வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
இஸ்ரவேலர்களில் ஆண்கள் எல்லாருமே புளிப்பில்லாத அப்பப்பண்டிகைக்காக ஆஜராகியிருந்த வேளையிலேயே அறுப்பு வேலையும் சட்டப்பூர்வமாக ஆரம்பித்ததால், ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்ட வாற்கோதுமையின் முதற்பலன்களை யார் அறுவடை செய்தார்கள்?
நியாயப்பிரமாணச் சட்டம் இஸ்ரவேலர்களை இவ்வாறு அறிவுறுத்தியது: “வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.” (உபாகமம் 16:16) சாலொமோன் ராஜாவின் காலம் முதற்கொண்டு எருசலேமிலிருந்த ஆலயமே கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தானமாக இருந்து வந்தது.
அந்த மூன்று பண்டிகைகளில் முதலாவது, வசந்த காலத்தின் ஆரம்பத்தில் கொண்டாடப்பட்டது. புளிப்பில்லாத அப்பப்பண்டிகையென அழைக்கப்பட்ட அது, நிசான் 14-ஆம் தேதி பஸ்கா ஆசரிப்புக்கு அடுத்த நாள் துவங்கி நிசான் 21-ஆம் தேதிவரையில் ஏழு நாட்களுக்குத் தொடர்ந்தது. புனித நாட்காட்டியின்படி, பண்டிகையின் இரண்டாம் நாளான நிசான் 16-ஆம் தேதியில் அவ்வருடத்தின் முதல் அறுவடை துவங்கியது. அந்த நாளில், பிரதான ஆசாரியன் வாற்கோதுமை அறுப்பின் “முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை” எடுத்து ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலத்தில் “அசைவாட்ட” வேண்டியிருந்தது. (லேவியராகமம் 23:5-12) புளிப்பில்லாத அப்பப்பண்டிகைக்கு அனைத்து ஆண்மக்களும் ஆஜராகியிருக்க வேண்டியிருந்ததால், இந்தக் காணிக்கையை யார் அறுவடை செய்தார்கள்?
புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின்போது அறுவடையின் முதற்பலனை யெகோவாவுக்கு அளிக்க வேண்டும் என்ற கட்டளை முழு தேசத்திற்கும் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் தானே அறுவடை செய்து முதற்பலன்களை பரிசுத்த ஸ்தலத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற அவசியம் இருக்கவில்லை. அதற்குப் பதிலாக, அந்தத் தேசத்தை பிரதிநிதித்துவம் செய்த தனி நபர்கள் எவரேனும் அந்தக் காணிக்கையைச் செலுத்தும்படி கட்டளையிடப்பட்டார்கள். எனவே, அருகிலிருந்த வாற்கோதுமை வயலிலிருந்து புளிப்பில்லாத அப்பப்பண்டிகைக்காக கதிரை அறுத்துவரும்படி வேறு யாராவது அனுப்பிவைக்கப்பட்டார்கள். இதைக் குறித்து என்ஸைக்ளோப்பீடியா ஜூடைக்கா இவ்வாறு சொல்கிறது: “வாற்கோதுமை நன்றாக விளைந்திருந்ததென்றால் எருசலேமுக்கு அருகாமையிலிருந்த இடங்களிலிருந்தே அவை அறுத்து வரப்பட்டன; இல்லையென்றால் இஸ்ரவேலில் எந்த இடத்திலிருந்தும் கொண்டுவரப்படலாம். மூன்று பேர் அவற்றை அறுத்தனர், ஒவ்வொருவரும் சொந்த அரிவாளையும் கூடைகளையும் வைத்திருந்தனர்.” பின்னர் வாற்கோதுமையின் கதிர்கட்டு பிரதான ஆசாரியரிடம் கொண்டுவரப்பட்டது. அவர் அதை யெகோவாவுக்குச் செலுத்தினார்.
அறுவடையின் முதற்பலன்களை அளிப்பதற்கான இந்த ஏற்பாடு, கடவுள் தங்கள் நிலங்களையும் அறுவடையையும் ஆசீர்வதித்ததற்கு போற்றுதலைத் தெரிவிப்பதற்கான ஓர் அருமையான சந்தர்ப்பத்தை இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்தது. (உபாகமம் 8:6-10) அதைவிட முக்கியமாக, சம்பிரதாய முறைப்படி அளிக்கப்பட்ட இந்தக் காணிக்கை ‘வரப்போகிற நன்மைகளின் நிழலாய்’ இருந்தது. (எபிரெயர் 10:1) பொ.ச. 33, நிசான் 16-ஆம் நாளில் இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார். அந்த நாள் அறுவடையின் முதற்பலன்களை அளிக்கும் நாளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இயேசுவைப்பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். . . . அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.” (1 கொரிந்தியர் 15:20-23) யெகோவாவுடைய சந்நிதியில் பிரதான ஆசாரியன் அசைவாட்டிய முதற்பலனாகிய கதிர்க்கட்டு, மரித்தவர்களிலிருந்து நித்திய ஜீவனுக்காக உயிர்த்தெழுப்பப்பட்ட முதலானவராயிருந்த இயேசு கிறிஸ்துவுக்கு முன்நிழலாக இருந்தது. அதன் மூலமாக பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மனித குலம் விடுதலை பெறுவதற்கு இயேசு வழி செய்தார்.
[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]
© 2003 BiblePlaces.com