உண்மையான ஆன்மீகத்தை நீங்கள் எப்படிக் கண்டடையலாம்?
“மா ம்சசிந்தை மரணம்; ஆவியின் [அதாவது, ஆன்மீக] சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.” (ரோமர் 8:6) இந்த வார்த்தைகளில், ஆன்மீகவாதியாய் இருப்பது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பத்தோடு அல்லது உணர்வோடு மட்டுமே சம்பந்தப்பட்டதில்லை என அப்போஸ்தலன் பவுல் சுட்டிக்காட்டினார். உண்மையில், இது வாழ்வா சாவா என்பதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், என்ன அர்த்தத்தில் ஓர் ஆன்மீகவாதி ‘ஜீவனையும் சமாதானத்தையும்’ பெற்றுக்கொள்கிறார்? பைபிளின்படி, அத்தகைய நபர் தற்போது தனக்குள்ளும் கடவுளோடும் சமாதானத்தை அனுபவிக்கிறார்; அதோடு, எதிர்காலத்தில் முடிவில்லா வாழ்வையும் பரிசாகப் பெறப்போகிறார். (ரோமர் 6:23; பிலிப்பியர் 4:7) எனவே, இயேசு பின்வருமாறு சொன்னதில் ஆச்சரியமேதுமில்லை: “ஆன்மீகத் தேவையைக் குறித்து உணர்வுடையோர் சந்தோஷமுள்ளவர்கள்.”—மத்தேயு 5:3, NW.
சொல்லப்போனால், நீங்கள் இந்தப் பத்திரிகையை வாசிப்பதே ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ளவர் என உங்களை அடையாளம் காட்டுகிறது; இது உண்மையிலேயே ஞானமான செயல். எனினும், ஆன்மீகம் என்ற விஷயத்தை எடுத்துக்கொண்டால் அதைப் பற்றிய கருத்துகள் பெருமளவு வேறுபடுகின்றன; எனவே, நீங்கள் இவ்வாறு யோசிக்கலாம்: ‘உண்மையான ஆன்மீகம் என்பது என்ன? அதை ஒருவர் எவ்வாறு கண்டடைகிறார்?’
“கிறிஸ்துவின் சிந்தை”
ஆன்மீக மனம் படைத்தவராய் இருப்பதன் முக்கியத்துவத்தையும் பயன்களையும் குறிப்பிட்டதோடுகூட உண்மையான ஆன்மீகம் எதை அர்த்தப்படுத்துகிறது என்பது பற்றிய அநேக விஷயங்களை அப்போஸ்தலன் பவுல் தெரிவித்தார். ஆன்மீக சிந்தையற்றவருக்கும் ஆன்மீக சிந்தை உடையவருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை, பூர்வ கொரிந்து பட்டணத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் விளக்கினார்; அதாவது, ஆன்மீக சிந்தையற்றவர் உடல் சார்ந்த ஆசாபாசங்களுக்கு அடிபணிகிறார், ஆன்மீக சிந்தையுள்ளவரோ ஆன்மீகக் காரியங்களை நெஞ்சார நேசிக்கிறார். பவுல் இவ்வாறு எழுதினார்: ‘ஜென்மசுபாவமான மனுஷன் [அதாவது, ஆன்மீக சிந்தையற்றவர்] தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்.’ மறுபட்சத்தில், “கிறிஸ்துவின் சிந்தை” உள்ளவராய் இருப்பது ஆன்மீகவாதிக்கான அடையாளம் என பவுல் விளக்கினார்.—1 கொரிந்தியர் 2:14-16.
“கிறிஸ்துவின் சிந்தை” உள்ளவராய் இருப்பது முக்கியமாய், “கிறிஸ்து இயேசுவிலிருந்த அதே சிந்தை” இருப்பதை அர்த்தப்படுத்துகிறது. (ரோமர் 15:5, NW; பிலிப்பியர் 2:5) வேறு விதமாகச் சொன்னால், ஆன்மீக மனம் படைத்தவர் இயேசுவைப்போல சிந்திக்கிறார், அவருடைய அடிச்சுவடுகளில் நடக்கிறார். (1 பேதுரு 2:21; 4:1) ஒருவருடைய சிந்தை எந்தளவுக்கு கிறிஸ்துவுடையதைப் போலிருக்கிறதோ அந்தளவுக்கு அவருடைய ஆன்மீகம் பலமானதாய் இருக்கும். அப்போது அவர், ‘ஜீவனையும் சமாதானத்தையும்’ பெறும் பாதையில் நடக்க ஆரம்பிக்கிறார்.—ரோமர் 13:14.
‘கிறிஸ்துவின் சிந்தையை’ அறிந்துகொள்வதற்கான வழி
எனினும், கிறிஸ்துவின் சிந்தையைப் பெறுவதற்கு ஒருவர் முதலாவது, கிறிஸ்து சிந்திக்கிற விதத்தை அறிந்திருக்க வேண்டும். எனவே, ஆன்மீகத்தை வளர்த்துக்கொள்வதற்கான முதல்படி, இயேசு சிந்திக்கிற விதத்தை அறிந்துகொள்வதாகும். ஆனால், 2,000 வருடங்களுக்கு முன் பூமியில் வாழ்ந்த ஒருவருடைய சிந்தையை நீங்கள் எப்படி அறிந்துகொள்ள முடியும்? சரி, ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். உங்கள் நாட்டில் வாழ்ந்த வரலாற்றுப் புகழ்பெற்றவர்களைப்பற்றி நீங்கள் எப்படித் தெரிந்துகொண்டீர்கள்? ஒருவேளை அவர்களைப்பற்றி வாசித்துத் தெரிந்துகொண்டிருப்பீர்கள். அதேபோல, இயேசுவின் வரலாற்றை வாசிப்பது கிறிஸ்துவின் சிந்தையை அறிந்துகொள்வதற்கான முக்கிய வழியாகும்.—யோவான் 17:3.
மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர் எழுதிய நான்கு சுவிசேஷங்களில் இயேசுவைப் பற்றிய தெள்ளத் தெளிவான சரித்திரப் பதிவுகள் உள்ளன. இந்தப் பதிவுகளைக் கவனமாய் வாசிப்பது, இயேசு சிந்தித்த விதத்தையும் அவருடைய மனதின் உணர்ச்சிகளையும் அவருடைய செயல்களுக்கான காரணத்தையும் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும். அவரைப்பற்றி வாசிக்கிற விஷயங்களைத் தியானிப்பதற்கு நீங்கள் நேரம் எடுத்துக்கொண்டால் அவர் எப்படிப்பட்டவராக இருந்தார் என்பது உங்கள் மனக்கண்முன் வந்து நிற்கும். நீங்கள் ஏற்கெனவே கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவரென நினைத்தாலும்கூட, ‘நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் [“தொடர்ந்து,” NW] வளர’ இப்படி வாசிப்பதும், தியானிப்பதும் உங்களுக்கு உதவும்.—2 பேதுரு 3:18.
இதை மனதில் வைத்து, இயேசுவை எது அத்தகைய ஆன்மீக மனம் படைத்தவராக்கியது என்பதை சுவிசேஷங்களிலுள்ள சில பகுதிகளிலிருந்து ஆராய்ந்து பார்ப்போம். பின்னர், அவருடைய மாதிரியை நீங்கள் எப்படிப் பின்பற்ற முடியுமென உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.—யோவான் 13:15.
ஆன்மீகமும் ‘ஆவியின் கனியும்’
இயேசு முழுக்காட்டுதல் பெற்றபோது கடவுளுடைய பரிசுத்த ஆவி அவர்மீது ஊற்றப்பட்டதையும் அவர் “பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய்” ஆனதையும்பற்றி சுவிசேஷ எழுத்தாளரான லூக்கா குறிப்பிட்டார். (லூக்கா 3:21, 22; 4:1) இயேசுவும், கடவுளுடைய பரிசுத்த ஆவியால், அதாவது ‘செயல் நடப்பிக்கும் சக்தியால்,’ வழிநடத்தப்படுவதன் முக்கியத்துவத்தை தம் சீஷர்களின் மனதில் பதிய வைத்தார். (ஆதியாகமம் 1:2, NW; லூக்கா 11:9-13) அது ஏன் அந்தளவு முக்கியம்? ஏனென்றால், கிறிஸ்துவின் சிந்தையைப் பிரதிபலிக்க ஆரம்பிக்கும் அளவுக்கு ஒருவருடைய மனதை அடியோடு மாற்றுகிற சக்தி கடவுளுடைய ஆவிக்கு இருக்கிறது. (ரோமர் 12:1, 2) பரிசுத்த ஆவி ஒருவரிடம், “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” போன்ற குணங்களைப் பிறப்பிக்கிறது. “ஆவியின் கனி” என பைபிள் குறிப்பிடுகிற இந்தக் குணங்கள் உண்மையான ஆன்மீகவாதியை அடையாளம் காட்டுகின்றன. (கலாத்தியர் 5:22, 23) சுருங்கச் சொன்னால், கடவுளுடைய ஆவியால் வழிநடத்தப்படுகிறவரே ஆன்மீக மனம் படைத்தவர்.
தம் ஊழிய காலம் முழுவதும் இயேசு இந்த ஆவியின் கனியை வெளிக்காட்டினார். சமுதாயத்தில் ஏழைகளாகக் கருதப்பட்டவர்களை இயேசு நடத்திய விதத்தில் அன்பு, இரக்கம், நற்குணம் போன்ற குணங்கள் முக்கியமாய் பளிச்சிட்டன. (மத்தேயு 9:36) உதாரணத்திற்கு, அப்போஸ்தலன் யோவான் விவரித்த ஒரு சம்பவத்தைக் கவனியுங்கள். அங்கே நாம் வாசிப்பதாவது: “அவர் [இயேசு] அப்புறம் போகையில் பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார்.” இயேசுவின் சீஷர்களும் அவனைப் பார்த்தார்கள், ஆனால், அவனொரு பாவி என்ற கண்ணோட்டத்திலேயே பார்த்தார்கள். அவன் குருடனாய் இருப்பது, “யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ” என்று கேட்டார்கள். அந்தக் குருடனின் அக்கம்பக்கத்தார்கூட அவனைப் பார்த்தார்கள், ஆனால் அவர்கள் அவனைப் பிச்சைக்காரனாக மட்டுமே பார்த்தார்கள். “இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா” என்று சொன்னார்கள். இயேசுவோ, உதவி தேவைப்படும் நிலையிலிருந்த ஒரு நபராக அவனைப் பார்த்தார். அவனிடம் பேசி, அவனைக் குணப்படுத்தினார்.—யோவான் 9:1-8.
கிறிஸ்துவின் சிந்தையைக் குறித்து இந்தச் சம்பவம் உங்களுக்கு என்ன சொல்கிறது? முதலாவதாக, எளியவர்களை இயேசு புறக்கணிக்கவில்லை; மாறாக, கனிவோடும் இரக்கத்தோடும் அவர்களை நடத்தினார். இரண்டாவதாக, அவர்களுக்கு உதவிசெய்ய தாமாகவே முன்வந்தார். இயேசுவின் இந்த முன்மாதிரியை நீங்கள் பின்பற்றுவதாக நினைக்கிறீர்களா? இயேசுவைப் போலவே நீங்களும் ஜனங்களைப் பார்க்கிறீர்களா, வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் ஒளிமயமான எதிர்காலத்தைப் பெறுவதற்கும் தேவையான உதவியை அவர்களுக்கு அளிக்கிறீர்களா? அல்லது, பணம், பதவி, புகழ் ஆகியவற்றில் உச்சத்தில் உள்ளவர்களுக்குத் தயவுகாட்டவும் மற்றவர்களை அசட்டை செய்யவும் வேண்டுமென நினைக்கிறீர்களா? ஜனங்களை இயேசு பார்த்த விதமாகவே நீங்களும் பார்க்கிறீர்கள் என்றால் உண்மையிலேயே அவருடைய முன்மாதிரியை நீங்கள் பின்பற்றுகிறீர்கள்.—சங்கீதம் 72:12-14.
ஆன்மீகமும் ஜெபமும்
இயேசு அடிக்கடி கடவுளிடம் ஜெபித்தாரென சுவிசேஷப் பதிவுகள் காட்டுகின்றன. (மாற்கு 1:35; லூக்கா 5:16; 22:41, 42) பூமியில் அவர் ஊழியம் செய்த காலத்தில், ஜெபம் செய்வதற்கென்றே நேரத்தை ஒதுக்கினார். சீஷனாகிய மத்தேயு இவ்வாறு எழுதினார்: “அவர் [இயேசு] ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி[னார்].” (மத்தேயு 14:23) அதுபோன்ற சந்தர்ப்பங்களில் அமைதியாக தம் பரலோகத் தகப்பனிடம் ஜெபிப்பதன்மூலம் பலத்தைப் பெற்றுக்கொண்டார். (மத்தேயு 26:36-44) அதேபோல இன்று, உண்மையான ஆன்மீகவாதிகள் கடவுளிடம் உரையாட வாய்ப்புகளைத் தேடுகிறார்கள்; இவ்வாறு செய்வது, படைப்பாளருடன் தங்களுக்குள்ள உறவைப் பலப்படுத்தும் என்றும், கிறிஸ்துவைப்போல் சிந்திப்பவர்களாய் ஆவதற்கு பெரிதும் உதவும் என்றும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
இயேசு அடிக்கடி நீண்ட நேரம் ஜெபம் செய்தார். (யோவான் 17:1-26) உதாரணத்திற்கு, தம்முடைய 12 சீஷர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக இயேசு ‘ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இரா முழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.’ (லூக்கா 6:12) உண்மையான ஆன்மீகவாதிகள் இரவு முழுவதும் ஜெபம் செய்யாவிட்டாலும் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள். வாழ்க்கையில் முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்கு முன்பாக, கடவுளிடம் ஜெபிப்பதற்கு அதிகமான நேரத்தை அவர்கள் செலவிடுகிறார்கள்; இவ்வாறு, தங்களுடைய ஆன்மீகத்தில் முன்னேற்றம் செய்ய உதவும் தீர்மானங்களை எடுப்பதற்கு பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை நாடுகிறார்கள்.
ஊக்கமாய் ஜெபிப்பது எப்படி என்பதையும் தம்முடைய ஜெபங்களில் இயேசு காட்டினார்; நாமும் அதையே பின்பற்ற வேண்டும். தாம் மரிப்பதற்கு முந்தைய மாலைவேளையில் அவர் ஜெபித்த விதத்தைப்பற்றி லூக்கா எழுதியிருப்பதைக் கவனியுங்கள். ‘அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.’ (லூக்கா 22:44) இதற்கு முன்புகூட இயேசு ஊக்கமாய் ஜெபித்திருந்தார், ஆனால் இந்தச் சமயத்தில் தம் பூமிக்குரிய வாழ்க்கையில் மிகக் கடினமான சோதனையை அவர் சந்தித்ததால் ‘அதிக ஊக்கத்தோடே’ ஜெபித்தார்; அப்படி அவர் ஜெபித்ததற்குப் பதிலும் கிடைத்தது. (எபிரெயர் 5:7) உண்மையான ஆன்மீகவாதிகள் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள். குறிப்பாக, கடினமான சோதனைகளைச் சந்திக்கையில், பரிசுத்த ஆவிக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் ஆதரவுக்காகவும் “அதிக ஊக்கத்தோடே” அவர்கள் கடவுளிடம் ஜெபிக்கிறார்கள்.
தெளிவாகவே, இயேசு ஜெப சிந்தை உள்ளவராக இருந்ததால், இந்த விஷயத்தில் அவரைப் பின்பற்ற அவருடைய சீஷர்கள் விரும்பியதில் ஆச்சரியமேதுமில்லை. எனவே, அவர்கள் “ஆண்டவரே, . . . ஜெபம்பண்ண . . . எங்களுக்குப் போதிக்க வேண்டும்” என்று அவரிடம் கேட்டார்கள். (லூக்கா 11:1) அதேபோல் இன்று, உண்மையான ஆன்மீகவாதிகளும், கடவுளுடைய பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட விரும்புகிறவர்களும் ஜெபிப்பதில் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள். ஆம், உண்மையான ஆன்மீகத்திற்கும் ஜெபத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது.
ஆன்மீகமும் நற்செய்தியைப் பிரசங்கித்தலும்
நோய்வாய்ப்பட்டிருந்த அநேகரை இயேசு குணப்படுத்தியதை, அதுவும் இரவுவரையாகக் குணப்படுத்தியதைப் பற்றிய பதிவை மாற்கு சுவிசேஷத்தில் காண்கிறோம். மறுநாள் விடியற்காலை அவர் தனியாக ஜெபம் செய்கையில், அவருடைய அப்போஸ்தலர்கள் அவரிடம் போனார்கள்; அநேகர் அவரைத் தேடுவதைத் தெரிவித்தார்கள்; ஒருவேளை அவர்மூலம் குணப்பட அவர்கள் விரும்பியிருக்கலாம். எனினும், அப்போஸ்தலர்களிடம் இயேசு, ‘அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம்பண்ண வேண்டுமாதலால், அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்’ என்று சொன்னார். பிறகு, அப்படிப் பதில் அளித்ததற்கான காரணத்தை அவர் பின்வருமாறு சொன்னார்: “இதற்காகவே புறப்பட்டு வந்தேன்.” (மாற்கு 1:32-38; லூக்கா 4:43) ஜனங்களைக் குணப்படுத்துவது இயேசுவுக்கு முக்கியமானதாய் இருந்தாலும் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதே அவருடைய தலையாய பணியாக இருந்தது.—மாற்கு 1:14, 15.
கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி மற்றவர்களுக்குச் சொல்வது, கிறிஸ்துவின் சிந்தையை உடையோரின் அடையாளச் சின்னமாக இன்னமும் இருக்கிறது. தம்முடைய அடிச்சுவடில் நடக்க விரும்புகிற ஒவ்வொருவருக்கும் இயேசு பின்வருமாறு கட்டளையிட்டார்: “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.” (மத்தேயு 28:19, 20) அதோடு, பின்வருவதையும் அவர் முன்னுரைத்தார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் [அதாவது, நற்செய்தி] பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:14) பரிசுத்த ஆவியின் உதவியால் பிரசங்க வேலை நடைபெறுவதாய் கடவுளுடைய வார்த்தை சொல்கிறது; எனவே, இந்த வேலையில் பக்தி வைராக்கியத்துடன் ஈடுபடுவது உண்மையான ஆன்மீகத்தின் அடையாளமாய் இருக்கிறது.—அப்போஸ்தலர் 1:8.
உலகெங்கும் ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்பதற்கு, லட்சக்கணக்கானோரின் ஒன்றுபட்ட முயற்சி தேவைப்படுகிறது. (யோவான் 17:20, 21) இந்த வேலையில் ஈடுபட்டிருப்போர் உண்மையான ஆன்மீகவாதிகளாய் இருந்தால் மட்டும் போதாது, உலகளவில் அவர்கள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதும் அவசியமாகும். கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாக, உலகெங்கும் ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிக்கிறவர்களை உங்களால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறதா?
நீங்கள் உண்மையான ஆன்மீகவாதியா?
உண்மையான ஆன்மீகவாதியை அடையாளம் காட்டுகிற வேறு அடையாளங்களும் உள்ளன; ஆனால், இதுவரை சிந்திக்கப்பட்ட தேவைகளை நீங்கள் பூர்த்திசெய்கிறீர்களா? அதை சோதித்துப் பார்க்க பின்வருமாறு உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளைத் தினந்தோறும் வாசிக்கிறேனா? வாசித்தவற்றைத் தியானிக்கிறேனா? என் வாழ்க்கையில் ஆவியின் கனியை வெளிக்காட்டுகிறேனா? தவறாமல் ஜெபிக்கிறேனா? கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை உலகெங்கும் பிரசங்கிக்கிற ஜனங்களுடன் கூட்டுறவுகொள்ள விரும்புகிறேனா?’
நேர்மையாய் சுயபரிசோதனை செய்து பார்ப்பது, எந்தளவு ஆன்மீக மனம் படைத்தவராய் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவலாம். தேவையான நடவடிக்கைகளை இப்போதே எடுப்பதன்மூலம் ‘ஜீவனும் சமாதானமும்’ உள்ள வாழ்க்கையை நீங்கள் பெற முடியும்.—ரோமர் 8:6; மத்தேயு 7:13, 14; 2 பேதுரு 1:5-11.
[பக்கம் 7-ன் பெட்டி/படங்கள்]
ஆன்மீகவாதியின் அடையாளங்கள்
[பக்கம் 7-ன் படக்குறிப்பு]
◆ கடவுளுடைய வார்த்தையை நேசிப்பது
◆ ஆவியின் கனியை வெளிக்காட்டுவது
◆ தவறாமல், ஊக்கமாய் கடவுளிடம் ஜெபிப்பது
◆ மற்றவர்களுக்கு ராஜ்ய நற்செய்தியை அறிவிப்பது
[பக்கம் 5-ன் படம்]
‘கிறிஸ்துவின் சிந்தையை’ நீங்கள் அறிந்துகொள்ள பைபிள் உதவுகிறது