‘பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவனிடமிருந்து’ உதவி
சுமார் 2,000 வருடங்களுக்கு முன்னால் பைபிள் எழுத்தாளராகிய பவுல், “பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன்” என்று யெகோவாவை வர்ணித்தார். (ரோமர் 15:6) யெகோவா, என்றும் மாறாதவரென பைபிள் உறுதியளிக்கிறது; எனவே இன்றும் தமது ஊழியர்களுக்கு அவர் ஆறுதல் அளிக்கிறார் என நாம் நம்பிக்கையோடு இருக்கலாம். (யாக்கோபு 1:17) உண்மையில், உதவி தேவைப்படுவோருக்குப் பல வழிகளில் யெகோவா ஆறுதல் அளிக்கிறார் என பைபிள் சொல்கிறது. அவற்றில் சில வழிகள் யாவை? தம்மிடம் உதவி கேட்டு ஜெபிப்பவர்களுக்குக் கடவுள் பலத்தைத் தருகிறார். சக விசுவாசிகளுக்கு ஆறுதல் அளிக்கும்படி உண்மைக் கிறிஸ்தவர்களைத் தூண்டுகிறார். தம் வார்த்தையாகிய பைபிளில் நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவங்களைப் பதிவுசெய்திருக்கிறார்; விசேஷமாக, பிள்ளையைப் பறிகொடுத்த சோகத்தில் வாடுவோரை அவை பலப்படுத்துகின்றன. ஆறுதல் அளிக்கும் இந்த மூன்று அம்சங்களையும் ஒவ்வொன்றாகக் கவனிப்போம்.
‘யெகோவா கேட்டார்’
நம்முடைய படைப்பாளராகிய யெகோவாவைப்பற்றி தாவீது இவ்வாறு எழுதினார்: “ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்.” (சங்கீதம் 62:8) யெகோவாமீது தாவீது ஏன் இவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்? தாவீது தன்னைப்பற்றி இவ்வாறு எழுதினார்: “இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.” (சங்கீதம் 34:6) துயர்மிகுந்த எல்லாச் சூழ்நிலையிலும் தாவீது கடவுளிடம் உதவி கேட்டு ஜெபித்தார்; யெகோவாவும் அவருக்கு எப்பொழுதும் உதவி செய்தார். தனக்குக் கடவுள் பக்கபலமாய் இருப்பார் என்பதையும் தாங்கிக்கொள்ளும் சக்தியை அளிப்பார் என்பதையும் தாவீது தன்னுடைய அனுபவத்திலிருந்து அறிந்திருந்தார்.
தாவீதுக்குப் பலம் அளித்ததுபோலவே, நெஞ்சைப் பிளக்கும் சோகத்தைத் தாங்கிக்கொள்ள யெகோவா தங்களுக்கும் பலம் அளிப்பார் என்பதை வேதனையில் வாடும் பெற்றோர் அறிந்துகொள்ள வேண்டும். “ஜெபத்தைக் கேட்கிற” உன்னதமானவர் தங்களுக்கு உதவியளிப்பார் என்ற நம்பிக்கையோடு அவர்கள் அவரை அணுகலாம். (சங்கீதம் 65:2) முந்தின கட்டுரையில் சொல்லப்பட்ட வில்லியம் இவ்வாறு கூறுகிறார்: “என்னுடைய மகன் இல்லாமல் ஒரு வினாடிகூட என்னால் உயிர்வாழ முடியாது என்று பல சமயங்களில் நான் உணர்ந்திருக்கிறேன்; இழப்பின் வலியைத் தாங்கிக்கொள்ள யெகோவாவிடம் ஜெபித்திருக்கிறேன். தொடர்ந்து காலம் தள்ளுவதற்குத் தேவையான பலத்தையும் தைரியத்தையும் அவர் எப்பொழுதும் தந்திருக்கிறார்.” அதேபோல நீங்களும் விசுவாசத்தோடு யெகோவாவிடம் ஜெபம் செய்தால் பரலோகத்திலிருக்கிற உன்னதமான தேவன் உங்களைப் பலப்படுத்துவார். “உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப்பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்” என்று தமக்குச் சேவைசெய்ய நாடுவோருக்கு யெகோவா தேவனே வாக்குறுதி அளிக்கிறார்.—ஏசாயா 41:13.
சக விசுவாசிகளிடமிருந்து ஆதரவு
பெரும்பாலும், குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோர் தனிமையில் அழுது தீர்த்து, தங்களுடைய உணர்ச்சிகளை மேற்கொள்வதற்கு நேரம் தேவைப்படுகிறது. என்றாலும், நீண்ட காலத்திற்கு மற்றவர்களுடைய தோழமையைத் தவிர்ப்பது ஞானமல்ல. நீதிமொழிகள் 18:1 சொல்கிறபடி, “பிரிந்துபோகிறவன்” தீங்கை அனுபவிக்கலாம். எனவே, மனவேதனையுள்ளவர்கள் தனிமை வலையில் வீழ்ந்து விடாமலிருக்கக் கவனமாய் இருக்கவேண்டும்.
கடவுள் பயமுள்ள நண்பர்கள் துன்பப்படுவோருக்கு பயனுள்ள விதத்தில் உதவ முடியும். “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்” என்று நீதிமொழிகள் 17:17 சொல்கிறது. முந்தின கட்டுரையில் குறிப்பிடப்பட்ட லூஸியும் தன்னுடைய மகனை இழந்த பிறகு உண்மையான நண்பர்கள் அளித்த ஆறுதலிலிருந்து பலம் பெற்றார். சபையிலுள்ள நண்பர்கள் தனக்கு அளித்த உதவியைப் பாராட்டி அவர் இவ்வாறு சொல்கிறார்: “சில சமயங்களில் அவர்கள் அதிகம் பேசாவிட்டாலும் அவர்களுடைய வருகையே எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. நான் தனிமையில் வாடிய நாட்களில் ஒரு தோழி என்னைப் பார்க்க வந்தார். வீட்டில் நான் அழுதுகொண்டிருப்பேன் என்பதை அவர் அறிந்திருந்தார்; அடிக்கடி வீட்டிற்கு வந்து என்னோடு சேர்ந்து அவரும் அழுதார். இன்னொருவர் என்னை உற்சாகப்படுத்துவதற்கு ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். மற்றவர்களும் எங்களை விருந்துக்காக தங்களுடைய வீட்டிற்கு அழைத்தார்கள், இன்னமும் அழைக்கிறார்கள்.”
பிள்ளையைப் பறிகொடுத்த பெற்றோரின் மனதைக் கிழிக்கும் சோகம் எளிதில் மறையாவிட்டாலும், கடவுளிடம் ஜெபம் செய்வதும் சக விசுவாசிகளுடன் கூட்டுறவு கொள்வதும் அவர்களுக்கு உண்மையான ஆறுதலைத் தரும். தங்கள் பிள்ளைகளை இழந்த ஏராளமான கிறிஸ்தவ பெற்றோர் யெகோவா தங்களோடு இருப்பதாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆம், யெகோவா, “இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.”—சங்கீதம் 147:3.
ஆறுதல் அளிக்கும் பைபிள் பதிவுகள்
ஜெபம், பலப்படுத்தும் சக விசுவாசிகளின் கூட்டுறவு ஆகியவற்றோடுகூட கடவுளின் வார்த்தையும் துக்கப்படுவோருக்கு ஆறுதலின் ஊற்றாக இருக்கிறது. இறந்தோரைத் திரும்பவும் உயிரடையச்செய்வதன்மூலம் பிள்ளையைப் பறிகொடுத்த பெற்றோரின் துயரத்தைப் போக்க இயேசுவுக்கு உள்ளப்பூர்வமான ஆவலும் சக்தியும் இருப்பதை பைபிள் பதிவுகள் காட்டுகின்றன. அத்தகைய பதிவுகள் வேதனைப்படுவோருக்கு ஆறுதல் அளிக்கின்றன. அந்தப் பதிவுகளில் இரண்டை இப்போது நாம் கவனிக்கலாம்.
நாயீன் என்னும் ஊரில் ஒரு சவ அடக்க ஊர்வலத்தை இயேசு பார்த்தபோது என்ன நடந்தது என்பதை லூக்கா 7-ஆம் அதிகாரம் விவரிக்கிறது. ஒரு விதவையின் ஒரே மகனை மக்கள் கிட்டத்தட்ட அடக்கம் செய்யப்போகிற சூழ்நிலை. வசனம் 13 இவ்வாறு சொல்கிறது: ‘கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி: அழாதே என்று சொன்னார்.’
தன்னுடைய மகனின் சவ அடக்கத்தில் ஒரு தாய் அழுவதை நிறுத்தச்சொல்ல பொதுவாக யாருக்கும் துணிச்சல் வராது. ஆனால், இயேசு ஏன் அப்படிச் சொன்னார்? ஏனென்றால், அந்தத் தாயின் துயரம் பறந்துவிடப்போகிறது என்பதை அவர் அறிந்திருந்தார். பதிவு தொடர்ந்து இவ்வாறு சொல்கிறது: “[இயேசு] கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.” (லூக்கா 7:14, 15) அப்போதும் அந்தத் தாய் அழுதிருப்பாள், ஆனால் அது துக்கக் கண்ணீரல்ல, ஆனந்தக் கண்ணீர்!
இன்னொரு சந்தர்ப்பத்தில், மரண அவஸ்தைப்பட்ட தன்னுடைய 12 வயது மகளுக்கு உதவும்படி யவீரு என்பவர் இயேசுவை அணுகினார். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அவள் இறந்துவிட்டாள் என்ற செய்தி வந்தது. இந்தச் செய்தி யவீருவின் இதயத்தைச் சுக்குநூறாக்கியது, ஆனால் இயேசு அவரிடம் இவ்வாறு சொன்னார்: “பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு.” அவருடைய வீட்டில் அந்தப் பிள்ளை இருந்த இடத்திற்கு இயேசு சென்றார். அவளுடைய கையைப் பிடித்து, “சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன்” என்றார். என்ன நடந்தது? “உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்.” அவளுடைய பெற்றோர் எப்படி உணர்ந்திருப்பார்கள்! “அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டு பிரமித்தார்கள்.” யவீருவும் அவருடைய மனைவியும் தங்களுடைய மகளை வாரியணைத்துக்கொண்டு மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அது அவர்களுக்கு ஒரு கனவு காண்பதைப்போல இருந்தது.—மாற்கு 5:22-24, 35-43.
பிள்ளைகளின் உயிர்த்தெழுதல் பற்றிய விரிவான இந்த பைபிள் பதிவுகள், இன்று துயரப்படும் பெற்றோர் எதை எதிர்நோக்கியிருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன. இயேசு இவ்வாறு சொன்னார்: “பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்.” (யோவான் 5:28, 29) தம்முடைய மகனான இயேசு இறந்தவர்களை உயிர்ப்பிக்க வேண்டுமென யெகோவா நோக்கம் கொண்டிருக்கிறார். “எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன்” என இயேசு சொல்லும்போது மரணமடைந்த லட்சோபலட்சம் பிள்ளைகள் ‘அவருடைய சத்தத்தைக் கேட்பார்கள்.’ அந்த இளம் பிள்ளைகள் மீண்டும் பேசுவார்கள், நடப்பார்கள். யவீருவையும் அவருடைய மனைவியையும்போல அந்தப் பிள்ளைகளின் பெற்றோரும் ‘மிகுந்த ஆச்சரியப்பட்டு பிரமிப்பார்கள்.’
உங்கள் மகனையோ மகளையோ மரணத்தில் நீங்கள் பறிகொடுத்திருந்தால், உயிர்த்தெழுதல்மூலம் உங்களுடைய சோகத்தைச் சந்தோஷமாக மாற்ற யெகோவாவால் முடியும் என்பதைத் தயவுசெய்து அறிந்துகொள்ளுங்கள். இந்த ஒளிமயமான எதிர்கால வாய்ப்பிலிருந்து பயனடைவதற்கு, சங்கீதக்காரனின் இந்த அறிவுரைக்குக் கீழ்ப்படியுங்கள்: “கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள், அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள். . . . அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும் . . . நினைவுகூருங்கள்.” (சங்கீதம் 105:4, 6) ஆம், உண்மையான கடவுளாகிய யெகோவாவை வணங்குங்கள், அவர் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அவரை வணங்குங்கள்.
நீங்கள் ‘யெகோவாவை நாடும்போது’ உங்களுக்கு உடனடியாக என்ன பலன் கிடைக்கும்? கடவுளிடம் ஜெபிப்பதன்மூலம் பலத்தைப் பெறுவீர்கள், உண்மையான கிறிஸ்தவ நண்பர்களின் அன்பான கவனிப்பின்மூலம் ஆறுதலை அடைவீர்கள், கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதன்மூலம் புதுத் தெம்பை உணருவீர்கள். மேலுமாக, உங்களுடைய நன்மைக்காகவும், மரணத்தில் இழந்துபோன உங்களுடைய பிள்ளைக்காகவும் எதிர்காலத்தில் யெகோவா செய்யப்போகும் ‘அதிசயங்களையும் அற்புதங்களையும்’ நீங்கள் அனுபவிப்பீர்கள்.
[பக்கம் 5-ன் பெட்டி]
“இரண்டு பிள்ளைகளைப் பறிகொடுத்த அந்தப் பெண்ணை அழைத்து வாருங்கள்”
நைஜீரிய தம்பதியான கஹின்டெவும் பின்டூவும் யெகோவாவின் சாட்சிகள்; தங்களுடைய பிள்ளைகளில் இருவரை கார் விபத்தில் பறிகொடுத்தார்கள். இந்தக் கொடிய இழப்பினால் அவர்கள் சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்திருக்கிறார்கள். என்றாலும், யெகோவாமீது அவர்களுக்கு இருக்கிற நம்பிக்கை அவர்களைப் பலப்படுத்துகிறது; அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அவர்கள் தொடர்ந்து பைபிள் செய்தியைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
கஹின்டெவும் பின்டூவும் காட்டிய சாந்தத்தையும் மனவுறுதியையும் மற்றவர்கள் கவனித்தார்கள். ஒரு நாள் பின்டூவின் தோழிகளில் ஒருவரிடம் திருமதி யூகோலீ இவ்வாறு சொன்னார்: “ஒரே சமயத்தில் இரண்டு பிள்ளைகளைப் பறிகொடுத்த அந்தப் பெண்ணை அழைத்து வாருங்கள்; அவள் இன்னுமா பைபிளின் செய்தியைப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறாள். துயரத்தைத் தாங்கிக்கொள்ள அவளுக்கு எது சக்தி அளிக்கிறது என்பதை நான் தெரிந்துகொள்ள வேண்டும்!” அந்தப் பெண்ணின் வீட்டிற்கு பின்டூ சென்றபோது, இவ்வாறு திருமதி யூகோலீ கேட்டார்: “உங்கள் பிள்ளைகளைக் கொன்ற கடவுளைப்பற்றி இன்னும் நீங்கள் ஏன் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறீர்கள். என்னுடைய ஒரே மகளை கடவுள் சாகடித்ததிலிருந்து கடவுளுக்கும் எனக்கும் இருந்த உறவு அறுந்துவிட்டது.” மக்கள் ஏன் மரணமடைகிறார்கள் என்பதையும் மரணமடைந்த அன்பானவர்கள் உயிர்த்தெழுந்து வருவார்கள் என நாம் ஏன் உறுதியாக நம்பலாம் என்பதையும் பைபிளைப் பயன்படுத்தி பின்டூ விளக்கினார்.—அப்போஸ்தலர் 24:15; ரோமர் 5:12.
அதன் பிறகு, திருமதி யூகோலீ இவ்வாறு சொன்னார்: “கடவுள்தான் மக்களுடைய சாவுக்குக் காரணமென்று நான் நினைத்திருந்தேன். ஆனால் இப்பொழுது நான் உண்மையைத் தெரிந்துகொண்டேன்.” கடவுளுடைய வாக்குறுதிகளைப்பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்க அவர் தீர்மானித்தார்.
[பக்கம் 6-ன் பெட்டி]
‘உதவி செய்ய வேண்டுமென விரும்புகிறேன், ஆனால் எப்படியென்றுதான் தெரியவில்லை’
பிள்ளையைப் பறிகொடுத்த பெற்றோரும் பிள்ளையின் உடன்பிறந்தவர்களும் துக்கித்துக்கொண்டிருக்கையில் அவர்களுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டுமென நண்பர்கள் விரும்பலாம்; ஆனால் அதேசமயம், தவறாக எதையாவது செய்துவிட்டு அல்லது பேசிவிட்டு வேதனையைக் கூட்டிவிடுவோமோ என்றும் அவர்கள் பயப்படலாம். ‘உதவி செய்ய வேண்டுமென விரும்புகிறேன், ஆனால் எப்படியென்றுதான் தெரியவில்லை’ என்று நினைப்பவர்களுக்கு இதோ சில ஆலோசனைகள்:
❖ என்ன சொல்வதென்று அல்லது என்ன செய்வதென்று தெரியாததால் பிள்ளையைப் பறிகொடுத்த பெற்றோரிடமிருந்து ஒதுங்கிப் போகாதீர்கள். நீங்கள் அங்கு வந்திருப்பதே அவர்களைப் பலப்படுத்தும். என்ன சொல்வதென்றே உங்களுக்குத் தெரியவில்லையா? கட்டியணைத்து, “நினைக்கவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்று மனப்பூர்வமாகச் சொல்வது நீங்கள் அவர்கள்மேல் அக்கறையாக இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தும். நீங்கள் அழுவது அவர்களுடைய துக்கத்தைக் கிளறிவிடுமோ எனப் பயப்படுகிறீர்களா? “அழுகிறவர்களுடனே அழுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 12:15) அவர்களுடைய வேதனையை நீங்கள் பகிர்ந்துகொள்ளுகிறீர்கள் என்பதையே உங்களுடைய கண்ணீர் காட்டும், அது அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்.
❖ முன்முயற்சி எடுங்கள். உங்களால் அந்தக் குடும்பத்திற்காக எளிமையான உணவு தயாரிக்க முடியுமா? அப்படி அப்படியே கிடக்கும் அழுக்குப் பாத்திரங்களைக் கழுவ முடியுமா? அவர்களுக்குத் தேவையானதை வாங்கிவர முடியுமா? அவர்களிடம், “உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?” எனக் கேட்காதீர்கள். நீங்கள் அதை மனப்பூர்வமாகவே சொல்லியிருக்கலாம்; இருந்தாலும் அவர்களுக்கு உதவிசெய்ய முடியாத அளவுக்கு உங்களுக்கு அதிக வேலை இருப்பதுபோல அந்த வார்த்தைகள் அர்த்தப்படுத்தும். மாறாக, “உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும்?” என்று கேட்டு, அவர்கள் சொல்வதைச் செய்யுங்கள். ஆனால், அவர்களுடைய சொந்த அறைகளில் நுழைவதையோ வாழ்க்கையின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதையோ தவிர்த்திடுங்கள்.
❖ “உங்களுக்கு எப்படி இருக்குமென்று எனக்குத் தெரியும்” என்று சொல்லாதீர்கள். அன்பான ஒருவர் மரணமடையும்போது ஒவ்வொருவரும் வித்தியாசமாக உணருகிறார்கள். நீங்களே ஒரு பிள்ளையைப் பறிகொடுத்தவர்களாய் இருந்தாலும்கூட அவர்கள் எவ்வாறு உணருகிறார்கள் என்பது உங்களுக்குத் திட்டவட்டமாகத் தெரியாது.
❖ அந்தக் குடும்பம் ஓரளவு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கே அதிக காலம் எடுக்கும். உங்களால் முடிந்தளவு தொடர்ந்து உதவி செய்யுங்கள். பிள்ளையைப் பறிகொடுத்த குடும்பத்திற்குப் பெரும்பாலும் ஆரம்பத்தில்தான் அதிக கவனம் செலுத்தப்படுகிறது, ஆனால் அவர்களுக்குத் தொடர்ந்து உதவி தேவைப்படுகிறது. வாரக்கணக்கானாலும் சரி மாதக்கணக்கானாலும் சரி, அவர்களுடைய தேவைகளைக் குறித்து கவனமாயிருங்கள்.a
[அடிக்குறிப்பு]
a பிள்ளையை இழந்து தவிப்பவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதன்பேரில் கூடுதலான தகவலுக்கு, நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் . . . என்ற சிற்றேட்டில் பக்கங்கள் 20-4-ல் உள்ள “மற்றவர்கள் எவ்வாறு உதவலாம்?” என்ற அதிகாரத்தைக் காண்க; இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 7-ன் படங்கள்]
பிள்ளைகளை உயிர்த்தெழுப்ப இயேசுவுக்கு உள்ளப்பூர்மான ஆவலும் சக்தியும் இருப்பதை பைபிள் பதிவுகள் காட்டுகின்றன