியைப் பெற்றார்?
12 யூத கன்னியாகிய மரியாளிடம், “நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக” என்ற செய்தி தெரிவிக்கப்பட்டபோது அவர் பெற்ற உதவியைச் சிந்தித்துப் பாருங்கள். கடவுளால் அனுப்பப்பட்ட காபிரியேல் தூதன் அதிர்ச்சி தரும் இச்செய்தியைத் தெரிவிப்பதற்குமுன் அவரிடம் இவ்வாறு சொன்னார்: “மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய்.” (லூக்கா 1:26, 27, 30, 31) தேவனுடைய கிருபை தனக்கு உண்டு என்று சொன்னதைக் கேட்டு மரியாள் எவ்வளவாய் ஊக்கமும் பலமும் பெற்றிருப்பார்!
13. இயேசுவுக்கு தேவதூதர்கள் எப்படி உதவினார்கள்?
13 தேவதூதர்கள் தரும் உதவிக்கு மற்றொரு எடுத்துக்காட்டு, வனாந்தரத்தில் இயேசுவை சாத்தான் மூன்று முறை சோதித்த பின் நடந்த சம்பவமாகும். அந்தச் சோதனைகளின் முடிவில் என்ன நடந்ததென்பதைப் பதிவு இவ்வாறு சொல்கிறது: “பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.” (மத்தேயு 4:1-11) இயேசு மரிப்பதற்கு முந்தின இரவு இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. துக்கம் தாளாமல் இயேசு முழங்கால்படியிட்டு, “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.” (லூக்கா 22:42, 43) ஆனால், இன்று தேவதூதர்கள் நமக்கு எவ்வகையில் உதவி புரிகிறார்கள்?
நவீன காலத்தில் தேவதூதர்களின் உதவி
14. யெகோவாவின் சாட்சிகள் நவீன காலத்தில் எத்தகைய துன்புறுத்தலைச் சகிக்க வேண்டியிருந்திருக்கிறது, அதன் விளைவு என்னவாக இருந்திருக்கிறது?
14 யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலையின் நவீன கால சரித்திரத்தைப் புரட்டிப் பார்க்கையில், தேவதூதர்களின் உதவிக்கு அத்தாட்சியை நாம் காண்கிறோம், அல்லவா? உதாரணமாக, ஜெர்மனி மற்றும் மேற்கு ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின்போதும் அதற்கு முன்பும் (1939-45) நாசி ஆட்சியின் தாக்குதலை யெகோவாவின் சாட்சிகள் சகிக்க முடிந்திருக்கிறது. இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் கத்தோலிக்கரின் பாசிஸ ஆட்சியில் அவர்கள் நீண்ட காலம் துன்புறுத்தலை அனுபவிக்க வேண்டியிருந்தது. முன்னாள் சோவியத் யூனியனிலும், அதன் ஆதிக்கத்திலிருந்த நாடுகளிலும் அவர்கள் பல பத்தாண்டுகள் துன்புறுத்தலைச் சகித்திருக்கிறார்கள். சில ஆப்பிரிக்க நாடுகளிலும்கூட யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தலைச் சகித்திருக்கிறார்கள்.a சமீப வருடங்களில் ஜார்ஜியாவில் யெகோவாவின் ஊழியர்கள் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்கு முடிவுகட்ட சாத்தான் தன்னாலான அனைத்தையும் செய்திருக்கிறான். இருந்தாலும், அவர்கள் ஓர் அமைப்பாக அத்தகைய எதிர்ப்பைச் சமாளித்து வெற்றிபெற்றிருக்கிறார்கள். தேவதூதர்கள் அளித்த பாதுகாப்பு இதற்கு ஓரளவு காரணமாய் இருந்திருக்கிறது.—சங்கீதம் 34:7; தானியேல் 3:28; 6:22.
15, 16. யெகோவாவின் சாட்சிகள் உலகெங்கும் ஊழியம் செய்கையில் தேவதூதர்களிடமிருந்து எத்தகைய உதவியைப் பெறுகிறார்கள்?
15 கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை உலகெங்கும் பிரசங்கிக்கவும், ஆர்வமுள்ளோருக்கு பைபிள் சத்தியத்தைக் கற்பித்து சீஷராக்கவும் வேண்டுமென்ற கட்டளையை யெகோவாவின் சாட்சிகள் முக்கியமானதாய்க் கருதுகிறார்கள். (மத்தேயு 28:19, 20) என்றாலும், தேவதூதர்களின் துணையின்றி இந்த வேலையைச் செய்ய முடியாது என்பதை அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். ஆகவே, வெளிப்படுத்துதல் 14:6, 7 வசனங்கள் அவர்களுக்கு எப்போதுமே உற்சாகத்தை அளித்திருக்கின்றன. அந்த வசனங்களை நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள் என்று கூறினான்.”
16 தேவதூதர்களின் துணையோடும் வழிநடத்துதலோடும் இந்த மாபெரும் வேலையை உலகமுழுவதிலும் யெகோவாவின் சாட்சிகள் செய்துவருகிறார்கள் என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. நல்மனமுள்ளோரை தம்முடைய சாட்சிகளிடம் வழிநடத்துவதற்கு யெகோவா தம் தூதர்களைப் பயன்படுத்துகிறார். தகுதிவாய்ந்தவர்களிடம் யெகோவாவின் சாட்சிகளை தேவதூதர்கள் வழிநடத்தியும் இருக்கிறார்கள். அதனால்தான் அநேக சந்தர்ப்பங்களில், நெருக்கடியான சூழ்நிலையில் ஆன்மீக உதவிக்காக ஒருவர் ஏங்கிக்கொண்டிருக்கிற அந்தச் சமயம் பார்த்து ஒரு யெகோவாவின் சாட்சி அவரைச் சந்திக்க முடிந்திருக்கிறது; இவ்வாறு அநேக சந்தர்ப்பங்களில் நடந்திருப்பதால் இவை எதேச்சையாக நடந்தவையெனச் சொல்ல முடியாது.
வெகு விரைவில் தேவதூதர்களின் குறிப்பிடத்தக்க பங்கு
17. ஒரேயொரு தேவதூதன் தாக்கியபோது அசீரியர்களுக்கு என்ன ஆனது?
17 தேவதூதர்கள் யெகோவாவின் வணக்கத்தாருக்குச் செய்தியை அறிவிப்பவர்களாகவும் பலப்படுத்துபவர்களாகவும் மட்டுமல்ல, மற்றொரு செயலிலும் ஈடுபடுகிறார்கள். கடந்த காலங்களில், கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவதில் அவர்கள் பங்கு வகித்திருக்கிறார்கள். உதாரணமாக, பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் அசீரிய வீரர்களின் பெரும் சேனை எருசலேமை அச்சுறுத்தியது. யெகோவா என்ன செய்தார்? அவர் சொன்னார்: “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன்.” அப்போது என்ன நடந்தது என்பதைப்பற்றி பைபிள் இவ்வாறு கூறுகிறது: “அன்று இராத்திரியில் சம்பவித்தது என்னவென்றால்: கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள் எல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்.” (2 இராஜாக்கள் 19:34, 35) ஒரேயொரு தேவதூதனுடைய பலத்தோடு ஒப்பிட அற்ப மனிதரின் படைகள் ஒன்றுமே இல்லை!
18, 19. தேவதூதர்கள் வெகு விரைவில் என்ன குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பார்கள், அது மனிதகுலத்தை எப்படிப் பாதிக்கும்?
18 வெகு விரைவில், கடவுளுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதில் தேவதூதர்கள் ஈடுபடுவார்கள். இயேசு வெகு சீக்கிரத்தில் “தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும்” வருவார். ‘தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்துவதே’ அவர்களுடைய நோக்கம். (2 தெசலோனிக்கேயர் 1:7, 8) மனிதகுலத்திற்கு இது எப்பேர்ப்பட்ட பாதிப்பாய் இருக்கும்! கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி இப்போது உலகெங்கும் அறிவிக்கப்பட்டு வருகிற செய்தியை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அழிக்கப்படுவார்கள். யெகோவாவையும், நீதியையும், மனத்தாழ்மையையும் தேடுபவர்கள் மட்டுமே, ‘கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவார்கள்,’ அவர்கள் அழிக்கப்பட மாட்டார்கள்.—செப்பனியா 2:3.
19 பூமியிலுள்ள தம் வணக்கத்தாருக்கு உதவியளித்து அவர்களைப் பலப்படுத்த வலிமைமிக்க தம் தூதர்களை யெகோவா பயன்படுத்துவதற்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம். கடவுளுடைய நோக்கத்தில் தூதர்கள் வகிக்கும் பாகத்தை நாம் புரிந்திருப்பது உண்மையிலேயே ஆறுதல் அளிக்கிறது. ஏனெனில், யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்து, சாத்தானைத் தலைவனாக ஏற்றுக்கொண்ட தூதர்களும் இருக்கிறார்கள். பிசாசாகிய சாத்தான் மற்றும் அவனுடைய பேய்களின் வலிமைமிக்க செல்வாக்கிலிருந்து உண்மைக் கிறிஸ்தவர்கள் தங்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதைப்பற்றி அடுத்த கட்டுரையில் ஆராயலாம்.
[அடிக்குறிப்பு]
a இந்தக் கடும் துன்புறுத்தலைப்பற்றி விவரமாக அறிய, ஆங்கிலத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 1983 (அங்கோலா), 1982 (இத்தாலி), 2002 (உக்ரைன்), 1992 (எத்தியோப்பியா), 1972 (செக்கோஸ்லோவாகியா), 2000 (செக் குடியரசு), 1983 (போர்ச்சுகல்), 1994 (போலந்து), 1999 (மலாவி), 1996 (மொசம்பிக்), 1974 மற்றும் 1999 (ஜெர்மனி), 1978 (ஸ்பெயின்); தமிழில் யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 2004 (மால்டோவா), 2006 (ஜாம்பியா) ஆகியவற்றைக் காண்க.
என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• தேவதூதர்கள் எப்படித் தோன்றினார்கள்?
• பைபிள் காலங்களில் தேவதூதர்கள் எப்படிப் பயன்படுத்தப்பட்டார்கள்?
• இன்று தேவதூதர்கள் செய்யும் வேலையைப்பற்றி வெளிப்படுத்துதல் 14:6, 7 என்ன தெரிவிக்கிறது?
• தேவதூதர்கள் வெகு விரைவில் என்ன குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பார்கள்?
[பக்கம் 22-ன் படம்]
மனோவாவும் அவரது மனைவியும் ஒரு தேவதூதனால் ஊக்கம்பெற்றார்கள்
[பக்கம் 23-ன் படம்]
“அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்”