கொடுமைகளின் கொட்டம் அடங்குமா?
இன்று உலகில் நடக்கிற கொடூரங்களுக்கு முக்கிய காரணம் சுயநலம்தான் என்பதை நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆமோதிப்பீர்கள். கடந்த பல ஆண்டுகளில் தன்னலவாத தலைமுறையினர் தூவிய விதைகளிலிருந்து முளைத்தெழும்பிய சமுதாயத்தில், ‘நான், எனக்கு’ என தங்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பவர்களைத்தான் எக்கச்சக்கமாகப் பார்க்க முடிகிறது. அநேகர் தங்கள் இலட்சியத்தை அடைய என்ன செய்யவேண்டுமோ அதையே செய்கிறார்கள்; அதற்காகப் பெரும்பாலும் துணிகரச் செயல்களில் இறங்குகிறார்கள். இப்படிப்பட்ட செயல்களில் ஒருசில தனி நபர்கள் மட்டுமல்ல மொத்தமாக நாடுகளே ஈடுபடுகின்றன.
சக மனிதர் என்ற மதிப்பு மரியாதையெல்லாம் அற்பமாகிவிட்டது. சிலரோ கொடூர செயல்களைச் செய்வதில் இன்பம் காண்கிறார்கள். த்ரில்லுக்காகத்தான் மற்றவர்களுக்குத் தீங்கிழைத்தோம் என்று ஒத்துக்கொள்கிற குற்றவாளிகளைப் போலவே இவர்களும் இதை ஒரு பொழுதுபோக்காகக் காண்கிறார்கள். வன்முறையையும் கொடூரத்தையும் சித்தரிக்கிற சினிமாக்களை விருப்பத்துடன் கண்டுகளித்து சினிமா துறைக்கு பணத்தை வாரிவழங்கும் லட்சக்கணக்கான மக்களைப்பற்றி என்ன சொல்லலாம்? பொழுதுபோக்கு நிகழ்ச்சி, மீடியா ஆகியவற்றின் மூலமாகக் காட்டப்படும் மூர்க்கச் செயல்களைச் சதா பார்ப்பதும் கேட்பதும் அநேகருடைய உணர்ச்சிகளை மரத்துப்போகச் செய்கிறது.
மூர்க்கத்தனமாக நடத்தப்படுபவர்கள் பெரும்பாலும் மன ரீதியில் பாதிக்கப்படுகிறார்கள்; அதனால் மற்றவர்களையும் அதேபோல் நடத்த அவர்களின் மனம் தூண்டுகிறது. மூர்க்கத்தனத்தால் விளையும் வன்முறையைப்பற்றி குறிப்பிடுகையில் மெக்சிகோவிலுள்ள தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிற நோயமி டீயாஸ் மாரோக்கின் இவ்வாறு சொல்கிறார்: “வன்முறை கற்றுக்கொள்ளப்படுகிறது, இது நம் கலாச்சாரத்தின் அங்கம் . . . நம் சூழ்நிலை இடங்கொடுக்கும்போது, ஊக்குவிக்கும்போது வன்முறையான வழிகளில் செயல்படுவது எப்படியென நாம் கற்றுக்கொள்கிறோம்.” ஆகவே, கொடுமைக்கு ஆளாகியிருப்பவர்கள், மற்றவர்களைக் கொடுமைப்படுத்துகிறவர்களாக மாறிவிடலாம்; ஒருவேளை தாங்கள் கொடுமைப்படுத்தப்பட்ட அதே விதத்தில் மற்றவர்களைக் கொடுமைப்படுத்தலாம்.
அதிகமாய் மது அருந்துவது, போதைப்பொருளைப் பயன்படுத்துவது போன்ற பழக்கங்களையுடைய மற்றவர்களும்கூட மூர்க்கமாக நடந்துகொள்பவர்களாக ஆகிவிடலாம். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறும் அரசாங்கத்தின்மீது தங்கள் அதிருப்தியைக் காட்டுகிறவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் சிலர், தங்களுடைய கருத்துகளைத் தெரிவிப்பதற்காகக் கொடுஞ்செயல்களில் ஈடுபடுகிறார்கள், தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறார்கள்; ஆனால், பெரும்பாலும் அப்பாவி மக்களே இதில் பாதிக்கப்படுகிறார்கள்.
இருந்தாலும் நீங்கள் இவ்வாறு யோசிக்கலாம்: ‘கொடுமையான காரியங்களைச் செய்ய மனிதர் தாங்களாகவே கற்றுக்கொண்டிருக்கிறார்களா? தற்போதைய சூழ்நிலைக்குக் காரணம் என்ன?’
கொடுமைகளுக்குப் பின்னால் நிஜமாகவே இருப்பது யார்?
இந்த உலகத்தின்மீது பிசாசாகிய சாத்தானுடைய பலமான செல்வாக்கு இருப்பதாக பைபிள் சொல்கிறது; ‘இப்பிரபஞ்சத்தின் தேவன்’ என அவனை அழைக்கிறது. (2 கொரிந்தியர் 4:4) இப்பிரபஞ்சத்திலேயே சுயநலத்திலும் மூர்க்கத்தனத்திலும் அவனுக்கு நிகர் அவனே. அவனை ‘மனுஷ கொலைபாதகன்’ என்றும் “பொய்க்குப் பிதா” என்றும் மிகப் பொருத்தமாகவே இயேசு வர்ணித்தார்.—யோவான் 8:44.
ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனது முதற்கொண்டு, மனித இனம் சாத்தானுடைய பலத்த செல்வாக்கின்கீழ் இருந்துவருகிறது. (ஆதியாகமம் 3:1-7, 16-19) அந்த முதல் தம்பதியர் யெகோவாவை விட்டுவிலகியதிலிருந்து சுமார் 15 நூற்றாண்டுகளுக்குப் பின், கலகம்செய்த தூதர்கள் மனித உருவெடுத்து பெண்களோடு உறவுகொண்டு நெஃபிலிம் எனப்படும் ராட்சத பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்கள். அவர்கள் எப்படிப்பட்ட சுபாவம் உடையவர்களாய் இருந்தார்கள்? அவர்களுடைய பெயரே அதற்குப் பதில் அளிக்கிறது. அதன் அர்த்தம் “வீழ்த்துபவர்கள்” என்பதாகும். அவர்கள் மூர்க்க குணமுள்ளவர்களாக இருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை; அவர்கள் இழைத்த கொடுமைகளுக்கும் ஒழுக்கக்கேடான காரியங்களுக்கும் கடவுள் கொண்டு வந்த ஜலப்பிரளயத்தால் மட்டுமே முடிவுகட்ட முடிந்தது. (ஆதியாகமம் 6:4, 5, 17) அந்த ஜலப்பிரளயத்தில் நெஃபிலிம்கள் செத்துமடிந்தபோதிலும், அவர்களுடைய தகப்பன்மார் காணக்கூடாத பேய்களாக ஆவி பிரதேசத்துக்குத் திரும்பினார்கள்.—1 பேதுரு 3:19, 20.
இந்தக் கலகக்காரத் தூதர்களின் மூர்க்க குணம் இயேசு குணப்படுத்திய ஒரு சிறுவனுடைய விஷயத்தில் தெளிவாகத் தெரிகிறது. அவனைப் பிடித்திருந்த பேய் அவனுக்கு அடிக்கடி வலிப்புண்டாக்கி, தீயிலும் தண்ணீரிலும் தள்ளி அவனை ஒழித்துக்கட்ட முயன்றது. (மாற்கு 9:17-22) இத்தகைய ‘பொல்லாத ஆவி சேனைகள்’ தங்களுடைய பிரதான அதிபதியான பிசாசாகிய சாத்தானின் ஈவிரக்கமற்ற சுபாவத்தையே வெளிக்காட்டுகின்றன.—எபேசியர் 6:12.
இன்று, கொடுமைகள் இழைப்பதற்கு மனிதரைத் தூண்டிவிடுவதில் பேய்கள் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன. இதைப்பற்றி பைபிள் இவ்வாறு முன்னறிவித்தது: “கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், . . . வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், . . . நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்.”—2 தீமோத்தேயு 3:1-5.
நம்முடைய காலம் மிகவும் கொடியது என பைபிள் தீர்க்கதரிசனங்கள் தெரிவிக்கின்றன; ஏனெனில், கிறிஸ்து இயேசு அரசாளுகிற கடவுளுடைய ராஜ்யம் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்ட பிறகு, பரலோகத்திலிருந்து சாத்தான் வெளியேற்றப்பட்டான், அவனுடைய பேய்ப் பட்டாளமும் வெளியேற்றப்பட்டது. அதை பைபிள் இவ்வாறு அறிவிக்கிறது: “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்கால மாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்.”—வெளிப்படுத்துதல் 12:5-9, 12.
அப்படியானால், இன்றைய சூழ்நிலை மாறுவதற்கு வாய்ப்பில்லை என இது அர்த்தப்படுத்துகிறதா? வெறுக்கத்தக்க நடத்தையை “கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடும் திறமை மக்களுக்கு இருக்கிறது” என முன்னால் குறிப்பிடப்பட்ட டீயாஸ் மாரோக்கின் சொல்கிறார். என்றாலும், பூமி இன்று சாத்தானின் பிடியில் இருப்பதால், ஒருவர் தான் சிந்திக்கும் விதத்தையும் செயல்படும் விதத்தையும் கட்டுப்படுத்த மற்றொரு மேலான சக்திக்கு இடம்கொடுக்காத வரையில் அவர் வன்செயல்களைப் படிப்படியாக விட்டுவிடுவது சாத்தியம் அல்ல. இந்தச் சக்தி எது?
மாற்றம் சாத்தியம்—எப்படி?
மிகவும் வல்லமை வாய்ந்த சக்தியாக கடவுளுடைய பரிசுத்த ஆவி இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்; இதன் உதவியோடு பேய்த்தனச் செல்வாக்கைச் சமாளிக்க முடியும். இந்தச் சக்தி அன்பையும் மனித நலனையும் மேம்படுத்துகிறது. கடவுளுடைய ஆவியால் நிரப்பப்படுவதற்கு, யெகோவாவைப் பிரியப்படுத்த விரும்புகிற எல்லாருமே மூர்க்கத்தனத்தோடு துளி ஒத்திருப்பதாய் தெரிகிற எதையும்கூடத் தவிர்க்க வேண்டும். இதற்காக கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக ஒருவர் தன் சுபாவத்தை மாற்றிக்கொள்வது அவசியம். அந்தச் சித்தம் என்ன? முடிந்த வரையில் கடவுளுடைய வழியைப் பின்பற்றுவதே அந்தச் சித்தம். மற்றவர்களைக் கடவுள் கருதும் விதமாகக் கருதுவதை இது உட்படுத்துகிறது.—எபேசியர் 5:1, 2; கொலோசெயர் 3:7-10.
யெகோவா எவ்விதமாகக் காரியங்களைச் செய்கிறாரென ஆராய்வது, அவர் ஒருபோதும் மற்றவர்களிடம் அக்கறையற்றவராக இருந்ததில்லை என்பதை உங்களுக்கு உறுதிப்படுத்தும். அவர் எந்தவொரு மனிதனையும் ஏன், எந்தவொரு மிருகத்தையும்கூட அநியாயமாக நடத்தியதே இல்லை.a (உபாகமம் 22:10; சங்கீதம் 36:7; நீதிமொழிகள் 12:10) கொடுமைகளையும், அவற்றைச் செய்பவர்களையும் அவர் வெறுக்கிறார். (நீதிமொழிகள் 3:31, 32) கிறிஸ்தவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிற அந்தப் புதிய சுபாவம், மற்றவர்களை மேலானவர்களாகக் கருதுவதற்கும் அவர்களுக்கு மரியாதை கொடுப்பதற்கும் உதவுகிறது. (பிலிப்பியர் 2:2-4) கிறிஸ்தவர்களுக்குரிய அந்தப் புதிய சுபாவத்தில் ‘உருக்கமான இரக்கம், தயவு, மனத்தாழ்மை, சாந்தம், நீடிய பொறுமை’ ஆகியவை அடங்கும். அன்பையும் புறக்கணிக்க முடியாது; ஏனெனில் இது ‘பூரண சற்குணத்தின் கட்டாக’ இருக்கிறது. (கொலோசெயர் 3:12-14) எல்லாருமே இத்தகைய குணங்களை வெளிக்காட்டினால் இந்த உலகம் தனிச்சிறப்பானதாய் திகழும் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள், அல்லவா?
என்றாலும், சுபாவத்தை முற்றிலுமாக மாற்றிக்கொள்வது உண்மையிலேயே சாத்தியமா என நீங்கள் யோசிக்கலாம். இந்த நிஜ அனுபவத்தைக் கவனியுங்கள். மார்ட்டின்b என்பவர், பிள்ளைகள் கண்முன்னாலேயே தன் மனைவியிடம் கூச்சல்போட்டு அவரைக் கண்டபடி அடிப்பார். ஒரு சமயம் நிலைமை படுமோசமாகிவிட்டது, அதனால் பிள்ளைகள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் ஓடிச் சென்று உதவி கேட்க வேண்டியதாயிற்று. பல வருடங்களுக்குப் பிறகு, அந்தக் குடும்பத்தார் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பித்தார்கள். தான் எப்படி இருக்க வேண்டும், மற்றவர்களை எப்படி நடத்த வேண்டும் என்றெல்லாம் மார்ட்டின் கற்றுக்கொண்டார். அவரால் தன்னை மாற்றிக்கொள்ள முடிந்ததா? அவருடைய மனைவி இவ்வாறு பதில் அளிக்கிறார்: “முன்பெல்லாம் அவருக்குக் கோபம் வந்தால் ஆளே மாறிவிடுவார். இதனால் ரொம்ப காலமாகவே எங்களுடைய வாழ்க்கை தாறுமாறாகப் போய்க்கொண்டிருந்தது. தன்னை மாற்றிக்கொள்ள மார்ட்டினுக்கு உதவியதற்காக யெகோவாவுக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை. இப்போது அவர் நல்ல தகப்பனாகவும் அருமையான கணவராகவும் இருக்கிறார்.”
இது ஒரேயொரு அனுபவம் மட்டுமே. உலகெங்கும் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படித்த லட்சக்கணக்கானோர் தங்களுடைய மூர்க்க குணத்தை மாற்றியிருக்கிறார்கள். ஆம், மாற்றம் சாத்தியமே.
எல்லாக் கொடுமைகளுக்கும் முடிவு விரைவில்
கடவுளுடைய ராஜ்யம், அதாவது இரக்கமுள்ள கிறிஸ்து இயேசுவை ஆட்சியாளராகக் கொண்டு இப்போது பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அரசாங்கம், பூமி முழுவதையும் வெகு சீக்கிரத்தில் ஆட்சி செய்யும். எல்லாக் கொடுமைகளுக்கும் காரணமான சாத்தானும் அவனது பேய்களும் இருந்த பரலோகத்தை அது ஏற்கெனவே சுத்தப்படுத்திவிட்டது. சீக்கிரத்திலேயே கடவுளுடைய ராஜ்யம் பூமியில் சமாதானத்தை நேசிக்கும் குடிமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும். (சங்கீதம் 37:10, 11; ஏசாயா 11:2-5) உலக பிரச்சினைகளுக்கு அந்த அரசாங்கம் மட்டுமே நிரந்தர தீர்வு அளிக்கும். ஆனால், இந்த அரசாங்கத்திற்காகக் காத்திருக்கும் வேளையில் நீங்கள் கொடுமைக்கு ஆளானால் என்ன செய்வது?
பதிலுக்குப் பதில் செய்வது பலன் அளிக்காது. அப்படிச் செய்யும்போது கொடூரம் அதிகரிக்குமே தவிர குறையாது. மாறாக, யெகோவாமேல் நம்பிக்கை வைக்கும்படி பைபிள் நமக்குச் சொல்கிறது; அவர் உரிய காலத்தில் ‘ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுப்பார்.’ (எரேமியா 17:10) (“கொடுமைக்கு ஆளாகையில் என்ன செய்வது” என்ற பெட்டியைக் காண்க.) உண்மைதான், கொடுமைக்கு ஆளாகையில் நீங்கள் துன்பப்படலாம். (பிரசங்கி 9:11) இருந்தாலும், கொடுமையின் பாதிப்புகளை, மரணத்தையும்கூட நீக்கிவிட கடவுளால் முடியும். அவர் கொடுத்துள்ள வாக்குறுதிப்படி, கொடுமைக்கு ஆளாகி மரித்தவர்கள் அவருடைய நினைவில் இருக்கிறார்கள் என்றால் அவர்களை அவர் மீண்டும் உயிரோடு எழுப்புவார்.—யோவான் 5:28, 29.
கொடுமைக்கு ஆளாகும் ஆபத்து இன்னும் இருக்கத்தான் செய்கிறது; எனினும், கடவுளோடு நெருங்கிய பந்தம் வைத்துக்கொள்வதன் மூலமும் அவருடைய வாக்குறுதிகளில் உறுதியான விசுவாசம் வைத்திருப்பதன் மூலமும் நாம் ஆறுதல் அடையலாம். சாரா என்பவரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் கணவருடைய உதவியின்றி தன் இரண்டு மகன்களையும் வளர்த்தார், அவர்களை நன்கு படிக்க வைத்தார். வயதானபோது அவருக்குப் பொருளுதவியும் அளிக்காமல், வியாதிப்பட்டபோதும் கவனிக்காமல் இரண்டு மகன்களும் அவரை அம்போவென விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். என்றாலும், இப்போது ஒரு கிறிஸ்தவராக இருக்கும் சாரா இவ்வாறு சொல்கிறார்: “ஒருபக்கம் கவலை இருந்தாலும் யெகோவா என்னைக் கைவிடவில்லை. ஆன்மீக சகோதர சகோதரிகள் மூலமாக யெகோவா ஆதரவளிப்பதை என்னால் உணர முடிகிறது; அவர்கள் எப்போதும் என்னைக் கவனித்துக்கொள்கிறார்கள். அவர் சீக்கிரத்திலேயே என்னுடைய பிரச்சினைகளை மட்டுமல்ல, அவருடைய வல்லமையில் நம்பிக்கை வைத்து அவர் சொல்படி நடக்கிற அனைவரின் பிரச்சினைகளையும் தீர்ப்பாரென உறுதியாக நம்புகிறேன்.”
சாரா குறிப்பிடுகிற அந்த ஆன்மீக சகோதர சகோதரிகள் யார்? யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் கிறிஸ்தவ தோழர்களே அவர்கள். இரக்க குணமுள்ள இந்தச் சகோதர சகோதரிகள் உலகளாவிய ஒரு குடும்பத்தின் அங்கத்தினர்கள்; வெகு சீக்கிரத்தில் கொடுமைகளுக்கு முடிவு வரும் என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். (1 பேதுரு 2:17) அப்போது, கொடுமைகளுக்கு முக்கிய காரணமாய் இருக்கும் பிசாசாகிய சாத்தானும் அவனைப்போல் செயல்படுகிற எவருமே இருக்க மாட்டார்கள். “கொடுமையின் சகாப்தம்” என ஓர் எழுத்தாளர் குறிப்பிட்ட இந்தச் சகாப்தம் சுவடு தெரியாமல் மறைந்து போயிருக்கும். யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரோடு தொடர்புகொண்டு, இந்த எதிர்காலத்தைப்பற்றி தெரிந்துகொள்ளலாம், அல்லவா?
[அடிக்குறிப்புகள்]
a கடவுளுடைய பண்புகளையும் சுபாவத்தையும்பற்றி மிக நன்றாய் அறிந்துகொள்வதற்கு யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்த யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகத்தைக் காண்க.
b சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 6-ன் பெட்டி]
கொடுமைக்கு ஆளாகையில் என்ன செய்வது
கொடுமைகளை எப்படிச் சமாளிக்கலாம் என்பதன் பேரில் நடைமுறையான ஆலோசனையை கடவுளுடைய வார்த்தை அளிக்கிறது. ஞானம் பொதிந்த பின்வரும் வசனங்களை நீங்கள் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்:
“தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.”—நீதிமொழிகள் 20:22.
“ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ காண்பாயானால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்மேல் உயர்ந்தவன் காவலாளியாயிருக்கிறான்; அவர்கள்மேல் உயர்ந்தவரும் ஒருவருண்டு.”—பிரசங்கி 5:8.
“சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள் [அதாவது, சந்தோஷமுள்ளவர்கள்]; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.”—மத்தேயு 5:5.
“ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.”—மத்தேயு 7:12.
“ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.”—ரோமர் 12:17-19.
“கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். . . . அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.”—1 பேதுரு 2:21-23.
[பக்கம் 7-ன் படங்கள்]
மூர்க்க குணத்தை மாற்றிக்கொள்ள அநேகருக்கு யெகோவா கற்பித்திருக்கிறார்