ஆன்மீகத்தைத் தேடி
பி ரசித்தி பெற்ற தம்முடைய மலைப்பிரசங்கத்தில் இயேசு இவ்வாறு சொன்னார்: “ஆன்மீகத் தேவையைக் குறித்து உணர்வுடையோர் சந்தோஷமுள்ளவர்கள்.” (மத்தேயு 5:3, NW) இந்த வார்த்தைகளை நீங்கள் ஒருவேளை ஆமோதிக்கலாம். தங்களுக்கு ஆன்மீகத் தேவையிருப்பதை எங்குமுள்ளவர்கள் உணருகிறார்கள். அந்த ஆன்மீகத்தைக் கண்டடைந்தால் அது தங்களுக்குச் சந்தோஷத்தைத் தருமென நம்புகிறார்கள். அப்படியென்றால், “ஆன்மீகம்” என்பது என்ன?
ஆன்மீகம் என்பது, மத நன்னெறிகள் தேவை என்ற விழிப்புணர்வு அல்லது மத நன்னெறிகள்மீது பற்று எனவும் ஆன்மீகத் தன்மை அல்லது ஆன்மீக நிலை எனவும் ஓர் அகராதி விளக்கம் அளிக்கிறது. இந்தப் பதத்தை நன்கு புரிந்துகொள்ள பின்வரும் ஒப்புமையைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்: வியாபார விஷயங்களில் கெட்டிக்காரராய் திகழும் ஒருவர் வியாபார மனம் படைத்தவர் எனக் குறிப்பிடப்படுகிறார். அதேபோல, ஆன்மீகம் அல்லது மதம் சார்ந்த விஷயங்களில் அதிக ஈடுபாடுள்ளவர் ஆன்மீக மனம் படைத்தவர் என அழைக்கப்படுகிறார்.
அப்படியென்றால், உண்மையான ஆன்மீகத்தை எப்படிப் பெறலாம்? சொல்லப்போனால், கிட்டத்தட்ட எல்லா மதங்களுமே ஆன்மீக மார்க்கத்தை அறிந்திருப்பதாகச் சொல்லிக்கொள்கின்றன; இருப்பினும், அவை காட்டும் வழிகாட்டுதல்களோ அவற்றின் எண்ணிக்கையைப் போலவே எக்கச்சக்கமாய் உள்ளன. புராட்டஸ்டன்டாக இருக்கிற ஒருவர் மத விழிப்புணர்வுக் கூட்டங்களில் கலந்துகொள்வதால் இரட்சிக்கப்பட்டதாகச் சொல்லிக்கொள்கிறார். கத்தோலிக்கராக இருக்கிற ஒருவர், பூசையின்போது கடவுளிடம் நெருங்கி வர முயற்சி செய்கிறார். புத்த மதத்தினராக இருக்கிற ஒருவர், தியானத்தின்மூலம் அறிவொளியைப் பெற நாடுகிறார். இந்துவாக இருக்கிற ஒருவர் தன் ஆசைகளை அடக்குவதன்மூலம் மறுபிறப்பு சுழற்சியிலிருந்து விடுபட போராடுகிறார். இவர்கள் எல்லாருமே உண்மையான ஆன்மீக மார்க்கத்தில் செல்கிறார்களா? இவற்றில் ஏதேனும் ஒன்றாவது ஆன்மீக மார்க்கமா?
இக்கேள்விகளுக்கு அநேகருடைய பதில் இல்லை என்பதே. இவர்களுடைய கருத்துபடி, ஆன்மீகம் என்பது “எதையும் சார்ந்திராமல் நம்புவதை” குறிக்கிறது; அதாவது, எந்த மதத்தையும் சார்ந்திராமல் ஒரு கடவுளையோ ஒரு தெய்வத்தையோ நம்புவதைக் குறிக்கிறது. இன்னும் சிலர், மதம் சம்பந்தமான அனுபவத்தைப் பெறுவதல்ல, ஆனால் மன சமாதானத்திற்கும் அர்த்தமுள்ள வாழ்க்கைக்குமான ஆசையே ஆன்மீகமென நம்புகிறார்கள். ஆன்மீகத்தை நாடுகிறவர்களுக்கு மதம் என்ற ஒன்று அவசியமே இல்லை, மாறாக, தங்கள் ஆழ்மனதின் உணர்ச்சிகளுக்குக் கவனம் செலுத்தினாலே போதும் என்று அவர்கள் சொல்கிறார்கள். “உண்மையான ஆன்மீகம் என்பது உங்களுடைய உள்மனதில் புதைந்திருக்கிறது. அது, உலகத்தையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் நீங்கள் நேசிக்கிற விதத்தில், ஏற்றுக்கொள்கிற விதத்தில், தொடர்புகொள்கிற விதத்தில் இருக்கிறது. அதை சர்ச்சிடமிருந்தோ ஒரு மதத்தின் போதனைகளை நம்புவதிலிருந்தோ பெற முடியாது” என ஓர் எழுத்தாளர் சொல்கிறார்.
ஆக, ஆன்மீகம் குறித்த கருத்துகளில் மக்கள் பெருமளவு வேறுபட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆன்மீக மார்க்கத்திற்கு வழிகாட்டுவதாக ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உரிமை பாராட்டுகின்றன; இருப்பினும், அவற்றை வாசிப்பவர்களோ திருப்தி காணாதவர்களாக, பெரும்பாலும் குழம்பிப்போனவர்களாகவே உணருகிறார்கள். ஆனால், ஆன்மீக விஷயங்களில் நம்பகமான வழிகாட்டுதலைத் தருகிற ஒரு புத்தகம் இருக்கிறது. அது, கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலால் எழுதப்பட்டதற்கு அத்தாட்சி அளிக்கிறது. (2 தீமோத்தேயு 3:16) அந்தப் புத்தகம்தான் பைபிள். ஆன்மீகம் என்பது என்ன, அது எந்தளவு மதிப்புமிக்கது என்பதைக் குறித்து அந்தப் புத்தகம் என்ன சொல்கிறதெனப் பார்க்கலாம்.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
அட்டை: பின்னணி: © Mark Hamblin/age fotostock