பவுல் விஜயம் செய்த பெரோயாவை பார்க்கலாம் வாருங்கள்
சுமார் பொ.ச. 50-ல் இரண்டு மிஷனரிகள் செய்த ஊழியம் பெரும் வெற்றியைத் தேடித் தந்தது; திரளானோர் விசுவாசிகள் ஆனார்கள். இதைக் கண்ட கலகக்கூட்டம் இந்த மிஷனரிகளுக்கு எதிராக வெகுண்டெழுந்தது. எனவே, ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. புதிதாகப் பிறந்த அந்தச் சபையின் நலனையும் தங்கள் பாதுகாப்பையும் கருதி, நட்டநடு ராத்திரியில் அந்த மிஷனரிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இவ்வாறுதான் பவுலும் சீலாவும் மக்கெதோனியாவின் துறைமுகப் பட்டினமான தெசலோனிக்கேயிலிருந்து தப்பியோடினார்கள். அடுத்த இடத்தில் போய் பிரசங்கிப்பதற்குப் பயணப்பட்டார்கள். அந்த இடம்தான் பெரோயா.
ச ற்று தூரத்தில், பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் பச்சைப் பசேலென வெர்மியோ மலை காட்சி அளிக்கிறது; அதன் கிழக்கு அடிவாரத்தில் பெரோயா (வெர்யா) பட்டணம் வீற்றிருப்பதை அன்று போலவே இன்றும் ஒரு பயணியால் பார்க்க முடியும். தெசலோனிக்கே பட்டணத்திலிருந்து தென்மேற்கே சுமார் 65 கிலோமீட்டர் தூரத்தில் இந்தப் பெரோயா பட்டணம் இருக்கிறது; ஏஜியன் கடலிலிருந்து உள்நாட்டிற்குள் சென்றால் சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. பூர்வ காலத்தில் கிரேக்க கடவுட்களில் முக்கியமானவர்களாய் கருதப்பட்டவர்களின் உறைவிடமாக புராணத்தில் விவரிக்கப்பட்ட ஒலிம்பஸ் மலை இதற்குத் தெற்கே அமைந்துள்ளது.
பெரோயா பட்டணத்தில் பவுல் பிரசங்க ஊழியம் செய்து, அநேகரை கிறிஸ்தவர்களாக்கினார்; அதனால், அந்தப் பட்டணத்தைப்பற்றி அறிந்துகொள்ள பைபிளைக் கருத்தூன்றிப் படிப்பவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். (அப்போஸ்தலர் 17:10-15) பவுல் விஜயம் செய்த அந்தப் பட்டணத்திற்குப் போய் அதன் கடந்த கால சரித்திரத்தை அறிந்துகொள்ளலாம் வாருங்கள்.
ஆரம்பகால சரித்திரம்
எப்போது பெரோயா பட்டணம் உருவானது என்பது யாருக்குமே உறுதியாகத் தெரியாது. அங்கு ஒருவேளை பிரிகிய இனத்தவர் ஆரம்பத்தில் குடியிருந்திருக்கலாம்; இவர்களை சுமார் பொ.ச.மு. ஏழாம் நூற்றாண்டில் மக்கெதோனியர்கள் துரத்தியடித்தார்கள். மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு, மகா அலெக்சாந்தரின் வெற்றிகளால் மக்கெதோனியா சீரும் சிறப்பும் பெற்று விளங்கியது. பிரமாண்டமான கட்டடங்களும் மலைக்க வைக்கும் மதிற்சுவர்களும் கட்டப்பட்டன; அதே போல, ஜியஸ், ஆர்டிமிஸ், அப்போலோ, அதீனாள் ஆகியோருக்கும், இன்னும் பிற கிரேக்க கடவுட்களுக்கும் ஆலயங்கள் கட்டப்பட்டன.
பல நூற்றாண்டுகளுக்கு பெரோயா “அதன் சுற்று வட்டாரத்திலும், கிரேக்குவின் வட பகுதியிலிருந்த மற்ற இடங்களின் மீதும் பெரும் செல்வாக்கு செலுத்தியது” என ஒரு சரித்திரப் புத்தகம் குறிப்பிடுகிறது. மக்கெதோனியர்களின் கடைசி ராஜவம்சத்தினரான ஆன்டிகனிட்டுகளின் காலத்தில் (பொ.ச.மு. 306-168) இந்தப் பட்டணம் புகழ் ஏணியின் உச்சியில் இருந்தது; இறுதியில், இந்த வம்சத்தாரின் ஆட்சி ரோமர்களால் கவிழ்க்கப்பட்டது.
பொ.ச.மு. 197-ல் அரசர் ஐந்தாம் ஃபிலிப்பை ரோமர்கள் தோற்கடித்தபோது, “முன்பிருந்த அதிகார அமைப்புமுறை குலைந்துபோனது, கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் ரோம் உறுதியான வல்லரசாக ஆனது” என என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது. பொ.ச.மு. 168-ல், ரோம தளபதி ஒருவர், பண்டைய மக்கெதோனியாவின் கடைசி அரசரான பர்சூஸ் என்பவரை படுதோல்வி அடையச் செய்தார்; இந்தப் போர் பெரோயாவுக்குத் தெற்கே சில கிலோமீட்டர் தூரத்திலிருந்த பிட்னா நகரில் நடந்தது. பைபிள் தீர்க்கதரிசனத்தில் முன்னுரைத்தபடி, உலக வல்லரசாகத் திகழ்ந்த கிரேக்குவின் ஆட்சி பீடத்தை ரோம் கைப்பற்றியது. (தானியேல் 7:6, 7, 23) அந்தப் போருக்குப் பிறகு, ரோமிடம் முதலாவது சரணடைந்த மக்கெதோனிய பட்டணங்களில் பெரோயாவும் ஒன்று.
பொ.ச.மு. முதல் நூற்றாண்டில், பாம்ப்பே என்ற அரசருக்கும் ஜூலியஸ் சீஸருக்கும் இடையே மூண்ட போரில் மக்கெதோனியா அவர்களது போர்க்களமாய் ஆனது. சொல்லப்போனால், பெரோயாவின் சுற்றுவட்டாரத்தில்தான் பாம்ப்பே அரசர் தன் தலைமையகத்தை அமைத்து, படையையும் நிறுத்தி வைத்திருந்தார்.
ரோமர்களின் கீழ் தழைத்தோங்குதல்
பாக்ஸ் ரோமானா, அதாவது ரோம சமாதான காலத்தில், கல்தளம் பாவப்பட்ட தெருக்களில் இருபுறமும் வழிநெடுக தூண்களால் ஆன மண்டபங்கள் இருந்ததை பெரோயாவுக்கு விஜயம் செய்தவர்கள் பார்த்திருப்பார்கள். இந்தப் பட்டணத்தில் பொது குளியல் தொட்டிகளும் கேளிக்கை அரங்குகளும் நூலகங்களும், அதோடு கொடூர விளையாட்டுகளை நடத்துவதற்கான அரங்குகளும் இருந்தன. குழாய்கள்மூலம் குடிநீர் கிடைத்தது, நிலத்தடி கழிவுநீர் அமைப்பும் இருந்தது. வணிகர்களும் கலைஞர்களும் விளையாட்டு வீரர்களும் பெரோயாவுக்கு விஜயம் செய்தார்கள்; விளையாட்டு நிகழ்ச்சிகளையும் பிற நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்க பார்வையாளர்களும் வந்து குவிந்தார்கள்; எனவே, புகழ்பெற்ற வணிக மையமாக இது திகழ்ந்தது. பிற நாடுகளிலிருந்து வருபவர்கள் தங்களுடைய மத சடங்கு சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பதற்கு வசதியாக வழிபாட்டு ஸ்தலங்களும் கட்டப்பட்டிருந்தன. ஆம், ரோம சாம்ராஜ்யமெங்கும் இருந்த மதப் பிரிவுகளைக் கதம்பமாய் இந்தப் பட்டணத்தில் காண முடிந்தது.
பெரோயாவில் வணங்கப்பட்ட கடவுட்களின் வரிசையில் இறந்துபோன ரோம பேரரசர்களும் இடம்பெற்றார்கள். இப்படிப் பேரரசர்களை வழிபடும் பழக்கம் பெரோயா பட்டணத்தாருக்குப் புதுமையானது அல்ல; ஏனெனில், மகா அலெக்சாந்தரை அவர்கள் ஏற்கெனவே கடவுளாக வழிபட்டு வந்தார்கள். கிரேக்க புத்தகம் ஒன்று இவ்வாறு சொல்கிறது: “ராஜா உயிரோடிருக்கும் காலத்தில் அவரை கடவுளுக்குச் சமமாக மதிப்பது கிரேக்கர்களுக்குப் பழக்கமாய் இருந்ததால், பேரரசின் கிழக்குப் பகுதியிலிருந்தவர்கள் ரோம பேரரசர்களுக்கும்கூட சந்தோஷமாய் அதே மதிப்பைக் கொடுத்தார்கள் . . . தங்களுடைய நாணயங்களில் ஒளிவீசும் கிரீடத்தை அணிந்த கடவுளாக பேரரசரை அவர்கள் சித்தரித்தார்கள். கடவுளை வேண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட அதே பாடல்களாலும் கீர்த்தனைகளாலும் இவரையும் துதித்தார்கள்.” அவருக்குப் பலிபீடங்களும் ஆலயங்களும் கட்டப்பட்டன, பலிகள் செலுத்தப்பட்டன. பேரரசரை வழிபட்ட மதப் பிரிவினரின் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள பேரரசர்களும் வந்தார்கள்; அந்தக் கோலாகலக் கொண்டாட்டங்களின்போது விளையாட்டு, கலை, இலக்கியம் ஆகியவற்றில் போட்டிகள் நடத்தப்பட்டன.
பெரோயா பட்டணம் ஏன் பொய் மத வழிபாட்டின் மையமாய் திகழ்ந்தது? இங்குதான் மக்கெதோனியாவின் கினோன் இருந்தது. இது மக்கெதோனிய நகரப் பிரதிநிதிகள் கூடிவந்த பேரவையாகும். இந்தப் பிரதிநிதிகள், நகரம் மற்றும் மாகாணம் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கலந்தாலோசிக்கவும் ரோமர்களின் மேற்பார்வையில் அவற்றுக்குத் தீர்வு காணவும் பெரோயாவில் தவறாமல் கூடிவந்தார்கள். பேரரசரை வழிபட்ட மதப் பிரிவின் சடங்குகளை மேற்பார்வை செய்வது, கினோனின் முக்கியப் பணிகளில் ஒன்றாக இருந்தது.
பவுலும் சீலாவும் தெசலோனிக்கே பட்டணத்தை விட்டு ஓடி பெரோயாவை போய்ச் சேர்ந்தபோது அதன் சூழ்நிலை இப்படித்தான் இருந்தது. அந்தச் சமயத்தில், பெரோயா இரண்டு நூற்றாண்டுகளாக ரோமர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.
நற்செய்தி பெரோயாவை சென்றெட்டுகிறது
பெரோயா பட்டணத்திலிருந்த ஜெப ஆலயத்தில் பவுல் பிரசங்கிக்க ஆரம்பித்தார். ஜனங்கள் அவர் சொன்னதை எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள்? கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலால் எழுதப்பட்ட பைபிள் பதிவு, அங்கிருந்த “[யூதர்கள்] மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள் [“பரந்த மனப்பான்மை உடையவர்கள்,” பொது மொழிபெயர்ப்பு]” என்று குறிப்பிடுகிறது. (அப்போஸ்தலர் 17:10, 11) அவர்கள் ‘பரந்த மனப்பான்மை உடையவர்களாய்’ இருந்ததால் தங்கள் பாரம்பரியங்களை மட்டுமே பின்பற்ற வேண்டுமென பிடிவாதமாய் இருக்கவில்லை. புதிய விஷயங்களை அவர்கள் கேட்டபோதும்கூட அவர்கள் சந்தேகப்படவில்லை அல்லது எரிச்சல் அடையவில்லை. பவுல் சொன்ன செய்தியைப் புறக்கணிப்பதற்கு மாறாக, ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தோடு, கவனமாய் கேட்டார்கள்; பாரபட்சம் பார்க்காமல் அவர் சொன்ன செய்தியைக் கேட்டார்கள்.
பவுல் சத்தியத்தைத்தான் போதித்தாரென அந்த யூதர்கள் எவ்வாறு அடையாளம் கண்டுகொண்டார்கள்? மிக நம்பகமான உரைகல்லைப் பயன்படுத்தி தாங்கள் கேட்டவற்றைச் சோதித்துப் பார்த்தார்கள். அவர்கள் கவனமாகவும் ஊக்கமாகவும் வேதவசனங்களை ஆராய்ந்தார்கள். பைபிள் கல்விமான் மேத்யூ ஹென்றி பின்வரும் முடிவுக்கு வந்தார்: “வேதவசனங்களிலிருந்து பவுல் நியாயங்காட்டி பேசினதோடு தான் சொன்ன விஷயங்களுக்கு பழைய ஏற்பாட்டிலிருந்து ஆதாரம் காட்டியதால் அவர்கள் தங்களிடமிருந்த பைபிளின் உதவியோடு அவர் குறிப்பிட்ட பகுதிகளைப் புரட்டிப் பார்த்தார்கள், வசனத்தின் சூழமைவை வாசித்தார்கள், அதன் சரியான அர்த்தத்தைப் புரிந்துகொண்டார்கள், வேதவாக்கியங்களின் மற்ற பகுதிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தார்கள், அவற்றிலிருந்து பவுல் மேற்கோள் காட்டியது சரியானதா, நியாயமானதா, அவற்றின் அடிப்படையில் அவர் செய்த விவாதம் தகுந்ததா என்பதை ஆராய்ந்தார்கள்; அதற்கேற்ப அவர்கள் சரியான முடிவை எடுத்தார்கள்.”
இது மேலோட்டமான படிப்பு அல்ல. பெரோயா பட்டணத்தார் ஊக்கமாய், தவறாமல் படிப்பதற்கு, ஓய்வு நாளில் மட்டுமல்லாமல் தினந்தோறும் படிப்பதற்கு நேரத்தை ஒதுக்கினார்கள்.
அதனால் கிடைத்த பலனைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். பெரோயா பட்டணத்திலிருந்த யூதர்களில் அநேகர் நற்செய்திக்குச் செவிசாய்த்து விசுவாசிகள் ஆனார்கள். இப்படி விசுவாசிகளானவர்களில் யூத மதத்திற்கு மதம் மாறிய கிரேக்கர்கள் பலரும் இருந்தார்கள். ஆனால் இந்த விஷயம் பிறருடைய கவனத்தை ஈர்க்காமல் போகவில்லை. தெசலோனிக்கேயிலிருந்த யூதர்களின் காதில் இந்த விஷயம் விழுந்தபோது உடனடியாக பெரோயாவுக்கு வந்து ‘மக்கள் கூட்டத்தினரைக் குழப்பிக் கலகம் உண்டாக்கினார்கள்.’—அப்போஸ்தலர் 17:4, 12, 13, பொ.மொ.
பெரோயாவைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தை பவுல் எதிர்ப்பட்டபோதிலும் வேறொரு இடத்திற்குச் சென்று தன் பிரசங்க ஊழியத்தை தொடர்ந்தார். இந்தச் சமயத்தில் அத்தேனேவுக்குச் செல்லவிருந்த கப்பலில் ஏறினார். (அப்போஸ்தலர் 17:14, 15) இருந்தாலும், பெரோயாவில் பிரசங்கித்ததன் காரணமாக கிறிஸ்தவம் அங்கே வேர்விட்டு வளரத் தொடங்கியதைக் குறித்து அவர் சந்தோஷப்பட்டார். அன்று அப்படி வேர்விட்டு வளரத் தொடங்கிய கிறிஸ்தவம் இன்று கனிகொடுக்கிறது.
ஆம், “எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து” நம்பகமானதையும் உண்மையானதையும் ‘பிடித்துக்கொள்வதற்கு’ வேதவாக்கியங்களைக் கவனமாய் ஆராய்ந்து படிக்கிறவர்கள் பெரோயாவில் (வெர்யாவில்) இன்றும்கூட இருக்கத்தான் செய்கிறார்கள். (1 தெசலோனிக்கேயர் 5:21) அதனால், வளர்ந்து வரும் இரண்டு சபைகள் இன்று அங்கு இருக்கின்றன; அந்தச் சபைகளிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் பவுலைப் போலவே ஊழியத்தில் ஈடுபட்டு பைபிள் செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்கிறார்கள். நல்மனமுள்ளவர்களை அவர்கள் தேடிக் கண்டுபிடித்து, வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுகிறார்கள்; இவ்வாறு பைபிளின் உந்துவிக்கும் சக்தி, உண்மை கடவுளாகிய யெகோவாவை அறிந்துகொள்ள விரும்புகிற எல்லாருக்கும் உதவுவதற்கு வழிசெய்கிறார்கள்.—எபிரெயர் 4:12.
[பக்கம் 13-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
இரண்டாவது மிஷனரி பயணத்தில் பவுல் சென்ற சில இடங்கள்
மீசியா
துரோவா
நெயாப்போலி
பிலிப்பி
மக்கெதோனியா
அம்பிபோலி
தெசலோனிக்கே
பெரோயா
கிரேக்கு
அத்தேனே
கொரிந்து
அகாயா
ஆசியா
எபேசு
ரோது
[பக்கம் 13-ன் படம்]
மகா அலெக்சாந்தரை கிரேக்க கடவுளாகச் சித்தரிக்கும் வெள்ளி நாணயம்
[படத்திற்கான நன்றி]
நாணயம்: Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 14-ன் படம்]
பெரோயாவிலிருந்த (வெர்யாவிலிருந்த) யூத குடியிருப்பின் ஒரு கதவு
[பக்கம் 15-ன் படம்]
இன்றைய பெரோயாவில் (வெர்யாவில்) உள்ள பழமையான ஜெப ஆலயம்