வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
கிறிஸ்தவர்கள் பரலோகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவது எப்போது முடிவுக்கு வரும்?
இந்தக் கேள்விக்குத் திட்டவட்டமான பதிலை பைபிள் கொடுப்பதில்லை. ஆனால் இயேசுவின் சீஷர்கள் பரலோக சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அபிஷேகம் செய்யப்படுவது, பொ.ச. 33-ல் துவங்கியது என்பதை நாம் அறிவோம். (அப்போஸ்தலர் 2:1-4) அப்போஸ்தலர்களின் மரணத்திற்குப் பின்னர், ‘கோதுமையாகிய’ அபிஷேகம் செய்யப்பட்ட உண்மைக் கிறிஸ்தவர்களோடு ‘களைகளாகிய’ போலி கிறிஸ்தவர்களும் சேர்ந்து “வளர” துவங்கினார்கள் என்பதையும் நாம் அறிவோம். (மத்தேயு 13:24-30) பிற்பாடு, 1800-களின் இறுதியிலிருந்து அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மறுபடியும் முனைப்பாய்த் தெரியும் விதத்தில் செயல்படத் தொடங்கினார்கள். 1919-ல் ‘பூமியின் பயிரை’ அறுக்கும் வேலை துவங்கியது; அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் மீதியானோரைக் கூட்டிச்சேர்க்கும் வேலையும் இதில் உட்பட்டிருந்தது.—வெளிப்படுத்துதல் 14:15, 16.
1800-களின் பிற்பகுதி தொடங்கி 1931 வரைக்கும், கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்களில் மீதியானோரைக் கூட்டிச்சேர்ப்பதே பிரசங்க வேலையின் முக்கிய நோக்கமாயிருந்தது. 1931-ல் பைபிள் மாணாக்கர்கள் யெகோவாவின் சாட்சிகள் என்ற வேதப்பூர்வமான பெயரை தங்களுக்குச் சூட்டிக்கொண்டார்கள். இந்த ஒப்பற்ற பெயர் மத்தேயு 20:1-16-லுள்ள இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்டிருக்கும் “பணம்”தான் அதாவது டெனாரியஸ்தான் என்று நவம்பர் 15, 1933-ல் வெளிவந்த ஆங்கில காவற்கோபுர இதழ் கூறியது. அந்த உவமையில் சொல்லப்பட்டிருக்கும் 12 மணிநேரம், 1919 முதல் 1931 வரையான 12 வருடங்களுக்கு ஒத்திருப்பதாகக் கருதப்பட்டது. அதைத் தொடர்ந்து பல வருடங்களாகவே பரலோக ராஜ்யத்திற்கான அழைப்பு 1931-ல் முடிவடைந்தது என்றும் கிறிஸ்துவோடு உடன் சுதந்திரவாளிகளாக இருப்பதற்கு 1930-31 வருடங்களில் அழைக்கப்பட்டவர்களே “பிந்தி” அழைக்கப்பட்டவர்கள் என்றும் கருதப்பட்டு வந்தது. (மத்தேயு 20:6-8) என்றாலும், 1966-ல் அந்த உவமையைப் பற்றிய புரிந்துகொள்ளுதலில் ஒரு திருத்தம் செய்யப்பட்டது; அதனால், அந்த உவமைக்கும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் அழைப்பு முடிவுக்கு வருவதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்பது தெளிவாகியது.
வெளிப்படுத்துதல் 7:9-15-ல் சொல்லப்பட்டிருக்கும் ‘திரள் கூட்டத்தினரே’ ‘வேறே ஆடுகள்’ என 1935-ல் புரிந்துகொள்ளப்பட்டது; பூமிக்குரிய நம்பிக்கையுடைய இந்தக் கிறிஸ்தவர்கள், “கடைசி நாட்களில்” கூட்டிச் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர்கள் ஒரு தொகுதியாக அர்மகெதோனை தப்பிப்பிழைப்பார்கள் என்றும் புரிந்துகொள்ளப்பட்டது. (யோவான் 10:16; 2 தீமோத்தேயு 3:1; வெளிப்படுத்துதல் 21:3, 4) அந்த வருடத்திற்குப் பிறகு, திரள் கூட்டத்தினரைக் கூட்டிச்சேர்ப்பதே சீஷராக்கும் வேலையின் முக்கிய நோக்கமாக ஆனது. எனவே, 1935-ல் பரலோக அழைப்பு முடிவடைந்துவிட்டதென குறிப்பாக 1966-க்குப் பிறகு நம்பப்பட்டது. 1935-க்குப் பிறகு முழுக்காட்டுதல் பெற்ற எல்லாருமே தாங்கள் பூமிக்குரிய நம்பிக்கையை உடையவர்கள் என்பதை உணர்ந்தபோது இந்தக் கருத்து சரியானதுபோல் தெரிந்தது. அதைத் தொடர்ந்து பரலோகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எவரும், விசுவாசத்தில் வழுவிப்போன அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்குப் பதிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே என்று நம்பப்பட்டது.
அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் வேண்டுமென்றே சத்தியத்திலிருந்து விலகிச்செல்லும்போது, அவருடைய இடத்திற்கு வேறொருவரை யெகோவா அழைக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. (ரோமர் 11:17-22) என்றாலும், உண்மையான அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் அநேகர் அவ்வாறு அவிசுவாசிகளாக மாறியிருக்க வாய்ப்பில்லை. மறுபட்சத்தில், காலம் செல்லச் செல்ல, 1935-க்குப் பிறகு முழுக்காட்டுதல் பெற்ற சிலர் பரலோகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக பரிசுத்த ஆவி அவர்களுக்குச் சாட்சிகொடுத்திருக்கிறது. (ரோமர் 8:16, 17) எனவே, கிறிஸ்தவர்கள் பரலோகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவது எப்போது முடிவடையும் என்று நம்மால் திட்டவட்டமாகச் சொல்ல முடியாதெனத் தோன்றுகிறது.
தான் இப்போது அபிஷேகம் செய்யப்பட்ட ஒருவரென தன் இருதயத்தில் உறுதிசெய்து நினைவு ஆசரிப்பின் அடையாளச் சின்னங்களில் பங்கெடுக்கத் துவங்கியிருப்பவரை நாம் எப்படிக் கருத வேண்டும்? அவரைத் தப்புக்கணக்குப் போடக்கூடாது. அவர் தகுதிபெற்றவரா என்பது அவருக்கும் யெகோவாவுக்கும் இடையிலான விஷயம். (ரோமர் 14:12) ஆனாலும், உண்மையான அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் தங்களை விசேஷமானவர்களாகக் கருதும்படி எதிர்பார்ப்பதில்லை. தாங்கள் அபிஷேகம் செய்யப்பட்டவர்களாக இருப்பதால், அனுபவமுள்ள திரள் கூட்டத்தினர் சிலர் பெற்றிருப்பதைக் காட்டிலும் விசேஷ “அறிவொளியை” பெறுவதாக அவர்கள் நம்புவதில்லை. தங்கள் தோழர்களான வேறே ஆடுகளைவிட தங்களுக்கு பரிசுத்த ஆவி அதிகமாக அளிக்கப்பட்டிருக்கிறது என்பதாக அவர்கள் எண்ணுவதில்லை; தங்களுக்கு மற்றவர்கள் சேவை செய்ய வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்ப்பதுமில்லை, அடையாளச் சின்னங்களில் பங்கெடுப்பதால் சபை மூப்பர்களைவிட மேலானவர்களாகத் தங்களை நினைப்பதுமில்லை. முதல் நூற்றாண்டிலிருந்த அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் சிலர் மூப்பர்களாகவோ உதவி ஊழியர்களாகவோ ஆவதற்கு தகுதி பெறவில்லை என்பதை அவர்கள் தாழ்மையோடு நினைத்துப் பார்க்கிறார்கள். (1 தீமோத்தேயு 3:1-10, 12, 13; தீத்து 1:5-9; யாக்கோபு 3:1) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களில் சிலர் ஆன்மீக ரீதியில் பலவீனராகவும்கூட இருந்தார்கள். (1 தெசலோனிக்கேயர் 5:14) மேலும், சகோதரிகள் அபிஷேகம் செய்யப்பட்டவர்களாக இருந்தபோதிலும்கூட சபையில் அவர்கள் போதிக்கவில்லை.—1 தீமோத்தேயு 2:11, 12.
எனவே, தங்கள் தோழர்களான வேறே ஆடுகளோடு சேர்ந்து அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் ஆன்மீக ரீதியில் பலமுள்ளவர்களாக இருக்கப் பிரயாசப்படுகிறார்கள், ஆவியின் கனியை வளர்த்துக்கொள்கிறார்கள், சபையின் சமாதானத்தைக் கட்டிக்காக்கிறார்கள். ஆளும் குழுவின் அறிவுரைப்படி எல்லா கிறிஸ்தவர்களும், அவர்கள் அபிஷேகம் செய்யப்பட்டவர்களாக இருந்தாலும்சரி வேறே ஆடுகளாக இருந்தாலும்சரி, நற்செய்தியைப் பிரசங்கிப்பதிலும் சீஷராக்குவதிலும் தீவிரமாய் ஈடுபடுகிறார்கள். அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் இந்தப் பூமியில் எவ்வளவு காலம் இருக்க வேண்டுமென்று கடவுள் விரும்புகிறாரோ, அவ்வளவு காலம் யெகோவாவின் ஊழியர்களாக இந்த வேலையைச் செய்வதில் அவர்கள் திருப்தி காண்கிறார்கள்.