மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் வெற்றி
பிரான்சு நாட்டில் ஸ்ட்ராஸ்பர்க்கிலுள்ள மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றம் ஜனவரி 11, 2007-ல் ஏகமனதாக ஒரு தீர்ப்பை வழங்கியது; அந்தத் தீர்ப்பு, ரஷ்ய கூட்டாட்சிக்கு எதிராக வழக்கு தொடுத்திருந்த ரஷ்யாவைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகளுக்கு ஆதரவாக இருந்தது. அந்தத் தீர்ப்பு யெகோவாவின் சாட்சிகளுடைய மத சுதந்திரத்தையும், நியாயமாக விசாரிக்கப்படுவதற்கான உரிமையையும் உறுதிப்படுத்தியது. இந்த வழக்கு தொடரப்பட்டதற்கான காரணத்தைக் கவனிப்போம்.
ரஷ்யாவிலுள்ள செலியாபின்ஸ்க் நகரில் காதுகேளாத அநேகர் அடங்கிய யெகோவாவின் சாட்சிகளின் சபை ஒன்று உள்ளது. அவர்கள் தங்களுடைய கூட்டங்களை நடத்த ஒரு தொழில் பயிற்சிக் கல்லூரியிடமிருந்து இடத்தைக் குத்தகைக்குப் பெற்றிருந்தார்கள். ஏப்ரல் 16, 2000-வது ஆண்டு, ஞாயிற்றுக்கிழமையன்று அவர்களுடைய கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது மண்டல மனித உரிமைக் குழுவின் ஆணையர், இரண்டு மூத்த காவல்துறை அதிகாரிகள், சீருடையில் இல்லாத ஒரு காவல்துறை அதிகாரி ஆகியோர் குறுக்கிட்டார்கள். முக்கியமாக, அந்த ஆணையருடைய பாரபட்சத்தால், சட்டத்திற்கு முரணாக கூட்டங்கள் நடத்துவதாக அவர்கள்மீது பொய்க் குற்றம் சாட்டப்பட்டு, அவர்களுடைய கூட்டம் நிறுத்தப்பட்டது. மே 1, 2000-ல் அந்த அரங்கத்தின் குத்தகை ரத்து செய்யப்பட்டது.
யெகோவாவின் சாட்சிகள் செலியாபின்ஸ்க்கைச் சேர்ந்த வழக்குரைஞரிடம் ஒரு புகார் பதிவு செய்தார்கள்; ஆனால் எந்தப் பலனும் இல்லை. ரஷ்யாவின் அரசியலமைப்புச் சட்டமும், மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கான ஒப்பந்தமும் மத சுதந்திரம், கூட்டம் கூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. அதனால், மாவட்ட நீதிமன்றத்தில் ஓர் உரிமையியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு, மண்டல நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்யப்பட்டது. ஜூலை 30, 1999-ல் உச்ச நீதிமன்றம் இன்னொரு வழக்கில் ஏற்கெனவே இவ்வாறு தீர்ப்பளித்திருந்தது: “மனசாட்சியின்படி நடக்கும் சுதந்திரம், மத கூட்டங்களை நடத்தும் சுதந்திரம் ஆகியவற்றுக்கான ரஷ்ய சட்டத்தின்படி, ‘இடையூறின்றி’ என்ற சொற்றொடரின் அர்த்தம், அதிகாரிகளின் அனுமதியோ அங்கீகாரமோ இல்லாமலேயே மதச் சடங்குகளை [அதற்கான இடங்களில்] நடத்தலாம் என்பதாகும்.” (அடைப்புக்குறிகள் அவர்களுடையது.) இந்தச் சட்ட ஆதாரம் இருந்தபோதிலும் மாவட்ட, மண்டல நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகள் நிராகரிக்கப்பட்டன.
இந்த வழக்கு டிசம்பர் 17, 2001-ல் மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. செப்டம்பர் 9, 2004-ல் இது விசாரிக்கப்பட்டது. நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பிலிருந்து சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
“ஏப்ரல் 16, 2000-ல் மனுதாரர்களின் மதச் சுதந்திரத்திற்கான உரிமையில் அரசாங்க அதிகாரிகள் தலையிட்டு அவர்களுடைய மதக் கூட்டம் பாதியிலேயே நின்றுவிடுவதற்குக் காரணமாக இருந்தார்களென நீதிமன்றம் காண்கிறது.”
“மத நிகழ்ச்சிகளுக்காக சட்டப்படி குத்தகைக்கு எடுக்கப்பட்ட இடத்தில் நடைபெற்ற மதக் கூட்டத்தைத் தடை செய்ததற்குச் சட்டப்படியான ஆதாரம் எதுவுமில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.”
“இதுபோன்ற வழக்குகளில் ரஷ்ய உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை [இந்நீதிமன்றம்] கவனிக்கையில், மதக் கூட்டங்களுக்காக அதிகாரிகளிடமிருந்து முன் அனுமதியோ, அவர்களுக்கு முன் தகவல் தெரிவிப்பதோ தேவையில்லை எனத் தெரிகிறது.”
“ஆணையரும் அவருடைய உதவியாளர்களும் ஏப்ரல் 16, 2000-ல் மனுதாரர்களின் மதக் கூட்டத்திற்கு இடையூறு செய்ததால் ஒப்பந்தத்தின் 9-வது விதியை [மத சுதந்திரம்] மீறியிருக்கிறார்கள்.”
“மனுதாரர்களை நியாயமாகவும், பாரபட்சமின்றியும் விசாரிக்க வேண்டிய தங்களுடைய கடமையிலிருந்து . . . உள்ளூர் நீதிமன்றங்கள் தவறியிருப்பதை இந்நீதிமன்றம் காண்கிறது. அங்கே, . . . ஒப்பந்தத்தின் 6-ஆம் விதி [நியாயமாக விசாரிக்கப்படுவதற்கான உரிமை] மீறப்பட்டுள்ளது.”
மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் கிடைத்த வெற்றிக்காக யெகோவாவின் சாட்சிகள் கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். (சங்கீதம் 98:1) நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும்? “ஐரோப்பா முழுவதிலும் மத சுதந்திரத்தின்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் இன்னொரு அதிமுக்கியமான தீர்ப்பு இது; மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு உட்பட்ட எல்லா நாடுகளின் மத உரிமைகளில் இந்தத் தீர்ப்பு செல்வாக்கு செலுத்தும்” என்று மத மற்றும் பொதுக்கொள்கை நிறுவனத்தின் தலைவரான ஜோசஃப் க்ரெபவுஸ்கீ சொல்கிறார்.