உயிர்த்தெழுதலை உண்மையிலேயே நம்புகிறீர்களா?
‘உயிர்த்தெழுதல் உண்டு.’—அப்போஸ்தலர் 24:15.
1. மரணத்தைத் தவிர்க்க முடியாததுபோல் தோன்றுவது ஏன்?
“இந்த உலகில் மரணத்தையும் வரிகளையும் தவிர மற்ற எல்லாவற்றையுமே தவிர்க்க முடியும்.” இந்தக் கருத்தை அமெரிக்க அரசியல் மேதை பெஞ்சமின் ஃபிராங்க்லின் 1789-ல் எழுதினார். இது நூற்றுக்கு நூறு உண்மை என்று சிலர் ஒத்துக்கொள்கிறார்கள். இருப்பினும், நேர்மையற்ற அநேகர் ஒழுங்காக வரிகளைச் செலுத்தாமல் ஏய்த்துவிடுகிறார்கள். ஆனால், மரணத்தை அப்படித் தவிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது. நம்முடைய சொந்த முயற்சியால் அதை முற்றிலுமாக வெல்ல முடியாது. அது மனிதர்கள் அனைவரையும் துரத்திப் பிடிக்கிறது. பாதாளம், அதாவது ஷியோல், அடங்கா பசியுடன் நம் அன்பானவர்களை விழுங்குகிறது. (நீதிமொழிகள் 27:20) ஆனால், நமக்கு ஆறுதலான செய்தி ஒன்று இருக்கிறது.
2, 3. (அ) மரணத்தைத் தவிர்க்க முடியும் என்று எப்படிச் சொல்லலாம்? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப்பற்றிச் சிந்திப்போம்?
2 உயிர்த்தெழுதல், ஆம், மறுபடியும் உயிரோடு எழுப்பப்படுதல் என்ற உறுதியான நம்பிக்கையை யெகோவாவின் வார்த்தை நமக்கு அளிக்கிறது. இது கனவோ, கற்பனையோ அல்ல. இந்த எதிர்பார்ப்பை யெகோவா நிஜமாக்குவார். அதைத் தடுத்து நிறுத்த இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் முடியாது. ஆனால், சில ஜனங்கள் மரணத்தையே ருசிபார்க்கப் போவதில்லை என்ற விஷயம் அநேகருக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். ஆனால், இது எப்படி நடக்கும்? எப்படியெனில், ஒருவரும் எண்ணமுடியாத ‘திரள் கூட்டமாகிய’ ஜனங்கள் விரைவில் வரவிருக்கும் “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” தப்பிப்பிழைப்பார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 10, 14) அதன் பிறகு, என்றென்றும் வாழப்போகும் எதிர்பார்ப்புடன் அவர்கள் வாழ்வார்கள். அவர்களால் மரணத்தைத் தவிர்க்க முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக, ‘மரணம் பரிகரிக்கப்படவிருக்கிறது,’ அதாவது நீக்கப்படவிருக்கிறது.—1 கொரிந்தியர் 15:26.
3 “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று” அப்போஸ்தலன் பவுல் நிச்சயமாக நம்பினார்; அவரைப் போலவே நாமும் உயிர்த்தெழுதலில் அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க வேண்டும். (அப்போஸ்தலர் 24:15) உயிர்த்தெழுதல் சம்பந்தமாக மூன்று கேள்விகளை இப்போது நாம் சிந்திக்கலாம். முதலாவதாக, உயிர்த்தெழுதல் நிச்சயம் நடக்கும் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது? இரண்டாவதாக, உயிர்த்தெழுதல் நம்பிக்கை உங்களுக்கு எப்படி ஆறுதல் அளிக்க முடியும்? மூன்றாவதாக, இப்போது உங்களுடைய வாழ்க்கைமுறைமீது இந்த நம்பிக்கை என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும்?
உயிர்த்தெழுதல் நிச்சயம்
4. யெகோவாவின் நோக்கம் நிறைவேறுவதில் உயிர்த்தெழுதல் எவ்வாறு மிக முக்கிய பங்கு வகிக்கிறது?
4 உயிர்த்தெழுதல் நிச்சயம் நடக்கும் என்பதற்கு அநேக விஷயங்கள் அத்தாட்சி அளிக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, யெகோவாவின் நோக்கம் நிறைவேறுவதில் அது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதர்களை பாவ வழியில் நடத்தி, மரணத்தைத் தழுவச் செய்தவன் சாத்தானே என்பதை நினைவில் வையுங்கள். எனவே, “அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்” என்று இயேசு கூறினார். (யோவான் 8:44) யெகோவா தம்முடைய “ஸ்திரீ,” அதாவது மனைவி போன்ற பரலோக அமைப்பு, ‘வித்து’ ஒன்றைப் பிறப்பிக்கும் என்றும், அந்த வித்து “பழைய பாம்பாகிய” சாத்தானின் தலையை நசுக்கி, அவனை இருந்த இடம் தெரியாமல் அழித்துப் போடும் என்றும் வாக்குறுதி அளித்தார். (ஆதியாகமம் 3:1-6, 15; வெளிப்படுத்துதல் 12:9, 10; 20:10) மேசியாவாக வரவிருந்த அந்த வித்துவைக் குறித்து யெகோவா தம் நோக்கத்தைப் படிப்படியாகத் தெரியப்படுத்தினார். அந்த வித்து, சாத்தானை அழிப்பதோடு, வேறு பல காரியங்களையும் செய்யவிருந்தது அப்போது தெளிவானது. “பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்” என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (1 யோவான் 3:8) ஆதாமிடமிருந்து வழிவழியாக பாவத்தையும், அதன் பலனாக மரணத்தையும் நாம் பெற்றோம். அந்த மரணம்தான் பிசாசின் கிரியைகளில் முதன்மையானது. அதை இயேசு கிறிஸ்துவின் மூலமாக யெகோவா முறியடிக்கப்போகிறார். இவ்விஷயத்தில், இயேசுவின் கிரயபலியும் உயிர்த்தெழுதலும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.—அப்போஸ்தலர் 2:22-24; ரோமர் 6:23.
5. உயிர்த்தெழுதல் யெகோவாவின் பெயரை எவ்வாறு மகிமைப்படுத்தும்?
5 தம்முடைய பரிசுத்த பெயரை மகிமைப்படுத்துவதற்கு யெகோவா தீர்மானமாயிருக்கிறார். கடவுளுடைய பெயரை சாத்தான் பழிதூற்றி, அவரைப் பற்றிய பொய்களையும் பரப்பியிருக்கிறான். சாப்பிடக்கூடாதென்று கடவுள் விலக்கி வைத்த பழத்தைச் சாப்பிட்டால் ஆதாமும் ஏவாளும் “சாகவே சாவதில்லை” என்று அவன் பொய் சொன்னான். (ஆதியாகமம் 2:16, 17; 3:4) அப்போதிலிருந்து, சாத்தான் அதுபோன்ற பல பொய்களைப் பரப்பியிருக்கிறான். ஒருவருடைய மரணத்திற்குப் பின் அவருடைய ஆத்துமா வாழ்கிறது என்பது அவன் பரப்பிய பொய்களில் ஒன்று. என்றாலும், உயிர்த்தெழுதலை நடப்பிப்பதன் மூலமாக யெகோவா அந்தப் பொய்யை அம்பலப்படுத்துவார். உயிரைப் பாதுகாப்பவரும் உயிர்ப்பிக்கிறவரும் அவரே என்பதை நித்தியத்திற்கும் நிலைநாட்டுவார்.
6, 7. மக்களை உயிர்த்தெழுப்புவதை யெகோவா எப்படிக் கருதுகிறார், அவர் அவ்வாறு உணருகிறார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
6 உயிர்த்தெழுதலை நடப்பிக்க யெகோவா பேராவலோடு இருக்கிறார். இவ்விஷயத்தில் யெகோவாவின் உணர்ச்சிகளை பைபிள் படம்பிடித்துக் காட்டுகிறது. உதாரணமாக, உண்மையுள்ள யோபு கடவுளுடைய ஆவியின் தூண்டுதலால் எழுதிய இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள்: “மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் [“கட்டாய சேவையின்,” NW] நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன். என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைப்பீராக.” (யோபு 14:14, 15) இந்த வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்துகின்றன?
7 தான் மரணத்தில் நித்திரை அடைந்த பிறகு குறிப்பிட்ட காலத்திற்குக் காத்திருக்க வேண்டுமென்பதை யோபு அறிந்திருந்தார். அந்தக் காலத்தை ‘‘கட்டாய சேவை” என்பதாகக் கருதினார். அந்தக் காலத்தின்போது விடுதலை வரும்வரை கண்டிப்பாகக் காத்திருக்க வேண்டுமெனத் தெரிவித்தார். அந்த விடுதலை நிச்சயம் வருமென்று அவர் நம்பினார். இந்த விஷயத்தில் அவர் ஏன் உறுதியாயிருந்தார்? ஏனெனில், அவர் யெகோவாவின் உணர்ச்சிகளை அறிந்திருந்தார். யெகோவா தம் உண்மை ஊழியன் மறுபடியும் உயிரடைவதைக் காண ‘விரும்புகிறார்.’ ஆம், நீதிமான்கள் அனைவரையும் உயிர்த்தெழுப்ப கடவுள் பேராவலோடு இருக்கிறார். அவர்களுக்கு மட்டுமின்றி, பரதீஸான பூமியில் என்றென்றும் வாழ மற்றவர்களுக்கும் யெகோவா வாய்ப்பளிப்பார். (லூக்கா 23:43; யோவான் 5:28, 29) இந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டுமென்பது கடவுளுடைய விருப்பமாய் இருக்கும்போது, யாரால் அதைத் தடுத்து நிறுத்த முடியும்?
8. நம்முடைய எதிர்கால நம்பிக்கைக்கு ‘உத்தரவாதத்தை’ யெகோவா எவ்வாறு ‘விளங்கப் பண்ணியிருக்கிறார்’?
8 இயேசுவின் உயிர்த்தெழுதல் மூலமாக நம்முடைய எதிர்கால நம்பிக்கைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது. அத்தேனே பட்டணத்தைச் சேர்ந்தோரிடம் பவுல் பேசியபோது, பின்வருமாறு குறிப்பிட்டார்: “[கடவுள்] ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை [அதாவது, உத்தரவாதத்தை] எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார்.” (அப்போஸ்தலர் 17:31) உயிர்த்தெழுதலைக் குறித்து அவர் சொன்னதைக் கேட்டதும் சிலர் கிண்டல் செய்தார்கள். என்றாலும், சிலர் விசுவாசிகளாக ஆனார்கள். உயிர்த்தெழுதல் நம்பிக்கைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதை அறிந்துகொண்டது ஒருவேளை அவர்களைக் கவர்ந்திருக்கக்கூடும். இயேசுவை உயிர்த்தெழுப்பியபோது, யெகோவா மாபெரும் அற்புதத்தை நிகழ்த்தினார். தம்முடைய மகனை வல்லமையுள்ள ஆவி சிருஷ்டியாக உயிர்த்தெழுப்பினார். (1 பேதுரு 3:18) இதன் பிறகு, இயேசு பூமிக்கு வருவதற்கு முன் இருந்ததைவிட அதிக வல்லமையையும் மகிமையையும் அதிகாரத்தையும் பெற்றுக்கொண்டார். அழியாமையைப் பெற்றுக்கொண்டு, யெகோவாவுக்கு அடுத்தபடியான ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டார். தம்முடைய தகப்பனிடமிருந்து மாபெரும் பொறுப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான தகுதியை அடைந்தார். பரலோக உயிர்த்தெழுதலோ பூமிக்குரிய உயிர்த்தெழுதலோ எல்லாவற்றையும் இயேசுவைக் கொண்டே யெகோவா நடப்பிக்கிறார். இயேசுவே பின்வருமாறு கூறினார்: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்.” (யோவான் 5:25; 11:25) தம்முடைய மகனை உயிர்த்தெழுப்பியதன் மூலம், உண்மையுள்ள அனைவருக்கும் உயிர்த்தெழுதல் நிச்சயம் என்பதற்கு யெகோவா உத்தரவாதம் அளித்திருக்கிறார்.
9. உயிர்த்தெழுதல் நிச்சயம் என்பதை பைபிள் பதிவு எப்படி நிரூபிக்கிறது?
9 உயிர்த்தெழுதல் நடந்ததற்குக் கண்கண்ட சாட்சிகள் உண்டு, அதைப்பற்றி கடவுளுடைய வார்த்தையில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மீண்டும் பூமியில் வாழும்படி எட்டு பேர் உயிர்த்தெழுப்பப்பட்டார்கள். இந்தச் சம்பவங்கள் பைபிளில் விலாவாரியாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. இவை இரகசியமாக அல்ல, வெளிப்படையாகவே நிகழ்த்தப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவற்றிற்குக் கண்கண்ட சாட்சிகள் உண்டு. லாசரு இறந்துபோய் நான்கு நாட்களுக்குப் பிறகு, அவரை இயேசு உயிர்த்தெழுப்பினார். அவர் மரித்ததைக் குறித்து துக்கித்துக்கொண்டிருந்த அவருடைய குடும்பத்தார், நண்பர்கள், அக்கம்பக்கத்தார் ஆகியோர் அடங்கிய கூட்டத்தின் முன் அவரை உயிர்த்தெழுப்பினார். கடவுள்தான் இயேசுவை அனுப்பினார் என்பதற்கு இது ஆணித்தரமான அத்தாட்சியாக அமைந்ததால் அவரை எதிர்த்த மதத் தலைவர்களால்கூட இதை மறுத்துப் பேச முடியவில்லை. அதனால், இயேசுவை மட்டுமின்றி, லாசருவையும் கொலைசெய்ய அவர்கள் திட்டம் தீட்டினார்கள். (யோவான் 11:17-44, 53; 12:9-11) உயிர்த்தெழுதல் நிச்சயம் நடக்கும் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். நமக்கு ஆறுதல் அளிப்பதற்கும், நம் விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்குமே கடந்த காலத்தில் நடந்த உயிர்த்தெழுதல் சம்பவங்களை கடவுள் பதிவுசெய்து வைத்திருக்கிறார்.
உயிர்த்தெழுதல் நம்பிக்கை ஆறுதல் அளிக்கிறது
10. பைபிளில் பதிவுசெய்யப்பட்டுள்ள உயிர்த்தெழுதல் சம்பவங்களிலிருந்து நாம் எவ்வாறு ஆறுதல் பெறலாம்?
10 உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகையில் ஆறுதலுக்காக ஏங்குகிறீர்களா? உயிர்த்தெழுதல்பற்றி பைபிளில் பதிவுசெய்யப்பட்டுள்ள சம்பவங்களிலிருந்து நாம் நிச்சயம் ஆறுதல் பெறலாம். இவற்றை வாசித்து, தியானித்து, மனத்திரையில் ஓட்டிப்பார்க்கையில், உயிர்த்தெழுதல்மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை உறுதிப்படும். (ரோமர் 15:4) இவை வெறுமனே கற்பனை கதைகள் அல்ல. மாறாக, ஒருகாலத்தில், குறிப்பிட்ட இடங்களில் நடந்த நிஜ சம்பவங்கள்; அதில் உட்பட்டுள்ள ஆட்கள் உண்மையிலேயே வாழ்ந்திருக்கிறார்கள். பைபிளில் பதிவுசெய்யப்பட்டுள்ள முதல் உயிர்த்தெழுதலை மட்டும் நாம் இப்போது சுருக்கமாகச் சிந்திக்கலாம்.
11, 12. (அ) சாறிபாத் விதவை என்ன துயர சம்பவத்தை எதிர்ப்பட்டாள், உடனே அவள் எப்படிப் பிரதிபலித்தாள்? (ஆ) அந்த விதவைக்கு உதவ எலியாவுக்கு யெகோவா என்ன அதிகாரம் அளித்தார் என்பதை விளக்குங்கள்.
11 இந்தக் காட்சியை கற்பனை செய்து பாருங்கள். எலியா தீர்க்கதரிசி ஒரு சில வாரங்களுக்கு சாறிபாத் ஊரிலிருந்த ஒரு விதவையின் வீட்டு மாடியில் விருந்தாளியாகத் தங்கியிருக்கிறார். வாழ்க்கையை ஓட்ட அநேகர் திணறிக்கொண்டிருந்த காலம் அது. காரணம், அந்தப் பகுதி வறட்சியாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அநேகர் செத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், யெகோவா ஏற்கெனவே எலியாவைப் பயன்படுத்தி, ஓர் அற்புதம் நீண்ட காலத்திற்கு நிகழும்படி செய்து இந்த ஏழை விதவையின் விசுவாசத்திற்குப் பலன் அளித்திருந்தார். அவளும் அவளுடைய மகனும் பட்டினியின் வாசலில் நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவேளைக்குச் சாப்பிட மட்டுமே அவர்களிடம் உணவு இருந்தது. அந்தச் சமயத்தில், யெகோவாவின் பலத்தால் எலியா ஓர் அற்புதம் நிகழ்த்தி, எடுக்க எடுக்க குறையாதவண்ணம் மாவையும் எண்ணெயையும் நீண்ட நாள் கிடைக்கச் செய்தார். ஆனால், இப்போது துயரம் இடிபோல் தாக்குகிறது. அந்த விதவையின் மகன் திடீரென வியாதிப்படுகிறான்; விரைவிலேயே அவனுடைய சுவாசம் நின்றுவிடுகிறது. அவனுடைய தாய் நொறுங்கிப் போகிறாள்! ஏற்கெனவே கணவன் இறந்துபோயிருந்ததால் அவருடைய ஆதரவையும் ஆறுதலையும் இழந்து தவித்துக்கொண்டிருந்தவள், இப்போது தன்னுடைய ஒரே மகனையும் பறிகொடுத்திருக்கிறாள். துக்கம் தாளாமல், எலியாமீதும் அவருடைய கடவுள்மீதும்கூட பழிசுமத்துகிறாள்! தீர்க்கதரிசி இப்போது என்ன செய்வார்?
12 பழிசுமத்தியதற்காக எலியா அவளைத் திட்டவில்லை. மாறாக, “உன் குமாரனை என்னிடத்தில் தா” என்று கேட்கிறார். செத்துப்போன பையனை மாடிக்கு எடுத்துப்போய், அவனுக்கு உயிர் அளிக்கும்படி கேட்டு யெகோவாவிடம் திரும்பத் திரும்ப மன்றாடுகிறார். கடைசியில், அவருடைய ஜெபத்திற்கு யெகோவா பதில் அளிக்கிறார்! அந்தப் பையன் சுவாசிக்க ஆரம்பித்தவுடன் அவனுடைய மார்பு மேலெழும்பி இறங்குகிறது. அதைக் கண்டு எலியாவின் முகத்தில் சந்தோஷம் பரவுகிறது. அந்தப் பையன் கண்களைத் திறக்கிறான், உயிரோட்டத்தால் அவை மின்னுகின்றன. எலியா அவனைத் தூக்கிக்கொண்டு, அங்கிருந்து கீழிறங்கி அவனுடைய தாயிடம் வருகிறார். “பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான்” என்கிறார். அவள் அடைந்த சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. “நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன்” என அவள் சொல்கிறாள். (1 இராஜாக்கள் 17:8-24) யெகோவாமீதும் அவருடைய பிரதிநிதிமீதும் அவளுக்கிருந்த நம்பிக்கை உறுதிப்படுகிறது.
13. விதவையின் மகனை எலியா உயிர்த்தெழுப்பியதைப் பற்றிய பதிவு நமக்கு இன்று ஏன் ஆறுதல் அளிக்கிறது?
13 இதுபோன்ற பதிவுகளை வாசித்து, தியானிப்பது உங்களுக்கு அதிக ஆறுதலாக இருக்கும். மரணம் எனும் நம் எதிரியை யெகோவாவால் வெல்ல முடியும் என்பது எவ்வளவு தெளிவாக இருக்கிறது! உயிர்த்தெழுப்பப்பட காத்திருக்கும் எல்லா விதமான ஆட்களும் எதிர்காலத்தில் உயிரோடு வருகையில், அந்த விதவையைப் போன்று எத்தனை பேரின் முகத்தில் சந்தோஷம் மின்னும் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! யெகோவா தம் மகனைப் பயன்படுத்தி பூமியெங்கும் உயிர்த்தெழுதலை நடப்பிக்கும்போது சந்தோஷப்படுவார்; அப்போது பரலோகத்திலும் சந்தோஷம் மிகுதியாக இருக்கும். (யோவான் 5:28, 29) உங்கள் அன்புக்குரியவர்களை மரணம் உங்களிடமிருந்து பிரித்திருக்கிறதா? இறந்தவர்களை உயிர்த்தெழுப்ப யெகோவாவால் முடியும், அவர் அதை நிச்சயம் செய்வார் என்பதை அறிந்துகொள்வது எத்தனை இதமாக இருக்கிறது!
உங்கள் நம்பிக்கையும், வாழ்க்கைமுறையும்
14. உயிர்த்தெழுதல் நம்பிக்கை உங்கள் வாழ்க்கைமுறைமீது என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும்?
14 உயிர்த்தெழுதல் நம்பிக்கை உங்களுடைய வாழ்க்கைமுறையின் மீது இப்போதே என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? நெருக்கடிகள், பிரச்சினைகள், துன்புறுத்தல் அல்லது ஆபத்துகளை எதிர்ப்படுகையில் இந்த நம்பிக்கை உங்களைத் தூக்கி நிறுத்தும். மரணத்தைக் கண்டு நீங்கள் பயந்து நடுங்க வேண்டுமென்று சாத்தான் விரும்புகிறான். பாதுகாப்பு தருவதாக மனிதர்கள் அளிக்கும் வெற்று வாக்குறுதியை நம்பி உங்களுடைய உத்தமத்தன்மையை நீங்களாகவே விட்டுக்கொடுக்க வேண்டுமென்றும் அவன் எதிர்பார்க்கிறான். “ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும், மனுஷன் கொடுத்துவிடுவான்” என்று யெகோவாவிடம் சாத்தான் சொன்னதை நினைவில் வையுங்கள். (யோபு 2:4) இப்படிச் சொன்னதன்மூலம் எல்லா மனிதர்கள் மீதும் அவன் பழிசுமத்தியிருக்கிறான், உங்கள் மீதும்தான். அவன் சொன்னதுபோல், உயிருக்கு ஆபத்து வந்தால் கடவுளை வணங்குவதை விட்டுவிடுவீர்களா? உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப்பற்றி ஆழ்ந்து சிந்திப்பதன் மூலம், உங்கள் பரலோக தகப்பனின் சித்தத்தைத் தொடர்ந்து செய்வதற்கான தீர்மானத்தைப் பலப்படுத்திக் கொள்ளலாம்.
15. ஆபத்தைச் சந்திக்கையில், மத்தேயு 10:28-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகள் நமக்கு எவ்வாறு ஆறுதல் அளிக்கும்?
15 “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தைமாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே [“கெஹென்னாவிலே,” NW] அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்” என்று இயேசு கூறினார். (மத்தேயு 10:28) சாத்தானையோ அவனுடைய கையாட்களையோ கண்டு நாம் பயப்படத் தேவையில்லை. சிலர் நமக்குத் தீங்கு செய்ய, ஏன் மரணத்தை விளைவிக்கக்கூட முடியும் என்பது உண்மையே. என்றாலும், அவர்கள் எப்பேர்ப்பட்ட பயங்கர கஷ்டத்தைக் கொடுத்தாலும் அது தற்காலிகமானதே. ஏனெனில், தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களுக்கு ஏற்பட்ட எல்லா சேதத்தையும் யெகோவாவால் சரிசெய்ய முடியும், சரிசெய்யவும் போகிறார். அவர்களை உயிர்த்தெழுப்பவும் அவரால் முடியும். யெகோவா மட்டுமே நம்முடைய பயத்திற்கும், ஆழ்ந்த பயபக்திக்கும், மரியாதைக்கும் உரியவர். சரீரத்தையும் ஆத்துமாவையும், அதாவது உயிரையும், நித்திய வாழ்க்கைக்கான எதிர்பார்ப்புகளையும், கெஹென்னாவில் அழிப்பதற்கான வல்லமை அவருக்கு மட்டுமே இருக்கிறது. அப்படிப்பட்ட நிலை உங்களுக்கு ஏற்படுவதை யெகோவா விரும்பவில்லை என்பதை அறிவது சந்தோஷம் அளிக்கிறது. (2 பேதுரு 3:9) உயிர்த்தெழுதல் நம்பிக்கை இருப்பதால், கடவுளுடைய ஊழியர்களாக நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதில் எப்போதும் உறுதியோடிருக்கலாம். கடவுளுக்கு நாம் உண்மையாக நிலைத்திருக்கும்வரையில், முடிவில்லா வாழ்க்கை நமக்காகக் காத்திருக்கிறது; சாத்தானோ அவனது கையாட்களோ அதை நம்மிடமிருந்து பறிக்க முடியாது.—சங்கீதம் 118:6; எபிரெயர் 13:6.
16. உயிர்த்தெழுதல் நம்பிக்கை நம்முடைய முன்னுரிமைகள்மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
16 உயிர்த்தெழுதல் நம்பிக்கை நம் மனதில் பிரகாசமாக இருந்தால், வாழ்க்கையைப் பற்றிய நம் கண்ணோட்டத்தை அது மாற்றியமைக்கும். “பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்” என்று நாம் உணருவோம். (ரோமர் 14:7, 8) வாழ்க்கையில் எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதைத் தீர்மானிக்கையில், பவுல் கொடுத்த பின்வரும் புத்திமதியை நாம் பின்பற்றுவோம்: “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” (ரோமர் 12:2) அநேகர் தங்களுடைய ஒவ்வொரு லட்சியத்தையும் அடையவும், எல்லா விருப்பங்களையும், ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ளவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். வாழ்நாள் குறுகியது என்று நினைப்பதால், முடிந்தவரை அதை அனுபவிக்க வேண்டுமென்று ஆலாய்ப் பறக்கிறார்கள். அவர்களுக்கென வழிபாட்டு முறை ஒன்று இருந்தாலும் அது நிச்சயம் ‘தேவனுடைய . . . பரிபூரணமுமான சித்தத்திற்கு’ இசைவாய் இருப்பதில்லை.
17, 18. (அ) மனிதனின் வாழ்நாள் குறுகியது என்பதை யெகோவாவின் வார்த்தை எவ்வாறு ஒத்துக்கொள்கிறது, ஆனால் நாம் எதை அனுபவிக்க வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார்? (ஆ) யெகோவாவை அனுதினமும் துதிக்க நாம் ஏன் தூண்டப்படுகிறோம்?
17 மனிதனுடைய வாழ்நாள் நிச்சயமாகவே குறுகியதுதான். சுமார் 70, 80 வருடங்களில் ‘அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாமும் பறந்துபோகிறோம்.’ (சங்கீதம் 90:10) மனிதனுடைய வாழ்க்கை வாடிவிடுகிற பசும்புல், கடந்துபோகிற நிழல், வெளியேறுகிற சுவாசக்காற்று ஆகியவற்றைப் போன்று நிலையற்றதாய் இருக்கிறது. (சங்கீதம் 103:15; 144:3, 4) வாழ்க்கையில் ஒருசில பத்தாண்டுகளை வளருவதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவம் பெறுவதற்கும் செலவழித்துவிட்டு, மீதியுள்ள ஆண்டுகளில் பலமிழந்து, வியாதியில் விழுந்து, கடைசியில் கண்ணை மூடுவதற்காக கடவுள் நம்மைப் படைக்கவில்லை. என்றென்றும் வாழ வேண்டுமென்ற ஆசையோடு மனிதர்களை யெகோவா படைத்தார். எனவேதான், “நித்திய கால நினைவை அவர்கள் உள்ளத்தில் வைத்திருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 3:11, NW) இப்படிப்பட்ட ஆசையை நம் மனதில் விதைத்துவிட்டு, அது நிராசையாய் போகும்படி செய்ய கடவுள் என்ன கொடூரரா? இல்லை, “தேவன் அன்பாகவே இருக்கிறார்.” (1 யோவான் 4:8) இறந்துபோனவர்களை உயிர்த்தெழுப்புவதன்மூலம் முடிவில்லா வாழ்க்கையைப் பெற அவர் வழிசெய்வார்.
18 உயிர்த்தெழுதல், நாம் பாதுகாப்பான எதிர்காலத்தைப் பெற வழிசெய்கிறது. நம்முடைய பலம் அனைத்தையும் இப்போதே செலவழிப்பதற்காக நாம் பரபரப்போடு ஓடவேண்டியதில்லை. அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இந்த உலகத்தை “முழுமையாக” அனுபவிக்க தேவையில்லை. (1 கொரிந்தியர் 7:29-31, பொது மொழிபெயர்ப்பு; 1 யோவான் 2:17) எதிர்கால நம்பிக்கை இல்லாதவர்களைப் போலில்லாமல் நாம் அருமையான ஓர் எதிர்பார்ப்பை உடையவர்களாய் இருக்கிறோம். அதாவது, யெகோவா தேவனுக்கு உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருந்தால், காலாகாலத்திற்கும் நாம் அவரைத் துதித்துக்கொண்டு மகிழ்ச்சியாய் வாழ முடியும் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகவே, உயிர்த்தெழுதல் நம்பிக்கையை நிஜமானதாய் ஆக்கும் யெகோவாவை நாம் அனுதினமும் துதிப்போமாக!
எப்படிப் பதில் அளிப்பீர்கள்?
• உயிர்த்தெழுதலைக் குறித்து நாம் எப்படி உணர வேண்டும்?
• எவை உயிர்த்தெழுதலை நிச்சயமானதாய் ஆக்குகின்றன?
• உயிர்த்தெழுதல் நம்பிக்கையிலிருந்து நீங்கள் எவ்வாறு ஆறுதலைக் கண்டடையலாம்?
• உங்கள் வாழ்க்கைமுறைமீது உயிர்த்தெழுதல் நம்பிக்கை என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும்?
[பக்கம் 28-ன் படம்]
நீதிமான்களை உயிர்த்தெழுப்ப யெகோவா பேராவலோடு இருப்பதை யோபு அறிந்திருந்தார்
[பக்கம் 29-ன் படம்]
“பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான்”