வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
நன்றாகப் பயிற்றுவிக்கப்படுகிற கிறிஸ்தவப் பிள்ளைகள் யெகோவாவின் வழியை விட்டு நிச்சயம் விலகமாட்டார்கள் என நீதிமொழிகள் 22:6 உறுதியளிக்கிறதா?
இந்த வசனம் இவ்வாறு சொல்கிறது: “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” ஒரு செடிக்கு முட்டுக் கொடுப்பது அது நேரான மரமாக வளர உதவும்; அதுபோலவே பிள்ளைகள் நன்றாகப் பயிற்றுவிக்கப்படுகையில், பெரும்பாலும் அவர்கள் வளர்ந்தப் பிறகும் யெகோவாவைத் தொடர்ந்து சேவிப்பார்கள். அப்படிப்பட்ட பயிற்றுவிப்புக்கு அதிக நேரமும் கடின முயற்சியும் அவசியம் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் அறிந்திருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளை கிறிஸ்தவ சீஷர்களாக வளர்க்க, பெற்றோர் அவர்களுக்குக் கவனமாகப் போதிக்க வேண்டும், ஊக்கமூட்ட வேண்டும், சிட்சையளிக்க வேண்டும், அவர்களை கண்டிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களுக்குச் சிறந்த முன்மாதிரிகளாகத் திகழ வேண்டும். இப்படியாக, பிள்ளைகள் வளர்ந்து ஆளாகும்வரை அவர்களை அன்பாகப் பயிற்றுவித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
அப்படியென்றால், ஒரு பிள்ளை யெகோவாவைச் சேவிப்பதை விட்டு வழிதவறிப்போனால், பெற்றோரின் பயிற்றுவிப்பில் ஏதோ குறை இருந்திருக்கும் என்பதாக அர்த்தமா? சில சமயங்களில், யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் பிள்ளைகளை வளர்க்க பெற்றோர் எடுத்த முயற்சியில் குறை இருந்திருக்கலாம். (எபேசியர் 6:4) என்றாலும், நன்றாகப் பயிற்றுவிக்கப்படும் பிள்ளைகள் கடவுளுக்கு நிச்சயம் விசுவாசமுள்ளவர்களாக வளருவார்கள் என இந்த வசனம் உறுதியளிப்பதில்லை. பெற்றோர் தங்கள் இஷ்டப்படி பிள்ளைகளை வடிவமைக்க முடியாது என்பது உண்மையே. ஏனென்றால், பெரியவர்களைப் போலவே பிள்ளைகளுக்கும் தெரிவு செய்வதற்கான சுதந்திரம் இருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கைப் போக்கை அவர்களேதான் தெரிவுசெய்ய வேண்டும். (உபாகமம் 30:15, 16, 19) பெற்றோர், தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தப் பிறகும்கூட, சில பிள்ளைகள் விசுவாசத்தை விட்டு வழுவிச் செல்கிறார்கள். நாம் கலந்தாலோசிக்கிற இந்த வசனத்தை எழுதிய சாலொமோனும்கூட அவ்வாறே வழிதவறிச் சென்றார். ஏன், யெகோவாவின் மகன்களில் சிலரும் வழிதவறிச் சென்றிருக்கிறார்கள்.
எனவே, எல்லா பிள்ளைகளும் தங்களுக்கு கிடைத்தப் பயிற்றுவிப்பை ‘விடாதிருப்பார்கள்’ என்பதாக இந்த வசனம் சொல்வதில்லை. மாறாக, பெரும்பாலான பிள்ளைகள் தங்களுக்கு கிடைத்தப் பயிற்றுவிப்பின்படி நடப்பார்கள் என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது. இது பெற்றோருக்கு எப்பேர்ப்பட்ட உற்சாகத்தை அளிக்கிறது! தங்களுடைய பிள்ளைகளை யெகோவாவின் வழியில் நடத்த அவர்கள் எடுக்கிற கடின முயற்சிகள் நிச்சயம் நல்ல பலன்களைத் தரும் என்பதை அறிவதில் பெற்றோர் சந்தோஷப்படலாம். பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதில் பெற்றோருடைய பங்கு இன்றியமையாதது, அவர்களை வடிவமைப்பதில் பெற்றோர் பெரும் செல்வாக்கு செலுத்துகிறார்கள். எனவே, தங்களுடைய பங்கை முக்கியமானதாகக் கருதும்படி பெற்றோர் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்.—உபாகமம் 6:6, 7.
பிள்ளைகள் யெகோவாவை சேவிப்பதை நிறுத்திவிட்டிருந்தாலும் கண்ணும்கருத்துமாக தங்கள் பிள்ளைகளை பயிற்றுவித்த பெற்றோர், அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து சரியான பாதைக்கு நிச்சயம் வருவார்கள் என நம்பிக்கையாய் இருக்கலாம். ஏனென்றால், பைபிள் சத்தியம் வலிமைமிக்கது. பெற்றோருடைய பயிற்றுவிப்பும் அவ்வளவு எளிதில் மறந்துவிடக்கூடியதல்ல.—சங்கீதம் 19:7.