ராஜ்யத்தைப் பெறுவதற்கு தகுதியுள்ளவர்களாக எண்ணப்படுகிறவர்கள்
‘[தேவனுடைய] ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரரென்று எண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமான தீர்ப்புச் செய்கிறவர் என்பதற்கு, அதுவே அத்தாட்சியாயிருக்கிறது.’—2 தெ. 1:5
1, 2. நியாயத்தீர்ப்பைக் குறித்ததில் கடவுளுடைய நோக்கம் என்ன, அதைச் செய்யப் போகிறவர் யார்?
அது சுமார் பொ.ச. 50-ஆம் வருடம். அப்போஸ்தலனாகிய பவுல் அப்போது அத்தேனே பட்டணத்தில் இருந்தார். அங்கே திரும்பிய திக்கெல்லாம் மக்கள் விக்கிரகங்களை வழிபட்டு வந்ததைக் கண்டு அவர் அமைதியிழந்தார். அவர்களுடைய மனதைச் சென்றெட்டும் விதத்தில் நல்ல சாட்சி கொடுக்கத் தூண்டப்பட்டார். அவர் தன்னுடைய பேச்சை ஓர் அறிவிப்புடன் நிறைவு செய்தார்; அது அவருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த புறமத மக்களின் கவனத்தை நிச்சயம் கவர்ந்திருக்கும். அவர் சொன்னதாவது: “இப்பொழுதோ மனந்திரும்ப வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் [கடவுள்] கட்டளையிடுகிறார். மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார்.”—அப். 17:30, 31.
2 எதிர்காலத்தில் மனிதரை நியாயந்தீர்ப்பதற்காக கடவுள் ஒரு நாளைக் குறித்துவைத்திருக்கிறார்; இது சிந்தித்துப் பார்க்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், அல்லவா? அத்தேனே பட்டணத்தில் பவுல் பேசியபோது இந்த நியாயத்தீர்ப்பைச் செய்யப்போகிற நபரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவே அந்நபர் என்பது நமக்குத் தெரியும். இயேசு நியாயந்தீர்க்கையில், மனிதர் ஜீவனைப் பரிசாகப் பெறுவார்கள் அல்லது மரணத்தைத் தண்டனையாகப் பெறுவார்கள்.
3. ஆபிரகாமுடன் யெகோவா ஏன் உடன்படிக்கை செய்தார், அதன் நிறைவேற்றத்தில் முக்கியப் பங்குவகிப்பவர்கள் யார்?
3 நியாயத்தீர்ப்பு நாள் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு நீடித்த ஒரு காலப்பகுதியாகும். கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவான இயேசு, யெகோவாவின் பிரதிநிதியாக அதைத் தலைமைதாங்கி நடத்துவார். ஆனால் அவர் இவ்வேலையை தனியாகச் செய்ய மாட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்கு நீடித்திருக்கும் அந்த நாளில் இயேசுவுடன் சேர்ந்து ஆட்சி செய்வதற்கும் நியாயத்தீர்ப்பு செய்வதற்கும் மனிதரிலிருந்து சிலரை யெகோவா தேர்ந்தெடுக்கிறார். (லூக்கா 22:29, 30-ஐ ஒப்பிடவும்.) கிட்டத்தட்ட 4,000 ஆண்டுகளுக்கு முன்பு தம்முடைய உண்மையுள்ள ஊழியரான ஆபிரகாமுடன் யெகோவா உடன்படிக்கை செய்தார்; அப்போதே இந்த நியாயத்தீர்ப்பு நாளுக்கான அடித்தளத்தைப் போட்டார். (ஆதியாகமம் 22:17, 18-ஐ வாசிக்கவும்.) அந்த உடன்படிக்கை பொ.ச.மு. 1943-ஆம் வருடத்தில் அமலுக்கு வந்திருக்க வேண்டும். அந்த உடன்படிக்கையால் மனிதர் எப்படிப் பயனடைவார்கள் என்பதைப்பற்றி ஆபிரகாமால் முழுமையாகப் புரிந்திருக்க முடியாதுதான். என்றாலும், ஆபிரகாமின் உடன்படிக்கையில் சொல்லப்பட்டிருப்பதன் அடிப்படையில் இதை இன்று நாம் புரிந்திருக்கிறோம்; அதாவது, மனிதகுலத்தை நியாயந்தீர்ப்பதற்கான கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் ஆபிரகாமின் வித்துவாக இருப்பவர்கள் முக்கியப் பங்குவகிக்கிறார்கள் என்பதைப் புரிந்திருக்கிறோம்.
4, 5. (அ) ஆபிரகாமுடைய வித்துவின் முக்கிய பாகமாக இருப்பவர் யார், ராஜ்யத்தைப்பற்றி அவர் என்ன சொன்னார்? (ஆ) கடவுளுடைய ராஜ்யத்தில் பங்குகொள்வதற்கான நம்பிக்கை எப்போது கொடுக்கப்பட்டது?
4 ஆபிரகாமுடைய வித்துவின் அல்லது சந்ததியின் முக்கியப் பாகமாக நிரூபித்தவர் இயேசு; அவர் பொ.ச. 29-ல் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டு, வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக அல்லது கிறிஸ்துவாக ஆனார். (கலா. 3:16) அதற்குப்பின் வந்த மூன்றரை ஆண்டுகளுக்கு ராஜ்யத்தின் நற்செய்தியை யூத மக்களுக்கு அவர் பிரசங்கித்தார். முழுக்காட்டுபவராகிய யோவான் கைது செய்யப்பட்ட பிறகு, இந்த ராஜ்யத்தில் மற்றவர்களும் அங்கத்தினராக ஆவார்கள் என்று இயேசு தெரிவித்தார். அதை அவர் பின்வருமாறு சொன்னார்: “யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது [“தீவிரமாய் அடைய முயலும் லட்சியமாய் இருக்கிறது,” NW]; பலவந்தம்பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.”—மத். 11:12.
5 ஆர்வத்துக்குரிய விஷயம் என்னவென்றால், பரலோக ராஜ்யத்தைப் ‘பிடித்துக்கொள்ள’ போகிறவர்களைப்பற்றி குறிப்பிடுவதற்குச் சற்று முன்புதான் இயேசு இவ்வாறு சொன்னார்: “ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோக ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்.” (மத். 11:11) ஏன் அவ்வாறு சொன்னார்? ஏனென்றால், பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளில் சீஷர்கள்மீது பரிசுத்த ஆவி பொழியப்படும்வரை கடவுளுடைய ராஜ்யத்தில் பங்குகொள்வதற்கான நம்பிக்கை எவருக்கும் கொடுக்கப்படவில்லை. அதற்குள் முழுக்காட்டுபவராகிய யோவான் இறந்து விட்டிருந்தார்.—அப். 2:1-4.
ஆபிரகாமுடைய வித்துவின் பாகமானோர் நீதியுள்ளவர்களாக அறிவிக்கப்படுதல்
6, 7. (அ) ஆபிரகாமின் வித்து எந்த விதத்தில் “வானத்து நட்சத்திரங்களைப்போல” ஆகவிருந்தது? (ஆ) ஆபிரகாம் என்ன ஆசீர்வாதத்தைப் பெற்றார், அதைப்போன்ற என்ன ஆசீர்வாதத்தை அவருடைய வித்துவின் பாகமானோர் பெறுகிறார்கள்?
6 ஆபிரகாமின் வித்து “வானத்து நட்சத்திரங்களைப்போலவும்” கடற்கரை மணலைப்போலவும் திரளாகப் பெருகும் என்று கடவுள் அவரிடம் தெரிவித்தார். (ஆதி. 13:16; 22:17) சொல்லப்போனால், ஆபிரகாமின் காலத்தில், இந்த வித்துவின் பாகமாக இருக்கப்போகிறவர்கள் எத்தனை பேர் என்பதை மனிதர் அறிந்துகொள்ள முடியவில்லை. என்றாலும், ஆபிரகாமுடைய ஆவிக்குரிய வித்துவின் திட்டவட்டமான எண்ணிக்கை படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டது. இயேசுவைத் தவிர, அதில் பாகம் வகிப்பவர்களின் எண்ணிக்கை 1,44,000.—வெளி. 7:4; 14:1.
7 ஆபிரகாமின் விசுவாசத்தைக் குறித்து கடவுளுடைய வார்த்தை இவ்வாறு குறிப்பிடுகிறது: “[ஆபிரகாம்] கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.” (ஆதி. 15:5, 6) எந்த மனிதனும் முழுமையான கருத்தில் நீதிமான் இல்லை என்பது உண்மைதான். (யாக். 3:2) இருந்தாலும், ஆபிரகாம் விசுவாசத்தில் தலைசிறந்து விளங்கியதால், ஒரு நீதிமானிடம் நடந்துகொள்வதுபோல யெகோவா அவரிடம் நடந்துகொண்டார்; அவரைத் தம் சிநேகிதன் என்றும்கூட அழைத்தார். (ஏசா. 41:8) இயேசுவுடன் சேர்ந்து ஆபிரகாமுடைய ஆவிக்குரிய வித்துவின் பாகமாக இருப்பவர்களும்கூட நீதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்; இதனால் ஆபிரகாம் பெற்றுக்கொண்டதைக் காட்டிலும் ஏராளமான ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள்.
8. ஆபிரகாமுடைய வித்துவின் பாகமாக இருப்பவர்கள் என்னென்ன ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள்?
8 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் இயேசுவின் மீட்கும் பலியில் விசுவாசம் வைப்பதால் நீதியுள்ளவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். (ரோ. 3:24, 28) யெகோவாவின் பார்வையில், அவர்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற்றவர்களாக இருக்கிறார்கள். எனவே, கடவுளுடைய ஆவிக்குரிய குமாரர்களாகவும் இயேசுவின் சகோதரர்களாகவும் இருப்பதற்கு பரிசுத்த ஆவியால் அவர்கள் அபிஷேகம் பெற முடியும். (யோவா. 1:12, 13) அவர்கள் புதிய உடன்படிக்கைக்குள் வருகிறார்கள்; அதோடு ஒரு புதிய தேசமாக, ‘தேவனுடைய இஸ்ரவேலாக’ ஆகிறார்கள். (கலா. 6:16; லூக். 22:20) இவை அனைத்துமே அவர்களுக்குக் கிடைக்கும் ஒப்பற்ற பாக்கியம், அல்லவா? அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்காக கடவுள் இவற்றையெல்லாம் செய்வதால், பூமியில் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்பு அவர்களுக்கு இல்லை. நியாயத்தீர்ப்பு நாளில் இயேசுவுடன் இருப்பதும் பரலோகத்தில் அவருடன் சேர்ந்து அரசாளுவதும் அவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியைத் தரும்; அதன் காரணமாக பூமியில் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்பை அவர்கள் தியாகம் செய்கிறார்கள்.—ரோமர் 8:17-ஐ வாசிக்கவும்.
9, 10. (அ) கிறிஸ்தவர்கள் முதன்முதலாக பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டது எப்போது, அது முதற்கொண்டு அவர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது? (ஆ) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் என்ன உதவியைப் பெற்றார்கள்?
9 நியாயத்தீர்ப்பு நாளில் இயேசுவுடன் சேர்ந்து ஆட்சி செய்வதற்கான வாய்ப்பு பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளில் விசுவாசமுள்ள மனிதருக்குக் கொடுக்கப்பட்டது. அப்போது, இயேசுவின் சீஷர்கள் சுமார் 120 பேர் பரிசுத்த ஆவியால் முழுக்காட்டப்பட்டார்கள்; இவ்வாறு அவர்கள் முதன்முதலில் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாக ஆனார்கள். இருந்தாலும், பரலோகத்தில் நித்திய வாழ்க்கையைப் பெறுவதற்கான ஆரம்பப் படியாகத்தான் அது அவர்களுக்கு இருந்தது. அது முதற்கொண்டு, சாத்தான் எப்படிப்பட்ட சோதனைகளைக் கொண்டுவந்தாலும்சரி, அவர்கள் யெகோவாமீது பற்றுள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டியிருந்தது. பரலோகத்திலே ஜீவகிரீடத்தைப் பெற வேண்டுமென்றால், மரணபரியந்தம் அவர்கள் உண்மையுடனிருக்க வேண்டியிருந்தது.—வெளி. 2:10.
10 இந்த இலக்கை அடைய அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு அறிவுரையும் ஊக்குவிப்பும் தேவைப்பட்டது. எனவே, யெகோவா தம்முடைய வார்த்தையையும் கிறிஸ்தவ சபையையும் பயன்படுத்தி அவர்களுக்கு உதவினார். உதாரணமாக, தெசலோனிக்கேயாவில் இருந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் பாத்திரராய் நடக்கவேண்டுமென்று, தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும் தேறுதலும் எச்சரிப்பும் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்.”—1 தெ. 2:11, 12.
11. ‘தேவனுடைய இஸ்ரவேலின்’ அங்கத்தினர்களுக்காக எது எழுதப்படுவதற்கு யெகோவா ஏற்பாடு செய்தார்?
11 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அடங்கிய சபையின் முதல் அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 60-க்கும் அதிகமான ஆண்டுகள் ஆகியிருந்தன. அக்காலப்பகுதியில், இயேசுவின் பூமிக்குரிய ஊழியத்தையும், முதல் நூற்றாண்டில் வாழ்ந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை அவர் நடத்திய விதத்தையும் அவர்களுக்கு தந்த ஆலோசனைகளையும் எழுத்தில் வடிப்பது அவசியமென யெகோவா கருதினார். எனவே பரிசுத்த ஆவியின் ஏவுதலால் ஏற்கெனவே எழுதப்பட்டிருந்த எபிரெய வேதாகமத்தோடு கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தையும் யெகோவா சேர்த்தார். எபிரெய வேதாகமம் முக்கியமாக மாம்சப்பிரகாரமான இஸ்ரவேல் தேசத்தினருக்காக எழுதப்பட்டது; அவர்கள் கடவுளோடு விசேஷ பந்தத்தில் இருந்த சமயத்தில் அது எழுதப்பட்டது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் முக்கியமாக கிறிஸ்துவின் சகோதரர்களாகவும் கடவுளுடைய ஆவிக்குரிய குமாரர்களாகவும் அபிஷேகம் செய்யப்பட்டிருந்த ‘தேவனுடைய இஸ்ரவேலுக்காக’ எழுதப்பட்டது. எபிரெய வேதாகமத்தைப் படிப்பதால் இஸ்ரவேலரல்லாதவர்கள் எந்தப் பயனும் அடைய மாட்டார்கள் என இது அர்த்தப்படுத்துவதில்லைதான். அதுபோலவே, பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்படாத கிறிஸ்தவர்களும்கூட கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலுள்ள அறிவுரைகளைப் படிப்பதன் மூலமும், அதன்படி வாழ்வதன் மூலமும் ஏராளமான நன்மைகளைப் பெறுவார்கள்.—2 தீமோத்தேயு 3:15-17-ஐ வாசிக்கவும்.
12. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு பவுல் எதை நினைப்பூட்டினார்?
12 முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் பரலோகப் பரிசைப் பெற வேண்டுமென்பதற்காக நீதியுள்ளவர்களாய் அறிவிக்கப்பட்டு பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டார்கள். அபிஷேகம் செய்யப்பட்ட சக விசுவாசிகளை அரசாளும் நிலைக்கு இது அவர்களை உயர்த்தவில்லை. ஆரம்பகால கிறிஸ்தவர்கள் சிலர் இந்த உண்மையை மறந்துவிட்டு சபையிலுள்ள சகோதரர்களைவிட தங்களை மேலானவர்களாக கருத ஆரம்பித்ததாகத் தெரிகிறது. அதனால்தான், பவுல் இவ்வாறு கேட்கும்படி தூண்டப்பட்டார்: “இப்பொழுது திருப்தியடைந்திருக்கிறீர்களே, இப்பொழுது ஐசுவரியவான்களாயிருக்கிறீர்களே, எங்களையல்லாமல் ஆளுகிறீர்களே; நீங்கள் ஆளுகிறவர்களானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உங்களுடனேகூட நாங்களும் ஆளுவோமே.” (1 கொ. 4:8) எனவே, தன் காலத்தில் வாழ்ந்த அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு பவுல் இவ்வாறு நினைப்பூட்டினார்: “உங்கள் விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாயிராமல், உங்கள் சந்தோஷத்திற்குச் சகாயராயிருக்கிறோம்.”—2 கொ. 1:24.
முன்னுரைக்கப்பட்ட எண்ணிக்கை நிறைவடைதல்
13. பொ.ச. 33-க்குப் பிறகு அபிஷேகம் செய்யப்பட்டவர்களைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு தொடர்ந்து முன்னேறியது?
13 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அனைவருமே, அதாவது 1,44,000 பேருமே முதல் நூற்றாண்டில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அப்போஸ்தலர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்ந்தது. ஆனால், பிற்பாடு அந்த வேலையில் பின்னடைவு ஏற்பட்டது. என்றாலும், பின்வந்த நூற்றாண்டுகளிலிருந்து நவீன காலம்வரை அவர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்ந்து நடைபெற்று வந்தது. (மத். 28:20) முடிவாக, 1914-ஆம் வருடத்தில் இயேசு தமது ஆட்சியைத் தொடங்கிய பிறகு, சம்பவங்கள் விறுவிறுப்பாக நடைபெறத் துவங்கின.
14, 15. நம்முடைய காலத்தில் அபிஷேகம் செய்யப்பட்டவர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் என்ன சம்பவித்து வருகிறது?
14 முதலாவதாக, கடவுளுடைய ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்ட அனைவரையும் இயேசு பரலோகத்திலிருந்து முற்றிலுமாக அகற்றிவிட்டார். (வெளிப்படுத்துதல் 12:10, 12-ஐ வாசிக்கவும்.) பிறகு, 1,44,000 என்ற எண்ணிக்கையை நிறைவு செய்வதற்காக, அவருடைய அரசாங்கத்தில் பங்குகொள்ளப் போகும் மீதமுள்ள அங்கத்தினர்களைக் கூட்டிச் சேர்ப்பதில் கவனம் செலுத்தினார். சுமார் 1935-ற்குள், இந்த வேலை முடிவடையும் நிலையில் இருந்ததாகத் தெரிகிறது; ஏனென்றால், நற்செய்தியை ஏற்றுக்கொண்ட அநேகருக்கு பரலோகத்திற்குச் செல்வதற்கான ஆவல் இருக்கவில்லை. அவர்கள் தேவனுடைய குமாரர்கள் என்று பரிசுத்த ஆவி அவர்களிடம் சாட்சி பகரவில்லை. (ரோமர் 8:16-ஐ ஒப்பிடவும்.) மாறாக, ‘வேறே ஆடுகளில்’ ஒருவராய் அதாவது, பரதீஸ் பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கை உடையவர்களில் ஒருவராய் இருப்பதாக அவர்கள் புரிந்து கொண்டார்கள். (யோவா. 10:16) எனவே, 1935-க்குப் பிறகு, ‘திரள் கூட்டத்தாரை’ கூட்டிச் சேர்ப்பதே பிரசங்க வேலையின் முக்கிய நோக்கமாக ஆனது. அப்போஸ்தலனாகிய யோவான் தரிசனத்தில் கண்ட ஜனங்கள் இவர்களே; ‘மிகுந்த உபத்திரவத்தை’ தப்பிப்பிழைக்கப் போகிறவர்களும் இவர்களே.—வெளி. 7:9, 10, 14.
15 என்றாலும், 1930-க்குப் பின்வந்த வருடங்களில், ஒருசில நபர்கள் பரலோகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஏன் அவ்வாறு? சில சந்தர்ப்பங்களில், விசுவாசத்திலிருந்து விலகிப்போன ஆட்களுக்குப் பதிலாக இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். (வெளிப்படுத்துதல் 3:16-ஐ ஒப்பிடவும்.) பவுலும்கூட தனக்குப் பரிச்சயமான சிலர் சத்தியத்திலிருந்து விலகிச் சென்றதைப்பற்றித் தெரிவித்தார். (பிலி. 3:17-19) இப்படிப்பட்ட நபர்களுக்குப் பதிலாக யாரை யெகோவா தேர்ந்தெடுப்பார்? அது முழுக்கமுழுக்க அவருடைய தீர்மானம்தான். என்றாலும், புதிதாக மாறிய நபர்களை அல்ல, ஆனால் தங்களால் முடிந்தளவுக்கு ஏற்கெனவே உண்மைப்பற்றுதியுடன் வாழ்ந்துவந்திருக்கிற நபர்களையே அவர் தேர்ந்தெடுப்பார். நினைவு ஆசரிப்பைத் துவக்கி வைத்த சமயத்தில் இயேசுவோடிருந்த சீஷர்களைப் போன்ற நபர்களையே யெகோவா தேர்ந்தெடுப்பார் என்ற முடிவுக்கு வருவது நியாயமாகத் தெரிகிறது.a—லூக். 22:28.
16. அபிஷேகம் செய்யப்பட்டவர்களைப் பொறுத்தவரையில், எதற்காக நாம் நன்றியுடன் இருக்கலாம், எதைக் குறித்து நம்பிக்கையுடன் இருக்கலாம்?
16 என்றாலும், 1930-களிலிருந்து பரலோகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவருமே விசுவாசத்திலிருந்து விலகிப்போனவர்களுக்குப் பதிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதாகத் தெரிகிறது. இந்தப் பொல்லாத உலகின் கடைசி நாட்கள் முழுவதிலும், “மகா பாபிலோன்” அழிக்கப்படும் வரையிலும், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் நம்முடன் இருக்க வேண்டுமென யெகோவா நிச்சயித்திருப்பதாகத் தெரிகிறது.b (வெளி. 17:5) யெகோவாவின் உரிய காலத்தில் 1,44,000 அங்கத்தினர்களின் எண்ணிக்கை நிறைவுபெறும் என்றும் கடைசியில் அனைவரும் கடவுளுடைய ராஜ்யத்தில் அரசாளுவார்கள் என்றும் நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம். எண்ணிக்கையில் அதிகரித்து வரும் திரள் கூட்டத்தாரும் ஒரு தொகுதியாக உண்மையுள்ளவர்களாகத் தொடர்ந்து நிரூபிப்பார்கள் என்ற தீர்க்கதரிசனமும் நிறைவேறும் என நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம். இத்திரள்கூட்டத்தார் விரைவில் சாத்தானுடைய உலகிற்கு வரப்போகிற ‘மிகுந்த உபத்திரவத்தை’ தப்பிப்பிழைத்து கடவுளுடைய புதிய உலகை நோக்கி மகிழ்ச்சியுடன் செல்வார்கள்.
கடவுளுடைய பரலோக அரசாங்கம் கிட்டத்தட்ட முழுமை அடைந்துவிட்டது!
17. 1 தெசலோனிக்கேயர் 4:15-17 மற்றும் வெளிப்படுத்துதல் 6:9-11-ன்படி, விசுவாசமுள்ளவர்களாக மரித்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு என்ன நடந்திருக்கிறது?
17 பொ.ச. 33 முதற்கொண்டு அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் உறுதியான விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார்கள்; அதோடு மரணம்வரை உண்மையுடன் நிலைத்திருந்திருக்கிறார்கள். இவர்கள் ஏற்கெனவே ராஜ்யத்தைப் பெறுவதற்குத் தகுதியுள்ளவர்களாக எண்ணப்பட்டிருக்கிறார்கள்; இவர்கள் கிறிஸ்துவுடைய பிரசன்னத்தின் ஆரம்ப வருடங்களில் தங்களுடைய பரலோகப் பரிசைப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது.—1 தெசலோனிக்கேயர் 4:15-17; வெளிப்படுத்துதல் 6:9-11-ஐ வாசிக்கவும்.
18. (அ) இன்று உயிரோடிருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டோருக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? (ஆ) வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்கள் அபிஷேகம் செய்யப்பட்ட தங்களுடைய சகோதரர்களை எவ்வாறு கருதுகிறார்கள்?
18 இன்று உயிரோடிருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் மரணம்வரை உண்மையுடன் நிலைத்திருந்தால், பரலோகப் பரிசை தாங்கள் விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் திட நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களின் விசுவாசத்தை ஆழ்ந்து சிந்திக்கிற வேறே ஆடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் அப்போஸ்தலன் பவுலுடைய வார்த்தைகளை ஒத்துக்கொள்கிறார்கள்; தெசலோனிக்கேயாவில் இருந்த அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களைக் குறித்து அவர் இவ்வாறு சொன்னார்: ‘நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதின் நிமித்தம் உங்களைக் குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மை பாராட்டுகிறோம். நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தின் நிமித்தம் பாடு அநுபவிக்கிறவர்களாயிருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரரென்று எண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமான தீர்ப்புச் செய்கிறவர் என்பதற்கு, அதுவே அத்தாட்சியாயிருக்கிறது.’ (2 தெ. 1:3-5) அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் கடைசி நபர் மரிக்கும்போது, அது எப்போது நடந்தாலும்சரி, கடவுளுடைய பரலோக அரசாங்கம் முழுமையடைந்திருக்கும். பரலோகத்திலும் பூமியிலும் உள்ளவர்களுக்கு எப்பேர்ப்பட்ட சந்தோஷமான தருணம் அது!
[அடிக்குறிப்புகள்]
b மே 1, 2007 காவற்கோபுரத்தில், “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” பகுதியைப் பாருங்கள்.
விளக்க முடியுமா?
• நியாயத்தீர்ப்பு நாளுடன் தொடர்புடைய என்ன விஷயத்தை ஆபிரகாமுக்குக் கடவுள் வெளிப்படுத்தினார்?
• ஆபிரகாம் ஏன் நீதியுள்ளவராக அறிவிக்கப்பட்டார்?
• ஆபிரகாமுடைய வித்துவின் பாகமாக இருப்பவர்கள் நீதியுள்ளவர்களாக அறிவிக்கப்படுவது எதற்கு வழிநடத்துகிறது?
• எல்லா கிறிஸ்தவர்களுக்கும் என்ன நம்பிக்கை இருக்கிறது?
[பக்கம் 20-ன் படம்]
ராஜ்யத்தை அடைய முயலும்படி இயேசு தம் சீஷர்களை ஊக்கப்படுத்தினார்
[பக்கம் 21-ன் படம்]
பொ.ச. 33 பெந்தெகொஸ்தே அன்று ஆபிரகாமுடைய வித்துவின் இரண்டாம் பாகமாக இருப்பவர்களை யெகோவா தேர்ந்தெடுக்கத் துவங்கினார்
[பக்கம் 23-ன் படங்கள்]
இந்தக் கடைசி நாட்களில் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்களுடன் இருப்பதற்காக வேறே ஆடுகள் நன்றியுடன் இருக்கிறார்கள்