“சீலோவாம் குளத்திலே கழுவு”
மண்ணைக் குழைத்து சேறுண்டாக்கி பார்வையற்ற ஒருவனுடைய கண்களில் இயேசு பூசினார். அதன்பின், “நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு” என்றார். அப்படியே அவன் போய்க் கழுவி, “பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான்.” (யோவான் 9:6, 7) இந்தக் குளம் எங்கிருந்தது? இது குறித்து சமீபத்திய புதைபொருள் ஆராய்ச்சியின்மூலம் புதிய தகவல் கிடைத்திருக்கிறது.
எருசலேம் நகரத்தில் சீலோவாம் குளம் என அழைக்கப்படுகிற ஒரு சுற்றுலாத் தலம் உள்ளது. அநேக சுற்றுலாப் பயணிகள் இதைப் பார்வையிட்டிருக்கிறார்கள். யோவான் 9:7-ல் குறிப்பிடப்பட்டுள்ள குளம் இதுவே என அவர்கள் நினைக்கிறார்கள். பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் எசேக்கியா ராஜாவால் கட்டப்பட்ட 530 மீட்டர் நீளமுள்ள தண்ணீர்ச் சுரங்கத்தின் கடைமுனையில் இது அமைந்துள்ளது. இந்தக் குளம் உண்மையில் பொ.ச. நான்காம் நூற்றாண்டில்தான் கட்டப்பட்டது. இதைக் கட்டிய பைஸாண்டிய “கிறிஸ்தவர்கள்,” யோவான் சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சீலோவாம் குளம் இந்த இடத்தில்தான் இருந்திருக்குமெனத் தவறாக நினைத்துக்கொண்டார்கள்.
என்றாலும், புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் 2004-ல் ஒரு குளத்தைக் கண்டுபிடித்தார்கள். இதுவே இயேசு பூமியில் வாழ்ந்தபோது அமைந்திருந்த நிஜமான சீலோவாம் குளமாக இருந்திருக்குமென்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். இந்தக் குளம், தற்போது சீலோவாம் குளம் எனத் தவறுதலாக அழைக்கப்படுகிற இடத்திற்குத் தென்கிழக்கே சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் இதை எப்படிக் கண்டுபிடித்தார்கள்? அந்தப் பகுதியில் இருந்த கழிவுநீர்க் குழாயில் பழுதுபார்க்கும் பணி நடைபெற வேண்டியிருந்ததால் அரசு அதிகாரிகள் கனரக இயந்திரங்களுடன் பணியாட்களை அங்கே அனுப்பி வைத்தார்கள். தோண்டும் வேலை நடைபெற்றபோது, அதற்கு அருகே பணிபுரிந்த ஒரு புதைபொருள் ஆய்வாளர் அதைக் கவனித்துக்கொண்டே இருந்தார். அவருடைய கண்களில் இரண்டு படிக்கட்டுகள் தென்பட்டன. பழுதுபார்க்கும் பணி அத்தோடு நிறுத்தப்பட்டது. அந்தப் பகுதியில் அகழாய்வுப் பணியை மேற்கொள்ள இஸ்ரேல் நாட்டு புதைபொருள் ஆராய்ச்சித்துறை அனுமதி அளித்தது. சுமார் 70 மீட்டர் நீளமாய் இருந்த அந்தக் குளத்தின் ஒரு பக்கமும், அதன் இரு முனைகளும் இப்போது தோண்டப்பட்டுவிட்டன.
குளத்தைத் தோண்டியபோது சில நாணயங்களும் கிடைத்தன. இவை, ரோம அரசுக்கு எதிராக யூதர்கள் கலகம் செய்த இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆண்டுகளின்போது புழக்கத்தில் இருந்தவை. இந்தக் கலகம் பொ.ச. 66-க்கும் 70-க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்தது. பொ.ச. 70-ஆம் ஆண்டுவரை இந்தக் குளம் அப்பகுதியிலுள்ள மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்திருந்ததை அந்த நாணயங்கள் காட்டுகின்றன. அந்த வருடத்தில்தான் ரோமர்கள் எருசலேமைக் கைப்பற்றி அதைச் சிதைத்துச் சீரழித்திருந்தார்கள். பிப்ளிகல் ஆர்க்கியாலஜி ரிவ்யூ என்ற பத்திரிகை இவ்வாறு கருத்து தெரிவிக்கிறது: “ஆகவே, கலகம் ஓயும் வரையில் இந்தக் குளம் மக்களால் பயன்படுத்தப்பட்டது; அதன்பின்னர் உபயோகிக்காமல் அப்படியே விடப்பட்டது. பைஸாண்டிய ஆட்சிக்காலம் வரையில் யாரும் இங்கே மீண்டும் குடியேறவில்லை. எருசலேமிலேயே இந்தப் பகுதிதான் மிகத் தாழ்வான பகுதியாய் இருந்தது. ஒவ்வொரு வருடமும் குளிர் காலத்தில் பெய்த மழை காரணமாகப் பள்ளத்தாக்கின் வழியாகப் பாய்ந்தோடிய நீர், சேற்றையும் சகதியையும் இந்தக் குளத்தில் அடுக்கடுக்காய்ப் படிய வைத்தது. ரோமரால் எருசலேம் அழிக்கப்பட்டதால் இந்தக் குளம் தூர் வாரப்படாமல் பாழாய்க் கிடந்தது. இப்படிப் பல நூற்றாண்டுகளாக அடுக்கடுக்காய்ப் படிந்த சகதியால் இந்தக் குளம் ‘படிப்படியாய்’ மறைந்து இறுதியில் தடம்தெரியாமலே போய்விட்டது. அவ்வாறு படிந்திருந்த சகதியைத் தோண்டிய பிறகுதான், அதுவும் சில இடங்களில் கிட்டத்தட்ட 3 மீட்டர் ஆழத்திற்குத் தோண்டிய பிறகுதான் இந்தக் குளம் தட்டுப்பட்டது.”
சீலோவாம் குளத்தின் நிஜமான இருப்பிடத்தைக் கண்டறிந்தது பைபிளைப் படிப்பவர்களுக்கு ஆர்வமூட்டுவதேன்? ஏனெனில், முதல் நூற்றாண்டிலிருந்த எருசலேம் நகரத்தின் நிலவியல் குறிப்புகள் இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் விவரிக்கும் சுவிசேஷப் பதிவுகளில் அடிக்கடி குறிப்பிடப்படுவதால் அதை நன்கு புரிந்துகொள்ள இது அவர்களுக்கு உதவுகிறது.
[பக்கம் 7-ன் படம்]
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சீலோவாம் குளம்
[படத்திற்கான நன்றி]
© 2003 BiblePlaces.com