ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
‘கடவுளுக்கு சேவை செய்ய விரும்பினேன்’
“என் ஜனங்களே, . . . அவளைவிட்டு வெளியே வாருங்கள்.” தேவதூதன் விடுத்த இந்த அழைப்பை பொ.ச. முதல் நூற்றாண்டில் அப்போஸ்தலன் யோவான் கேட்டார். இன்று நேர்மை மனம் படைத்த லட்சக்கணக்கானோர் அந்த அழைப்பை ஏற்று, பொய் மத உலகப் பேரரசாகிய “மகா பாபிலோ”னிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 18:1-4) அவர்களில் ஒருவர்தான் ஹெய்டியைச் சேர்ந்த வில்னேர். அவருடைய அனுபவத்தை அவரே சொல்ல கேளுங்கள்.
“நான் 1956-ல் ஹெய்டியிலுள்ள சாங் மார்க் என்ற சிறிய நகரத்தில் பக்திமிக்க கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தேன். ஹெய்டியில், சாங் மிஷல் டா லாடாலாய் என்ற இடத்திலிருக்கும் இறையியல் கல்லூரியில் பயில எங்கள் நகரத்திலுள்ள இன்னும் இரண்டு பேருடன் நானும் தேர்ந்தெடுக்கப்பட்ட போது என் குடும்பத்தார் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. பின்னர் 1980-ல் கூடுதல் பயிற்சிக்காக பெல்ஜியத்திலுள்ள ஸ்டாவ்லோ என்ற இடத்திற்கு நாங்கள் அனுப்பப்பட்டோம். அங்கு நாங்கள் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் பயின்றோம்.
“ஆரம்பத்தில் பாதிரியாராகும் ஆர்வம் எனக்குள் பொங்கியெழுந்தது. ஒருநாள் மதிய உணவுக்கூடத்தில் எங்கள் தொகுதியை மேற்பார்வையிடும் பாதிரியார் என்னிடம் ஏதோ பேச வேண்டும் என சில நிமிடம் காத்திருக்கும்படி சொன்னார். என்னிடம் பாலுணர்வு ரீதியில் அவர் கவர்ந்திழுக்கப்பட்டதாக அப்பட்டமாக என்னிடம் விஷயத்தை போட்டு உடைத்தபோது நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன்! அந்த எண்ணத்துடன் அவர் அணுகிய போதெல்லாம் நெருங்க விடாமல் தவிர்த்தேன். இதையெல்லாம் பார்த்தபோது வெறுமை உணர்வு என்னை வாட்டி வதைத்தது. அந்தச் சம்பவத்தைக் குறித்து என் குடும்பத்தாருக்குக் கடிதம் எழுதிவிட்டு, சில மாதங்களில் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக அந்த இறையியல் கல்லூரியிலிருந்து வெளியேறினேன். அந்த சிற்றூரில் தங்கி, வேறொரு துறையில் கல்வி பயின்றேன்.
“சாங் மார்க்குக்கு திரும்பிய பின்பும் எனக்கு கத்தோலிக்க சர்ச்சின்மீது துளியும் நம்பிக்கை பிறக்கவில்லை. இருந்தாலும் கடவுளுக்கு சேவை செய்யும் விருப்பம் எனக்குள் இன்னும் சுடர் வீசிக்கொண்டிருந்தது. ஆனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தேன். அட்வெண்டிஸ்ட் சர்ச், ஏபேனேசர் சர்ச், மார்மன் சர்ச் ஆகியவற்றிற்குச் சென்றேன். ஆவிக்குரிய விதத்தில் எந்த வழிநடத்துதலும் கிடைக்காமல் தவித்தேன்.
“பெல்ஜியத்தில் இறையியல் கல்லூரியில் பயிலுகையில் கிராம்பாங் பைபிளைப் படித்தது என் நினைவுக்கு வந்தது. அதில் கடவுளுக்கு ஒரு பெயர் இருப்பதை கண்டுபிடித்திருந்தேன். எனவே அந்தப் பெயரை சொல்லி உண்மை மதத்தைக் கண்டுபிடிக்க உதவி கேட்டு உருக்கமாக ஜெபித்தேன்.
“அதன் பின் சீக்கிரத்திலேயே யெகோவாவின் சாட்சிகளில் இருவர் நான் வசித்து வந்த பகுதியில் குடியேறினார்கள். அவர்கள் அமைதியானவர்கள், மரியாதைமிக்கவர்கள், கண்ணியமானவர்கள். அவர்களுடைய வாழ்க்கை முறை என்னைக் கவர்ந்தது. ஒருநாள் அந்த சாட்சிகளில் ஒருவர் கிறிஸ்துவின் வருடாந்தர மரண நினைவு ஆசரிப்பில் கலந்துகொள்ள வரும்படி எனக்கு அழைப்பு கொடுத்தார். அந்தக் கூட்டத்தை நான் முழுமையாக அனுபவித்து மகிழ்ந்தேன், சாட்சிகளுடன் சேர்ந்து தவறாமல் பைபிள் படிக்க ஒப்புக்கொண்டேன். சுமார் ஆறு மாதத்தில் கடவுளுக்கு சேவை செய்ய இதுவே சரியான வழியென சந்தேகமின்றி புரிந்துகொண்டேன். என் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து 1988, நவம்பர் 20-ம் தேதி முழுக்காட்டுதல் பெற்றேன்.”
காலப்போக்கில் வில்னேர் முழுநேர ஊழியத்தை ஏற்றார். இன்று அவர் சபையில் மூப்பராக சேவிக்கிறார். அவரும் அவருடைய மனைவியும் இரண்டு பிள்ளைகளும் சபையில் சந்தோஷமாக சேவை செய்து வருகிறார்கள்.
[பக்கம் 9-ன் படம்]
பைபிளை வாசிப்பதன் மூலம் கடவுளுடைய பெயர் யெகோவா என்பதை வில்னேர் கண்டுபிடித்தார்