அவர்கள் வாழ்க்கையை வளமாக்கினார்கள் நீங்கள்?
கனடாவிலுள்ள சகோதரர் மார்க், ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அது, விண்வெளி ஏஜென்ஸிகளால் பயன்படுத்தப்படும் சிக்கலான ரோபாட்டுகளை உருவாக்கும் நிறுவனம். அங்கு அவர் பகுதிநேர வேலையை செய்து கொண்டே ஒழுங்கான பயனியராகவும் சேவை செய்து வந்தார். மார்க்கின் மேலதிகாரி அவருக்குப் பதவி உயர்வு அளித்தார்; கைநிறைய சம்பளம் கிடைக்கக்கூடிய முழுநேர வேலை அது. மார்க் அந்த வேலையை ஏற்றுக்கொண்டாரா?
பிலிப்பைன்ஸில் வசிக்கும் சகோதரி ஏமி, படித்துக்கொண்டிருக்கும்போதே ஒழுங்கான பயனியராகவும் சேவை செய்து வந்தார். படிப்பு முடித்த பிறகு அவருக்கு ஒரு வேலை கிடைத்தது. அது அவருடைய நேரத்தை உறிஞ்சிவிடும் முழுநேர வேலை, ஆனால், பணத்திற்கு எந்தக் குறைச்சலும் இருக்காது. என்ன செய்தார் ஏமி?
மார்க்கும் ஏமியும் வெவ்வேறு தீர்மானங்களை எடுத்தார்கள். பூர்வ கொரிந்து சபை கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அறிவுரையில் எவ்வளவு ஞானம் பொதிந்திருக்கிறது என்பது அவர்கள் எடுத்த தீர்மானங்களின் விளைவுகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. “இந்த உலகத்தை பயன்படுத்துவோர் அதை முழுமையாக பயன்படுத்தாதவர்கள்போல் இருப்பீர்களாக” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார்.—1 கொ. 7:29-31, NW.
உலகத்தை பயன்படுத்துங்கள், ஆனால் முழுமையாக அல்ல
மார்க்கும் ஏமியும் என்ன செய்தார்கள் என்பதைப் பார்ப்பதற்கு முன் கொரிந்தியர்களுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் உபயோகித்திருக்கும் ‘உலகம்’ (அல்லது, கிரேக்கில் காஸ்மோஸ்) என்ற சொல்லின் அர்த்தத்தைச் சுருக்கமாகச் சிந்திக்கலாம். அந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் காஸ்மோஸ் என்ற வார்த்தை நாம் வாழும் இந்த உலகத்தை அதாவது, முழு உலக சமுதாயத்தைக் குறிக்கிறது. அதில் உணவு, உடை உறைவிடம் போன்ற வாழ்க்கையின் அன்றாட தேவைகளும் உட்படுகின்றன.a இந்தத் தினசரி வாழ்க்கை தேவைகளைப் பூர்த்தி செய்ய நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஓர் உத்தியோகம் அவசியம்தான். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நாம் இந்த உலகத்தைப் பயன்படுத்தியே ஆகவேண்டும், வேறு வழியில்லை. ஏனெனில், நம்மையும் நம்முடைய குடும்பத்தையும் கவனிக்கவேண்டிய வேதப்பூர்வ பொறுப்பு நமக்கு இருக்கிறது. (1 தீ. 5:8) அதே சமயம், இந்த ‘உலகம் . . . ஒழிந்துபோகிறது’ என்றும் நமக்கு நன்றாகத் தெரியும். (1 யோ. 2:17) எனவே, நாம் இந்த உலகை “முழுமையாக” அல்ல, ஆனால், தேவையான அளவிற்கே பயன்படுத்துவோமாக.—1 கொ. 7:31, NW.
உலகத்தைப் பயன்படுத்துவதைக் கூடுமான அளவிற்கு குறைக்க வேண்டும் என்று பைபிள் கூறும் இந்த அறிவுரையினால் அநேக சகோதர சகோதரிகள் உந்துவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தங்களுடைய சூழ்நிலையை மாற்றியமைத்து, வேலை நேரத்தைக் கணிசமாகக் குறைத்து, வாழ்க்கையை எளிமையாக்கி இருக்கிறார்கள். இதனால் தங்களுடைய குடும்பத்துடனும் யெகோவாவின் சேவையிலும் அதிக நேரத்தைச் செலவு செய்ய அவர்களால் முடிந்திருக்கிறது. உண்மையில், இது அவர்களுடைய வாழ்க்கையை வளமாக்கியிருப்பதை அவர்கள் கண்ணாரக் கண்டிருக்கிறார்கள். அதுமட்டுமா, அவர்கள் தங்கள் வாழ்க்கையை எளிமையாக்கியிருப்பது, இந்த உலகத்தின் மீது குறைவாகவும் யெகோவாமீது அதிகமாகவும் சார்ந்திருக்கச் செய்திருக்கிறது. உங்களைப்பற்றி என்ன? ராஜ்ய வேலைகளில் அதிக நேரம் செலவு செய்வதற்காக எளிமையான வாழ்க்கையை வாழ உங்களால் முடியுமா?—மத். 6:19-24, 33.
“முன்பைவிட இப்போது நாங்கள் யெகோவாவிடம் நெருக்கமாக இருக்கிறோம்”
ஆரம்பத்தில் சொல்லப்பட்ட மார்க், இந்த உலகத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டாம் என்ற பைபிள் அறிவுரைக்குச் செவிசாய்த்தார். அவருக்குக் கிடைத்த நல்ல சம்பளத்துடன்கூடிய பதவி உயர்வை அவர் மறுத்துவிட்டார். சில நாட்களுக்குப் பிறகு, மார்க்கின் மேலதிகாரி அவரைச் சம்மதிக்க வைப்பதற்காக கூடுதல் சம்பளம் கொடுப்பதாகச் சொன்னார். அதைக் குறித்து மார்க் சொல்வதாவது, “அது எனக்கு ஒரு சோதனையாக இருந்தபோதிலும் நான் கண்ணை மூடிக்கொண்டு மறுத்துவிட்டேன்.” அவர் மறுத்ததற்கான காரணத்தைப்பற்றி இவ்வாறு சொல்கிறார்: “யெகோவாவிற்குச் சேவை செய்வதில் எங்கள் வாழ்க்கையை முடிந்தளவுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று நானும் என் மனைவி பாலாவும் ஆசைப்பட்டோம். அதற்காக எங்கள் வாழ்க்கையை எளிமையாக்க தீர்மானித்தோம். எங்களுடைய இலக்கை எட்டிப்பிடிக்கும் விஷயத்தில் ஞானமாகச் செயல்படுவதற்கு உதவி செய்யும்படி யெகோவாவிடம் ஜெபித்தோம். அதோடு, அவருடைய சேவையில் முழுமையாக ஈடுபட ஒரு குறிப்பிட்ட நாளையும் தீர்மானித்து வைத்தோம்.”
பாலா இவ்வாறு சொல்கிறார்: “நான் ஒரு மருத்துவமனையில் செயலராக வேலை செய்தேன். வாரத்தில் மூன்று நாள் வேலை, நல்ல சம்பளம். அதே சமயம் ஒழுங்கான பயனியராகவும் சேவை செய்து வந்தேன். இருந்தாலும், மார்க்கைப்போல் நானும், ராஜ்ய பிரசங்கிப்பாளர்கள் அதிகம் தேவைப்படும் இடத்தில் சேவை செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டேன். நான் வேலையை விட்டுவிட தீர்மானித்து என் மேலதிகாரியிடம் ராஜினாமா கடிதத்தை நீட்டினேன். ஆனால் அவரோ, புதிதாக உருவாகியிருந்த தலைமை செயலர் பதவிக்கு நான் தகுதி பெற்றிருப்பதாக சொன்னார். அந்த மருத்துவமனையிலேயே அதிக சம்பளம் கிடைக்கும் செயலர் வேலை அதுதான். இருந்தாலும், நான் எடுத்த முடிவிலிருந்து இம்மியும் நகரவில்லை. அந்த உயர் பதவிக்காக நான் ஏன் விண்ணப்பிக்கவில்லை என்பதை என் மேலதிகாரியிடம் விளக்கினேன். என் விசுவாசத்திற்காக அவர் என்னை பாராட்டினார்.”
அதன் பிறகு விரைவில், கனடாவின் ஓர் ஒதுக்குப்புற பகுதியிலுள்ள சிறிய சபை ஒன்றில் விசேஷ பயனியர்களாக சேவை செய்ய மார்க்கும் பாலாவும் நியமிக்கப்பட்டார்கள். இந்தப் புதிய நியமிப்பு எப்படி இருந்தது? மார்க் சொல்கிறார்: “மாதாமாதம் சம்பளம் கிடைக்கிற ஒரு வேலையை கிட்டத்தட்ட பாதி ஆயுள்வரை செய்துவந்தேன். திடீரென்று அதை விட்டபோது ஆரம்பத்தில் எனக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது. ஆனால், யெகோவா எங்களுடைய ஊழியத்தை ஆசீர்வதித்தார். கடவுளை வணங்க மற்றவர்களுக்கு உதவும்போது கிடைக்கிற சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இந்த முழுநேர சேவை எங்கள் மணவாழ்க்கையையும் வளமாக்கியிருக்கிறது. இப்போதெல்லாம் நாங்கள் உண்மையிலேயே முக்கியமான விஷயங்களைப் பற்றியே அதாவது, ஆன்மீக விஷயங்களைப் பற்றியே அதிகம் பேசுகிறோம். முன்பைவிட இப்போது யெகோவாவிடம் நெருக்கமாக இருக்கிறோம்.” (அப். 20:35) பாலா சொல்கிறார்: “உங்கள் வேலையையும் உங்கள் வீட்டில் அனுபவித்த வசதிகளையும் விட்டுச்செல்கையில் யெகோவாவையே கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டியிருக்கும். நாங்கள் அப்படித்தான் செய்தோம், யெகோவா எங்களை ஆசீர்வதித்தார். எங்களுடைய புதிய சபையில் இருந்த தங்கமான சகோதர சகோதரிகள் எங்கள்மீது அன்பை பொழிந்தார்கள். நாங்கள் அவர்களோடு இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். முன்பு நான் வேலையில் செலவு செய்த என்னுடைய சக்தியை இப்போது கடவுளைப்பற்றி சொல்லிக்கொடுப்பதில் செலவிடுகிறேன். இந்த வேலையில் எனக்கு அளவிலா சந்தோஷம் கிடைக்கிறது.”
‘எல்லாம் இருந்தும் சந்தோஷம் இல்லை’
ஆரம்பத்தில் பார்த்த ஏமி வேறு விதமான தீர்மானத்தை எடுத்தார். கைநிறைய சம்பளம் தரக்கூடிய முழுநேர வேலை கிடைத்தபோது அவர் அதை ஏற்றுக்கொண்டார். ஏமி சொல்கிறார்: “முதல் வருஷம் ஊழியத்தில் சுறுசுறுப்பாக இருந்தேன். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக யெகோவாவின் சேவையிலிருந்த ஆர்வம் தணிய ஆரம்பித்தது. என் வேலையிலோ ஆர்வம் அதிகரித்தது. வெற்றிப்படிகளை எட்ட சுண்டியிழுக்கும் பல வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தன, புகழ் ஏணியின் உச்சத்தை தொட ஓயாமல் உழைத்தேன். என் வேலை சுமை கூட கூட ஊழியத்தில் செலவிடும் நேரமோ குறைந்துகொண்டே போனது. கடைசியில், ஊழியத்திற்கு போவதை ஒரேயடியாக நிறுத்திவிட்டேன்.”
தன் பழைய வாழ்க்கையைத் திரும்பி பார்க்கையில், ஏமி சொல்கிறார்: “பணத்திற்கு குறைச்சல் இல்லை. பல இடங்களுக்குப் பயணம் செய்தேன், பதவியுடன் கூடவே வந்த தனி மதிப்பையும் மரியாதையையும் அனுபவித்தேன். இதெல்லாம் இருந்தாலும், என் வாழ்வில் துளிகூட சந்தோஷம் இல்லை. கைநிறைய பணம் இருந்தும் தலைக்குமேல் பிரச்சினைகள் இருந்தன. சந்தோஷத்தை எங்குத் தொலைத்தேன் என்று குழம்பிப்போயிருந்தேன். என்னுடைய வேலைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டதால்தான் நான் கிட்டத்தட்ட ‘விசுவாசத்தைவிட்டு வழுவியேவிட்டேன்’ என்பதை புரிந்துகொண்டேன். இதன் விளைவாக பைபிளில் சொல்லியிருப்பது போலவே நான் ‘அநேக வேதனைகளாலே’ அவதிப்பட்டேன்.”—1 தீ. 6:10.
ஏமி என்ன செய்தார்? “மீண்டும் கடவுளுடன் நல்ல உறவை வளர்த்துக்கொள்ள உதவி செய்யும்படி மூப்பர்களிடம் கேட்டுக்கொண்டேன். கூட்டங்களுக்குச் செல்லவும் ஆரம்பித்தேன். சபையில் ஒரு முறை பாட்டு பாடிக்கொண்டிருந்தபோது என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. பயனியராக, அறுப்பு வேலையில் நான் ஈடுபட்ட அந்த ஐந்து வருடங்கள் என் நினைவிற்கு வந்தது. அந்தச் சமயத்தில் பணத்திற்கு கஷ்டம் இருந்தது, ஆனால், சந்தோஷத்திற்கு குறைவே இல்லை. நான் ஒரு முடிவுக்கு வந்தேன், இனியும் பணத்திற்கு பின்னால் அலையாமல் யெகோவாவுடைய சேவைக்கு முதலிடத்தைக் கொடுக்கத் தீர்மானித்தேன். என் உயர் பதவியை விட்டுவிட்டு நான் வேலை செய்யும் கம்பெனியிலேயே ஒரு சாதாரண வேலையை எடுத்துக்கொண்டேன். முன்பு கிடைத்ததைவிட பாதி சம்பளம்தான் இந்த வேலையில் எனக்குக் கிடைத்தது. என்றாலும், நான் மறுபடியும் பிரசங்க வேலையில் ஈடுபட தொடங்கினேன்” என்கிறார் ஏமி. சந்தோஷம் பொங்க அவர் சொல்வதாவது: “கடந்த சில வருடங்களாக பயனியர் ஊழியம் செய்வதில் நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன். இப்போது எனக்குத் திருப்தி கிடைத்திருக்கிறது. இந்த உலகத்திற்காக ஓடாய் உழைத்தபோது கிடைக்காத இந்த உணர்வு இப்போது எனக்குக் கிடைக்கிறது.”
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் சூழ்நிலையில் சில மாற்றங்களைச் செய்து வாழ்க்கையை எளிமையாக்க முடியுமா? இதன்மூலம் உங்களுக்குக் கிடைக்கும் நேரத்தை ராஜ்ய காரியங்களை முன்னேற்றுவிக்க நீங்கள் பயன்படுத்தினால் நீங்களும் உங்கள் வாழ்க்கையை வளமாக்க முடியும்.—நீதி. 10:22.
[அடிக்குறிப்பு]
[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]
உங்கள் சூழ்நிலையில் சில மாற்றங்களைச் செய்து வாழ்க்கையை எளிமையாக்க முடியுமா?
[பக்கம் 19-ன் பெட்டி/படம்]
“சீக்கிரத்திலேயே . . . ருசி கண்டேன்!”
ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஒரு சபையில் மூப்பராக சேவை செய்யும் டேவிட், முழுநேர ஊழியத்தில் தன் மனைவி, பிள்ளைகளோடு சேர்ந்துகொள்ள ஆசைப்பட்டார். அவர் வேலை செய்யும் கம்பெனியிலேயே பகுதிநேர வேலை எடுத்துக்கொண்டு ஒழுங்கான பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தார். அவர் செய்த இந்த மாற்றங்கள் அவரது வாழ்க்கையை வளமாக்கினவா? சில மாதங்களுக்குப் பிறகு டேவிட், தன் நண்பருக்கு இவ்வாறு கடிதம் எழுதினார்: “ஒருவர் தன் குடும்பத்தோடு யெகோவாவின் சேவையில் முழுமையாக ஈடுபடும்போது கிடைக்கிற திருப்தி, வேறு எதிலுமே கிடைக்காது. பயனியர் ஊழியத்தை அனுபவித்து மகிழ சமயம் எடுக்கும் என்று நினைத்தேன். ஆனால், சீக்கிரத்திலேயே பயனியர் ஊழியத்தில் ருசி கண்டேன்! அது அளவிலா புத்துணர்ச்சியை அளிக்கிறது.”
[பக்கம் 18-ன் படம்]
மார்க்கும் பாலாவும் ஊழியம் செய்யும்போது . . .