இன்றைய கொடூர உலகம்
மாரீயா என்ற 64 வயது மூதாட்டி தன்னந்தனியாக வாழ்ந்து வந்தார். வீட்டில் அவர் அடிக்கப்பட்டு, கம்பியால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
கோபத்தில் கொதித்துப் போயிருந்த ஒரு கோஷ்டி, இளைஞர் இருவரைக் கடத்தியதாகச் சொல்லி மூன்று போலீஸ்காரர்களை அடித்து நொறுக்கியது. அந்த போலீஸ்காரர்களில் இருவர்மீது அந்தக் கோஷ்டி பெட்ரோல் ஊற்றி தீக்கொளுத்த அவர்கள் பஸ்பமானார்கள். ஒரு போலீஸ்காரர் எப்படியோ தப்பிவிட்டார்.
ஃபோனின் மறுமுனையிலிருந்து ஓர் அநாமதேய குரல் அதிர்ச்சியூட்டும் தகவலை அளித்தது. சுற்றுலாப் பயணிகள் நால்வரின் உடல் ஒரு தோட்டத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டதாக அது அறிவித்தது. கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் புதைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் உயிரோடு புதைக்கப்பட்டதாக பிரேதப் பரிசோதனை காட்டியது.
இந்தக் கொடுஞ்செயல்கள், வன்முறையும் மூர்க்கத்தனமும் நிறைந்த திகில் சினிமாக்களில் வரும் கோரக் காட்சிகள் அல்ல. மாறாக, இவை யாவும் நிஜ சம்பவங்கள்; லத்தீன் அமெரிக்க நாடு ஒன்றில் தலைப்புச் செய்திகளாக வெளிவந்தவை. என்றாலும், இன்றைய உலகில் இத்தகைய அட்டகாசங்கள் இங்கு மட்டுமே நடப்பதில்லை.
வன்செயல்கள் இப்போது சர்வசாதாரணமாக நடந்துவருகின்றன. குண்டு வெடிப்புகள், தீவிரவாதிகளின் தாக்குதல்கள், கொலைகள், அடிதடிகள், துப்பாக்கிச்சூடுகள், கற்பழிப்புகள் ஆகியவை இத்தகைய கொடூரங்களில் வெகு சிலவே. மீடியாக்கள் இச்சம்பவங்களைத் திரும்பத் திரும்ப விலாவாரியாக விவரிக்கின்றன; இதனால் இத்தகைய மூர்க்கச் செயல்களை அடிக்கடி கண்டும் கேட்டும் அநேகருடைய உணர்ச்சிகள் மரத்துப்போய் விட்டன.
இப்படியிருக்க, ‘இன்றைய உலகுக்கு என்ன ஏற்பட்டிருக்கிறது? பிறருடைய உணர்ச்சிகளைக் கருத்தில் கொள்வதும் உயிருக்கு மதிப்பு கொடுப்பதும் மலையேறி விட்டனவா?’ என நீங்கள் யோசிக்கலாம். இப்படிப்பட்டதோர் உலகில் நாம் ஏன் வாழ வேண்டும்?
கனடாவைச் சேர்ந்த ஹேரி என்ற 69 வயது முதியவரைப்பற்றி இப்போது சிந்தித்துப் பாருங்கள். இவர் புற்றுநோயுடன் போராடுகிறார். இவருடைய மனைவியோ மல்ட்டிபிள் ஸ்க்லரோஸிஸ் என்ற ஒருவித பக்கவாத நோயால் அவதிப்படுகிறார். என்றாலும், அவருடைய அக்கம்பக்கத்தாரும் நண்பர்களும் சந்தோஷமாக இவருக்கு உதவுகிறார்கள். “இவர்கள் எல்லாரும் எங்களுக்கு உதவி செய்யாவிட்டால் நாங்கள் என்ன நிலையில் இருப்போம் என்று தெரியவில்லை” என ஹேரி சொல்கிறார். தங்கள் உறவினரல்லாத முதியோருக்கு உதவுகிற 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் கனடாவில் இருப்பதாக அங்கு நடத்தப்பட்ட ஆய்வு காட்டுகிறது. இப்படி மற்றவர்களிடம் எப்போதும் அன்பாக, நட்பாக நடந்துகொள்கிற சாமானியர்களை நீங்களும் அறிந்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆம், மூர்க்கத்தனமாக நடந்துகொள்வதற்குப் பதிலாக, அன்பையும் பாசத்தையும் பொழிகிற திறமை மனிதனுக்கு உண்டு.
அப்படியானால், ஏன் அட்டூழியங்கள் நடக்கின்றன? மக்கள் மூர்க்கத்தனமாக நடந்துகொள்வதற்குக் காரணம் என்ன? மற்றவர்களுக்குக் கொடுமை இழைப்பவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள முடியுமா? கொடுமைகளின் கொட்டம் அடங்குகிற காலம் வருமா? வரும் என்றால், அது எப்படி வரும், எப்பொழுது வரும்?
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
ரயில்: CORDON PRESS